/* up Facebook

Jan 31, 2010

ஆணாதிக்கக் கோட்டையை அசைத்துப் பார்க்கும் ஒரு வரலாற்றுத் தீர்ப்பு- ஓவியா

அண்மையில் அனைத்து இந்திய அளவில் பரபரப்பை ஏற்படுத்திய தீர்ப்புகளில் ஒன்று ஓரினச் சேர்க்கை, வலியுறுத்தல் ஏதுமின்றி நடைபெறும் பட்சத்தில் தவறில்லை என்று 2.7.2009 தில்லி உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பாகும். இந்தத் தீர்ப்பின் மூலம் இந்தியா ஓரினச் சேர்க்கை மீதான தடையை நீக்கிய நாடுகளின் பட்டியலில் 127வது நாடாக தன்னை இணைத்துக் கொண்டுள்ளது. இந்திய தண்டனைச் சட்டத்தின் 377வது பிரிவு இயற்கைக்கு மாறான பாலுறவைத் தடை செய்யும் பிரிவாகும். இது ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ஏற்படுத்தப்பட்டு இன்று வரை தொடர்ந்து இருந்து வருகிறது.

சட்டம்
377, இயற்கைக்கு மாறான குற்றங்கள் இயற்கையின் நியதிக்கு மீறி யாரொருவர் ஒரு ஆணுடனோ அல்லது பெண்ணுடனோ அல்லது விலங்குடனோ உடலுறவு கொண்டால் அந்த நபர் ஆயுள் தண்டனையோ அல்லது பத்தாண்டுகள் நீடிக்கக் கூடிய சிறைத் தண்டனையோ விதிக்கப்படுவதுடன் அவர் அபராதத் தொகை கட்டவும் விதிக்கப்படுவார்.

இதுதான் அந்த 377ஆவது பிரிவு. இப்போது நீதிமன்றம் என்ன சொல்லியிருக்கிறதென்றால் இந்தப் பிரிவின் படி ஓரினச் சேர்க்கை, சம்பந்தப்பட்டவர்கள் விருப்பத்துடன் நடைபெறும் பட்சத்தில் தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்பட முடியாது. மிரட்டியோ, வற்புறுத்தலின் பேரிலோ நடைபெறும் உடலுறவுகள் அவை ஓர் ஆணுக்கும் பெண்ணுக்குமிடையே, அதாவது இருபால் உறவாக இருந்தாலும் இந்தப் பிரிவின் கீழ் தண்டனைக்குரிய குற்றங்களாகும்.

வழக்கின் வரலாறு
‘நாஜ் பவுண்டேசன் இந்தியா டிரஸ்ட்’ என்பது தில்லியில் இயங்கி வரும் ஒரு தொண்டு நிறுவனமாகும். இந்த நிறுவனம் 2001இல் தில்லி நீதிமன்றத்தில் வயது வந்தவர்களிடையே விருப்பத்துடன் நடைபெறும் ஓரினச் சேர்க்கைக்கான தனிச் சட்டம் கோரிப் பொதுநல வழக்கொன்றை தொடுத்தது. தில்லி உயர் நீதிமன்றம் இதனை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மறுத்துவிட்டது. அடுத்து அந்தத் தொண்டு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தை அணுகியது. உச்ச நீதிமன்றம் வழக்கை எடுத்துக் கொள்ளச் சொல்லி தில்லி உயர் நீதிமன்றத்திற்கு பரிந்துரை செய்தது. இதனைத் தொடர்ந்து மற்றொரு தொண்டு நிறுவனமான 377க்கு எதிரான குரல் என்ற அமைப்பு இந்த வழக்கில் தன்னை இணைத்துக் கொண்டது. வயது வந்தோருக்கிடையே இசைவுடன் நடைபெறும் ஓரினச் சேர்க்கையை 377 பிரிவின் கீழ் கொண்டு வரக் கூடாது, அந்தப் பிரிவின் பிடியிலிருந்து அவ்விதமான ஓரினச் சேர்க்கையை நீக்க வேண்டும் என்று அந்த அமைப்பு குரல் எழுப்பியது.

2008 மே மாதம் இந்த வழக்கு தில்லி உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. ஆனால் அப்போது மத்திய அரசின் சார்பில் இரண்டு துறைகளிலிருந்து முரண்பட்ட நிலைப்பாடுகள் முன்வைக்கப்பட்டன. அதாவது அரசின் உள்துறை அமைச்சகம் அந்தப் பிரிவு அப்படியே நீடிக்க வேண்டும் எனவும், சுகாதாரத் துறை அந்தப் பிரிவின் கீழான தண்டனைகளுக்கெதிராகவும் தங்கள் கருத்துகளை முன்வைத்தன. இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த இரண்டு வாக்குமூலங்களையும் மத்திய அரசின் சார்பில் முன்வைத்தவர் ஒரே வழக்கறிஞர் -மோனிகா கார்க் என்பவர். எப்படி முரண்பாடுடைய இந்த இரண்டு வாக்குமூலங்களையும் நீங்கள் சமன் செய்கிறீர்கள்? என்று கேட்டார்கள் நீதிபதிகள். அதற்கு அந்த அரசாங்க வக்கீல் பரிதாபத்துக்குரிய ஒரு பதிலைச் சொன்னர் இந்த இரண்டு அமைச்சகங்களுக்கும் நான் ஒருவரே ஆஜராக முடியாது என்று அரசாங்கத்துக்கு எழுதியிருந்தேன். ஆனால் எனக்கு பதில் வரவில்லை. இவ்வாறு கூறிய அவர் அந்த நேரத்தில் தான் உள்துறை அமைச்சகத்தை மட்டும் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறி விட்டார். அதாவது இந்தியச் சூழலில் குறிப்பிட்ட சட்டப்பிரிவு அதன் பொருளில் அப்படியே நீடிக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் கருத்துத் தெரிவித்தது.

ஆனால் சுகாதாரத் துறையின் கீழ் இயங்கும் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு இயற்கைக்கு மாறாக உறவு கொள்பவர்களை 377 பிரிவின் கீழ் ஆயுள் தண்டனைக்குட்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தது. கடுமையான தண்டனையைச் சுட்டிக் காட்டி, இதனால் பாதுகாப்பு உறைகளை பயன்படுத்துவது மற்றும் பாலியல் அறிவு பற்றிய தகவல்கள் கூட அவர்கள் அறிய முடியாமல் போய் விடுகிறது என்றும் அது தெரிவித்தது.

நாஜ் பவுண்டேசன் தனது விண்ணப்பத்தில் பிரிவு 377 குடிமக்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் அடிப்படை உரிமையை மீறுவதாலும் பாலியல் உறவில் சட்ட விரோதமான உறவுகளை உருவாக்குவதாலும் அப்பிரிவு சட்டவிரோதமானது என அறிவிக்கும்படி கேட்டிருந்தது.

இந்தப் பிரிவு ஓரினச் சேர்க்கையில் ஈடுபடும் மனிதரை இழிவுபடுத்துகிறது, தனக்கெதிரான பாகுபாட்டை அவரை மவுனமாக ஏற்றுக் கொள்ளச் சொல்கிறது. அவரால் தமது விருப்பத்தை வெளிக் கொணர முடியாது.

நவம்பர் 2008இல் இவ்வழக்கு மீதானd விசாரணை முடிந்தது. 2009 ஜஓன் 12இல் சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி, இந்தப் பிரிவு தேவையற்றது என்று ஒப்புக் கொண்டார். இதன் விளைவாக 2009 ஜஓலை 2 -ம் தேதி வரலாற்றுச் சிறப்பு மிக்க தனது தீர்ப்பில் தில்லி உயர்நீதிமன்றம் 150 ஆண்டுகால பழமை வாய்ந்த இந்த சட்டத்தை திருப்பிப் போட்டது. வயதுவந்த மனிதர்களிடையே நிகழ்கின்ற ஓரினச் சேர்க்கைகள் சட்டபூர்வமானவையே என அந்தத் தீர்ப்பு அறிவித்தது. இந்தப் பிரிவின் சாரமானது மனிதர்களின் அடிப்படை உரிமைக்கு விரோதமாகச் செல்கிறது என்றும் அந்தத் தீர்ப்பில் நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. தங்களது 105 பக்கத் தீர்ப்பில், நீதிபதிகள் அஜித் பிரகாசும். முரளிதரரும் இந்த பிரிவைத் திருத்தா விட்டால் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 14 மீறப்படுகிறது என்று தெரிவித்துள்ளனர். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 14, ஒவ்வொரு குடிமகனு/ளும் சட்டத்தின் முன் வாழ்வதற்கான வாய்ப்புகளில் சம உரிமை படைத்திருக்கிறார்கள் என்றும் அனைவரும் சட்டத்தின் முன் சமம் என்றும் சொல்கிறது. எனவே நமது சட்டம் அனைவரையும் உள்ளிணைத்து சமமாக நடத்தச் சொல்கிறது. பாகுபடுத்துதல் என்பது இதற்கு எதிரானது ஆகும்.

இவ்வாறு தீர்ப்பளித்த நீதிமன்றம் இத்தீர்ப்பானது பாராளுமன்றம் இந்த சட்டத்தைத் திருத்தும் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இப்போது பாராளுமன்றம் என்ன செய்யப் போகிறது என்பது கேள்வி. அதுவரை பொறுக்க முடியாமல் இத்தீர்ப்பை எதிர்த்து ஏகப்பட்ட மனுக்கள் நீதிமன்ற வாசலில்......! நீதிமன்றம் பாராளுமன்ற முடிவு வரும் வரை பொறுக்கக் கூடாதா என்று கேட்கிறது.

இப்படிப்பட்ட மாற்றமான தீர்ப்பு வருவதற்கு சமூக ஆர்வலர்கள் பலர் தொடர்ந்து பணியாற்றியிருக்கிறார்கள். பியுசிஎல் அமைப்பினர் பாலினச் சிறுபான்மையினர் மற்றும் ஓரினச் சேர்க்கையாளர்களின் மீதான மனித உரிமை மீறல் குறித்து இரண்டு அறிக்கைகள் வெளியிட்டிருக்கிறார்கள். முன்னெப்போதும் இல்லா அளவில் அவர்கள் தங்களை ஒரு சமூகமாக ஒருங்கிணைத்து தங்கள் கோரிக்கைகள் வெளியிடத் துவங்கியிருக்கிறார்கள். ஊடகங்கள் குறிப்பாக எலெக்ட்ரானிக் ஊடகங்கள் தங்கள் பார்வையை மாற்றிக் கொண்டுள்ளதுடன் அவர்களை பல நிகழ்ச்சிகளில் முன்னிறுத்த துவங்கியிருக்கிறார்கள். தோழர் திருமாவளவன், விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத்தில் ஒரு திருநங்கைக்கு பொறுப்பு கொடுத்திருக்கிறார். இந்த மாற்றம் என்பது பெரும்பாலும், திருநங்கைகள் என்றழைக்கப்படுகின்ற மூன்றாம் பாலினத்தவர் மத்தியில் பரவிக் கொண்டிருக்க, தற்சமயம் ஓரினச் சேர்க்கையாளர்களின் குரலும் வெளிவரத் துவங்கியிருக்கிறது. அன்றைய நாட்களில் அமைச்சர்களாக இருந்தவர்களில் அன்புமணி இராமதாசும், ஆஸ்கர் பெர்னான்டசும் இச் சட்டப் பிரிவு நீக்கப்பட வேண்டும் என்று குரல் கொடுத்திருக்கிறார்கள்.

இப்போது அரசியல் கட்சிகளில் இடது சாரி இயக்கங்கள் இந்தத் தீர்ப்பை முழுமனதுடன் வரவேற்று பாராளுமன்றத்தில் இச்சட்ட திருத்தம் முன்மொழியப்படும் போது தாங்கள் ஆதரவளிப்போம் என அறிவித்துள்ளனர். காங்கிரசு எச்சரிக்கையுடன் மதில் மேல் நின்று கொண்டிருக்கிறது. அந்த உரிமை காங்கிரசுக்கு மட்டும்தானா? எங்களுக்கில்லையா, அவர்கள் பேசட்டும், அப்புறம்தான் நாங்கள் சொல்லுவோமாக்கும் என்கிறது பிஜேபி. இருந்தாலும் முரளி மனோகர் ஜோ´ துள்ளிக் குதித்து தனது எதிர்ப்பைப் பதிவு செய்து விட்டார். சரத் யாதவ் இந்த சட்டத்தின் கீழ் யாரும் தண்டிக்கப்படவில்லையே, அப்புறம் என்ன? என்கிறார். இதற்கெல்லாம் பெயர் ‘கருத்துச்சொல்வதா’ என்பது நமக்குத் தெரியவில்லை.

இந்தத் தீர்ப்பினைக் கேட்டு முதலில் அலறுவது மதவாதிகள்தான். அனைத்து மதங்களும் ஒரே குரலில் இதனை எதிர்க்கின்றன. பெண்ணுக்கு அடிமை என்ற நிலையையாவது மதம் அளித்திருக்கிறது. ஆனால் மூன்றாம் பாலினருக்கு இடமே இல்லை அல்லது கோமாளிகளின் இடம். இவ்வாறு மதத்தால் மறுக்கப்பட்ட இடத்தை இன்று அவர்கள் பல்வேறு நிலைகளில் போராடிப் பெற்று வருகிறார்கள். மதமும் இலக்கியமும் கைகோர்த்துக் கொண்டுதான், ‘எதிர்பாலுறவும் அதன் அடிப்படையில் அமையும் குடும்ப அமைப்பும் மட்டுமே மனித இனம் வாழ்வதற்குரிய ஒரே வழி என்ற நம்பிக்கையை மனித மனதின் மரபணுக்களிலே விதைத்தன. அதனுடைய விளைவாக இந்த நம்பிக்கைக்கு மாறுபட்ட உறவுகளையும், மனிதர்களையும் மனித சமூகம் விலக்கி வைக்கிற அவலமும், அம்மனிதர்களைத் தண்டிக்கிற கொடுமையும் உருவாகி வளர்ந்தன. மூன்றாம் பாலினத்தவர் சிறுபான்மையினராக இருப்பதாலேயே அவர்களின் வாழ்க்கை உரிமைகளை மறுக்க மற்றவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? மேலும் ‘ஆண் தன்மை, ‘பெண் தன்மை’ மீதான இறுக்கமான கருத்தமைவுகளை நாம் எதிர்த்தே ஆக வேண்டும். ஆண்மை’ என்ற மாயையை சமூகத்திலிருந்து ஒழிக்கவும் சமூகத்தின் தலைவன் ஆண் என்ற ஆதிக்க நிலையைத் தகர்க்கவும் இந்த ஆண் பெண் என்ற இரண்டு பாலினத்தவர்களுக்கு மத்தியில் மூன்றாம் பாலினத்தவரின் இருத்தல் மிகப் பெரிய பங்காற்ற முடியும்.

மேலும் கற்பு, புனிதமான காதல், பிள்ளை பெறுதல் இவற்றுடன் தொடர்பில்லாத தளத்தில் இயங்கும் ஓரினச் சேர்க்கை இந்த ஆதிக்கக் கற்பிதங்களை தகர்த்தெறியும். மேலும் பிள்ளை பெற முடியாத இருவர் அமைத்துக் கொள்ளும் உறவில் அவர்கள் தத்தெடுத்து உருவாக்கும் குழந்தை வளர்ப்பில் இரத்த சொந்தத்தினால் உருவாகும் உடைமை உணர்வு தகர்ந்து போகும். இது போன்ற உறவுகள் வெளிப்படையாக அங்கீகரிக்கப்படும் போது அவர்கள் அனுபவங்களும் நமக்கு இலக்கியமாக்கப்பட்டு நம்முன் வைக்கப்பட வேண்டும். அதன் மூலமாகவே நாம் அவர்களை அறிந்து கொள்ள முடியும்.

மேலும் இது இயற்கைக்கு மாறானது என்கிறார்கள். அப்படி ஒன்று எப்படி இயற்கையாகத் தோன்ற முடியும்? உண்மையில் இது மதத்துக்கு விரோதமானதே தவிர இயற்கைக்கு விரோதமானது இல்லை. எய்ட்ஸ் பரவும் என்கிறார்கள். அது பற்றி நமக்கு போதுமான அறிவில்லை. ஆனால் சுகாதாரத் துறைதான் இந்த சட்டத் திருத்தத்தை ஆதரித்திருக்கிறது.

‘ஆண்மை’ என்ற பதம் பெண்களால் அழிக்கப்படும் வரை மனித இனம் விடுதலையடையாது என்றார் பெரியார். இதில் பெண்கள் என்பதுடன் மூன்றாம் பாலினத்தவரையும், எதிர்பால் ஈர்ப்பிலிருந்து விலகி நிற்போரையும் நாம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

நன்றி: சமூகநீதித் தமிழ்த்தேசம்
...மேலும்

Jan 30, 2010

தமிழ் மொழிபெயர்ப்பின் அரசியல்- அ.மங்கை


மொழிபெயர்ப்பு முயற்சிகள் தொழிற்படும் சூழல், தேர்ந்தெடுக்கப்படும் பனுவல், மொழி, வெளியிடும் நிறுவனம், வாசகத் தளம் ஆகியவை அடிப்படையில் அணுகப்பட வேண்டும். அந்த வகையில் தமிழ் மொழி பெயர்ப்புகள் செயல்பட்ட/படுகின்ற களம் குறித்த சில விவாதங்களை இக்கட்டுரை முன்வைக்கிறது. மொழி பெயர்ப்பின் பலாபலன்கள், சரி/தவறு, சிக்கல்கள், அவை முன்வைக்கும் பண்பாட்டுக் கேள்விகள் ஆகியவை மொழிபெயர்ப்பு அரசியல் (Political of Translation) தொடர்பானவை. அவை அனைத்து மொழிகளுக்கும் பொருந்தக்கூடிய கொள்கைசார் விவாதங்களை ஒட்டிச் செய்யப்பட வேண்டியவை. ஆனால், எனக்குரிய பரப்பில் அவற்றை மேற்கொள்ளும் சாத்தியம் இல்லை. எனவே, தமிழ் மொழிபெயர்ப்புகளின் எண்ணிக்கை, மூலநூல்களின் மொழி/நாடு ஆகியவை காட்டும் திசைவழிகள், மொழிபெயர்ப்பு நூல் வெளியீடுகளில் எழும் தகவல் / தகவலின்மை குறித்த குளறுபடிகள் ஆகிய இரண்டு பற்றி மட்டுமே இங்கு விவாதத்திற்கு எடுத்துக்கொள்கிறேன்.


முருகேச பாண்டியனின் ‘தமிழ் மொழிபெயர்ப்பில் உலக இலக்கியம்’ (2004), 1863இல் வெளியிடப்பட்ட ‘ஆதிநந்தவனப் பிரளயம்’ முதலாக 1990 வரை வந்த 1018 மொழிபெயர்ப்பு நூற்களைக் குறிப்பிடுகிறது. வெளியீட்டு எண்ணிக்கை அடிப்படையில் அதிக அளவு நூல்கள் மொழி பெயர்க்கப்பட்ட காலம் 1951-1970க்குட்பட்ட இருபது ஆண்டுகளாகும். இதில் 1961-1970க்குட்பட்ட காலம் குறித்த க.நா.சுவின் மேற்கோளை சிவகாமி தனது இரு நூல்களிலும் (மொழிபெயர்ப்பு, நூற்றொகை: 1983, மொழிபெயர்ப்பு தமிழ்: 2004) கையாள்கிறார்.


“1950களிலும் அதற்குப் பின்னரும் சோவியத் அரசாங்க ஸ்தாபனமும் அமெரிக்க அரசாங்க ஸ்தாபனமும் ஏற்பட்டு போட்டி போட்டுக்கொண்டு இதில் ஈடுபாடு காட்டின. அதன் விளைவாக, மொழி பெயர்ப்பாளரின் ரசனையின்படி தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்களுக்குப் பதிலாகப் பணம் தரக்கூடிய நூல்களை மொழிபெயர்ப்பதில் ஈடுபட்டனர். இதுவே, நல்ல தரமான இயக்கம் என்று சொல்லும்படியான அளவிற்கு 1956க்குப் பின் சாகித்திய அகாதெமி, இந்திய அரசாங்கத்தின் சார்பில் ஏற்பட்டு மொழிபெயர்ப்பில் செயல்படத் தொடங்கியது. இதற்கிடையில் சிறிது சிறிதாக ரஷ்ய, அமெரிக்க அரசாங்கங்கள் மொழிபெயர்க்கப்படும் பணியைச் சுருக்கிக்கொண்டார்கள். 1960க்குப் பின் அவர்கள் நூல்கள் அதிகமாக வெளிவரவில்லை என்று பொதுவான நோக்கில் கருத்துரைப்பர்” என்ற சுதந்திரத்திற்குப் பிறகு மொழிபெயர்ப்புகள் என்ற கட்டுரையில் க.நா.சு. கூறுவதாகக் குறிப்பிடுகிறார். (2004 75)


ஆனால் க.நா.சு.வின் இந்தப் ‘பொதுவான நோக்கு’ புள்ளி விவரப்படிப் பொருந்தவில்லை என்பதை முருகேச பாண்டியன் கொடுக்கும் மற்றொரு அட்டவணை விளக்குகிறது. 1951-1960, 1961 - 1970 காலகட்டத்தில் இங்கிலாந்து நூல்கள் அதிகபட்சமாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ரஷிய, அமெரிக்க நூல்களில் ரஷிய மொழிபெயர்ப்புகள் கூடுதலாகச் செய்யப்பட்டுள்ளன. 1971-1980, 1981-1990 காலகட்டத்தில் இங்கிலாந்து, அமெரிக்க நூற்கள் மொழிபெயர்ப்புத் திடீரெனச் சரிந்துள்ளதைக் காணமுடிகிறது. ரஷிய நூல்கள் 1990 வரை ஒரே சீரான அளவில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதைக் காண முடிகிறது. முருகேச பாண்டியன் தனது நூலில் க.நா.சு.வின் பொதுவான நோக்கைக் குறித்து ஏதும் சொல்லாமலே போகிறார்.


1951-1970 காலத்தில் மொழிபெயர்ப்பு இலக்கிய நூற்கள் வெளியீடு அதிகரித்தமை குறித்து பல காரணங்களை ஊகங்களாக வைக்கிறார் முருகேசபாண்டியன். தமிழ்வழிக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது (1956). மொழிபெயர்ப்பு நூல்களைத் துணைப்பாடமாக வைக்கவேண்டும் என்ற அரசு ஆணை காரணமாக இது நிகழ்ந்திருக்கலாம் என்பது அவரது வாதம். கன்னட மொழியிலும் இக்காலகட்டத்தில் மொழிபெயர்ப்புப் பணி தீவிரமாக நடந்ததைக் குறித்து வளமாலா விஸ்நாதா குறிப்பிடுகிறார் Bassnet, Susan, Post Colonial Translation:1999) பாடத்திட்டத்திற்கான மொழிபெயர்ப்பு / சுருக்க மொழிபெயர்ப்பு பற்றி இன்னும் ஆழமாக அணுக வேண்டிய தேவை உள்ளது. 1914இல் Lord Lyttan எழுதிய The Last days of Poempei தமிழில் வெளி வந்துள்ளது. அதன் பின் அட்டையில் மாணவருக்காக எழுதப்பட்டதாகக் குறிப்பு உள்ளதென முருகேச பாண்டியன் நூல் குறிப்பிடுகிறது.


“அரசு ஆணையின் காரணமாக 1953லிருந்து 1968 வரை பள்ளி மாணவர் பாடத்திட்டத்தில் 23 ஆங்கில நாவல்களின் சுருக்கங்கள் துணைப்பாடமாக இடம் பெற்றுள்ளன. இவ்வாறு மொழிபெயர்த்து வெளியிடப்பட்ட நூற்களின் அரசு ஆணைபற்றிய குறிப்பு உள்ளது” என அவர் குறிப்பிடும் ‘10-05-61 தேதியிட்ட ஆணை 320’ ஆவணக் காப்பகத்தில் தேடியபோது கிடைக்கவில்லை. (இத்தகவல் அறிய உதவிய நங்கை அவர்களுக்கு நன்றி.) இவற்றைப் பள்ளி ஆசிரியர்கள் மொழிபெயர்த்திருப்பர். இத்தகு நூல்களை நூலகங்களில் சேர்க்காமல் இருக்க வாய்ப்புண்டு. எனவே இக்காலத்தில் வெளியிடப்பட்ட நூல்களின் எண்ணிக்கை கூடுதலாக இருந்திருக்கலாம் என்று முருகேசபாண்டியன் விளக்குகிறார். முறையான ஆவணங்கள் கிடைக்கும் பட்சத்தில் 1961-1970க் கிடைப் பட்ட கால மொழிபெயர்ப்பு முயற்சிகள், அவற்றில் அரசுப் பாடநூல் நிறுவனத்தின் பங்கு ஆகியவை குறித்து நாம் விரிவாகக் கண்டறிய வாய்ப்புண்டு.
இக்காலத்தில் மொழிபெயர்ப்பில் ஈடுபட்ட மொழிபெயர்ப்பாளர்கள் அவர்கள் மொழிபெயர்த்த மூலநூல்களின் மொழி ஆகியவை குறித்த ஒப்பீடு ஆர்வமூட்டுபவையாக உள்ளன. அதிக அளவில் ரஷிய மொழியில் இருந்து மொழிபெயர்த்த முகம்மது செரிபு, அமெரிக்க நூல் எதனையும் மொழிபெயர்க்கவில்லை. வி. எஸ். வெங்கடேசன் ஒரே ஒரு அமெரிக்க நூலை மொழிபெயர்த்திருக்கிறார். கா. அப்பாதுரை, கு. பரமசிவம் தலா இரண்டு ரஷிய நூல்களை மொழிபெயர்த்துள்ளனர். ரஷிய நூல் மொழிபெயர்ப்பில் ஈடுபட்ட எஸ். சங்கரன், முல்லை முத்தையா, புதுமைப்பித்தன், ரகுநாதன், முகமது ஷெரீபு, எஸ். இராமகிருஷ்ணன் ஆகியோர் அமெரிக்க நாவல்களை எதையும் மொழிபெயர்க்கவில்லை. அதேபோல அமெரிக்க நூல்களை மொழிபெயர்த்த க.நா.சு, என். கே. வேலன், சோ. சண்முகம், ஜான். துரைராஜ், எஸ். வேதரத்னம், தெய்வ சிகாமணி ஆகியோர் ரஷிய மொழி நூலை மொழிபெயர்க்கவில்லை.


க.நா.சு., அப்பாதுரை ஆகியோர் பிறமொழி நூல்களைக் கூடுதலாக மொழிபெயர்த்துள்ளனர். அவற்றை ஆங்கிலவழியாக மொழி பெயர்த்திருக்கலாம். மொழிபெயர்ப்புப் பணியில் தெளிவாக வெளிவந்துள்ள இரு முகாம்கள் படைப்பு இலக்கியத் துறையில் வெளிப்பட்ட எழுத்தாளர்களின் கோட்பாட்டுச் சர்பை ஒட்டியே உள்ளதைக் காண முடிகிறது. அமெரிக்க இலக்கியப் படைப்புகளை மொழிபெயர்த்தவர்களும் ரஷ்ய நாவல்களை மொழி பெயர்த்தவர்களும் முழுக்க முழுக்க இருவேறு முகாம்களைச் சேர்ந்தவர்கள் என்பதைக் காணமுடிகிறது.


ரஷ்ய, அமெரிக்க நூல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட முறைமை குறித்தும் நாம் பார்க்க வேண்டியுள்ளது. ரஷ்ய நூல்கள் இந்திய - சோவியத் உறவின் அடிப்படையில் ராதுகா, முன்னேற்றப் பதிப்பகம், அயல்மொழிப் பதிப்பகம் ஆகியவற்றின் விற்பனை என்.சி.பி.எச் சார்ந்து இயங்குவது நாமறிந்ததே.


ஸ்டார் பிரசுரத்தின் பதிப்புரை ஒன்று உலக மொழிகளின் உண்மைகளைத் தமிழில் தரும் நோக்கத்தை வெளிப்படுத்தும்போது, “குறைந்த செலவில், குறைந்த பக்கங்களில் அமெரிக்க நீலமணி நூல்கள் போல், நமது தமிழிலும் நூல்களைக்கொண்டு வரவேண்டும் என்ற ஆர்வமே, இந்த முயற்சியில் எங்களை ஈடுபடச் செய்வதாகும்” என்று கூறுவதை மேற்கோள்காட்டி தமிழ் மொழிபெயர்ப்பு நூல் வெளியீட்டில் அமெரிக்க நாட்டுப் பதிப்பக வெளியீட்டு முறையினைப் பின்பற்றுவதாகக் குறிப்பிடுவது முக்கியமானது (2004 80) என்கிறார் முருகேசபாண்டியன்.


தென்னிந்திய மொழிகள் புத்தக டிரஸ்ட், இந்தியாவின் வெளியீடாக வந்த கோன்-டிகி என்ற நூலின் நூன்முகத்திலிருந்து சிவகாமி (2004 : 86) மேற்கோள் காட்டுகிறார். தென்னிந்திய மொழிகளாகிய தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிகளிலும் அறிவும் கலையும் நிறைந்த நூல்களைக் குறைந்த விலைக்கு வெளியிடுவதை ஆதரிப்பதேயாகும்” என்று குறிப்பிட்டு இந்நிறுவன அமைப்பாளர்கள் பற்றி மேலும் சொல்கிறது. ‘போர்டு நிலையத்தாரும் தென்னிந்திய பல்கலைக்கழக துணைவேந்தர்கள் ஏழ்வரும் சேர்ந்து சிந்தித்து.....’ இதனை நிறுவிய குறிப்பு அவர்கள் நூல்களில் இருப்பதாகச் சிவகாமி குறிப்பிடுகிறார்.


அமெரிக்க அரசு ‘தமிழ் மொழிபெயர்ப்பில் நேரடியாக ஈடுபடவில்லை’ எனக் குறிப்பிடும் முருகேச பாண்டியன் இந்த ஃபோர்ட் நிறுவன இடையீட்டைக் குறிப்பிடவில்லை. பம்பாயில் உள்ள பெர்ல் பப்ளிகேஷன்ஸ் லிமிடெட் நிறுவனத்துடன் அமெரிக்க அரசு பம்பாயில் உள்ள பெர்ல் பப்ளிகேஷன்ஸ் லிமிடெட் நிறுவனத்துடன் அமெரிக்க அரசு செய்துகொண்ட ஒப்பந்தப்படி 10 நூற்கள் தமிழில் வந்துள்ளதென அவர் குறிப்பிடுகிறார்.


யுனெஸ்கோ நிறுவனமும் மொழிபெயர்ப்பில் ஆர்வம் காட்டியதைக் காணமுடிகிறது. ஆண்டுதோறும் இந்நிறுவனம் வெளியிடும் மொழிபெயர்ப்பு நூற்றொகையில் (International Bibiliography of Translation) உலக மொழிகளில் நிகழும் மொழிபெயர்ப்பு பட்டியல் இடம் பெறுவது இவ்வியலுக்கு மிக முக்கிய ஆதாரமாகும். அதன் அடிப்படையில் தமிழ் சார்ந்து நடந்த கொடுக்கல் வாங்கல்கள் இன்னும் முழுமையாக ஆய்வுக்குட்படுத்தப் பட்டதாகத் தெரியவில்லை.


மொத்தத்தில் 1950-1970 காலகட்டத்தில் காலனிய அரசு மூலம் ஏற்பட்ட தொடர்பு காரணமாகப் பிரித்தானிய நூல்கள் தமிழில் மொழிபெயர்க் கப்படுவது தொடர்ந்து நடந்து வந்துள்ளது. அண்டையில் உள்ள பாண்டிச்சேரியில் பிரெஞ்சு தொடர்பு காரணமாகப் பிரெஞ்சு நூற்கள் மொழிபெயர்ப்பு சீராக இருந்துள்ளது.


ரஷ்ய நூல்கள் மொழிபெயர்ப்புக்கு நிறுவன மயமாக்கப்பட்ட அமைப்பு நிலைபெற்றது. அமெரிக்க நூல்கள் மொழிபெயர்ப்பு நேரடியாக இல்லாவிட்டாலும் தமிழ்ப் படைப்பாளிகளது கொள்கை சார்பு, நிதி ஆதாரம் ஆகியவை மூலம் தொடர்ந்தன.


மொழிபெயர்ப்பு நூல் வெளியீடுகள் தொடர்பான சில விவாதங்களையும் எழுப்புவது பொருத்தமாகத் தோன்றுகிறது. முருகேச பாண்டியன் இச்சிக்கல்களைப் பின்வருமாறு தொகுக்கிறார்: “தமிழில் மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிட்டுள்ள சில பதிப்பகங்கள் மூலநூல், ஆசிரியர் பற்றிய தகவல்களை மட்டும் முன் அட்டை அல்லது தலைப்பு பக்கத்தில் தந்துள்ளன. சில பதிப்பகங்கள் வெளியிட்டுள்ள மொழிபெயர்ப்பு நூற்களின் முன்னுரையில் மட்டும் மொழிபெயர்ப்பு நூல் என்ற குறிப்பு உள்ளது.


சில பதிப்பகங்களை மூலநூலின் பெயரை மட்டும் குறிப்பிட்டு விட்டு மூல ஆசிரியர் பெயரைக் குறிப்பிடவில்லை. மூலப் பதிப்பகம், மூலநூல் வெளியான இடம், மூல நூல் பதிப்பிக்கப்பட்ட ஆண்டு போன்ற தகவல்களைச் சில பதிப்பகங்கள் மூலநூலை வெளியிட்ட நிறுவனத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி இந்நூல் வெளியிடப் பட்டுள்ளது என்ற தகவலையும் தந்துள்ளன” (2004:94)


இவை தவிர மூல ஆசிரியர் அனுமதி, பதிப்புரிமை ஆகியவை குறித்தும் சிக்கல்கள் எழுகின்றன. கூடுதலாக, பிறமொழி ஆசிரியர்கள், அவர்கள் காலம் குறித்த நமது அறியாமையும் இதில் அடங்கும். எடுத்துக்காட்டாக முருகேச பாண்டியன் “வால்டர் ஸ்காட், ஆலிவர் கோல்ட்ஸ்மித், சார்லஸ் டிக்கன்ஸ்” போன்றோரை ‘இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த’ படைப்பாளிகள் பட்டியலோடு சேர்த்துள்ளார். (2004:95) முப்பதாண்டுகளுக்கு முற்பட்ட வெளியீடுகளின் நிலைமையிலிருந்து நாம் இன்னமும் மாறவில்லை என்பதற்கான சான்றுகளும் காணப்படுகின்றன. 1950-1970கள் மற்றும் எண்பதுகளில் வெவ்வேறு சிறு பத்திரிக்கைகளில் வந்த மொழிபெயர்ப்புகள் பல இப்போது மறுபதிப்பு செய்யப்படுகின்றன. இவற்றின் பதிப்பு அறம் குறித்த சில கேள்விகளை முன்வைக்க விரும்புகிறேன்.


வாண்டா வாலிலெவ்ஸ்காவின் ‘வானவில்’ நாவலின் ஆர். ராமநாதன் - ஆர்.எச். நாதன் மொழிபெயர்ப்பு அலைகள் வெளியீடாக 2005இல் வெளிவந்துள்ளது. மறுபதிப்பு என வெளியீட்டு விவரக் குறிப்பில் இல்லாமல் போவதற்கு அரசு நூலகத்திட்டத்தின் கீழ் விற்பனை கிடைக்காமல் போகலாம் என்ற அச்சம் காரணமாக இருக்கலாம். ஆனால், பதிப்புரையில் பெ.நா.சிவம் அவர்கள் முதல் மொழிபெயர்ப்பு பவானி பிரசுரத்தால் வெளியிடப்பட்டது என்ற தகவலையும் மொழிபெயர்ப் பாளர்கள் 20-05-1946இல் எழுதிய முகவுரை குறித்தும் குறிப்பிட்டுள்ளார்.


ஆக்கூர் அனந்தாச்சாரி எழுதிய ‘டால்ஸ்டாய்’ என்ற நூல் சந்தியா பதிப்பகத்தாரால் 2002ல் வெளியிடப்பட்டுள்ளது. அதன் நூன்முகத்தில் ஆசிரியர், “ஆங்கிலத்தில் டால்ஸ்டாயின் சரிதம் 1000 பக்கம் கொண்டது. தமிழில் அவரது விரிவான சரிதத்தை வெளியிடவேண்டிய அவசியமெனத் திரு. வி. க முதலியார் விரும்பினார். அதற்கேற்ப அவ்விரிந்த சரித்திரத்தின் சாரம் முழுமையும் என்னால் இயன்றவரை இப்பதிப்பில் கொண்டுவர முயன்றிருக்கிறேன்” எனக் குறிப்பிடுகிறார். திரு. வி. க.வின் அணிந்துரை, ஜமதக்னியின் முகமலர் ஆகியவற்றோடு மறுவெளியீடாகி இருக்கும் இந்நூலில் முதல் வெளியீடு குறித்த நாள், ஆண்டு பற்றிய எந்தவிதக் குறிப்பும் இல்லை.


அதேபோல க.நா.வின் அன்புவழி என்ற சுவீடிஷ் நாவல் மொழிபெயர்ப்பை சந்தியா பதிப்பகம் 2002இல் வெளியிட்டுள்ளது.


இந்நூலின் முதல் வெளியீடு நோபல் பரிசு பெற்ற நூல் மொழிபெயர்ப்பில் ஈடுபட்ட ஏ. கே. கோபாலன் பதிப்பகத்தால் 1956இல் செய்யப்பட்டது. இது பற்றிய குறிப்பு அந்நூலை 1995இல் இரண்டாம் பதிப்பு எனக் குறிப்பிட்டு வெளியிட்ட ‘வேர்கள்’ பதிப்பக வெளியீட்டில் கிடைக்கிறது. அவர்கள் ‘அன்பு வழி’ என்ற க.நா.சு.வின் மொழிபெயர்ப்பு தலைப்பை ‘பாரபாஸ்’ என்ற மூல நூல் தலைப்பாக வெளியிட்டுள்ளனர். அ. கி. கோபாலன் பதிப்புக்கு க.நா.சு கொடுத்த முன்னுரை 1995 பதிப்பிலும் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் 2002 சந்தியா பதிப்பக வெளியீட்டில் ‘பாரபாஸ்’ என்ற 1951 நோபல் பரிசு பெற்ற நாவல் என்ற குறிப்பும் க.நா.சு.வின் முன்னுரை (தேதி / ஆண்டு இல்லாமல்) காணப்படுகிறது. அதேபோல் ச.து.சு. யோகியார் மொழிபெயர்ப்பில் வந்த கடலும் கிழவனும் நூலின் முதல் வெளியீடு குறித்தும் தகவல் இல்லை. அதேபோல தளவாய் சுந்தரம் தொகுத்த மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் தொகுப்புகள் சந்தியா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளன.


எமிலிக்காக ஒரு ரோஜா (2002) என்ற நூலின் தொகுப்பாளர் குறிப்பில் ‘எழுத்து’, ‘இலக்கிய வட்டம்’ இதழ்களில் இருந்து தொகுக்கப்பட்ட கதைகள் என்று தளவாய் சுந்தரம் குறிப்பிடுகிறார்.


“அனைத்தும் ஆங்கிலம் வழியாகத் தமிழுக்கு வந்தவை” என்பதையும் சொல்கிறார். சிறுபத்திரிகைகள் வழி தமிழுக்குக் கிடைத்த மொழி பெயர்ப்புகள் குறித்து உரிய பாராட்டுகள் வழங்குகிறார்.” மேலும், “ஆனால், அவற்றில் புத்தகமாக வெளிவந்தவற்றை விட ஆங்காங்கே பத்திரிகைகளில் உதிரியாக இருப்பவை தான் அதிகம். புத்தகமாக வெளிவந்தவற்றிலும் பலவற்றிற்கு இப்போது மறுபதிப்பு இல்லை.


தற்காலத் தேவையுடைய சிறந்த மொழிபெயர்ப்புகளைத் திரும்பவும் கொண்டு வருவதை சந்தியா பதிப்பகம் செய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாகப் பத்திரிகைகளில் வெளிவந்து தொகுக்கப்படாமல் உதிரியாக இருக்கும் குறிப்பிடத்தக்கச் சிறந்த மொழிபெயர்ப்புச் சிறுகதைகளைப் புதிய வாசகர்களின் கவனத்துக்குள்ளாக்கும் விதமாகத் தொகுத்துப் புத்தகமாக வெளியிட எண்ணினோம்” என்று குறிப்பிடுகிறார்.


தாஸ்தவ்ஸ்கியின் ‘சூதாடி’ நூலின் மூலம், வழிநூல் மொழிபெயர்ப்பாளர் பற்றிய குறிப்புகூட இல்லை (சத்தியா:2003) 2002இலேயே வெளிவந்த ‘பிரபஞ்சகானம்: உலகச் சிறுகதைகள்’ தொகுப்பில் தளவாய் சுந்தரம் சிறுபத்திரிகைகளைத் தேடி அறிவதில் உள்ள சிரமம் பற்றிக் குறிப்பிடுகிறார். “இக்கதைகள் மொழிபெயர்ப்பாகி வெளிவந்த காலகட்டத்திற்குப் பிறகு வாசிப்புப் பழக்கத்திற்கு ஆட்பட்டு, தேடிப்படிக்கும் ஆவலிருந்தும் அப்பத்திரிகைகள் கிடைக்காத வாசகர்களின் எண்ணிக்கை பெருமளவில் இப்போது இருக்கக்கூடும் என்று கருதி, அவர்களுக்கு இக்கதைகளைப் படிக்கத் தருவதை நோக்கமாகக் கொண்டு இத்தொகுப்பு கொண்டுவரப்பட்டிருக்கிறது” என்கிறார்.


நான் கண்டவரையில் இந்த இரு தொகுப்புகளில் இக்கதைகளின் மூலநூல், வழிநூல் விவரங்கள், மொழிபெயர்க்கப்பட்டு வெளியான ஆண்டு, பிற விவரங்கள் எதுவும் கொடுக்கப்படவில்லை. தளவாய் ஏற்கெனவே சொன்னது மாதிரி அவற்றைத் தேடிப் படிப்பதும் சிரமம். எனவே, இன்னும் இக்கதைத் தொகுப்புகள் அடிப்படையில் ஆய்வு செய்பவர்களுக்குத் தமிழக மொழிபெயர்ப்பு வரலாற்றின் சமீபத்திய வரலாறு கூடத் தெரியாது போய்விடும் அல்லது வாசகர்களுக்கு இதெல்லாம் தேவையில்லை என்பது தொகுப்பாளரின் ஊகமாக இருக்கலாம். அது தவிர, இக்காலக் குறிப்பு இல்லாத காரணத்தால் எழுத்து, இலக்கிய வட்டம் இதழ்கள் இரண்டும் நமக்கு ஒரே காலத்தில் வந்தவை போன்ற மாயை உருவாக்குகின்றன.


சிறுபத்திரிகைகளில் வெளிவந்தவை தொகுக்கப்பட்டு வெளிவந்துகொண்டிருக்கும் சூழல் இது. ‘இலக்கிய வட்டம்’ (தொகு: கி. அ. சச்சிதானந்தம், சந்தியா: 2004) ‘நடை’ (தொகு: கி. அ. சச்சிதானந்தன், சந்தியா, 2004), ‘கசடதபற’ (தொகு: சா. கந்தசாமி, கலைஞன், 1999) போன்றவற்றைக் குறிப்பிடலாம். இத்தொகுப்புகள் படைப்பிலக்கியத்திற்கு முன்னுரிமை கொடுப்பதால், மொழிபெயர்ப்பு இரண்டாம் பட்சமாகவே வெளியிடப் படுகின்றன. எனவே முதல் மொழிபெயர்ப்பு குறித்து நேரிடையாக அறிவதற்கு முயற்சி எடுப்பவர்களுக்கு மட்டுமே அவை தெரியக்கூடும்.


தொகுப்பு மற்றும் பதிப்புப் பணி என்பது பொறுப்புணர்வுடன் கூடிய தொழில்முறை அறிவும் பயிற்சியும் கோரி நிற்பவை. அவற்றுக்கான அடிப்படை விதிகளைப் பின்பற்றுவது தார்மீக நியாயம்.


சமீபத்திய ‘விடியல்’ பதிப்பக மொழிபெயர்ப்புகளில் மூலநூல், வழிநூல் ஆகியவை பற்றிய குறிப்புகள் இடம் பெறுவதை எடுத்துக்காட்டாகக் குறிப்பிடலாம். இதில் மொழி பெயர்ப்பாளர்களும் அக்கறை காட்டுவது அவசியமாகிறது. மொழிபெயர்ப்பு கதைகள், ‘மௌனப்பனி ரகசியப்பனி’ (2003) என்ற தொகுப்பாக வெளியிடப்பட்டுள்ளது. (‘காலச்சுவடு’ இதழ்களில் வெளிவந்த மொழிபெயர்ப்புக் கதைகள்) அதில் “சுதந்திர மொழிபெயர்ப்பு போன்ற தழுவல் இலக்கியத்தின் நவீன ஆவிகள் காலச்சுவடில் இடம்பெற்றதில்லை” என்று ஆணித்தரமாகக் குறிப்பிடுகிறார். ஆனால் மூலநூல்/ஆசிரியர் குறிப்பு தரும் இப்பதிப்பகம் வழிநூலான ஆங்கில மொழிபெயர்ப்பு பற்றித் தகவல் தருவதில்லை.


ஒப்பிட்டு பார்க்கப் பயன்படுத்தப்படும் ஆங்கில மொழிபெயர்ப்பின் தராதரம் குறித்து அறிவதற்கான ஆய்வு பெரும்பாலும் மேற்கொள்ளப் படுவதில்லை. அதற்கான வாய்ப்பும் குறைவு. ‘மாண்டோ படைப்புகள்’ (நிழல், 2004) நூல் மொழிபெயர்ப்பாளர் மற்றும் தொகுப்பாளர் ராமாநுஜம் காணக்கிடைத்த ஆங்கில மொழிபெயர்ப்புகளில் உள்ள சிக்கல்கள் பற்றிக் குறிப்பிடுகிறார். காலித் ஹாசனின் ஆங்கில மொழிபெயர்ப்புகள் மாண்டோ மொழிபெயர்ப்பு பணியில் பெயர் பெற்றவை. அவரது ஆங்கிலம் குறித்துப் பாராட்டும் ராமாநுஜம் அவரது மொழிபெயர்ப்பில் உள்ள சிக்கல்களைப் பின்வருமாறு விளக்கியுள்ளார்.


ஏறக்குறைய எல்லாக் கதைகளிலும் அவர் பல பத்திகளை விழுங்கியிருக்கிறார். உதாரணத்திற்கு 7,500 வார்த்தைகள்கொண்ட மோசல் கதையின் 700 வார்த்தைகள் விழுங்கப்பட்டுள்ளன என்று வேறு பல கதைகளில் வெட்டப்பட்ட பகுதிகளைக் குறிப்பிடுகிறார். மம்மி கதையை மூன்று வெவ்வேறு ஆசிரியர்களின் மொழிபெயர்ப்பில் படித்தபோதுதான் காலித் ஹாசன் விழுங்கிய விபரீதம் புரிந்தது. அவர் கதையின் தலைப்புகளை மாற்றிய விதமும் கதையின் வாசிப்பைத் திசை திருப்புவதாக அமைந்துள்ளது. ‘திற’ என்ற தலைப்புக்குப் பதில் ‘திரும்புதல்’ என்று அவர் மாற்றியிருப்பதை உதாரணமாகச் சொல்லலாம்” என்கிறார்.


அது தவிர, உருது மொழிப் புலமை பெற்றவரைக்கொண்டு தனது மொழிபெயர்ப்பு ஒப்பிட்ட தகவலையும் குறிப்பிடுகிறார். மொழிபெயர்ப்புப் பணியில் இடம்பெறவேண்டிய ஆய்வுப் பணியை இம்முன்னுரை தெளிவாக வெளிப்படுத்துகிறது. இனியேனும் வாசகர்கள், மாணவர்கள், மொழிபெயர்ப்பாளர், தொகுப்பாளர்கள், பதிப்பகத்தார் தத்தம் பொறுப்பு உணர்ந்து மூலமொழி, மூலநூல், மூல ஆசிரியர், வழி நூல், வழிநூல் ஆசிரியர், வெளியீடு இயன்றால் அதைக் குறித்த விமரிசனம், மொழிபெயர்ப்பு விவரங்கள், மொழிபெயர்ப்பு வெளியீடு ஆகியவற்றை முழுமையாகத் தருவதின் முக்கியத்துவத்தை உணர்வது நம்முன் உள்ள கடமையாகும். ஏனெனில் மொழிபெயர்ப்பு இருமொழிகளில் வந்த இரு படைப்பாளிகள் இரு நூல்கள் தொடர்பானது மட்டுமல்ல, இரு பண்பாட்டு வரலாறுகளின் தரவுகள்.


...மேலும்

Jan 29, 2010

கற்பு - அரசியல்- சைதை ஜெ
ஆதிக்க ஆண்களின் பாலுணர்வுத் தேவைகளையும் உடமைச் சமூகத்தின் பண்பாட்டு உணர்வுகளையும் உள்வாங்கி ஆகச் சிறந்த நுட்பங்களுடன் பெண்களுக்கெதிராக உருவாக்கப்பட்ட கருத்துருவே கண்ணகியும் மாதவியும். கற்பு நெறியும் பரத்தமை நெறியும் சமூக ஒழுங்காக கட்டமைக்கப்பட்டு லட்சுமணன் கோடு கீறப்பட்டது. பத்தினித் தன்மை மிக உன்னத நிலையாக வரையறை செய்யப்பட்டும் பரத்தமை கடமையாக்கப்பட்டும் பெண்ணின் பாலியல் நடவடிக்கைகள் ஆணின் ஆதிக்கத் தேவையிலிருந்து ஒழுங்கு படுத்தப்பட்டன. மீறி கள்ளக்காதலில் (வார்த்தை என்னுடையதல்ல - ஊடகங்கள் தந்தது) ஈடுபடும் பெண்களை வெட்டிக் கொல்லவோ, உயிரோடு எரித்துப் பொசுக்கவோ உணர்வு ரீதியான உரிமை வழங்கப்பட்டுள்ளது. விரிந்து பரந்த இவ்வுலகில் கற்பு நிலையிலிருந்து பெண்ணின் புழங்குமிடம் பேசும் வார்த்தைகள் அணியும் ஆடைகள் கட்டுப்படுத்தப்பட்டன.


எந்த ஆண் உடல் மீதும், பாலியல் ரீதியான பலாத்காரம் பெண்ணால் நிகழ்த்தப்படுவதில்லை. ஆனால் பெண்ணுடல் மட்டுமல்ல பெண்ணின் சாயல் கொண்ட உடல் கூட வன்முறையின் களமாகிறது. எனவேதான், நமது தாய்மார்களின் சேலை மடியை - எரித்துப் பொசுக்கும் நெருப்பாக - பெண் பிள்ளைகள் வளர்கின்றனர். மக்கள், சாதி ரீதியாகவும் வர்க்கரீதியாகவும் ஒடுக்கப்படும்போது பெண் மட்டும் கூடுதலாக உடல் ரீதியாகவும் இம்சிக்கப்படுகிறாள்.


பெண்ணின் கார் கூந்தலும் ஆரஞ்சு இதழ்களும் ததும்பும் மார்பகமும் கொடி இடையும் பருத்த பிருஷ்டமும் ஆண்களால் வர்ணிக்கப்பட்டு கொண்டாடப்படுகின்றன. அவை ஆண்களின் போகத்திற்குரிய சொத்தாகக் கருதப்படுவதால், அதன் நீட்சியாக நவீன இணையதளம் வரை விளம்பரங்களில் பெண்களின் மார்பகங்கள் வெளிப் பிதுங்குகின்றன. ஆண்களின் கண்களை அலைய விட்டு தங்களின் பொருளுக்கு விலை பேச.


இந்தியச் சமூகத்தில் ஆணாதிக்கச் சிந்தனைகளால் மட்டுமின்றி இந்துத்வ கருத்தியலாலும் பெண் ஒடுக்கப்படுகிறாள். பெண்ணடிமைத் தனம் இந்துப் பண்பாட்டின் சாரமாய்த் திகழ்கிறது. வேதங்களைக் கற்பதற்கே எழுத்தறிவு என்றிருந்த காலத்தில் இந்துத்துவம் பெண்களுக்கும் சூத்திரர்களுக்கும் எழுத்தறிவை மறுத்தது. வேதங்களுக்கும் பெண்களுக்கும் எந்தத் தொடர்புமில்லை என மனு பிரகடனம் செய்தான். கலப்பு ஏற்படாமல் சாதித் தூய்மையைப் பாதுகாக்க கற்பு எனும் கருத்தியல் கட்டி எழுப்பப்பட்டது. கல்வி மறுப்பு, தேவரடியாள்களைத் தயாரிக்கும் தேவதாசி முறை, சிறார் திருமணம், உடன் கட்டை ஏறுதல், கணவனை இழந்த உடன் தரிசாகி விடுதல், சுட்டமண்ணும் பச்சமண்ணும் ஒட்டாதெனல், உண்டி சுருக்குதல், மொட்டையடித்து வெள்ளுடை தரித்தல் என இந்துத்துவம் பெண்களுக்கு வழங்கிய பரிசுகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.


ஆணாதிக்கத்தைக் கற்பிக்கும், நிலை நிறுத்தும் அமைப்பாகவே குடும்பம் கட்டமைக்கப்பட்டுள்ளது. உடைமையாளர்களுக்குத் தேவையான - கீழ்ப்படிதலுள்ள தொழிலாளர்களையும் தந்தை, சகோதரன், கணவன், மகன் என சகல ஆண்களுக்கும் அடி பணிந்து கிடக்கின்ற பெண்களையும் உருவாக்குகின்றன நம் குடும்பங்கள். சாண் பிள்ளைகளைக் கூட ஆண் பிள்ளைகளாக்குவதும் கல்லையும் புல்லையும் கூட கணவனாக்குவதும் உத்தியோகத்தை புருஷர்களுக்கு மட்டு மேயான லட்சண மாக்குவதும்


இந்துத்துவ குடும்பத்தின் மேன்மை. பெண்ணுக்கான இடத்தை நிர்ணயிப்பதும் அவளின் வார்த்தைகளை வரையறுப்பதும் அச்சம் மடம் நாணத்துடன் வடிவ மைப்பதும் கூலி இல்லாத வேலையாளாக அவளை உருவாக்குவதும் குடும்ப அமைப்பின் தனிச்சிறப்பு.


உலக மயம் குவிக்கும் பொருட்களுக்கு சந்தை பிடிக்க நெறியற்ற முறையில் பெண் விளம்பரப் பொருளாக்கப்படுகிறாள். கவர்ச்சி, கூடுதல் கவர்ச்சி என்று பாலியல் பொருளாக பெண் குறித்த பிம்பம் கட்டப்படுவதால், பாலியல் பலாத்காரத்திற்கு மிக எளிதாக ஆட்படுத்தப்படுகிறாள் பெண். ஊடகங்கள் காட்சிப்படுத்துகிற ஆடம்பர வாழ்க்கை முறை, பொருட்களின் மீதான நுகர்வுத் தாகம் - குடும்பத்தில் பெண் மீதான வன்முறையை மேலும் அதிகரித்துள்ளது. வேலையின்மை, விலைவாசி உயர்வு, குறைந்த சம்பளம் போன்ற பொருளியல் சிக்கல்களாலும் பெண்களே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். ஏனெனில் குழந்தை வளர்ப்பு உள்ளிட்ட குடும்பச்சுமைகளை சுமக்க வேண்டியவர்களாக பெண்களே உள்ளனர்.


அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள், ஆண் சமூகத்தின் வேட்கைக்குப் படைக்கப்படும் அழகிய விருந்தாக பெண்ணின் உடலைக் காட்சிப்படுத்துகின்றன. ஆடை குறைப்பு, அங்கங்கள் குலுங்க ஆடல் பாடல், இரு பொருள் வசனங்கள் என அடித்து நொறுக்குகின்றன. ஆனால், விஞ்ஞானிகளையும் தொழில்நுட்ப வல்லுநர்களையும் உருவாக்கும் உயர்கல்வி நிறுவனங்களோ நேர் எதிராக ஆடைக் கட்டுப்பாடுகளுக்கான அவசரச் சட்டங்களை இயற்றி அடித்து நொறுக்குகின்றன. இரண்டுக்குப் பின்னாலும் அணியும் ஆடையின் ஊடாக உள்ளிருக்கும் அவயங்களை சுவைக்கும் காமக் கண்களும் கயமை நெஞ்சங்களும் தடியுடன் நிற்கின்றன.


1850களில் தென் திருவிதாங்கூர் சமஸ்தான எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நாடார் பெண்கள் மார்பை மறைக்கக் கூடாது, முழங்காலுக்குக் கீழே உடுத்தக் கூடாது. தங்க நகைகள் அணியக் கூடாது, இடுப்பில் குடம் எடுக்கக் கூடாது என்பதுதான் நிலை. மார்பை மறைக்காமல் தலையில் குடம் தண்ணீரை சுமந்து செல்லும் பெண்ணின் நிலையை ஒரு முறை உணர்ந்து பாருங்கள். சாதிய ஒடுக்குமுறையின் கோர முகம் இது. மேல்சாதி நீசத்தனங்களுக்கு சாதகமாகத் தான் சமஸ்தான அரசின் ராஜப் பிரகடனமும் இருந்தது.


தோள் சீலை அணிந்து மார்பை மறைத்ததற்காக மேல் சாதிக்காரர்களால் நாடார் பெண்கள் கடைத் தெருக்களில் அடித்து உதைக்கப்பட்டார்கள். ஊர்ச் சந்தை ஒன்றில் ஒரு சிறு அதிகாரி அரசாங்கத்திடமிருந்து, தான் அதிகாரம் பெற்றதாகச் சொல்லி ஒரு நாடார் பெண்ணின் மார்புத் துணியை கிழித்து எறிந்தான். 1859 டிசம்பர் 27-ல் மேக்கோடு எனும் கிராமத்தில் ஜெபவீடு கொளுத்தப்பட்டது. நாகர் கோயிலில் உள்ள ஆங்கிலேயப் பிரதிநிதியின் பங்களாவுக்கும் கூட தீ வைக்கப்பட்டது. பல ஜெபவீடுகளும் கிறித்துவ பள்ளிக் கூடங்களும் அழிக்கப்பட்டன. ‘மீட்’ எனும் கிறித்துவ மிஷனரியாரைக் கொல்ல முயற்சி நடந்தது. இத்தனை அடியும் உதையும் இழப்புகளும் - ஒரு நாடார் பெண் தன் மார்பகத்தை மறைத்து குப்பாயம் அணியவும் குட்டை ரவிக்கை அணியவும் ரவிக்கையின் மேலாக தோளில் முந்தானையைப் போடவும் உரிமை கோரியதற்காகத் தான்.


பெண்ணின் திருமண வயதை 14 என நிர்ணயிக்கும் ‘சாரதா மசோதா’ டில்லி மத்திய சட்ட சபையில் விவாதத்திற்கு வந்தபோது, விவாதத்தில் பங்கேற்ற காங்கிரஸ் சுயராஜ்ஜிய கட்சியின் சென்னை மாகாண பிரதிநிதிகள் கடுமையாக எதிர்த்துப் பேசினர். தந்தை பெரியார் அவர்களால் ‘இந்து வர்ணாசிரமப் பிரதிநிதி’ என்றழைக்கப்பட்ட எம்.கே. ஆச்சாரியா ‘பால்ய விவாகம்’ இருந்தாலொழிய வாழ்க்கையில் உண்மையான ஒழுக்கம் ஏற்படுவது அசாத்தியம். குடும்ப வாழ்க்கை துக்கமயமாகி சதா ஆபத்துக் குள்ளாகி விடும். உண்மையான கற்பு என்பது சாத்திய மில்லை. பெண்களின் வாழ்க்கை நாசமடைந்துவிடும் என்று பேசினார்.


மட்டுமின்றி, தேவதாசி முறை என்ற பெயரில், இந்து மத அங்கீகாரம் பெற்ற சட்டப்பூர்வ விபச்சார முறையை ஒழித்துக்கட்ட டாக்டர் முத்துலட்சுமி அவர்கள் சென்னை மாகாண சட்டசபையில் மசோதா ஒன்றை முன்மொழிந்த போது, இம்மசோதாவைக் கடுமையாக எதிர்த்தவர்களில் மிக முக்கியமானவர் சத்தியமூர்த்தி ஐயர் ஆவார். சத்தியமூர்த்தி ஐயர், பெருந்தலைவர் கு. காமராஜ் அவர்களின் அரசியல் குருவும் தமிழக மக்களிடம் பிரபலமடைந்திருந்த விடு தலைப் போராட்ட வீரரும் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் ஆவார்.


1941-ல் பி.என். ராவ் அவர்கள் தலைமையில் ஆங்கிலேய இந்திய அரசால் அமைக்கப்பட்ட குழு நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பல தரப்பினரின் கருத்துக்களையும் கேட்டறிந்து இந்து சட்டத் திருத்த மசோதா ஒன்றை உருவாக்கியது. 1946 முதல் இம் மசோதா மீது மத்திய சட்டசபையில் விவாதமும் நடை பெற்று வந்தது. நாடு சுதந்திரமடைந்த பிறகு டாக்டர் அம்பேத்கர் இம்மசோதாவின் வடிவை மாற்றி அமைத்தார். ஒரு தார மணம், விவாகரத்து செய்யும் கணவனிடமிருந்து மனைவிக்கு ஜீவனாம்சம், கூட்டுக் குடும்பத்தில் பெண்களின் சொத்துரிமை ஆகியன பற்றி வடிவமைக்கப்பட்டிருந்த விதிகளை முன் வைத்து அம்பேத்கர் பேசத் தொடங்கியதும் நாடு முழுவதிலுமிருந்த இந்து சமய அறிவாளிகள் இரு முகாம்களாகப் பிரிந்து காரசாரமாக விவாதிக்கத் தொடங்கினர். இம் மசோதாவின் சீர்திருத்தங்களை வெறுத்தவர்களால் ‘மனு’ முன்னிறுத்தப்பட்டார். இந்து சமய பழக்க வழக்கங்களையும் மரபுகளையும் முற்றாக ஒழித்துக் கட்டுவதே திருத்தங்களின் நோக்கம் என்று குறை கூறினர்.


இம்மசோதா சட்டமானால் இந்து சமூகத்தைத் தாங்கிக் கொண்டிருக்கும் அத்தனைத் தூண்களும் ஆட்டம் கண்டுவிடும் என்றனர். நாட்டின் குடியரசுத் தலைவராகப் பதவி வகித்த டாக்டர் ராஜேந்திர பிரசாத் பிரதமர் நேருவிற்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் புரட்சிகரமான மாற்றங்களை உள்ளடக்கியுள்ளதால், இம்மசோதாவைத் தான் முழு மூச்சாக எதிர்ப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். குடியரசுத் தலைவரே எதிர்ப்புக் களத்தில் முழு மூச்சாக குதித்தார். ராஜேந்திர பிரசாத் சுட்டிக்காட்டியதைப் போல, இதில் புரட்சிகரமாக ஏதும் இல்லை, மிகவும் மிதவாதமான சமூக சீர்திருத்தம் தான் இது. எனினும் இந்துத்வ பழமைவாதிகளின் கடுமையான தொடர் தாக்குதலினால் 1949-ல் அம்பேத்கர் அவர்களால் முன்மொழியப்பட்ட சீர்திருத் தங்களை நீர்த்துப் போகச் செய்து 1955-ல் சட்டமாக்கினர்.
தொடர்ந்து உலக, உள்நாட்டு சமூக, அரசியல் நிலைமைகளில் ஏற்பட்ட மாற்றங்களுக்கேற்ப பெண்களுக்கு ஆதரவான புதிய சட்டங்களும், சட்ட திருத்தங்களும் இந்திய நாடாளுமன்றம், சட்ட மன்றங்களால் உருவாக்கப்பட்டன. எனினும் இன்றைக்கு விவாதத்திலிருக்கும் நாடாளுமன்றத்திலும் சட்டமன்றங்களிலும் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதா உட்பட - பெண்கள் முன்னேற்றம் சம்பந்தப்பட்ட சீர்திருத்தங்கள் எதுவொன்றும் இலகுவில் நிகழ்ந்து விடவில்லை. அதே சமயம் எதையும் நிகழ்த்தவிடாமல் நிறுத்தி வைக்கவும் ஆதிக்க சக்திகளால் இயலவில்லை.


கற்பு குறித்த வாதங்கள், செருப்பு துடைப்பம் ஆர்ப்பாட்டங்கள், வழக்குகள், கைது பிடியாணைகள், விளையாட்டு வீராங்கனையின் ஆடை குறித்த மிரட்டல்கள், உயர் கல்வி பெறும் மாணவர்களுக்கெதிரான அவசரச் சட்டங்கள், பெண் கவிஞர்களின் உடல் மொழி கவிதைகளுக்கெதிரான தீப்பந்தங்கள் - இவைகள் பெண்களின் குரல்வளையை அறுக்கும் பாசிச அடக்கு முறையை உணர்த்துகின்றன. மாற்றுக் கருத்துக்களை முன்வைப்போரை அவமானப்படுத்தும், அச்ச மூட்டும் நோக்குடன் நிகழ்த்தப்படுகின்றன. வேலைக்குப்போகும் பெண்கள் ஒழுக்கங்கெட்டவர்கள் எனும் சங்கராச்சாரியாரின் தீய நாக்கின் தொடர்ச்சியாக உணரப்படுகின்றன.


பெண்களுக்காக இயற்றப்பட்ட சட்டங்களும் உருவாக்கப்பட்ட சிந்தனைகளும் சாதிய - ஆணாதிக்க இந்திய சமூகத்திற்குள் ஊடுருவி குடிமைச் சமூகத்தின் கருத்துக் கோட்டைக்குள் என்ன விளைவை ஏற்படுத்தியுள்ளன என்பதை நோக்கும்போதுதான் கற்பு - அரசியல் - ஆணாதிக்க சிந்தனையின் வலுவான பாதுகாப்பு அரணாகத் திகழ்வதை உணர முடியும்.


பாலியல் சுதந்தரம் என்பது பெண்களுக்கு முற்றிலுமாக மறுக்கப்படுகிற ஒன்றாகும். ‘கண்ட நேரத்தில் கண்டவனோடு மேய்வதற்கு’ என கொச்சை யான வார்த்தைகளால் மிக மோசமாக அவமானத்திற்கு ஆளாக்கப்படுகிற ஒன்றுமாகும். அதன் உண்மையான சாரம் காது கொடுத்துக் கேட்கப்பட்டதே இல்லை. அது, ஒரு பெண் யாரோடு சேர்ந்து வாழ வேண்டும் என்பதை நான்கு ஆண்கள் சேர்ந்து முடிவு செய்வதற்கு எதிரானது. ஒரு பெண்தான் யாரோடு சேர்ந்து வாழ வேண்டும் என்பதை தன் விருப்புடன் முடிவு செய்வதற்கான உரிமையைக் கோருவது, வற்புறுத்திப் பெண்ணைக் கட்டிக் கொடுக்கும் வழக்கத்திற்கெதிரானது.


பெண்களுக்கு விடுதலை கொடுப்பதில் இன்னும் முக்கியமான ஆரம்பப் படிகள் எவையென்றால் - என பத்துப்படிகளை பாரதி சுட்டிக்காட்டுகிறார்.
அதில்

  1. பெண்களை ருதுவாகுமுன்பு விவாகம் செய்து கொடுக்கக் கூடாது.
  2. அவர்களுக்கு இஷ்டமில்லாத புருஷனை விவாகம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தல் கூடாது.
  3. விவாகம் செய்து கொண்ட பிறகு அவள் புருஷனை விட்டு நீங்க இடம் கொடுக்க வேண்டும். அதன் பொருட்டு அவளை அவமானப்படுத்தக் கூடாது.
  4. புருஷன் இறந்த பின்பு ஸ்த்ரீ மறுபடி விவாகம் செய்து கொள்வதைத் தடுக்கக் கூடாது.
  5. விவாகமே இல்லாமல் தனியாக இருந்து வியாபா ரம், கைத்தொழில் முதலியவற்றால் கௌரவமாக ஜீவிக்க விரும்பும் ஸ்திரீகளை யதேச்சையான தொழில் செய்து ஜீவிக்க இடங்கொடுக்க வேண்டும்.
  6. பெண்கள் கணவனைத் தவிர வேறு புருஷனுடன் பேசக் கூடாதென்றும் பயத்தாலும் பொறாமை யாலும் ஏற்படுத்தப்பட்ட நிபந்தனையை ஒழித்துவிட வேண்டும்- என ஆறு படிகள் பெண்ணின் பாலியல் சுதந்திரம் குறித்து விவாதிக்கும் படிகளாகும்.


பெண்ணும் ஆணும் சேர்ந்துப் பழகும் வாய்ப்பும் சமூகக் கல்வியும் தான் சேர்ந்து வாழும் ஆணைத் தேர்ந்தெடுக்கும் உரிமையும் திறனையும் வழங்கும். தேர்ந்தெடுக்கும் உரிமைதான் தேர்ந்தெடுக்கும் திறனை வழங்கும்.


பாலுணர்வு என்பது ஆண்- பெண் பாலாருக் கிடையேயான கவர்ச்சிக் காரியமல்ல. ஒரு சமுதாயத்தின் எதிர்கால சந்ததியினரை உருவாக்கும் கடமையோடு இணைந்ததுமாகும். எனவே, பாலுணர்வு குறித்த அறிவியல் பூர்வமான அறிவு நம் இளைய தலைமுறையினருக்கு தேவை.


பெண்களின் ஆடை முதல் வார்த்தைகள் வரை ஒவ்வொன்றின் மீதான கட்டுப்பாடுகளையுமே சாதியத்துடன் இணைத்துப் பார்க்க வேண்டியது அவசியமாகிறது. சாதிய ஒடுக்குமுறையின் இறுக்கத்தில் உடைப்பை ஏற்படுத்த அகமண முறைக்கு எதிரான சிந்தனையோட்டத்தை திட்டமிட்டு உருவாக்க வேண்டும்.


பெண்கள் கல்வி, வேலை, சொத்துரிமை பெறுவது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு தாங்கள் வாழ்க்கைத் துணையை தேர்வு செய்வதற்கான உரிமையைப் பெறுவதும் முக்கியம். அதுவே சாதீய அமைப்பை ஓரளவுக்கேனும் அசைத்துப் பார்க்கும்.


பெண்கள் பாலியல் விவகாரங்களில் முழு உரிமை பெற்றவர்களாகவும் விஞ்ஞானப் பூர்வமான அறிவை பெற்றவர்களாகவும் திகழ வேண்டும். அதற்கேற்ப சமூகச் சூழலை உருவாக்குவது அவசியம். அதற்கு பாரதி, சிங்காரவேலர், பெரியார் சிந்தனைகள் தொடக்கமாய் துணையாய் அமையும்.


...மேலும்

Jan 28, 2010

பெண் உடலும் ஆளூமையும் - ஈரோடு தி. தங்கவேலு
வேறுபட்ட பரப்பும், முக்கியத்துவமும் உடைய இடங்களோடு, தொடர்புபடுத்தி ஒரு பண்பாட்டு கட்டத்தை விவரிக்கும் பொழுது, இந்தியா முழுவதும் பல்வேறு வளர்ச்சிக் கட்டங்களில், அடுத்தடுத்து பல பண்பாடுகளையுடைய மக்கள் முன்பு வாழ்ந்து வந்துள்ளனர். தற்போதும் வாழ்ந்து வருகின்றனர். சங்ககாலமும் இதற்கு விதிவிலக்கல்ல.


சங்ககாலத்தில் ஐவகை நிலங்களையும் ஐவகைப் பண்பாடுகளையும் காண்கிறோம். திணை என்பது நிலத்தையும் ஒழுக்கத்தையும் குறிப்பதாகவும் பொருள் கொள்ளப்படுகிறது. அகத்திணை ஒழுக்கங்களாக புணருதல் (குறிஞ்சி), இருத்தல் (முல்லை), ஊடல் (மருதம்), இரங்கல் (நெய்தல்), பிரிதல் (பாலை) எனச் சங்கப் புலவர் மரபு வரையறை செய்துள்ளது. ஒழுக்கம் அல்லது நடத்தை அவர்களின் பொருளில் வாழ்வின் பிம்பங்களாக பிரதிபலிக்கிறது.


தகாப்புணர்ச்சி அல்லது அகமணம் என்ற நிலையிலும், வேட்டையை மட்டும் பொருளியல் அடிப்படையாகக் கொண்டதுமான தாய்வழிச் சமூகத்தை சங்க இலக்கியம் பதிவு செய்யவில்லை. மாறாக தகுபுணர்ச்சியும்(புறமணம்) வேட்டையுடன் உணவு சேகரிக்கக் கற்றுக் கொண்டதுமான இனக்குழு (தாய்வழிச் சமூகம்) சமூகத்தையே காண முடிகிறது. அக மணமுறையிலிருந்து புறமணமுறைக்கு நுழையும் பொழுது, அச்சமூகம் பண்பாடு என்ற எல்லைக்குள் நுழைந்துவிடுகிறது. இதற்கான பொருளியல் காரணங்கள் இருக்கவே செய்தன. வேட்டையின் பலன் நிச்சயமற்று இருந்ததால் பழங்கள், காய்கறிகள், தேன், கிழங்குகள் ஆகிய உணவுப்பொருட்களை சேமிக்கத் தொடங்கினர்.


“கலையுணக் கிழித்த முழவு மருள் பெரும்பழம் / சிலை கெழு குறவர்க்கு அல்க மிசை வாகும்.” (புறம்:236). வேட்டையாடும் குறவர்கள் ஆண் குரங்கு கிழித்து உண்ட பெரிய பலாப்பழத்தை சிலநாட்கள் வைத்து உண்டனர். உணவு சேகரிக்க கற்றுக்கொண்ட மனிதன் மண்ணைக் கிளறி விதைக்கவும் கற்றுக்கொண்டான். இரும்பின் உபயோகம் இல்லை. நெருப்பை கண்டு பிடித்திருந்தான். எனவே புதர்களை நெருப்பிட்டு அழித்தான்


....கானவர் / கரிபுனம் மயக்கிய அகன் காட்கொல்லை / ஐவனம் வித்தி.... -(புறம் 159)
காந்தள் மலரின் கிழங்கை உண்ணுவதற்கு கூட்டங்கூட்டமாக வரும் பன்றிகள் வாயால் உழுத புழுதியில் தினையையும், வரகையும் விதைக்கக் கற்றுக் கொண்டான்.
“கிழங்ககழ் கேடில் உழுத சிலம்பிற் / றலைவிளை கானவர் கொய்தன்” (ஐங்குறு:270)


வேலைப்பிரிவினை பெண்களை தினைப் புனம் காத்தல், களைபறித்தல், கிளி கடிதல் போன்ற வேலைகளுக்கும், வேட்டை, கரிபுனம் மயக்கல்,தேனெடுத்தல் போன்ற வேலை களை ஆண்களுக்கும் பணித்தது. ஆண்கள் வேட்டை நிமித்தம் வாழுமிடம் விட்டு வெளியேறுவதும், பெண்கள் தினைப்புனத்தில் மையம் கொள்வதும் நடைமுறையானது. இப் பொருளியல் நடத்தையே, தகாப்புணர்ச்சி கொண்டிருந்த இனக்குழுவை தகுப்புணர்ச்சி கொண்ட குழுவாக மாற்றியது. ஒரு கணத்தின் ஆண்கள் வேட்டைக்குச் செல்லும்போது, தினைப்புனம் காக்கும் வேற்று கணங்களின் பெண்களுடன் புணர்ச்சி நடத்தினர். அகமண முறை தகர்ந்து புறமணமுறை உருக்கொண்டது. “வயமான அடி தேர் வான் போல்” அவளைத் தேடி இளைஞன் சந்தித்து அவளுடன் புணர்ச்சி நடத்தியதாக கலித்தொகை கூறுகிறது. “வள்ளித் திருமணம்” நாடகம் இதையே குறிக்கிறது. தினைப்புனங்கள் காதல் களங்களாக மாற்றப்பட்டு, காதல் சுவை அருவிபோல் கொட்டுமாறு சங்க இலக்கியத்தின் அகத்திணை கட்டமைக்கப்பட்டுள்ளது. இரவுக்குறி, பகற்குறி அமைத்து, களவுப்புணர்ச்சி நடந்ததை அகத்திணை இலக்கியங்கள் சுட்டும். இதுவரை அறிந்திராத வேற்றுக்கணத்தின் ஆண்களுடன் புணர்ச்சி கொள்வதும், நீங்கிய பின் அவளது தவிப்பும் இலக்கியப்படுத்தப்பட்டுள்ளது.


“யாரும் இல்லைத்தானே கள்வன்/ தானது பொய்ப்பின் யான் எவன் செய்கோ/ தினைத்தாள் அன்ன சிறு பசுங்கால்/ ஒழுகு நீர் ஆரல் பார்க்கும்/ முருகும் உண்டுதான் மணந்தஞான்றே” (குறுந்தொகை 25). தன்னோடு புணர்ச்சியில் ஈடுபட்டு விலகிச் சென்றவன் யாரென்றே தெரியாது. திரும்ப வருவானோ மாட்டானோ எனத் தவிக்கிறது அந்தப் பேதை உள்ளம். அவனுடன் புணர்ச்சிகொண்டதற்கான சாட்சி ஏதுமில்லை. தோழிக்கும் தெரியாது. திடீரென அவள் மனதில் ஒரு மின்னல்வெட்டு. ஆம் ஒரு சாட்சி இருந்ததே, தினைப்பயிரின் தண்டை ஒத்த கால்களையுடைய கொக்கு ஒன்று நின்று கொண்டிருந்ததே. மீண்டும் அவள் முகம் சுருங்கியது. அது இவர்களைக் கவனிக்காமல் நீரில் வரும் ஆரல் மீனைப் பார்த்தவாறு அல்லவா நின்று கொண்டிருந்தது? இப்படிப்பட்ட தவிப்புகளும், ஏக்கங்களும் ஒன்றைத் தெளிவுபடுத்துகிறது. அக மணத்தை விடுத்து, புறமண முறையில் புகுந்தபொழுது, ஆண் பெண் கூடல் என்பது காதல் கொண்டு அல்லாமல் காமத்தை முன்னிறுத்தியே நிகழ்ந்துள்ளது. குழந்தைக்கு தாயை மட்டுமே தெரிந்திருந்தது.


“மீன் உண் கொக்கின் துறவி அன்ன / வால் நரைக் கூந்தல் முதியோன் சிறுவன்” (புறம்: 277)
புறமண முறையிலும்கூட தாய்வழிச் சமூகமே நீடித்திருந்ததை “பேரிற் பெண்டு” (புறம்:270) “செம்முது பெண்டு” (புறம்: 276) போன்ற பாடல்கள் காட்டுகின்றன. தாய்வழிச் சமூகத்தில் பெண் உயர்நிலையில் இருந்ததும் தெரிகிறது. வேற்றுக்குழுக்களின் ஆண்கள் அல்லது பெண்களுடன்தான் கூடவேண்டுமென புணர்ச்சியை ஒழுங்குபடுத்திய நிகழ்வுதான் பண்பாடு என்ற தளத்தில் அவர்களை கால்பதிக்கச் செய்தது. பண்பாடு இங்குதான் துவக்கம் பெறுகிறது. வேட்டை, உணவு சேகரிப்பு, கரிபுனம் மயக்கல், பன்றி உழுத புழுதியில் தினை, வரகு விதைத்தல், தினைப்புனம் காத்தல் என்ற பொருளியல் வளர்ச்சியின் மீது கட்டப்பட்ட மேல் கட்டுமானமாக பண்பாடு நிலை கொள்கிறது. காதலை, வேட்கையை அடிப்படையாகக் கொண்ட புணர்ச்சிச் செயல்பாடு மெதுவாக, காதலை அடிப்படையாகக் கொண்டதாக, களவாக மாற்றம் பெறுகிறது.
“யாயும் யாயும் யாராகியரோ / எந்தையும், நுந்தையும் எம்முறை கேளீர் / யானும், நீயும் எவ்வழியறிதும் / செம்புலப் பெயனீர்போல / அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே” (குறுந்தொகை 40)
“உன் அன்னை யாரென யான் அறியேன். என் தாய் யாரென உனக்குத் தெரியாது. என் தந்தையும் உன் தந்தையும் எம்முறையிலும் உறவினர் அல்லர். நானும் நீயும் இதற்கு முன் அறிந்தவர்கள் அல்ல. ஆயினும் செம்மண் நிலத்தில் பெய்த மழை நீரானது அம்மண்ணுடன் கலந்து அதன் நிறத்தை ஏற்றுக்கொண்டதுபோல் நம் இருவரது நெஞ்சங் களும் அன்பால் தம்முள் ஒன்றுபட்டுக் கலந்தன” என்று காதல் நெஞ்சங்கள் அன்பால் இணைந்தமை குறித்து புலவர் மரபு பாடியுள்ளது. புணர்ச்சிப் பண்பாட்டின் நகர்வு உண்மைக் காதலைக் கட்டமைக்கிறது.


“முட்டுவேன் கொல்? தாக்குவேன் கொல்?/ ஓரேன், யானும், ஓர் பெற்றி மேலிட்டு/ ‘ஆஅ, ஓல்’ எனக் கூவுவேன் கொல்? / அலமரல் அசைவளி அலைப்ப, என் / உயவுநோய் அறியாது, துஞ்சம் ஊர்க்கே” (குறு:28) சங்க காலப்பெண் காமவேட்கையின் ஆற்றாமையை வெளிப் படுத்தத் தயங்கவில்லை. காமம் அவளைப்படுத்தும் துன் பத்தை அறியாது ஊரார் தூங்குவதை பொறுக்க இயலாமல் கோபம் கொள்வதைக் காண்கிறோம்.


“முதைச் சுவல் கலித்த முற்றா இளம்புல் / மூதா தை வந்தாங்கு/ விழுந்தே காமம்/ பெருந்தோளோயே” -(குறு: 204) என காமத்தை “மேட்டில் துளிர்த்த முற்றாத இளம் புல்லை முதிய பசுமாடு தனது நாவால் மெல்லத் தடவிக் கொடுப்பது போன்று காமம் புதியது” என அக்காலச் சமுதாயம் காமத்தை மிகவும் இயல்பாய் ஏற்றுக்கொண்டது. புணர்ச்சி அதனால் கிடைக்கும் சுகம் இயற்கையானது. தவிர்க்க இயலாதது. எவ்விதத்திலும் தீயதாக இருக்க முடி யாது. குழந்தைப் பேற்றுக்கு அது ஒன்றுதான் வழி.


“காமம் கைம்மிகின் தாங்குதல் எளிதோ” (நற்றிணை:39)
“மருந்து பிறிதில்லை யான் உற்ற நோய்க்கே” (நற்-80)
காமம் மிகுதியுற்று, கூடமுடியாத நிலையில், அதை ஒரு நோய் என்றே கருதினார்கள். “இவள் உயிர் தவச் சிறிது, காமமோ பெரிது” எனக் கபிலரும் பாடுகிறார்.
“உள்ளின் உள்ளம் வேமே, உள்ளாது/ இருப்பின் எம் அளவைத்து அன்றே” (குறு:102).“காதலரை நினைத்திருந் தால் பிரிவு என்னும் தீயினால் நினைக்கின்ற என் மனம் வேகிறது. நினையாமல் உயிர் மட்டும் இருந்தால், அதைத் தாங்கும் ஆற்றல் எனக்கு இல்லை” எனத் தலைவியும், “பெயல் நீர்க்கு ஏற்ற பசுங்கலம் போல/ உள்ளம் தாங்கா வெள்ளம் நீந்தி/ அரிது அவாவுற்றனை நெஞ்சே” (குறு:29) “அவளால் (பெண்ணால்) தன் உள்ளம் மழையில் கரையும் பசுங்கலம் (சுடாத கலம்) போலக் கரைந்ததாக தலைவனும் கூறுகிறான். புணர்ச்சியை இயற்கையாகவே கண்டனர். பண்பாட்டு அசைவானது, சங்க இலக்கியத்தில், அடுத்தத் தளத்திற்கு நகர்ந்து செல்வதையும் காண்கிறோம். கிடைத்த போது களவு மிகப்பெரிய மகிழ்ச்சியையும், கிட்டாத போது நோயாகவும் மாறியதைப் பார்த்தோம். ஆனால் சங்கத் தலைவன், தனது தலைவியுடன் ஏற்பட்ட களவுப் புணர்ச்சியானது தனது மனவலிமை, தனது அறிவு ஆகியவற்றைக் குறைத்துவிட்டதாகக் கூறுவது தெரிகிறது.


“சிறுகுடிக் குறவன் பெருந்தோள் குறமகன் / நீர் ஓரன்ன சாயல் / தீ ஓரன்ன என் உரன்அவித்தன்றே” (குறு:95) “பகையை அழிக்கும் தீ போன்ற என்வலிமையும், அறிவும் நீர்போன்ற மென்மையுடைய குறுமகளால் அழிக்கப்பட்டு விட்டதாக” உணருகிறான். மட்டுமல்ல, ... நாளும் என் / நெஞ்சு பிணி கொண்ட அம்சில் ஓதிப் / பெருந்தோள் குறுமகள் சிறு மெல் ஆகம் / ஒரு நாள் புணரப் புணரின் / அரைநாள் வாழ்க்கையும் வேண்டலன் யானே” (குறு:280)


“தனது தலைவியை ஒருநாள் புணர்ந்தால் அதற்கு ஈடாக அரைநாள் வாழ்க்கை வேண்டாம்” என்கிறான். ஆணின் பொருளியல் வாழ்வில் அவனது ஆளுமையும், கவனமும் கூடிக்கொண்டே வரும்பொழுது, களவுப் புணர்ச்சியானது, அவனது பொருளியல் செயல்பாட்டிற்கு தடங்கல் ஏற்படுத்துவதாக உணருகிறான். ஒருமுறை தலைவியைப் புணருவதற்கான தனது சிந்தனை, பொருளியல் வாழ்க்கைக் கான அரைநாளை கெடுத்துவிடுவதாக உணருகிறான்.


“புணரின் புணராது பொருளே, பொருள்வயிற் / பிரியின் புணராது புணர்வே” (நற்:16) . “புணர்ச்சியில் திளைத்தால் பொருள் கிடைக்காது. பொருளுக்காகப் பிரிந்தால் புணர்ச்சி இன்பம் கிட்டாது” என நினைக்கிறான். பொருளியல் வாழ் வில் ஏற்படும் மாற்றம், புணர்ச்சிப் பண்பாட்டிலும் மாறு தலைக் கொண்டு வந்தது. களவுப் புணர்ச்சி பெண்களை தீராத தவிப்பிலும், ஆண்களை தமது கடமையை ஆற்ற விடாமலும் செய்வதை உணர்ந்த சமூகம், கற்பொழுக்கம் அல்லது திருமணம் என்ற பண்பாட்டுத் தளத்திற்கு நகர்ந்து சென்றது. களவொழுக்கம், கற்பொழுக்கம் என்ற இரண்டு தளங்களிலும் புணர்ச்சிப் பண்பாடு செயலாற்றத் தொடங்கி யது தமிழ் சமூகம் இரண்டையும் ஏற்றுக் கொண்டது. அனைத்துப் பிரச்சினைகளின் பிறப்பிடமும், அவற்றிற் கான தீர்வுகள் இருக்குமிடமும் ஒன்றுதான். களவுப் புணர்ச்சிப் பண்பாட்டில் அன்றாடக் கடமைக்கு ஏற்படும் பாதிப்புகளும், இதனால் தலைவன், தலைவிக்கும் ஏற்படுகிற தவிப்புகளும் தீர்ந்துவிடுகிற இடமாக கற்பொழுக்கம் என்ற பண்பாடு இருந்தது. சங்க காலத்தில் களவை மேற்கொண்டு தவித்துக் கொண்டிருந்த அனைத்து தலைவிகளின் களவுப்பண்பாடுகளும் கற்பொழுக்கப் பண்பாடாக மாறியதா? என்பது குறித்து அறிய முடிய வில்லை. கற்பொழுக்கமானது குடும்பங்களைத் தோற்று வித்திருந்தது என்பதை அறியமுடிகிறது.


“இன் கடுங் கள்ளின் அகுதை தந்தை / வெண்கடைச் சிறுகோல் அகவன் மகளிர்/ மடப்பிடிப் பரிசில்மானப்/ பிறிது ஒன்று குறித்தது அவள் நெடும் புறநிலையே (குறு:298). அகுதை என்ற தன் மகனுக்கு அவன் தந்தை வெள்ளிப்பூண் போட்ட தலைக்கோலை பரிசு வழங்கிய நிகழ்வு இப்பாடலில் தெரிகிறது. ஐயைதந்தை (அகம்:6) அகுதை தந்தை (அகம்:96) என குழந்தை பெயர்கூறி அவன் தந்தை அழைக்கும் வழக்கம் அன்று இருந்துள்ளது. இன்றும் நடைமுறையில் உள்ளது. இது குடும்பம் என்பது தோன்றி விட்டமையைக் குறிக்கிறது. தந்தை வழிச் சமூகம் தோன்றி நிலைபெறத் துவங்கியுள்ளது. எனினும் களவுப் புணர்ச்சி யில் ஈடுபட்டவர்களின் திருமணம் சுலபமாக ஈடேற வில்லை என்றே தோன்றுகிறது. தந்தை, சகோதரன் இவர் களின் எதிர்ப்பும், தலைவன் தலைவியின் திருமணத்திற்கு நற்றாய், செவிலித்தாய், பாங்கன், தோழி ஆகியோரின் உதவியும், “மடலேறுதல்” (பெண்ணின் தந்தை திருமணத் திற்கு மறுத்தால், தலைவன் ஊருக்குள் வந்து, சப்தமிட்டு தங்கள் காதலை ஊர்மக்கள் அறிந்துகொள்ளச் செய்வது) என்ற நிகழ்வும், “உடன்போக்கு” என்ற சமூக மீறலும் (தலைவன் தலைவியைக் கூட்டிக்கொண்டு வேறிடம் சென்று மணமுடித்தல்) நடக்கவே செய்தது. இப்பண்பாடு இன்றுவரை நீட்சியடைந்து வந்துள்ளது.
அகத்திணை அனைத்திலும் களவு உறவில் ஏக்கம், தவிப்பு, ஏமாற்றம், நிச்சயமற்றதன்மை, மணத்திற்கு வலியுறுத்தல், சூள் உரைப்பது, இரவு பகலெனச் சேரத் துடிப்பது, இதில் ஏற்படும் இடையூறுகள், உணவு செல்லாமை, தூக்கம் கொள்ளாமை, உடல் மெலிவு, பசலை, பெற்றோர் தடை, மணம் தள்ளிப்போதல், ஊரார் கண்காணிப்பு, புலம்பல், தூதுவிடல், மடலேறுதல், உடன்போக்கு என்ற உணர்ச்சி வெளிப்பாடுகளை சங்கப் புலவர் மரபு பதிவு செய்துள்ளது. எனினும் புணர்ச்சிப் பண்பாடு அப்படியே நின்றுவிட வில்லை. மாறுதலை நோக்கி நகர்ந்தது.


“வினையே ஆடவர்க்கு உயிரே, வாள்நுதல் / மனை உறை மகளிர்க்கு ஆடவர் உயிர் என” (குறு:135) . “வினை செய்தல் ஆடவர்க்கு உயிர் போன்றது. ஒளி பொருந்திய நெற்றியையுடைய இல்லின்கண் உறையும் மகளிர்க்கு அவர் தம் கணவர் உயிர் போன்றவர்” .


தன்னூறு வேட்கை கிழவன் முன் கிளத்தல் எண்ணுங்காலை கிழத்திக்கில்லை என தொல்காப்பியமும் வரையரை செய்கிறது. (தொல்- பொருள் . இனம்-116)
இவ்விரு பாடல்களும், சங்கத் தலைவிகளின் அடங்கிய தன்மையைப் புலப்படுத்துகிறது. தொல்காப்பியமும் அதை இலக்கணப்படுத்தியுள்ளது.


“துயர் பொறுக்கல்லேன் தோழிநோய்க்கே” (குறு:224) “காமம் நெரிதர நாணம் கைநில்லாதே” (குறு:149). “முட்டுவேன் கொல், தாக்குவேன் கொல் ஆசு, ஓல் என கூவுவேன் கொல்” என நாம் பார்த்த சங்கத் தலைவி அல்ல இவள். முற்றிலும் மாறுபட்ட தலைவியைக் காணுகிறோம்.
“நோய் அலைக் கலங்கிய மதன் அழிபொழுதில் / காமம் செப்பல் ஆண் மகற்கு அமையும் / யானே பெண்மை தட்ப நுண்ணியதின் தாங்கி (நற்:94)


“காமம் அளவுக்கு மீறிய நோயாகி, தனது மனவலிமையைக் குறைத்த போது தனது புணர்ச்சி ஆசையை வாய்விட்டுச் சொல்வது ஆணுக்குப் பொருத்தமானது. ஆனால் பெண்களுக்கு இயலாதது. தாங்கியாக வேண்டும்.”


இதுவரை கண்ட தலைவனிடமும் தலைவியிடமும் காம ஆளுமை சரிசமமாக இருந்தது. தலைவனைப் போலவே, சமூக உற்பத்தியிலும், சமூக ஆதாயங்களைப் பெறுவதிலும் தலைவியும் சரிசமமாகப் பங்காற்றி வந்தாள். எனவே காமத்திலும் புணர்ச்சியிலும் சரிநிகர் ஆளுமையைப் பெற்றி ருந்தாள். ஆனால் மேற்கண்ட பாடல்கள் பெண்ணின் ஆளுமை வீழ்ச்சியடைந்த நிலையிலும் ஆணின் ஆளுமை விரிவடையும் நிலையிலும் இருப்பதைக் காணமுடிகிறது. அகத்தில் உள்ளது புறத்தின் எதிரொலியே. அகத்திற்கேற்ப புறமும், புறத்திற்கேற்ற அகமும் சதா மாறிக் கொண்டி ருக்கின்றன. எனில் புறநிலையில் ஏற்பட்ட வளர்ச்சி குறித்து அணுக வேண்டும்.


குறிஞ்சி நிலம் தவிர்த்து, பிற நிலங்களில் ஒன்றான முல்லை நிலத்தில் ஆண்களுக்கான பணியையும், பெண்களுக்கான பணியையும் சமூகம் தெளிவாக வரையறுத்துவிட்டது. நிலத்தில் தினை, வரகு, பயிர்வகைகளைப் பயிரிடவும், பாலுக்கு உறை தெளிதல், தயிர் கடைதல், வெண்ணைய் எடுத்தல், நெய்யுருக்குதல் போன்ற பணி களையும், இவற்றின் பண்டமாற்றாக நெல்லும் எருமைக்கன்றும் வாங்கி வருதல் ஆகியவை பெண்களின் பணியாக வரை யறுக்கப்பட்டது. வெட்சிப்பூ சூடி வேற்றுப்புலத்தார் வரு வதைத் தடுக்க, கரந்தைப்பூ அணிந்து போர் செய்யும் பணி ஆண்களுக்கானது. வெட்சி, கரந்தைப் போர் நடத்திய வீரனை ஊரே திரண்டு ஒப்பனை செய்து, புதுக்கோலம் பூண்டு, புத்துணவு சமைத்து, மதுப்பிழிந்து கொடுத்து வாழ்த்திய நிகழ்ச்சியை “உண்டாட்டு” எனச் சங்கப்புலவர் மரபு கூறுகிறது. தலைவன் போரில் வெற்றி பெற்று தான் கொண்டு வந்த கால்நடையைக் கொடுத்து “கள்ளுண்டான்” என்றும், சமூகம் எதிர்ப்பின்றி ஏற்றுக்கொண்டதையும் புற நானூறு பதிவு செய்கிறது. ஊர்மன்றத்தில் நடுநாயகமாக அமர்ந்து, ஊரை நிர்வகிக்கும் பொறுப்பைப் பெற்றான். அவனது அழுக்குப் படிந்த ஆடையை வெளுத்துக் கொடுக் கும் புலத்தியாக பெண் அடிமையாக்கப்பட்ட செய்தியை “களர்ப்படு கூவல் தோண்டி, நாளும்/ புலத்தி கழீஇள தூவென் அறுவை” எனப் புறநானூறு (311) பதிவு செய்துள்ளது.


“கால்நடை வளர்ப்பு, தந்தைவழிச் சமூகத்தை உருவாக்கி யது. அது ஆணின் ஆதிக்கத்திற்கும், தனிச் சொத்துடமைக் கும் வழிகோலியது” என ராகுல்ஜி கூறுவது நோக்கத்தக்கது. முல்லை நிலத்தில் ஆண் ஆதிக்க நிலையிலும், பெண் தாழ்ந்த நிலையிலும் இருப்பதை அறிகிறோம். எனவே முல்லை நிலத்தின் உரிப்பொருள் “இருத்தல்” என புலவர் மரபு வகைப்படுத்தியுள்ளது. பெண்ணின் ஆளுமை இருத்தி வைக்கப்பட,போரிலும், ஊரிலும், ஆண்களின் ஆளுமை உயர்ந்து கொண்டிருந்ததால், புணர்ச்சிப் பண்பாட்டிலும் இது தவிர்க்க இயலாதவாறு வெளிப்படுகிறது.


மருதநிலத்தின் உரிப்பொருள் “ஊடல்”. ஆற்றுப் பாசனத் தில் மிகுதியான உபரியை வழங்கும் நெல் சாகுபடி, தொடர்ந்து இனக்குழுக்களை அழித்து நாட்டை விரிவாக்க நடத்தும் போர்கள், வெற்றிக்களிப்பு, அரசு உருவாக்கம் என ஆணின் ஆளுமை உச்சத்திற்கு சென்றதால், இல்லக் கிழத்தி, காமக்கிழத்தி, பரத்தி என ஆண்களுக்கான ஒழுக் கம் விரிவாக்கம் பெற்றது. சமூகம் இதை ஏற்றுக் கொண் டது. பரத்தையர் வீட்டுக்கு சென்று திரும்பிய ஆணிடம் ஊடல் கொள்வதும், பின்பு ஊடல் நீங்கி, வேறு வழியின்றி கூடுவதும் என இழிநிலைக்கு பெண் தள்ளப் பட்டாள்.


நெய்தல் நிலத்தின் உரிப்பொருள் ‘இரங்கல்’. பரதவர்களும், உமணர்களும், வணிகம் பொருட்டு வெளியூர்களுக்கும், வெளிநாடுகளுக்கும் பயணம் மேற்கொள்வதால், நீண்ட பிரிவும்,ஆபத்தான வழித்தடங்கல்களும் ‘மீண்டு வர வேண்டுமே’ என்ற பதற்றம் மிக்க வாழ்வும் இரங்குதற் குரியனவாக இருந்தது. பொருளியல் வாழ்வின் அனைத்து அம்சங்களும் ஆண்களின் ஆளுமையுடன் கட்டமைக்கப் பட்டதால் பெண்களின் ஆளுமையுடன் கட்டமைக்கப்பட் டதால் பெண்களின் நிலை தாழ்வுற்று முடங்கிப் போனது.


சமூக, பொருளதார, அரசியல் தளங்களில் ஆண்களின் செயல்பாடானது அதிகமாக அதிகமாக அவனது ஆளுமை உச்சத்திற்கு சென்றது. புணர்ச்சியின் அளவைக் குறைத்துக் கொண்டாலன்றி அவனால் இயங்க முடியாது. பெண் ணுக்கு இவையேதும் இல்லாததால், தொடர்ந்து காமப் புணர்ச்சிக்கு அவனை அழைத்துக்கொண்டே இருக்கிறாள். அவன் தனக்குத்தானே குறைத்துக் கொள்வது மட்டுமல்ல, தலைவியும் குறைத்துக் கொள்வதற்கான ஏற்பாட்டை செய்ய வேண்டியிருந்தது. அதற்கான எல்லைக்கோடும் வகுக்கப்பட்டது.


“அமிழ்தத் தன்ன அம்தீம் கிளவி/ அன்ன இனியோள் குணனும் இன்ன/ இன்னா அரும்படர் செய்யும் ஆயின்/ உடன் உறைவு அரிதே காமம்/ குறுகல் ஓம்புமின் அறிவுடையோரே”(குறு:206).“காமம் என்பது நும் போன்ற வரால் ஒருங்குகூடி வாழ்வதற்கு அரியதாகும். ஆதலின் அதனை நெருங்குவதிலிருந்து அறிவுடையீரே நும்மைக் காத்துக்கொள்ளும்” என ஆண் தரப்பு அறிவுரை செய்கிறது.


“இனிய செய்த நம் காதலர்/ இன்னா செய்தல் நோம் என்நெஞ்சே” (குறு:202) . இப்பாடல் மருத நிலத் தலைவியின் கூற்றாக பதிவாகியுள்ளது. “களவு காலத்தில் நமக்கு இனியனவற்றைச் செய்த நம் காதலுக்கு உரியவர், இக்கற்பு காலத்தில் இன்னாத செயல்களைச் செய்தலால் என் நெஞ்சு மிகவும் வருந்துவதாயிற்று.” ஆண்கள் காமத்தை நெருங்கக்கூடாது எனக் கூறியபொழுது, பெண்கள் அதனால் வருந்துவதும் புரிபடுகிறது.


புணர்ச்சியில் ஆணின் செயல், செயலூக்கமானது என்றும், பெண்ணின் செயல், தாக்கம் பெறுகிற அடங்கிய செயல் என்றும் வரையறுக்கப்பட்டது. பெண் ஆணின் சுகத்திற் கான பொருளாக மாற்றம் பெறுகிறாள். புணர்ச்சியில் அடங்கிய பாத்திரமாக மாற்றப்பட்டாள். நிகழ்த்துபவர், நிகழ்த்தப்படுபவர் என ஆண்-பெண் உறவு மாற்றமடைகி றது. பொருளாதார தளத்தில் ஆளுகின்ற ஆதிக்க நிலை யிலிருந்து, புணர்ச்சியில் ஆளுகின்ற பண்பாட்டை கட்ட மைப்பு செய்கிறான். இதுவே இல்லக்கிழத்தி, காமக் கிழத்தி, பரத்தை என அவனுடைய செயல்பாடு விரிவடை யவும், தலைவியின் புணர்ச்சி செயல்பாடு குறையவும் காரணமாகிப் போனது. ஆதிக்கத்தின் முன்னால் இயற்கை அடங்கிப் போனது.


“ஆண்-பெண் உறவு ஆள்பவன் - ஆளப்படுபவள் என்ற உறவில் கட்டமைக்கப்பட்டதால் அது ஓர் அரசியல் உறவா கிறது. இவ்வுறவு நன்கு அமைய இருவரும் ஒரே அறத்தில் பங்கு பெற வேண்டும். ஆனால் ஒவ்வொருவரும் அவரவர் வழிகளில் இந்த அறத்தை உடைமையாகக் கொள்கிறார்கள். ஆணிடம் (ஆள்பவர்) “ஒழுக்கவியல் நன்மை” முழுமை யான வடிவிலும், பெண்ணிடம் (ஆளப்படுபவர்) எவ்வ ளவு தேவையோ, அவ்வளவுக்கு தேவையான “ஒழுக்க வியல் நன்மை” எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஆணுக்கு ‘மட்டுப்பாடு அல்லது தைரியம்’ என்பதே முழுமை வாய்ந்த “ஆளும்” அறமாகிறது. பெண்ணுக்கு ‘மட்டுப்பாடு அல்லது தைரியம்’ என்பது ‘பணிபுரிகிற’ அற மாகிறது. அதாவது ஆண், ஆளும் அறங்களின் முடிந்த முடி வான, முழுமையான ஒரு முன்மாதிரியாக ஆகிறான்” என உளவியல் அறிஞர் ஃபுக்கோ நீண்ட விளக்கம் தருகிறார்.


ஆண் பொருள் வேண்டியோ, அல்லது போரின் நிமித்தமோ பிரிந்துள்ள நிலையில், பிற ஆண்கள் இவளை நெருங்காது இருக்கும் பொருட்டு, தனது அழகைக் குறைத்துக் கொண்டு வீட்டைவிட்டு வெளியே செல்லாமல் அவன் வரவுக்காக காத்திருப்பது என்ற அளவில் அவளின் ஆளுமை வீழ்ந்து பட்டது என்பதை அறியமுடிகிறது.


“மண்ணாக் கூந்தல் மாசு அறக் கழீஇ/ இல் போது கொண்டு பலகுரல் அழுத்திய/ அந்நிலை புகுதலின், மெய் வருந்து றாஅ/ அவிழ் பூ முடியினன் கனவ இய/ மட மா அரிவை மகிழ்ந்து அயர் நிலையே ” (நற்: 42) . வினை முடிந்து மீள் கின்ற தலைவன், பாகனைப் பார்த்து தான் வருவதை தலைவிக்கு முன்னே போய் தெரிவிக்க ஆணையிட, அவன் சென்று அறிவிக்கவே, “அவள் நீராடி தன்னைப் புனைந்து கொள்ளும் பொழுதில் நான் செல்லவும், அவள் என்னை அணைத்து மகிந்த நிலை முன் நிகழ்ந்தது மறத்தற்கரிது” என்கிறான் தலைவன். எனவே தலைவன் வெளிச்செல்லும் காலங்களில், தன்னை அழகுபடுத்திக்கொள்ளாமல் இருந்த நிலையை சங்கநூலில் காண்கிறோம். ஆணின் ஆளுமை மேலும் மேலும் உயர்நிலையில் கட்டமைக்கப்பட்டதும், பெண்ணின் ஆளுமை கீழ்நிலைக்கு தள்ளப்பட்டதுமான வரலாற்றை சங்க இலக்கியம் பதிவு செய்துள்ளது. நில வுடைமையின் வளர்ச்சிப்போக்கு பெண்ணை அவளின் ஆளுமையை அழித்து, அடிமையாக்கிய வரலாறே, தமிழ் பண்பாட்டின் அசைவியக்க வரலாறு ஆகும்.


அதுமட்டுமல்ல, சங்கப் பாடல்களைப் பாடியோருள் முக்கி யமானவர்கள் பாணர்கள். வறுமைமிக்கவர்கள். “யாழ் ஆகுளி பதலையோடு சுருக்கி” தமது வறுமையைப் போக்க விறலியுடன் மன்னனைக் காணச் செல்வர் (புறம்:64) என சங்கநூல் கூறுகிறது. இவர்கள் வேந்தர் காலங்களில், தலைவனுக்கும் தலைவிக்குமிடையே மற்றும் தலைவனுக் கும் பரத்தையருக்குமிடையே தொடர்பை பாதுகாக்கும் இழிதொழிலுக்கு ஆளாகினர். விறலியர் பரத்தையர்களாக மாறினர் (சிவத்தம்பி. 2003,பக்.116) சங்க இலக்கிய சமூக நிறுவனத்தில், தமது ஆளுமையை அடக்கி அடிபணிந்த பெண்கள் போற்றுதலுக்குள்ளானார்கள். சமூக நிறுவ னத்தை கேள்விக்குள்ளாக்கிய பெண் ஆளுமை பரத்தையர் என்ற பட்டத்தைப் பெற்று சமூக நிறுவனத்தின் வெளியே வைக்கப்பட்டனர்.


இந்தியப்பண்பாடு சமண, பெளத்த, பார்ப்பனிய சொல்லா டல்கள் மூலம் கட்டமைக்கப்பட்டது. சங்ககால இறுதியில் இம்மூன்று மதங்களும் தமிழ்நாட்டில் காலூன்றிய செய்தியை மதுரைக் காஞ்சி கூறுகிறது.


“பல் சான்றீரே, பல் சான்றீரே/ ‘செல்க’ எனச் சொல்லாது, ‘ஒழிக’ என விலக்கும் / பொல்லாச் சூழ்ச்சி பல் சான்றீரே (புறம்:246) என்ற பாடல், பூதப்பாண்டியன் என்ற மன்னன் இறந்தபோது, அவன் மனைவி பெருங்கோப் பெண்டு கையறுநிலை நிலையில் பாடியது. “சான்றோர்களே, தலை வனுடன் ‘நீயும் செல்’ என்று கூறாது, ‘இறக்க வேண்டாம்’ எனக்கூறும் பொல்லாத எண்ணத்தை உடைய சான்றோர் களே, வெள்ளரி விதையையும் கீரையையும் சோற்றுடன் கலந்து நீரில் சாப்பிடவும், எள்ளுடன் புளித்தக் கீரையை யும், வேளைக்கீரையையும் உணவாகக் கொண்டு, கல் படுக்கை மீது பாயின்றி படுத்து உறங்கும் கைம்மை மகளிர் போல் இருக்கமுடியாது. தீயும், தாமரைப் பொய்கையும் எனக்கு ஒன்றுதான்” எனக் கூறுகிறாள். ஒரு கைம்பெண், எத்துணை நோன்புகளை கைக்கொள்ள வேண்டும் என்ப தையும், அதைவிட உடன்கட்டை ஏறி இறந்துபோவது மேல் என எண்ணுமாறும் சமூக நிறுவனத்தில் ஆண்களின் ஆளுமை உச்சம் பெற்றுள்ளது.


“இன்னா வைகல் உண்ணும் / அல்லிப் படூஉம் புல் ஆயினவே” (புறம்:248). “அழுதல் ஆனாக் கண்ணால்/


மெழுகும், ஆப்பிகண் கலுழ் நீரானே” (புறம்:249). “கூந்தல் கொய்து, குறுந்தொடி நீக்கி” (புறம்:250). ஆணின்றி, பெண் தனித்து இயங்க முடியாது, கூடாது என்ற பார்ப்ப னியச் சொல்லாடலை தமிழ்ச்சமூகம் தன்வயப்படுத்திக் கொண்டது. சங்கம் மருவிய காலத்திலும், இலக்கியப் பனுவல்களினூடாக இதுவே வலியுறுத்தப்படுவதுடன், பெரும் சமூக கருத்தியலாகவும் நிலை நிறுத்தப்பட்டது.


தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்/ பெய்யெனப் பெய்யும் மழை (குறள்:55). பொருள் சார்ந்த வலுவான அரசைக் கட்டமைத்து நிலைநிறுத்த முயலும் சமணமதச் சொல்லாடல் பெண்ணுக்கான ஒழுக்கத்தையும் தெளிவான முறையில் வரையறுத்தது. சிலப்பதிகாரமும், நீலகேசியும் நல்ல சான்றாக விளங்குகின்றன. ஒன்று கணவ னின் தவறுகளுக்கு மெளனசாட்சியாயிருந்து அவனுக்காகப் போராடும் பெண்மையை (கண்ணகி) வலியுறுத்துகிறது. மற்றது, கணவனின் தவறுகளுக்குரிய தண்டனையை அடுத் தப்பிறவியில் (இந்தப் பிறவியில் இல்லை) கொடுத்துப் பேயாய் (நீலி) அலைந்து திரியும் பெண்மையை வலியுறுத் துகிறது. ஆண்களுக்கான இச்சொல்லாடல்களை, பெண் களின் சமூக உளவியல் உள்வாங்கிச் செரித்து ரத்தத்துடன் கலக்கவிட்டது.கண்ணகியும் நீலியும் கலகக்குரல் எழுப்பி யிருப்பினும் அவை ஆணின் பார்வையில் எழுதப்பட்டிருந் தன. ஆண் ஆளுமைச் சமூக நிறுவனத்தை கேள்விக்குள்ளாக்கும் பரத்தையர் குடும்பத்திலிருந்து வந்த மாதவியும், மணி மேகலையும், திரும்ப ஆண் ஆளுமைச் சமூக நிறுவனத்துள் இணைத்துக் கொள்ளப்படவில்லை. எனவே அவர்கள் ‘துறவு’ என்ற புதிய தளத்திற்கு தள்ளப்பட்டார்கள்.


அறிவும், அழகும் நிரம்பிய புனிதவதியார் (காரைக்கால் அம்மையார்) பார்ப்பன மதச் (சைவம்) சொல்லாடலை கட்டியெழுப்ப முயன்று தனது ஆளுமையை வரலாற்றில் பதிவு செய்துள் ளார். எனினும் ‘பேய்’ உரு கொண்டவளாக சித்தரித்து, அவரது ஆளுமையை சிறுமைப்படுத்தி பதிவு செய்தது பார்ப்பனியம். இராமாயணம், மகாபாரதம், போன்ற கதை யாடல்களை உருவாக்கி, கிராமம் தோறும் வாசிக்கப்பட்டு, தமிழ் மனங்களுக்குள் ஒரு வலுவான பொதுப்புத்தி தோற்று விக்கப்பட்டது. சீதை, லட்சுமி, சரஸ்வதி, பார்வதி போன்ற படிமங்கள் இந்துப் பெருங்கதை யாடலாக இந்தியப் பெருவெளி முழுதும் எடுத்துச் செல்லப்பட்டு, நிலைநிறுத்தப்பட்டன. இவர்கள் கற்பு, பதிவிரதை, பத்தினி என்ற அதீதப் புனிதத்தன்மை கொண்ட பெண் களாக சமூகத் தளத்தில் உலவவிடப்பட்டனர். இவர்களுடன் கண்ணகி, மாதவி, வாசுகி, நல்லதங்காள் ஆகியோர் இணைக்கப்பட்டு, ஓர்மையான கருத்துருவாக்கம் சமூகத்தில் நிலை நிறுத்தப்பட்டது.
பார்ப்பனியத்தின் இன்னொரு கூறு சாதியம். வருணம், சாதி என்ற இந்துப்பெருங்கதையாடல் சூத்திரன், பஞ்சமர் என்று உழைப்பாளர்களின் பெண் ஆளுமையை மட்டுமல்ல, ஆண் ஆளுமையையும் சேர்த்து அழித்தது. கல்வியை இவர் களுக்கு மட்டுமல்லாமல், பார்ப்பனியப் பெண் உட்பட அனைத்துப் பெண்களுக்கும் மறுத்தது. கல்வி, அரசியல், பொருள் சேர்க்கும் உரிமை போன்றவற்றை இவர்களுக்கு மறுத்ததின்மூலம் பத்துப்பேரின் ஆளுமையை விரிவு படுத்தி, தொண்ணூறு பேரின் ஆளுமையை சீர்குலைத்தது. மேலும் சாதிக்குள் திருமணம் என்ற படிநிலை வளர்ச்சி பெண்ணை மீண்டும் அகமண முறைக்குள் அமிழ்த்தி சுதந்தி ரமான பாலியல் உணர்வுக்கு (காதலுக்கு) சமாதி கட்டியது. இதுவே இந்துப் பண்பாட்டு உருவாக்கத்தின் மேன்மையாகும்.


முகமதியர்கள், கிறித்தவர்கள், ஆங்கிலேயர்கள் வருகையா னது, புதிய சொல்லாடல்கள், இந்துப் பெருங்கதையாடல் களுடன் இணக்கம் பெற்று, புதிய கருத்தாக்கங்களை உரு வாக்கின. பார்ப்பனிய இறுக்கம் தளர்வு பெற்றபொழுது, பெண் ஆளுமையை உயர்த்துவதற்கான குரல்கள் அங்கும் இங்குமாக எழுந்தன. நாடு விடுதலைக்கு முன்பும் பின்பும் இக்குரல்களைப் பற்றிக்கொண்டு எழுந்து நிற்க பெண் ஆளுமை சக்தியற்றிருந்தது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சீர்குலைக்கப்பட்ட பெண் ஆளுமை மீது தொடர்ந்து விழுந்த கருத்தியல் படிமங்கள், அதனால் அமுக்கம் பெற்று நனவிலியில் தொன்மப்படிவங்களாக உருமாறிப் போயின. தொன்மப்படிவத்தின் நீட்சியாக இன்றும் உழைக்கின்ற தலித் பெண்ணின் ஆளுமை ஓரளவேனும் உயிருடன் இருப் பதைக் காணமுடிகிறது. இந்துமதச் சொல்லாடல் அதை ‘அறுத்துக் கட்டுதல்’ என்று இழிவுபடுத்திய பொழுது, “மணமுறிவும் எங்களது வர்க்கச் சாதனை” என தணிகைச் செல்வன் உயரிய சொல்லாடலாக பதிவு செய்தார்.


“கல்வி, வேலை செய்யும் உரிமை, பொருளியல் உரிமை, ஓட்டளிக்கும் உரிமை, சங்கம் சேரும் உரிமை ஆகிய வற்றை பெண்களுக்கு அளித்தால், பெண்ணின் ஆளுமை மீட்டெடுக்கப்பட்டுவிடும்” என்ற கருத்தியல் ஆதிக்கச் சொல்லாடல் ஆகும். ஆதிக்கவாதிகளால் ஆளுமையை இழந்த ஆண்கூட, கல்வி கற்ற, பொருள் சேர்க்கும் பெண் உடல் மீது வன்முறையைப் பாய்ச்ச முடிகிறது. பெண்ணின் ஆளுமையை அவள் சமூகத்தில் தேடவேண்டியுள்ளது. 


பெண், தன் ஆளுமையை அன்று சமூகத்தில்தான் தொலைத்திருந்தாள், தனி ஆணிடம் அல்ல. பெண் ஆளுமையின் வரலாற்றை ஆண் ஆளுமையின் வரலாற்றினூடாகவும், ஆவனால் வரையப்பட்ட சமூகம், பொருளாதாரம், அரசியல், சமய, சாதிய சடங்கியல் வரலாறுகளினூடாகவும் தான் தேட வேண்டியுள்ளது.


இன்று சமூகம் என்பது சக்திமிக்கதாக இருக்கிறது. இது சமயம், சாதி, பொருளியல், சடங்கியல் என்ற பாதுகாப்பு கவசங்களால் சூழப்பட்டிருக்கிறது. ஆண் ஆளுமையே அதன் பண்பாகும். இச்சமூகம் தனது சொல்லாடலை ஒரு அதிகார வரம்பிற்குள் கட்டமைத்துள்ளது. ஜனநாயகம், பெண் உரிமை குறித்து அது வாய் கிழியப் பேசும். சரிபாதிப் பெண்களின் உரிமையில் மூன்றில் ஒரு பங்கு கேட்பின் சனநாயகக் கட்டிடத்திலேயே மறுத்து ஒதுக்கும். புதுபுதுக் கருத்தாக்கங்களை உருவாக்கி, அனைவருக்குமான சொல் லாடலாக உலவவிடும். ஊடகங்கள் அதைப் பொதுப் புத்தியாக மாற்றிவிடும். பெண் ஆளுமை எழுந்துவிடாமல் காவல் காத்து நிற்கும்.
சொல்லாடல் என்பது ஒரு வலைப்பின்னல். அது அர்த்தங் களால் நிரப்பப்படுகிறது. சமூகம் எல்லோரையும் பேச விடுவதில்லை. குறிப்பாக அரசியல், பாலியல் குறித்து பேச அனுமதிப்பதில்லை. எனவே சொல்லாடல்கள் சுதந்திரமாக இருப்பதில்லை. இதை “சொல்லாடலின் அதிகார ஒழுங்கு” என்கிறார் ஃபூக்கோ. இதையும் மீறி இன்று “பெண்ணியம்” என்ற தளத்திலிருந்து கலகக்குரல் வந்து கொண்டே இருக் கிறது. சாதியத்தால் ஆளுமையை இழந்தவர்கள் “சாதி மறுப்பு”என்ற தளத்திலிருந்தும் சுரண்டலால் ஆளுமையை இழந்தவர்கள் “வர்க்கம்’’ என்ற தளத்திலிருந்தும் குரலெழுப்பிய வண்ணம் உள்ளனர்.


அறிவுத்தேடலிலும், பொருள்தேடலிலும் ஆண்களைப் போலவே பெண்களும் சுதந்திரமாகச் செயலாற்றினர் என்பதை மலைபடுகடாம், பெரும்பாணாற்றுப்படை போன்ற பாடல்கள் குறிப்பிடுகிறது. பொருளியல் என்ற புறச் செயல்பாட்டிலும், புணர்ச்சி என்ற அகச் செயல் பாட்டிலும் ஆண் பெண் இருவரும் சம ஆளுமையை உடையவர்கள்தான் என்பதை மீட்டுருவாக்கம் செய்ய வேண்டிய தேவை உள்ளது. இதையே ஈழக் கவிஞர் ஆழியாள் கூறுகிறார்: “அங்கு எனக்கென/ ஒரு பிரபஞ்சம் உருவாகும்/ அப்போது உயிர் பெறும்/ எனக்கான வரி வடிவங்களுடன் கூடிய/ என்மொழி/ அதன்பின்/ தேமல் படர்ந்த எவனாயினும்/ என்னோடு உரையாடட்டும்/ அப்போது கூறுகிறேன்/ பதிலை./ என்மொழியில்/ என் ஆதித்தாயின்/ பெண் மொழியில்/ அதுவரை நீ காத்திரு” (பெண் எழுதும் காலம். பக்-69)


இக்குரல், தன்னுடலை ஆணுடல் வழியாக சமூகத்தில், வரலாற்றில், நனவிலியில் அமுக்கப் பெற்றுக் கிடக்கும் தொன்மத்தில் தேடுகிறது. தொன்மத்திலிருந்து தோண்டி எடுக்கும் வெறியும், அதை சமகாலத்தில் பொருத்தி தற்கால சமூக உடலிலிருந்து தன்னுடலை மீட்டெடுக்கும் தவிப்பும் வெளிப்படுகிறது. அதேநூலில், கீழ்கண்டவாறும் காணப் படுகிறது. “பெண் உடல் மனிதசுழற்சியின் மையமாக இருக்கிறது. இயற்கையின் ஒரு பாதியாக விளங்கும் பெண்ணின் சமூக இருப்பானது அவமானத்திற்குரியதே. பெண் உடல் குறித்த ஆரோக்கியமான புரிதலும், நாகரிகமான உரையாடலும் இனியாவது துவங்கப்பட வேண்டும்”


பெண்ணைப் பற்றி பேச நூற்றுக்குநூறு சதம் பெண்ணே சரியானவள். பெண்ணின் உணர்வுகளை பெண்ணே முழுமையாக புரிந்து கொள்ளமுடியும். ஆண்கள் பேசுவதைவிட பெண் பேசுவதே இயற்கையானதும் வலிமையானதும் ஆகும். பெண்ணைக் குறித்த பேச்சனைத்தும் மையப்புள்ளியை நோக்கி நகர்வனவாக இருக்கவேண்டும்.


“பெண்ணுடல் மனித சுழற்சியின் மையமாக இருக்கிறது” என்பது ஒரு ஆணாதிக்கச் சொல்லாடல். “சக்தியில்லை யேல் சிவம் இல்லை” என்பதுபோல. கருப்பை தாங்குதல் என்ற ஒன்று மட்டுமே இயற்கையளித்தது. மற்ற அனைத்தும் ஆண்களின் வன்முறையே. ஆண், பெண் என்ற வெவ் வேறான உடல்கள் திருமணம் என்ற பண்பாட்டு நடவடிக் கையால் இணைக்கப்பட்டு சமூகஉடல் என்ற தன்மையைப் பெறுகிறது. இந்த சமூக உடலில், ஆணுடல் என்பது மையமானது. ஆளுமையுடையது. தனித்தியங்கக் கூடியது. உயிர் போன்றது. பெண்ணுடல், ஆணுடலைப் பற்றி இருந்து இயங்கும் உயிரற்ற பிண்டமாகும். ஆணின் உட லோடு இயங்குவதின் மூலமே தனது இருப்பையும், இயக்கத்தையும் பெற்று ஒரு சமூக வடிவம் கொள்கிறது. சமூக உடலின் மையக்கருவான ஆணுடலின் தொடர்ச்சியான உயிர்ச் செயல்பாட்டிற்கும் அதன் புகழுக்கும் பங்கம் ஏற்படாதவாறு உறுதி செய்து நிற்பதே இதன் தலையாய கடமையாகும். பெண்ணுடலுக்கு தனக்குகந்த ஆணுடலை தேர்வு செய்யும் உரிமையில்லை.


ஆணுடல் பிரிந்துபோன நிலையிலும்கூட அது பிற உடலை நாடாது தவிர்க்க வேண் டும். பெண்ணுடலின் தன்னுணர்வு எழுச்சியுறாது அமுக் கப்பட்ட நிலையில் ஆணுடலின் வல்லாண்மையை ஏற்று நடக்கும்பொழுது மட்டுமே சமூக உடல் முறையாக இயக் கம் கொள்கிறது. சமூக உடலை நெருக்கடிக்குள்ளாக்கும் சொத்துரிமை, கல்வி, கலை, அறிவு, பாலியல் சுதந்திரம் ஆகியவற்றை மறுப்பதும், பெண்ணுடலின் முழு உரிமை யையும் தனது கட்டுப்பாட்டிற்குள் வைப்பதுமே சமூக உடலின் கடமையாக வைக்கப்பட்டுள்ளது. இதன் அடிப் படையில்தான் பெண்ணுடலுக்கான அறக்கட்டுமானங்கள் ஆணுடலால் வரையறுக்கப்பட்டன. பண்பாட்டு வரலாறு என்பது தொடர்ச்சியான ஒடுக்குமுறைகளாலும் வன்முறை களாலுமே நகர்த்தப்பட்டு வந்துள்ளது. பெண்ணுடல் மனித சுழற்சியின் மையமாக இல்லாததே இத்தனை பிரச்சனை களுக்கும் காரணம். எனவே “பெண்ணின் சமூக இருப்பா னது, அவமானத்திற்குரியதே” என்பது சமூகம், வரலாறு, தொன்மம் குறித்தப் புரிதலில் ஏற்பட்ட பின்னடைவே யாகும். “பெண்ணியம்” என்ற பனுவலில் மட்டும் பயணம் செய்வதால் ஏற்படும் கருத்தாக்கம் ஆகும்.
“பெண் உடல் குறித்த ஆரோக்கியமான புரிதலும், நாகரிக மான உரையாடலும் இனியாவது துவங்கப்படவேண்டும்’’ என்ற வேண்டுகோளுக்கு ஆணுடல் எப்போதும் செவி சாய்ப்பதில்லை. அது உடல் பல நூற்றாண்டு காலம் சமூக உடலால் வார்த்து எடுக்கப்பட்டது. சமூகத்தின் அத்தனை வன்முறைகளையும் செரித்து வளர்ந்து கண்ணகியை கண் கலங்க வைத்து மாதவியை ஆலிங்கனம் செய்த உடல். தனது அழுகிய உடலை பரத்தை வீட்டுக்கு கொண்டு செல்லக் கூடையில் சுமக்கவைத்த உடல். சங்ககாலத்தில் கோப்பெரும் பெண்டுவையும், இக்காலத்தில் ரூப்கன் வரையும், “நான் இறந்து போனால், நீயும் உடன் கட்டை ஏறு” என உத்திரவிட்ட உடல். ஒடுக்குமுறையையும், வன் முறையை மட்டுமே வரலாறு முழுதும் உண்டு வளர்ந்த ஆண் உடலிடம், கோரிக்கை பயனளிக்காது. ஏனெனில் அது சமூக உடலில் மையம் கொண்டுள்ளது.


“வருடிப்பார்த்திருக்கிறாயா என் காமத்தை/ ஒரு புதிய காகிதத்தில் எழுத விரும்புவதைப் போலவோ/ அல்லது/ ஒரு குழந்தையின் விரல்களைப் பற்றும்/ ஆர்வத்துடனோ? (ஸில்வியா பிளாத்). இத்தகைய எதிர்பார்ப்பு அன்றைய சங்கத் தலைவியிடமும் இருந்தது. தலைவனும் அதை பூர்த்தி செய்துள்ளான். “பெருத்த தோள்களையுடைய தலைவியே, மேட்டில் துளிர்த்த முற்றாத இளம் புல்லை முதிய பசுமாடு தனது நாவால் மெல்லத் தடவிக் கொடுப் பது போன்று காமம் புதிது” என்று இரண்டாயிரம் ஆண்டு களுக்கு முன்பு பாடிய ஆணுடல், இன்றைக்கும் அதே தன்மையைப் பெற்றிருக்குமா?


பெண்ணின் ஆளுமையை மீட்டெடுக்க பெண்ணியம், சாதி மறுப்பு, வர்க்கம் என்ற மூன்று தளங்களும், ஒன்றோடொன்று ஊடாடுவதும், ஒன்றையொன்று கற்றுக் கொள்வதும், ஒன்றிலிருந்து ஒன்று பெற்றுக்கொள்வதும், மூன்றும் நெருங்கியிருந்து சமூக உடலை கேள்விக்குட் படுத்துவதுமே இன்றைய தேவையாகும். இதனால் நாம் பெற்றுக்கொள்ள இருப்பது ஆளுமைமிக்க, சாதியும் சுரண்டலுமற்ற பெண்ணுடல்.


உதவிய நூல்கள்:
1. குறுந்தொகை, நற்றிணை, புறநானூறு, ஐங்குறுநூறு
2. பாட்டும், தொகையும், தொல்காப்பியமும் தமிழ் சமூக உருவாக்கமும் - ராஜ் கெளதமன்
3.சங்க காலத் தமிழகத்தின் சமூகநிலை, வெ.பெருமாள்சாமி
4. தமிழ் சிந்தனை மரபு - ச.பிலவேந்திரன்
5. பெண் எழுதும் காலம் - அ.வெண்ணிலா
6. திணைக்கோட்பாட்டின் அடிப்படை அம்சங்கள் - கா.சிவத்தம்பி.


நன்றி: புதுவிசை
...மேலும்

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்