/* up Facebook

Feb 5, 2010

நளினி ஜமீலாவிடம் சில கேள்விகள்

கடந்த வாரம் பொள்ளாச்சி சென்றிருந்தேன். சுழி மாற்று இலக்கிய களத்தின் 18-ம் அமர்வு சுழி அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அன்றைய அமர்விற்கான பேச்சாளர் நளினி ஜமீலா. நளினியிடம் தனியே உரையாடிக் கொண்டிருக்கும் போது என்னால் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கான நளினியின் பதில்களும் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.

உங்கள் பெயர் உண்மையானதா இல்லை புனைப் பெயரா ?

(புன்னகைத்தவாறே என்னுடன் கலந்துரையாட உங்களைப் போன்ற இளைஞர்கள் வருவது சந்தோஷத்திற்குரியது என்றார்).

இது என்னுடைய உண்மையான பெயர்தான். நான் இந்துவாக இருந்து பின்பு முஸ்லீம் மதத்திற்கு மாறியவள். எழுத வேண்டும் என ஆர்வம் வந்ததும், புனைப் பெயர் வைக்கவேண்டும் என நண்பர்கள் கூறினர். வேறு பெயர்கள் வைத்து என்னை மறைத்துக்கொள்ள விரும்பாததால், என்னுடைய இரண்டு பெயர்களையும் இணைத்து, நளினி ஜமீலா என வைத்துக்கொண்டேன்.

முதல்முறை பாலியல் தொழிலுக்குச் செல்லும்போது உங்கள் மனநிலை?

நான் முதன்முதலில் பாலியல் தொழிலுக்குச் சென்றது என்னுடைய 23வது வயதில். அப்போது ஆண்கள் பாலியல் தேவைகளைத் தீர்ப்பதற்குக் காசு தருவார்கள் என எனக்கு தெரியாது. என் தோழி மூலம் அறிந்துகொண்ட பின், அதிர்ச்சி மற்றும் அந்த Thrill எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

நான் அப்போது ஒரு கிராமத்துப் பெண். கிராமத்துப் பெண்ணுக்கே உள்ள மனநிலையில்தான் என் முதல் வாடிக்கையாளரை அணுகினேன்.

முதல் முறையாக எந்த இடத்தில் உங்கள் வாடிக்கையாளரை சந்தித்தீர்கள்?

திருச்சூர் முனிசிபாலிட்டி ஆபீஸ்க்கு எதிரில் தான் என்னுடைய 23வது வயதில் முதல்முறை பாலியல் தொழிலாளியாக, என் முதல் வாடிக்கையாளரைப் பெற்றது.

முதல்முறை ஒரு ஆணின் பாலியல் தேவைகளைப் பூர்த்தி செய்ததும் உங்கள் மனநிலை எப்படி இருந்தது?

மனநிலைகளைப் பற்றி சிந்திக்கும் அளவு, அடுத்த நாள் காலை அத்தனை சுவாரஸ்யமாக இருக்கவில்லை. இரவு முழுதும் நானும் என் முதல் வாடிக்கையாளரும் சரி சமமாக உட்கார்ந்து மது அருந்தினோம். அவர் எனக்கு நீண்ட கதைகள் சொல்லிக்கொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில் அவரால் அதற்கு மேல் மது அருந்த முடியவில்லை. ஆனால் நான் நீண்ட நேரம் மது அருந்திவிட்டுதான் கலவிக்குத் தயாரானேன். கலவிக்கு பின்பு கூட அவரும் நானும் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தோம். அப்போதும் எனக்கு நிறைய கதைகள் சொல்லிக்கொண்டே இருந்தார். அதிகாலை ஒரு 4.30 அல்லது 5 மணி இருக்கும் என நினைக்கிறேன். அதே ஆள் தன்னுடைய சுய முகத்தைக் காட்டினார். என்னைப் போலீஸில் பிடித்துக்கொடுத்தார். அந்த நேரத்தில் அத்தனை கொடுமையாக இருந்தது அவர் முகம். பின்பு தன்னை ஒரு போலீஸ் உயரதிகாரியெனக் காட்டிக்கொண்டார். என்னை பற்றித் தன் சக போலீஸிடம் சொல்லும் போது,“இவ எனக்கு சரி சமமாய் உட்கார்ந்து குடிக்கிறாள், நல்லா அடிங்க இவளை”, என்று சொல்லிவிட்டுச் சென்றார். என்னை மிகுந்த துன்பத்திற்கும் மன அதிர்விற்கும் உண்டாக்கின விஷயம் அது.

முதல் முறை பாலியல் தொழிலாளியாகப் போகும் போது, எந்த இரண்டு விஷயங்கள் உங்களுக்குப் பிரதானமாகப் பட்டது?

பணம், Thrill.

இந்த காலத்தில் இளைஞர்களிடம் பாலியல் தொடர்பான விழிப்புணர்வு எப்படி இருக்கிறது? நீங்கள் ஏதும் அறிவுரை சொன்னதுண்டா?

(சிரித்துக்கொண்டே)

பொதுவாக 25 வயதுக்குக் கீழிருக்கும் ஆண்களின் பாலியல் தேவைகளை நான் பூர்த்தி செய்வதில்லை. ஆனால் ஒருமுறை அனைத்தும் முடிந்ததும், ஒருவன் தனக்கு என்ன வயது இருக்கும் எனக் கேட்டான். நான் இருபத்தி எட்டு இருக்கும் என யூகத்தில் கூறினேன். அவனுக்கு இருபத்தி மூன்று என பல் இளித்தான். இளைஞர் என்று கேட்டதும் எனக்கு இது நியாபகம் வந்து விட்டது இளைஞர்களிடம் விழிப்புணர்வு இருக்கிறது. ஆனால் முறையான பாலியல் பற்றிய விழிப்புணர்வும், பெண்மையின் மனநிலை பற்றிய புரிந்துகொள்ளுதலும் இன்னும் அதிகம் தேவை என்றே நினைக்கிறேன்.

உங்களை இந்த சமுகத்தில் எந்த நிலை மனிதராக நினைக்கிறீர்கள்?

இந்த சமூகத்தைத் துப்புறவாக்கும் தொழிலாளியாக. துப்பறவு தொழிலாளி இல்லாத பட்சத்தில் இந்த ஊர் முழுக்க நாறி நாற்றமெடுக்கும் என உங்களுக்குத் தெரியும் என்றே நினைக்கிறேன்.

ஆண் பெண் பாலியல் சார்ந்த குணம் எப்படி?

ஆண்: பெண்ணை வெல்ல அல்லது தண்டிக்கப் பாலியல் தான் ஏற்றது என நினைக்கிறான்.

பெண்: தனக்குப்பிடித்த ஆண் தன்னுடன் மட்டுமே இருக்க வேண்டும் என நினைக்கும் போது, அவள் எடுக்கும் கடைசி அஸ்திரம் அவள் உடம்பு.

இது என் தனிப்பட்ட கருத்து மட்டுமே.

H.I.V பாதிக்கப்பட்டவர்களுக்கு உங்கள் அறிவுரை என்ன?

பிச்சைக்காரன் முதல் கோடீஸ்வரன் வரை அவர்களின் பாலியல் தேவையை நாங்கள் பூர்த்திசெய்கிறோம். முறையற்ற பாலியல் அறியாநிலையில் HIV யை பலர் வாங்கிக்கொள்கின்றனர். இது சொந்த தவறு என ஏற்றுக்கொண்டாலும், தன்னை அறியாமல் மற்றவரிடம் இருந்து பெறுதல். இதுதான் கொடுமையின் உச்சம். இவர்கள் மன தைரியத்துடன் இருக்க வேண்டும். முறையாக மருந்துகளை எடுத்துக்கொள்ளவேண்டும். HIVயால் பாதிக்கப்பட்டவருக்கு மற்றவர்கள் மானசீகமாய் உதவ வேண்டும். அவர்களுக்குத் தேவையானது அன்பும் அரவணைப்பும்தான். இதனைத் தவிர்க்க பாதுகாப்பான உடலுறவு சிறந்தது.

முறை தவறிய உறவை ஆதறிக்கிறீர்களா?

நிச்சயமாக இல்லை.

குடும்பப் பெண்ணை விட ஒரு பாலியல் தொழிலாளிக்கு நிறைய சுதந்திரம் இருக்கிறது என்பது என் பார்வை. இதைப் பற்றிய உங்கள் கருத்து என்ன?

ஆமாம், நானும் இதை ஏற்கிறேன். முன்பு முச்சந்தியில் நின்று நானும் சாராயம் குடித்திருக்கிறேன். அந்த நேரத்தில் நான்கு ஆண்கள் சாராயம் வாங்கிக்கொண்டு குடிக்க மறைவான இடம் நோக்கி செல்லும் போது ஒரு பெண்ணாகிய நான் ஒரு ஸ்டைலாய் சாரயத்தை கடை முன்னாடியே வாங்கி கடை முன்னாடியே பிரித்து அங்கேயே குடித்ததெல்லாம் நடந்திருக்கிறது. ஆண்களுக்கு சரி சமாமாக நடந்து கொண்டதாய் என்னால் இதை கூற முடியும். ஆனால் சுதந்திரம் என்று இதை மட்டும் குறிப்பிடவில்லை. குடும்பப் பெண்களை விட சுதந்திரமாக இருந்ததற்கு இது ஒரு உதாரணம்.

கேரளாவில் உங்கள் நண்பர்கள், சுற்றத்தாரின் பார்வையில் நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?

அவர்கள் ஒரு தவிப்பு நிலையிலேயே என்னை அணுகுகின்றனர். எங்கே அவர்களைப் பற்றியும் நான் எழுதி விடுவேனோ என்று ஒரு பயம் அவர்களிடம் இருப்பதை நான் உணருகிறேன்.

எந்த வித அறிமுகமும் இல்லாத ஆணுடன் முதல் சந்திப்பிலேயே ஒரு கட்டம் தாண்டி, அடுத்த கட்டமான உடல் இனைவு என்பது ஒரு பெண்ணுக்கு மிகக் கடினமான விஷயமாக இருக்கும் போது, இதை இவ்வளவு எளிதாக எடுத்துக்கொண்ட உங்களுக்கு எதைக் கண்டால் பயம், அல்லது தயக்கம்?

எனக்கு ஸ்கூட்டரில் பின்னாடி அமர்ந்து போவது என்றால் பயமோ பயம். எப்படி இவர்கள் வாகனத்தை குறுக்கும் நெடுக்குமாய் ஓட்டுகிறார்கள் என்று நினைக்கும் போது பிரம்பிப்பே மிஞ்சுகிறது. (நான் சிரிப்பதைக் கண்டுகொண்டு நீங்களும் வேகமாக வாகனம் ஓட்டுவீர்களா என கேட்டார்)

அப்புறம் மரம் ஏறுவது என்றாலும் அதே அளவு பயம். ஒருவேளை வயது கொஞ்சம் குறைவாக இருந்தால் இரண்டாவது பயம் இல்லாமல் இருந்திருக்கலாம்.

சமீபத்திய மன வேதனை நிகழ்வு?

என் மூத்த மகள் சந்தோஷமாக நிம்மதியாக இருக்கிறாள். இரண்டாவது மகளின் வாழ்க்கை தத்தளித்துக்கொண்டிருக்கிறது. என்னுடைய தொழிலில் வரும் பணத்தை நோக்கியே இந்த அலைகழிப்புகள் என் மகள் வாழ்க்கையில்.

ஒரு பாலியல் தொழிலாளிக்கு உங்கள் அறிவுரை?

பாலியல் தொழிலாளி ஒரு Home Nurse மனநிலையில் இருந்து சேவை செய்ய வேண்டும். தன்னிடம் வரும் ஆணிடம் மானசீகமாய் உங்களின் அன்பையும் ஆதரவையும் புரிய வைக்க வேண்டும். (பாலியல் தேவை பூர்த்தி செய்ய வருபவர்களை Client அல்லது Customer என்று தான் அழைக்கிறார்). பாலியல் தேவை தேடி வரும் Client-க்கு அரவணைப்பு மிக முக்கியமானதும் அவசியமானதும். அவர்கள் பேசி முடியும் வரை பொறுமை காத்திருங்கள், அவர்களுக்கு நிறைய இருக்கிறது நம்மிடம் சொல்ல.

பாலியல் தேவையைப் பூர்த்தி செய்ய வரும் ஆண், பாலியல் தொழிலாளியின் மனம் கஷ்டப்படும் படி நடந்து கொண்டால் என்ன செய்ய வேண்டும்.?

நமக்கான மரியாதையை கண்டிப்பாக விட்டுத்தரக்கூடாது. பாலியல் தொழிலாளிகளை பெட்டி,தாட்டு, போக்கு என அழைப்பவர்களைக் கண்டால் எனக்கு அளவிற்கு மீறிய கோபம்தான் வரும். ஒன்றுக்கு இருமுறை சொல்ல வேண்டும். சொல்லியும் கேட்கவில்லை என்றால் தட்டி வைக்க வேண்டும்(புன்னகை). கடைசி வரை என்ன தட்டி வைக்க வேண்டும் என நானும் கேட்கவில்லை எப்படி தட்டி வைக்கவேண்டும் என அவர்களும் சொல்லவில்லை.

(தயங்கியபடியே நான் இருக்க, என்னைக் கண்டுகொண்டவராக, ”தயங்காம கேளுங்க”, என்றபிறகு கேட்ட கேள்வி இது)

இப்போதும் இந்தத் தொழிலில் இருக்கிறீர்களா?

இதிலென்ன இவ்வளவு தயக்கம். ஆமாம் இன்னும் இந்தத் தொழிலில் இருக்கிறேன். ஆனால் குறிப்பிட்ட வாடிக்கையாளர்களிடம் மட்டும்.

தமிழகத்தில் உங்களை ஆதரித்தவர்கள் யார்?

அந்த பட்டியல் நீண்டுகொண்டே போகும். யார் யார் என்று சொல்லி அதையும் விவாதப்பொருளாக்க நான் விரும்பவில்லை.

உங்களுடைய குறுப்படம் பற்றி?

அது பலரின் பேட்டிகளை ஒருங்கே தொகுக்கப்பட்ட ஒரு குறுப்படம். அவற்றை பற்றி நிறைய பேச வேண்டும். நேரம் இருக்கும் போது பேசலாம்.

வேறு எதாவது சொல்ல விரும்புகிறீர்களா?

சொல்ல நிறைய இருக்கிறது, நேரமில்லாத காரணத்தால் மீண்டும் ஒரு வணக்கத்துடன் நிறைவு செய்கிறேன்.


நன்றி - அடலேறு

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்