/* up Facebook

Mar 11, 2010

நான் ஒரு பெண்நான் ஒரு பெண்.
 • என்பதால் இரண்டாம் பாலினத்தைச் சேர்ந்தவள்.
 • நான் ஆண்களின் உலகில் பிறந்தேன்.ஆண்களின் மொழியை கற்றுணர்ந்தேன். ஆண்களின் இல்லங்களில் வசிக்கிறேன். ஆண்களின் பள்ளிகளில் படித்து, ஆண்களின் அலுவலங்களில் பணிபுரிந்து, ஆண்கள் விதிக்கும் விதிகளைக் கடைபிடித்து வாழ்கிறேன்.
 • திரும்பத் திரும்ப ஒரே பாடத்தைத்தான் சிறுவயதில் இருந்து கற்றுக்கொடுக்கிறார்கள். பிடிவாதம் பிடிக்காதே. விட்டுக்கொடு!
 • என் இளைய சகோதரனும்கூட என் மீது அதிகாரம் செலுத்துவதை என்னால் தவிர்க்க இயலவில்லை.
 • நான் அதிகம் தூங்கக்கூடாது. ருசியான உணவை நாடக்கூடாது. சத்தம் போட்டுப் பேசக்கூடாது.
 • நான் வீட்டு வேலைகளை பழகிக்கொள்ளவேண்டும். என் சகோதரர்களுக்கு அந்த அவசியம் இல்லை.
 • எனக்கு மட்டும் Good Touch, Bad Touch கற்றுக்கொடுத்திருக்கிறார்கள். என்னை அணுகுபவர்களிடம் நான் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்.
 • நான் அணியும் ஆடைகளில் கவனமாக இருக்கவேண்டும்.
 • நான் யார் என்பதை என் தோற்றத்தால் நிர்ணயம் செய்கிறார்கள்.
 • நான் பலவீனமானவள். பாதுகாக்கப்பட வேண்டியவள்.
 • உறவினர்கள், தெரிந்தவர்கள், நண்பர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள், தெரியாதவர்கள் என்று யாரும் எப்போதும் என்னை பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கலாம்.
 • எனக்கு நேரும் அவமானங்களை நான் மென்று விழுங்கவேண்டும்.
 • எனக்கு மூன்று வயதாகும்போதே என் திருமணம் குறித்த கவலைகள் என் பெற்றோரை ஆக்கிரமித்துவிடுகின்றன.
 • வீட்டில் பொருளாதாரப் பிரச்னை ஏற்பட்டால், முதலில் என் படிப்பு நிறுத்தப்படுகிறது.
 • வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் என்னைக் கட்டுப்படுத்த என் சமூகத்துக்கு முழு உரிமையுண்டு.
 • வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் என் மீது அதிகாரம் செலுத்தப்படுவதை நான் முழு விழிப்புடன் ஏற்றுக்கொள்கிறேன்.
 • கட்டளைகள் பிறப்பிப்பது ஆண்களின் இயல்பு என்பதை நான் அறிவேன். கீழ்படிவது என் உரிமை.
 • நான் எத்தகைய உயர் பதவி வகித்தாலும் தொடக்க நிலையில் இருக்கும் எந்தவொரு ஆண் ஊழியரைக் காட்டிலும் நான் தாழ்ந்தவள்தான்.
 • என் விருப்பம் அல்ல, என்னை மணப்பவரின் விருப்பமே இறுதியானது. திருமணச்செலவு என்னுடையது.
 • திருமணத்துக்குப் பிறகு என் முந்தையை வாழ்க்கையை நான் மறந்துவிடவேண்டும். என் பெயர் மாற்றமடைகிறது. என் அடையாளம் மாற்றமடைகிறது.
 • என் கணவனின் கல்வித் தகுதியைவிட என்னுடையது ஒரு படியேனும் கீழானதாக இருக்கவேண்டும். தவறினால், நான் அகந்தை கொண்டவளாகச் சித்தரிக்கப்படுவேன்.
 • என் சம்பளத்தை என் கணவரிடம் ஒப்படைக்கிறேன். எனக்கென்று தனிப்பட்ட செலவுகள் கிடையாது. என் தேவைக்கான பணத்தை என் கணவரிடம் கோரி பெற்றுக்கொள்கிறேன்.
 • எனக்கென்று தனியே வங்கிக்கணக்கு கிடையாது.
 • என் சிந்தனைகளை நான் முன்னெச்சரிக்கையுடன் சுயதணிக்கைக்கு உட்படுத்திக்கொள்கிறேன்.
 • என் ஒவ்வொரு செய்கையும் கண்காணிக்கப்படுகிறது; ஒப்பிடப்படுகிறது; எடைபோடப்படுகிறது.
 • நான் கேள்விகள் கேட்பதில்லை. பதில்களை மட்டுமே அளித்துக்கொண்டிருக்கிறேன்.
 • என் கணவரின் பேச்சை (எப்போதாவது) நான் மீறினால், நான் கண்டிக்கப்படுகிறேன். நான் சொல்வதை என் கணவர் (எப்போதாவது) செவிமெடுத்தால், அவர் பரிகசிக்கப்படுகிறார்.
 • எனக்கான சுதந்தரத்தை என் கணவர் அவ்வப்போது அளிக்கிறார்.
 • வீட்டுப் பணிகள் என்னுடையது. என் கணவர் வேலைகளைப் பகிர்ந்துகொள்வார் என்று நான் எதிர்பார்க்கக்கூடாது.
 • எனக்கான முடிவுகளை என் கணவரே எடுக்கிறார்.
 • பேருந்துகளில், ரயில்களில், பொது இடங்களி்ல் அனுபவிக்க நேரும் பாலியல் இம்சைகளை நான் மென்று விழுங்கிக்கொள்ளவேண்டும்.
 • நான் செய்தித்தாள்கள் படிக்கவேண்டியதில்லை. அரசியலில் ஈடுபாடு காட்டவேண்டியதில்லை. என் உலகம் சமையலறையில் தொடங்கி படுக்கையறையில் நிறைவடைகிறது.
 • என் துறை தொடர்பாக நான் எந்த லட்சியங்களையும் கொண்டிருக்கலாகாது. நான் தொடர்ந்து பணியாற்றவேண்டுமா வேண்டாமா என்பதை நான் முடிவு செய்யமுடியாது.
 • என் தனிப்பட்ட சாதனைகள் முக்கியமற்றவை. என் திறன்கள் முக்கியமற்றவை.
 • என் கணவனின் மனைவி என்று நான் அறியப்படுகிறேன்.
 • மதங்கள் என்னை அவமானப்படுத்துகின்றன. கடவுள்கள் என்னை புரிந்துகொள்வதில்லை.
 • நான் எந்த மத்தைச் சேர்ந்தவளாக இருந்தாலும், என் உலகை நான் என் பர்தாவின் வழியாகவே காண்கிறேன்.
 • என் கணவர் படித்தவராக இருந்தாலும், கல்லாதவராக இருந்தாலும் என் நிலை இதுவே. கிராமங்களில் வாழ்ந்தாலும் நகரங்களில் வாழ்ந்தாலும் என் அடையாளம் மாறிவிடுவதில்லை.
 • நான் மூப்படைந்த பிறகும் எனக்கான பாடங்களை கற்றுக்கொண்டே இருக்கிறேன். குறிப்பாக, Good Touch, Bad Touch. முந்தையது அபூர்வம் என்ற போதி்லும்.
நான் ஒரு பெண்


பெண்ணியத்திற்காக மருதன் அனுப்பிவைத்தது.

4 comments:

சே.குமார் said...

அருமை மருதன்

மணிமேகலா said...

மிக அருமையாக இருக்கிறது மருதன்.மனம் நிறைந்த பாராட்டுக்கள்!

கூடவே பெண்ணியம் என்ற இந்த வகைப் பக்கத்தை நடத்துபவர்களுக்கும்.மிகத் தரமானதும் திறமானதுமான கட்டுரைகளால் அழகு பெறுகிறது இப்பக்கம். இப்பக்கத்தை நடத்துபவர்களுக்கும் என் என் ஆத்மார்த்தமான பாராட்டுக்கள்.

ஆனால் ஒரு சிறு விடயம். பல பெண்கள் தம் சுய அடையாளம் என்ன என்பதையே தெரியாதவர்களாக இருக்கிறார்களே! அதற்கு என்ன செய்வது?

படித்த வெளிநாடுகளில் இருக்கின்ற பெண்கள் கூட சமூகத்தையும் சவாலையும் எதிர்கொள்ள விரும்பாதவர்களாக, இருப்பதோடு நிறைவு கொள்வபவர்களாகத் தானே வாழ்கிறார்கள்!

Nathimoolam said...

இதில் கூறப்பட்டுள்ள பல விடயங்கள் ஏற்றுக்கொள்ளும்படியாகவில்லை. மேலும் அதீத கற்பனைவளம் பொருந்தியதாகச் சமைக்கப்பட்டுள்ளது.
நதிமூலம்

rdj said...

The important is here all of this told by a man.Always a man takes care of women. Because the men is within woMEN.As per bible the god made a man for his wish and women made for the men wish.If this basic truth understood by every one of this earth then no problems between men and women.

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்