/* up Facebook

Mar 31, 2010

துணிச்சல் மிக்கப் பெண் " ஜென்சிலா மொகமட் மஜீத்"


துணிச்சல் மிக்க பெண்களுக்கான விருதினை பெற்ற ஜென்சிலாவுடன் மகளிர் தின நேர்காணல்

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் துணிச்சல் மிக்க பெண்களுக்கான வருடாந்த விருதுக்காக இவ் வருடம் தெரிவு செய்யப்பட்ட 10 பெண்களுள் ஒருவர் நமது இலங்கையை பிரதிதிநிதித்துவப்படுத்துவது நமக்குப் பெருமை சேர்ப்பதாகவே அமைகிறது. விருதைப் பெற்ற சந்தோஷத்துடன் இருக்கும் ஜென்சிலா மஜீத்தை அவரது இல்லத்தில் கடந்த 4 ஆம் திகதி சந்தித்தோம். 5 ஆம் திகதி காலை அமெரிக்காவிற்கு பயணமாக இருந்த சந்தர்ப்பத்திலும் எங்களை அன்போடு வரவேற்று நாம் கேட்ட கேள்விகளுக்கு ஆர்வத்தோடு பதில் தந்தார்.

கேள்வி: உலகத்தின் பார்வை உங்களின் பக்கமும் திரும்பியுள்ள இவ்வேளையில் உங்கள் இளமைப் பருவம் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறோம். தயவு செய்து கூறுவீர்களா?

பதில்: எனது பெயர் ஜென்சிலா மொகமட் மஜீத். முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள சிறு கிராமமான தண்ணீரூற்று எனது பிறந்த இடமாகும். 1970 ஆம் ஆண்டு பிறந்த நான் 9 ஆம் வகுப்பு வரை எனது சொந்த கிராமத்திலே கல்வி பயின்றேன். அதன் பின்னர் G. C. E. (O/L) வகுப்பை யாழ்ப்பாணத்தின் கதீஷா மகா வித்தியாலயத்திலும் G. C. E(A/L) வகுப்பை யாழ்ப்பாண ஒஸ்மானியா கல்லூரியிலும் படித்தேன்.

நான் உயர்தர வகுப்பில் படித்துக் கொண்டிருக்கும் போது ஒரு பலாத்கார இடப்பெயர்வு ஏற்பட்டது. இவ் இடம்பெயர்வு காரணமாக உயர்தர வகுப்பை முடிக்கக் கூட முடியாத சூழ்நிலையில் நானும் எனது குடும்ப அங்கத்தவர்களும் 1990 ஆம் ஆண்டு இடம்பெயர்ந்து புத்தளத்தை வந்தடைந்தோம்.

கேள்வி: புத்தளம் பிராந்திய சமூக நம்பிக்கை நிதியத்தின் நிர்வாக நம்பிக்கையாளர்களில் ஒருவராக நீங்கள் செயற்படுகிறீர்கள். உங்கள் அமைப்புப் பற்றியும் அதன் செயற்பாடுகள் பற்றியும் எங்களுக்குக் கூற முடியுமா?

பதில்: 1993 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட சமூக நம்பிக்கை நிதியத்தின் ஆரம்ப கால உறுப்பினராக நான் உள்ளேன். ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இவ் அமைப்பில் நானும் இன்னும் நான்கு சகோதரர்களும் உறுப்பினர்களாக இருந்தோம். தற்போது நான்கு ஆண் உறுப்பினர்களும் 3 பெண் உறுப்பினர்களும் இணைந்து 7 நிறைவேற்று அதிகாரம் கொண்ட நிதியமாக இது விளங்குகின்றது.

புத்தளத்தில் இந் நிதியத்தின் இணைப்புச் செயலகமும் மன்னார், வவுனியா, புத்தளம், அனுராதபுரம், பொலநறுவை, திருகோணமலை ஆகிய 6 இடங்களில் கிளைக் காரியாலயங்களும் இயங்கி வருகின்றன. இது தவிர மூதூர், அம்பாறை, களுத்துறை போன்ற பிரதேசங்களிலும் இயற்கை அனர்த்த வேளைகளில் எங்கள் நிதியத்தின் ஊடாக மக்களுக்கு பல சேவைகளை ஆற்றியுள்ளோம். இது தவிர, தற்போது முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் மீளக் குடியேறியுள்ள மக்களுக்கு நாம் அங்கு நேரடியாகச் சென்று கண்ணி வெடி அபாய அறிவூட்டல்களையும் வழங்கியுள்ளோம். இக் கண்ணி வெடி அபாய அறிவூட்டல் நிகழ்ச்சித் திட்டம் தொடர்ந்தும் மக்கள் மீளக்குடியேறும் பிரதேசங்களில் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணத் திட்டங்கள், அபிவிருத்தி வேலைத் திட்டங்கள், கல்வி முன்னேற்ற நடவடிக்கைகள், பெண்களுக்கான விழிப்புணர்வுத் திட்டங்கள், இடம்பெயர்ந்த மக்களுக்கான ஒருங்கிணைப்புத் திட்டங்கள் மற்றும் மூவின மக்களுக்கு இடையில் சமாதானத்தை கட்டியெழுப்பும் திட்டங்கள் போன்றவை எமது நிதியத்தின் பிரதான குறிக்கோள்களாகும்.

இவை தவிர எமது நிதியத்தின் ஊடாக Womens Forum,, பிரஜைகள் குழு, சமாதானக் குழு, இளைஞர் குழு போன்ற உப குழுக்களும் செயற்படுகின்றன. முக்கியமாக வட மாகாணத்தில் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த தமிழ், முஸ்லிம் மக்களை மீளக்குடியமர்த்துவதிலும் அவர்களுக்கிடையில் இருந்த உறவுகளை மீளக் கட்டியெழுப்பவும் எமது அமைப்பு ஆரம்பத் திட்டங்களை வகுத்துள்ளது.

கேள்வி: ஒரு சாதனைப் பெண்ணாக இருக்கிறீர்கள். இதை எவ்வாறு உணருகிறீர்கள்?

பதில்: நான் சாதாரண ஒரு பெண்ணாக இருந்த காலங்களில் பல சவால்களுக்கு முகம் கொடுத்துள்ளேன். நான் மட்டுமல்ல இது ஒரு குழு முயற்சி. இதன் பலனாக நான் இன்று உங்கள் முன் சாதனைப் பெண்ணாக நிற்கிறேன். இந்நிதியம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்து என்னுடன் தோளோடு தோள் நின்ற அனைவரதும் வெற்றியாக இவ் விருதை நான் கருதுகிறேன்.

கேள்வி: இவ் விருதிற்காக எவ்வாறு தெரிவு செய்யப்பட்டீர்கள்?

பதில்: இவ் விருதைப் பற்றி நான் அறிந்திருக்கவில்லை. இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் என்னை அழைத்து இவ் விருதுக்காக உங்களை நாம் பரிந்துரைக்கிறோம் எனத் தெரிவித்தது. இதன் பின்னர் ஒரு விசேட குழுவினர் நேரடியாக வந்து என்னை முழுமையாக நேர்கண்டு, எனது வேலைத் திட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். பின்னர் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு நேரடியாகச் சென்ற அக் குழு அத் திட்டங்களின் செயற்பாடுகளை உறுதி செய்தது. இறுதியாக இது தொடர்பான அறிக்கை அங்கு அனுப்பி வைக்கப்பட்டது. அச் சந்தர்ப்பத்தில் எனக்கு விருது கிடைக்கும் என்று நான் எண்ணவில்லை.

ஆனால் ஒரு வாரத்திற்கு முன்னர் எனக்கு தொடர்பை ஏற்படுத்திய அமெரிக்க இராஜாங்க செயலகம், நீங்கள் விருதுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளீர்கள் என்றும் அதை உத்தியோகபூர்வமாக அறிவிப்போம் என்றும் கூறியது.

அந்த சந்தர்ப்பத்தில் அளவில்லாத மகிழ்ச்சி அடைந்தேன்.

கேள்வி: இவ் விருது உங்களுக்கு ஆரம்பமாக இருக்கட்டும். தொடர்ந்தும் விருதுகளைப் பெற வாழ்த்துகிறோம் கடந்த மார்ச் 8 ஆம் திகதி சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது. இவ்வேளையில் பெண்களுக்காக நீங்கள் கூறும் செய்தி என்ன? .

பதில்: பெண்கள் தங்களை வலுப்படுத்தி சமூகத்தில் முன்னுக்கு வர முயற்சி செய்ய வேண்டும். இம் முயற்சி உறுதுணையாக ஆண்களும் இருக்க வேண்டும். பெண்களின் அபிலாஷைகளுக்கும் விருப்புகளுக்கும் உணர்வுகளுக்கும் ஆண்கள் மதிப்பளிக்க வேண்டும். அதே நேரத்தில் பெண்களுக்கு வழங்கப்படும் சந்தர்ப்பங்களை அவர்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

நன்றி : வீரகேசரி

ஜென்சிலா குறித்து  YaTV யில் வெளியான நிகழ்ச்சி

No War Zone of March 24, 2010 from Young Asia Television on Vimeo.

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்