/* up Facebook

Jan 27, 2010

சவூதியில் இலங்கைப் பணிப்பெண்கள் தடை! - சுதா
இலங்கை உள்ளிட்ட சில நாடுகளிலிருந்து பணிப்பெண்களின் வருகையை தடை செய்ய சவூதி அரேபியா உத்தேசித்தேசித்துள்ளது.சவூதி அரேபிய வேலைவாய்ப்பு கொமிட்டியின் பிரதித் தலைவர் அலி அல் குரேஷி (Ali Al-Quraishi) விடுத்திருக்கும்அறிக்கையில் இலங்கை, வியட்நாம், கம்போடியா மற்றும் நேபாள் ஆகிய நாடுகள் இதில் அடங்குவதாக அறிவித்திருக்கிறார்.


தமது உள்ளூர் பண்பாட்டையும், மரபுகளையும் பேணுவதில் அவர்கள் தகைமைபெறவில்லையென அறிவித்திருக்கிறார். தமது நாடுகளை விட்டு வெளியேறுமுன் மேற்படி தகுதிகளின் அடிப்படையில் முறையாக தெரிவாகவில்லையென்றும். தமது பணிப்பெண் சந்தைக்கு தகுதியற்றவர்கள் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். மேலும் "அவர்கள் எமது கலாசார விதிகளுக்கு இசைவாக்கமடையக்கூட முயலவில்லை, அவர்கள் சிறுவர் கொலை உள்ளிட்ட குற்றச்செயல்களிலும் ஈடுபட்டிருக்கிறார்கள்" என குற்றஞ்சுமத்தியுள்ளார்.


ஜனாதிபதித் தேர்தல் செய்திகளின் மத்தியில் இது முக்கியமிழந்து போன செய்தியாக இருந்தாலும் கூட இலங்கையைப் பொறுத்தளவில் குறிப்பாக பெண்களைப் பொறுத்தளவில் இது மிகவும் முக்கியத்துவம் மிகுந்த செய்தியாகும்.


இலங்கையின் தேசிய வருவாயில் வெளிநாட்டில் வேலை செய்யும் பணிப்பெண்களின் வருவாய் முக்கியமான பங்கு வகிக்கிறது. திறந்த பொருளாதாரக் கொள்கையின் விளைவாக 1977இற்குப் பின் வெளிநாட்டுப் பணிப்பெண்கள் எனும் தொழிற்பிரிவினர் உருவானார்கள். வருடாந்தம் ஏறத்தாழ ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வருவாயை ஏற்படுத்துகின்றனர் மத்திய கிழக்குக்குச் செல்லும் பணிப்பெண்கள்.


அதிர்ச்சி, ஆச்சரியத் தரவுகள்
சுமார் ஒரு லட்சம் பணிப்பெண்கள் வருடாந்தம் மத்திய கிழக்குக்கு மாத்திரம் செல்கின்றனர்.
குவைத், சவுதி அரேபியா, கட்டார், டுபாய் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் மாத்திரம் 800,000 (எட்டு லட்சம்) பணிப்பெண்கள் பணியாற்றி வருகின்றனர்.இதை விட இத்தாலி, சைப்பிரஸ் இன்னும் சில ஆசிய நாடுகள் உட்பட பார்த்தால் சுமாராக ஒரு மில்லியன் இலங்கைப் பெண்கள், பணிப்பெண்களாக வேலை செய்கின்றனர். இது இலங்கையின் சனத்தொகையில் 5 வீதமாகும். மொத்த இலங்கைப் பெண்களின் சனத்தொகையில் 10 வீதமாகும். மத்திய கிழக்கில் பணிபுரியும் ஆண்களின் எண்ணிக்கை சராசரியாக 50,000 மட்டுமே என்றும் தெரிவிக்கப்படுகிறது.வறுமை நிமித்தம் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரியும் இவர்களில் பலருக்கு அதிக ஆசை காட்டி வெளிநாடுகளுக்கு ஏஜன்சிகளால் அனுப்பப்படுகின்றனர். வட்டிக்கடன் பட்டு, இருக்கும் உடைமைகளை விற்று இடைத்தரகர்களிடம் பணத்தைக்கொட்டி பணிப்பெண்களாக அவர்கள் சென்றடைகின்றனர். கணிசமானோர் பண மொசக்காரர்களால் ஏமாற்றப்பட்ட கதைகளும் நிறையவே உள்ளன.


குறித்த ஒப்பந்தத்தின் படி அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படுவதுமில்லை, குறித்த நேரத்தை விட மேலதிகமாக பல மணிநேரங்கள் வலுக்கட்டாயமாக உழைப்பு சுரண்டப்படுகிறது. உணவு, உறைவிடம் கூட ஒப்பந்தங்களின் படி வழங்கப்படாமல் அவர்கள் திண்டாடுகின்றனர். இறுதியில் எதையும் சேமிக்க இயலாமல், குடும்பச் செலவுக்கும் பணம் அனுப்ப முடியாமல், நித்திரை பறிக்கப்பட்டு, உழைப்பு மோசமாக சுரண்டப்பட்டு எவரிடமும் முறையிட்டு தீர்வு பெற முடியாத நிலையில் விசா முடிய திருப்பி அனுப்பப்படுகின்றனர்.


பணிபுரியும் வீடுகளில் உள்ள ஆண்களால் பல சந்தர்ப்பங்களில் உடல், உள சித்திரவதைகளுக்கும், சில வேளைகளில் பாலியல் சுரண்டல்களுக்கும், வன்முறைகளுக்கும் உள்ளாகிவருகின்றனர். இது குறித்த செய்திகள் தினசரி பத்திரிகைகளில் நிறையவே வெளியாகின்றன.


இதன் காரணமாக நிர்கதியான நிலையில் இலங்கை தூதராலயங்களில் தினசரி பலர் தஞ்சம் புகின்றனர். தூதுவராலயங்கள் ஏற்பாடு செய்து தருகின்ற தற்காலிக கட்டடங்களில் படுக்க கூட வசதியற்ற அளவுக்கு பணிப்பெண்கள் குவிந்துகொண்டிருப்பது குறித்த செய்திகள் பல ஊடகங்களில் பல தடவைகள் வெளியாகியிருக்கின்றன.


இவை எல்லாவற்றிற்குப் பின்னும் பெண்கள் பணிப்பெண்களாக செல்வது குறையாமல் இருக்கின்றன. உள்ளுர் வறுமையைவிட இது மேல் என்றே நம்புகின்றனர். இத்தனை கொடுமைகளையும் கடந்து சம்பாதித்துவிடுவோம் என்ற இறுதி நம்பிக்கையும் தான்.


இலங்கைப் பணிப்பெண்களின் இறைமையும், உரிமையும் உத்தரவாதப்படுத்தப்பட வேண்டுமென்றும், பல பெண்கள், வேலை வழங்குனரால் துஷ்பிரயோகம் செய்யப்படுவதாகவும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக பொது முகாமையாளர் றுகுனகே (L.K. Ruhunage) கடந்த வாரம் ஜனவரி 21ஆம் திகதியன்று அறிவித்திருந்தார்.


சில சமீபத்திய உதாரணங்களையும் அவர் தெரிவித்திருந்தார்.

  • குவைத்தில் வீட்டு உரிமையாளரால் சித்திரவதை செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்ட நிலந்தி குணதிலக்கவின் கதை.
  • கடந்த 2009 டிசம்பர் மாதம் சவுதியில் வீட்டு உரிமையாளரால் கொலை செய்யப்பட்ட 26 வயதுடைய (மலையகம் கண்டியை சேர்ந்த பெண்) பாலகிருஸ்ணன் தர்சினியின். இவரின் சடலம் பல இடங்களில் தீக்காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டது. தான் தொடர்ந்தும் வீட்டுரிமையாளரால் தாக்கப்பட்டு வருவதாகவும், உடல் பலவீனமடைந்து வருவதாகவும் சில தினங்களுக்கு முன்னர் இலங்கையிலுள்ள தனது பெற்றோருக்கு அவர் அறிவித்திருக்கிறார். பணிபுரியத் தொடங்கி 7 மாதங்களில் இவர் கொல்லப்பட்டுள்ளார்.கடந்த 2009 ஆம் ஆண்டு மாத்திரம் மத்திய கிழக்கில் 330 இலங்கைப் பெண்கள் சடலங்களாக திரும்பியதாக இலங்கை வேலை வாய்ப்பு பணியகம் அறிவித்திருக்கிறது. மேலும் சவுதியில் மாத்திரம் தினசரி சராசரியாக 10 பணிப்பெண்கள் பணிபுரிந்த இடங்களில் இருந்து தப்பி வந்து தூதரகத்தில் தஞ்சம் புகுவதாக பணியகம் தெரிவிக்கிறது. சில பிணக்குகள் தீர்க்கப்பட்டாலும், ஏனையோர் திருப்பி நாட்டுக்கு அனுப்பப்படுவதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.


இவர்களில் பெரும்பாலானோர் பாஸ்போட் அல்லது அடையாள அட்டையோ கூட இல்லாத நிலையிலேயே வந்தடைந்துள்ளனர். திரும்பிச் செல்வதற்கான பணச் செலவுகளை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் உதவியுள்ளது.
மத்திய கிழக்குக்கு பணிப்பெண்களாக பணிபுரியும் பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, தாய்லாந்து நாட்டு பெண்களோடு ஒப்பிடுகையில் அதி குறைந்த சம்பளத்தையே இலங்கைப் பணிப் பெண்கள் பெற்று வந்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.கடந்த நவம்பர் மாதம் இந்தோனேசிய தொழில்வாய்ப்பு அமைச்சர் ( Muhaimin Iskandar) தமது நாட்டுப் பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிபுரியச் செல்வதை தடை செய்யப்போவதாக அறிவித்திருந்தார். இதற்கான காரணம் மோசமான வாழ்க்கை வசதியும், பெண்களின் மீதான மோசமான துஸ்பிரயோகமும் என அவர் அறிவித்திருந்தார்.


சவூதியின் "கலாசார பண்பாட்டு பேணல்" குறித்த அறிக்கையினால் விசனமடைந்த எகிப்து தொழில் அமைச்சர் தமது நாட்டிலிருந்து பணிப்பெண்களை அனுப்பப்போவதில்லை என்று ஜனவரி 16 அன்று அறிவித்திருக்கிறார்.


நாடுபிடித்து மக்களை சிறைசெய்து அடிமைகளாக கடத்திச்சென்று அவர்களை உறிஞ்செடுத்தது அன்றைய காலனித்துவ காலம். இன்றைய நவ காலனித்துவம் அப்படியல்ல சொந்த மக்களை தமது தலைவர்களே உறிஞ்செடுப்பதற்காக அனுப்பும் நவீன அடிமைமுறை இன்று.


பெண்கள் தமது வீடுகளில் கணவனுக்காகவும், குழந்தைகளுக்காகவும் உழைத்ததை விட வெளி உழைப்பிலும் ஈடுபட்டு குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய நிலை இன்றைய நவீன முதலாளித்துவ சமூக அமைப்பில் ஏற்பட்டு இருக்கிறது. இதனை இரட்டைச் சுமை என்கிறோம். இந்த இரு வகை உழைப்பு பெண்ணுக்கு ஏலவே இருந்த அடிமை நிலையை விட மேலதிகமான உடல் சுரண்டலுக்குள்ளாவதையே வாழ்வாகத் தந்துள்ளது.


இத்தனையும் போதாததற்கு சொந்த குடும்பத்தை பிரிந்து பரதேசம் சென்று அதே குடுபத்திற்காகவே தம்மை மேலும் உடல், உள ரீதியில் வருத்தி தம்மை அர்ப்பணிக்கின்றனர். ஆதிக்க சமூக அமைப்பு தமது அடிமைப்படுத்தலில் மாத்திரம் எந்த மாற்றத்தையும் செய்துகொள்ளவில்லை. வடிவத்தை மாத்திரம் மாற்றிக்கொண்டிருக்கிறது.
இலங்கைப் பணிப்பெண்கள் நவீன அடிமை முறையின் வடிவம்.


உசாத்துணைக்கும் மேலதிக தகவல்களுக்கும்

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்