/* up Facebook

Jan 26, 2010

பெண் கவிஞர்களின் உறவுப்பதிவுகள்- இரா. தமிழரசி
அறிவியல், தகவல் தொடர்பு, போக்குவரத்து, தொழில்நுட்பம் எனப் பல்வேறு துறைகளில் இந்த இருபத்தோராம் நூற்றாண்டு முன்னேறியிருப்பினும் உறவுகளைப் பேணும் நிலையில் மிகவும் பின்தங்கியே உள்ளது. பொருளாதார முன்னேத்திற்காகப் போராடும் நிலையும், நகரமயமான சூழலும், கூட்டுக்குடும்பச் சிதையும் பல்வேறு உடலில் உளவியல் ரீதியான சிக்கல்களுக்குக் காரணமாகவுள்ளன, இத்தகைய சிக்கல்களுக்கு உள்ளாகியுள்ள உறவுகளை, பெண் கவிஞர்களின் கவிதைகள்வழி ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.


தந்தை மகன் கட்டுப்படுத்தும் நிலை


தந்தை பெண் குழந்தைகளை நேசிக்கும் அதே அளவிற்குக் கட்டுப்படுத்துவராகவும், அடங்கி நடக்கப் பணிப்பவராகவும் உள்ளார் என்பதைக் கூறவரும் கனிமொழி,


அப்பா சொன்னாரென பள்ளிக்குச் சென்றேன்
தலை சீவினேன் சில நண்பர்களைத் தவிர்த்தேன்
சட்டை போட்டுக் கொண்டேன்
பல் துலக்கினேன் வழிபட்டேன்
கல்யாணம் கட்டிக் கொண்டேன் காத்திருக்கிறேன்
என் முறை வருமென்று
(கருவறை வாசனை, ப. 17)


பல்துலக்குதல், தலைசீவுதல், சட்டைபோடுதல் போன்ற அன்றாடக் கடமைகளைக் சுட்டிக்காட்டுவதோடு, நண்பர்களைத் தவிர்ப்பது, வாழ்க்கைத் துணையைத் தேர்வதுவரை அனைத்து முடிவுகளும் அவரால்தான் தீர்மானிக்கபடுகிறது. இன்றைக்கும் கூட தனக்கான முறைவரும் எனக்காத்திருக்கும் நிலையையே சுட்டுகிறது கவிதை. தம் மற்றொரு கவிதையிலும் ‘சிறைக்காவலராய் அப்பா' (கருவறை வாசனை, ப. 72) என்கிறார்.


வளர்கின்ற பருவத்தில் ஆண்களைப் போலவே
பெண்களும் தங்களின் ஆளுமையை
தனித்தன்மையை நிரூபித்துக் கொள்ள
ஆர்வமாயிருக்கிறார்கள். ஆனால் உடல் கூறு
வளர்ச்சி ஒன்றே போதும். சமூகத்தின்
அத்தனை வக்கிரங்களையும் அவளுக்கு
உணர்த்தி அவளைச் செயலிழக்கச்
செய்து விடுகிறது. அவள் வெறும் உடல்
பாரமாகத் தேங்கி விடுகிறாள்''
(பெண் வளர்ப்பும் வார்ப்பும் பக். 3738)


என்கிறார் பாரதி. இக்கூற்றும் கனிமொழியின் கருத்தையே சார்ந்துள்ளது. ஆணைச்சார்ந்து வாழும் வாழ்க்கை முறையும், இரண்டாம் தரமானவளாக அவள் வாழ நேர்வதை தனக்கான விரும்பங்களைத் தள்ளி வைத்து, அப்பா சொன்னாரென எல்லாம் செய்பவளாகவும் காட்டுகிறது கவிதை


நெருங்க முடியாத நிலை


பெரும்பாலான குடும்பங்களில் அப்பா என்பவர் எளிதில் நெருங்கமுடியாத இடைவெளயில் தான் இருப்பதையே பெருமையாகக் கருதுவர். இக்கருத்தை,


புகைப்படத்திற்காகச் சிரிக்கும் அப்பா
பக்கத்தில் அம்மா அதே அச்சத்தோடு
'
என்கிறார் தி. பரமேஸ்வரி, வீட்டில் இயல்பாக இல்லாத, இவர்போன்ற அப்பாக்களை அணுகி அதுவொன்றும் சொல்லமுடியாத நிலையிலேயே இன்றைய பெண்களின் நிலை உள்ளது. என்பதை விளக்குகிறது சுகிர்தராணியின் கவிதை


சமையலறை தேடி நீரருந்திவிட்டு திரும்பும்
அவருக்கு எதைச்சொல்லி
என் வயதை ஞாபகப்படுத்த ?
(கைப்பற்றி என் கனவுகேள் ப. 19)


எனக்கேள்வி எழுப்புகிறார். ஞாபகமறதியுள்ள தந்தைக்குச் சாவி, பேனா, கைக்குட்டை போன்ற பொருள்களை வெளிப்படையாகக் கூறி ஞாபகப்படுத்தும் மகளுக்குத் தன்னுடைய திருமண வயதை ஞாபகப்படுத்தத் தயக்கமாகவே உள்ளது. ஆண்மையச் சமூகத்தில் பெண்ணின் உணர்வுகளை வெளிப்படையாகச் சுட்டுதல் தவறான வழக்கம் எனக் கற்பிக்கப்பட்டிருப்பதே இதற்குக் காரணம்.


நெகிழ்ந்து இளகும் நிலை


இருமணம் இணைய வேண்டிய திருமண வாழ்வில் போலியான சடங்கு, சம்பிரதாயம், ஆடம்பரம் போன்றவற்றிற்காக நிறையவே செலவழிக்க நேர்கிறது. இத்தகைய விண்செலவுகள் இன்றியும் திருமணத்தை நடத்தலாம் எனும் விழைவைச் சுட்டுகிறது. இராஜலட்சுமியின் கவிதை


ஊணுறக்கம் அற்று பத்து நாட்களாய்
அலைந்து திரிந்து அப்பா
விழித்துக்கிடப்பார் ஓரமாய்....
விதை நெல்லை விற்றும்
விளைநிலத்தை விலைபேசியும்
தேற்றினார் ...
(எனக்கான காற்று ப. 50)


என திருமணத்திற்காக உழைத்துப் பணம் திரட்டி உளம் வதங்கிய பெற்றோரின் அழுகை, வேகமாய் ஒலித்த மங்கல இசையில் தொலைத்து போனதைச் சுட்டுகிறது. இவ்வாறு அல்லலுறும் பெற்றோரிடம், எதை அறிவிக்க இந்த விழா என்று கேள்வி எழுப்புகிறார் கவிஞர்.


பெற்றோருள், பெண் குழந்தையையே விரும்பும் தந்தையின் பாசப்பிணைப்பைக் காட்டுகிறது தமிழச்சியின் கவிதை. அத்தகைய தந்தையின் இழப்பை


சைக்கிள் விடக்கற்றுக் கொண்ட புதிதில்
மிடிமானம் தவறி விழுந்து
ஆடுசதை பிய்ந்த காயம் / ஆறும்வரை அலுக்காமல்
தூக்கிச்சுமந்த.../ ஒரு துக்க நாளில்
மரணம் தூக்கிப்போன / என் அப்பாவை
நினைத்து .... ''
(எஞ்சோட்டுப் பெண், ப. 168)


அழுவதைக் காட்டுகிறது கவிதை, எந்தவொரு இறப்பிற்குச் செல்லுகையிலும், தான் இழந்த நெருங்கிய உறவின் வலி, நெஞ்சைத் தாக்குவதை
அகற்றமுடியாது என்னும் அனுபவப்பதிவாய் அமைகிறது கவிதை. இவரின் மற்றொரு கவிதை நிறைமாதக் கருவோடு பயணிக்க நேர்கையில்
தாயுமானவனாய் இருந்த தந்தையின் நினைவைப் படம் பிடிக்கிறது.


தண்டோடு தலைகுனியும் / தாமரையின்
நிறைமாதச் சோர்வோடு / பயணித்த நான்
உறங்குவதற்கு இலகுவாக / உடைமாற்ற
யத்தனிக்கையில் / தள்ளாடி விழுந்து விடுவேனோ
எனும் / உள்ளார்ந்த / பதட்டத்தோடும்
உளியின் நுனியது / விரல்களில் படாது
துளையிடும் சிற்பியின் / கவனத்தோடும்'
(எஞ்சோட்டுப் பெண், ப. 76)


இரயில் வண்டியின் கதவுக்கு வெளிப்புறமிருந்து மகளைக் கவனிக்கும் தந்தையின் அக்கறையைச் சுட்டுகிறது கவிதை. அப்படி அவரால் பிடிக்கப்பட்ட கதவு எதுவெனத்தேடும் மகளின் சோகத்தைப் புலப்படுத்துகிறது கவிதை.


தாய் மகள் கட்டுப்படுத்தும் நிலை


குழந்தை வளரும் பொழுது, அவ்வப்பருவத்திற்கு ஏற்ற செயல்களைச் செய்யவேண்டுமே என வருந்தும் தாய், பருவமடைந்தவுடன் திடீரெனக் கட்டுப்படுத்த முற்படுகையில், அதுவே அவளின் வளர்ச்சியை முற்றிலுமாக முடக்கிப்போட ஏதுவாகிறது என்பதை,


மழலையாய்த் / தவழ்கையில் / முன் நகர்கையில்
மெல்லச் சுவர்பிடித்து / எழுந்து நிற்கையில்
நாலெட்டு எடுத்து வைக்கையில்
கைதட்டி ஆர்ப்பரிக்கும் அம்மா
சிறுவயதுப் பந்தயத்தில் / சிட்டாய்ப் பறந்தோடிப்
பெருமையுடன் பார்த்தாள்
வளர்ந்த பருவம் தாண்டுகையில்
விளையாடி முடித்து வீடு நுழைந்தவளை
வெளியில் போனால் / காலை உடைப்பேன் என்கிறாள்
(எனக்கான வெளிச்சம் ப. 53)


என்னும் தி. பரமேஸ்வரியின் கவிதை உணர்த்துகிறது. இளம்வயதில் பதக்கம் பெற்ற அவளை முறைப்படி ஊக்குவித்திருந்தால், பெரிய விளையாட்டு வீரர்களின் பட்டியலில் இடம் பிடித்திருக்கக்கூடும். ஆனால் மலரத்துடிக்கும் செடிக்கு. அடக்குமுறை என்னும் வெந்நீரே வேரில் ஊற்றப்படுகிறது என்பதைப் புலப்படுத்துகிறார் கவிஞர்


தாய் ஒத்துப்போகவியலாமை


இராமியச்சூழலில் வாழந்து பழகிய தாய் நகர்ப்புற சூழலில் வாழமுடியாமல் திண்டாடுவதை


வந்ததிருலிந்து பேராசைகளாய் ஒலித்தன
அம்மா ஆசைகள் / வாசல் தெளிக்க
மண்தரையும் / கோலம்போட முற்றம்
சாணி உருண்டையும் / பூசணிப்பூவும்
குளியலுக்கு / முழுவாளித் தண்ணியும்
சீரியலுக்குள் தொலையாமல் / ஆற அமர உட்கார்ந்து
கதைபேசசாயங்காலமும்
ஜன்னல் திறந்த ராத்துதூக்கமும் ''
(முத்தங்கள் தீர்ந்துவிட்டன, ப. 55)


என நீள்கிறது ஆண்டாள் பிரியதர்ஷினியின் கவிதை இப்படி இயல்பாய் எழும் தாயின் ஆசைகளைப் பேராசைகள் என்பதோடு, இவற்றுள் ஒன்றைக்கூட நிறைவேற்றவியலாமல், இறுதியாய்க்கேட்ட ஊருக்குப் போக ரிட்டர்ன் டிக்கட் வேண்டும் என்பதை மட்டுமே நிறைவேற்ற முடிந்ததை ஆதங்கத்தோடு வெளிப்படுத்துகிறார். பொருளாதாரத் தேவைகளுக்காகத் கிராமியச் சூழலில் வாழ்ந்த மகள் தன்னை மாற்றித் தகவமைத்துக்கொள்ள. கபடமும், சுயநலமும்கொண்ட நெருக்கடி மிகுந்த நகரத்து நாகரிகத்தோடு ஒன்ற முடியாத தாயின் மனநிலையைச் சுட்டுகிறது கவிதை.


தாய் மகன் விலகிப்போதல்


வளரிளம் பருவத்தில் ஆண் குழந்தைகள் பெற்றோரிடமிருந்து, அதுவும் குறிப்பாய்த் தாயிடமிருந்து விலகத் தொடங்கும் நிலையைச் சுட்டுகிறது ஆண்டாள் பிரியதர்ஷினியின் கவிதை.


அரும்பத் துவங்கியிருக்கும் / முதல் மீசையிலிருந்து
சொட்டுகிறது இன்னமும் / பால் வாசம்
இப்போதம் அறுபடாத / அரூபக்கொடியுடன்தான்
உலவுகிறான் / உடையும் விளிம்பிலிருக்கும்
குரலுடன் / எனது அடிவயிற்றுச் சூடுதேடிய
அவனின் நேற்றுகள் / இன்று நிறைந்திருக்கின்றன
ஆண்மைப் புதிர்களால்... (முத்தங்கள் தீர்ந்துவிட்டன ப. 12)


என்கிறார் கவிஞர். தாயின் தொடுவுணர்வைத் தயக்கத்துடன் எதிர்கொள்வதும், சில நேரங்களில் அவளை மடியிருத்தித் தைலம் தேய்த்தல் போன்ற அன்புப் பரிமாற்ற நிகழ்வுகளும் நடக்கின்றன. இருப்பினும் இத்தகைய விலகலால் உளம்வருந்தி, பிள்ளைகளால் உயிர்த்துடிக்கும், மன நிலையை, ஒருவழிப்பாதை அல்ல கர்ப்பம் என்னும் சொல்லாட்சி வழிச் சுட்டுகிறார்.


கணவன் மனைவி புரிதலின்மை


திருமணமான பெண், உரிமைகளைப் பெறக் கணவனிடம் போராடும் நிலையே பெரும்பான்மை. வற்பறுத்திப் பெறவேண்டிய சார்புநிலையே இன்றும் கூட அவளுக்குச் சாத்தியப்படுகிறது. இதை


வேற்×ர் சென்றுவிட்டுக் / கணவருடன் திரும்புகையில்
கண்ணில் படுகிறது அம்மா வீடு
அம்மாவைப் பார்க்கும் ஆசையில் / கெஞ்சியும்
மறுத்து நகர்கிறது வண்டி '' (எனக்கான வெளிச்சம் ப. 22)


என்கிறார் தி. பரமேஸ்வரி. பெற்றோரை உடன் வைத்துப் பேணக்கூடிய கடமை இருபாலருக்கும் உரியத என்றாலும் போகிறபோக்கில் பார்ப்பதற்குக் கூட கணவனைக் கெஞ்சவேண்டிய இரண்டாம் தரமான நிலையிலையே பெண்ணின் வாழ்க்கை அமைந்துள்ளதைச் சுட்டுகிறத கவிதை. இதையே


சமுதாயம் என்பது கூட்டு வாழ்க்கை, அதில்
ஆண், பெண் இருபாலரும் சம அளவில்
பங்கு பெறுகின்றனர். இருப்பினும்
ஆணின் செயலுக்கு ஒரு நீதியும், பெண்ணுக்கு
ஒரு நீதியும் கற்பிக்கிறத இந்தச் சமுதாயம் (இலக்கியத் தரவுகளில் மகளிர்பதிவுகள் பக். 85)


என்னும் வ. ருக்மணி அவர்களின் கூற்றும் இங்கே கருதத்தக்கது.


நம்பிக்கையின்மை


கணவன் மனைவி உறவு நம்பிக்கையோடு அமைந்துவிட்டால், இன்னல்களுக்கு அங்கு இடமேயில்லை, கணவனின் ஒழுகலாற்றை மனைவி நம்புவதபோல் மனைவியை நம்பும் கணவன் வாய்க்கப்பெறாமையை,


கதம்ப மாலையாய் / உன் தோள்களில்
உன் தோழியரின் பன்னகை
கதம்ப மாலைகள் கசங்காமலேயே
அனைக்க நினைக்கிறது / என் தோள்கள்...
................
பெண்ணுரிமை பேசும் / உன் எழுத்துக்கள்
என்னுரிமையை எப்போதம்
இருட்டடிப்பே செய்கின்றன.'' (நிழல்களைத் தேடி ப. 27)
என்னும் புதியமாதவியின் கவிதை புலப்படுத்துகிறது. பெண்ணின் தோழமை பெருமைக்குரியதாய் நினைக்கப்பெறாமையை ஏக்கத்தோடு பதிவு செய்கிறது மேற்சுட்டிய கவிதையின் தொடர்ச்சி.


தாய் குழந்தை: பணியினால் ஏற்படும் சிக்கல்


அரவணைப்பில் இருக்கவேண்டிய இளம் குழந்தையை வீட்டில் விட்டுவிட்டு அலுவலகம் செல்லும் தாயின் உணர்வை


செடி பார்க்கச் சொல்லி / சுவற்றில் பல்லி பாரென
பார்வை திரும்பி / மருத்துவமனை போவதாய்
பொய்யுரைத்து... / குழந்தையை ஏமாற்றி
அழவிட்டுச் செல்லும் / தாயின் வழித்தடங்கள்
தீப்பிடித்துக் கொள்கின்றன. (பிறகொருநாள் பக். 17)


என்னும் இளம்பிறையின் கவிதை சுட்டுகிறது. எத்தனையோ பொய்களைச் சொல்லி, ஏமாற்றி விட்டுத் தொடரும் பயணம். தீயில் நடப்பது போல் கொடுமையானது என்னும் தாய்மையுணர்வைக் காட்டுகிறது கவிதை. இவரே தம் மற்றொரு கவிதையில்,


ஓரடி... ஈரரடியுமாய் / நடக்கமுயன்று
தடுமாறி விழுந்தெழும் / கண்மணிச் செல்வத்தை
உறவினர் வீடொன்றில் / விட்டுவந்த
வயிற்றுப் பிழைப்பின் / மிச்சப்பொழுதகளில் (பிறகொருநாள் பக். 35)


என்னும் கவிதையில், அவன் விளையாடிப் போட்ட காராக'மூலையில் கிடப்பதைச் சுட்டுகிறார். தள்ளாடி விழும் மழலையைத் தாங்கிப் பிடிக்கவியலா தாயின் மனத்தள்ளாட்டத்தைப் புலப்பபடுத்துகிறது கவிதை. இவ்வாய்வால் அறியப்பெறும் உண்மைகள் ஈண்டு தொகுத்தளிக்கப் பெறுகின்றன.


முடிவுரை:  1. பெண் ஆணைச்சார்ந்து உரிமைகள் மறுக்கப்பட்டு இரண்டாம்தர நிலையில் வாழநேர்வதைப் புலப்படுத்துகின்றன கவிதைகள்.
  2. படித்த பெண்களுக்கும், ஆணை நெருங்க முடியாத நிலையும், தன்னுணர்வுகளை வெளிப்படையாகக் கூறவியலா மனத்தன்மையும் இன்னும் உள்ளதைக் காட்டுகின்றன கவிதைகள்.
  3.  தாயுமானவனாய் தந்தையாலும் மாறவியலும் என்பதையும் அத்தகைய ஒருவரின் இழப்பு ஏற்படுத்தும் பாதிப்பையும் உணர்த்துகின்றன.
  4. பெண் குழந்தைகளுக்கு விதிக்கும் கட்டுப்பாடுகளால் அவளின் திறமைகள் மழுங்கடிக்கப்படுவதையும், ஆண் குழந்தைகளின் விலகலை ஏற்கமுடியாத உளவியல் பாதிப்பையும் அறியமுடிகிறது.
  5.  மனைவி கணவன் மீது வைக்கும் நம்பிக்கையின் விழுக்காட்டளவிற்கு, கணவன் மனைவி மீது நம்பிக்கை வைப்பதில்லை என்பதை உணரமுடிகிறது.
  6. பொருளாதாரத் தேவையை ஈடுகட்டும் பெண் குழந்தை வளர்ப்பில், தன் கடமையை நிறைவேற்றவியலாமையும், நகர மயமான சூழலை முதியோர்களால் ஏற்க முடியாமையையும் அறிய முடிகிறது.நன்றி: அணி

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்