/* up Facebook

Dec 27, 2009

ஆனால் கவிதைப் பேராசிரியர் என்று எவரும் இல்லை - விஸ்லாவா சிம்போர்கா


விஸ்லாவா சிம்போர்கா மேற்கு போலந்தில் 1923இல் பிறந்தவர். உலகளவில் முக்கிய மொழிகளில் எல்லாம் அவரது கவிதைகள் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. தமிழிலும் - சிம்போர்காவுக்குத் தெரியாது என்றாலும் - மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறார். மிக எளிமையான கவி. காட்சி அளிக்கும் அளவிற்கு எளிமையானவரும் அல்ல. இயற்கையின் அழகு அளிக்கும் ஆச்சரியத்தையும், காதல், அன்பு ஆகியவற்றின் இளிவரலையும், கலையின் மாயத்தன்மையையும் வெளிப்படுத்தியவர். சிம்போர்காவின் குரல் மென்மையானது. அவரது சாதுவான நகைச்சுவை உணர்வு, இறுகிப்போய்விட்ட நிறுவனங்களின் அஸ்திவாரங்களைத் தோண்டும் குணம் கொண்டது. சாதாரணத்திலிருந்து அசாதாரணத்தைச் சலித் தெடுப்பதில் வல்லமை கொண்டவர். 1996ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசு பெற்றவர்.


- சுந்தர ராமசாமி
(காலச்சுவடு, டிசம்பர் 2004)


1996 டிசம்பர் 7ஆம் தேதி ஸ்டாக் ஹோம் நகரில் தனக்கு இலக்கியத்துக்காக வழங்கப்பட்ட நோபல் பரிசைப் பெற்றுக்கொண்டு சிம்போர்கா ஆற்றிய உரையின் ஆங்கிலம் வழியிலான தமிழாக்கம் இது.


ஆங்கில மொழிபெயர்ப்பு: ஸ்டானிஸ்லாவ் பாரன்ழாக், க்லெய்ர் கவனா.
சிம்போர்காவின் நோபல் பரிசு உரை, கவிதைகளின் தமிழாக்கம்: அனிருத்தன் வாசுதேவன்
மொழிபெயர்ப்பில் உதவியவர்: கவிதா


எந்த ஒரு உரையிலும் முதல் வாக்கியமே மிகக் கடினமானது என்று கூறுவார்கள். இப்போது அதைக் கடந்தாயிற்று. எனினும் தொடர்ந்து வரும் அனைத்து வாக்கியங்களுமே - மூன்றாவது, ஆறாவது, பத்தாவது, இறுதி வரி வரை - கடினமானவையாக இருக்கும் எனத் தோன்றுகிறது. ஏனெனில் நான் பேச வேண்டியது கவிதையைப் பற்றி. நான் இது குறித்து வெகு குறைவாகவே சொல்லியிருக்கிறேன். இது பற்றி நான் ஏறத்தாழ ஒன்றுமே சொல்லியிருக்கவில்லை என்பதே உண்மை. அப்படி ஏதேனும் கூறியுள்ளபோதெல்லாம் நான் இதைச் சரியாகக் செய்யக்கூடியவள் அல்ல என்ற சந்தேகம் எங்கிருந்தோ வந்துவிடுகிறது. இந்தக் காரணத்தாலேயே என்னுடைய உரை சுருக்கமானதாக இருக்கும். கச்சிதமற்ற ஒன்று குறைந்த அளவுகளில் வழங்கப்படும்போது அதைச் சகித்துக்கொள்வது எளிது.


தற்காலக் கவிஞர்கள் - குறிப்பாகத் தம்மீது என்று கூடக் கூறலாம் - நம்பிக்கை குறைந்தவர்களாய், சந்தேகங்கள் நிரம்பியவர்களாய் இருக்கிறார்கள். மிகத் தயக்கத்துடன், சமயங்களில் வெட்கத்தோடுதான் பொது வெளியில் தம்மைக் கவிஞர்கள் என்று ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால் ஆரவாரம் நிறைந்த இக்காலங்களில் நம் குறைகளை ஒப்புக்கொள்வது - குறிப்பாக அக்குறைகள் கவர்ச்சிகரமாக வழங்கப்படும் போது - நிறைகளை அடையாளம் கண்டுகொள்வதை விட மிக எளிது. நிறைகளோ நம்முள் எங்கோ ஆழமாக ஒளிந்திருக்கின்றன. நாம் அவற்றை அவ்வளவாக நம்புவதும் இல்லை. படிவங்களை நிரப்பும்போதும் பரிச்சயமற்றவர்களுடன் உரையாடும்போதும், அதாவது தங்களது பணியைப் பற்றிக் குறிப்பிடாமல் இருக்க இயலாதபோது, கவிஞர்கள் ‘எழுத்தாளர்’ என்னும் பொதுவான பெயரைப் பயன்படுத்த விரும்புகிறார்கள். அல்லது ‘கவிஞர்’ என எழுதுவதற்கு மாறாக, தாம் செய்யும் வேறு ஏதேனும் ஒரு பணியின் பெயரைச் சேர்த்துக் குறிப்பிடுகிறார்கள். தாம் பேசிக்கொண்டிருப்பது ஒரு கவிஞருடன் என்றறிந்ததும் உயர் அதிகாரிகளும் பேருந்தின் சகபயணிகளும் ஒருவித சந்தேகம் கூடிய வியப்புடனும் பீதியுடனுமே அவர்களுக்குப் பதிலளிக்கிறார்கள். தத்துவ அறிஞர்களுக்கும் இத்தகைய அனுபவம் உண்டு என நினைக்கிறேன். ஆனால் அவர்களது நிலை சற்று மேலானது. அவர்கள் வேண்டுமானால் ஏதேனும் ஒரு அறிவார்ந்த பட்டத்தால் தங்களுடைய பணியை அலங்கரித்துக்கொள்ளலாம். தத்துவவியல் பேராசிரியர் - இது எவ்வளவு மதிப்பிற்குரியதாக இருக்கிறது!


ஆனால் கவிதைப் பேராசிரியர் என்று எவரும் இல்லை.


இதற்குக் கவிதை என்பது தனிப்பட்ட படிப்பும் முறையான தேர்வுகளும் நூற்பட்டியலும் அடிக்குறிப்புகளும் கொண்ட ஆய்வுக் கட்டுரைகளும் இறுதியில் மிகுந்த செறிவுடன் சூட்டப்பட்ட பட்டங்களும் அடங்கிய ஒரு பணி என்று பொருள்படுகிறது. ஆகச் சிறந்த கவிதைகளால் பக்கங்களை நிரப்பியிருப்பதுகூட உங்களைக் கவிஞர் ஆக்கிவிடாது என்று இதற்கு அர்த்தமாகிறது. இதில் அதிக முக்கியத்துவம் பெறுவது கவிஞர் என்பதை உறுதி செய்யும் அங்கீகார முத்திரை கொண்ட ஏதோ ஒரு துண்டுக் காகிதம். ரஷ்ய மொழிக் கவிதையின் பெருமிதமான அடையாளம், நோபல் பரிசு பெற்ற ஜோசப் பிராட்ஸ்கி இவ்வித காரணங்களுக்காகத் தன் நாட்டிற்குள்ளேயே மறைந்து வாழ நேரிட்டதை இங்கு நினைவுகூர்வோம். கவிஞன் என்னும் உரிமையை நல்கும் சட்டப்பூர்வமான சான்றிதழ் எதுவும் அவரிடம் இல்லாததால் அவரை ‘ஒட்டுண்ணி’ என்றழைத்தனர்.


பல ஆண்டுகளுக்கு முன் பிராட்ஸ்கியை நேரில் சந்திக்கும் நல்வாய்ப்பு எனக்குக் கிட்டியது. அப்போது நான் ஒன்றைக் கவனித்தேன். நான் அறிந்த எல்லாக் கவிஞர்களுக்குள்ளும் அவர் மட்டுமே தன்னைக் கவிஞன் எனக் கூறிக்கொள்வதில் மகிழ்ச்சியடைந்தார். அவர் அந்தச் சொல்லை எவ்விதத் தயக்கமுமின்றி உச்சரித்தார். மாறாக அதை ஒருவிதச் சுதந்திரத் துடுக்குடன் கூறினார். அவர் தன் இளமையில் அனுபவித்த அவமதிப்புகளின் காரணமாக இவ்வாறிருக்குமென எனக்குத் தோன்றுகிறது.


மனித கவுரவம் அத்தனை எளிதில் தாக்கப்படாத, இதைக் காட்டிலும் மேல் நிலையிலுள்ள நாடுகளிலும், கவிஞர்கள் பிரசுரிக்கப்படவும் வாசிக்கப்படவும் புரிந்துகொள்ளப்படவும் ஏங்குகிறார்கள். ஆனால் அவர்கள் தம்மை பொதுப்புத்தியின் மந்தைத்தனத்திலிருந்தும் தினசரி வாழ்வின் சுழற்சிகளிலிருந்தும் அப்பாற்படுத்திக்கொள்ளச் செய்யும் முயற்சிகள் வெகுக் குறைவே. இருப்பினும், இந்த நூற்றாண்டின் முதல் பத்தாண்டுகளில்தான் கவிஞர்கள் தங்களது ஆடம்பர ஆடைகளாலும் விசித்திரமான நடத்தைகளாலும் நம்மை அதிர்ச்சியடையச் செய்ய எத்தனித்தார்கள். ஆனால் இவையனைத்தும் பொதுக் காட்சிக்காக மட்டுமே. கதவுகளைத் தங்கள் பின் தாளிட்டு, தங்கள் கௌரவ அங்கிகளையும் அலங்காரங்களையும் கவித்துவம் சார்ந்த இன்னபிறவற்றையும் களையும் தருணம் கவிஞர்களுக்கு எப்போதும் வருவதுண்டு. அப்போது அவர்கள் அமைதியுடனும் பொறுமையுடனும் தங்கள் சுயங்களுக்காகக் காத்திருந்து ஒரு அசையாத வெண் காகிதத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது


சிறந்த விஞ்ஞானிகள், கலைஞர்களின் வாழ்க்கை பற்றிய திரைப்படங்கள் அதிக அளவில் உருவாக்கப்படுவது எதேச்சையான நிகழ்வுகள் அல்ல. முக்கியமான அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கோ ஆகச் சிறந்த படைப்பொன்றிற்கோ காரணமான படைப்பாற்றலின் செயல்பாட்டை நம்பகத்தன்மையுடன் காண்பிப்பதற்குப் பேரூக்கம் கொண்ட இயக்குநர்கள் முயல்கிறார்கள். சிலவகைப்பட்ட அறிவியல் சார்ந்த உழைப்புகளை ஓரளவு வெற்றிகரமாகப் படம்பிடித்துக் காண்பிக்க இயலும். ஆய்வுக்கூடங்கள், பல்வேறு உபகரணங்கள், உயிர்த்தெழும் பெரிய இயந்திரங்கள் போன்றவை இடம்பெறும் காட்சிகள் பார்வையாளர்களின் ஆர்வத்தைச் சிறிது நேரம் தக்கவைத்துக்கொள்ள உதவும். மேலும் அந்த நிச்சயமற்ற நிமிடங்கள்- ஏதோ ஒரு சிறு மாற்றத்துடன் ஆயிரமாவது முறையாகச் செய்யப்படும் இந்த ஆய்வு ஒருவழியாகத் தேவைப்படும் பயனை அளிக்குமா? - அவற்றில் நாடகத்தன்மை இருக்கலாம். ஓவியர்கள் பற்றிய படங்கள் அற்புதமாக அமையலாம். முதல் கோட்டில் தொடங்கி இறுதிப் பூச்சுவரை ஒரு பிரபல ஓவியம் உயிர்ப்பெறுதலின் ஒவ்வொரு நிலையையும் காண்பிக்கலாம். இசையமைப்பாளர்கள் பற்றிய படங்களில் இசை பொங்கி எழுகிறது: அவர் காதில் ஒலிக்கும் முதல் ஸ்வரங்கள் இறுதியில் முழு வடிவம் பெற்ற இசைப் படைப்பாய் உருப்பெறுகின்றன. எனினும் இவை அனைத்தும் மேலோட்டமானவையே. படைப்பூக்கம் என்றழைக்கப்படும் வினோத மனநிலையைப் பற்றி இவை ஒன்றும் விளக்குவதில்லை. ஆனால் காண்பதற்கும் கேட்பதற்குமாவது இவற்றில் ஏதோ கிடைக்கின்றன.


ஆனால் கவிஞர்களின் நிலைதான் மிக மோசமானது. அவர்களது பணி படப்பிடிப்பிற்கு உகந்ததே அல்ல. ஒருவர் மேசையில் அமர்ந்தபடி, அல்லது சாய்விருக்கையில் படுத்தபடி அசையாத வண்ணம் சுவரையோ வீட்டின் அந்தரத்தையோ வெறித்துப் பார்த்தபடி இருக்கிறார். எப்போதாவது இவர் ஏழு வரிகளை எழுதி, பின் பதினைந்து நிமிடங்களுக்குள் அவற்றில் ஒன்றை அடித்து நீக்கிவிடுகிறார். பின் எதுவுமே நிகழாமல் ஒரு மணிநேரம் நகர்கிறது. இதை யார் பார்த்துக்கொண்டிருக்க முடியும்?


நான் படைப்பூக்கத்தைக் குறிப்பிட்டிருந்தேன். இதுபற்றிக் கேட்கும்போது தற்காலக் கவிஞர்கள் மழுப்பலாகப் பதிலளிக்கிறார்கள். இந்த உள் உந்துதலின் அருளை அவர்கள் அறிந்திருக்கவேயில்லை என்று பொருளல்ல. தமக்கே புரியாத ஒன்றை மற்றவர்களுக்கு விளக்கிக் கூற முடியாததன் சிக்கலே இது.


சமயங்களில் என்னிடம் இக்கேள்வி கேட்கப்படும்போது நானும் நழுவ நினைக்கிறேன். ஆனால் என்னுடைய பதில் இதுவே: படைப்பூக்கம் என்பது கவிஞர்கள் அல்லது பொதுவாகக் கலைஞர்களின் விசேஷ உடைமையன்று. படைப்பூக்கமுள்ள ஒரு குறிப்பிட்ட வகை மக்கள் எப்போதும் இருந்து வருகிறார்கள், தம் பணி என்று தாம் உணர்ந்தவற்றை விரும்பித் தேர்ந்தெடுத்து அவற்றை ஈடுபாட்டுடனும் கற்பனைத் திறனுடனும் செய்பவர்களே இத்தகைய மக்கள். இவர்கள் மருத்துவர்களாக, ஆசிரியர்களாக, தோட்டம் வளர்ப்பவர்களாக இருக்கலாம் - என்னால் நூற்றுக்கும் மேற்பட்ட தொழில்களைப் பட்டியலிட முடியும். இத்தகையோருக்கு அவர்களது பணி தொடர்ந்து உற்சாகம் நிரம்பியதாக இருக்கிறது - அவர்கள் புதிய சவால்களைத் தொடர்ந்து எதிர் கொண்டுவரும்வரை, தடைகளும் சரிவுகளும் அவர்களது ஆர்வத்தைக் குறைத்துவிடுவதில்லை. அவர்கள் தீர்வுகாணும் ஒவ்வொரு கேள்வியிலிருந்தும் புதிய கேள்விகள் திரண்டெழுகின்றன.


இந்தப் படைப்பூக்கம் எதுவாக இருப்பினும் அது தொடர்ந்து ‘எனக்குத் தெரியவில்லை’ என்கிற அறியாமையின் ஒப்புதலிலிருந்து பிறக்கிறது. அத்தகையோர் சிலரே. பூமியில் வசிக்கும் பெரும்பாலோர் பணிபுரிவது வாழ்க்கையை எப்படியேனும் கழிப்பதற்கே. செய்தாக வேண்டும் என்ற காரணத்தால் அவர்கள் செய்கிறார்கள். அவர்கள் தம் பணியை அதன் மீதுள்ள உணர்வெழுச்சியால் தேர்ந்தெடுத்திருக்கவில்லை. அவர்களது சூழ்நிலைகள் அந்தத் தேர்வை அவர்களுக்காகச் செய்துவிட்டிருக்கின்றன. ஈடுபாடற்ற, சலிப்பூட்டும் பணி. மற்றவர்களுக்கு இதுகூடக் கிடைக்கப் பெறாததால் மதிக்கப்படும் பணி. இது மிகக் கொடிய மனிதத் துயரங்களுள் ஒன்று. இது குறித்து வரும் நூற்றாண்டுகளில் நல்லவிதமான மாற்றம் நிகழும் என்பதற்கான அறிகுறி எதுவும் தென்படவில்லை.


எனவே, நான் கவிஞர்களுக்குப் படைப்பூக்கத்தின் தனியுரிமையைத் தர மறுத்தாலும் அவர்களை ‘அதிருஷ்டத்தின் அன்புக்குரியவர்கள்’ என்னும் சிறப்புக் குழுவில் வைக்கின்றேன்.


இத்தருணத்தில் இங்கு கூடியிருக்கும் அன்பர்கள் மத்தியில் சில சந்தேகங்கள் எழலாம். கொடூரர்கள், சர்வாதிகாரிகள், நம்பிக்கை வெறியர்கள், ஒரு சில கிளர்ச்சி வாசகங்களை இறைப்பதன் மூலம் ஆதிக்கம் பெற நினைக்கும் வஞ்சகப் பேச்சாளர்கள் போன்றோர்களும் தம் பணிகளை நேசிக்கிறார்கள், அவற்றை உத்வேகத்துடன் நடைமுறைப்படுத்துகிறார்கள். உண்மைதான். ஆனால் தாம் அறிந்திருப்பது தங்களுக்கு எப்போதைக்கும் போதுமானதாக இருக்கிறது என்பது அவர்களுக்குத் ‘தெரியும்.’ அவர்கள் வேறெதையும் பற்றி அறிந்துகொள்ள விரும்பவில்லை. அவை அவர்களது விவாதங்களின் வலிமையைக் குறைத்துவிடலாம் என்பதால்கூட இருக்கலாம். புதிய கேள்விகளுக்கு வழிவகுக்காத எந்த அறிவும் விரைவில் மறைந்துவிடுகிறது. உயிர் தழைப்பதற்கான கொதிநிலையைத் தர அது தவறிவிடுகிறது. மிக மோசமான சூழ்நிலைகளில் - புராதன, நவீன வரலாறுகளின் மிகவும் பிரபலமான பல தருணங்களில் நடந்தது போலவே - இது சமூகத்தின் இருப்புக்கே அபாயமாகிவிடுகிறது.


எனவேதான் ‘எனக்குத் தெரியவில்லை’ என்ற கூற்றின் மீது நான் பெருமதிப்புக் கொண்டிருக்கிறேன். அது சிறியது, எனினும் பிரம்மாண்டமான இறக்கை களுடன் பறக்கின்றது. அது நம் வாழ்வின் எல்லைகளை விரிவடையச் செய்து நம் அக வெளிகளையும் இந்தப் பூமி நின்று சுழலும் பரந்த புறவெளிகளையும் அதனுடன் இணைக்கின்றது. ஐசக் நியூட்டன் ‘எனக்குத் தெரியவில்லை’ என்று தனக்குள் நினைக்காமலிருந்திருப்பின் அவரது தோட்டத்து ஆப்பிள்கள் ஆலங்கட்டி மழையெனச் சரமாரியாக விழுந்திருந்தாலும் அது அவருக்கு எந்த விளைவையும் ஏற்படுத்தாததாகவே இருந்திருக்கும். அவர் அவற்றைக் குனிந்தெடுத்து நன்கு பசியாறியிருந்திருப்பார், அவ்வளவே. என் சக தேசத்தவர் மேரி ஸ்க்லோடௌஸ்கா - க்யூரி ‘எனக்குத் தெரியவில்லை’ என எண்ணாதிருந்திருந்தால் அவர் ஏதேனும் ஒரு தனியார் பள்ளியில் - நல்ல குடும்பத்து இளம் பெண்களுக்கான பள்ளியொன்றில் - வேதியியல் கற்பிப்பவராக இருந்திருப்பார். முற்றிலும் மதிப்புக்குரிய இப்பணியில் தன் காலத்தைக் கழித்திருப்பார். மாறாக அவர் தனக்குள் கூறிக்கொண்டிருந்த ‘எனக்குத் தெரியவில்லை’ என்னும் வார்த்தைகள்தாம் அவரை ஒருமுறையல்ல இருமுறை ஸ்டாக்ஹோம் நகருக்கு இட்டுச் சென்றன. ஓய்வின்றித் தேடலில் ஈடுபடும் பிறவிகளுக்கு அங்கு எப்போதாவது நோபல் பரிசு வழங்கி கௌரவிக்கப்படுகிறது.


கவிஞர்களும் - அவர்கள் உண்மையானவர்கள் என்றால் - ‘எனக்குத் தெரியவில்லை’ எனத் திரும்பத் திரும்பத் தமக்குள் கூறிக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு கவிதையும் இந்தக் கூற்றுக்கு விடைகாணும் முயற்சியாகிறது. ஆனால் கவிதையின் இறுதி முற்றுப்புள்ளி பக்கத்தின் மீது விழுந்த மறுகணம் கவிஞர் தயங்கத் தொடங்குகிறார். குறிப்பிட்ட இந்த விடை வெறும் தற்காலிகமானதே எனவும் முற்றிலும் போதுமானதன்று எனவும் அவர் உணரத் தொடங்குகிறார். எனவே கவிஞர்கள் தொடர்ந்து எத்தனிக்கிறார்கள். பின் ஒரு நாள் அவர்களுடைய சுய அதிருப்தியின் மொத்த பயன்களும் இலக்கிய வரலாற்றாளர்களால் தொகுக்கப்பட்டு அவர்களுடைய ‘மொத்த படைப்புகள்’ என்று வழங்கப்படுகின்றன.


சமயங்களில் உண்மையில் நிகழச் சாத்தியமற்றவற்றை நான் கனவாகக் காண்கிறேன். உதாரணத்திற்கு, மனித செயல்பாடுகளின் சுயப் பெருமிதத்தைப் பற்றிய உருக்கமான புலம்பலை ஆக்கித் தந்துள்ள எக்லேதியாதெஸுடன் பேசக் கிடைக்கும் என்று கற்பனை செய்துகொள்கிறேன். நான் முதலில் அவர் முன் தலை வணங்குவேன். ஏனெனில் அவர் என்னைப் பொறுத்தவரை நம்முடைய தலை சிறந்த கவிஞர்களுள் ஒருவர். அதன் பிறகு அவருடைய கையைப் பிடித்துக்கொண்டு கேட்பேன், ‘கதிரவனுக்குக் கீழ் புதிதாக ஏதுமில்லை’ என்று எழுதியுள்ளீர் எக்லேதியாதெஸ். எனினும் தாங்களே இந்தக் கதிரவனின் கீழ் புதிதாகத் தோன்றியவரே. உங்களுக்கு முன் எவரும் இதை எழுதாததால் உங்கள் கவிதையும் இந்தக் கதிரவனின் கீழ் புதிதானதே. ஏனெனில் உங்களுக்கு முன் வாழ்ந்த எவருக்கும் உங்கள் கவிதை கிடைக்கப் பெறவில்லை. மேலும், நீங்கள் எதனடியில் அமர்ந்திருக்கிறீரோ அந்த சைப்ரஸ் மரம் காலத்தின் தொடக்கத்திலிருந்து வளர்ந்துகொண்டிருக்கவில்லை. இதே போன்ற ஆனால் இதே அல்லாத வேறொரு சைப்ரஸ் மரத்தின் வழியாக இது இங்கு வந்தது. எக்லேதியாதெஸ், எனக்கு உங்களிடம் வேறொன்றும் கேட்க இருக்கிறது. இதே கதிரவனின் கீழ் எந்தப் புதிய பணியில் இப்போது ஈடுபட்டிருக்கிறீர்கள்? நீங்கள் முன்னர் வெளிப்படுத்தியுள்ள சிந்தனைகளுடன் இன்னமும் சேர்க்க எண்ணமா? அல்லது ஒருவேளை அவற்றில் சிலவற்றிற்கு இப்போது எதிர்வினையாற்ற ஆசையா? உங்களுடைய முந்தையப் படைப்பில் ஆனந்தத்தைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தீர்கள். அது நிரந்தரமற்றதாய் இருந்தால் என்ன? ஒரு வேளை உங்களது புதிய கவிதை ஆனந்தத்தைப் பற்றி இருக்குமோ? குறிப்பெடுக்கத் தொடங்கியாயிற்றா? பிரதிகள் உண்டா? ‘நான் எல்லாவற்றையும் எழுதிவைத்தாயிற்று. மேலும் கூற என்னிடம் ஒன்றும் இல்லை?’ என்று சொல்வீர்களென எனக்குத் தோன்றவில்லை. உலகில் எந்தக் கவிஞனும் அப்படிக் கூற முடியாது, குறிப்பாக உங்களைப் போன்ற மிகச் சிறந்த கவிஞர் எவரும் அப்படிச் சொல்ல முடியாது.


இந்த உலகத்தைப் பற்றி நாம் என்ன நினைத்துக்கொண்டிருந்தாலும், அதன் பரந்தமையைப் பார்த்து நாம் மிரண்டுபோயிருந்தாலும், அதன் முன் நாம் வீரியமற்றவர்களாக இருக்கிறோம் என்று நினைத்துக்கொண்டிருந்தாலும் தனிமனித துயரங்களின்பால், மக்களின், விலங்குகளின் ஏன் தாவரங்களின் துயரங்கள்பால் - தாவரங்கள் வலியை உணர்வதில்லை என்பதில் நமக்கு ஏன் அவ்வளவு உறுதி - அதற்கு இருக்கும் அலட்சியம் பற்றி நாம் காழ்ப்புணர்ச்சிகொண்டிருந்தாலும் நாம் இப்போதுதான் கண்டு பிடிக்கத் தொடங்கியிருக்கும் கிரகங்கள் - அல்லது இறந்துவிட்ட கிரகங்களா? நமக்குத் தெரியாது - சுற்றிநிற்கும் நட்சத்திரங்களின் கதிர்கள் ஊடுருவும் அதன் அகண்ட பரிமாணங்களைப் பற்றி நாம் என்ன நினைத்துக்கொண்டிருந்தாலும், இரண்டு நிச்சயமற்ற தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்திற்கென ஒதுக்கப்பட்ட, அதிலும் நகைப்புக் குரிய அளவுக்குக் குறைவான கால அவகாசம் கொண்ட இருக்கைகள் ஒதுக்கப்பட்ட இந்த அளவற்ற திரையரங்கைப் பற்றி நாம் என்ன நினைத்தாலும் - இந்த உலகத்தைப் பற்றி வேறு என்ன நினைத்தாலும் ஒன்று நிச்சயம் - அது மிகவும் வியப்பானது.


வியப்பூட்டுகிறது என்று ஒன்றைச் சொல்லும்போது அதில் ஒரு சிக்கல் உள்ளது. நாம் நன்கறிந்த, எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட விதிமுறையிலிருந்து, நமக்கு முழுவதும் பழக்கப்பட்ட நிலை ஒன்றிலிருந்து விலகியிருக்கும்போது ஒன்றை வியப்பூட்டக்கூடியதாகக் கருதுகிறோம். ஆனால் இங்கு உண்மை என்னவெனில் அப்படி முற்றிலும் பழக்கப்பட்ட, தெள்ளத் தெளிவாகிவிட்ட உலகம் ஒன்றில்லை. நம்முடைய வியப்பு எந்த ஒப்பீட்டையும் சார்ந்திராமல் தனித்தே நிற்கிறது.


தினசரி வாழ்வில், நாம் நின்று நிதானமாக ஒவ்வொரு சொல்லையும் கருதாத நிலையில் ‘சாதாரண உலகம்’, ‘சாதாரண வாழ்க்கை’, ‘சாதாரண நிகழ்வுகள்’ போன்ற சொற்றொடர்களை அனைவரும் பயன்படுத்துகிறோம். ஆனால் ஒவ்வொரு சொல்லும் கவனமாக அளவிடப்படும் கவிதையின் மொழியில் எதுவுமே சராசரியானதோ சாதாரணமானதோ அன்று. எந்த ஒரு சிறு கல்லும் அதன் மேலுள்ள எந்த ஒரு மேகமும் சாதாரணமன்று. எந்த ஒரு பகலும் அதைத் தொடர்ந்து வரும் எந்த ஒரு இரவும் கூட. எல்லாவற்றுக்கும் மேலாக எந்த ஒரு வாழ்வும். உலகில் எவருடைய வாழ்வுமே சாதாரணமன்று.


கவிஞர்களுக்கான பணி அவர்களுக்கென என்றும் வகுக்கப்பட்டிருக்கும் என்றே தோன்றுகிறது.

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்