/* up Facebook

Mar 10, 2010

உங்களின் அன்னையரும், சகோதரிகளும், உங்களின் மனைவியரும், புதல்வியரும் எங்கே? - (முதலாம் பகுதி) குமாரி ஜயவர்த்தன

எகிப்தின் அரைவாசி மக்களது பிரதிநிதிகளையே நான் இங்கு பார்க்கிறேன். ஏனைய அரைவாசிப் பேர் எங்கே என்று நான் கேட்கலாமா? எகிப்தின் புதல்வர்களே, எகிப்தின் புதல்விகள் எங்கே? உங்களின் அன்னையரும், சகோதரிகளும், உங்களின் மனைவியரும், புதல்வியரும் எங்கே?


(1910ம் ஆண்டு பிரசில்சில் நடைபெற்ற எகிப்திய தேசியக் காங்கிரசின் கூட்டத்தில் இந்தியாவைச் சேர்ந்த பிக்காய்ஜி காமா அற்றிய உரையில் இருந்து)


19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் கீழைத்தேயத்தைச் சேர்ந்த ஒரு சில குறிப்பிட்ட நாடுகளில் பெண்ணியத்தின் ஆரம்ப வளர்ச்சி பற்றியும், அரசியல் போராட்டங்களில் பெண்கள் இயக்கங்களின் பங்கேற்புப் பற்றியும் இந்த ஆய்வு விளக்குகின்றது. தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளான துருக்கி, எகிப்து, ஈரான் ஆகியவை ஏகாதிபத்திய வல்லரசுகளுடன் தொடர்பு கொண்டிருந்தன என்ற வகையில் அவை தம்மிடையே ஓர் பொதுப் பண்பைக் கொண்டிருந்தன. எனினும் பண்பாடு, கருத்தியல் கொள்கைகள் என்பனவற்றில் அவற்றிடையே வேறுபாடுகள் காணப்பட்டன. இத்தகைய வேறுபட்ட கருத்தியல் கொள்ளைகள் அந்நாடுகளிலுள்ள பெண்களின் நிலை, பெண்களின் பங்கு, பெண்கள் இயக்கங்களின் தனிச்சிறப்புப் பண்புகள், அணுகுமுறைகள் என்பவற்றின் மீது தாக்கத்தை ஏற்படுத்தின. இதை நாடுகள் ரீதியாக இந்த நூல் விபரமாக எடுத்துக் காட்டுகின்றது.


பெண்ணியம், பெண்ணியலாளர் என்ற சொற்பதங்கள் மனக்கிளர்ச்சியையும், ஒருவித வெறுப்புணர்வையும் தூண்டுகின்றன. பெண்ணியம் என்பது ஓர் அண்மைக்காலக் கருத்தியல் அல்ல. அது 19ஆம் 20ஆம் நூற்றாண்டுகளின் போது ஐரோப்பாவிலும் ஏனைய பகுதிகளிலும் வேரூன்றிய ஓர் வாதவிடயம் என்பதை அனேகர் கவனிக்கத் தவறியுள்ளனர். அது பெண்கள் மீதான அடக்குமுறைகள், பெண்கள் (குடும்பத்துள், வேலைத்தளத்துள், சமூகத்துள்) சுரண்டப்படுதல் போன்ற விடயங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, அந்நிலையை மாற்றியமைப்பதற்கான உணர்வுபூர்வ செயல் நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதையும் பொருள்படுத்துகின்றது.


இது, சீர்கேடுற்ற மேற்கத்தேய முதலாளித்துவத்தின் விளைபொருள் எனவும், உள்நாட்டு பூர்ஷ_வா (முதலாளித்துவப்) பெண்களின் கருத்தியல் கொள்கை எனவும், அது பண்பாடு, சமயம், குடும்பப் பொறுப்பு, தேசிய விடுதலை, சோஷலிஸம் என்பவற்றிலிருந்து பெண்களை அந்நியப்படுத்தித் திசை திருப்புகின்றது எனவும் மரபுவாதிகள், பழமை பேணும் அரசியல்வாதிகள், ஏன் சில குறிப்பிட்ட இடதுசாரிகள் கூடச் சாடியுள்ளனர். மூன்றாம் உலகில் பெண்களின் விமோசனம் அல்லது பெண்களின் போராட்ட இயக்கங்கள் மேற்கத்தேய மாதிரிகளின் வெறும் பின்பற்றுதலே என்பது அவர்களின் கருத்தாகும்.


பெண்ணியமானது, மேற்கினால் மூன்றாம் உலகின் மேல் திணிக்கப்பட்ட ஒன்றல்ல என்பதையும், வரலாற்றுச் சூழ்நிலைகள் ஏற்படுத்திய கருப்பொருள், கருத்தியல் மாற்றங்கள் தான் பெண்களின் மீது தாக்கத்தை உருவாக்கியது என்பதையும் ஆராய்ந்து எடுத்துக் காட்டுவது அவசியம். என எனக்குத் தென்பட்டது. குறிப்பிடப்பட்ட நாடுகளில் ஏகாதிபத்தியத்தையும் மேலாதிக்கத்தையும் உதறித் தள்ளுவதற்கு முற்பட்ட முயற்சிகளாக-உள்நாட்டு சீர்திருத்தங்களைக் கொண்டு சமூகத்தை நவீனமயமாக்கல், உள்நாட்டு சீர்திருத்தங்களுக்கும் தடங்கலாக விளங்கும் ஆளும் வம்சாவழியினரையும் சமயமரபுக் கோட்பாடுகளையும் அழித்தொழித்தல், ஓர் தேசிய தனித்துவ அடையாளத்தை வலியுறுத்தி மக்களை அணிதிரட்டல் ஆகியவற்றின் பின்னணியில் இயங்கிய பெண்கள் விமோசன இயக்கங்கள் பற்றி இந்நூல் விபரமாக ஆய்வு செய்கின்றது.


மேற்கத்தேய மாதிரிகளைப் பின்பற்றுதல் மூலம் மேற்கத்தேய ஆக்கிரமிப்பை முறியடித்து, நாட்டைப் பலப்படுத்தி, தனித்துவப் பண்பாட்டு அடையாளத்தை நிலை நாட்டக் கையாண்ட யுக்தி, முரண்நகையானதொன்று எனக் கருதியாக வேண்டும். சர்வாதிகார ஆட்சிகளைக் கொண்ட துருக்கி, ஈரான் போன்ற நாடுகள், தேவைப்பட்ட நவீனமயமாக்கும் சீர்திருத்தங்களை தமது மக்கள் மீது திணித்தன. எனினும், எகிப்தில் சீர்திருத்தவாதம், தேசியவாதம் என்பன அக்காலகட்டத்தில் நிலவி வந்த வர்க்கக் கட்டமைப்புகள், முடியாட்சி அமைப்பு முறை என்பனவற்றின் வரையறைக்குள் வளர்ச்சியடைந்தன.


தேசியவாதம் ஓங்கி வளர்ந்ததும் உள்நாட்டு பூர்ஷ_வாக்களின் போராட்டங்கள் உள்வாரி, வெளிவாரி என இரு முனைகளில் மேற்கொள்ளப்பட்டன. இதன் போது தேசிய, பண்பாட்டுத் தனித்துவத்திற்கான அடையாளங்கள் வலியுறுத்தி, தேசபக்த அழைப்புகளை விடுக்க வேண்டியிருந்தது. கல்வி, விஞ்ஞானம், தொழில்நுட்பம், கைத்தொழில் என்பவற்றில் சீர்திருத்தங்களை ஊக்குவித்து, பிரதிநிதித்துவம் வாய்ந்த அரசாங்கம், சர்வஜன வாக்குரிமை, மனிதஉரிமை, தேசங்களின் உரிமை எனத் தாராளவாத கொள்கைக் குரல்கள் போராட்டங்களின் போது எழுப்பப்பட்டன. இதில் உள்நாட்டு பூர்ஷ_வாக்கள் பொருள்முதல்வாதத்தை அடிப்படையாகக் கொண்டு அரசியல், பொருளாதார பலத்தை அடைய முயன்றமை தென்படுகின்றது.


பண்பாட்டுத் தனித்துவ அடையாளத்தை உருவாக்குவதற்கும். அதை வலியுறுத்துவதற்கும் ஏகாதிபத்தியத்தின் வளர்ச்சியே ஓரளவு காரணமாக அமைந்ததெனக் கூறலாம். 18 ஆம் நூற்றாண்டின் போது. கீழைத்தேயத்தின் பண்பாடு, கட்டமைப்பு என்பன பற்றித் தெரிந்து கொள்வதில் ஐரோப்பாவில் பெரும் ஆர்வம் ஏற்பட்டது. அதன் விளைவாகப் புதிய கண்டுபிடிப்புகளுக்கான பயணங்களும் தொல்பொருள், வரலாற்று ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டன. இதனால் ஐரோப்பியப் பண்பாடு, புலமைத்திறன் என்பவற்றின் கண்ணோட்டங்களுடாக, ஐரோப்பியரல்லாதோரின் பண்பாடுகளை ஆராயும் ஓர் புதுக் கருத்துப் படிவம் உருவாகியது. காலப் போக்கில் இக்கருத்துப் படிவம் பண்பாட்டு ஆதிக்கம் செலுத்தும் கருவியாகவும் மாறியது.


பண்பாடுகளுக்கிடையிலான பிணைப்புகள் இருவழிச் செயற்பாடுகளாய் இருந்தன. பண்டைய கிழக்கின் பண்பாடே, நாகரிகத்தின் தோற்றுவாய் என்பதுவும் கீழைத்தேய மொழியான சமஸ்கிருதத்திற்கும் ஐரோப்பிய மொழிகளுக்கும் தொடர்புண்டு என்பது போன்ற எண்ணக்கருத்துக்களும் 19 ஆம் நூற்றாண்டு மேற்கத்தேய அரசியல் சிந்தனைகள் மீது ஆழ்ந்த செல்வாக்கைச் செலுத்தின. இதே மாதிரியாக, மேற்கத்தேய பண்பாட்டின் விழுமியங்களான இயற்கையான உரிமைகள், தாராளவாதம், பாராளுன்ற ஐனநாயகம் என்பவை ஆசிய, ஆபிரிக்க நாடுகளைக் கவர்ந்தன.


தெளிவான அறிவூட்டலுக்குத் தடங்கலாக இருப்பவரை (ழடிளஉரசயவெளைஅ) எதிர்த்துப் போராடி நடைமுறையிலிருக்கும் கட்டமைப்புகள், சமயப் பண்பாட்டு மரபுகள் போன்றவற்றைப் பகுத்தறிவிற்குப் பொருத்தமாக மாற்றியமைப்பதற்குத் தேசியவாதிகள் எடுத்த சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு ஐரோப்பாவிலுள்ள கீழைத்தேய நாகரிகப்பற்றுடையோரின் செல்வாக்கும், பிரெஞ்சுப் புரட்சிச் சிந்தனையாளர்களின் கருத்துகளும் மக்களுக்கு பிரக்ஞையை ஏற்படுத்தத் துணைபுரிந்தன.


புனித மார்க்க விரிவுரை விளக்கங்களுக்கு, புதியதாய் பொருள் விளக்கம் காணுதலையும், சமயகுரு மரபைச் சார்ந்த கட்டமைப்புகளை சீர்திருத்தம் செய்வதையும் நோக்கமாகக் கொண்டு, சமயப்புத்தெழுச்சி இயக்கம் செயற்பட்டது. அந்தக் காலகட்டத்தில் மத்திய கிழக்கில் நிலவிய சூழ்நிலைகளில் அரசியல் பொருளாதார வளர்ச்சிக்கு, இஸ்லாம் ஒரு தடங்கலாகக் கருதப்பட்டது. எனவே, இஸ்லாத்திற்கு புதிதாகப் பொருள் விளக்கம் தேடி அதை சமூக முன்னேற்றத்திற்கு ஒத்திசைவாக்கும் ஓர் பகுத்தறிவு வாய்ந்த சமயமாக உணரச் செய்வது பற்றியும் பெருமளவில் எழுதப்பட்டுள்ளன.


தேசியவாதத்தின் வளர்ச்சியை நிறைவேற்றுவதற்கோ, பெண்களின் விமோசனம் குறித்த செயல்முறைகளைக் கொண்டு சமூக மேற்கட்டமைப்புகளை சீர்திருத்தவோ, சமய குருமரபைச் சார்ந்த அதிகாரத்துவம் துணைபுரிந்ததாக இல்லை. எனவே அவர்களின் அதிகாரத்தைக் குறைப்பதற்கு பெருமளவு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பகாலத்தின் போது மதச்சார்பின்மை கொண்ட அரசியல் முறையொன்றை ஸ்தாபிப்பதற்கு இளம் துருக்கியர் மேற்கொண்ட முயற்சியை இங்கு விசேஷமாகக் குறிப்பிடலாம். இது அண்டைய இஸ்லாமிய நாடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது.


பிரக்ஞை ஒன்றை உருவாக்கி, கட்டமைப்புகளைத் திட்டமிட்டு மேற்கத்தேய மேலாதிக்கத்திலிருந்து தப்பிக் கொள்வதற்கு மேற்கத்தேய மதச்சார்பின்மைச் சிந்தனைகள் ஒரு முக்கிய பங்கு வகிப்பதை இங்கு நாம் காண்கிறோம். பூர்ஷ_வாக்கள் இந்த எண்ணக்கருத்தை உள்வாங்கி - ஓர் புதிய தேசியப் பிரக்ஞை. நவீனமாக்கம், மதச்சார்பின்மை கொண்ட அரசியற் கட்டமைப்புகள் ஆகியவற்றைப் படிப்படியாகக் கட்டியெழுப்ப அதைப் பிரயோகித்தனர். எனினும் இந்த உணர்ச்சி வேகம் குன்றி அதன் பின்னர், ஆணவப் பிடிவாதக் கருத்துரைகளும், மதங்களும் வியக்கத்தக்க வகையில் நீடித்து நிலைத்து நின்றன.


பிரக்ஞையை உருவாக்கிய மற்றுமொரு முக்கிய ஆக்கக் கூறு கல்வியாகும். ஆரம்பத்தில் அது, சமூகப்படி முறையில் உயர்மட்டத்தை வகித்தோர். சமயப்பற்றுடையோர் என்பவரிடையே மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. வெகுஜனக் கல்வியென்பது காலனித்துவ ஆதிக்கங்களால் பின்னொரு காலத்தில் இந்நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்ட ஓர் பூர்ஷ_வா உலகைச் சார்ந்த கருத்துப் படிவமாயிற்று. இதன் ஆரம்ப நோக்கம் மதமாற்றத்தை ஊக்குவிப்பதாகவும், நிர்வாகத் தொழிற்துறைக்கு உகந்தோரை உருவாக்குவதுமாகும். எனினும் பின்னர் இது வெகுஜனங்களிடையே எழுத்தறிவு பரவியதற்குக் காரணமாகி, செய்தித்தாள்கள், சஞ்சிகைகளின் விஸ்தரிப்பிற்கான அடித்தளத்தையும் இட்டது.


எழுத்தறிவு, செய்தித்தாள் என்பன விரிவடைந்ததன் காரணமாக ஒரு நாட்டின் அரசியல் நிகழ்வுகள் பற்றி மற்றைய நாடுகளில் தெரிவிக்கப்பட்டதனால், அது தேசியவாதிகள் மீதும் புரட்சியாளர்கள் மீதும் ஓர் துரிதமான தாக்கத்தை ஏற்படுத்திற்று. 1908இல் இளம் துருக்கியரின் புரட்சி, 1922இல் முஸ்தாபா கெமாலினால். துருக்கிய அரசு பிரகடனப்படுத்தப்பட்டமை ஆகியன இவற்றுள் சிலவாகும். இவை எல்லாவற்றிற்கும் மேலாக 1917இன் ரஷ்யப் புரட்சியையே மேலோங்கிய செல்வாக்கைச் செலுத்திய நிகழ்வாகக் கருதலாம்.


குறிப்பிட்ட நாடுகளில்-ஏகாதிபத்தியவாதம், அந்நிய மேலாதிக்கத்திற்கு எதிரான பலவகையான இயக்கங்கள் என்பவற்றை ஒரு பக்கமாகவும், சுரண்டல் போக்குக் கொண்ட உள்நாட்டு ஆட்சியாளர்கள், மரபார்ந்த ஆணாதிக்க மேலாட்சி முறை, சமயக் கட்டமைப்புகள் ஆகியவற்றை மறுபக்கமாகவும் நாம் காணலாம். இதன் பின்னணியில் எழுந்த பெண்ணியப் போராட்டங்களில் நாம் கவனம் செலுத்துதல் அவசியம். அந்தந்த நாட்டுக்குரிய அய்வுகளை நோக்குகையில் தேசிய எதிர்ப்பு இயக்கங்களை முழுமைப் படுத்துவதற்கு பெண்கள் விமோசனம் இன்றியமையாதது என்பதைக் கண்டு கொள்ளலாம். பெண்களின் பங்கேற்பு. பெண்களின் அந்தஸ்து போன்ற வாதவிடயங்கள் 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியின் போது தோன்றிய போதிலும் ஏகாதிபத்தியவாதம். முதலாளித்துவம் என்பன பரவிய வரலாற்றுக் காலகட்டத்தின் போது இந்த விடயம் புதிய பரிமாணங்களைக் கொண்டிருந்தது எனவே, பெண்கள் பழைய வினாக்களுக்குப் புதிய இயங்கியலின் தோற்றநிலைக்கு ஏற்ப பதில் தேட வேண்டியிருந்தது. சுருங்கக் கூறின் அது ஒரு ஜனநாயக உரிமை பற்றிய விடயமாய் மாறியது.


சமூகத்தில் பெண்களின் பங்கு மூன்று வகையாக எதிர்ப்பாக்கப்பட்டது. அதாவது - அந்நிய. உள்நாட்டு முதலாளித்துவவாதிகள், நிலஉரிமையாளர்கள் ஆகியோருக்கு மிக மலிவாகவும் எளிதாகவும் பெற்றுக் கொள்ளக் கூடிய தொழில் அணியினராகவும், காலணித்துவ பொருளாதாரத்தை நிர்வகிக்கும் உள்நாட்டு அதிகாரிகள், உள்நாட்டுத் தொழில் வல்லுனர்களுக்கு நல்ல மனைவியராய் அல்லது தாய்மார்களாகவும், உள்நாட்டு பூர்ஷ_வாக்களுக்குத் தமது நாடு, தமது நவீனத்துவம் ஆகியவற்றைப் பிரதிபலிக்கும் வகையிலும் (மேலைத்தேயமயமாக்கப்பட்ட கல்வியறிவு பெற்றோராக) அவர்கள் விளங்க வேண்டி இருந்தது.


ஆசியாவில் முதலாளித்துவம் வளர்ச்சியுற்றதும், பெண் தொழிலாளர் அணியின் முக்கியத்தவம் மேலோங்கியது. எனவே அந்நாடுகளில் பெண்களின் நடமாட்டங்களைக் கட்டுப்படுத்தும் மரபுசார்ந்த வழக்கங்கள் அதன் வளர்ச்சிக்கு கெடுதல் விளைவிப்பதாகவே கருதப்பட்டது. எனவே கைத்தொழில் அதிபர்கள், தோட்டத்துரைமார்கள். விவசாயிகள் ஆகியோருக்கு, பெண்களின் மேலதிக தொழிற்சேவையை வழங்கும் பொருட்டு. பெண்களின் விமோசனம் சார்பான எதிர்பார்ப்புக்கள் மேலும் அதிகரித்தன.


முடிக்குரிய பேரரசின் நிர்வாகத் தேவைகள், அந்நிய முதலீட்டுக்கு ஏற்ப புதுஉருவம் கொண்ட பொருளாதார அமைப்பின் தேவைகள்,முதலாளித்துவத்தின் விஸ்தரிப்பு என்பவற்றை நிறைவேற்றுவதற்கென உள்நாட்டு நிர்வாகிகள், தொழில் சார் நிபுணர்கள் அடங்கிய ஒரு பூர்ஷ_வா வர்க்கம் வெளிப்பட்டது. இவர்கள் பெண்ணியம் பற்றிய வாதவிடயங்களை ஐரோப்பிய அளவுகோல் கொண்டு நோக்கினர். எகிப்து, ஈரான். துருக்கி என்ற நாடுகளில் பெண்களுக்கு எதிராக இடம்பெறும் கொடூரமான துஷ்பிரயோகங்களான முகத்திரை அணிதல், பலதாரமணம், வைப்பாட்டிமுறை, பெண்கள் ஒதுக்கப்பட்டுத் தனிமைப்படுத்தப்படல் என்பவற்றிலிருந்து பெண்கள் விடுவிக்கப்பட வேண்டியது பற்றி அவர்கள் எடுத்துக் காட்டினர். இப்பேர்ப்பட்ட சமூகத் தீங்குகள். தம் பூர்ஷ_வா வாழ்க்கை முறையின் திடநிலைக்கு அச்சுறுத்தலாகலாம் என்பதை உணர்ந்து அவர்கள் சமூகக் கட்டமைப்புகளை பலப்டுத்துவதற்கான சீர்திருத்தங்கள் பற்றி பிரசாரம் மேற்கொண்டனரே தவிர, அவற்றை மாற்றியமைக்க முனையவில்லை. எனவே அநேக சீர்திருத்த இயக்கங்களில் ஓர் பழைமை பேணும் பக்கச் சார்பு உள்ளார்ந்து இருப்பதைக் காணலாம்.


முதலாளித்துவ விஸ்தரிப்புக் காரணமாக உருவாகிய சக்திகளின் சமநிலைத்தன்மையைப் பொறுத்து, இந்த நாடுகளில் எதிர்ப்பு இயக்கங்கள், அதிலடங்கிய பெண்ணியப் போராட்டங்கள் என்பவற்றின் இயல்புகள் வேறுபட்டிருந்தன. அநேக நாடுகளில் உள்நாட்டு பூர்ஷ_வாக்களே அவ்வியக்கங்களில் பிரதான பங்கை வகித்தனர். இதிலும் இரண்டு வகையினர் காணப்பட்டனர். ஒரு வகையினர் எதிர்ப்புப் போராட்டங்கள் சார்பாக மக்களை அணிதிரட்ட வேண்டியிருந்தவர்கள், மற்றைய வகையினர், படிப்படியான சீர்திருத்தங்கள் மேற்கொண்டு ஆட்சியாளர்களின் இடத்தை ஏற்றுக் கொள்ள வேண்டியிருந்தவர்கள். இந்த குறிப்பிட்ட தலைப்புகளில் சீர்திருத்தங்களை மேற்கொள்ளுவதற்கும் அப்பால் செயற்படவில்லை. இவர்கள் தேர்ந்தெடுத்த தலைப்புகள், பெருமளவிலான பெண்களின் அன்றாட வாழ்க்கை முறையில் சிறிதளவேனும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாக அமைந்திருக்கவில்லை.


சில நாடுகளில் உள்நாட்டு பூர்ஷ_வாக்கள் பேரரசு ஆட்சிக்காலத்து அதிகாரிகளின் இடங்களை ஏற்றுக் கொள்வதில் மட்டும் நின்று விடாது சோஷலிச சமூகத்தை ஸ்தாபிப்பதற்கான அடிப்படை நிலைமாற்றத்தை மேற்கொள்றுவதையும் நோக்கமாகக் கொண்டிருநதனர். இந்த இயக்கங்களின் பெண்ணியம் சார்ந்த பகுதி, ஓர் புரட்சிகர சக்தியாகி, அதன் உடன் நிகழ்வான சமுதாய நிலை மாற்றம், பெண்கள் அந்தஸ்தை மேம்படுத்துதல் போன்றவற்றிற்கும் துணைபுரிந்தது. பெண்ணியமென்பது வெறும் பொழுது போக்கோ அல்லது பூர்ஷ_வாக்களின் மனமாற்றாட்டமோ அல்ல என்பதையும், மாறாக போராட்டத்தின் சகல கட்டங்களும் தொடர்ச்சியான உறுதியான செயல்முறையாக அமைந்திருந்தன என்பதற்கு இப்பேர்ப்பட்ட நிகழ்வுகள் சான்று பகர்கின்றன.


பெண்களின் இயக்கங்கள் ஒரு வெற்றிடத்தில் செயற்படாது பரந்த சமூக இயக்கங்களின் ஒரு பகுதியாகவும், அதனுடன் ஒத்திசைந்து அதன் இயங்கியலுக்கு உட்பட்டதாகவும் அமைகின்றன. சமூகத்தின் பொதுவான பிரக்ஞைநிலை, அதன் எதிர்காலம் பற்றிய எதிர்பார்ப்பு, அதன் கட்டமைப்பு, அதில் ஆண், பெண்களின் பங்களிப்பு என்பன அவ்வியக்கங்களைக் கட்டுப்பாடு செய்கின்றன. எனினும் தன் நோக்குகளை அடையும் பொருட்டு அக்கட்டுப்பாடுகளை உடைத்தெறிந்து செயற்பட்ட துணிச்சல்மிகு பெண்கள் பற்றி இவ்வாய்வில் பெயரிட்டுக் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்கள் பற்றிய பொது அறிவு குறைவாக இருந்த காரணத்தால் அவர்கள் தோற்றுப் போனவர்களானார்கள்.


அனைத்து சமயக் கருத்தியல்களிலும் இஸ்லாமிய மதமே ஐரோப்பாவுடன் நீண்ட காலத் தொடர்பைக் கொண்டிருந்தது. இஸ்லாம், அதன் ஆரம்பகாலம் தொட்டு கிறிஸ்தவத்துடன் தொடர்ச்சியாக மோதிய போதிலும், ஐரோப்பாவில் நிலவிய மதச்சார்பின்மைக் கொள்கையே அதற்கு உண்மையான சவாலாக விளங்கியது. ஐரோப்பாவில் பெண்கள், சமயக் கட்டுப்பாடுகளிலிருந்து விடுவிக்கப்பட்டவர்களாகவும் சமூகத்தில் மதிக்கப்பட்டவர்களாகவும் நடாத்தப்படும் விதம், அங்கு நிலவும் ஒருதார மணம், மற்றும் அங்கு குடும்பம் தான் சமூகத்தின் அடிப்படை அலகு என்ற உண்மைநிலை ஆகியவை, ஐரோப்பாவில் பயணம் மேற்கொண்ட இஸ்லாமியர்களிடையே, மதச்சார்பற்ற சமூகம் பற்றிய புது எண்ணக் கருத்தையும் ஆர்வத்தையும் ஊட்டியது.


இக் காலகட்டத்தின் போது தம் நாட்டில் இஸ்லாமிய உயர் குழாத்தினர் கூடத் தம் பெண்களைத் தனிமைப்படுத்தி வைத்திருக்கும் வேளையில், ஐரோப்பாவில் சமூகக் கூட்டுறவு முயற்சிகளில் ஆண்களும் பெண்களும் இலகுவாக ஈடுபடுவதற்கு இடமளிக்கும் ஐரோப்பியரின் திறந்த மனப்பான்மையானது அப் பயணிகளை மிகவும் கவர்ந்தது. அதைத் தொடர்ந்து மேற்கத்தேய சமூகத்தில் வெளிப்படையாகக் காணப்படும் பெண்கள் சார்பான உரிமைகள் தான் அந்நாடுகளின் முன்னேற்றத்திற்கான திறவுகோலெனும் கருத்தும், "கீழைத்தேயத் தன்மைக்கு" பெண்களின் தாழ்த்தப்பட்ட அந்தஸ்தே ஓரளவு காரணம் என்ற விடயமும் ஆவலுடன் அவர்களால் வாதத்திற்கு உட்படுத்தப்பட்டன.


பெண்களின் அந்தஸ்து என்பதை ஓர் அளவுகோலாகக் கொண்டு நாகரிகத்தை மதிப்பீடு செய்யும் முறை பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தமையால் அநேக சீர்திருத்தவாதிகள் அப்பெண்களின் நிலைமையை மேம்படுத்தக்கூடிய சட்டவாக்கவியல் மீது கவனம் செலுத்தினர். துருக்கியானது வருங்காலத்தில் தேசியவாதம், தேசப்பற்று, உழைப்பு, உறுதியான குடும்ப அமைப்பு என்பவற்றுடன் ஜனநாயகம், பெண்ணியம் என்பதையும் அடித்தளமாகக் கொண்ட ஓர் ஒழுக்கவியல் கோவையை நிர்ணயித்தல் வேண்டும் என்பது அந்நாட்டின் சமகாலத்து ஆண்சீர்திருத்தவாதிகளின் அபிப்பிராயமாகும். நவீனத்துவம், அபிவிருத்தி, நாகரிகம் என்பவற்றிற்கான அடையாளமாகப் பெண்களுக்கு மதச்சார்பற்ற கல்வி, நடமாடும் சுதந்திரம், ஒருதார மணம் அவசியமென்பதை அவர்கள் அரசியல் மேடைகளில் எடுத்துரைத்தனர். அவர்களது மனைவியர், புதல்வியர்களை அக்கருத்துக்களைப் பின்பற்றச் செய்வதன் மூலம் அக்கருத்துக்களுக்கு புறவடிவத்தைக் கொடுக்க அவர்கள் கடும் முயற்சி மேற்கொண்டனர்.


ஓர் "தெளிந்த அறிவூட்டப்பட்ட பெண்" அவசியம் என்பதை இந்தப் புதிய பிரக்ஞைநிலை உணர்த்தியது. இந்தப் புதுமைப்பெண் மேற்கத்தேய கல்விமுறையில் கற்பிக்கப்பட்டவளாய், புதுவகையான பூர்ஷ_வா ஆணுக்கு இசைவுபடக் கூடிய வகையில் புதியபாணிகளில் உடையணிந்தவளாய் இருப்பினுங்கூட, இல்லத்தில் பிரதான பங்கைப் பொறுப்பேற்று நடத்தக் கூடியவளாயும், தான் பழைய சமூகத்தின் பிற்போக்குச் சிந்தனைகளுக்கு முரணானவள் என்பதையும் நிரூபித்துக்காட்ட வேண்டியிருந்தது. புதுமைப் பெண் என்ற சொற்பதம் வௌவேறு பிராந்தியங்களில் ஒரேமாதிரியாக பயன்படுத்தப்பட்ட போதிலும் அதன் எண்ணக்கரு பிராந்தியத்திற்குப் பிராந்தியம் வேறுபட்டிருந்தது. இஸ்லாமிய நாடுகளில் அது, பெண்ணின் பிற்போக்கான தன்மையையும் தனிமைப்படுத்தும் இயல்பையும் அடையாளப்படுத்தும் முகத்திரை அணிதலை, அகற்றும் நடவடிக்கைகளை சிறப்புக்குரிய நிகழ்வாகக் குறித்தது.


மற்றைய ஆசிய கலாசாரங்களில் பெண்களின் நடத்தை, நடையுடை பாவனை என்பன பற்றி மரபுபேணுவோர் கொண்டிருந்த கருத்திற்குச் சவால் விடுக்கும் விதத்தில் பெண்கள் ஆண்மையைப் பிரதிபலிக்கும் உடை அணிந்து அழகின் சின்னமான தலைமுடியை நவீனபாணியில் குட்டையாக வெட்டிக் கொண்டனர். எனினும் பழைய மரபுகளை உதறித் தள்ளிய பெண்கள், ஈரானில் இடம்பெற்ற எதிர்ப்புரட்சியின் போது, உடல்சார் வன்முறைகளுக்கு ஆளாக்கப்பட்டமை குறிப்பிடக் கூடியதொன்றாகும்.


ஆனால், இதுதான் முழுமையான தோற்றப்பாடு என்பதல்ல. ஓர் தனித்துவ தேசிய அடையாளத்தைத் தேடிக் காணும் பொருட்டு பூர்ஷ_வாக்கள் புதிதான முயற்சிகளில் ஈடுபட்டிருந்த போதிலும் தேசியப் பண்பாடு என்ற விடயத்தைப் பொறுத்தமட்டில் அவர்களின் பார்வை பின்நோக்கியே இருந்தது. பழமை வாய்ந்த பண்பாட்டிற்கு முற்றுமுழுதாக முரண்படும் வகையில் புதுமைப் பெண் என்பவள் இருக்க முடியாதென்றும். பெண்களுக்கெதிரான வெளிப்படையான அநீதிகள், வழக்கங்கள் என்பன இல்லாதொழிக்கப்பட வேண்டிய அதேவேளை, அவர்கள் தேசியப்பண்பாடு, தொன்றுதொட்ட சமயம். குடும்ப மரபுகள் என்பவற்றைப் பேணும் காப்பாளர்களாகவும் இருத்தல் வேண்டுமென எதிர்பார்க்கப்பட்டது. வேறுவகையில் கூறப்போனால் அவர்கள் நவீனமானவர்களாகவும் மரபுமுறை பேணுபவர்களாகவும் முரண்பட்ட இருவகைப் பங்கை வகிக்கக் கூடியவர்களாக இருத்தல் வேண்டுமென்ற எதிர்பார்ப்பு இருந்தது.


நிலையான ஒருதார மணம் கொண்ட குடும்ப அமைப்பு முறையை மையக்கருவாக உருவாக்கி, அதில் முதலாளித்துவ வளர்ச்சி, பூர்ஷ_வா கருத்துப்போக்கு என்பவற்றிற்கு ஒத்திசைவான கல்வியறிவு ஊட்டப்பட்ட தொழிலாற்றலுடைய பெண்களை உள்ளடக்கிக் கொள்வதை முதல் நோக்கமாக சீர்திருத்தவாதிகள் கொண்டிருந்தனர். இரண்டாவதாக, அப் பெண்கள் குடும்பத்துக்குரிய மரபு வழக்கங்களுக்கு கீழ்படியும் நிலையைப் பேணிக் கொள்வதையும் அவர்கள் ஆர்வமாக உறுதிப்படுத்தினர். ஐரோப்பாவில் முதலாளித்துவத்திற்கு முற்பட்ட காலத்தில் உற்பத்தித்துறையின் மையமாக விளங்கிய இல்லம், குடும்பம் என்பவை கைத்தொழில்புரட்சியின் போது பெருவளர்ச்சி கண்ட தொழிற்சாலை அமைப்பு முறைகளால் சீர்குலைக்கப்பட்டதன் எதிரொலியை இங்கு நாம் காண்கிறோம். முதலாளித்துவம் வறிய பெண்களை ஊதியம் ஊழைப்பவர்களாக இல்லங்களிலிருந்து தொழிற்சாலைகளுக்கு இடம்பெயர்த்தெடுத்த அதேவேளை, பூர்ஷ_வாப் பெண்கள் இல்லங்களில் தத்தமது குடும்பங்களைப் பராமரிக்கும் செயல்களில் ஈடுபட்டிருந்தமை பற்றி பூர்ஷ_வா ஊடகங்களினால் போற்றப்பட்டனர்.


இதன்பின்னர், கல்வி ஓர் முக்கிய பிரச்சினையாகியது. பொதுவாகப் பெண்களுக்கு முறைசார்ந்த கல்விக்கான வாய்ப்புகள் மறுக்கப்பட்டிருந்த போதிலும் அதற்கு விதிவிலக்காக மேட்டுக்குடிச் செல்வந்தர்கள், பெருஞ்செல்வந்த வணிகர்கள் என்ற வர்க்கங்களைச் சேர்ந்த அநேக பெண்கள் அறிவுசார் வட்டாரங்களில் தம்மை உறுதியாக நிலை நாட்டினர். உள்நாட்டு பூர்ஷ_வாக்களின் வளர்ச்சி, தேசியவாதத்தின் எழுச்சி என்பவை காரணமாக பெண் விமோசனம், பெண்களுக்கான கல்வி என்ற வாதவிடயங்கள் திறனறிவாளர்களுக்கும் தேசியத் தலைவர்களுட்பட பூர்ஷ_வாக்களின் பெண்களுக்கும் முதன்மையாகியது. ஆண்சீர்திருத்தவாதிகளின் நோக்கங்கள் பலவகைப்பட்டவையாய் இருந்த போதிலும் பெண்கல்வியைப் பொறுத்த அளவில் அவர்கள் ஒருமித்த கருத்தைக் கொண்டிருந்தனர். கல்விக்கான வாய்ப்பு மறுக்கப்பட்டதன் காரணமாக பெண்கள் தொழில், வருமானம், சமூக அங்கீகாரம் அற்றவர்களாக இருப்பதுடன் அவர்கள் அறிவுத்துறையில் ஆண்களுக்குக் கீழ்படுத்தப்பட்ட நிலையையும் கொண்டிருந்தனர் என அவர்கள் கருதினர்.


"பெண்" என்ற புது எண்ணக்கருத்தில் தெளிவின்மை உள்ளார்ந்து கிடந்ததன் காரணமாக பெண்களுக்கான கல்வியின் பொருளடக்கம், அதன் பண்பு என்பனவும் தெளிவற்றிருந்தது. மதமாற்றம் பெற்ற ஆண்கள் தாம் முன்னர் பின்பற்றிய சமய நம்பிக்கையை நோக்கி பின்நடை போடுவதைத் தடுக்குமுகமாக சமய அக்கறை கொண்ட மனைவிமார்களையும் தாய்மார்களையும் உருவாக்குவதையே மறைபரப்புவோர் பெண்கல்வியின் முதன்மை நோக்கமாகக் கொண்டிருந்தனர். தேசியவாதிகளும் சீர்திருத்த வாதிகளும் - சகலருக்கும் பால்சார்பற்ற கல்வி வாய்ப்புகள், அதை எட்டுவதற்கான ஜனநாயக உரிமைகள் என்பன பற்றி ஊன்றியுரைத்தனர்.


சம அடிப்படையிலான உயர்கல்வி சார்பாக ஐரோப்பியப் பெண்கள் கோரிக்கை விடுத்தது போன்றே, ஆசியாவைச் சேர்ந்த பூர்ஷ_வாப் பெண்களும் வருமானத்துடன் இணைந்த புதிய வாய்ப்புகள், கூடிய சுதந்திரம் என்பவற்றிற்கு தமக்கு வழிதிறந்து விடும்படி கோரினர். ஐரோப்பாவின் அறிவொளியூட்டுவர்களால் முதன்மை வாய்ந்ததாகக் கருதப்படும் ஜனநாயக உரிமைகளானது, சகலருக்கும் உரியதென ஆசியநாடுகளில் வெளிவேஷமாகக் காட்டப்பட்ட போதிலும், அது தொழிலாளர்கள், காலனிய மக்கள், பெண்கள் ஆகியோரை விலக்கி பூர்ஷ_வா ஆண்களுக்கென்றே திட்டமிடப்பட்டிருந்தது. (ஆநைள யனெ துயலயறயசனநயெ 1981:5). அதேமாதிரியாக, சொந்த நாட்டில் பிறந்து வளர்ந்த பூர்ஷ_வாக்கள், தம் சொந்த வர்க்கத்தைச் சேர்ந்த பெண்களுக்கு சில சலுகைகளை வழங்க இணங்கிய போதிலும், தம்சொந்த நாட்டின் மற்றைய பெண்கள், பெருந்திரளான தொழிலாளர் அணியினர், ஆகியோருக்குரிய இயற்கையான உரிமைகள், சுதந்திரம், சமத்துவம், சுயநிர்ணயம் என்பவை அடங்கிய எண்ணகருவை பயன்படுத்திக் கொள்ளும் நோக்கம் அவர்களுக்கு இருக்கவில்லை.


எல்லோருக்கும் எல்லாச் சூழ்நிலைக்கும் பொருந்தும் எனக் கூறப்படும் சுலோகங்களை புதுமுயற்சியாக விடுப்பதைத் தவிர்த்து, அடக்கப்பட்ட குழுவினர்கள் தாமாகவே தம் சார்பான வாதவிடயங்களின் மேல் கவனத்தை ஈடுபடுத்தி, மக்களை அணிதிரட்டுவதென்பது நடைமுறையில் சாத்தியமான தொன்றாகும். உதாரணமாக, தாம் கல்விகற்ற நிலையை அடைந்திருந்த போதிலும் தம்மைக் கீழ்மைப்படுத்தி வைத்திருக்கும் சமூக வழக்கங்கள், கட்டுப்பாட்டு விதிகள் கொண்ட சட்ட, பொருளாதார, அரசியல் செயல் முறைகள் என்பவற்றிலிருந்து தம்மை விடுவித்துக் கொள்வதில் பெண்கள் ஆர்வம் காட்டி வந்தனர். சில தீவிர போக்குக் கொண்ட பெண்கள் அரசியல், சமூக நிலை மாற்றத்திற்கான யோசனைகள் சார்பாகவும் வாதாடினர்,


கல்வி, எழுத்தறிவு என்பவை பரவிய காலத்தைத் தொடர்ந்து பெண்ணியம் சார்பான நூல்கள், சஞ்சிகைகள், இதழ்கள் என்பன பெண்கள் இயக்கத்தில் ஓர் முக்கிய பங்கை வகித்தன. இவற்றுள் அநேக பிரசுரங்களில் "பெண்கள் பற்றிய" வழமையான தலைப்புகள் கலந்துரையாடப்பட்ட போதிலும், பெண்களைக் கீழ்மைப்படுத்தல் என்ற விடயத்தை வாதத்திற்கு எடுத்துக் கொள்ள இப்பிரசுரங்கள் தவறியதில்லை. மற்றைய நாடுகளில் இடம்பெறும் பெண்விமோசனம், வாக்குரிமை பற்றிய நிகழ்வுகளும் இவ்விதழ்கள் மூலம் தெரிவிக்கப்பட்டன. 1914 இல் எகிப்தில், பெண்கள் சார்பான 15 இதழ்கள் அரபுமொழியில் பிரசுரிக்கப்பட்டன.


பெண்களுக்கான சஞ்சிகைகளும் எழுத்தாக்கங்களும் பெண்கள் என்ற பிரக்ஞைநிலையை விழிப்படையச் செய்தது. ஆண் நாவலாசிரியர்கள், அறிஞர்கள், செய்தியாளர்களும் கூட பெண்கள் தொடர்பான வாதவிடயங்கள் பற்றி எழுதினர். அநேக நாடுகளில் மரபுமுறைக்கு அடிமைப்பட்ட சமூகங்களில் பெண்களின் பங்குபற்றி முதன்முறையாக அக்கறை வெளிப்படுத்திய ஆண்களின் எழுத்தாக்கங்கள் பிரபல்யமடைந்தது மட்டுமன்றி சில வேளைகளில் வசைப் பெயரையும் வாங்கிக் கொண்டது. தாராள கருத்துப் போக்கைக் கொண்ட காசீம் அமீனுடைய நூல்கள் பெண்ணியத்தின் வித்து என அராபிய உலகில் கருதப்பட்டதன் காரணமாக அது பழமைபேணுவோர், சமய அடிப்படைவாதிகள் என்போரின் விரோதத்தை இன்னமும் சம்பாதித்து வருகின்றது. எனினும் 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் மூன்றாம் உலக நாடுகளில் பெண் எழுத்தாளர்கள், கவிஞர்கள் எனப் புதிய தலைமுறை ஒன்று தோன்றியதை விஷேடமாகக் குறிப்பிடலாம். அவர்கள் 19ஆம் நூற்றாண்டின் கல்விச் சீர்திருத்தங்களின் விளைவாக உருவாகியவர்களாதலால் அக்காலத்துக்குரிய பெண்ணியத்தின் நிலையை பிரதிபலிப்பதாக அவர்களின் எழுத்தாக்கங்கள் இருந்தன.


பெண்களின் கல்வி என்ற விடயம் வாக்குரிமை சார்பான போராட்டத்திற்கு ஓர் தூண்டுசக்தியாக உதவியது. இது ஜனநாயக உரிமைக்கான இயக்கத்திற்கு ஓர் முக்கிய வாதவிடயமாயிற்று. மூன்றாம் உலகைச் சேர்ந்த அநேக நாடுகளில், விசேஷமாக தேசியப் போராட்டங்களின் உச்சக்கட்டத்தின் போது சுயநிர்ணய உரிமை, சமத்துவம் என்ற வாத விடயங்கள் வாதத்திற்கு உட்படுத்தப்பட்ட வேளைகளில் பெண்களுக்கு வாக்குரிமை என்ற கேள்வியும் எழுப்பப்பட்டது. இதன் சார்பாக அமைதியான போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் சில சந்தர்ப்பங்களில் இது வன்முறை சார்ந்ததாகவும் அமைந்தது. பெண்கள், ஆர்ப்பாட்டங்களை ஒழுங்கு பண்ணித் தேசியப்பேரவையை முற்றுகையிட்டமையும் எகிப்தில் 1924இல் இடம்பெற்றிருந்தது.


ஐரோப்பிய பெண்ணியவாதிகள் தமது நாட்டுக்குள்ளேயும் வெளியேயும் பரவலாகப் பயணங்களை மேற்கொண்டனர் (ஆநைள யனெ துயலயறயசனநயெ 1981: 17 யனெ 61). அது போலவே மூன்றாம் உலகைச் சேர்ந்த முன்னோடிப் பெண்ணியவாதிகளும் பயணம் மேற்கொள்ளுவதற்கு தம்மீது விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை மீறி, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பரவலாகப் பயணங்கள் மேற்கொண்டு, பெண்கள் சங்கங்கள், அரசியற் குழுவினர் என்போருடன் தொடர்பு கொள்ளுவதன் பொருட்டு போதியளவு வளங்களையும் வாய்ப்புகளையும் திரட்டிக் கொள்ளக் கூடியதாயிற்று. 1920 ஜூலையில் மொஸ்கோவில் நடந்த சர்வதேச கம்யூனிட் கூட்டமைப்பு (ஊழஅiவெநசn) அமர்வின் போது, பெண்களிடையே எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றிய பிரேரணை ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்த இயக்கத்தில் லெனினின் மனைவி க்ருப்ஸ்காயா உட்பட, பல முக்கிய கம்யூனிஸ்ட் பெண்களும் சில ஆசியப் பெண்களும் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.


தேசியவாதப் போராட்டங்களில் முக்கிய பங்கு வகித்த அரசியல் குழுவினருடன் இணைந்து சுயாதீனப் பெண்கள் அமைப்புகள், சங்கங்கள் உருவாகியமை, அந்தக் காலகட்டங்களின் போது ஆசியப் பெண்ணியவாதத்தின் மிக முக்கிய வெளிப்படுத்தல் எனலாம். துருக்கியில் பெண்களுகக்கான முதற் கழகம் சிவப்பும் வெள்ளையும் (1928) என்ற பெயரில் இளம்துருக்கியர் இயக்கத்தின் அரசியல் செயற்பாடுகளுடன் இணைந்திருந்தது. 1911இல் அரசியல் கிளர்ச்சி உச்சக்கட்டத்தை அடைந்த வேளையில் பாரசீகப் பெண்கள் சங்கம் உருவாகியது.


எல்லா நாடுகளிலும் இடம் பெற்ற வாத புரட்சிகர கிளர்ச்சிகளின் ஆரம்பத்தின் போது, சகல வர்க்கத்தினையும் சேர்ந்த பெண்கள், தேசியமட்டத்தில் அக்கறைக்குரிய வாதவிடயங்கள் சார்பாக போராட்டம் செய்யும் பொருட்டு வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டங்கள் செய்தனர். அக்காலகட்டத்தின் போது, மூன்றாம் உலக நாடுகளில் பல முன்னோடிப் பெண்கள் உருவாகினர். ஹ_தா ஷராவி (எகிப்து), ஹாலிட் எடிப் (துருக்கி), அத்திக்கா தௌலதாபாடி, ஹனு}ம் அஸ்மேதே (ஈரான்) ஆகியோர் அவர்களுள் சிலராவர். அவர்களின் துணிச்சலான ஈடுபாடுகள், தகுந்த விதத்தில் அங்கீகரிக்கப்படவில்லை. வரலாற்றின் அடிக்குறிப்புகளுக்குள் மட்டுமே அவர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அநேக சந்தர்ப்பங்களில் அவர்களின் சாதனை பற்றி சொந்த நாடுகளிலேயே அறிந்திராதவர்கள் இருந்தார்கள். ஆண் தலைவர்களுடன் சேர்த்து அவர்களின் பெயர்கள் நினைவுகூரப்படுவது அபூர்வமே.


ஆசியாவில் முதலாளித்துவம் வளர்ச்சி கண்டதன் விளைவாகத் தொழிலாளர் அணியில் பெண்கள் பங்கேற்பதற்கு அதிகரித்த வாய்ப்புகள் ஏற்பட்டன. பொருளாதாரத்தின் பெரும்பான்மைப் பகுதியில் அத்தகைய பங்கேற்பை ஏற்றுக் கொள்ளும் வகையில், பெண்கள் விமோசனம் சார்பான போராட்டங்களின் அங்கங்கள் இணைந்து இயங்கின. தொழிலாளர் அணியில் ஊதியம் பெறும் பெண்கள் இருந்ததன் காரணமாக, தொழிற் சங்கங்களிலும் மற்றைய தொழிலாளர் சங்கங்களிலும் அவர்கள் இணைந்து வேலை நிறுத்தங்கள், கைத்தொழிற்துறை சர்ச்சைகள் என்பவற்றில் ஈடுபடுவதற்கு வாய்ப்புகள் உண்டானது. ஈரான், எகிப்து, துருக்கி ஆகிய நாடுகளில் மக்களைப் போராட்டத்திற்குத் திரட்டுவதற்கு எதிராக அடக்குமுறைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், பெண்கள் ஆண்களுடன் இணைந்து இடதுசாரி அரசியற் குழுக்கள், தொழிற் சங்கங்கள் என்பனவற்றை நிறுவினர்.


இறுதியாக, விமோசனம் சார்பான பெண்ணிய இயக்கங்களில், பெண்களின் பங்கேற்பும் அதன் உடன் நிகழ்வான தேசிய விடுதலை, சமூக நிலைமாற்றங்களுக்கான போராட்டங்கள் என்பவற்றைத் தொலைநோக்காகக் கொண்டு ஆசிய வரலாற்றின் ஓர் காலகட்டத்தை ஒப்பிட்டுக் காண இவ்வாய்வு முயற்சிக்கின்றது. "பெண்கள் உரிமைகள்" சார்பாக ஆதரவு வழங்கிய ஆண்சீர்திருத்தவாதிகள், அரசியற் தலைவர்கள் என்போரின் பங்கேற்பு, நோக்குகள் என்பவற்றை மதிப்பீடு செய்தலும் இதில் அடங்கியுள்ளது. தவிர்க்க முடியாக் காரணங்களுக்காக வரலாற்று ஆதாரங்கள் கிடைக்கப்பெற்ற நாடுகள் மாத்திரமே இந்த ஆய்வுக்குள் எடுக்கப்பட்டுள்ளது. அதனால் ஆய்வின் எல்லை மட்டுப்படுத்தப்பட்டதாகத் தென்படலாம். ஆசியாவில், வறுமையால் பீடிக்கப்பட்ட பெருந்திரளான பெண்கள், பலவகையான எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டது பற்றி விரிவான வரலாற்று ஆய்வு ஒன்று இன்னும் முயற்சிக்கப்படவில்லை என்பதையும் நான் இங்கு வற்புறுத்திக் கூறவேண்டும். ஆசியாவின் பூர்ஷ_வாக்கள், குட்டி பூர்ஷ_வாக்கள் என்ற வர்க்கத்தைச் சார்ந்த பெண்கள் ஈடுபட்ட இயக்கங்கள் பற்றிய வரலாற்றாதாரங்கள் கிடைக்கக் கூடியதாய் இருப்பினுங்கூட, உழைக்கும் வர்க்கத்தினர், விவசாயக் குடிமக்கள் என்போர் வர்க்கப் போராட்டங்களிலும் ஏகாதிபத்தியவாத எதிர்ப்புப் போராட்டங்களிலும் ஈடுபட்டமை பற்றி நுண்ணிய ஆய்வு மேற்கொண்டு, விரிவான தகவல்களை வெளிப்படுத்துவது அவசியமாகும்.


ஆசியாவில் காலனித்துவமும் முதலாளித்துவமும் தாக்கத்தை ஏற்படுத்துவதற்கு முற்பட்ட காலத்தில் இருந்த சமூகங்களில் பெண்களின் பங்கு என்ற விடயத்தில் ஆய்வுகள் பற்றாக்குறையாக இருப்பதைக் காணலாம்.


பெண்கள் மீது கருத்தியல் கொள்கைகள் ஏற்படுத்திய தாக்கங்கள் பற்றி சில ஆய்வுகள் வாதிக்கின்றன. இந்த ஆய்வுகளிலிருந்து பொருள் பிரித்தெடுக்கப்பட்டு முடிவுகள் எட்ட வேண்டியிருக்கும். நடைமுறை வாழ்க்கையில் கருத்தியல் கொள்கைகள் எந்த மட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அது எந்த மட்டத்தில் செயல்விளைவை ஏற்படுத்தும் என்ற விடயங்கள் பற்றி நமக்கு அறிவு போதாதிருக்கின்றது.


ஆசியாவின் அநேக நாடுகளில் பெண்கள் இயக்கங்கள், ஆண்களுக்குச் சமமாக அரசியல் சமத்துவம், நீதித்துறை, சட்டமன்ற நடவடிக்கைகளில் சமத்துவம் என்பவற்றை எட்டிய போதிலும், அது ஆணாதிக்கம் வாய்ந்த குடும்ப சமூகக் கட்டமைப்புக்குள் பெண்களைக் கீழ்மைப்படுத்தல் என்ற விடயம் மீது கவனம் செலுத்தத் தவறியுள்ளது. ஒருசில குறிப்பிட்ட விதிவிலக்குகளைத் தவிர, பெண்ணியம் பற்றிய பிரக்ஞைநிலை, மரபுசார்ந்த ஆணாதிக்கக் கட்டமைப்புகளுக்கு சவால்விடும் அளவிற்கு வளர்ச்சி அடைந்திருக்கவில்லை. துருக்கி,. எகிப்து, ஈரான் ஆகிய நாடுகளில் இடம் பெற்ற சூழ்நிலைகளையும், அவற்றில் பெண்களின் பங்களிப்புகள் செயற்பாடுகள் பற்றியும், அதன் வெற்றி தோல்விகள் பற்றியும் இனிவரும் கட்டுரைகளில் விரிவாக ஆராயப்படும்.

(குமாரி ஜயவர்த்தனவின் மூன்றாம் உலகில்  பெண்ணியமும் தேசியமும் என்ற நூலின் இரண்டாம் பாகம் இது)


தமிழில் - பி.முத்தையா


நன்றி - நூலகம்

1 comments:

visvan said...

இக்கட்டுரை ஃ நூலை மொழி பெயர்த்தவர் பத்மா பத்மா சிவகுருநாதன் அல்ல. பத்மா சிவகுருநாதன் மூன்றாம் உலகில் பெண்ணியமும் தேசியமும் -என்ற நூலின் முதல்பாகத்தைத் தான் மொழி பெயர்த்திருந்தார். நீங்கள் பிரசுரித்திருப்பது மூன்றாம் உலகில் பெண்ணியமும் தேசியமும் என்ற நூலின் இரண்டாம் பாகத்தில் உள்ள முதலாவது கட்டுரையை என்று நினைக்கிறேன். இதனை மொழி பெயர்த்திருந்தவர் பி.முத்தையா.


விஸ்வன்

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்