/* up Facebook

Jan 13, 2010

அமி லோவல் கவிதை உருவாக்கும் முறை- தமிழில் பிரம்மராஜன்


1914-ல் எஸ்ரா பவுண்டினால் துவங்கப்பட்ட படிம இயக்கம் (Imagist Movement)கவிதையில் சாதாரண மொழியின் பயன்பாட் டையும் புதிய ஓசைமைகளையும் துல்லியமான படிமங்களை யும் வலியுறுத்தியது.
அமி லோவல் (1874-1925) என்ற பெண் கவிஞர் அமெரிக்க இமேஜிஸ்ட்டுகளில் மிக முதன்மையானவர். கவிஞர் என்பதை விடவும் அமெரிக்க கவிதை இயக்கத்தின் நடைமுறையாள ராகவே பிரபலமாக அறியப்பட்டிருக்கிறார். இவர் அமெரிக்கக் கவிதை இயக்கத்தின் மீது ஏற்படுத்திய பாதிப்பு, மிக பரந்து பட்டதாகவும் குறிப்பிடத்தகுந்ததாகவும் இருந்தது. எஸ்ரா பவுண்டின் கோபத்திற்கு உள்ளாகி இவ்வியக்கம் Amygistsகளின் இயக்கம் என்று பவுண்டால் பரிகாசத்துடன் அழைக்கப்பட் டது. ஏனென்றால் இமேஜிஸ இயக்கத்தின் தேக்கத்தையும் எல்லைப்பாடுகளையும் ஏற்கனவே உணர்ந்தறிந்துவிட்ட பவுண்ட் வோர்ட்டிஸிஸம் என்ற இயக்கம் மிகுந்த படிமக் கவிதையை நோக்கிச் சென்றுவிட்டார். அமிலோவல் எழுதிய புத்தகங்களில் முக்கியமானவைTendencies in Modern American Poetry மற்றும் Poetry of John Keats.


கவிதை உருவாக்கும் முறை -தமிழில் பிரம்மராஜன்


கவிதைகள் எவ்வாறு உருவாக்கப்படுகின்றன என்ற கேள்விக்குப் பதில் அளிக்கும்போது என் உள்ளுணர்வு பூர்வமான பதில் ஒரு தட்டையான‘‘எனக்குத் தெரியாது” என்பதுதான். அவை எவ்வாறு உருவாகின்றன என்று சிறிதும் தெரியாதிருப்பினும் அதே போல் மற்றவர்களின் கவிதை உருவாக்கம் பற்றித் தெரியாத போதிலும், என்னைக் கேட்கப்பட்ட கேள்வி முழுவதும் என் கவிதைகள் சம்மந்தப்பட்டது என்றாலும் அவை எந்த வேறுபாட்டினையும் ஏற்படுத்துவதில்லை. அதைப் பற்றி எனக்குத் தெரிந்திருப்பது, தெரிந்து கொள்ளப்பட வேண்டியதின் ஒரு மில்லியன் பகுதியில் ஒரு பகுதிதான். என் பிரக்ஞைநிலையைத் தொடும்பொழுதுதான் நான் கவிதைகளைச் சந்திக்கிறேன். அது அதற்குள்ளாக அதன் பரிணாமப் பாதையில் வேண்டிய தூரம் வந்துவிட்டிருக்கும்.
திருவாளர் க்ரேவ்ஸ் கூறுவது போல கவிதை எதிரிடையான கருத்தாக்கங்களின் ஒருங்கிணைப்பு என்றாலும், உணர்ச்சிகளின் உறுத்தல்களுக்கும் Tensionக்கும் வடிகால் தருவதாய் ஏற்படும் விளைவு என்று Sara Teasdaleகூறியபோதிலும், பகற்கனவின் எல்லைக் கோட்டினைத் தொடும் ஒரு மனோவியல் நிலைக்கு நம்மை உட்படுத்துதல் என்று (பேராசிரியர் ப்ரெஸ்காட்) ஒரு முழு புத்தகமே எழுதி நிரூபித்த போதிலும் இறுதியான வரையறை தருவதற்கு யாராலும் இயலாது. தன்னம்பிக்கையு டன் என்னுடைய அனுபவங்களிலிருந்து அழுத்தமாக நான் கூறுவதெல்லாம், கவிதை ஒரு பகற்கனவு அல்ல என்பதே–மாறாக மிகவும் வித்தியாசமான, தனக்கே உரித்தான ஒரு மனோவியல் நிலை.
உண்மை என்னவென்றால் ஒரு மர்மம் இங்கு இருக்கிறது. கவிஞன் அளவுக்கு இதைப்பற்றி பிரக்ஞை எவருக்கும் இருக்க முடியாது. கவிஞன் ஒரு ரேடியோ ஏரியலைப் போன்றவன் என்பதை உடனே நாம் ஒப்புக்கொள்வோம்-ஒருவித அலைவரிசைகளில் செய்திகளைப் பெற்றுக்கொள்ளும் தகுதி அவனுக்கு இருக்கிறது. ஆனால் அவன் ஏரியல் என்பதற்கும் மேற்பட்டவன். இது ஏனெனின் இந்தச் செய்திகளை அந்த வார்த்தைகளின் அமைவுகள் என நாம் கூறும் கவிதைகளாக மாற்றும் சக்தி படைத்தவனாகவும் கவிஞன் இருக்கிறான்.
ஒரு கவிஞனைப் பற்றிய அறிவியல் ரீதியான வரையறையை ஏறத்தாழ நாம் இவ்வாறு கூறலாம் என்று நினைக்கிறேன்: அதீதமான உணர்வுமிக்க ஒரு மனிதன், இயக்க பூர்வமான அடிமன ஆளுமை உடையவன், எதிர்ப்பற்ற பிரக்ஞையால் போஷிக்கப்பட்டும் அதற்கு உயிரளித்தபடியும் இருப்பவன். கவிஞர்களிடையே ஒரு பொதுவான சொல் வழக்கு உண்டு. ‘‘அது என்னிடம் வந்தது” என்பார்கள். இந்தப் சொற்பிரயோகம் சீரழிக்கப்பட்டுவிட்டதால் ஒருவர் கவனத்துடன் இதைத் தவிர்க்க முயல்கிறார். ஆனால் நிஜத்தில் ஒரு கவிதையின் பிரக்ஞைபூர்வமான வரவினைப் பற்றி எனக்குத் தெரிந்ததில் இதுதான் மிகச்சிறந்த விளக்கம்.
சிலசமயங்களில் ஒரு கவிதை உருவாக்கிய புறவயத் தூண்டுதல் தெரியும் அல்லது கண்டுபிடிக்கலாம். இரு ஒரு காட்சியாகவோ, அது ஒரு சப்தமாகவோ, ஒரு சிந்தனையாகவோ அல்லது ஒரு உணர்ச்சியாகவோ இருக்கலாம். தொடக்கத் தூண்டுதலைப் பற்றி சில நேரங்களில் நினைவு மனத்திற்கு ஒரு பிரக்ஞையும் இருக்காது. இந்தத் தூண்டுதல் மறக்கப்பட்டிருக்கலாம், அல்லது ஆழ்ந்த அறிந்து உணரப்பட்டிராத நினைவுகளிலி ருந்து எழலாம். இது என்னவாக இருந்தபோதிலும், உணர்ச்சி அறியப்பட்டிருந்தாலும், மறைக்கப்பட்டிருந்தாலும், இது அதன் ஒரு பகுதி. ஏனெனில் உணர்ச்சி மட்டுமே அடிமனதைச் செயலுக்குத் தூண்டுவது. எவ்வளவு கவனமாகவும், கச்சிதமா கவும் அடிமனம் இயங்குகிறது என்பதற்கு நானே என் எழுத்துக் களில் ஒரு காட்சியாக இருந்திருக்கிறேன். எந்த வெளிப்படை யான காரணத்துக்காகவுமின்றி ஒரு கருத்தாக்கம் என் சிந்தனைக்குள் வரும். எடுத்துக்காட்டாக The Bronze Horsesகுதிரைகளை ஒரு கவிதைக்கான விஷயமாக நான் மனதில் புரிந்து கொண்டேன். அவற்றை அவ்வாறு பதிவு செய்த பின்னர் இந்த விஷயம் பற்றி வேறு எதையும் நான் பிரக்ஞைபூர்வமாகச் சிந்திக்கவில்லை. ஆனால் உண்மையில் நான் செய்தது என்னவென்றால் என் கருப்பொருளை ஆழ்மனத்திற்குள் போட்டு வைத்து விட்டதுதான்-தபால் பெட்டியில் ஒருவர் கடிதத்தைப் போடுவது போல. ஆறுமாதங்களுக்குப் பிறகு, அந்தக் கவிதையின் சொற்கள் என் மண்டைக்குள் வர ஆரம்பித்தன-அந்தக் கவிதை என் தனிப்பட்ட சொற்களைப் பயன்படுத்துவோமானால் ‘‘அங்கே இருந்தது”.
சில கவிஞர்கள் ஒரு குரல் அவர்களுடன் பேசுவதாகச் சொல்கிறார்கள். மேலும் அக்குரல் உச்சரிக்கும் வார்த்தைகளை அப்படியே எழுதுவதாகவும் கூறுகிறார்கள். இந்த முறை என்னுடையதிலிருந்து வேறுபடுவதாலோ அல்லது என் ஆரம்பகால அறிவியல் பயிற்சியின் காரணமாகவோ எனக்குத் தெரியவில்லை-எது குறைவான காட்சிபூர்வமான வார்த்தை களை பயன்படுத்துவதற்குக் காரணம் என- நான் குரல் எதையும் கேட்பதில்லை, ஆனால் வார்த்தைகள் உச்சரிக்கப்படுவதைக் கேட்கிறேன். உச்சரிப்பு மட்டுமே சப்தமற்றது. ஆனால் யாராலும் பேசப்படாமல் அவ்வார்த்தைகள் என் மண்டைக்குள் உச்சரிக்கப்படுகின்றன. இந்த விளைவு எனக்குப் பரிச்சயமான ஒன்று. ஏனென்றால் என் மனதிற்குள் நான் படிக்கும் பொழுது கூட நான் எப்போதும் வார்த்தைகளைக் கேட்கிறேன். கொஞ்சம் அதிகமாக நான் எழுதும் நேரத்தில் (இது அவசியமில்லை என்றாலும் கூட) எழுதும்போதும், பலசமயம் நான் எழுதியதை உரக்கப் படிப்பதற்கு நிறுத்தும் போதும். அவ்வளவு தெளிவாய் வார்த்தைகள் என் மண்டைக்குள் ஒலிக்கின்றன.
எனினும் இந்த ஆழ்மனம், மிகவும் தன் இஷ்டப்படி நடந்து கொள்ளும் ஒரு கூட்டாளி. நிறைய சமயங்களில் அது தீவிரமான சூழ்நிலையில் வேலை நிறுத்தம் செய்யும். அதற்குப் பின் எந்த ஒரு சொல்லையும் அதனிடமிருந்து பெறுவதற்கு இயலாது. இங்குதான் கவிஞனின் பிரக்ஞைபூர்வமான பயிற்சி தேவையாகிறது. காரணம் ஆழ்மனம் விட்டுவிட்ட விஷயங்களை அவன் நிரப்ப வேண்டும். மற்ற வார்த்தைகளின் தன்மைக்கு ஒத்தவாறு, முடிந்தவரை நிரப்பவேண்டும். ஒவ்வொரு நீண்ட கவிதையும் இம்மாதிரியான இடைவெளிகளால் தெளிக்கப்பட்டிருக்கும். இந்தக் காரணத்தினால்தான் பெரும்பாலான கவிதைகள் எண்ணற்ற திருத்தங்களுக்கு உள்ளாகின்றன. சில நேரங்களில் இந்த கள்ளத்தனமான ஆழ்மனக் கூட்டாளி சிரமம்படும் கவிஞன் மீது கருணை கொண்டு அவனின் உதவிக்குத் திரும்பும். அந்தக் குறிப்பிட்ட பகுதியுடன் பல சமயங்களில் மீண்டும் எந்தத் தொடர்பும் இருக்காது அதற்கு. இக்காரணத்தினால்தான் ஒரு கவிஞன் என்பவன் பிறக்கவும், உருவாக்கப்படவும் வேண்டும் என்று சொல்லப்படுகிறது. அவனுக்காக எப்போதும் உழைக்கக்கூடிய ஒரு ஆழ்மனத் தொழிற்சாலையுடன் அவன் பிறக்க வேண்டும். இல்லையென்றால் அவன் என்றும் கவிஞனாக முடியாது. திருவாளர் க்ரேவ்ஸின் வெளிப்பாட்டு முறையைப் பயன்படுத்தினால்-அவனின் ஓட்டைகளை மெழுகி அடைக்க அறிவும் திறமையும் வேண்டிய அளவுக்கு இருக்க வேண்டும். இந்த (மெழுகி) அடைக்கும் முறையை யாரும் தாழ்வாக மதிப்பிட்டுவிட வேண்டாம். நல்ல கவிதையில் ஒரு நிலை இது. கடந்த25 ஆண்டுகளாக என் கைகளுக்கு எட்டிய பல பெரும் கவிஞர்களின் முதல் கையெழுத்துப் பிரதிகளில் நான் ஒன்றிலும் ‘‘மெழுகி அடைத்தல்” பங்கினை பார்க்காமல் இல்லை. இதில் மிகவும் அடித்து எழுதப்பட்டிருந்தது கீட்ஸின் The Eve of St.Agnes.
நீண்ட கவிதைகள் ஆழ்மனதில் உருவாக மாதங்கள் ஆகும். சிறிய கவிதைகளைப் பொறுத்தவரை ஆழ்மனதில் கருக் கொள்ளும் காலம் ஒரு நாளாகவோ, ஒரு கணமாகவோ இருக்கலாம். திடீரென்று சில சொற்கள் அங்கே இருக்கும் ஒரு வித ராஜரீகமான வற்புறுத்தலுடன் அவை எந்த தாமதத்தையும் பொறுக்காது. அவை உடனடியாக எழுதப்பட வேண்டும் இல்லையென்றால் ஒரு தீவிரமான துன்புறுதல் நேரும்–ஒரு உடல்ரீதியான வலி அளவுக்கு இது இருக்கும். கவிதைக்கு வழி கொடுத்தால் ஒழிய இந்த வலியிலிருந்து நிவாரணம் கிடைக்காது. கவிதைகள் வரும் காலத்தில் நான் அவற்றை நிராகரிப்பது கிடையாது. நான் என்ன செய்து கொண்டிருந்தாலும், நான் என்ன எழுதிக் கொண்டிருந்தாலும் அவற்றை விலக்கி வைத்துவிட்டு கவிதையின் வரவை நான் கவனிக்கிறேன். என்னுடைய இயல்பின் காரணமாக, நான் நண்பர்களுடன் இருக்கும்போதோ, வீட்டுக்கு வெளியில் உள்ளபோதோ கவிதைகள் வருவதில்லை. ஆனால் தனியாக இருக்கும்போது, நான் பார்த்த, அல்லது செய்த ஏதோ ஒன்றின் தொடர்பான கருத்தாக்கம்–வெளியில் இருந்த பொழுது தன்னை அறிவித்துக் கொள்ளும்–ஏதோ நான் மோனத்திலும், ஏற்புத்தகுதியுடனும் இருக்கும் காலத்திற்காகக் காத்திருந்தது போல்.
என் மண்டைக்குள் நான் உருவாக்குவது குறைவு. ஒரு கவிதையின் வருகை பற்றிய பிரக்ஞையை நான் அடையும்போது நான் செய்யும் முதல் காரியம் பேப்பரையும் பென்சிலையும் தேடிப் போவதுதான். ஒரு துண்டு வெள்ளைத் தாளை வெறுமனே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்ததே ஆழ்மனம் பற்றிய பிரக்ஞைக்கு ஹிப்நாட்டைஸ் செய்து விடுவதுபோலத் தோன்றுகிறது. அதே காரணத்துக்காக, நான் நடந்து கொண்டிருக்கும்போதோ, கார் ஓட்டிக் கொண்டிருக்கும் சமயத்திலோ கவிதைகளைத் திருத்தம் செய்வதில்லை. இதற்குத் தேவைப்படும் கூர்ந்த கவனம் ஒரு தியானத்தின் தன்மையதாய் இருக்கிறது. (இதற்கு இந்த வார்த்தை சற்று அதிகபட்சமானது என்றாலும் கூட) இந்தக் கூர்ந்த கவனம் (அ)தியானம் நான் எங்கே போகிறேன் அல்லது எந்த நிலையத்தில் இறங்க வேண்டும் என்பது பற்றிய அக்கறைகளால் சிதைக்கப்படுகிறது.
இந்த அரைத்தியான நிலை நாம் சிறிய கவிதைகளைப் பற்றிச் சிந்திக்கும்பொழுது ஆச்சரியப்படுத்துவதில்லை. விநோதம் என்னவெனில் இந்தத் தியானம் போன்ற நிலை நீண்ட கவிதைகளைப் பொறுத்தவரை, குறுக்கீடுகளுக்கு மேலாகத் தாக்குப் பிடிக்கக் கூடியது. பல நாட்கள் அல்லது வாரங்கள் எழுதத் தேவைப்படும் அளவுக்கு ஒரு கவிதை நீளமாக இருக்கும் போது, அதைத் தொடர உட்காரும் ஒரு செயலே அதற்குத் தேவையான மனநிலையை உருவாக்குகிறது- இந்நிலை (நான் குறிப்பிட்ட இடைவெளிகள் தவிர) கவிதையின் திருத்தங்கள் வரை தாங்குகிறது.
அதற்கு மாறாக, ஆழ்மனநிலை மட்டும் தயாராக இல்லை என்றால் எந்த சக்தியாலும் அந்த நிலையை உருவாக்க முடியாது. எனவே சிருஷ்டி இல்லாத காலங்கள் எல்லாக் கவிஞர்களுக்கும் இருப்பது சகஜம்தான்.
கவிஞனால் முடிந்த எல்லாவற்றையும் அவன் அறிந்து வைத்திருக்க வேண்டும் என்றே நான் நினைக்கிறேன். எந்த துறையும் அவனுக்கு அந்நியமானதல்ல. எந்தத் திசையிலும் அவன் அறிவு ஆழமானதாக இருந்தால், அவனுடைய கவிதைக்கும் நல்ல ஆழமிருக்கும். புதிய மற்றும் பழைய கவிதை வடிவங்களில் அவனுக்கு முழுமையான, அடிப்படையான பரிச்சயம் இருக்க வேண்டும். ஆனால் தீர்மானமாக என் நம்பிக்கை என்னவென்றால் பாரம்பரியத்திற்கு அவன் தன் உள்ளுணர்வின் சுயத்திற்கு மேலாக மரியாதை தரக்கூடாது. எல்லாவற்றுக்கும் மேலாக தன்னுடைய சுயநேர்மை பற்றி உறுதியாக இருக்க வேண்டும். பொது அங்கீகரிப்புகளுக்கு அவன் தலை பணியக்கூடாது-எவ்வளவு கவர்ச்சிகரமான வையாக அவை இருந்தபோதிலும். அதன் பின் அவனின் ஆழ்மனம் எதை உணர்த்துகிறதோ அதை அவன் சகல தைர்யத்துடன் எழுதட்டும்.1 comments:

தியாவின் பேனா said...

super

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்