/* up Facebook

Jan 11, 2010

ஆதிக்கக் கருத்தியல்களின் மலிவு விற்பனை - லக்ஷ்மிஇணையத்தளங்களில் நாங்கள் எதையும் எழுத முடியும். அதனைக் கட்டுப்படுத்தாதீர்கள். அதற்கு எல்லைகள் போடுவதன்மூலம் நீங்கள் ஒருவரின் கருத்துச் சுதந்திரத்தை மறுக்கிறீர்கள்.” என்று தொடங்கி, “உனது கருத்தின்மீது உடன்படா விடினும் என்னுயிரை ஈந்தேனும் உனது கருத்தைக் காப்பாற்றப் போராடுவேன்” எனும் வொல்டேரின் வாசகம் வரையில் மற்றவர்களின் கருத்தை மதிக்கின்ற விடயம் இணையத்தளங்களில் கொடி கட்டிப் பறக்கின்றது.


பெண்ணியம் என்பது ஒரு கோட்பாடு என்றளவில் சுருக்கிப் பார்க்கும் ஒரு விடயமல்ல. அது ஒரு வாழ்க்கைமுறையும்கூட. பெண்ணியம் பேசும் பெண்களிடம் இருந்து பெண்ணியத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று ஏன் இப்படிக் குய்யோ முறையோ என்று கூப்பாடு போடுகிறார்கள் என்று ஆழ்ந்து சிந்தித்தால், இவர்கள் ஏலவே இருக்கின்ற இந்தச் சமூகக் கட்டமைப்பைக் குலைய விடாது காப்பாற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றார்களோ என்ற சந்தேகம் வலுக்கின்றது.


லீனா மணிமேகலை தன்னிடம் பணி புரிய வந்த தொழிலாளர்களுக்கு ஊதியம் கொடுக்கவில்லை என்பதனால் ஏற்பட்ட தகராறின்போது கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டது குறித்து சில இணையத்தளங்கள் தெரிவித்திருந்தன. அதனைத் தொடர்ந்து எதிர்வினைகள் பின்னூட்டங்களாகவும் கட்டுரைகளாகவும் வந்து கொண்டிருக்கின்றன.


இந்தச் சூழலில் இதனை வெறுமனே தனிநபர் சார்ந்த, பெண் சார்ந்த பிரச்சினையாக அணுகும் போக்கே காணப்படுகின்றது. சமூகத்தில் முன்னேறிய பிரிவினர்களாகத் தங்களைக் கருதிக் கொள்ளும் அல்லது அவர்களை ஏனையோர் அப்படிக் கருதிக் கொள்ளும் ஒரு பிரிவினரை எடுத்துக் கொண்டால் இவர்கள் சமூகத்தின் சாதாரண மட்டத்தில் இருப்பவர்களை விடவும் மிகவும் அற்பமாக நடந்து கொள்கின்ற போக்கு வலுவாகின்றது. ‘கட்டுடைப்பு அரசியல்’ என்ற போர்வையில் வஞ்சத்தனமான தனிநபர் மீதான காழ்ப்புணர்வுகளைக் கக்குகின்ற போக்கு மலிந்து காணப்படுகின்றது. ஒருவரை இல்லாதொழிக்கவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு இவர்கள் செலவழிக்கும் சக்தியை வேறுவிதமாகச் செலவழிக்க முடியாதா என்ற ஆதங்கமும் அடிக்கடி எழுகின்றது. எதிரியை இலகுவில் இனம் கண்டு கொள்ள முடியும். ஆனால் ஒரு நண்பரை அல்லது தோழரை இனம் காணுவது அவ்வளவு சுலபமான விடயமல்ல. கூடியிருந்து குழி பறிப்பவர்களும் கூடிப் பிரிந்த பின் சவக்கிடங்கு தோண்டுபவர்களுமாய் நிறைந்து போய்க் கிடக்கின்றது.


இது நிற்க!
ஆதிக்கப் பிரிவினர் ஒடுக்கப்படும் பிரிவினர் பற்றிப் பேசுவதற்கும் ஒடுக்கப்படும் பிரிவினர் ஆதிக்க சக்திகள் பற்றிப் பேசுவதற்கும் இடையில் உள்ள அடிப்படை வேறுபாட்டைப் புரிந்து கொள்வதுதான் புரட்சி பற்றிப் பேசுதலின் அடிப்படையாக இருக்க முடியும். எனவே, இங்கு ஒரு பெண் தனது உடல் பற்றிப் பேசுவதற்கான ‘வெளி’ என்பதும் ஆதிக்கப் பாலினமான ஆண் ஒரு பெண்ணின் உடல் பற்றிப் பேசுவதற்கான ‘வரைபு’ என்பதும் வேறுபடுத்திப் பார்க்க வேண்டியது என்பதைப் புரிந்துகொள்வது வீண் வசைபாடல்களைத் தவிர்க்கும்.


சமூகத்தில் முன்னேறிய பிரிவினர் என்று கருதப்படுபவர்கள் கோட்பாட்டு ரீதியாக சகல விடயங்களையும் விளங்கிக் கொள்வதற்கான எத்தனங்களைச் செய்ய முடியும். ஆனாலும் ஆண் அதிகாரத்தின்மீது கட்டியமைக்கப்பட்ட சமூகத்தினுள் தங்கள் இருப்புக்களை செவ்வனே பேணிக்கொள்பவர்களினால் ஏற்கனவே உள்ள கோட்பாடுகள் பற்றி பாடம் நடத்த முடியும் அல்லது அந்தக் கோட்பாடுகளில் இருந்து தடம் தவறிப் போகாமல் இருப்பது குறித்துக் கண்காணித்துக் கொண்டிருக்க முடியும். ஆனால் ஒரு மனிதஜீவியாகத் தன்னை உணர்தல் என்பது இன்றைய சமூக ஒழுங்கில் ஒரு மனிதஜீவிக்கு எப்படிச் சாத்தியமில்லாமல் ஆக்கப்பட்டுள்ளதோ, அதேபோல்தான் இந்த சமூகக் கட்டமைப்பில் ஒரு பெண் தன்னைப் பெண்ணாக உணர்தல் தடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆதிக்கக் கட்டமைப்பில் இருந்து வெளிவர வேண்டும் அல்லது அதனை எதிர்க்க வேண்டும் என்று எத்தனிக்கின்ற பெண்கள் மீதான சேறடிப்புக்கள் அது எந்த வர்க்கத்தினரைச் சார்ந்ததாக இருப்பினும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. கோட்பாடுகளை விளங்கிக் கொண்டதாக அல்லது தெரிந்து கொண்டதாக காட்டிக் கொள்பவர்களால் அவற்றைச் செரிக்க முடிவதில்லை என்பது பல சந்தர்ப்பங்களில் கண்கூடாகக் காணக்கூடியதாக உள்ளது. மேலும் சமூகத்தில் உள்ள எந்த ஒரு பிரிவினரையும் எதிரியாகக் கட்டமைக்கும் போக்கானது இணைந்து வாழ்வதற்கு எடுக்கப்படும் முயற்சிகள்மீது மண்ணள்ளிப் போடுகிறது.


மேலும் ஆண்குறியின் வீரியம் பற்றிச் சற்று மட்டமாகப் பேசியதும் குதித்தெழ வேண்டிய அவசியம் என்ன வருகின்றது. அது ‘குறி’ சார்ந்த பிரச்சனையல்ல. ‘அதிகாரம்’ சார்ந்த பிரச்சினை. ஒரு பெண் பற்றிய பிரச்சினை என்று வந்தவுடன் அது எந்த மட்டத்தில் உள்ளவர்களாக இருப்பினும், சமூகத்தின் முன்னேறிய பிரிவினர் என்று சொல்லப்படுபவர்கள் கூட, தாம் தூம் என்று குதிப்பதும் உடனடியாகவே அப்பெண்ணின் ‘நடத்தை’ பற்றிப் பேசுவதும் ஒன்றும் ஆச்சரியமானதல்ல. அங்கு ‘யோனி’ பற்றிய உள்ளர்த்தத்துடன் பேசுவது அவர்களுக்கு உவப்பாய் இருக்கின்றது. இங்கு அவர்கள் என்பது அதிகாரமையக் கருத்தாடல்களில் உள்ளவர்கள்.


லீனாவுக்கும் அவருடன் பணிபுரிந்தவர்களுக்கும் இடையிலான பிரச்சினை வந்ததும்தான் அவர் எழுதிய கவிதைபற்றி எதிர்வினையாற்ற வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதென்பது துரதிர்ஷ்டவசமானது.


ஆண்மையவாதம் என்பது ஆண்குறியில் நிலைகொண்டிருப்பதாக அர்த்தப்படுத்தும் உரிமை எந்த மயிராண்டிக்கும் இல்லை என்று ஒருவர் வாதிட முடியும். ஆனால் அதனை அதற்குரிய முறையில் விவாதித்து அந்த அரசியலை கட்டுடைக்க முடிந்தால் அது பயனுள்ளதாக அமையும்.


இணைய ஊடகமானது பரஸ்பர கருத்துப் பரிமாறல்களுக்கு ஆரோக்கியமான முறையில் ஒரு தளத்தை உருவாக்குவதன் தேவையை பலரும் உணர்ந்து செயற்படுவது வளமான கதையாடல்களுக்கு வழி சமைக்கும்.


நன்றி - புகலி

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்