/* up Facebook

Mar 25, 2010

கமலாதாஸ்: சர்ச்சைகளின் காதலி -

மரணம் ஞாபகங்களின் ஊற்றுக்கண்ணைத் திறக்கிறது. எஞ்சியிருப்பவர்களினிடையே, நிச்சயமற்ற இருப்பினைக் குறித்த எச்சரிக்கையினைத் தூவுகிறது. மேலும் உயிரோடு இருப்பவர்கள், இறந்தவர்களை ஏதாவதொரு சிமிழுக்குள், சட்டகத்தினுள் அடைத்தாக வேண்டிய நிர்ப்பந்தத்தினுள் தள்ளப்பட்டவர்களைப் போல பேச ஆரம்பித்துவிடுகிறார்கள். இறந்தவர் பிரபலமான எழுத்தாளராக இருப்பாரேயாகில், அவர் புனைந்த கதைகளிலும் பார்க்க அவரைப் பற்றிப் புனையப்படும் கதைகள் அதிகமாக இருக்கவும் வாய்ப்புண்டு. அதிலும், சமூக அளவுகோல்கள், மதிப்பீடுகளை மறுத்தோடவும் கேள்வி கேட்கவும் விழைந்த கமலாதாஸைப் போன்ற எழுத்தாளர், இறப்பின் பின்னும் பலவிதமான விமர்சனங்களை எதிர்கொள்ள நேரிடுவது இயல்பானதே.

1934ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் திகதி, கேரளத்தின் திருச்சூர் அருகிலுள்ள நாலாப்பட்டு தறவாட்டில், மாத்ருபூமி நாளேட்டின் நிர்வாக ஆசிரியரான வி.எம்.நாயர் என்பவருக்கும், கவிஞர் பாலாமணியம்மாவிற்கும் மகளாகப் பிறந்தவர் ஆமி என்று சிறுவயதில் அழைக்கப்பட்ட மாதவிக்குட்டி. மலையாளத்தில் மாதவிக்குட்டியாகவும் ஆங்கிலத்தில் கமலாதாஸ் ஆகவும் அறியப்பட்ட இவருடைய ‘என் கதை’என்ற தன்வரலாற்று நூல் இந்தியாவிலேயே மிக அதிகமாக விற்பனையானதாகக் கூறப்படுகிறது. அந்நூல் பலவிதமான சர்ச்சைகளுக்கு உள்ளானது. கற்பு, கலாச்சாரம் இன்னபிறவற்றினால் இயக்கப்படும் நமது ஆச்சாரப்பசுக்கள் அந்நூல் மிகையான பாலியலைப் பேசியதாகக் கண்டனம் தெரிவித்தனர். குமுதத்திலும் அந்நூல் தொடராக வந்தது. “‘என் கதை’யைப் படித்து பலரும் அதிர்ந்துபோனதாகச் சொல்லப்படுகிறதே…” என்று ஒரு பத்திரிகையாளர் கேள்வி எழுப்பியபோது, “அதிர்ந்துபோனதுபோல பாசாங்கு செய்தனர்”என்று பதிலளித்தார் கமலாதாஸ். ஆன்மாவின் அடியாழத்திலிருந்து புறப்பட்டு வந்த பதிலாக அது அமைந்திருந்தது. ‘நாம் புனிதமானவர்கள், கண்ணுக்குத் தெரியாத வரையறைகளுக்குக் கட்டுப்பட விதிக்கப்பட்டவர்கள்’ போன்ற பொய்மைகளைத் துகிலுரிந்து காட்டியது அந்தத் துணிச்சலான பதில்.
அவர் சொல்கிறார்:

“என் வாழ்வின் இரகசியங்கள் எல்லாவற்றையும் எழுதி என்னைக் காலி உடம்பாக ஆக்கிவிடவேண்டும் என்பதற்காகவே எழுதுகிறேன்” என்று.

குழப்பவாதியாகவும், உணர்ச்சிகளால் அலைக்கழிக்கப்படுபவராகவும், கனவு காண்பவராகவும், தத்தளிக்கும் மனோநிலையுடையவராகவும் கமலாதாஸ் சித்தரிக்கப்பட்டார். பெண் என்பவள் வார்க்கப்பட்ட வெண்கலச் சிலைபோல இருக்கவேண்டும்; நெகிழ்வு கூடாது என்ற புனிதத் தத்துவங்களில் ஒன்றாகவே மேற்கண்ட விமர்சனத்தையும் பார்க்கவேண்டியிருக்கிறது. அதிலும், காலாகாலமாகப் பின்பற்றப்பட்ட, அச்சில் ஊற்றி எடுக்கப்பட்ட மரபுகளுக்கு எதிர்நிலையில் நின்று பெண்ணானவள் பேசுவதும் நடந்துகொள்வதும் படுபாதகமாகவே கருதப்படுகிறது. ஆணாதிக்க சமூகத்தின் ஆணிவேராகிய மதம் தொடர்பாகவும் அந்த எதிர்நிலை அமைந்துவிடுமாயின் சொல்ல வேண்டியதில்லை. ‘ஐயோ! கைமீறிப் போகிறாளே’என்ற பதட்டம் அவர்களைத் தொற்றிக்கொள்கிறது. கமலாதாஸ் எழுத்திலும் வாழ்விலும் கலகக்காரியாக அறியப்பட்டவர். மரணத்தின் பிறகும் அவர்மீதான ஆதிக்கம் விமர்சன வடிவில் தொடர்வது வேதனைக்குரியது.

அண்மைக்காலமாக இணையத்தளங்கள் அச்சு ஊடகங்களுக்கு சமாந்தரமாக இயங்க முற்பட்டுவருகின்றன அன்றேல் நெருங்கிவந்துகொண்டிருக்கின்றன என்று சொல்லலாம். இன்றைக்குத் தமிழிலே பிரபலமாகப் பேசப்படும் பல எழுத்தாளர்கள் இணையத்திலே எழுதவாரம்பித்திருக்கிறார்கள். கடந்த மே மாதம் 31ஆம் திகதி தனது எழுபத்தைந்தாவது வயதில் புனேயில் கமலாதாஸ் மரணமடைந்ததையொட்டி எழுத்தாளர் ஜெயமோகன் பதிவொன்றினைத் தனது இணையத்தளத்திலே இட்டிருந்தார். வழக்கம்போல தனது நியாயத் தராசிலே கமலாதாஸையும் நிறுத்தி எடைபோட்டபின் அவரால் மொழியப்பட்ட வாசகங்கள் இவைதாம்:

“கமலாவின் பிரச்சனைகளின் ஊற்றுக்கண் ஒன்றுதான். அவர் அழகி அல்ல. கறுப்பான, குண்டான கிட்டத்தட்ட அவலட்சணமான பெண். அழகிகளின் குடும்பத்தில் பிறக்கவும் நேரிட்டது. இந்தத் தாழ்வுணர்ச்சியில் இருந்து உருவான திரிபுபட்ட ஆளுமை அவருடையது.”

ஜெயமோகன் மேலும் சொல்கிறார்…

“தாழ்வுணர்ச்சியால் விளைந்த அணையாத காம இச்சை கொண்டிருந்தார் என அவரது சுயசரிதை மற்றும் குறிப்புகள் காட்டுகின்றன. தோற்றம் காரணமாகப் புறக்கணிக்கப்படும் பெண்ணின் ஏமாற்றப்பட்ட காமம் அது. அந்த இச்சையையே அவர் விதவிதமாக வெளிப்படுத்தினார். அல்லது அது ஒருவகை வன்மம்.”

இதை வாசித்து முடிந்ததும் எனக்குள் சில கேள்விகள் எழுந்தன. கறுப்பான, குண்டான பெண்கள் அழகற்றவர்கள் என்ற பொதுப்புத்தியை, அறியப்பட்ட எழுத்தாளரான ஒருவரால் எந்தவித தயக்கமின்றி எப்படிப் பொதுவெளியில் பேசமுடிகிறது? ஒருவருடைய அழகு அவருடைய எழுத்தில் பொருட்படுத்தத்தக்க பாதிப்பினை உண்டுபண்ணுகிறதா? அழகிகளாயிருக்கும்-அழகன்களாயிருக்கும் எழுத்தாளர்களின் படைப்புகளில் காமம் அளந்து பரிமாறப்படுகிறதா? தனது படைப்பாற்றல் வழியாகச் சிந்தனைத் தளத்தினுள் வாசகர்களைச் செலுத்துவதில் பெரும் பங்காற்றிய கமலாதாசுடைய எழுத்தின் பின்னணியில் இயங்கும் உளவியலை ஆராய்வதன் மூலம் தனது பிதாமகத்தன்மையை ஜெயமோகன் நிறுவ முயல்கிறாரா? காமம் என்பது பாவமே போன்ற தொனி மேற்கண்ட வாசகங்கள் ஊடாக வெளிப்படுவதிலுள்ள அபத்தத்தை ஜெயமோகன் உணரவில்லையா? ஒருவர் இறந்தபின்னால் அவரது இருண்ட பக்கங்களைப் பற்றிப் பேசக்கூடாது என்ற கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. ஆனாலும், மேற்கண்ட வாசகங்கள் வாயிலாக கமலாதாஸின் ஆளுமை பற்றிய மதிப்பீட்டைச் சரிக்கவே ஜெயமோகன் முயல்கிறார் என்று தோன்றுகிறது. அதிலும் அதீத காமத்தோடு நடந்துகொள்வது அன்றேல் அப்படிப் பேசுவது மற்றும் எழுதுவது, சமூகத்தினால் ஏலவே கட்டமைக்கப்பட்டிருக்கிற பெண் பிம்பத்தைச் சிதைக்கிற செயல் என்ற பதட்டத்தை மேற்கண்ட வார்த்தைகளில் என்னால் இனங்காணமுடிகிறது. பழமைச் சேற்றில் ஊறிய பொச்சுமட்டைகளால் எத்தனை காலத்திற்குத்தான் அரிக்கும் தங்கள் முதுகுகளைச் சொறிந்துகொள்ளப்போகிறார்களோ என்று அச்சமாக இருக்கிறது.

ஜெயமோகன் மட்டுமென்றில்லை; மதவாதமும் ஆண்வாதமும் இந்தச் சமூகத்தினைச் சீரழிக்கும் நோய்க்கூறுகளாகத் தொடர்ந்திருக்கின்றன. கமலாதாஸ் என்ற புனைபெயரை ஏற்றுக்கொண்ட மாதவிக்குட்டி தனது 65ஆவது வயதில் இஸ்லாம் மதத்திற்கு மாறி கமலா சுரையாவாகிறார். புகழ்பெற்ற இஸ்லாமியப் பேச்சாளர் ஒருவரை மணந்துகொள்ளும்பொருட்டு மதம் மாறியதாகக் கூறும் அவரை, அந்தப் பேச்சாளர் பிறகு ஏமாற்றிவிட்டதாக கமலாதாஸே ஒரு கூட்டத்தில் பேசும்போது குறிப்பிட்டிருக்கிறார். தனிமையின் துயர் தாளாமல் துணையை அடைய வேண்டி மதம் மாறியது அவருடைய சொந்தப் பிரச்சனை. “நீ எப்படி மதம் மாறலாம்?”என்று கேட்டு இந்துத்துவா அடிப்படைவாதிகள் அவருக்குக் கொலைமிரட்டல் விடுக்கிறார்கள். கொலை முயற்சிகளிலும் ஈடுபடுகிறார்கள். எப்போதும் உயிராபத்து நிறைந்த சூழலிலேயே அவர் வாழவேண்டியேற்பட்டது. பத்திரிகைகள் அவர் மதம் மாறியதைப் பற்றிப் பக்கம் பக்கமாக எழுதுகின்றன. தான் ஆமியாக சிறுபெண்ணாய் பால்யத்தில் வாழ்ந்த பழைய வீட்டிற்கு கமலாதாஸ் சென்று வந்தபிறகு, அந்த வீட்டை அங்குள்ளவர்கள் தண்ணீர் விட்டுக் கழுவுகிறார்கள். ஏனென்றால், ஒரு முஸ்லிம் பெண்ணின் பாதங்களால் அந்த வீடு தீட்டுப்பட்டுவிட்டதாம். மதமாற்றத்தின் காரணமாக எழுந்த சர்ச்சைகளால், விமர்சனங்களால் புண்பட்ட கமலாதாஸ் தனது தாய்பூமியான கேரளத்தைவிட்டு வெளியேறி, வயோதிபத்தில் புனேயில் வசிக்கவும் அங்கேயே இறக்கவும் நேரிடுகிறது. இந்தியா பல மதங்கள், மொழிகள் பேசும் மக்களைக் கொண்ட புண்ணிய பூமி என்று போற்றப்படுகிறது. அந்தப் புண்ணிய பூமியில் எழுத்தாளராகக் கொண்டாடப்படும் ஒரு பெண், மதம் மாறுவதென்பது அவளது சொந்தப் பிரச்சனையாக அல்லாது சமூகத்தின் பிரச்சனையாக இருப்பதென்பது அபத்தத்திலும் அபத்தமானதாகத் தோன்றுகிறது. மதம் என்பதை ஒரு விடயமாகக் கருதியதில், பொருட்படுத்தியதில் கமலாதாஸ் என்ற ஆளுமையுடைய பெண் தோற்றுவிட்டாள்தான். என்றாலும், தான் யாராக வாழவிரும்புகிறாளோ அதை அவளுடைய தெரிவுக்கு விட்டுவிடுவதன்றோ நியாயம்?

பால்யகால ஸ்மரணங்கள், பூதகாலம், பஷியுடைய மரணம், யா அல்லாஹ் ஆகிய பேசப்பட்ட நாவல்களையும் சிறந்த பல சிறுகதைகளையும் எழுதிய- கேரள சாகித்திய அகாதமி விருது, வயலார் விருது, எழுத்தச்சன் விருது ஆகிய பெருமைகளைப் பெற்ற கமலாதாஸின் மறைவு கேரளத்தின் துக்கமாயிருந்தது சில தினங்கள். அவருடைய உடல் எடுத்துச் செல்லப்பட்ட வழியெல்லாம் கேரள மக்கள் திரண்டு அஞ்சலி செலுத்தினர். மிக அண்மையில் கவிஞரும் பல எழுத்தாளர்களின் நண்பரும் நல்லிதயம் கொண்ட மனிதருமாகிய ராஜமார்த்தாண்டனைத் தமிழிலக்கிய உலகம் விபத்தொன்றில் இழந்தது. சில சஞ்சிகைகள், இணையத்தளங்களைத் தவிர மற்றெல்லாம் மகாமௌனம் காத்தன. இழப்பின் துயரத்தைக் காட்டிலும் மாபெரிய துயரம், ஒரு கவிஞனின் மரணத்தைக்கூடத் தமிழ்கூறும் இந்தப் பொய்யுலகம் பெரியளவில் கண்டுகொள்ளாமலிருந்ததுதான்.

ஜூன் 13ஆம் திகதியன்று வால்பாறையில் தமிழ்க் கவிஞர்கள் இயக்கத்தினால் நடத்தப்பட்ட இலக்கியக் கூட்டத்தில் வாசிக்கப்பட்ட கட்டுரை.
-----

கமலாதாஸின் கவிதை
மொழியாக்கம்: எஸ்.வி.வி.வேணுகோபாலன்

அரசியல் தெரியாது எனக்கு
ஆனால் அதிகாரத்தில் இருப்பவர்களின்
பெயர்கள் தெரியும் எனக்கு.
நேருவில் துவங்கி
வரிசையாக ஒப்புவிக்கவும்முடியும் என்னால்
கிழமைகளை, மாதங்களைச்சொல்வதுபோல.
நான் ஓர் இந்தியர்
நிறம் மிகவும் பழுப்பு
மலபாரில் பிறந்தவள்
பேசுகிறேன் மூன்று மொழிகளில்
எழுதுகிறேன் இரண்டில்
கனவில் ஆழ்கிறேன் ஒன்றில்.

அவர்கள் சொன்னார்கள்
'ஆங்கிலத்தில் எழுதாதே
ஆங்கிலம் உனது தாய்மொழியன்று.'
என்னை ஏன் தனிமையில் விடக்கூடாது?
விமர்சகர்களே, நண்பர்களே, சந்திக்கவரும் சொந்தங்களே
உங்கள் ஒவ்வொருவரையும்தான் கேட்கிறேன்.
எனக்குப் பிடித்தமான எந்தவொரு மொழியிலும்
என்னைப் பேசவிடுங்களேன்.
நான் பேசுகிற மொழி எனதாகிறது.
அதன் பிறழ்வுகள், அசாதாரணப் பிரயோகங்கள் எல்லாம்
என்னுடையவை
என்னுடையவை மட்டுமே.
அது அரை ஆங்கிலம்
அரை இந்தியம்
ஒருவேளை நகைப்பிற்குரியதும்கூட.
ஆனாலும் அது நேர்மையானது
.உங்களால் பார்க்கமுடியவில்லையா?
நான் எவ்வளவு மனுஷத்தனம் கொண்டவளோ
அவ்வளவு மனிதத்தன்மை அதற்குமிருக்கிறது.
அது பேசுகிறது
எனது குதூகலங்களை, எனது விழைவுகளை, எனது நம்பிக்கைகளை.
அது எனக்குப் பயன்படுகிறது
காகத்திற்கு அதன் கரைதலைப் போல
சிங்கத்திற்கு அதன் கர்ஜனையைப் போல
அது மனிதப் பேச்சு
இங்கிருக்கிற, அங்கு இல்லாத மனத்தின் பேச்சு.
பார்க்கிற, கேட்கிற எல்லாம் அறிகிற ஒரு மனத்தின் பேச்சு.
செவியற்ற விழிகளற்ற பேச்சல்ல
புயலில் சிக்கிய மரங்களின்-
பருவமழையைச் சுமக்கும் மேகங்களின் -
மழையின்-
தொடர்பற்ற முணுமுணுப்புகளைச் செய்தவாறு
கொழுந்துவிட்டெரியும் சிதை நெருப்பின் பேச்சு அது.

நான் குழந்தையாக இருந்தேன்
பிறிதொருநாள் அவர்கள் சொன்னார்கள்
நான் வளர்ந்துவிட்டேனென்று
ஏனெனில் நான் உயரமாகிவிட்டேன்
எனது உடல் பெரிதாகிவிட்டது
ஒன்றிரண்டு இடங்களில் முடி வளரத்துவங்கிவிட்டது.
நான் காதலைக் கேட்டபோது
அவன் ஒரு பதினாறு வயது யௌவனத்தை
எனது படுக்கையறைக்குள் தள்ளிவிட்டுக் கதவைச் சாத்தினான்.
அவன் என்னை அடிக்கவில்லை
ஆனால் வருத்தமுற்ற என் பெண் மேனி
அடிவாங்கியதாக உணர்ந்தது.
எனது மார்பகங்களின் பளுவும், கருப்பையும்
அழுத்திய அழுத்தத்தில்
பரிதாபகரமாக நான் சுருங்கிப்போனேன்.
பிறகு ஒரு சட்டையையும்
எனது சகோதரனின் கால்சட்டையையும் அணிந்தேன்.
தலைமுடியைக் குட்டையாகக் கத்தரித்துக்கொண்டேன்.
எனது பெண்மையைப் புறக்கணித்தேன்.

அவர்கள் சொன்னார்கள்
சேலைகளை அணி
பெண்ணாய் இலட்சணமாய் இரு
மனைவியாய் இரு
தையல் வேலையைச் செய்துகொண்டிரு
சமையல்காரியாய் இரு
சண்டை போட்டுக்கொண்டிரு
வேலையாட்களுடன் பொருந்தி இரு
ஒட்டிக்கொண்டிரு
என்றனர் வகைப்படுத்துநர்கள்.
சுவரின் மீது உட்காராதே
மெல்லிய திரைச்சீலைகள் தொங்கும்
எங்கள் சன்னல்கள் வழியாகப் பார்க்காதே
ஆமியாய் இரு கமலாவாய் இரு
மாதவிக்குட்டியாய் இருந்தால் இன்னும் நல்லது.
இதுவே சரியான தருணம்
ஒரு பெயரைத் தேர்வுசெய்துகொள்ள.
கண்ணாமூச்சி விளையாட்டுக்கள் வேண்டாம்
மனநோயாளியோடு விளையாடாதே
திருப்தியுறாத ஆளாயிராதே
காதல் முறிவின்போது சங்கடப்படுத்தும்படி
ஓவென்று இரையாதே….

ஒரு மனிதனைச் சந்தித்தேன்
காதல்வயப்பட்டேன்
எந்தப் பெயரிட்டும் அழைக்கவேண்டாம் அவனை
ஒரு பெண்ணை நாடும் எவனோ ஒரு ஆண்தான் அவனும்.
காதலை நாடும் எவளோ ஒரு பெண்ணாகிய என்னைப்போலவே
அவனுள்…. நதிகளைப் போலவே ஒரு பசியின் வேகம்
என்னுள்…சமுத்திரங்களின் களைப்பில்லாத காத்திருத்தல்.
உங்கள் ஒவ்வொருவரையும் கேட்கிறேன்“யார் நீ?”
“அது நானே”என்பதே விடை.
எங்கும் எல்லா இடங்களிலும் காண்கிறேன்
தன்னை நான் என்று அழைத்துக்கொள்பவரை.
உறைக்குள் செருகப்பட்டிருக்கும் வாளைப்போல்
இறுக்கமாக அவன் திணிக்கப்பட்டிருக்கிறான்
இந்த உலகத்தினுள்.

தனிமையில் குடிப்பது நான்தான்
புதிய நகரங்களின் விடுதிகளில்
நடுநிசி பன்னிரண்டு மணிக்குக் குடிப்பவள் நான்தான்.
பிறகு வெட்கத்திலாழ்ந்து செத்துக் கிடக்கிறேன்
தொண்டை விக்கி.
நான் ஒரு பாவி
நான் ஒரு ரிஷி
நேசிக்கப்படுபவள் நான்
வஞ்சிக்கப்படுபவளும் நான்தான்.
உங்களுக்கில்லாத குதூகலங்கள் எதுவும் எனக்குமில்லை
நானும் அழைத்துக்கொள்கிறேன் என்னை
நான் என்று.

நண்பர் மாதவராஜின் ‘தீராத பக்கங்கள்’இல் மேற்கண்ட கவிதை வெளியாகியிருந்தது. அவருக்கு என் நன்றிகள்.

நன்றி தமிழ்நதி

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்