/* up Facebook

Feb 18, 2010

தமிழ் சினிமாவில் பெண் இயக்குனர்கள் - அய்யனார்

தமிழ் சினிமாவில் இயக்குநர் மற்றும் தொழில் நுட்பப் பிரிவுகளில் பெண்களின் பங்கு வெகு குறைவாக இருக்கிறது. தமிழ் சினிமா பேச ஆரம்பித்து எழுபத்தொன்பது வருடங்கள் ஆகியும் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் பெண் இயக்குநர்கள் வந்து போயிருக்கின்றனர்.

இதிலும் பெரிதாய் பேசப்பட்டவர்கள் என எவருமே இல்லாததும் மற்றொரு குறையாகவே இருக்கிறது. 1936ல் டி. பி. ராஜலட்சுமி மிஸ் கமலா என்கிற தன் நாவலையே படமாக இயக்கி இருக்கிறார்.

அதற்குப் பின்பு வந்த மதுரை வீரன் (1938) படத்தையும் இவர் இயக்கினார். இவருக்குப் பின்பு கிட்டத்தட்ட முப்பத்தைந்து வருடங்கள் கழித்து தெலுங்கில் மீனா என்கிற படத்தை 1973ல் விஜய நிர்மலா இயக்கினார். இவர் இயக்கிய ராம் ராபர்ட் ரஹீம் என்கிற படம் 1980ல் தமிழில் வெளிவந்தது.

எண்ணிக்கையளவில் இன்றும் எந்தப் பெண் இயக்குநரும் விஜயநிர்மலாவைத் தொட்டிருக்கவில்லை. இடையில் பானுமதியும் சாவித்திரியும் ஆசைக்கு ஓரிரு படங்கள் இயக்கிப் பார்த்துக்கொண்டதோடு சரி அதற்கும் இடையில் யாராவது வந்து போனார்களா அல்லது வராமலே போனார்களா என்கிற தகவல்கள் தெரியவில்லை.

பின்பு பல வருடங்கள் கழித்து சுஹாசினி இந்திரா மூலமாய் பிரவேசித்தார். பலமான பின்னணி இருந்தும் அவரும் சோபிக்கவில்லை. அவருக்குப் பின்பு வந்தவர்களாக பிரியா, மதுமிதா மற்றும் சமீபமாய் நந்தினி, எழபத்தொன்பது வருட தமிழ் சினிமாவில் பத்திற்கும் குறைவான பெண்களே இயக்குநர்களாக முடிந்தது எவ்வளவு பெரிய சோகம்.

பார்வையை சற்று விரிவாக்கினால் இந்திய அளவில் கூட அபர்ண சென், மீரா நாயர், தீபா மேக்தா, ரேவதி, ஃபரா கான், ப்ரேமா கர்ணாத், ராஜஸ்ரீ, பூஜாபட் தவிர்த்து வேறெந்த பெண் இயக்குநர்களும் பேசப்படவில்லை அல்லது உருவாகவில்லை.

பெண்களை நடிகை அல்லது கவர்ச்சி என்கிற பிம்பத்திற்கு மேல் நகர மனங்கள் அனுப்பதில்லையா, அல்லது இந்தத் துறையைப் பொறுத்தவரை பெண்களும் தங்களின் மூளையைவிட அழகின் மீதுதான் அதிக நம்பிக்கை வைத்திருக்கிறார்களா? என்கிற கேள்விகள் எழுகின்றன.

தமிழ் சினிமாவில் பெண்பார்வை, பெண் உணர்வு, பெண்ணியம் என்றெல்லாம் பேசிய ஆண்கள் திரையில் நம் முன் வைத்ததெல்லாம் அபத்தங்களையும் ஆபாசக் குப்பைகளையும்தான். பெண்ணிய இயக்குநர் என அடையாளப்படுத்தப்பட்ட பாலசந்தருக்கு நாயகி ஆடை மாற்றுவதைக் காட்டுவதே மிகப் பெரிய புரட்சியாக இருந்தது. இம்மாதிரியான குப்பைகள் பெருகாமலிருக்கவாவது பெண் இயக்குநர்களின் பங்கு தமிழ் சூழலுக்கு அவசியமாகிறது.

இதுவரை பெண்களின் காதலுணர்வுகளாய் ஆண்களால் எழுதப்பட்ட பாடல்களில் துருத்திக் கொண்டிருந்ததெல்லாம் ஆணாதிக்கமும் அபத்தமும் மட்டும்தான் என்பதை உணர ஒரு பெண் பாடலாசிரியரின் பங்கு அவசியமாகிறது. பெண்ணியம் என்பது கறுப்பினப் பெண்ணிற்கும் வெள்ளையினப் பெண்ணிற்கும் வெவ்வேறானது. சினிமாவும் சரி வாழ்வும் சரி அவரவர் பிரச்சினைகளை அவரவர்களால் மட்டும்தான் சொல்ல முடியும் என்பது என் துணிபு.

பெண் தன் காதல் உணர்வைச் சொல்லுவதாய் ஒரு பாடல் எழுதப்படக் கூட தமிழ்சினிமா எழுபது வருடங்களுக்கு மேல் காத்துக்கொண்டிருக்க வேண்டியதாய் போயிற்று. இப் பரிதாப நிலையில் நாம் பெண் இயக்குநர்களை எப்படி எதிர்பார்க்க முடியும்? இம்மாதிரியான சூழலிருந்து அவ்வப்போதாவது வெளிவரும் பெண்களை வரவேற்பது மிகவும் அவசியமானது. அதே சமயம் அவர்களின் படங்களின் மீதான விமர்சனங்களையும் கவனமாக அணுக வேண்டியதும் அவசியமாகிறது.

சமகால பெண் இயக்குநர்களில் ஒருவரான ப்ரியாவின் இயக்கத்தில் வெளிவந்த கண்ட நாள் முதல் திரைப்படம் காதல் உணர்வு கனவில் மிதத்தல், சாந்தமான நாயகன், இழையோடும் நகைச்சுவை, ஏகத்துக்கும் பெண்மையென நல்லதொரு பொழுதுபோக்கு படமாக இருந்தது. இருப்பினும் அவருடைய அடுத்த படமான கண்ணாமூர்ச்சி ஏனடா பெரும் ஏமாற்றத்தையே தந்தது. மதுமிதாவின் வல்லமை தாராயோ படமும் குறைந்த பட்ச எதிர்பார்ப்புகளைக் கூடப் பூர்த்தி செய்யவில்லை. இவர்கள் இருவருக்குமான அடத்த நகர்வுகள் சாத்தியமா? என்பதை அவர்களிடமே விட்டுவிடுவோம்.

ப்ரியாவின் உதவி இயக்குநரான நந்தினியின் திரு திரு துரு துரு படத்தை பார்த்தேன். படம் எனக்குப் பிடித்திருந்தது. சமகால தமிழ்ப்படங்களிலிருக்கும் பெரும்பாலானா இம்சைகள் இப்படத்தில் இல்லை.

நேர்த்தியான நாயகி, சின்ன சின்ன முடிச்சுகளாய் சிக்கல்கள், சுவாரசியமான விடுவிப்புகள், மெளலியின் தரமான நடிப்பு என நல்லதொரு பொழுதுபோக்கு படமாய் இருந்தது. தமிழில் கலைப் படங்களுக்குத்தான் சாத்தியமில்லை என்றால் நகைச்சுவைப் படங்களுக்கும் அதே போன்றதொரு தேக்கநிலைதான் இருந்து வருகிறது.

பொய் சொல்லப் போகிறோம். திரு திரு துரு துரு போன்ற படங்கள் எப்போதாவது வந்த இந்தத் தேக்கத்தை உடைக்க முயலுகின்றன.

ஆனாலும் திரைப்படம் வசூலித்தே ஆக வேண்டுமென்கிற நிர்ப்பந்தங்கள் இருப்பதால் நம் சூழல் ரசிக சிகாமணிகளின் விருப்பத்தினை நிறைவு செய்யவே குப்பைகள் படங்களாக வடிவம் கொள்கின்றன.

இந்தத் திரைப்படம் வசூலித்ததா எனத் தெரியவில்லை வசூலித்திருந்தால் மிகவும் மகிழ்ச்சி. நந்தினிக்குப் பாராட்டுக்களும் வாழ்த்தும்.

பணத் தேவை, கடுமையான போட்டி, மந்தமான வியாபாரச் சூழல், இழுத்து மூடும் திரையரங்குகள், வணிகக் குறி, ரசிக விசிலடிச்சான் குஞ்சுகள், தொலைக்காட்சி சீரியல்கள், திருட்டு வீசிடி போன்ற நெருக்கடிகள் ஓரளவிற்கு சுமாரான படங்கள் வந்தால் போதும் என்கிற கட்டத்தினுக்கு பார்வையாளனை நகர்த்தி விடுகின்றன.

அதையும் நிறைவேற்றச் சாத்தியமில்லாத நம் பண முதலை தயாரிப்பாளர்கள், ஸ்டார்கள், தலைகள், தளபதிகள், வீரர்கள், புயல்கள், சுபோதிகள், கவர்ச்சி கன்னிகள், விசிலடிச்சான் குஞ்சுகள் எல்லாரையும் ஒரு சாக்கில் கட்டி நடுக்கடலில் விட்டு வந்தால் போதும் தமிழ் சினிமா பிழைத்துக் கொள்ளும்.

திரைப்படத் துறையில் உதவி இயக்குநர்களாக இருக்கும் ஓரிரு பெண்களை வலைப் பக்கங்களில் பார்க்க முடிகிறது. சந்திரா, தேன் மொழி தாஸ் போன்றோர் இலக்கியப் பின்புலத்தோடு திரையில் இயங்கி வருதுகின்றனர். ஏற்கனவே இலக்கியவாதியான உமா சக்தியும் இப்போது சந்திராவுடன் இணைந்திருக்கிறார்.

2 comments:

அய்யனார் said...

என் கட்டுரை இங்கு வெளியானது குறித்து மகிழ்ச்சி. தினகரனுக்கு ஏன் நன்றி சொல்லியிருக்கிறீர்கள் என்பதுதான் புரியவில்லை
http://ayyanaarv.blogspot.com/2009/11/blog-post_17.html

பெண்ணியம் said...

மன்னிக்க வேண்டும் அய்யனார். தினகரனில் பெயர் குறிப்பிடவில்லை. என்றாலும் இந்த தவறை உடனே திருத்தி விடுகிறோம்.
-பெண்ணியம்

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்