/* up Facebook

Feb 22, 2010

மணியம்மையார் - ஒரு பெரியாரியப் பெண்ணியப் பார்வை - முழுமதி


பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் கால் நூற்றாண்டு கால வாழ்க்கைத் துணையாகவும் திராவிடர் கழகத்தின் தலைவராக நான்காண்டுகளும் இருந்து மறைந்த மணியம்மையார் வேலூரில் பிறந்தவர். 1920-ம் ஆண்டு மார்ச் 10-ந் தேதியன்று கனகசபை-பத்மாவதி இணையரின் மகளாகத் தோன்றிய இவருக்கு உடன் பிறந்தோர் மூவர். சகோதரர் இருவர்; சகோதரி ஒருவர்.

பெரியாரின் சுயமரியாதைக் கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட இவர் தனது 23-வது வயதில் பெரியாரின் தொண்டர் ஆனார். இயக்கத் தொண்டராக ஆறு ஆண்டுகள் இருந்தவர், பெரியாரின் மிகப்பெரும் நம்பிக்கையினைப் பெற்றார். அதன் விளைவாக 1949-ம் ஆண்டு, ஜøலை மாதத்தில் பதிவுத் திருமணத்தின் மூலம் கடுமையான எதிர்ப்புகளுக்கிடையே பெரியாரின் வாழ்க்கைத் துணைவியார் ஆனார். தமது 95 வயது நிறைவாழ்வினை வாழ்ந்து முடித்த தந்தை பெரியார் 1973ம் ஆண்டு டிசம்பரில் காலமானார்.

அவரது மறைவுக்குப்பின் திராவிடர் கழகத்தின் தலைமைப் பொறுப்பினை ஏற்றார் மணியம்மையார். கருப்புச் சட்டமான ‘மிசா' என்னும் அடக்குமுறைச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த காலம் அது. அந்நாளில் ஒரு ‘புரட்சிகர' அமைப்புக்குத் தலைமைப் பொறுப்பை ஏற்று நடத்திய முதல் பெண்மணி மணியம்மையார் என்பதொன்றே அவரது மனோ பலமும், கொள்கைப்பிடிப்பும் என்ன என்பதைப் பறைசாற்றி நிற்கிறது.

சாதி ஒழிப்புப் போராட்டங்களிலும், மொழி உரிமைப் போராட்டங்களிலும் பலமுறை பங்கேற்று சிறைவாசத்தை அனுபவித்தவர் மணியம்மையார். பார்ப்பனர்கள் இராவணன் உருவ பொம்மையை எரித்ததற்குப் பதிலாக ‘இராவணலீலா'வைக் கொண்டாடி இராமன் உருவ பொம்மையைக் கொளுத்தியும் சிறைத் தண்டனை பெற்றவர். 1977ல் தமிழகம் வந்த பிரதமர் இந்திராகாந்திக்கு எதிர்ப்புத் தெரிவித்து கருப்புக்கொடி காட்டிக் கைது ஆனவர். இவையெல்லாம் மணியம்மையார் என்கிற மகத்துவம் வாய்ந்த பெண்மணியின் பொதுவாழ்க்கைப் பதிவுகள். அவர் தமிழ் மண்ணைவிட்டு மறைந்து முப்பதாண்டுகள் ஆகின்ற நிலையில் அவரைப் பெண்ணியப் பார்வையில் ஆய்வு செய்ய வேண்டும் என்ற எண்ணம் எழுந்ததற்கு என்ன காரணம்?

முதல்வர் கலைஞர் கருணாநிதி மற்றும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி ஆகியோரின் ஆதரவுடன் அண்மையில் வெளிவந்த "பெரியார்'' திரைப்படமே இத்திறனாய்வுக்கு மூல காரணம். தமிழினத் தந்தை பெரியார் பற்றிய அப்படம் பல்வேறு தமிழ் அமைப்புகளினாலும், ஏறக்குறைய தமிழகத்தின் அனைத்து இதழ்களிலும் பரபரப்பாக பேசப்பட்டு விவாதிக்கப்பட்டதோடு பெரியாரியச் சிந்தனைகளின் தாக்கத்தைச் சற்று கூடுதலாகவே வெளிச்சப்படுத்திக் காட்டியது.

அந்த வகையில் புதிய பெண்ணியம் இதழும் தனக்குரிய பங்கினைச் செலுத்தியிருந்தது. அப்படத்தினைப் பற்றிச் சில ஆக்கபூர்வமான கேள்விகளைக் கேட்டும், இயக்குநர் ஞானராஜசேகரனின் கருத்தில் மாறுபட்டும் தனது கருத்துக்களைப் பதிவு செய்திருந்தது. கூடவே பெரியார் படத்தின் விளைவாக ஏற்படும் பதில் வினையாவது தந்தை பெரியாரின் முழுமையான பதிவாக இருக்க வேண்டும்-இருக்கும் என்ற நம்பிக்கையினையும் வெளிப்படுத்தி இருந்தது.

நமது நம்பிக்கைக்குச் செயல்வடிவமும், முழுவடிவமும் கொடுக்கிறவிதமாக தோழர்.ருத்ரன் ‘பெரியார் திரைப்படம்-ஒரு பெரியாரியப் பார்வை' என்னும் நூலினை வெளியிட்டிருக்கிறார். இந்நூல் பெரியாரியச் சிந்தனையாளர்கள் மற்றும் சமூக சிந்தனையாளர்களின் பார்வை கூர்மைப்பட வேண்டியதன் தேவையினைச் சரியாகவே வலியுறுத்தி இருக்கிறது.

ருத்ரன் சிந்தனையிலும் செயலிலும் துடிப்புமிக்க ஒரு மார்க்சியவாதியாக இருந்தபோதும் சமூக அக்கறையில் பெரிதுவக்கும் தன்மையினால் பெரியாரியப் பார்வையில் நின்று, கடின உழைப்பைச் செலுத்தி நூலைக் கொண்டு வந்திருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை. சிற்றிதழ்கள், வெகுசன இதழ்கள் என்று பதினேழு இதழ்களில் வெளியான பெரியார் பட ஆய்வுகளைத் தொகுத்து, சிலவற்றை ஏற்றும், சிலவற்றை மறுத்தும் தனது கருத்துக்களின் வழியே விளக்கத்தைச் சொல்லியும் இந்நூலினைப் படைத்திருக்கிறார். அதுமட்டுமின்றி, புதிய பெண்ணியம் இதழிலும் தனது தரமான படைப்புப் பங்களிப்பினைத் தொடர்ந்து செலுத்தி இதழ் வளர்ச்சிக்கும், நம் மதிப்பிற்கும் உரியவராகவும் இருக்கிறார்.

புதிய பெண்ணியத்தில் வெளியாகி இருந்த பெரியார் பட விமர்சனத்தில் ‘பெரியாரின் நீண்ட ஆயுளுக்கும், நீங்காப் புகழுக்கும் காரணமான அவரது துணைவியார் மணியம்மையாரின் அறிமுகக் காட்சி படத்தில் மிகவும் மதிப்பிற்குரிய முறையில் காண்பிக்கப்பட்டிருக்க வேண்டும்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மணியம்மையார் மதிப்பிற்குரியவர், போற்றுதலுக்குரியவர் என்பதில் நமக்கு அன்றும் இன்றும் ஏன் என்றுமே மாற்றுக்கருத்து வருவதற்கான வாய்ப்பு இல்லவே இல்லை. ஏனெனில் எப்போதுமே நாம் ‘முழுமையான மனிதர்கள்' என்கிற கனவுலகு எதிர்பார்ப்புகளைச் சுமந்தது கிடையாது. ஆனால் மணியம்மையார் வகையில் தோழர் ருத்ரனுக்கு இத்தகைய எதிர்பார்ப்பு இருந்திருக்கிறது. அதன் விளைவாக மணியம்மையாரின்மீது அவர் கொண்டுள்ள ஒற்றைச் சார்புப் பார்வை அந்நூலில் வெளிப்பட்டிருப்பது நமது இத்திறனாய்விற்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது.

‘பெரியார்' திரைப்படத்தில் ‘குடிஅரசு, உண்மை, விடுதலை, பகுத்தறிவு' போன்ற ஏடுகளை நடத்திய ‘உண்மைப் பெரியாரை'க் காணவில்லை என்கிற யதார்த்தத்தை முகத்திலறைந்தாற்போலச் சொல்லியிருக்கும் ருத்ரன், மணியம்மையாரைப் பற்றிக் கூறும் தனது கருத்துக்களில் மட்டும் ஒரு பக்கச் சார்பான வாதங்களை முன்னிறுத்துகிறார். இதற்குக் காரணம் அக்கருத்துக்களைப் பெறுவதற்கு முதுபெரும் பெரியாரியத் தொண்டர்களான அய்யா. வே.ஆனைமுத்து அவர்களையும் நாத்திகம் இதழாசிரியர் திரு.இராமசாமி அவர்களையுமே முழுமையுமாகச் சார்ந்திருக்கிறார். இதனாலேயே காலச்சூழலுக்கேற்ற கருத்துக்களின் போதாமையினால் தோழருக்கு இச்சறுக்கல் நிகழ்ந்திருக்கிறது என்பதாகவே நாம் உணர்கிறோம்.

ஏறக்குறைய மூன்று தலைமுறைகளுக்கு முந்தைய காலத்தில், பெரியாரியத்தை உள்வாங்கிய காலச் சூழலுக்கும், இன்றைய நவீன காலச் சூழலுக்கும் இடையில் மலைக்கும் மடுவுக்குமான வேறுபாடு இருக்கிறது. குறிப்பாக பெண்ணிய, தலித்தியப் பார்வைகள் புலிப்பாய்ச்சலைப் பெற்று கருத்தியல் தளத்தில் உச்சகட்ட வளர்ச்சியை எட்டிக் கொண்டிருக்கின்றன என்கிற வாதங்களையெல்லாம் எவரும் ஏற்றுக் கொள்ளவே செய்வர்.

பெரியார் படத்தை ஆய்வு செய்யும்போது மணியம்மையாரின் குணாதிசயத்தையும், நேர்மையையும், ஒழுக்கத்தையும் கேள்விக்குட்படுத்தி அசிங்கப் படுத்துவது தேவையற்ற ஒன்று என்றாலும் மணியம்மையார் பற்றி அப்படத்தில் காண்பிக்கப்படுகின்ற ஓரிரு காட்சிகளும் உண்மைக்குப் புறம்பாக போலியாகப் புனையப்பட்டவை என்று கூறுகிற சாக்கில், தனது கருத்துக்களைச் சொல்ல இவ்வாய்ப்பினைப் பயன்படுத்தி இருக்கிறார் ருத்ரன்.

இதற்கு முதலாவதாக அய்யா ஆனைமுத்து அவர்கள் எழுதிய ‘பெரியார் கொள்கைக்குக் குழிதோண்டிய திராவிடர் கழகம்' என்னும் நூலில் உள்ள செய்திகளை வசதியாகத் தொகுத்துக் கொள்கிறார். அந்த நூல் நம்மிடம் இல்லை என்பதால் எந்த ஆண்டு எழுதப்பட்டு வெளி வந்தது என்ற தகவல் தெரியவில்லை. என்றபோதும் அந்நூல் எழுதப்படுவதற்கான தேவையும், முயற்சியும் பொருள் உள்ளதே என்பது நூல் தலைப்பினைப் பார்க்கும்போதே நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. திராவிடர் கழகம் குழிதோண்டியதோ இல்லையோ தேங்கி நிற்கும் குட்டையாக மாறி நம்மை முகம் சுளிக்க வைக்கிறது என்பது உண்மைதான்.

ஒரு மாபெரும் மனிதரின் கொள்கை இயக்கம் அவர் மறைவிற்குப்பின் சிதிலமடைவதற்குக் காரணமான செய்திகளை அவருக்கு நெருக்கமான தொண்டராக இருந்த ஒருவர், மனம் வருந்தி நூலாக எழுதுவதன் ‘நேர்மையை...' நம்மால் ஓரளவிற்கேனும் ஒப்புக் கொள்ளவும் முடியும். ஓர் அமைப்பின் சிதைவுக்குப் பின் புதிய பரிமாணங்களோடு புதுப்புது இயக்கங்கள் தோன்றுகின்றன. புதிய அமைப்பினைத் தோற்று விப்பவர்கள் இவை போன்ற மனத்தாங்கல்களோடு வெளிவந்து மோசடி, ஏமாற்று, நம்பிக்கைத் துரோகம் என்று பட்டியலிடுவதற்கு ஏராளமான வரலாற்றுச் சான்றுகள் இருக்கவே செய்கின்றன. இவ்வாறே வே.ஆனைமுத்து அவர்கள் எழுதிய நூலில் பின்வரும் செய்திகள் இடம் பெற்றிருக்கின்றன.

1..... எனவே பெரியார் மணியம்மையுடனான தமது திருமண ஒப்பந்தத்தை ரத்து செய்யவே முன்வந்தார். ஆனால் அதற்குள் யாரும் எதிர்பாராத வகையில் மரணமடைந்தார். (பக்:106)

2. கருணாநிதி பதவிக்கு வந்தவுடன் மணியம்மையும், வீரமணியும் தங்களின் தவறான போக்குகளுக்கும், நடவடிக்கைகளுக்கும் கருணாநிதியின் ஆதரவு வேண்டி அவரது புகழ்பாடிகளாக மாறினர். விடுதலை ஏடு முரசொலியின் மறுபதிப்புப் போல செய்திகளைத் தாங்கி வந்தது. இயக்கம் எங்கோ போவதை உணர்ந்த பெரியாரால் மனைவி என்கிற நிலையில் இருந்த மணியம்மையின் தவறான போக்குகளை எதிலுமே மாற்றமுடியவில்லை. 1965க்குப்பின் இதுவே நிலைமை (பக்:174)

3. 1957 நவம்பரில் பெரியாரும் மற்றும் 3000 பேரும் சட்ட எரிப்பினால் சிறைப்பட்ட பின்னர் பெரியாரின் மாளிகையில் மணியம்மையும் வீரமணியும் அடித்த கொட்டம் கண்டு திருச்சி தி.பொ.வேதாச்சலம் மனம்நொந்து அங்குவந்த முக்கியஸ்தர்களிடம் தன் மனவேதனையை வெளிப்படுத்தினார். (பக்:160,161)

இவ்வாறெல்லாம் செய்திகளை இறைத்து நூல் ஒன்றை உருவாக்கி இருப்பது, புதியதோர் அமைப்பினைத் தொடங்குவதற்கும், அதற்கு வலுச்சேர்ப்பதற்கும் மிகவும் தேவையான ஒன்று என ஆனைமுத்து அவர்கள் கருதி இருக்கக்கூடும். ஒன்றிலிருந்து மற்றொன்று என்று இயக்கம் தொடங்கப்பெறும்போதும், அதனைத் தக்கவைப்பதற்கும் இத்தகைய நிகழ்வுகளும், யூகங்களான பேச்சுக்களும் காலநியதிகளாகவே கொள்ளப் படுகின்றன.

ஆனால் மார்க்சியவாதியாகவும், பெண்ணியவாதி யாகவும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிற தோழர் ருத்ரன், அய்யா. ஆனைமுத்துவின் அக்கால ஊகங்களை இக்காலத்தில் மிகைப்படுத்துவதும், பூதகண்ணாடி கொண்டு பெரிதுபடுத்திக் காட்டுவதும் எதற்காக?

தேவையில்லாத இச்செயல் எதிர்மறை விளைவையே உண்டுபண்ணி இருக்கிறது. அவரது கையிலிருக்கும் பூதகண்ணாடி அவருக்குள்ளிருக்கும் மெல்லிய ஆணாதிக்க இழையினை நமக்கும் அடையாளம் காட்டியிருக்கிறது.

ஆணாதிக்கம் கோலோச்சும் இச்சமூகக் கட்டமைப்பில் ஆணுக்கான வாழ்முறை என்பதும் பெண்ணின் வாழ்முறை என்பதும் முற்றிலும் மாறுபட்டுக் கிடப்பவை என்பது யாரும் அறியாத செய்தி அல்ல. ‘கண்டதே காட்சி, கொண்டதே கோலம்' எனும் பொறுப்பற்ற வாழ்முறை ஆணுக்கும், உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரைக்கும் பூட்டப்பட்ட ஏராளமான பண்பாட்டு விலங்குகளுடன் கூடிய சுமைநிறைந்த வாழ்முறை பெண்ணுக்கும் என்பதுதான் சமூக ஒழுங்காக இருந்து வருகிறது.

அதிலும் குறிப்பாக பெரியார் பிள்ளைப் பருவத்திலேயே வீட்டைவிட்டு வெளியேறி, ‘மைனர் பேர்வழி' எனும் உல்லாசியாக இளமை வாழ்க்கையை அனுபவித்தவர். பின்னர் தமது 40-வது வயதில் சமூகப்பணியில் தன்னைக் கரைத்துக்கொண்டவர். மாதத்தில் ஒருமுறை குளித்தாலே பெரிது எனும் வாழ்நாள் பழக்கத்திற்கு ஆட்பட்டு அழுக்குத்துணியும், வாராத தலையும், கழுவாத முகமுமே பெரியார் எனும் அடையாளத்தைப் பெற்றவர்.

ஆனால் ஒரு பெண்ணிற்கான உலகம் அதுவன்று. பெரியாரின் கொள்கையால் ஈர்க்கப்பட்ட மணியம்மையாரும் மாதம் ஒருமுறை குளித்து, வாராத தலையுடன், அழுக்குப் புடவையுடன்தான் பவனி வரவேண்டும் என்று எதிர்பார்ப்பது எத்தகைய சிறுபிள்ளைத்தனமோ, அதேபோன்றதுதான் சாண நாற்றத்துடன் அமர்ந்து பெரியாரைப் போன்றே முகம் சுளிக்காமல் சிரித்த முகத்துடன் இவரும் சாப்பிட வேண்டும் என எதிர்பார்ப்பதும். ருத்ரன் இதிலும் மிகப்பெரிய குறையினைக் கண்டுபிடித்து மணியம்மையாரைச் சாடித் தீர்க்கிறார்.

தன்னை விடவும் வயதில் 42 ஆண்டுகள் பெரியவரான ஒரு முதியவரைக் கொள்கை வேகத்தோடு கைப்பிடிக்கும் ஓர் இளம்பெண் காலம் முழுதும் ஆண்வாடையே படாமல் இருந்திருக்க வேண்டும் என்ற பத்தாம்பசலித் தனத்தை-உச்சகட்ட ஆணாதிக்கப் போக்கை உயர்த்திப் பிடிக்கும் நிலைக்கு ருத்ரனும் கீழிறங்கி வந்துவிட்டார் என்பதையும் நம்மால் ஏற்க இயலவில்லை.

இத்தகைய பத்தாம்பசலித்தனத்துக்கு வலுச்சேர்க்க நாத்திகம் ராமசாமி அவர்களைத் துணையாகச் சேர்த்துக்கொண்டதுதான் நமது சோகத்தை மேலும் அதிகப்படுத்திவிட்டது. நா.ராமசாமி சொல்கிறார்: ‘பெரியார் பிரியாணியைச் சாப்பிடுவதை மணியம்மை கண்டிருந்தால் பிரியாணியைச் சுருட்டி வெளியில் போட்டிருக்க மாட்டார்-பெரியார் முகத்திலேயே வீசி அடித்திருப்பார்' என்று. இந்தத் தகவல் தோழருக்கு அதிர்ச்சி அளிக்கிறதாம். இத்தகைய சீற்ற(சீறும்) குணமும், தாய்மை உணர்வும்தான் பெரியாரை மணியம்மை யாரிடம் பெருநம்பிக்கை கொள்ள வைத்தது என்பதை உணரமுடியாமல் போனதற்கு என்ன காரணம்? ருத்ரனின் ஒருதலைப்பட்ட பார்வையே அன்றி வேறல்ல.

பெரியார் கூட ஒருமுறை கோபாவேசத்தில் தமிழைக் காட்டுமிராண்டிகளின் மொழி என்று சொன்னதாக ஒரு செய்தி உண்டு. இதனால் பெரியார் தமிழர் தலைவர் இல்லை என்று ஆகி விடுவாரா என்ன? தமது நம்பிக்கைக்குரிய மணியம்மையாருக்குப் பயந்து பிரியாணி சாப்பிடும் தவறை, தவறெனத் தெரிந்தும் பெரியார் செய்கிறார். இத்தவறு முதல்முறையாக இருந்திருக்காது. ஏனெனில் (மாட்டு) மாமிசம் சாப்பிட வேண்டும் என்பது அவரது முக்கியக் கோட்பாடுகளில் ஒன்று. (இது பார்ப்பனருக்கு எதிரானது என்பதால் தீவிரமாகக் கடைப்பிடித்தார்) வயதான காலத்தில்-உடல்நிலை சீர்கெட்ட நேரத்தில் மாமிசம் அவரது உயிருக்கு உலைவைக்கும் என்பதாலேயே மணியம்மை கோபத்தில் அவ்வாறு செய்திருக்கக் கூடும் என்ற நன்னோக்கில் அதனை யோசிக்கவில்லையே... இதற்கு என்ன காரணம்? வேறொன்றுமில்லை-மணியம்மையார் பற்றிய சில முன்முடிவுகளோடு இவற்றைக் கையாளுகிறார் தோழர் ருத்ரன்.

இந்த முன்முடிவு எடுப்பதற்கு ஏதேனும் காரணம் உண்டா? உண்டு. நாத்திகம் ராமசாமியின் வெற்றுவேட்டு அறைகூவல்களில் ருத்ரன் மயங்கிப்போனது ஒரு முக்கியக்காரணம். "மணியம்மை பெரியாரை அய்யா! வாங்க! போங்க! என்று கூப்பிட்டதே இல்லை. "வாடா...போடா... சனியனே! கண்டதையும் தின்னுகிறாயே... யார் அள்ளிச் சுமப்பது... புத்தி இருக்கா.. என்று திட்டுவதுதான் வாடிக்கை'' என்கிறார் நா.ராமசாமி. "இதைப் பொய்யென்று நிரூபிக்க யாரேனும் தயாரா? நிரூபித்தால் ஒரு லட்சம் ரூபாய் பரிசாக என் சொந்தப் பணத்தைத் தருகிறேன்'' என்று அறைகூவலும் விடுக்கிறார் நாத்திகம். இதனை இலங்கைப் பெரியார் டாக்டர் கோவூரின் ‘கடவுள் இருப்பதை நிரூபித்தால் ஒரு லட்சம் தரத் தயார்' எனும் வரலாற்றுச் சிறப்புமிக்க அறைகூவலோடு ஒப்பிடுகிறார் ருத்ரன். ‘முழங்காலுக்கும், மொட்டைத்தலைக்கும் முடிச்சுப் போடுவதா?' ‘சேரிடம் அறிந்து சேர்' என என்றோ படித்தவையெல்லாம் தேவையில்லாமல் ஏனோ இப்போது நினைவில் தோன்றி மறைகிறது.

Maniammaiyar பெரியாரே மணியம்மையாரைப் பற்றிச் சொன்ன ஒரு தகவலாம் இது: "இது (மணியம்மை) நானாகத் தேடிக் கொண்ட இம்சை-தொல்லை. நானாக அமைத்துக் கொண்ட சிறை, நானாகப் போட்டுக்கொண்ட விலங்கு''. இதைச் சொன்னவரும் ஒரே ஒரு சாட்சியும் நா.ராமசாமி. இதற்கு ருத்ரனின் பாராட்டுச் சான்றிதழ்; நா.ராமசாமி பெரியாரை நன்கு அறிந்தவர்; புரிந்தவர்; பெரியாரோடு வாழ்ந்தவர்; மணியம்மையை நேரடியாகவே தெரிந்தவர்; தெளிந்தவர்.

இங்கு நமக்கு ஏற்படும் சந்தேகம் ‘இத்தனை தகுதி படைத்த' நா.ராமசாமியே பெரியாரின் பெருத்த நம்பிக்கையினைப் பெற்று மணியம்மையாரின் இடத்தைக் கைப்பற்றி பெரியாரின் வாரிசாக ஏன் உருமாற்றம் அடையவில்லை என்பதுதான். அவரால் அடையமுடியாது என்பதுதான் அசைக்க முடியாத உண்மை. ஏனெனில் பெரியாரியத்தில் "தெளிந்தவரான'' நாத்திகம் ராமசாமி அவர்கள் சென்ற ஆண்டில் தனது மகனின் திருமண அழைப்பிதழில் தனது சாதிப் பெயரினையும் இணைத்து அச்சிட்டு உற்றாருக்கும் ஊராருக்கும் அனுப்பி இருந்ததைக் கண்டு "நாத்திக வட்டாரமே'' அதிர்வுக்குள்ளானது என்பது அண்மைக் காலச் சிறப்புச்செய்தி. அரசல் புரசலாக நம்மிடமும் சென்ற ஆண்டே இத்தகவல் வந்து சேர்ந்தது.

முதுபெரும் பெரியாரியத் தொண்டர் நாத்திகம் இராமசாமி கி.பி.2006ல் இழைத்த ‘கோட்பாட்டுத் தவறினையே' மறக்கத் தெரிந்த தோழருக்கு 1978-ம் ஆண்டு தமது 58வது வயதில் மறைந்துபோன மணியம்மையாரின் உணர்வு ரீதியிலான பிழையினை, முப்பதாண்டுகள் கழித்தும் மறக்க முடியவில்லை என்பதை என்னவென்று சொல்வது? எப்படித்தான் ஏற்பது?

தமது எழுபத்திரண்டாவது வயதில் இருபத் தொன்பது வயது இளம்பெண்ணை மணம் முடித்த தந்தை பெரியாரின் ‘இயற்கைக்குப் பொருந்தாப் பிழை யினையே' கூடச் சீர்தூக்கிப் பார்த்து, செப்பனிடக் கற்றுக்கொண்டு, அவரைத் தமிழகத்தின் தனித்துவம் நிறைந்த ஆளுமையாக ஏற்றுக் கொண்டிருக்கிறோம். ஆனால் ஓர் இளம்பெண்ணின் இக்கட்டான மனநிலைமையினைச் சிறிதும் திரும்பிப் பார்க்க மாட்டோம் என்றிருப்பதை ஆணாதிக்க நோக்கு கொண்ட ஒரு பக்கப் பார்வை என்று கூறாமல் வேறு என்ன சொல்லி அழைப்பது?

பல்லாயிரம் ஆண்டுகால ஆணாதிக்கச் சமூகம் பெண்களுக்கு இழைத்த அநீதிகளையும், துயரங்களையும், கொடுமைகளையும் மறைத்து-மறந்து-மறுத்து, மூன்று தலைமுறைக்கு முந்தைய தோழர்கள் வேண்டுமானால் கவலையின்றி வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கலாம். ஆனால் பெண்ணியவாதியும்-களப் போராளியும்-போர்க்குணம் கொண்டவருமான தோழர் ருத்ரன் அவ்வாறிருப்பதை எவரால் ஏற்றுக்கொள்ள இயலும்?

பெரியாரியப் பெண்ணிய நோக்கையும் மார்க்சியத்தின் தெளிவோடு தோழர் உள்வாங்க வேண்டும் என்பதே நமது எதிர்பார்ப்பும்-பெரு விருப்பமும். ஏனெனில் பெண்ணுரிமை கோருவோருக்கும், பெண்ணியம் பேசுவோருக்கும் ருத்ரன் போன்றோரின் ஆதரவும், ஒத்துழைப்பும் இன்னும் நெடுங்காலத்திற்குத் தேவைப்படும்.

அசாதாரண நம்பிக்கைகள் ஒருபோதும் பொய்த்துப் போவதில்லை என்று காலம்தோறும் வரலாறு கூறிக் கொண்டிருப்பதை அறிந்தே இருக்கிறோம். எனவே, காலத்துடன் சேர்ந்தியங்கி நாமும் நம்பிக்கையுடன் காத்திருப்போம்!

2 comments:

சசிகுமார் said...

நல்ல சுவாரஸ்யமான பதிவு. தொடர்ந்து மேலும் பல சாதனைகள் புரிய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

balakrishna said...

நல்ல பதிவு , ஆனால் பெரியார் என்பவர் எப்பவும் பெரியவர்,
அவர் புகழ் என்றும் மறையாது

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்