/* up Facebook

Dec 16, 2009

சூர்ப்பனகைவீன மலையாள படைப்பிலக்கியத்தில், புதிய முயற்சிகளையும், அதிர்வுகளையும் ஏற்படுத்தி வரும் கே.ஆர். மீரா எனக்கு அறிமுகமானதே, அவர் எனக்கு அறிமுகப்படுத்திய பி.பி. அனகா என்ற பெண்ணியவாதியின் பிரவேசத்தால்தான். மீராவின் மன உலகை மிக சுலபமாக நெருங்க முடிந்தது. அனல் வீசும் விவாதங்களும், அடங்கி போகும் தர்க்கங்களுமாக இருவேறு திசைகளிலும் பதட்டமின்றி பயணம் செய்யும் மீரா இன்றைய சூழலின் மீது எழுப்பும் கேள்விகள் மிக முக்கியமானவைகள்.
இக்கதையை ஷைலஜா மொழிபெயர்த்த போது ஆர்வமுடன் உடனிருந்து உள்வாங்கினேன். இப்படைப்பின் தாக்கத்திலிருந்து அவள் விடுபட பல நாட்கள் ஆனது. பல்வேறு வகையான வாசிப்பின் அனுபவ பகிர்தலை இக்கதை அவளுக்கு பெற்றுத்தந்திருக்க வேண்டும். உயிர்மையில் இக்கதை பிரசுரமாகி தொலைபேசியின் வழியே நிறைய உணர்வுகரமான உரையாடல்களை கேட்டு உணர்ந்த போதிலும் அனகாவும் அவள் மகளும், எல்லாவற்றிருக்கும் மேலாக அனகாவின் கணவரும் எனக்குள் ஏற்றியிருக்கும் பெரும் பாரம் அத்தனை சுலபத்தில் இறக்க முடியாதது.


மலையாளம் - மூலம் கே.ஆர். மீரா
தமிழில் - கே.வி. ஷைலஜா


கோழிக்கோட்டில் ஐஸ்க்ரீம் தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் உச்சகட்டத்தில் இருந்தபோது தான் பி.பி.அனகாவிற்கு கல்லூரி விரிவுரையாளராக வேலை கிடைத்தது.
முதல் நாள் வகுப்பில் நுழைந்தவுடனேயே கரும் பலகையில் எழுதியிருந்ததைப் பார்த்தாள்.


“சூர்ப்பனகையை வரவேற்கிறோம் “


பி.பி அனகா திரும்பி நின்று கரும்பலகையை துடைக்கத்துவங்கினவுடன் காகித அம்புகள் மேலே வந்து விழுந்தன. தன் முதல் வகுப்பினை ஆரம்பிக்க நினைத்ததருணத்தில் கடைசி பெஞ்சில் உட்கார்ந்திருந்த மாணவன் மெதுவாக எழுந்தான்.


“மிஸ் ஒரு சந்தேகம் “
“கேளுங்க....”
“மிஸ் நீங்க பெண்ணியவாதி தானே?”அப்படின்னா “பேன் தி ப்ரா இயக்கத்தைக் குறித்து உங்கள் அபிப்ராயம் என்ன?”


கோபத்தோடு அனகா அவனை வகுப்பிலிருந்து வெளியேறச் சொன்னாள்.
சற்று நிதானித்து அவனை வகுப்பிற்குள் அனுமதிக்க நினைத்த நேரத்தில் அந்த நிகழ்வு போராட்டமாக உருமாறியிருந்தது. அவள் சமாதானமாய் போக மறுத்த போது போராட்டம் மேலும் வலுத்தது.


பெண்ணியவாதிகளின் தலைவியானதால் இயக்கத்தின் துணையும் கட்சியின் பின்புலமும் அனகாவிற்கு இருந்தது. கயிறு திருகுதல் போல போராட்டம் இறுகியது. கல்லூரி கால வரையற்று மூடப்பட்டது. பெரிய பெரிய மார்புகள் வைத்து வரைந்த படங்களுக்கும் சுவரெழுத்துகளுக்குமிடையில் பதறாமல் நடந்த நாட்களில் உடன் பணிபுரியும் பேராசிரியர்களும் அனகாவை üசூர்ப்பனகைý என்றே கூப்பிடத் தொடங்கியிருந்தார்கள். இதனாலெல்லாம் அனகா மனம் தளர்ந்து போகவில்லை. மூக்கும், முலைகளும் அறுக்கப்பட்ட சூர்ப்பனகையின் மீது அவளுக்கு எப்போதுமே மரியாதையிருந்தது. சரித்திரத்தில் ஆரம்ப குறியீடாக சூர்பனகை இருந்தாளென்றாலும் அதுதானே யதார்த்த பெண் விடுதலை?


அகலம் குறைந்த சிறிய கட்டிலில் பச்சைநிற இரவு உடையணிந்து படுத்திருந்த அனகா பக்கத்திலிருந்த பத்து வயது மகள் சீதாவிடம் கேட்டாள்.


“சூர்ப்பனகையின் கதை தெரியுமா உனக்கு? “
“தெரியாது”
சீதாவின் முகம் கனத்திருந்தது.
சீதா அறைக்குள் வரும் பொழுது, அம்மு ஜோஸப் தரியனுடன் பேசிக் கொண்டிருந்தாள் அனகா. எப்போதும் போலான உரையாடல்தான் அது. தாராளமயமாக்கலின் பலனான உலகமயமாக்கலின் விளைவில் நிகழ்ந்த வியாபாரமயமாக்கல், பாலியல் சுதந்திரமின்மை, பெண் விடுதலை, பெண் தன்விருப்பதை அடையும் சுதந்திரம் என்று போய்க் கொண்டே இருந்த பேச்சு சீதா வந்த போது அறுபட்டது.


அம்முவின் பாப் செய்யப்பட்ட முடியும், நிறம் மங்கிய தொள தொளப்பான சுடிதாரும் சீதாவுக்கு எப்போதுமே பிடிக்காது. அவளுடைய வெறுப்பினை பல விதங்களில் வெளிப்படுத்தினாள். இதையெல்லாம் கவனித்து சகிக்க முடியாமல் போனபோது அம்மு எழுந்து வெளியே போனாள். அதைப்பார்த்த அனகாவிற்கு கோபம் வந்தாலும் வெளிக் காண்பிக்கவில்லை. அம்மாவின் நடவடிக்கைகளை எப்போதும் விமர்சிக்கும் பெண் அம்மு என்ற பிம்பத்தை வைத்திருக்கும் சீதாவின் மனதில் இன்னும் ஏன் கோபத்தை ஏற்ற வேண்டும்? அதனால் தான் ஒரு கதை சொல்லலாமே என்று நினைத்தாள். உடனே ராமாயணம் தான் நியாபகத்திற்கு வந்தது. அதிலும் குறிப்பாக குறைபடுத்தப் பட்ட பெண்ணாய் சூர்ப்பனகை அவள் மனவெளிகளில் அலையத் தொடங்கினாள். கல்லூரியின் முதல்நாளும் கூடவே சேர்ந்து கொண்டது.


“சூர்ப்பனகை யாரு? “
சீதா அவளுடைய கான்வெண்ட் மலையாளத்தில் கேட்டாள். மிகவும் சுருக்கமாக அந்தக் கதையை சொல்லலாமா என்று அனகா யோசித்தாள். ஆனால் சூர்ப்பனகை யார்? பதிவிரதை சீதாவோடான காதலின் காரணமாக ராமனால் நிராகரிக்கப்பட்ட ராட்சஸி. அனகாவுக்கு கதை சொல்ல முடியாமல் வார்த்தைகள் தன்னை சுருக்கிக் கொண்டன.


உயரமான கட்டிலுக்குப் பக்கத்தில் நீலநிற ஃபிளாஸ்டிக் சேரை இழுத்து போட்டுக் கொண்டு எந்தவித உற்சாகமும் இல்லாமல் உட்கார்ந்திருக்கும் சீதாவைப் பார்த்தபோது கதை சொல்லும் சுவாரசியம் முற்றிலும் வற்றிப்போய் மகளை கவனிக்க ஆரம்பித்தாள்.
சீதா உயரமாக வளர்ந்திருந்தாள். சிவப்பு நிற டாப்ஸின் திறந்திருந்த வட்டமான கழுத்தினூடாக அவள் மகளின் மார்பினை பார்க்க நேரிட்டது. அவை சராசரியைவிட அதிகமாக வளர்ந்திருப்பதாய் அனகாவிற்குத் தோன்றியது. இருபத்தியெட்டா? முப்பதா? பத்து வயது பெண்ணுக்கு சாதாரணமாக மார்பளவு எதுவரை இருக்கலாம்?


எதுவரை இருக்கலாம் என்றெல்லாம் தெரியவில்லையானாலும் சீதாவுக்கான வளர்ச்சி சற்று அதிகம்தான். கடைசியாக பார்த்தபோது அவள் இவ்வளவு புஷ்டியாக இல்லை. உயரமாகவும் இல்லை. நான்கு மாதத்திற்கு முன்பு பாலியல் தொழிலாளிகள் சம்மேளனத்திற்கு போய்விட்டு வரும்பொழுது தான் அனகா சீதாவின் ஹாஸ்டலில் இறங்கினாள்.


அனகாவை பார்த்தவுடன் ஹாஸ்டல் வார்டன் வழக்கம் போல சீதாவைக் குறை சொல்ல ஆரம்பித்தாள். சீதா பைக்குள் எப்போதும் லேக்டோஜன் பால்பவுடர்டின்னை மறைத்து வைத்திருக்கிறாளென்றும், நேரம் கிடைக்கும்போதெல்லாம் வாரி வாரித் தின்கிறாளென்றும், அதனால் நடைபாதை முழுக்க எறும்புகள் வந்து பிரச்சனையாகிறதென்றும் மற்ற பிள்ளைகள் குறை சொல்கிறார்கள் என்றும் கூறினாள்.


சொந்த மகளை மற்றவர்கள் விமர்சித்தால் பெண்ணியவாதியானாலும் கோபம் வரும் தானே! அந்த கோபத்துடனே அனகா ஹாஸ்டலின் கருங்கல் தூண்களுள்ள நடைபாதையை கடந்து மகளைப் பார்க்கப் போன போது “களிக்குடுக்கையில்”கன்றுக்கு பசுவிடம் செல்லும் வழியை தேடிக் கொண்டிருந்தாள் சீதா


“வெக்கமாயில்ல உனக்கு? “
மற்ற பிள்ளைகளுக்கு கேட்கமால் குரலடக்கியபடி கேட்டாள் அனகா.
“நான் அனுப்பின புத்தங்கள் எல்லாம் எங்கே? தொலச்சிட்டியா? “
ரியோ டி ஜனிரோ கருத்தரங்கில் பங்கேற்க சென்றபோது பதினைந்து புத்தகங்களை அவளுக்கு வாங்கி அனுப்பினாள் அனகா. எல்லாமே கிளாஸிக்ஸ். ஆலிவர் ட்விஸ்ட், டேவிட் கோபர் ஃபீல்டு, ஹகில்பரிஃபின், டாம் சாயர் - கலர் படங்களோடிருக்கும் குழந்தைகளுக்கான பதிப்பு. அந்த பார்சலை சீதா பிரிக்கவேயில்லை என்பதை பார்த்ததும் கோபமாக வந்தது.


அவளுடைய அழகு சாதனப் பெட்டியைப் பார்த்தபோது கோபம் மேலும் அதிகரித்தது. மின்னும் ஸ்டிக்கர் பொட்டுகள், கண்ணாடி வளையல்கள், பல நிறங்களில் கல்லும், முத்தும் ஒட்டப்பட்ட இமிடேசன் நகைகள். அன்று இரவே அனகா, ராம் மோகனை தொலைபேசியில் அழைத்தாள். பேச்சு ஆரம்பத்திலேயே உஷ்ணமானது.


“அவள் பெண்ணியவாதியான பி.பி. அனகாவின் மகள் மட்டுமல்ல. என்னுடைய மகளும் தான்”
“ஆனால் எல்லோரும் அவளை அனகாவின் மகளாகத்தான் பார்க்கிறார்கள். எனக்கான சமூக மரியாதையைப் பற்றி நீங்கள் யோசித்திருக்க வேண்டும்”
“அனகா, அவளுக்கு பத்து வயசுதானே ஆகுது? அந்த வயசுக்குரிய பொருட்களோடு விருப்பம் இருப்பது நியாயம் தானே? “
“எனக்குத் தெரியும். என் மேல உள்ள கோபத்தைத் தீர்க்க நீங்க அவளை ஸ்டீரியோ டைப் பெண்ணாய் வளர்க்கப்பாக்கிறீங்க “
“தயவு செய்து அவளையும் ஒரு மனநோயாளியாக்காதே அனகா”
உஷ்ண உரையாடல் அதோடு தற்காலிகமாக அணைந்தது.
திருமணம்... அது தவறான முடிவாக இருந்தது.
அம்மு அன்றே சொன்னாள்.


“அனு ரொம்ப யோசிச்சு முடிவெடுக்க வேண்டிய விசயம் இது. உனக்கு பெரிய எதிர்காலம் இருக்கு. கேரள பெண்களின் வாழ்வோடு உனக்கொரு தவிர்க்க முடியாத பொறுப்பு இருக்கு “
எதைப் பற்றியும் அறிவு பூர்வமாய் யோசிக்கமுடியாத அன்றைய மன நிலையில் அனகா அதையும் ராம்மோகனோடு பகிர்ந்து கொண்டாள். அம்மு உன்னை சந்தோசப்படுத்த புகழ்ந்து பேசியிருக்கிறாள் என்று ராம்மோகன் சொன்னான். பெண்களுக்கு அதிலும் குறிப்பாக பெண்ணியம் பேசும் பெண்களுக்கு தன்னை புகழ்ந்து பேசுவது மிகவும் பிடிக்குமென்றும், இந்த அம்முவே தினமும் அவளோட புருசனைக் கட்டிப் பிடித்துக் கொண்டுதானே தூங்குகிறாள் அவளுக்கு அதன் தேவையிருக்கிறது தானே என்ற ராம்மோகனின் கிண்டல் தொனியில் அனகா விழுந்திருந்தாள்.


இனிப்பூட்டப்பட்ட வார்த்தைகள் கட்டுப்பெட்டியான பெண்களுக்கே பொருந்தும். சில நேரங்களில் வீழ்ச்சிகளை அறிந்து கொண்டே செய்யும் சாகசம்தான் பெண்ணியம்.
“ராம், நாம் ஏன் ஒன்றாய் சேர்ந்து வாழக்கூடாது”
“அப்ப கல்யாணம்? “
“அது வேணுமா? ஜஸ்ட் லிவிங் டு கெதர் “
“ரேட் என்னன்னும் சொல்லிடேன் “
“புரியல ராம் “
“எனக்கு தெரிஞ்ச வரைக்கும் இப்படியான பெண்களுக்கு விடியும் போது அவங்க கேக்கற பணம் கொடுக்க வேண்டியதிருக்கும் “
“அது அவர்கள் வாழ்வதற்கான வழி “
“ஆமாம். அதனால் அதற்கு கொஞ்சம் கூட மரியாதை இருக்கு “


இரண்டு வெவ்வேறு துருவங்கள். இரண்டு வெவ்வேறு உலகங்கள். இரண்டு வெவ்வேறு நூற்றாண்டுகள். தமக்குள் ஒத்து வராது என்று அனகா மிகச் சீக்கிரமே புரிந்து கொண்டாள்.
ஒரு ஆண் எப்படி இப்படி கட்டுப்பெட்டியாக வாழ முடிகிறது? குறுகலாக மட்டுமே யோசிக்க முடிகிறது? அடிப்படைவாதியாகவே தன் வாழ்நாளை நீட்டிக்க முடிகிறது?
ஆனால் தன்னையே புகழ்ந்துபேசும் பேச்சு, எதிரில் இருப்பவர்களை ஆசைப்பட வைக்கும் என்பது போல அனகா, ராமிடம் அடங்கிப் போனாள்.


இருந்தபோதிலும் வேட்டைக்காரனும், பறவையும் ஒரே வலையில் மாட்டிக் கொள்வதுதான் திருமணம் என்பதை சீக்கிரமே அவனால் புரிந்து கொள்ள முடிந்தது.
“ராம் நீங்க என்னோட ப்ரஸ்ட்டைத் தொடக்கூடாது, அது எனக்குப் பிடிக்கல”
“அனு, நான் வெளிப்படையா உங்கிட்ட கேக்கட்டா, உன்னை யாராவது குழந்தையாயிருக்கும் போது துன்புறுத்தியிருக்காங்களா? “
“ராம் ஆணும் பெண்ணும் இணைந்து வாழ்வதே வம்ச விருத்திக்காகத்தான். செக்ஸ் ஒரு சந்தோசம் என்று மட்டும் வைத்துக் கொண்டால், பெண்ணின் உடலை ஒரு உபயோகப் பொருளாக மட்டுமே உங்களால் பார்க்க முடியும் “
“சுருக்கமாக சொல்லப் போனா நீயொரு மனநோயாளிதான் “


இப்படியான அறிவு தளத்திலான வாக்குவாதங்கள் அடிக்கடி இருவருக்கும் பிடிக்காமலேயே நடந்தேறியது. அப்படியும் சீதா பிறக்கும் வரை ஒன்றாகவே வாழ்ந்தார்கள். அறுவை சிகிச்சை மூலம் சீதா பிறந்த பதினோராம் நாளன்று அனகா தொடுபுழாவில் ஒரு வழக்கு காரணமாக போலீஸ் ஸ்டேசன் தர்ணாவுக்கு போக வேண்டியிருந்தது. ரத்தத் தளிராயிருக்கும் தன் மகளுக்கு புட்டிப்பால் கொடுத்து விட்டு தர்ணாவுக்கு போனபோது தான் ராம் மோகன் மிகவும் மூர்க்கனாகி போனான்.


தனக்கான சமூக பொறுப்பினை அனகா நியாயப்படுத்தினாள். தன் குழந்தைக்கு பால் கொடுப்பதை விட பெரிய சமூக பொறுப்பு பெண்களுக்கு இல்லையென்று ராம்மோகன் வாதாடினான்.


ராம்மோகனுக்கு முலைகளில்லை. அதனால் பால் கொடுக்கும் முலைகளின் வேதனையை அவன் அறிந்தவனில்லை. நரம்புகளை உள்ளடக்கிய சிறிய சதைகளின் சக்தி, தோலினால் மூடப்பட்ட மாமிசம், கேவல், மூச்சு வாங்குதல், வலி, ரணம்... அதனிடையில் தர்ணாக்கள், செமினார்கள், கண்டன ஆர்பாட்டங்கள்...


நெருக்கம் கிடைக்கும்போது ஒரு ஆணின் ஆவேசத்தோடு அம்மாவின் மார்பில் தன்னைப் புதைத்துக் கொண்டாலும் கூட, குழந்தை சீதா சீக்கிரமாக லேக்டோஜனுக்குப் பழகியிருந்தாள். அதுவே அவளுக்கொரு பலவீனமான பழக்கமாகவும் மாறியிருந்தது. லேக்டோஜனை வாரித் தின்று வளர்ந்ததாலோ என்னவோ சீதா இப்படி வளர்ந்திருக்கிறாள் என அனகா சந்தேகித்தாள். உடல் நுகர் பொருளாகக் கூடாது என்பது சரிதான், ஆனாலும் உயரமான மெலிந்த உடல்களுக்குத்தான் இப்போது பெண்ணியவாதிகளுக்குள்ளும் மதிப்பும் மரியாதையும்.


நர்ஸ் பக்கத்தில் வந்தபோது சீதாவின் கையை எடுத்து விட்டுவிட்டு அனகா நர்ஸிடம் சென்றாள்.
“வீட்டுக்காரர் வந்திருக்காரா?”பல்ஸ் பார்க்கும் போது நர்ஸ் கேட்டாள்.
“இல்ல.”
“பின்ன யார் உங்க உதவிக்கு இருக்காங்க?”
“என்னோட நண்பர்கள்”
“ ஓ......”


நர்ஸ் பரிதாபத்துடன் அனகாவைப்பார்த்தாள். அவளுக்கு லேசாக சிரிப்பு வந்தது. அனகா பெருமையுடன் சீதாவைப் பார்த்தாள். சீதா சங்கடந்துடன் தலையை குனிந்து கொண்டாள்
அனகாவுக்கு சர்ஜரி முடிவானபோது சீதா ராம்மோகனின் வீட்டிலிருந்தாள். அவள் “ராம்மோகனை தொலைபேசியில் கூப்பிட்டாள்.


சீதாவைக் கொஞ்சம் அனுப்புங்க. எனக்கு திங்கட்கிழமை காலைல ஆப்பரேசன்.”
“உனக்கென்ன ப்ரச்சனை?”
“ப்ரஸ்ட் கேன்சர்... டாக்டர்கள் என்னோட மார்புகளை அறுத்தெறியப்போகிறார்கள்”
“கடவுளே”
ராம்மோகன் அதிர்ந்தது போல தோன்றியது.


அனகாவிற்கு சிரிக்கவேண்டும் போல தோன்றியது. இந்த அறுவைச்சிகிச்சை மூலம் நான் சரியான பொருள்படவும் சூர்பனகையாகிறேன். சுதந்திரமானவளாகிறேன் - உன்னுடைய வெறிக்கும் பார்வையிலிருந்து, கொஞ்சலிலிருந்து, வலிகளிலிருந்து நான் விமோசனமடைகிறேன்.
“நான் வரணுமா?”
ராம் மோகன், குரலில் இடரலுடன் கேட்டான்.
“வேண்டாம்”
டாக்டரும் இதையேத்தான் கேட்டார். “கணவர் வரவில்லையா?”
“இல்லை”.
“சம்மத பத்திரத்தில் யார் கையெழுத்திடுவார்கள்?”
“நான்”
அனகா தீர்மானமாய் சொன்னாள்.


என் உடல். நெஞ்சில் பால் சுரக்கும் நரம்புகளும் அடிவயிற்றில் கர்ப்பப்பையும் உள்ள என் உடல். இவைகளை அறுத்தெறிய வேண்டுமா? வேண்டாமா? என்று தீர்மானிக்க இது இரண்டுமில்லாத, இதன் வலி அறியாத ஒருத்தனின் சம்மதம் எனக்கெதற்கு டாக்டர்?
ரத்தக்கொதிப்பும், நாடியும் பரிசோதிக்கப்பட்டது. எல்லாம் சரியாக இருப்பதை உணர்ந்த நர்ஸ் வெளியே போவதற்கு முன் சொன்னாள்.


“பன்னிரண்டுமணிக்கு உள்ளே அனுப்பிடுவாங்க. மகளிடம் ஏதாவது பேசணும்னா பேசிடுங்க.”
அனகா சீதாவைப் பார்த்தாள். என்ன பேச...?
“சீதா”
அனகா ஒரு பெண்ணியவாதியின் திடமான குரலில் மகளை அழைத்தாள்.
“எனக்கு ஆப்பரேசன் நடக்கப் போகிறது. உனக்கு ஏதாவது நான் செய்ய வேண்டியிருந்தால் சொல்”
சீதா முதலில் பதறிப்போனாள். அனகா தொடர்ந்தாள்.


“என்ன வேணுன்னாலும் கேள். என்னால எதையும் செய்து தர முடியும். சர்ஜரி முடிந்து திரும்பி வராமல் போனால் உனக்கு வேண்டியதை செய்து தரவில்லையே என்ற வேதனை என் ஆத்மாவை சங்கடப்படுத்தாமலிருக்கட்டும்... ஏதாவது கேள் மகளே. அது என்னவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்”


சீதா உடனே பதில் ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் அவள் முகம் குழப்பத்தில் இறுகியது.
டாக்டர்கள் எப்படி இதை அறுத்தெடுப்பாங்க?
சர்ஜரி முடிந்தபின் மார்பு பார்க்க எப்படியிருக்கும்?
இனியொரு பாப்பா பிறந்தால் அம்மா எப்படி பால் கொடுக்க முடியும்?


இப்படியான கேள்விகள் சீதாவை துன்புறுத்தின. அனகாவிற்கு தன் பொறுமையை தானே இழந்து கொண்டிருப்பதை உணரமுடிந்தது.
“உனக்கு வேண்டியதை மட்டும் கேட்டுத் தொல” என்று கத்திவிட்டாள்.
சூழல் இறுகியபோது சீதாவின் முகம் சிவந்தது. தன் டீ சர்ட்டின் முன் பக்கத்தை சங்கடத்துடன் திருகிக் கொண்டே அனகா தன் மகள் எதை கேட்கக் கூடாதென்று பயந்தாளோ அதையே சீதா கேட்டாள்.


“அம்மாவின் முலைப்பால்”


பி.பி. அனகா அதிர்ந்தாள். லிங்காதிபத்யம், விமோசனம், விரும்பியதை அடைதல்- ஒரு மனோ பலத்திற்காக அனகா இதையே திருப்பி திருப்பி சொல்லிக் கொண்டாள். பிறகு அவள் ஒரு போராளியின் பிடிவாதத்தோடு தன்மீது போர்த்தப்பட்டிருக்கும் பச்சைநிற உடையின் கழுத்தில் இருக்கும் கயிறுகளை இழுத்து அவிழ்த்தாள்.
“வா..... குடி.”


“நீண்ட நாட்களுக்குப் பிறகு திரும்பிப் பார்க்கும்பொழுது பி.பி. அனகா என்ற உன் அம்மா சக்திமிக்க ஒரு பெண்ணாக இருந்தாள் என்று நீ தெரிந்து கொள்ள வேண்டி, என் மகளுமான உனது விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக... வா...”
புற்று நோயால் சிவந்து, கறுத்த, சின்ன சின்ன கட்டிகள் முளைத்திருந்த அம்மாவின் முலைகளை சீதா ஒரு முறைதான் நேரெடுத்தாள்.


ஏற்க மறுத்த சூர்ப்பனகையின் மகள் எந்த உணர்வுமற்ற தொனியில் சொன்னாள்.
“எனக்கு லேக்டோஜனே போதும்...”


மூலம் - காலச்சுவடு

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்