/* up Facebook

Jan 14, 2010

பெயல் மணக்கும் பொழுதும் அயல் நிலத்துக் கவிதையும்-சேரன்'பெயல் மணக்கும் பொழுது' எனும் ஆழமான, அர்த்தம் செறிந்த தலைப்புடன் ஈழப் பெண் கவிஞர்கள் கவிதைகள் தொகை நூல் ஒன்றை அ. மங்கை தொகுத்து வெளியிட்டுள்ளார். ஈழத் தமிழர்கள், இஸ்லாமியர் வாழ்வில் முக்கியமான மாற்றங்களும் சிதறல்களும் அலைவுகளும் இடம்பெற்று வரும் இந்தக் காலகட்டத்தில் தொண்ணூற்று மூன்று கவிஞர்களின் கவிதைகள், சிக்கலானதும் பல்வேறு முகங்களுடையதும் முரண்பாடுகளும் அவலமும் நிறைந்ததான ஈழ வாழ்வைப் பாடுகின்றன. தொகுதிக்கு வ. கீதா வழங்கியுள்ள சிறப்பான பின்னுரை கருத்தியல் சார்ந்து பெரும் முக்கியத்துவம் உடையது.


''தமிழ் பேசும் மக்களின் நிதர்சனங்களைச் சலனப்படுத்தி பெண்மை, பெண் ஒழுக்கம், கட்டுப்பாடு முதலியன குறித்து நமது மரபுகள் சலிக்காமல் முழங்கும் . . . செய்திகளைப் புரட்டிப்போட்டு நமது மனச்சாட்சிகளைத் தொடர்ந்து செயல்படவைக்கும் ஈழ வரலாற்றுக்கும் குறிப்பாக அவ்வரலாறு கண்டுள்ள பெண்ணியச் சொல்லுக்கும் வாக்கிற்கும் நாம் கடமைப்பட்டுள்ளோம்''


என்னும் அவரது முடிவுரையுடன் இந்தக் குறிப்பைத் தொடங்குவது சாலப் பொருத்தமாகும்.
போரும் தேசியவாதங்களும் தீவிரமாக ஆட்சி பெற்றுள்ள சூழலில் பெண்ணிய வாதங்களுக்கும் இவற்றுக்குமிடையிலான உறவுகள், முரண்கள்யாவை? பங்காளியாக, பாதிப்புற்றவளாக, போரில் குதித்தவளாக, பெண்களது வாழ்வும் அனுபவமும் கருத்தியல்களும் எவை? போன்ற கேள்விகள் கடந்த பல ஆண்டுகளாக விவாதிக்கப்பட்டு வந்துள்ளன. இந்தக் கேள்விகள் சிக்கலான பதில்களை எழுப்பவல்லன. இத்தகைய கேள்விகளுக்குரிய பதில்களை இனங்கண்டுகொள்வதில் பெண்களுடைய இலக்கியப் பதிவுகள், வாய்மொழி, நேர்காணல்கள், சினிமா எனப் பல வழிமுறைகளை ஆய்வாளர்கள் பயன்படுத்தியுள்ளனர். பெண்ணியத்துக்கும் தேசியத்துக்கும் / தேசிய விடுதலைப் போராட்டத்துக்கும் இடையேயான உறவின் நெருக்கடிகள் பற்றி ஈழ வரலாற்றனுபவங்களை முன்னிட்டுப் பல நிலைப்பாடுகளை இனங்காண முடிகிறது. போரில் ஈடுபட்டாலும் தேசியவாத எழுச்சியில் தீவிரமான பங்குபெற்றாலும் பெண் விடுதலை என்பது தேசியப் போருக்கூடாகச் சாத்தியமில்லை. ஏதாவது மாற்றங்கள் ஏற்பட்டாலும் அவை நிரந்தரமானவையன்று என்பது முதலாம் நிலைப்பாடு (எ-கா: ராதிகா குமாரசுவாமி, குமாரி ஜயவர்த்தனா போன்றவர்கள்).


ஆயுதம் தரித்த போராளிகளாகத் தமிழ்ப் பெண்கள் மாறியமை தமிழ்ச் சமூகத்தின் பிற்போக்கான விழுமியங்கள் மீதான பேரிடி என்பதும் அதனூடாகப் பெண்களின் ஒட்டு மொத்தமான விடுதலை சாத்தியம் என்பதும் இரண்டாம் நிலைப்பாடு (எ-கா: அடேல் ஆன் பாலசிங்கம்). இந்த இரண்டு நிலைப்பாடுகளுக்கும் அப்பால், மூன்றாம் நிலைப்பாட்டை வலியுறுத்துபவர்கள், போராளிகளாய்ப் பெண்கள் மாறுவதும் தேசியச் சிக்கலில் அவர்களுடைய பங்கும் பெண்களுக்கு அதிகாரங்களையும் உரிமைகளையும் வழங்கியுள்ள போதும் இவை ஐயத்துக்கிடமானவையாகவும் ஊசலாடும் தன்மையதாகவும் இருக்கின்றதெனக் கருதுகிறார்கள் (எ-கா: தரிணி ராஜசிங்கம், சேனநாயக்க, நெலுஃபர் டீ மெல் போன்றோர்). ஈழ விடுதலைப் போராட்ட ஆரம்ப கால அமைப்புகளைப் பற்றிக் குறிப்பிடுகிறபோது, விடுதலைப் போராட்ட அமைப்புகள் / இயக்கங்களுக்கு உள்ளே பெண் உரிமைகள், பெண் விடுதலை என்பன பற்றிய குறிப்பான கவனம் எதுவும் இருந்திராதபோதும், பெண் விடுதலை எனும் எண்ணக் கருவை எல்லா இயக்கங்களும் ஏற்றுக்கொண்டமையே முக்கியமான வெளிகளையும் வழிகளையும் பெண்களுக்குத் திறந்துவிட்டது என்பது சித்திரலேகாவின் கருத்தாக இருந்தது. ''உயிர் ஈனும் ஆற்றலுடையோர் சாவை அரவணைத்து ஏற்றது காலத்தின் கட்டாயமும் முரணும்'' என்பதை இன்னொரு கருத்துத் தளமாகக் கொள்ள முடியும் (எ-கா: வ. கீதா).இப்போது உள்ள நிலைமையைப் பார்க்கிறபோது, தேசியவாதப் போராட்டத்தின் வேட்கைக்கும் வெம்மைக்கும் கீழ்ப்பட்டதாகவே பெண் விடுதலை பேசப்படுகிற நிலையே மேலோங்கியுள்ளது. கூடவே, நீண்டகாலக் கண்ணோட்டத்தில் தமிழ்ச் சமூகத்தில் பெண் விடுதலை எப்படி அமையும் என்பதில் நிச்சயமின்மையும் முடிவு கூற முடியாமையுமே நிலவுகின்றன என்பதை அடேல் பாலசிங்கமும் தமிழினியும் குறிப்பிடுகிறார்கள்.'கட்டாயமும் முரணும்' கிளப்புகிற சிக்கல்கள் மிகப்பல என்பதையும் ஈழ வரலாற்று, சமூக அனுபவங்கள் உணர்த்துகின்றன. நான் மேலே குறிப்பிட்ட பல கருத்துத் தளங்களுக்கு அப்பால், வேறுபாடுகளும் சிக்கல்களும் நிறைந்த இன்னும் முடிவுறாத போராட்டமாகத் தொடரும் வேறு பல நிலைப்பாடுகளும் பெண் / பெண்ணிய அனுபவங்களும் கருத்துத் தளங்களும் படிம நிலைகளும் சாத்தியம் என்பதை ஈழப் பெண் படைப்பாளிகளின் இலக்கியப் படிமங்களும் பதிவுகளும் நேரடியாகவும் உள்ளடங்கியும் உணர்த்துகின்றன என்பதற்குப் பெயல் மணக்கும் பொழுது சிறந்த எடுத்துக்காட்டாக அமைகிறது.


பெண் மொழியைப் பற்றி மட்டுமே பேசுவதை விடுத்து, பெண் மொழி, பெண்ணிய அனுபவங்கள் என்கிற சாளரத்துக்கூடாக விரியும் புதிய வடிவங்கள், புதிய உறவு நிலைகள், புதிய பண்பாட்டுக் கோலங்கள், புதிய கலாசார இலக்கணங்கள், புதிய பாலின / பாலியல்பு உறவுகள் என்பனவற்றைப் பற்றிப் பேச வேண்டியிருக்கிறது. இவை பற்றிய கேள்விகளும் கவிதைப் படிமங்களும் நூலில் ஆங்காங்கே பெயல் நிலையில் பயில்கின்றன.


சமவெளிகள், காடுகள், மலைகள் எங்கும் /தனித்தே சுற்றுவேன் (செல்வி); போராடும் எதுவும் நின்று நிலைக்கும் (தமிழவள்); உண்மைகளை நினைத்து அழுகிறேன் / நியாயப்படுத்த முடியாதவளாக (தில்லை); எனக்கான ஒரேயொரு காதலனையும் காண முடியவில்லை (நஜீபா); ஒரே உலகத்திலேயேதான் / இருக்கின்றன / எனக்கும் அவனுக்குமான வெவ்வேறு உலகங்கள் (அனார்); உன் தனிமை பற்றிப் பேசு (றஞ்சினி); நான் சிந்தும் கண்ணீர் / திரும்பவும் என்னிடமே கேள்வி கேட்கிறது (சந்திரா ரவீந்திரன்); பொய்க் கால்களும் / போய்விட்ட விழிகளுமாய் / உலா வருகின்ற / எண்ணற்ற காலடிகள் (சிரஞ்சீவி) - இவை சில எடுத்துக்காட்டுகள் மட்டுமே. நூலின் ஒட்டுமொத்தமான பாதிப்பைச் சுட்டிக்காட்ட இவை தூண்டுதலாக அமையலாம் என நம்புகிறேன். பலதரப்பட்ட கவிதைகளையும் பலதரப்பட்ட அனுபவங்களையும் பிரதிபலிக்கக்கூடிய வகையில் இப்பொழுது எழுதிவருகிற, எப்பொழுதோ எழுதிய, எப்போதாவது எழுதுகிற, மற்றும் அவ்வப்போது எழுதுகிற எல்லா ஈழப் பெண் கவிகளையும் இயலுமானவரை தொடுத்து எடுத்துள்ளார் அ. மங்கை. விடுபட்டுப் போனவர்கள் மலரா, மாதுமை, சாரங்கா, லதா என மிகச் சிலரே. இத்தகைய தொகுதியை நிறைவேற்றுவதிலுள்ள சிக்கல்கள், சங்கடங்கள் பற்றி மங்கை உணர்ந்துள்ளமையை அவரது முன்னுரையும் பின்னுரையும் உணர்த்துகின்றன. புவியியல் திணைகளைக் கடந்து ஈழ மக்களுடனும் ஈழ வாழ்வுடனும் ஈழ அரசியலுடனும் ஈழப் பெண் கவிகளுடனும் தன்னுடைய அரசியல், அறவியல் ஒருமைப்பாட்டை (solidarity) அ. மங்கை தெளிவாக வெளிப்படுத்துகிறார்.


இந்த நூல் தொடர்பாகவும் பெண் / பெண்ணியப் படைப்பாளர்கள் தொடர்பாகவும் ஆக்கபூர்வமான பதிவுகளும் விவாதங்களும் எழ வேண்டும். பெண்கள் பெயரில் ஆண் எழுதுவது பற்றிய சர்ச்சை முன்னரும் எழுந்ததொன்றே. இந்தத் தொகுதியிலும் ஆதிரா, ஆமிரபாலி ஆகியோர் 'ஆண்' எழுத்தாளர் எனச் சொல்லப்படுகிறது. இவர்களை ஏன் சேர்த்தீர்கள்? ஆண் எப்படிப் பெண் பெயரில் எழுதலாம்? என்ற ஆரவாரங்களைத் தவிர்த்துப் புனைபெயர்களின் அரசியல் பற்றிய விவாதங்களை நாம் எழுப்ப முடியும். பெண் பெயரை மட்டும் சூடுவதா அல்லது பெண்ணியப் பார்வையையும் குரலையும் காட்டுவதான படைப்பு மனோநிலையின் விளைவா அது எனும் கேள்விகளை எழுப்ப முடியும் அல்லவா? பெயர்களின் பாலின அரசியல் என்ன என்பது இன்னொரு கேள்வி. ஆண்மை/பெண்மை போன்ற கட்டமைப்புகளைக் கட்டுடைப்பது பற்றிக் குறிப்பிடுகிறார் மங்கை. அந்தக் கேள்வி நமது சூழலில் இலக்கியப் படைப்புகளூடாக ஆழமாக முன்னெடுக்கப்பட முடியும். அதேபோல ஒடுக்கப்படுபவர்களின் குரலையும் அடையாளத்தையும் ஒடுக்குபவர்கள் அபகரித்துவிடுதலும் சாத்தியமானதுதான்.


ஆண்கள் பெண் பெயரில் எழுதுகிறபோது, இத்தகைய ஆபத்துகள் உள்ளன. ஒருமைப்பாட்டுக்கும் (solidarity) அபகரிப்புக்கும் (appropriation) இடையே இருப்பது ஒரு பெருவெளி அரசியல். பாலற்றவர்களும் பாலினங்கடந்தோரும் (transgender) ஆண்/பெண் பெயர்களை மாறிமாறிப் பயன்படுத்த முன்பாக ஆண் / பெண் ஆடைகள், அணிகள் என்பவற்றை மாறிமாறி அணிந்து ஆண்/பெண் நடைமுறைகளை மாறிமாறி மாற்றிப் பாலினக் கலகத்தையும் பண்பாட்டுக் கலகங்களையும் உருவாக்குகிறார்கள். இவர்களது படைப்பிலக்கியத் தொகுதிகள் பல வெளியாகி உள்ளன. இத்தகைய பதிவுகளை நோக்கித் தமிழ்ப் படைப்பாளிகளும் நகர்வது தவிர்க்க முடியாதது.


'தமக்கான காலமும் நேரமும் வெளியும் அற்று இடப்பெயர்வும் அங்கலாய்ப்பும் அவற்றை எதிர்கொள்வதுமே வாழ்வாகிப்போன இக்கால கட்டத்தில்' ஈழப் பெண் கவிகளின் இத்தொகை சீரிய முயற்சியாகும்.


0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்