/* up Facebook

Feb 7, 2010

தடைகளை வென்ற போராளி - டேனிஸ் வின்சென்ட் புருட்டஸ்

தமிழில்: ஆனந்த செல்வி

பிறப்புக்கு காரணம் இருவேறு பாலினரின் சங்கமம் மட்டுமே என்று சொல்லி நிறுத்திக் கொள்ளலாம் ஆனால் ஒரு கவிஞனின் பிறப்புக்கு சுற்றுச் சூழலும் சமூக அமைப்பும் மிகப் பெரிய காரணமாக அமைவதையும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். அதிலும் வாழ்க்கையை போராட்டமாக்கிக் கொண்டு வாழும் கவிஞர்களின் பிறப்பு நீண்ட இடைவெளிகளில் மட்டுமே சாத்தியம்.

கவிதைகளின் பிறப்பு நிகழ்வது ஒரு சாதாரண களத்தில்தான். கவிதைகளை உணர்ந்தவர்கள், கவிதைகளை பெற்றெடுக்கிறார்கள். எழுதுகோல் பிடிக்காத, எழுத்தின் வளைவுகளைத் தெரியாத எத்தனையோ மகாக் கவிஞர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். கவிதை போல் வாழ்க்கைக்கு தவமிருப்போர் மத்தியில் கவிதையாகவே, கவிதைக்காகவே வாழ்ந்தவர்களும் உண்டு. கவிதை என்பது ஒரு விண்மீனை செதுக்கி விண்ணில் செலுத்துவது போன்றதாகும். ஆனால் இதனை வியர்வையை வழித்து வீசும் ஒரு சிறு பொழுதில் செய்துவிடும் வித்தக கவிஞர்களின் வீர்யத்தை என்னவென்று வியப்பது.

கண்ணைக் கட்டி காட்டில் விட்டால் கூட ஒருவர் வலமாக இடமாக கால்போன திசையில் மனக்கண்ணால் போய் விடலாம். ஆனால் இருகைகளின் கட்டை விரல்களை வெட்டி விட்டால் என்ன செய்ய முடியும்? இவ்வாறு அரசின் அடக்குமுறையால் ஊனப் படுத்தப்பட்ட நிலையிலும் தடைகள் என்னும் கனங்களால் அமுக்கி வைக்கப்பட்ட நிலையிலும் முழங்கிக் கொண்டிருந்த கவிஞன் தான் டேனிஸ் வின்சென்ட் புருட்டஸ்.

டேனிஸ் வின்சென்ட் புருட்டஸ் நவம்பர் மாதம் 28ம் தேதி 1924ம் ஆண்டு தற்போது ஹராரே என்று அழைக்கப்படும் பகுதியில் பிறந்தார். புருட்டஸ் தென் ஆப்ரிக்காவில் தனது கல்வி பயணத்தை துவங்கி போர்ட் ஹாரே பல்கலைக் கழகத்தில் இளங்கலைப் பட்டத்தை பெற்றார். இவர் பள்ளிகளில் ஆப்ரிக்கன் மற்றும் ஆங்கில மொழியைப் பயிற்றுவித்தார்.

புருட்டஸ் தீவிர போராளியாக விளங்கினார். 195060களில் இவர் சவுத் ஆப்ரிக்கா நான்ரேசியல் ஒலிம்பிக் கமிட்டியின் தலைவராக இருந்தார். இவருடைய வெளிப்படையான பேச்சு மற்றும் இன விடுதலைக்கான குரலின் காரணமாக சர்வதேசிய விளையாட்டுப் போட்டிகளிலிருந்து தென் ஆப்ரிக்கா விலக்கப்பட்டது. இவர் பொதுக் கூட்டங்களில் கலந்து கொள்வது தடை செய்யப்பட்டு கைதும் செய்யப்பட்டார்.

ஜாமீன் பெற்று தப்பிக்க முனைகையில் மீண்டும் கைது செய்யப்பட்டார். மீண்டுமொரு முறை தப்பிக்க முனைகையில் இவர் பின்புறமாக சுடப்பட்டு பிடிக்கப்பட்டார். புருட்டஸ் சுமார் பதினெட்டு மாதங்கள் கடுமையான வேலைகளுடனாக தண்டனையை ரோபன் தீவு சிறையில் அனுபவித்தார். இந்தக் காலக்கட்டத்தில் நெல்சன் மண்டேலா, வால்டர் சிஸ்லு மற்றும் கோவன் எம்பெக்கி ஆகியோரும் இவருடன் சிறையிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறையில் கடுமையான வேலையாலும் அவ்வப்போதான உடல் சித்திரவதைகளாலும் சிதைந்து வெளிவந்த புருட்டஸை பள்ளியில் கற்பிக்க, எழுத, படைப்புகளை வெளியிட, அரசியல் மற்றும் சமூக பொதுக் கூட்டங்களில் கலந்துகொள்ள மற்றும் விட்வாட்டர் ஸ்டிராண்ட் பல்கலைக்கழகத்தில் கற்று வந்த சட்டப்படிப்பையும் தொடர என அனைத்திற்கும் தடை விதிக்கப்பட்டார்.

புருட்டஸ் 1966ல் தென் ஆப்ரிக்காவை விட்டு வெளியேறினார். இங்கிலாந்தில் சிறிது காலம் இருந்து விட்டு அமெரிக்கா சென்றார், அங்கு டென்வெர் பல்கலைக் கழகத்தில் பணியாற்றினார். 1971ல் ஆப்ரிக்க இலக்கியப் பேராசிரியராக வடமேற்கு பல்கலைக் கழகத்தில் பணியாற்றினார். தற்போது அவர் பிட்ஸ்பர்க் மற்றும் பென்சில்வேனியா பல்கலைக் கழகங்களில் சிறப்பு பேராசிரியராக இருக்கிறார்.

எத்தனை தான் அடக்குமுறைகளும் தடைகளும் வந்த போதிலும் அவர் தனது குரலை தாழ்த்திக் கொண்டதில்லை. தனது கவிதைகளுடன், கவிதைகள் தாமாகவே தேர்ந்து கொண்ட வார்த்தைகளுடன் சமரசம் செய்து கொண்டதே இல்லை. இவரது கவிதைகளில் கெஞ்சல்களும், புலம்பல்களும் இல்லாமல் பார்த்துக் கொண்டார்.

மரபுக் கவிதை நடையும் நவீனக் கவிதைகளின் உத்திகளையும் இவர் கடை பிடித்திருப்பது கவிதைகளை வாசிக்கையில் தெரிகிறது. வடிவங்களையும் படிமங்களையும் வலியத் திணிக்கும் முயற்சியில் இவர் ஈடுபட்டதேயில்லை. கவிதைகளைக் கூட பிதுக்கி எடுத்ததில்லை. நெருப்பிலிட்ட உலோகம் பழுத்து சிவப்பதைப் போல் பிரச்சனைகளில் உழன்ற இவருக்கு கவிதை என்பது ஊற்றுக் கசிவுதான்.

1962ல் இவர் சிறையிலிருக்கையில் முதல் கவிதைத் தொகுதி வெளியானது. இந்தப் புத்தகத்திற்கு எம்பெரி கவிதை பரிசு அறிவிக்கப்பட்டத. ஆனால் கருப்பர்களின் கவிதை என்ற பாராபட்சத்துடன் இப்பரிசு அறிவிக்கப்பட்டதை அறிந்ததும் பரிசை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டார். இவரது கவிதைகள் எதார்த்தங்களையும், மக்கள் சார் பிரச்சனைகளையும் வெளிப்படுத்தின. கவிதைத் தொகுதிகள் உட்பட சுமார் பத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் வெளிவந்துள்ளன.

இவரது கவிதைகள் தென் ஆப்ரிக்காவில் தடை விதிக்கப்ட்டிருந்த காரணத்தால் அனைத்து சிறப்பு தகுதிகள் இருந்த போதிலும் பள்ளிகள் மற்றும் கல்லூரி பாடங்களில் வைக்கப்படவில்லை. 1990களில் இவர்மீதான தடைகள் தளர்க்கப்பட்ட நிலையில் தென் ஆப்ரிக்கா வந்தார். பலரும் அறியாத, கொண்டாடப்படாத ஒரு பெரும் கவிஞர் மிகச் சாதரணமாக தன் தாய்நாடு திரும்பினார். அங்கீகாரம் பெறவில்லை என்றாலும் தென் ஆப்ரிக்காவின் பெருங்கவிகளில் டேனிஸ் புருட்டஸ் முக்கிய இடம் வகிக்கிறார்.

தற்போது இவர் ஆப்ரிக்க இலக்கியம், ஆப்ரிக்க அரசியல், உலக அமைப்புகளில் ஆப்ரிக்காவுக்கான இடம், கவிதை மற்றும் எழுத்து என அனைத்தையும் உலக அரங்கில் வெளிச்சமிட்டு காட்டும் பணியில் தீவிரமாய் உள்ளார். உலக அரங்கில் தன் இன மக்களுக்கான அங்கீகாரம் பெற தீவிரமாக போராடி வருகிறார்.

நான் பேசியாக வேண்டும்

நான் பேசியாக வேண்டும்
(இதுவே என் ஆசை)
உங்கள் காது அறைகளில்
உங்கள் அமைதி கணங்களில்
உங்கள் இதயம் பதிலளிக்க
வார்த்தை தேடுகையில்
உங்கள் மனக்குகைகளில்
தடையின்றி எதிரொலிக்க வேண்டும்

நான் பேசியாக வேண்டும்
பெருஞ் சத்தத்துடன்
(இதுவே என் ஆசை)
உங்கள் காது அறைகளில்
உங்கள் அமைதி கணங்களில்
வார்த்தைகள் எதிரொலிக்க வேண்டும்

அல்லது உங்கள் இதயம் பதிலளிக்க
உதிரத்தில் உண்மைகள் விவாதிக்க
நம்பிக்கையோ நடவடிக்கையோ
வார்த்தைகள் வேண்டும்
அதனால்
உங்கள் மனக்குகைகளில்
தடையில்லாமல்
எதிரொலிக்கட்டும்
என் ஒலிகள்

புலம் பெயர்ந்தவன்

நாடுகடத்தப்பட்டவன்
தேசாந்திரி
நாடோடிப் பாடகன்
(எப்படியும் அழைக்கட்டும்)

மென்மையானவன் நான்
அமைதியானவன் நான்
மென்நடை பொடுபவன்
திட்டங்களில் லயித்து
இழிவுகளை இன்புற்றேற்பவன்

இதய அறைகளையும்
மூளையும் நிறைக்கும் நம்பிக்கை
ஆனால்
அமைதியான கண்களுக்குப் பின்
ஓங்கி ஒலிக்கும்
கூக்குரல்களும் சைரன்களும்

சிறப்பு சிறை

அங்கொரு நிழல் இருந்தது
மங்கி இருண்ட சிறையில்
கூடுதலாய் ஒரு நிழல்
அந்த நிழல்கள், எப்படியோ
எங்கும் கலையாது
என்னையே வட்டமிட்டன
அந்த கிழட்டு மனிதனின்
பரபரப்பான உடலை மீறி
குளிர்பார்வை பார்த்தது
எப்பொழுதும் விடா முயற்சியை
பெரு நம்பிக்கையை, உழைப்பை
வலியுறுத்தியபடி

நன்றி: அணி

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்