/* up Facebook

Feb 10, 2010

பெண்ணிய வெளியும் இனவரைவியல் எழுத்தும்- பா.ஆனந்தகுமார்

(சு.தமிழ்ச்செல்வியின் ‘மாணிக்கம்’ நாவலை முன்வைத்துச் சில குறிப்புகள்)

நவீனத் தமிழ் இலக்கியப் பரப்பில் 1990 - களில் தொடங்கிய பெண் எழுத்து கவிதை, சிறுகதை, நாவல் எனப் பல வடிவங்களில் பல்வேறு பரிமாணங்களில் மேற்கிளம்பி வருகின்றது. ஆயிரமாண்டுகளாக ஒடுக்கப்பட்ட மௌனமாக்கப்பட்ட பெண்ணின் குரல், மேலுயர்ந்து வரும்போது உளவியல், உடலரசியல், சமூகவியல் எனப் பல தளங்கள் சார்ந்து வெளிப்படுகின்றது. பெண்ணின் இருப்பையும் உணர்வையும் உளவியல் சார்ந்தும் உடலரசியல் சார்ந்தும் படைப்பாக்கம் செய்யும் முயற்சிகள் தமிழ்க்கவிதையில் பெரிய அளவில் நிகழ்ந்துள்ளன; ஆனால் பெண் படைப்பாளிகள் புனைகதை இலக்கியத்தில் சமூகப் பண்பாட்டுத் தளத்தில் - குடும்பவெளியில் - பெண்ணுக்கான இடம் எத்தகையது என்பது குறித்தே மிகுதியாகப் பேசியுள்ளனர்.

இதனை அம்பையின் எழுத்துக்கள் தொடங்கி பாமா, சிவகாமி எழுத்துக்கள் வரை காணமுடியும். சு. தமிழ்ச்செல்வியும் தனது புனைகதைகளில் இத்தகைய சமூகப் பண்பாட்டுத் தளத்தையே தேர்வு செய்துள்ளார். ஆனால் ‘குடும்பம்’ என்பதே அவரது கதைகளின் மையம். குடும்ப வெளியில் ஆண் அதிகாரம் படைத்தவனாக இருந்தாலும், ‘குடும்பம்’ என்னும் அமைப்பின் அடித்தளமாக அச்சாணியாகப் பெண் இருக்கின்றாள் என்பதையே தமிழ்ச்செல்வியின் நாவல்கள் எடுத்துக் காட்டுகின்றன. உழைக்கும் பெண்களுடைய ஒடுக்கப்பட்ட வாழ்க்கையின் இருண்ட பக்கங்களைக் குடும்பப் புராணங்களாகக் கதையாடல் செய்பவைகளாகவே தமிழ்ச்செல்வியின் நாவல்கள் அமைந்துள்ளன. அளம், கீதாரி, கற்றாழை, ஆறுகாட்டு துறை எனப் பல சிறந்த நவீனங்களைத் தமிழுக்கு அளித்த தமிழ்ச் செல்வியின் முதல் நாவல் ‘மாணிக்கம்’.

காவிரியாற்றின் தென்கரையிலுள்ள திருத்துறை பூண்டி வட்டாரமும் அதிலுள்ள கோயில்தாவு, கற்பக நாதர் குளம், ஆதனுர் முதலான சிற்றூர்களுமே தமிழ்ச் செல்வியின் கதைக்கான களங்கள். மாணிக்கம் நாவலும் இவ்வட்டாரப் பின்னணியிலேயே இயங்குகிறது. கதை மாந்தர்கள் இயங்கும் வாழிடவெளிகள் பற்றிய தமிழ்ச்செல்வியின் ஆழமான பதிவு வாசிப்போனை கதையின் புனைவுலகிற்குள் எளிதில் ஈர்த்துச்செல்கின்றது. வேளாண் குடும்பத்தில் பிறந்து, பள்ளிக்கல்வியை முடித்து ஆசிரியர் பயிற்சி பெற்று, பள்ளி ஆசிரியராக மாறும் வழக்கமான பாதையிலிருந்து விலகி ஹோமியா மருத்துவம் கற்று, சிறந்த மருத்துவராகப் பணமும் புகழும் பெற்று உயரும் கதைத்தலைவன் மாணிக்கம் இறுதியில் உள்காட்டு மீனவனாக மாறும் அவல வாழ்வே, நாவலின் மையம்.

மாணிக்கம் புதியன தேடும் ஆர்வமும் சாதித்துக் காட்டும் வேட்கையும் கொண்டவன். இதன் காரணமாக, ஹோமியோ மருத்துவத்தில் செல்வாக்குப் பெற்றிருக்கும் காலத்தில் பழைய நண்பன் வடபாதி கோவிந்துவின் சைக்கிள் வித்தையைக் கண்டு வியந்து, ஒரே நாளில் அதனைக் கற்று, பெரும் சைக்கிள் வித்தைக்காரனாக மாறுகின்றான். தன்னிலையில் இறக்கம் வந்தபோது விவசாயக்கூலியாக மாறுகிறான். பின்னர் ஒரு ஏற்றத்தில் சொந்த விவசாயம் பார்த்து மாடு, கன்று வைத்திருக்கும் சம்சாரியாகின்றான். கடை வைத்து பெரும் பெருளீட்டுகின்றான். மீண்டும் இறக்கம். வேறு தொழில் எதுவும் செய்ய இயலாத நிலையில் தெற்கேயிருக்கும் தொண்டியக்காட்டு மீனவனாவின்றான். ஆனாலும் சாதிக்கும் வேட்கையும் புதுமை செய்யும் ஆர்வமும் குறையவில்லை.

‘கண்ணாடிப்பூச்சி’ போன்ற சிறிய இறால் மீன்களும் கூட தப்பாத போத்துமால் வலையை உருவாக்கி அவ்வட்டாரத்தில் பெரும் புகழ்பெறுகின்றான். உடல் தளரும் காலத்தில் லாஞ்சியால் வலையறுந்து போன போது வேறு எதுவும் செய்யவியலாது திகைக்கிறான். தன் வாழ்க்கை குறித்து சுய விமர்சனம் செய்துகொள்கின்றான். இதுவரை வாழ்ந்த வாழ்வில் குடும்பத்தாருக்கு உதவாது சுமையாக இருந்தேன் நான். இறந்த பிறகாவது மீனவர் சங்கத்தின் மூலம் கிடைக்கும் அரசாங்கப் பணம் என் மகன் நாஞ்சியின் புதிய வாழ்வுக்கு உதவட்டும் என்று கருதி கடலன்னையின் மடியில் சென்று தன் உயிரை மாய்த்துக் கொள்கிறான். வாழ்க்கைச் சக்கரத்தில் ஏறி, இறங்கி, ஏறி, இறங்கி எனத் தொடர்ச்சியான மாற்றங்களில் சிக்கி வாழ்ந்து மடிந்த மாணிக்கத்தின் கதையை நாவல் இருபது இயல்களில் விவரித்துச் செல்கின்றது. தளர்ந்த மீனவனாக மாணிக்கம் இருக்கும் நிலையில் தொடங்கும் கதை, நான்காம் இயலில் மடைமாற்றமாக மாணிக்கத்தின் கடந்த காலத்திற்குள் செல்கின்றது. பதினெட்டாம் இயலில் மீண்டும் நிகழ்காலத்திற்கு வருகின்றது. நாவலின் கதைப்பின்னல் இயல்பாக ஒரு நேர்கோட்டுத்தன்மையில் அமைந்துள்ளது. ஆசிரியர் கூற்றாகவும் உரையாடல்களாகவும் நாவலின் கதாபிரபஞ்சம் விரிகின்றது.

மாணிக்கத்தின் கதை, நாவலில் தனி நிலையாக ஆசிரியரால் விவரிக்கப்படவில்லை. மாணிக்கத்திற்கு வாழ்க்கைப்பட்ட செல்லாயியின் வாழ்வோடு பின்னியே விவரிக்கப்படுகின்றது. சிறுவயதில் பெற்ற தாயை இழந்து வயதுக்கு வந்தபின் ஆதனூர் பாட்டி வீட்டில் வாழ்ந்து மாணிக்கத்திற்கு வாழ்க்கைப்படும் செல்லாயியின் மணவாழ்க்கையே நாவலில் பெரிதும் விவரணை செய்யப்படுகின்றது. மணத்திற்குப் பின் கணவன் வீட்டிற்கு வரும் பொல்லாத மாமியாரான தங்கத்தாச்சியிடமும் சீட்டும் குடிப்பழக்கமும் முரட்டுத் தனமும் கொண்ட கணவனிடமும் சிக்கி ‘இருதலைக்கொள்ளி’ எறும்பாய் தவிக்கின்றாள். மாமியார் சண்டையால் கற்பகநாதர் குளத்திலிருந்து இடம்பெயர்ந்து மணலிக்குச் சென்று வயல்வேலை செய்கிறாள்.

பின்னர் கணவன் மதுக்கூருக்குப் பெயர்ந்து மருத்துவமனை வைக்கின்றபோது சூலுறுகிறாள். கணவன் பங்காகாட்டில் மனையும் நிலமும் வாங்குவான் என்ற கணவோடு பெரிய அக்காள் சரசுவின் வீட்டிற்கு மகப்பேறுக்குச் செல்கின்றாள். தமிழ்வாணி பிறந்த போது சீட்டிலும் குடியிலும் பணத்தை இழந்து சைக்கிள் வித்தைக்காரனாய் வெறுங்கையோடு வந்து நிற்கிறான் செல்லாயியின் கனவு தகர்கின்றது. மாணிக்கத்தோடு மாதம் ஓர் ஊரென அலைந்து திரிகின்றாள்.

பாசிப்பட்டணத்தில் சின்னம்மையால் அவன் தாக்குண்டு சின்னாபின்னமான பின் மீண்டும் மாமியார் வீட்டிற்குச் செல்கிறாள். சொந்த இடத்தில் மானாவரி விவசாயம் செய்கின்றனர். இரண்டாவது குழந்தை மணி பிறக்கிறாள். மாணிக்கம் செட்டிகுலப்பெண் சக்குபாய் மீது கொண்டிருந்த காதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்தபோது மாணிக்கம் பிரிகின்றான். செல்லாயி தனித்துவிடப்படுகின்றாள். விவசாயக் கூலியாகி இரண்டு குழந்தைகளையும் காக்கின்றாள். சந்தர்ப்பத்திற்காகக் காத்திருந்த மாமியார், செல்லாயியின் தந்தை கணேசபிள்ளை ரொட்டிக்காரன் மூலம் செய்துவரும் சிறு உதவியை இட்டுக்கட்டி ‘அவுசாரி’பிட்டம் வாங்கிக் கொடுக்கின்றாள்.

அதிலிருந்து துணிவுடன் செல்லாயி மீண்டு வருகிறபோது மாணிக்கம் ஊர் திரும்புகிறான். தாயின் பேச்சைக் கேட்டு மனைவி மீது களங்கம் சுமத்தி ஊரார் முன்னிலையில் செல்லாயியை அடித்து உதைத்து அவமானப்படுத்துகின்றான்; அவளைக் கிணற்றில் ஆழ்த்தி கொல்லப்பார்க்கின்றான். ஆனால் எல்லா அடி உதைகளில் இருந்தும் அவமானங்களில் இருந்தும் கொலைமுயற்சிகளில் இருந்தும் செல்லாயி மீண்டு எழுகின்றாள். குடும்பத்தின் மானம் காக்கின்றாள். தன் உழைப்பாலும் முயற்சியாலும் தன் குடும்பத்தை சிதைவிலிருந்தும் அழிவிலிருந்தும் காக்கின்றாள். இரண்டு மகள்களுக்குத் திருமணம் முடித்து இரண்டு குடும்பங்களை ஆக்குகின்றாள்.

மாணிக்கத்தின் ஒவ்வொரு ஏற்றத்திற்கும் செல்லாயியே அடித்தளம் அவனது ஒவ்வொரு இறக்கத்திற்கும் குடியும் சீட்டாட்டமுமே காரணம். எல்லா இழப்புகளில் இருந்தும் குடும்பத்தை தூக்கி நிறுத்தும் செல்லாயி, குளத்தில் மூழ்கி மாண்டு போகும் சின்னமகளின் இறப்பில் துவண்டு போகின்றாள். இந்த உறவின் பிரிவு செல்லாயியைக் கடைசி வரையில் சோகத்தில் ஆழ்த்துகின்றது. மாணிக்கம் நாவலில் இடம்பெறும் எல்லாக் கதை மாந்தர்களும் கிராமிய சமூக வாழ்வின் யதார்த்த சித்திரங்களே. அவர்கள் மீது எவ்விதப் பூச்சுக்களுக்கும் மெழுகல்களுக்கும் புனைவுகளுக்கும் தமிழ்ச்செல்வி இடங்கொடுக்கவில்லை. பெண்ணின் எழுச்சியும் போராட்ட உணர்வும் இயல்பாகவே சித்தரிக்கப்பட்டுள்ளது.

பெண்ணியம் என்பதனை தமிழ் உலகு சார்ந்ததாக, உழைக்கும் பெண் வர்க்கம் சார்ந்ததாகவே தமிழ்ச்செல்வி காண்கின்றார். அதே போன்று நாவலின் புனைவும் மொழியும் தமிழ் மண் சார்ந்ததாகவே இருக்கின்றது. திருத்துறைப்பூண்டி வட்டார மருதமும் நெய்தலும் சார்ந்த நில வெளிகள் அவற்றின் முதல் கருப்பொருட்களோடு நாவலில் விரிவான புனைவைப் பெற்றுள்ளன. நாவலின் கதையாடலில் ‘சேரி மொழி’ (வட்டார வழக்கு) செவ்விதின் கிளக்கப்பட்டுள்ளது.

திணைசார் புனைவுத் தன்மையால் தமிழ்ச் சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதி அதன் இனவரைவியற் கூறுகளோடு நாவலில் விரிவான பதிவினைப் பெற்றுள்ளது. மாடனும், ஐயனும் அவர்கள் அருள் இறங்கும் சாமியாடிகளும் - மறிரத்தம் குடிக்கும் சாமியாடிகளின் அருள் வாக்கில் இடம்பெறும் சின்னத் தேங்காய் (கோழி), பெரிய தேங்காய் (ஆடு,)களும் - குறிபார்த்தலும் சோதிடம் கேட்டலும் எனத் தமிழ் இனத்தின் பண்பாட்டு சார் நம்பிக்கைகள் நாவலில் காணப்படுகின்றன. இனவரைவியல் பண்பு இந்த நாவலில் தமிழ்ச் சமூகத்தின் மரபான மருத்துவ அறிவை எடுத்துக் காட்ட உதவியிருக்கின்றது.

குறிப்பாக மகப்பேறு மருத்துவம் குறித்த மரபான அறிவு இந்நாவலின் ஏழாம் இயலில் விரிவான பதிவினைப் பெற்றுள்ளது. ஐந்தாம் மாத மருந்து தொடங்கி, வெள்ளரி விதை கஷாயம், அவுரிகஷாயம், சோம்புத் தண்ணீர், வெந்தயத் தண்ணீர், மஞ்சள் உருண்டை, பெருங்காய கருப்பட்டிப் பொடிகள், குளிக்கப்பயன்படுத்தும் ஆமணக்கு இலை கலந்த சூடான நீர், பெண்களைத் தீட்டு அறையிலிருந்து வெளியேற்றும் போது கொடுக்கப்படும் அறை மருந்து (சுக்கு, அரத்தை, கருஞ்சீரகம், சதக்குப்பை, ஓமம், கண்டத்திப்பிலி, அரிசித் திப்பிலி, மஞ்சள், சங்கிலை ஆகிய 9பொருட்களின் கலவை) புண்ணில் ஊற்றும் பட்டை நீர் (வேம்பு, பூசரம், ஓதியம் பட்டைகள்) என மகப்பேறு தொடர்பான மருத்துவக் குறிப்புகள் நாவலில் இடம் பெற்றுள்ளன.

மகப்பேறு காலத்தை அறிவிக்கும் கால் நரம்பு இழுத்தல், வயிறு தொடை மீது விழலிவிலா குழி விழல் முதலான குறிகளும் நாவலில் சுட்டப்பட்டுள்ளன. மருத்துவச்சியிடம் மருத்துவம் பார்க்கும் முறைகளும் மரத்தை வேரொடு பறித்தெடுப்பதைப் போன்ற குழந்தைப் பேற்றுநிகழ்வும் பிறந்த குழந்தையின் நாவில் கழுதை இரத்தம் வைப்பதும் நாவலில் பதிவு செய்யப்பட்டுள்ளன. மருத்துவ மானுடவியல் மருத்துவ இனவரைவியல் போன்ற ஆய்வுகளும் அவை குறித்த புனைவிலக்கியங்களும் மேனாட்டில் மிகுந்த கவனத்தைப் பெற்று வருகின்றன. உலக மயமாக்கலில் மொழி, இனம், கலாச்சாரம் சார்ந்த பன்மை அடையாளங்கள் அழிந்து வருகின்ற சூழலில் - ஒற்றை அடையாளம் கட்டமைக்கப்படுகின்ற சூழலில் - தமிழ்ச் செல்வியில் இத்தகைய மருத்துவ இனவரைவியல் சார்ந்த எழுத்து மிகுந்த முக்கியத்துவம் உடையதாகின்றது.

தமிழ்ச் சமூகத்தின் உரையாடல் தன்மையும் குறிப்பாகப் பெண்களுக்கிடையிலான உரையாடலும் நாவல் ஆசிரியரால் கூர்மையாக அவதானிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளன. நாவலின் உரையாடலில் வெளிப்படும் பழமொழிகளும் தமிழ்ச்சமூகத்தின் சொல்லாடல் முறையைக் கருத்துப் புலப்பாட்டு முறையை - பகடி செய்யும் முறையை - எடுத்துக் காட்டுகின்றன.

“எட்டெரும செத்து எதுக்க வந்திச்சாம் கண்ணெரும / செத்த வூட்டுக்குப் போனானாம் கறியெடுக்க” (ப.30) / “ஊரு ஆலயெல்லாம் சுத்துனாலும் கடசீல / ஒரவாயிக்கித்தான வரனும் கப்பி” (ப. 139) / “ஓஞ்சிதாம் பாள ஒக்காந்தாளாம் சாணாத்தி” (ப.144) / “சீலயில்லன்னு சின்னாயிக்காரி பூட்டுக்குப் போனானாம் / அவ ஈச்சம் பாய கட்டிக்கிட்டு எதுக்கவந்து / நின்னாளாம்”( ப. 147)

உடல் மொழியைப் பெண் மொழியாகக் காட்டி வரும் இன்றைய இலக்கியச் சூழலில், நாவலில் இடம் பெறும் ஒப்பாரிகள் மரபான பெண் மொழியின் வெளிப்படாக அமைந்துள்ளன.
ஒப்பாரிப் பாடல்கள் பெண்களின் கையற்ற நிலையைக் காட்டுவதாகவும் உணர்ச்சி வடிகால்களாகவும் மட்டும் அமைவதில்லை. அவை சமூகத்தின் மீதான ஆத்திரத்தையும் எடுத்துக்காட்டுகின்றன கீழ்வரும் ஒப்பாரிகள் இடம்பெறுகின்றன.

“மாமரத்து கீழ நின்று - யாம் / மனக்கொறயச் சொன்னேனுன்னா / மாங்கா தெறிச்சி வுழும் / மாமரமும் இத்துவுழும் /பூமரத்து கீழ நின்று - நா / பொண்ணா கொற சொன்னேனுன்னா / பூவுந் தெறிச்சி வுழும் / பூ மரமும் இத்து வுழும்” (ப.48) / “ஏலக்கா பொட்டியின்னு / ஏந்தினேன் கய் நெறயா - நீ / இருமனசுக் காரருன்னு - எனக்கு / இருந்த சனம் சொல்லலயே” (ப.79) / “சாதி எலுமிச்ச, சமுத்திரத்து நீர்வாழ / சாதியிலே காய்க்காம சனம்வெலலி காச்சேனே”(ப.167)

ஒப்பாரியும் பழமொழி கூட இனவரைவியற் பண்பு கொண்டவையே. பெண்ணிய வெளியை இன வரைவியற் எழுத்தாக வெளிப்படுத்தும் தமிழ்ச்செல்வியின் ‘மாணிக்கம்’ நாவல் தமிழ் நாவல் வரலாற்றில் ஒரு மைல்கல்.

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்