/* up Facebook

Mar 28, 2010

வன்னி நாட்டை அரசு புரிந்த வனிதையர் - பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை


(1962 இல் வெளியாகிய ஈழத்து வாழ்வும், வளமும் நூலில் இருந்து)

யாழ்ப்பாணத்தில் நடைமுறையிலிருந்துவரும் வழிபாடுகளுள் நாய்ச்சிமார் வழிபாடுமொன்று. அங்கு பலப்பல ஊர்களிலும் நாய்ச்சிமார் கோயில் உண்டு. அக்கோயில்களில் மங்கலமான நாட்களில் மக்கள் பொங்கல் பொங்கியும் விளக்கு வைத்தும் வழிபாடாற்றுவார்கள். இவ்வழிபாடு யாழ்ப்பாணத்திற்கு எந்தக்காலம் வந்தது என்பது ஆராயத்தக்கது. அதனோடு நாய்ச்சிமார் என்ற கடவுள் வைதிக சைவ சமயத்தில் இல்லை. ஆகவே, இது தமிழ் மக்களுக்குள் வைதிக சமயத்திற்குப் புறம்பே எழுந்த வழிபாடாகும்.

எனவே, இவ்வழிபாட்டுமுறையை ஆராயுமுன்னர் நாய்ச்சிமார் என்னும் சொல்லைச் சிறிது ஆராய்வோம். நாச்சி என்னும் பெயர்ச் சொல்லுக்கு மார் என்னும் உயர்திணைப் பன்மை விகுதியைச் சேர்த்து வந்ததே நாய்ச்சிமார் என்னும் சொல்லாகும். நாச்சி என்னும் சொல்லை எடுத்துக்கொள்வோம். நாச்சி என்னும் சொல் எட்டாவது நூற்றாண்டுவரையில் தமிழ் மக்கள் வழக்கிலிருந்தது. பெரியாழ்வாருடைய மகள் ஆண்டாளைச் சூடிக்கொடுத்த நாச்சியார் என்று அழைத்தல் இதற்கு எடுத்துக்காட்டாகும்.

நாச்சி என்னும் சொல் “நீ” என்னும் சங்கத (சமஸ்கிருதம்) வினையடியாகப் பிறந்த உயர்திணைப் பெயர். “நீ” என்பதற்கு வழிகாட்டுதல் என்பது பொருள். எனவே, நாச்சி என்பதற்கு வழிகாட்டுபவள் அல்லது தலைவி என்பது பொருள். நாச்சி என்பதற்கு ஆண்பால் நாயன்.(1) ஆனால், இலங்கை வன்னி நாட்டிலே வன்னியர் ஆதிக்கஞ் செறிந்திருந்தபோது, வன்னியர் குடும்பத்தைச் சேர்ந்த பெண்களை நாச்சிமார் என அழைத்தல் மரபுபோலத் தோன்றுகின்றது.

வன்னிநாட்டிற் கண்டெடுக்கப்பட்ட பழைய ஏட்டுப் பிரதியொன்றில் பின்வரும் வரலாறு
காணப்படுகின்றது:-

“அறுபது வன்னியமார் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்து ‘அரசு’ புரிந்துகொண்டிருந்தனர். அவர்கள் இங்கு வரும்போது தம்முடைய மனைவிமாரை மதுரையில் விட்டுவிட்டு வந்தனர். அக்காலத்திலே வட இலங்கையின் பல பாகங்களைப் பறங்கிக்காரர் கைப்பற்றத் தொடங்கினர். அப்பொழுது அந்த வன்னியமார் அறுபது பேரும் பறங்கிக்காரரோடு போர் புரிந்தனர். அவருள் 54 பேர் போரில் மாண்டனர்.” (மேல் வரும் பகுதி நேரடியாக ஏட்டுப் பிரதியிலிருந்து எடுக்கப்பட்டதாகும்). “ஆனால், அக்கூட்டத்தில் ஐவர் பறங்கிக்காரரோடு பெரும் போர் நிகழ்த்தி தாம் இருக்கும் வன்னி நாட்டைக் கைப்பற்ற விடாது அவரை முறியடித்து, முள்ளியவளை முனையாக அந்த நாடுகளையும் அரசு பண்ணினர். ஒருவன் கண்டி இராசனுக்குத் திசை (திசாவா) (2) யாகப் போய்விட்டான். அதன்பின்னர் எஞ்சிய ஐந்து வன்னியமார்கள் மதுராபுரிக்குப் போய்த் தமது மனைவிமாரை இட்டு வரும்படிஓடமேறிச் சென்றனர். அவர் போகும்போது அவர் போன ஓடம் கடலில் ஆழ்ந்துவிட்டது. அதனால், அவர் மாண்டனர்.”

“இது இவ்வாறிருக்க அந்த வன்னியமார் அறுபது பேருடைய பெண்சாதிமார் மதுரையிலே இருக்கும்போது ஒரு நாள் அந்த நாட்டரசன் அவர்களிருக்கும் தெருவீதியிலே குதிரை மீதேறி, பெண்கள் இருக்கும் தெரு என்றும் கவனம் பாராது தன் குதிரையை ஓட்டி வந்தான். அவ்வாறு அவன் வந்தபடியினால் அவர், ‘இனிமேல் நாங்கள் இங்கிருந்தால் எங்களுடைய மானம் கெட்டுப் போகும். எங்கள் முதலாளிமார் இலங்கை நாட்டிற்குப் போய் இராசாக்களாக இருப்பதால் நாங்களும் அவ்விடம் போக வேண்டும்’ என எண்ணினர். தமது பயணத்திற்கு வேண்டிய ஆயத்தங்களைச் செய்துகொண்டு தங்கள் பணியாட்களுடன் ஓடமேறி வட இலங்கைக்கு வந்தார்கள். பின்னர் வன்னிய நாட்டுக்கு வரும்போது வன்னியமார் இறந்த சேதிகொண்டு தூதன் பின்வருமாறு சொல்லுவான்: “எங்கள் முதலாளிமார்கள் 60 பேரிலே 54 பேர் பறங்கிக்காரருடன் பொருதுபட்டுப் போனார்கள். ஒருவர் கண்டியில் இராசாவுக்குத் திசையாக நிற்கின்றார். மற்ற 5 பேரும் பறங்கிக்காரரையும் வென்று வன்னியை ஐந்து பற்றாகப் பிரித்து அரசு பண்ணினார்கள். அப்படி அரசு பண்ணிவிட்டு அந்தந்தப் பற்றுக்கு அந்தந்த வேளாளரை முதன்மையாக்கிப் போட்டு முள்ளியவளையிலே இளஞ்சிங்க மாப்பாணனை முதன்மையாக்கிப் போட்டு மதுரைக்கு வந்தார். அதன் பின்பு அவர் கதை யாதொன்றுந் தெரியாது” என்றனர்.

“இவ்வாறு தூதன் சொல்ல அது கேட்டு முன்னமே இறந்த 54 வன்னியமார்களுடைய பெண்சாதிமார்களும் தெல்லிச்சி வாய்க்காலிலே (3) தீயிலே வீழ்ந்து மரணமடைந்து போனார்கள். அப்போது அவர்களுக்கு நாச்சிமார் என்று பெயராயிற்று. அவர்களுக்குக் குதிரை விட்டுவந்த மள்ளரும் அறுபது பேரும் வீரக் குடும்பன் முதல் ஆரிய குடும்பன் முதலாகத் தீயில் விழுந்துவிட்டார்கள். அன்றுமுதல் அவர்களுக்கு அண்ணமாரென்னும்பெயராயிற்று. ஒரு வன்னிச்சிமாரும் வன்னி ஐந்து பற்றிலுமிருந்து அரசு புரிந்தார்கள் அதன் காரணத்தால் பெண்களுக்கு வன்னிமை என்றும் ஆண் பிள்ளைகளுக்கு ‘ஐதாந்தி’ என்றும் பெயராயிற்று.”

இவ்வன்னிநாட்டு வரலாறு ஒருபுறமிருக்க யாழ்ப்பாணத்தில் நாச்சிமார் வழிபாடிருக்கும் சில பகுதிகளில் வழங்கும் வரலாற்றை இங்கு தருவாம். அது பின்வருமாறு:

ஆறு வன்னிமைப் பெண்கள் வன்னி நாட்டிலிருந்து ஆட்சி புரிந்து வந்தனர். பறங்கிக்காரர் வட இலங்கையின் ஒரு பகுதியை கைப்பற்றிய பின்னர் வன்னியையும் கைப்பற்ற முயன்றனர். ஒவ்வொரு முறையும் அவர் முயற்சி பலிக்காமல் போரில் தோல்வியுற்று வன்னிநாட்டினின்றும் திரும்பவேண்டியவரானார். ஏதோ ஒரு வகையாகத் தாம் வெற்றி பெறவேண்டுமெனப் பெரும் ஊக்கத்துடன் தமது படையை அணிவகுத்துப் பின்னரும் சென்றனர்.

அங்கு போய் வன்னிநாட்டுப் படைகளுடன் பெரும் போராற்றினர். இம்முறை வன்னிநாட்டவர் படை சிறிது தளர்வுற்றனர். அதைக் கண்ட அந்த நாட்டினை ஆளும் வன்னிமைப் பெண்கள் அறுவரும் அவரது பணிப்பெண் ஒருத்தியும் ஆண்களைப்போல், அம்பு, வில்லு, வாள், சதங்கை முதலிய படைதாங்கித் தமது சேனையை நடாத்திப் பறங்கியர் முன்னர் வந்தனர். இருபடையினர்க்கிடையிலும் இதுகாறும் நடந்த போர்களைக் காட்டிலும் பெரியதோர் போர் மூண்டது. இப்பெண்கள் பறங்கியர் படை எதிரில் நின்று மிகுந்த வீரத்தோடு போர் செய்தனர். அதனால், பறங்கியர் முதுகுகாட்டி ஓடவேண்டிய நிலையும் வந்தது. எனினும் ஏதோ சூழ்ச்சியால் பறங்கியர் தலைவன் போரை வென்றனன். அதனால், வன்னிப்படையினர் மனமுடைந்தனர். அப்பெண்கள் ஏழுபேரும் பறங்கியரின் கைகளில் அகப்பட்டால் மானபங்கம் அடைய நேரிடும் என உள்ளம் பதைத்தனர். மானமிழந்து வாழ்வதைக் காட்டிலும் உயிர் நீத்தலே சாலச்சிறப்புடைத்து என உறுதி கொண்டனர். உடனே அப்பெண்கள் எழுவரும் நஞ்சுண்டிறந்தனர். அதைக்கண்ட வன்னிநாட்டவர் அவரைத் தெய்வமாக்கினர். கற்பினிற் சிறந்து விளங்கிய கண்ணகியைக் கடவுளாக்கி வழிபடும் தமிழ் மக்களாகிய வன்னிநாட்டவரிடை வீரத்திற் சிறந்து திகழ்ந்த இவ்வெழுபெண்களையும் வழிபடும் வழக்கம் எளிதிற் பரவியது, நாளடைவில் இவ்வழிபாடு வன்னிநாட்டில் மட்டுமின்றி ஏனைய இடங்களுக்கும் பரவியது. யாழ்ப்பாணத்திலே வடமராட்சி கிழக்குப் பகுதியைச் சேர்ந்த நாகர்கோயில் என்னும் ஊரிலும் பருத்தித்துறை, சாளம்பை(4) வட்டாரத்திலும், காங்கேசன்துறை வன்னியனார் வளவிலும் அராலியிலும் யாழ்ப்பாணம் நாச்சிமார் கோயிலடியிலும் இவ்வழிபாடு இன்றும் நடைபெறுகிறது.

இக்கோயில்களில் நடக்கும் வழிபாட்டு முறைகளை எடுத்துக் கொள்வோம். பொதுவாக ஏனைய கோயில்களில் நடக்கும் வழிபாடு போலவே இங்கும் வழிபாடு நடக்கும். ஆனால், இக்கோயில்களில் ஒரு தனிச்சிறப்பான வழிபாட்டு முறையுண்டு. எடுத்துக்காட்டாக, பருத்தித்துறைச் சாளம்பை வட்டாரத்து நாச்சிமார் கோயிலில் பறைமுழங்கும்போது விட்டுவிட்டு, வேறு வேறு தாளத்துடன் ஏழு முறை முழங்குதல் மரபு. இது பண்டை நாள் தொட்டு வந்த வழக்கம் என்பர். தைப்பொங்கல், சித்திரைப் புத்தாண்டு முதலிய பெருநாட்களில் அங்கு மக்கள் போய்ப் பொங்குவர்.

காங்கேயன் துறை வன்னியனார் வளவுக் கோயிலிலும் உள்ள வழிபாட்டு முறையும் கவனிக்கத்தக்கது. இங்கும், தைப்பொங்கல் முதலிய பெருநாட்களில் மக்கள் பொங்கிப் படைப்பர். இதைவிட ஆண்டுக் கொருமுறை அங்குச் சிறப்பான வழிபாடொன்று நடைபெறும். அவ்வழிபாட்டுநாளன்று பருவமாகாத பெண்களுள்ள ஏழு வீட்டிலிருந்து ஏழு தாம்பாளம் நிறையப் பொருட்கள் வைத்து தூய வெண்சீலையினால் மூடி அவ்வீடுகளிலுள்ள ஏழு பருவமாகாத சிறுமிகள் அக்கோயிலுக்கு எடுத்துச் செல்வர். இத்தாம்பாளங்களுக்குள்ளே மிளகு, இஞ்சி, மஞ்சள், எள்ளு, சீரகம், பனங்கட்டி, செங்கல்லு, குன்றிமணி ஆகியவற்றைச் சேர்த்து இடித்த பாகு, அம்பு, வில்லு, சதங்கை ஆகிய பொருட்களை வைப்பர். இத்தாம்பாளங்களைக் கோயிலுக்குக் கொண்டு சென்றதும் அங்கு நிற்கும் கோயில் மரங்களுக்குக் கீழ் ஒவ்வொன்றாக வைப்பர். ஆறு மரங்களும் கிட்டக்கிட்ட உள்ளன. ஆனால், ஏழாவது மரம் அவற்றிற்குச் சிறிது தூரத்தேயுள்ளது. கிட்டக்கிட்ட உள்ள ஆறு மரங்களுக்கும் கீழ் ஒவ்வொன்றாக வைக்கப்படும் ஆறு தாம்பாளங்களும் ஆறு கன்னிமைப் பெண்களுக்கும் தூரத்தேயுள்ள மரத்தின் கீழ் வைக்கப்படும் ஒரு தாம்பாளம் பணிப்பெண்ணுக்கும் ஆகும். அம்பு, வில்லு அவர் போர் செய்ததையும், குன்றிமணி செங்கல்லு அவர் நஞ்சுண்டிறந்ததையும் குறிக்கும்.

தாம் கொண்டுசென்ற தாம்பாளங்களை வைத்த பின்னர் ஏழு சிறுமியரும் ஏழு வளந்துப்பானையை(5) அடுப்பிலேற்றுவர். இதன் பின்னரேயே அங்கு வழிபாடாற்ற வந்திருக்கும் ஏனைய மக்கள் பொங்கல் செய்யத் தொடங்குவர். பொங்கி முடித்த பின்னர் யாவரும் தாம் பொங்கிய பானைகளிலிருந்து பொங்கற் சோற்றை எடுத்து ஏழு மரத்தின் கீழும் வாழையிலையிற் படைப்பர். வயதில் முதிர்ந்த ஒருவர் இளநீர் உடைத்துச் சாம்பிராணி, கற்ப+ரம் கொளுத்துவர். யாவரும் கும்பிட்டு வழிபட்ட பின்னர் இச்சிறுமியர் எழுவரும் தாம் கொண்டு வந்த தட்டங்களைக் கையில் ஏந்தி நிற்பர். அப்பொழுது அங்கே பொங்கியுள்ளோர் ஒவ்வொருவரும் தமது பானைகளிலிருந்து சிறிது சிறிது சோற்றை எடுத்து அத் தாம்பாளங்களிற் போடுவர். அதன் பின்னர் அச்சிறுமியர் அக்கோயிலுக்குப்பக்கத்தேயுள்ள கேணிக்குள் ஏழு குண்டுக்குள் தாம் கொண்டு வந்த தாம்பாளத்திலுள்ள பொருட்களைக் கொட்டுவர். இத்துடன் வழிபாடு முடிவடையும். தீராத வருத்தமுள்ளோர் யாரும் அங்கிருப்பின் அவருக்கு அச்சிறுமியர் பொங்கிய பானைகளிலிருந்து பொங்கற் சோற்றை எடுத்துக் கொடுப்பர். இது அவர் நோய்க்கு மருந்தாகும் என்பது இவர் நம்பிக்கை.

இங்கு முதலாவதாகக் கூறிய வன்னிநாட்டு வரலாற்றிற்கும் இரண்டாவதாகக் கூறிய யாழ்ப்பாண வரலாற்றிற்கும் சிறிது வேறுபாடிருப்பதைக் காணலாம். வன்னிநாட்டுக் கதையில் வன்னிமைப் பெண்கள் ஐவர் தமது கணவன்மார் இருந்து ஆட்சிசெய்த இடத்திலிருந்து ஆட்சிபுரிந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், காங்கேயன்துறை வரலாற்றுப்படி ஆறு வன்னிமைப் பெண்களும் அவரின் பணிப்பெண் ஒருத்தியும் பறங்கிக்காரருடன் போராற்றித் தோல்வியடைந்த பின்னர் நஞ்சுண்டு மாண்டனர் எனத் தெரியக்கிடக்கின்றது. அன்றியும் பருத்தித்துறைக் கோயில் வரலாற்றின்படி நாச்சியர் எழுவர் என்பது வெளிப்படை அன்றியும் வன்னிநாட்டு வரலாற்றின்படி பாண்டி நாட்டிலிருந்து வன்னிமைப் பெண்கள் வந்தனர். அவருள் 54 பேர்கள் தமது கணவன்மார் போரில் மாண்டதைக் கேட்டுத் தீயில் வீழ்ந்திறந்தனர். ஒரு வன்னிமைப் பெண் தனது திசாவைக் கணவரிடம் சென்றார். மற்ற ஐவரும் வன்னியில் ஆட்சி புரிந்து வநதனர். ஆனால், காங்கேயன்துறைக் கோயில் வழிபாட்டு வரலாற்று முறைப்படி ஆறு வன்னிமைப் பெண்கள் ஆண்டதாகவும் அவ்வாறு பெண்களும் அவருடைய பணிப்பெண் ஒருத்தியும் பறங்கியருடன் போர் புரிந்து தோல்வியடைந்தமையால் நஞ்சுண்டிறந்ததாகவும் தெரியவருகின்றது. இக்காரணம் பற்றியே காங்கேயன்துறை விழாவில் எடுக்கும் ஏழு தாம்பாளத்தில் வில்லு, அம்பு, சதங்கை ஆகியவற்றை வைப்பர். அவர்கள் நஞ்சுண்டிறந்ததகை; குறிப்பதற்காகச் செங்கல்லையும் குன்றிமணியையும் பாகிற் சேர்த்துக்கொள்வர்.

போரில் இறந்த வீரரை வழிபடும் வழக்கம் பண்டைக் காலம் தொடக்கம் தமிழ் மக்களிடையே நிலவி வருகின்றது. இப்பண்டைய முறையைப் பின்பற்றியே எழுந்தது நாய்ச்சிமார் வழிபாடு. ஒவ்வோரிடமும் இவ்வழிபாடு மரங்களுக்குக் கீழேயே நடைபெறுகின்றது. வடமராட்சி கிழக்கிலுள்ள நாகர்கோயிலில் தாழை மரத்தினடியிலும் பருத்தித்துறையில் சாளம்பை மரத்தினடியிலும் காங்கேயன்துறையில் வேம்பு, அரசு முதலிய மரத்தினடியிலும் அராலியில் ஆலமரத்தினடியிலும் இவ்வழிபாடு நடைபெறும். இவ்வழிபாட்டு முறையும் மொகஞ்சதாரோக் காலம் தொடக்கம் திராவிடருக்குள்ளிருந்து வந்த மரவழிபாட்டு முறையாகுமெனக் கூறலாம்.

பண்டைத் திராவிட வழிபாட்டு முறை இங்ஙனமிருக்க, வைதிக சமயக் கூட்டத்தார் இக்கோயில்களை எல்லாம் மாற்றி மரவழிபாடிருந்த இடங்களிற் கட்டடங்களை எழுப்பி அதற்குள்ளே உருவச்சிலைகளைத் திணித்து, இல்லாத பத்ததி முறைகளையெல்லாம் கொண்டுவந்து சேர்த்தனர். அதுமட்டுமன்றிப் பார்ப்பனரைக்கொண்டு இல்லாத முறைகளைச் சங்கதத்தில் சுலோகங்களாக ஆற்றி இக் கோயில்களில் ப+சைகள், விழாக்கள் நடத்திவருகின்றனர். இவர் செய்கை, பண்டைக்காலத் தமிழர் வழக்குக்கும் அவர் வழிபாட்டு முறைக்கும் மாறானது.

நாச்சிமார் வழிபாட்டின் வரலாற்றையும், அவ்வழிபாட்டு முறையையும் ஓராற்றான் எடுத்துரைத்தனம். இதன் உண்மை முழுவதும் சரியாகக் கிடைக்கவில்லை. வன்னிநாட்டிலும் யாழ்ப்பாணத்து வேறு பகுதிகளிலும் இவ்வழிபாடு நடைமுறையிலிருத்தல் கூடும். அவற்றைத் திரட்டமுடியாமலிருக்கிறது. அவற்றைத் திரட்டிச் சரித்திர முறைப்படி ஆராய்தல் அறிஞர் கடன்.

நிலைப்பாட்டின் அடிக்குறிப்புகள்:
1: நாய்ச்சி, நாயன்: தாய், ஞாய், நாய், ஆய் ஆகியவை பழந்தமிழில் சமசொற்கள். எனவே நாய்ச்சி என்ற சொல் சங்கத மொழி அடியாகப் பிறந்தது அல்ல, தாய் என்ற பொருள்கொண்ட தமிழ்ச்சொல். தாய்வழி மரபு இருந்த காலத்தில் இச்சொல்லின் ஆண்பால் நாயன் ஆக இருந்தது என்ற கருத்தும் உண்டு. தாய்வழி மரபைக் கடைப்பிடிக்கும் மலையாளத்து நாயர் என்ற குலப்பெயர் இவ்வாறாகவே வந்ததென்பர். பேராசிரியர் சங்கதம் என்று குறிப்பிட்டிருப்பது சமஸ்கிருத மொழி. தமிழ்மரபில், சமஸ்கிருதம், பிராகிருதம் ஆகிய மொழிகளை முறையே சங்கதம் என்றும் பாகதம் என்றும் எழுதுவதுண்டு.

2: திசை, திசாவ, திசாவை: ஈழத்தில் சிங்கள மரபிலும் தமிழ் மரபிலும் ஒரு திசையை ஆள்பவர் என்ற பொருள் கொண்டது.

3: தெல்லிச்சி வாய்க்கால்: சிவிகை தூக்குபவர்கள் குடியிருப்பை (தெல்லி) சேர்ந்த ஒரு பெண்ணின் பெயரால் வந்த வாய்க்கால். இன்று தெல்லி வாய்க்கால் என்று அழைக்கப்படுகிறது.

4: சாளம்பை: ஈழத்துக் காடுகளில் பரவலாகக் காணப்படும் ஒரு மரவகை. சிங்களத்தில் ஸல் அல்லது ஹல் என்று அழைக்கப்படுவது (Vateria acuminata or Vateria indica).

5: வளந்துப்பானை: ஒருவகைப் பானை.

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்