/* up Facebook

Feb 8, 2010

குட்டி ரேவதி தமிழ்நதிக்கு வழங்கிய பேட்டி

சென்னையை வசிப்பிடமாகக் கொண்ட கவிஞர் குட்டி ரேவதி, பூனையைப் போல அலையும் வெளிச்சம்(2000), முலைகள்(2002),தனிமையின்; ஆயிரம் இறக்கைகள்(2003) ஆகிய மூன்று கவிதைத் தொகுப்புகளைத் தந்திருக்கிறார். மிகவும் அற்புதமான கவித்துவமும் சிந்தனைத் தெளிவும் நிறைந்தவர். எழுத்து,பெண்ணியம் போன்றவற்றில் முனைப்புடன் இயங்கிவரும் இவர், பனிக்குடம் என்னும் பதிப்பகம் ஒன்றையும் நடத்திவருகிறார். இதில் பெண்ணிலக்கியவாதிகளின் படைப்புகளே வெளியிடப்படுவது குறிப்பிடத்தக்கது. இப்போது எழுதிவரும் பெண் படைப்பாளிகளுள் கவனிக்கத்தக்க ஒருவராக இயங்கிவருகிறார்.

“உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் வெளி அறையின் தனிமைதான்”

தமிழ்நதி: இப்போதிருக்கும் இதே வீச்சுடன் பெண்கள் எழுதிக்கொண்டிருந்தால் அடுத்தடுத்த தசாப்தங்களில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழும் என்று நீங்கள் நம்புகிறீர்களா?

குட்டி ரேவதி:கண்டிப்பாக நம்புகிறேன். இப்போது நாம் எழுதிக்கொண்டிருக்கும் இந்த உடல் அரசியல் என்பதனோடு மட்டும் இந்த வீச்சு தேங்கிப்போய் நின்றுவிடாது. அதற்கான மாற்றத்தை இப்போது உணரமுடிகிறது. முன்னரே நான் குறிப்பிட்டதுபோல முன்பு சிவசங்கரி,வாஸந்தி போன்ற மேட்டிமைசாதியினர்தான் எழுதிக்கொண்டிருந்தார்கள். இப்போது பார்த்தால் விளிம்புநிலையில் இருக்கிறவர்களும் அதிகமாக எழுதுகிறார்கள். வேறு வேறு பின்னணிகளில் இருந்து எழுத வருகிறவர்கள் தாம் சார்ந்த பின்னணி சார்ந்த அரசியல் விடயங்களையும் எழுதக்கூடிய ஒரு சூழல் உருவாகியிருக்கிறது. இது இப்போதிருப்பதிலிருந்து வேறொரு கட்டத்தை நோக்கி நகர்த்திச் செல்லும் என்று நான் நிச்சயமாக நம்புகிறேன்.

இன்னுமொரு விடயம் என்னை மிகவும் பாதித்தது. அதாவது, குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை. எப்போது ஒரு சந்தர்ப்பம் கிடைத்தாலும் நான் இந்தப் பிரச்சனையை முன்வைத்துப் பேசப் பின்னின்றதில்லை. அதைப் பற்றி நான் பேச நினைக்கிறபோதெல்லாம் அப்படியொரு விஷயம் இருக்கிறதா என்ன என்று கேட்பார்கள். உதாரணமாக இப்போது நொய்டாவில் நடந்த கொடுமை வெளிச்சத்திற்கு வந்த பிறகு ஆச்சரியமாகப் பார்க்கிறார்கள். நான் இதைக் குறித்து சில களஆய்வுகள் செய்திருக்கிறேன். ஐந்து ஆறு வயதுடைய பெண்குழந்தைகளைப் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியபின் கொலை செய்வதென்பது சாதாரணமாக நடந்திருக்கிறது. கருப்பை சீரழிந்த நிலையிலெல்லாம் நான் குழந்தைகளைப் பார்த்திருக்கிறேன். தன்னுடைய பாலியல் அடையாளத்தைக் கூடப் புரிந்துகொள்ளவியலாத குழந்தையை உபயோகித்துக்கொள்வது பல வீடுகளில் நடந்துகொண்டுதானிருக்கிறது. குழந்தையானது அதை உடல்ரீதியாக அசௌகரியமாக உணருமேயன்றி என்ன நடந்ததென்று சொல்லக்கூடத் தெரியாமலிருக்கும். தவிர, தந்தை போன்ற தமது நெருக்கமானவர்கள் இவ்விதம் நடந்துகொள்ளும்போது அதை மறுத்து ஒன்றும் சொல்ல முடிவதுமில்லை. இதுகூட ஆணாதிக்கத்தினுடைய ஒரு வடிவம்தான். பெண்ணியத்தினுடைய நீட்சி எவ்விதம் அமையவேண்டுமெனில், குழந்தைகள் மீதான இந்தப் பாலியல் கொடுமைகளைத் தடுத்து நிறுத்தக்கூடிய அளவிற்கு வளரவேண்டும். ஆண் தனது பாலியல் ரீதியான அதிகாரத்தைப் பிரயோகிக்கக்கூடிய ஒரு உயிராகப் பெண் எப்போதும் இருப்பது என்பது விசனத்திற்குரியது.

என்னை ஒரு கூட்டத்திலே ஒரு ஆண் கேட்கிறார்: “இந்தியாவில் எத்தனையோ வகையான பிரச்சனைகள் இருக்கின்றன. அணுவாயுதப் பிரச்சனை இருக்கிறது. பயங்கரவாதம்,முதலாளித்துவம்,ஏகாதிபத்தியம் போன்ற பிரச்சனைகள் இருக்கின்றன. இவற்றையெல்லாம் விடவா பெண்ணியம் உங்களுக்குப் பெரிதாகப் போய்விட்டது…?”என்று. அதற்கு நான் சொன்னேன் “நீங்கள் சொன்னவையெல்லாம் பிரச்சனைகள்தான். ஒத்துக்கொள்கிறேன். ஆனால், பெண்ணியம் என்பது பிரச்சனை கிடையாது. அதுவொரு கோட்பாடு,பயிற்சி முறை. ஆணும் பெண்ணும் இணக்கமாக வாழ்வதற்கான ஒரு பாதையை உருவாக்குவது. அது எப்படிப் பிரச்சனையாகும்…?”என்று கேட்டேன். முதலாளித்துவத்தைச் செயற்படுத்துவதில் பெண் எங்கு வருகிறாள் என்பது எனக்குப் புரியவேயில்லை. அதற்கும் பெண்களுக்கும் என்ன சம்பந்தம்…? எங்கோ ஓரிடத்தில் ஒரு மேசையைச் சுற்றியமர்ந்து நான்கு ஆண்கள் திட்டமிடுவதில் நமக்கென்ன பங்கு..?

இன்னொரு விடயம், நான் இந்தியாவிற்கான பெண்ணியம் என்று சொல்வது வந்து தலித் பெண்ணியம். தலித் பெண்ணியம் என்பது ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கான பெண்ணியம் என்று பொருளல்ல. ‘சாதீயமற்ற பெண்ணியம்’என்பதைத்தான் சொல்ல வருகிறேன். எல்லா மட்டங்களிலும் சாதியினால் அறையப்பட்டிருக்கும் பெண்களை விடுதலை செய்வதுதான் ‘தலித் பெண்ணியம்’என்பதன் பொருள். இந்தியாவில் பெண்ணியம் என்று உருவானால் அது எல்லா அடுக்குகளிலும் இருக்கும் பெண்களை விடுவிப்பதாக அமையவேண்டும். ஒரு பெண் விடுதலை அடையும்போது பிரமையிலே கட்டுண்டிருக்கும் ஒரு ஆணும் விடுதலை அடைவதாகவே நான் கருதுகிறேன்.

“நீங்கள் தலித் பெண்களுக்காகப் பரிந்து பேசுகிறீர்கள். மேல்சாதிப் பெண்களுக்கு ஒடுக்குமுறை கிடையாதா….?” என்று மேல்சாதியைச் சார்ந்த பெண் படைப்பாளிகள் ஒருதடவை பாமா என்ற எழுத்தாளரைக் கேட்டபோது அவர் சொல்லுகிறார்: “மேல்சாதிப் பெண்களுக்கு ஒரு பக்கத்திலிருந்து அதாவது மேல்சாதி ஆண்களிடமிருந்து மட்டும்தான் ஒடுக்குமுறை வருகிறது. ஆனால், தலித் பெண்கள் மீது மூன்று விதமான ஒடுக்குமுறைகள் பிரயோகிக்கப்படுகின்றன. ஒன்று, மேல்சாதி ஆண்கள் கீழ்சாதிப் பெண்கள் மீது செலுத்துகிற ஒடுக்குமுறை. இரண்டாவது,மேல்சாதி பெண்கள் கீழ்சாதிப் பெண்கள் மீது செலுத்துகிற ஒடுக்குமுறை. மூன்றாவது, கீழ்ச்சாதி ஆண்கள் தங்களது பெண்கள் மீது செலுத்துகிற ஒடுக்குமுறை.”இந்த அடிநிலை ஒடுக்குமுறையிலிருந்து முதலில் விடுபட்டால்தான் எல்லா அடுக்குகளிலிருக்கும் பெண்களுக்கும் விடுதலை என்பது சாத்தியமாகும் என்பது எனது கருத்தாகும். அதற்கு சாதியம் என்ற தளையிலிருந்து நம்மை விடுவித்துக்கொள்ள வேண்டும். ஒரு பிரச்சனையைப் பார்க்கும்போது, முதலில் சாதிய ரீதியான பிரச்சனையாகவும் அதற்குப் பிறகு பாலியல் ரீதியான பிரச்சனையாகவும் அதனையடுத்து வர்க்கரீதியான பிரச்சனையாகவும் அதை அணுகுவதே சிறப்பு. ஆனால், எல்லாம் தலைகீழாகப் பார்க்கப்படுவதனால்தான் இங்கே தமிழ்நாட்டிலே எந்தவொரு முழுமையான மாற்றமும் நடக்கமாட்டேனென்கிறது.

கடந்த காலங்களில் தமிழ்நாட்டில் ஏதாவது மாற்றங்கள் நிகழ்ந்திருந்தால் அதற்கெல்லாம் தாங்கள்தான் காரணமென திராவிட இயக்கங்கள் பேசிக்கொள்கின்றன. பெரியார் கூட கடவுள் வழிபாட்டை மறுப்பதனூடாகத்தான் பகுத்தறிவைப் பார்த்திருக்கிறார். அவர் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான விடயங்களை முன்வைக்கவில்லை என்று இன்று தலித் மக்களால் விமர்சிக்கப்படுகிறார்.

தமிழ்நதி:பெண்கள் குறித்த விழிப்புணர்வை அவர் பரப்பவில்லையா…?

குட்டி ரேவதி:ஆமாம் சொன்னார்… ‘பெண்கள் தங்களுடைய கருப்பையை அறுத்தெறிந்து விட வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு விடுதலை கிடைக்கும்’என்று சொன்னார். ஆனால், என்ன மாற்றம் வந்தது…? குஷ்புவை விளக்குமாற்றைக் காட்டி விரட்டினார்கள். திராவிட இயக்கங்கள் மேடையில் பேசும்போதெல்லாம் நன்றாகத்தான் பேசுவார்கள். ஆனால், உங்கள் வீட்டில் - ஒரு தனிப்பட்ட பெண்ணின் மனத்தில் மாறுதல் வந்துவிடக்கூடாதென்பதில் அவர்களும் கவனமாகத்தான் இருக்கிறார்கள். ஏனென்றால், தாங்களெல்லாம் நல்லதொரு வாழ்க்கை வாழ்வதாகத்தான் அவர்களுடைய மனைவிமாரெல்லாம் நம்பிக்கொண்டிருப்பார்கள். அந்த நம்பிக்கையைத் தளர்த்தும் எந்தவொரு விடயத்தையும் அவர்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்பது நிச்சயம்.

தமிழ்நதி:உங்களுடைய ஒரு கவிதைத் தொகுப்பிற்கு ‘தனிமையின் ஆயிரம் இறக்கைகள்’எனத் தலைப்பு வைத்திருக்கிறீர்கள். ‘பூனையைப் போல் அலையும் வெளிச்சம்’தொகுப்பிலும் நான் வாசித்தவரையில் ‘தனிமை’, ‘உள் தனிமை’ என்ற இரண்டு கவிதைகள் இருக்கக் கண்டேன். பெண்களின் தனிமை என்பது உங்களை மிகவும் உறுத்துவதாக அமைந்திருந்தது என்று எடுத்துக் கொள்ளலாமா?

குட்டி ரேவதி:நீங்கள் ஒருவர்தான் என்னிடம் இந்தக் கேள்வியைக் கேட்கிறீர்கள். எனக்கு என்றில்லை, நீங்களே கூட கொஞ்ச நேரத்திற்கு முன்னால் சொன்னீர்கள்… ‘நான் மிகவும் தனிமையில இருந்தேன்’ என்று. பொதுவாக ஆண்களால் பெண்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் ஒரே வெளி தனிமைதான். வீட்டின் ஏதாவது அறைகளிலொன்றில் குறிப்பாக சமையலறையில் பெண்களாகிய நாம் இருப்போம். அதுதான் வழமை. எல்லாப் பெண்களும் அளவில்லாத ஒரு தனிமையில் இருப்பதுபோல எனக்குத் தோன்றியது. இது என்னுடைய ஒரு கண்டுபிடிப்பு என்றுகூடச் சொல்லலாம். ‘தனிமையின் ஆயிரம் இறக்கைகள்’என்பது என்னுடைய ஒற்றைக்குரல் அல்ல. நான் தொடர்ந்து சந்தித்துக்கொண்டிருக்கும் பெண்களுடைய வெளி தனிமையால் மூழ்கடிக்கப்பட்ட ஒன்றாக இருக்கிறது. நீங்கள் குறிப்பிட்ட எல்லைகளைக் கடந்து போய்விடக்கூடாதென்பதற்காக ஆண்களால் உருவாக்கப்பட்டதுதான் இந்தச் சமையலறை என்ற வெளி. ‘வீட்டின் மூலையில் ஒரு சமையலறை’என்று அம்பைகூட ஒரு தொகுப்பு வெளியிட்டிருந்தார்கள். ஆணாதிக்கக் கட்டமைப்பின் இறுக்கத்தினால் உங்களுக்குக் கிடைக்கிற ஒரு தனிமை. ‘உடலே இல்லாத வெளியில் நாங்கள் மிதந்துகொண்டிருந்தோம்’என்று அம்பை ஓரிடத்தில் சொல்லியிருக்கிறார். அதாவது, உடலை விரிப்பதற்கான ஒரு வெளிகூட உங்களுக்குக் கிடையாது.எத்தனை பெண்கள் தங்களுடைய உடலைத் தாங்களே பார்த்திருப்பார்கள்…? மார்பகப் புற்றுநோயிலிருந்து தப்புவதற்கு அல்லது அதன் ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை பெறுவதற்கு பெண்கள் தங்கள் மார்பகங்களைச் சுயபரிசோதனை செய்துகொள்ளவேண்டும் என்று மருத்துவம் சொல்கிறது. ஆனால்,அவ்வாறு செய்வதுகூட ஒரு தகாத செயல் என்பதான எண்ணம் எப்படியோ எங்கள் மனங்களிலே படிந்திருக்கிறது. எங்களை நாங்கள் பார்க்கக் கூச்சப்படுகிறோம் என்று சில மாணவிகள் என்னோடு பேசியபோது சொன்னார்கள். ஏனென்றால், நம்முடைய உடலில் நமக்கு உரிமையில்லை… அது வேறொருவருக்கு உடமையானது என்ற எண்ணம் விதைக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் நாளின் இருபத்துநான்கு மணித்தியாலமும் நாம் உடலைப்பற்றியே சிந்தித்துக்கொண்டிருக்க வேண்டும் - அதாவது, இந்த உடலை வேற்று ஆட்கள் யாரும் பார்த்துவிடக்கூடாதே என்று என்று பொத்திப் பொத்தி வைத்துக்கொண்டிருக்க வேண்டும். பாலியல் விகற்பத்திற்கு ஆட்பட்டுவிடாமல் உடலைப் பாதுகாத்துக்கொள் என்று அடித்துச் சொல்லப்படுகிறது.இதெல்லாம் இயல்பாகவே ஒரு தனிமைக்கு இட்டுச்செல்கிறது. உங்களைச் சுற்றி எத்தனையோ பேர் இருக்கலாம். ஆனால், எல்லாவற்றையும் எல்லோருடனும் பகிர்ந்துகொள்ளும் உரிமை மறுக்கப்பட்டிருக்கிறது. ஆக மொத்தத்தில் உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் வெளி அறையின் தனிமைதான். அந்தத் தனிமையைக் கட்டியமைப்பதற்கான விடயங்கள்தான் குடும்பம்,சாதி,மதம் போன்றவை. இவற்றினடிப்படையில்தான் நான் தனிமையை முக்கியமான பேசுபொருளாகப் பார்க்கிறேன்.

தமிழ்நதி:உங்களுடைய அடுத்த கவிதைத் தொகுப்பைப் பற்றிச் சொல்லுங்களேன்.

குட்டி ரேவதி: ‘உடலின் கதவு’என்பது அதன் தலைப்பு. அந்தப் பெயரைப் பார்த்ததும் உறுப்பைச் சார்ந்தது அப்படியென்றுதான் எல்லோரும் நினைப்பார்கள். ஆனால், அது ஒரு சொல்லாக, ஒரு முத்தமாக, ஒரு அனுபவமாக, நல்ல கலந்துரையாடலாக இருக்கலாம். அது உங்கள் உடலைத் திறந்துகொடுக்கலாம். அந்தத் தலைப்பிலே உண்மையில் ஒரு கவிதைகூட இருக்காது. அந்தத் தலைப்பின் சாயலை பல கவிதைகள் கொண்டிருக்கும். இப்போது நான் செய்துகொண்டிருக்கும் வேலைக்கு, பயணத்துக்கு அந்தத் தலைப்பு பொருத்தமாக இருக்குமென்று தோன்றியது. துயரமான ஒரு தருணத்தில் வருகிற தோழியின் தொலைபேசி அழைப்பும் விசாரிப்பும் ஒரு கண்ணீர்த்துளியாக கன்னத்தில் உருள்கிறபோது அந்த ஒரு விசாரிப்பு உடலின் கதவாக அமைகிறது அல்லவா? அந்த முக்கியமான தருணங்களின் நெகிழ்வைக் கருதித்தான் அந்தத் தலைப்பை வைத்திருக்கிறேன்.

தமிழ்நதி:பொதுவாக உங்களுடைய கவிதைகளிலே ஒரு காட்சிப்படுத்தலைக் காணமுடிகிறது. கவிதை மொழியில் இது எப்படிச் சாத்தியமாகிறது?

குட்டி ரேவதி:உண்மையில் ‘காட்சிப்படுத்தல்’என்ற இந்தப் படிமத்தைத் தமிழில் தொடக்கிவைத்தவர் பிரமிள்தான். படிமம் என்றால் ஒன்றின்மீது ஒன்று படிந்து வார்த்தையை அர்த்தப்படுத்துவது என்று பொருள். கவிஞன் வார்த்தை அடுக்குகளை மூடி மூடி ஒரு காட்சியிலிருந்து அல்லது ஒரு படைப்பிலிருந்து வெளியே வருகிறான். கவிஞனால் மூடப்பட்ட அடுக்குகளைக் கலைத்துக் கலைத்துப் போட்டு அந்தக் காட்சியைக் கண்டுபிடிப்பவனாக வாசகன் இருக்கிறான். நவீன கவிதையில் காட்சியைப் பிரதானப்படுத்தி அதற்கான சொல்வீச்சைத் தேர்ந்தெடுக்கும்போது பொருளற்ற சொற்களையல்லாமல் கூர்மையான சொற்களைக் கவனமாகத் தேர்ந்தெடுக்கவேண்டும். இல்லையென்றால் படிமத்தின் நோக்கம் அடிபட்டுப்போகிறது. இந்தக் காட்சிப்படுத்தலுக்கு தமிழில் நீண்ட மரபு இருக்கிறது. தமிழர்கள் மிகுந்த அழகியல்வாதிகளாக இருந்திருக்கிறார்கள். திராவிட இயக்கங்கள் வந்த பிறகு இந்த அழகியல் என்பது அற்றுப்போய்விட்டது என்று சொல்லலாம். அழகியல் என்பது ஆழத்திலிருந்து மலர்வது, அதை ஒரு ஒப்பனை என்பதாகப் பார்க்கப் பழகியிருக்கிறார்கள். நீங்கள் தீவிரமாக ஒரு விடயத்தில் ஈடுபடும்போது அதன் இறுதி விளைவாகக் கிடைப்பதுதான் அழகியல் என்றும் சொல்லலாம். படிமம், காட்சிப்படுத்தல், அதற்கான சொல் தேடுதல் என்பதன் வழியாக அழகியலைச் சாத்தியப்படுத்தலாம் என்று நினைக்கிறேன்.

தமிழ்நதி:உங்கள் மனதில் இருக்கிற கவிதையை உங்களால் வார்த்தைகளில் முழுமையாக வெளிக்கொணர முடிகிறதா?

குட்டி ரேவதி: அது மிகவும் கடினம். எல்லா இலக்கியவாதிகளும் சொல்வார்கள் நாங்கள் நினைத்த கவிதையை எழுதவேயில்லை என்று. அது அப்படியே அழிந்துபோய்விடுவதுமில்லை. அதனுடைய சாரம் காத்திருந்து வேறொரு கவிதையில் வேறொரு வடிவத்தில் வெளிப்படும். அதற்கு நாங்கள் கவிதையின் பாதையிலேயே பயணித்துக்கொண்டிருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால்தான் ஆழத்திலிருக்கும் அந்தக் கவிதையின் கவித்துவத்தை நாங்கள் வெளியில் கொண்டுவர முடியும்.சில கவிதை வரிகள் சட்டென்று வந்து விழுந்துவிடும். சில நேரங்களில் திருத்தங்கள் செய்யவேண்டியேற்படும். நிறைய திருத்தங்களை வேண்டி நிற்கும் கவிதையை நான் விட்டுவிடுவேன். கவிதையை எழுதுபவர்தான் முதல் விமர்சகராக இருக்க முடியும். தமிழில் சுய விமர்சன மரபு என்ற ஒன்று இல்லாமற் போனதுதான் பொதுவாக எல்லா இலக்கியங்களுமே நலிந்து போவதற்கான காரணமாக இருந்திருக்கிறது.

நிறைவு

மழையின் இரவுகளில் புத்தகங்கள் திறக்கப்படுகின்றன

மழையின் இரவுகளில்தாம் புத்தகங்கள் திறக்கப்படுகின்றன
பிரபஞ்சத்தின் மிகச் சிறந்த நாவல்களிலுள்ள
கதைமாந்தர்களான முதிய கிழவனும் அகதிப் பெண்ணும்
ஆட்டுக்குட்டியும் போலீஸ்காரனும்
தங்கள் கதைகளிலிருந்து வெளியேறி
நகரை உலா வருகின்றனர்
வாசகர்களோ சாலை நடைபாதைகளின் தாழ்வாரங்களில்
ஒதுங்கி நிற்கின்றனர் மழையின் கூச்சல் ஓயட்டுமென
அந்த அகதிப்பெண் தனது உடலின் ரசம்
புத்தகச்சுவரெல்லாம் வழியக் கீறி வெளியேறி
மழை பெருகிய வழிகளை நீந்திக் கடக்கிறாள்
காமத்தின் சாரல் முகத்தைக் கிழிக்கத்
தனியே கதைகளுக்குள் உறங்கும் கன்னிப்பெண்களும் ஏராளம்
மழைக்கு ஒதுங்கிய புறாவும்
இப்படித்தான் படைப்பாளியின் கதைக்குள் நுழைந்தது
புத்தகங்கள் நனையாமலிருக்க ஜன்னல் கதவுகளை மூடும்
அத்தோல் நரைத்த கைகள்
தனது அடுத்த புனைவை நெய்யத் துடிக்கின்றன

‘முலைகள்’ கவிதைத் தொகுப்பிலிருந்து.

தமிழ்நதியின் பக்கங்களில் இருந்து 

2 comments:

VINCY said...

அருமை

Murali said...

Very good interview... Keep it up. But nothing asked about leena?? forgot?Murali...
chennai

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்