/* up Facebook

Feb 28, 2010

அருந்ததி ராய்


இந்தியா சுதந்திரமடைந்து ஐம்பதாண்டுகள் நிறைவடைவதைக் கொண்டாடிக் கொண்டிருந்த தருணம் அது. 1997-ம் வருஷத்தின் கட்டக் கடைசி. சர்வதேச அளவில் இந்தியாவின் பெருமை இன்னும் ஒரு மடங்கு உயர அந்தப் பெண்மணி காரணமாக இருப்பார் என்று அப்போது யாருமே நம்பத் தயாராக இல்லை.

சர்வதேச அளவில் இலக்கியத் துக்கென வழங்கப்படும் மிக உயர்ந்த பரிசுகளில் ஒன்றான புக்கர் பரிசைத் தமது நாவலுக்காக அந்த வருடம் பெற்றார் அருந்ததி ராய்.

இந்தியாவில் வசிக்கும் எழுத்தாளர் ஒருவர் அப்பரிசைப் பெறுவது அதுவே முதல் முறை. அதுவும் 37 வயதே நிறைந்த எழுத்தாளர்! அருந்ததிக்கு அது முதல் நாவல். தானொரு நாவல் எழுத முடியும் என்று கூட அதற்குமுன் அவர் நினைத்துப் பார்த்ததில்லை. வீட்டில் ஒரு கம்ப்யூட்டர் வாங்கினார் அருந்ததி. அந்தக் கருவி செய்கிற குட்டிச்சாத்தான் வேலைகளில் மனம் பறிகொடுத்து, அதனால் உந்தப் பட்டுத்தான் அவர் நாவலையே எழுத ஆரம்பித்தார். எழுத, எழுத நாவல் தன்னைத்தானே எழுதிக் கொள்ளத் தொடங்கி விட்டது. சின்ன விஷயங்களின் கடவுள் என்று நேரடி யாகப் கொள்ளக்கூடிய தலைப்பு அந்த நாவலில் அருந்ததி, பெரிதாக எதையும் கற்பனை செய்து எழுத வேண்டிய அவசியமே ஏற்படவில்லை. அவரது இளமைப் பருவம், அவரது குடும்பம், பெற்றோர், அவர் வசித்த அந்தக் கேரளத்து கிராமம், அந்தப் பசுமை. அந்த நினைவுகள்தான் நாவலெங்கும் விரிந்து படர்ந்து கிடக்கிறது.

அருந்ததியின் மிகப்பெரிய பலம், அவரது சுத்தமான, எளிய, இனிய ஆங்கில மொழி ஆற்றல். தனது இளம்பருவத்து நினைவுகளை அழகாக ஒரு பூமாலைபோல் கோர்க்கத் தெரிந்த லாவகம்தான் அவர் அதில் செய்திருந்த முதலீடு. அது அவரது அதிர்ஷட வருஷம். புக்கர் பரிசு நாவலுக்குக் கிடைத்துவிட்டது. அருந்ததி ஒரே நாளில் உலகப் புகழ் பெற்று விட்டார். அந்த நாவல் மில்லியன் கணக்கில் விற்றுத் தீர்ந்தது. அருந்ததிக்கும் சரி, அவரது பதிப்பாளருக்கும் சரி, அள்ளிக்கொடுத்து விட்டது.

இன்றைக்கு அருந்ததி ராய் என்கிற பெயர் தெரியாத இந்தியரே இருக்க முடியாது. மீடியாக்களில் எப்போதும் அவர் பிரபலம். மேதா பட்கருடன் ஜோடி சேர்ந்து நர்மதை நதியின் குறுக்கே அணை கட்டுவதை எதிர்த்துப் போராட்டமெல்லாம் செய்தவர். ஒருநாள் அடையாளச் சிறை வாசம் செய்து அரசை நார் நாராக விமரிசித்துத் தோரணம் கட்டியவர். மிகப்பெரிய ஆக்டிவிஸ்ட் என்கிற பெயர் வந்துவிட்டது. ஆங்கிலப் பத்திரிகைகள் அவர் எழுதினால் முதலிடம் கொடுத்துப் பிரசுரிக் கின்றன. சர்வதேசப் பல்கலைக் கழகங்கள் அவரை சிறப்புச் சொற்பொழிவுகளுக்கு அழைத்த வண்ணம் உள்ளன. உலகெங்கும் பயணம் செய்கிறார். கூட்டங்களில் பேசுகிறார். போராட்டங்களில் கலந்துகொள்கிறார். அடுத்த நாவல் என்று இன்னும் ஒன்றும் எழுதிய பாடில்லை. இன்று வரை அவரது புகழை அந்த ஒரு நாவல்தான் அடைகாத்து வருகிறது. எந்தக் கணமும் அவர் தமது அடுத்தப் படைப்பை வெளியிடுவார் என்கிற எதிர்பார்ப்பை இன்னமும் தக்க வைத்திருக்கிறது.

அப்பப்பா! என்ன ஒரு புகழ்! ஆனால் இந்தப் புகழை அடைவதற்கு அவர் நிறையவே சிரமப்பட்டிருக் கிறார். குறிப்பாக, இளமையில். 1961-ம் வருடம் கேரளத்தில் உள்ள ஐமனம் என்கிற கிராமத்தில் ஒரு சராசரி கிறித்துவக் குடும்பத்தில் பிறந்தவர் அருந்ததி ராய். அவரது தாயார் மலையாளி. தந்தை, மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவர். காதலித்துத் திருமணம் செய்துகொண்டவர்கள் தான். ஆனாலும் ஏனோ மனம் ஒப்பாமல் விவாகரத்தானவர்கள்.

ஆகவே நினைவு தெரிந்த நாளாக அருந்ததிக்கு அம்மாவை மட்டும்தான் தெரியும். கேரளத்தின் குறிப்பிடத் தகுந்த சமூக சேவகியாக அறியப்பட்ட வர் அருந்ததியின் தாய். பெயர் மேரி ராய். கிறித்தவப் பெண்களுக்குத் தாய்வழிச் சொத்தில் பங்கு வேண்டும் என்று கோரி அவர் நடத்திய போராட்டங்களும் பெற்ற வெற்றியும் இன்றுவரை கேரள கிறித்தவக் குடும்பங்களில் பேசப்படுகிற விஷயம்.

சமூக சேவகியான தாயின் அரவணைப்பில் வளர்ந்த அருந்ததிக்கும் மிக இளம் வயதிலேயே தன்னைச் சுற்றியுள்ள மக்களையும் அவர்களின் வாழ்க்கையையும் கவனிக்கும் பண்பு மிக இயல்பாக வளர்ந்தது. தோதாக, அருந்ததியின் தாய், அவரை பள்ளிக்கூடத்துக்கு அனுப்பாமல், தனியே சுதந்திரமாக இஷடப்பட்ட நேரத்தில் கல்வி கற்கும்படி உற்சாகப்படுத்தி, வீட்டிலேயே படிப்புச் சொல்லிக் கொடுத்து வளர்த்து வந்தார்.

அந்த ஊரில் கிறித்தவர்கள் இருந்தார்கள். இந்துக்களும், முஸ்லீம்களும் இருந்தார்கள். மத நம்பிக்கை உள்ளவர்கள். நாத்திகர்கள், கம்யூனிஸ்டுகள் என எல்லாத் தரப்பு மக்களும் வசித்து வந்த அழகான சிற்றூர் அது. அருந்ததிக்கு இவர்களையெல்லாம் நுணுக்கமாக கவனிப்பதுதான் சின்ன வயதில் முக்கியமான பொழுது போக்கு. அழகான, பசுமையான கிராமம் அது. ஊரைச்சுற்றி ஓடும் கால் வாயில் மீன் பிடிக்கும் மீனவர்கள் அவளது சின்ன வயது சிநேகி தர்கள். தக்குனூண்டு இருக்கிற தூண்டில் எப்படி ஒரு மீனைப் பிடித்துக் கொண்டு வருகிறது என்பது பற்றி நாளெல்லாம் ஆராய்ச்சி செய்திருப்பதாக ஒருமுறை சொல்லியிருக்கிறார் அருந்ததி.

அந்த கவனமும் ஆய்வு மனப்பான்மையும் தான் அவரது சொத்து. அதை மட்டும் எடுத்துக் கொண்டுதான் தனது பதினாறாவது வயதில் வீட்டை விட்டு, வெளியுலகம் காணப் புறப்பட் டார் அருந்ததி.

அவர் போய்ச்சேர்ந்த இடம் தில்லி. புதுதில்லி. இந்தியாவின் தலைநகரம். அங்கே போனதும் தில்லி ஸ்கூல் ஆஃப் ஆர்கிடெக்சரில் தன் பெயரைப் பதிவு செய்துகொண்டு கட்டடக் கலை நுணுக்கங்களைப் படிக்க ஆரம்பித்தார். அவரது கனவு அது. ஒரு பெரிய ஆர்கிடெக் டாக வேண்டும் என்பதுதான் அவரது அப்போ தைய விருப்பம்.

ஆனால் கட்டடங்களின் நுட்பத்தை பயின்ற போது அவருக்குள் ஒரு இஞ்சினியரின் மூளை வேலை செய்யாமல், எழுத்தாளரின் இதயம் தான் விழித்துக் கொண்டது. கல்லும், மண்ணும், சிமெண்டும் கலந்து உருவாக்கும் மாளிகைகளைப் பற்றித்தான் அவர் படித்தார். ஆனால் சொல்லும் பொருளும் இணைந்து உரு வாக்கும் ஜாலங்கள் பற்றியே பெரும் பாலும் சிந்தித்துக் கொண்டிருந்தார். தன்னால் ஒரு கட்டடக்கலை வல்லுநராவது தவிரவும் வேறு ஏதாவது உருப்படியாகச் செய்ய முடியும் என்றே அவருக்குத் தோன்றியது. ஆனால் என்ன செய்ய லாம் என்பதுதான் புரியவில்லை. சில நாடகங்கள் எழுதிப் பார்த்தார். பிறகு கவிதை கள் கொஞ்சம் எழுதிப்பார்த்தார். எல்லாமே நன்றாக இருப்பது போலத்தான் இருந்தன. ஆனால் அவருக்கு எதிலும் திருப்தி மட்டும் வரவில்லை.

மனத்துக்குள் என்னவோ ஒரு விஷயம் வெகுவாக அரித்துக் கொண்டிருப்பதாகவும் அதை வெளிப்படுத்த வழியின்றி தவிப்பது போலவும் தோன்றியது அவருக்கு.

ஒருவரைக் காதலித்து, திருமணம் செய்துகொண்டார்.ம்ஹும். அதுகூட ரொம்ப நாள் தாக்குப் பிடிக்கவில்லை. நாலு வருஷத்தில் அந்தத் திருமணம் ஒரு முடிவுக்கு வந்துவிட்டது. டைவர்ஸ். அப்போதுதான் மனித மனத்தின் சிக்கல்கள் பற்றியும் மீட்சிக்காக அவன் மேற் கொள்கிற உபாயங்கள் பற்றியும், மிகத் தீவிரமாக யோசிக்கத் தொடங்கினார் அருந்ததி. இடையில் சிலகாலம் தொலைக்காட்சித் தொடருக் காக எழுதிக் கொண்டிருந்தார். அப்புறம் ஒரு ஆங்கிலத் திரைப்படத்துக்குத் திரைக்கதை அமைத்துத் தரும் வேலையைப் பார்த்தார். இவை எதிலுமே தான் எதிர்பார்க்கும் ஒரு முழுமை வாய்க்காததை அவர் கவனித்தார். சேகர் கபூரின் பாண்டிட் குயின் திரைப்படம் வெளியாகி பரபரப்பாகப் பேசப்பட்ட போது அருந்ததி ராய் அதற்கொரு விமர்சனம் எழுதினார்.

ஒருமாதிரி முதல் முறையாக அவர் பெரு மளவு கவனம் பெறத் தொடங்கியது அப்போது தான் என்று சொல்ல வேண்டும். அந்தத் தருணத்தில் தான் அவர் ஒரு கம்ப்யூட்டரும் வாங்கியிருந்தார்.
சரி, நாம் ஒரு நாவல் எழுதிப் பார்த்தால் என்ன என்று தோன்றியதும் அப்போதுதான். உடனே அவருக்குத் தன் இளமைக் காலங்கள் கழிந்த ஐமனம் கிராமம்தான் நினைவுக்கு வந்தது.

அது, கேரளத்தில் கம்யூனிசம் கொடி கட்டிப் பறந்து கொண்டிருந்த காலம். அடுத்த வாரமே புரட்சி வந்துவிடும் என்பது மாதிரி தலைக்குத் தலை அங்கே பேசிக்கொண்டிருந்தார்கள். சிறுமியாக, புரட்சியின் முழு அர்த்தத்தையும் புரிந்து கொள்ளாமல் வெறும் சொல்லை மனத்தில் ஏற்றிக் கொண்டு தில்லிக்குப் புறப்பட்டு வந்த அருந்ததிக்கு, இப்போது அன்று நடந்த காட்சிகளின் முழு அர்த்தமும் விளங்கின. புரட்சி!

அடேயப்பா. எப்பேர்பட்ட சொல்! அதை எத்தனை சர்வசாதாரணமாக உள்ளூர் அரசியல்வாதிகள் போட்டுப் பிராண்டி எடுக்கிறார்கள் என்று அவர் நினைத்துப் பார்த்தார். சிரிப்புத்தான் வந்தது.சரி, தன் கிராமத்தில், தன் இளமைப் பருவம் கழிந்த தினங்களையே மையமாக வைத்து ஒரு நாவல் எழுதலாம் என்று அப்போதுதான் முடிவு செய்தார். அது வெறும் பாலிய காலத்துக் கதை மட்டுமல்ல. கேரளத்தின் ஒரு குறிப்பிட்ட காலத்தின் வரலாறும் கூட. வரலாறு என்றால் ஆண்டவர்களின் வரலாறல்ல. மக்களின் வரலாறு. சில பெரியவர்களையும் மிகச்சில குழந்தைகளையும் கதா பாத்திரங்களாக வைத்து ஒவ்வொருவர் பார்வையிலும் கதை சொல்லுவது என்று முடிவு செய்து எழுத ஆரம்பித்தார் அருந்ததி.

ஆனால் நாவல் எழுதுவது மட்டுமே தன் வேலையல்ல என்று சொன்னார் அருந்ததி. ஒரு ஆக்டிவிஸ்டாகத் தனது வாழ்நாள் பணியில் நாவல் ஓர் அத்தியாயம் என்றே அவர் கருதுகிறார். சமூகப் பிரக்ஞையுள்ள எந்த ஒரு கலைஞ னும் தன் காலத்தின் அத்தனை சாத்திய முள்ள வழிமுறைகளையும் பயன்படுத்தி, தன் சமூகத்துக்காகப் பாடுபட வேண்டும் என்பது அவர் சித்தாந்தம்.

அணு ஆயுதப் பரவல் குறித்தும் அமெரிக்காவின் யதேச்சாதிகார யுத்த நடவடிக்கைகள் பற்றியும் இந்திய அரசியல்வாதிகளின் போலி சோஷலிசப் பிரகடனங்கள் பற்றியும் தொடர்ந்தும் தீவிரமாகவும் எழுதி வருகிறார் அருந்ததி ராய்.

அருந்ததிக்கு இன்றைக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.அந்த ஒரு நாவல் அவர் ஆயுள் முழுதும் உட்கார்ந்து சாப்பிடுகிற அளவுக்கு சம்பா தித்துக் கொடுத்து விட்டது. உலகம் கொண்டாடும் ஒரு வி.வி.ஐ.பி. அவர். ஆனாலும் மனத்தளவில் இன்னும் அதே கேரளத்துச் சிறுமி மாதிரியே உணருவதாகச் சொல்கிறார் அருந்ததி.

அதுதான் என் சொத்து. அதுதான் என் பலம். என் பலவீனமும் அதுவேதான்!

-இளங்கோ

நன்றி http://www.eegarai.net

2 comments:

Madurai Saravanan said...

அருந்ததி பற்றி அற்புதமான படைப்பு. வாழ்த்துக்கள்.

punnagai said...

When I read this, I remember the words of great writer Eleanor Rossevelt: The future belongs to those who believe in the beauty of their dreams.

Susi Thirugnanam

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்