/* up Facebook

Jan 1, 2010

நேசத்துக்குரியவர்களை நெகிழ்வுடன் அசைபோடுதல் -நிவேதா


உன்னுடனான சில நிமிட உரையாடலே போதுமானதாயிருக்கிறது.., உலகத்துக் கவலைகளை மறக்க; மறுபடியுமொருமுறை புத்துயிர் பெற்றெழ. உனது அன்புக் கட்டளையின்படி நேற்றிரவு, வேண்டாத விடயங்களில் மனது அலைபாய்வதைத் தடுத்து மனதுக்குப் பிடித்த விடயங்களையே நினைப்பதென்ற தீர்மானத்துடன் படுக்கையில் சாய்ந்தேன்.

மனதுக்குப் பிடித்தது...? வேறென்னவாக இருக்கமுடியும் உன் நினைவுகளைத்தவிர. இறுதியாக என்ன பேசிக்கொண்டிருந்தோம்... ம்ம்ம்... பெரியார்.. மதம்.. மார்க்ஸியம். விவாதிப்பதற்கு அருமையான விடயங்களில்லையா.. இவை குறித்து உன்னுடன் இன்னும் எவ்வளவோ கலந்துரையாட வேண்டியிருக்கிறது; என் அரைகுறை அறிதல்களைத் தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டியிருக்கிறது. எனது நம்பிக்கையீனங்களையும்.., எனக்கான கொள்கைகளை வகுப்பதில் தாக்கம் செலுத்திய நிர்ப்பந்தங்களையும்.., எனது நம்பிக்கைகள் எங்கே தொலைந்து போயினவென்பதையும்.. உன்னுடன் பகிர்ந்துகொள்ளத் துடிக்கிறது மனம். உனது நம்பிக்கைகளை நோக்குமிடத்தும்.., உன் அப்பாவைப்பற்றி நீ கூறியவற்றைக் கேட்டவிடத்தும் என் நிலைப்பாடுகளும் என்றேனுமொருகால் இப்படித் தடம்புரளுமாவென்ற கலக்கம்... அல்லது அப்படியேதும் நிகழ்ந்தால் இன்னும் நிம்மதியாய் உணர்வேனோவென்ற நப்பாசை... என்னவெல்லாமோ தோன்றுகின்றது.

நானும் ஒருகாலத்தில் இத்தகைய நம்பிக்கைகளோடு வாழ்ந்தவள்தான். முருகன்... சைவசமயம் கற்றுத்தந்த கடவுளரில் என்னை மிகவும் கவர்ந்தவன். இன்றைக்கு சில வருடங்களுக்கு முன்பு அவனையொத்த வயதுகளில் நானுமிருந்தபடியாலோ என்னமோ... ஒரு தோழனாய் என் அனைத்தையும் பகிர்ந்துகொள்ள முடிந்தது அவனோடு. கார்த்திகேயன்... அவனது பெயர்களில் மிகப் பிடித்தது.. நெஞ்சுகொள்ளாப் பிரியத்துடன் 'கார்த்தி' என்றே அவனை விளித்திருக்கின்றேன் (இந்தத் தாக்கத்தில்தான் என் நாட்குறிப்பிற்கும் கார்த்தி என்றே பெயரிட்டு.. இன்றுவரை அப்படித்தான்.. கார்த்தியோடு உரையாடுவதாய்த்தான் நாட்குறிப்பு எழுதிவருகிறேன்). மனம் கனத்துப் போகும் போதெல்லாம் அவனது படமொன்றினை வைத்துக்கொண்டு மணிக்கணக்காய் அவனுடன் உரையாடியிருக்கிறேன். ஒருபோதும் 'பரீட்சையில் நல்ல மதிப்பெண்கள் எடுக்க வேண்டும்.. அது வேண்டும்.. இது வேண்டும்..' என்று எதுவும் கேட்டுக்கொண்டதில்லை அவனிடம். இது தந்தால்.. அது தருவேனென என் அன்பினை/பக்தியை ஒருபோதும் வியாபாரமாக்கியதுமில்லை. நான் வேண்டியதெல்லாம், 'நீ எப்போதும் என்னுடனேயே இருக்க வேண்டும்.. என் ஒவ்வொரு இன்பத்திலும் துன்பத்திலும்... ஏற்றத்தாழ்வுகளிலும் ஒரு ஆறுதலாக நீ இருக்கவேண்டும்..' என்பதுதான். அவனும் இருந்தான்... உலகம் எனை வஞ்சித்துவிட்டதாய் உணர்ந்து மனமுடைந்து அழுதபோதெல்லாம், 'யாமிருக்க பயமேன்..?' என்று கூறிச்சென்றான்.. அசட்டுக் குழந்தையே என்று அடிக்கடி என்னைக் கடிந்தும் கொண்டான்.

ஏன் இந்த நம்பிக்கையெல்லாம் சடுதியாகக் கைநழுவிப் போயிற்று..? சடங்குகள், ஒழுக்க ஆசாரங்கள், மரபு வழிவந்த (மூட) நம்பிக்கைகளை எந்தக்காலத்திலும் நான் ஏற்றுக்கொண்டதில்லையெனினும் ஏன் கடவுளரை வெறுக்க ஆரம்பித்தேன், நான்..?

வியாபாரமாகிப்போன பக்தி... தரகர்களாக மாறிப்போன பூசாரிகள்... கேலிக்கூத்தாய்ப்போன கிரியைகள்... மேலும் இந்தத் தெய்வ புத்திரர்கள்... கடவுளரின் மைந்தர்களாய்த் தம்மை அடையாளங்காட்டிக் கொள்பவர்களில் ஒருத்தியாய் - வெட்கித்தலைகுனிந்து - நானுமிருக்கக் கூடாதென்ற வீறாப்பில்தான் அவர்களைத் தூக்கியெறிந்தேன். இந்த மதமும், அதன் பாதுகாவலர்களும் என் பெண்மையை அவமதித்தபோது.., பெண்ணென்ற ஒரே காரணத்திற்காய் எத்தனையோ சந்தர்ப்பங்களில் என்னைப் புறக்கணித்தபோது... வெறியும் திமிரும் கிளர்ந்தெழ... என்னை மதிக்காத எதையும், எவரையும் நானும் மதிக்கப்போவதில்லையென முடிவெடுத்து இவர்களின் போலி அரிதாரங்களை அலட்சியப்படுத்தத் தொடங்கினேன். இந்த இந்த நாட்களில் என்னை நெருங்காதே என்று எந்த இறைவன் வந்து சொல்லிப் போனானாம் இவர்களிடம்..?! இறைவர்களை விடுங்கள்.. இறைவியரைக்கூட நெருங்க வேண்டாமாம்... அநியாயமாயில்லை.. அபத்தமாயில்லை..?? நான் மிக மிகப் புனிதமானதாக மதிக்கும் தாய்மையை இவ்வுலகத்தின் சிருஷ்டிகர்த்தாக்களாகக் கூறிக்கொள்ளும் சக்திகளே அவமதிக்கும்போது நான் மட்டுமேன் அவர்களை மதிக்க வேண்டும்..

மார்க்ஸியம் பற்றிய எனது அறிவு மிக மிகச் சொற்பமானதுதானென்றாலும், அந்தச் சொற்பத்திற்குள்ளும் ஆயிரத்தெட்டு முரண்பாடுகளை என்னால் அடையாளங்கண்டுகொள்ள முடிந்ததாலும்... - கம்யூனிஸமும் ஆணாதிக்கவழிச் சிந்தனையின் மற்றுமொரு வடிவமே.. என்னதான் சமத்துவம்பற்றி வலியுறுத்திக் கூறினாலும் பெண்கள் தொடர்பான ஆணாதிக்கமுறைமைச் சமுதாயத்தின் நிலைப்பாடுகளுக்கு முரணாகவோ, பாலினச் சமத்துவம் பற்றியோ அது அதிக கரிசனை காட்டவில்லை - இவர்களது மற்றுமொரு உழுத்துப்போன தத்துவக் கழிவுகளுள் ஒன்றாகத்தான் மார்க்ஸியத்தையும் கருதினேனென்றபோதும்... மனித சுயவுணர்வே உண்மையான, உயர்ந்த கடவுளென்று கூறிய மார்க்ஸ் என்ற தனிமனிதர் என்னை மிகவும் ஈர்த்ததும் இந்தக் காலங்களில்தான்.

மானுட இயலுமைகளுக்கும், புரிதலுக்கும் அப்பாற்பட்ட அமானுஷ்ய சக்தியொன்று இருப்பதை நானும் ஏற்றுக்கொள்கிறேன்தான் என்றாலும், அவ்வமானுஷ்ய சக்தி/ பரப்பிரம்மம் ஒரு சமுத்திரமென்றால்... அதில் நானும் ஒரு சிறுதுளி... நீயும் ஒரு சிறு துளி... அவனும்.. அனைவரும். இப்படி எத்தனையோ துளிகள் ஒன்றிணைந்துதான் ஒரு சமுத்திரம் உருவாகின்றதென்ற புரிதல் ஏற்படும்போது... அதன்பிறகும் எவரையும் வெறுக்கவோ, அலட்சியப்படுத்தவோ எம்மால் முடியப்போவதில்லை.

மனித இனத்தைக் கூறுபோடவும், ஒருசாராரை தீட்டு.. அந்த இந்தப் பணியாரங்களென்ற பெயரில் ஒதுக்கி வைக்கவும் வழிசெய்த மதங்களை/ கடவுளரை விடவும்... 'மனிதனே மனிதனுக்குக் கடவுளென்றால் மனிதனை இழிவுபடுத்துகின்ற.., அடிமைப்படுத்துகின்ற.., புறக்கணிக்கிற.., கைவிடுகின்ற.. எல்லா உறவுகளும் தூக்கியெறியப்பட வேண்டும்..' என்றுகூறிய மார்க்ஸ் எனும் மாமனிதருக்கு... சக மனிதரை நேசிக்கவும், மதிக்கவும் கற்றுத்தந்த அந்த அற்புதமான ஆளுமைக்குத் தலைவணங்குகின்றேன்.

நீ கூறியதுபோல மொஸ்கோவில் மழைபெய்கின்றதென்றவுடன் இங்கே குடைபிடிக்கின்ற அரைவேக்காடுகள், அவரையும் அவரது சிந்தனைகளையும் கொச்சைப்படுத்துவதாகவே தோன்றுகின்றது, எனக்கு. மார்க்ஸ் மதங்களை அவற்றின் இயல்பான பலவீனங்கள் காரணமாக மறுத்திருக்கலாம்.. ஆனால், ஒருபோதும் அவர் மதங்களைத் தூக்கியெறிய முயலவில்லை. 'மதம் ஒடுக்கப்பட்ட உயிரின் பெருமூச்சு, இதயமற்ற உலகத்தின் இதயம், அது உணர்ச்சியற்ற நிலைமைகளின் உணர்ச்சி..' என்ற தெளிவு இருந்திருக்கிறது அவருக்கு.

(தமிழ் மொழிபெயர்ப்பு அவ்வளவு வாய்க்கவில்லைதான் என்றாலும்) மார்க்ஸின் கவிதைகளில் கைவசமிருந்தவை..:

நான் கெட்டவனல்ல, நல்லவனுமல்ல;
என்னிடம் வேகமில்லை, சுணக்கமுமில்லை
நான் நேற்று முன்னே சென்றால்,
நான் இன்று பின்னால் செல்வேன்.
ஒளிமிக்க மதவாதி நான்
பெண்குதிரையல்ல, ஆண் குதிரையுமல்ல;
sophocles, சாட்டை இருவருமே
என்னுடைய எழுச்சியின் ஊற்றுக்கள்

....................................

கான்ட்டும் Fichte யும் தொலைதூரத்திலுள்ள
உலகத்தைத் தேடி வானில் பறக்கிறார்கள்;
நான் ஆழமான உண்மையைத் தேடுகிறேன்
அதைத் தெருவில் கண்டெடுக்கிறேன்

.....................................

என்னுடைய ஆன்மாவின் கருத்து வெறியை
என்னால் ஒருபோதும் அமைதிப்படுத்த இயலவில்லை
எதையும் நான் சுலபமென்று நினைக்கவில்லை
நான் ஓய்வில்லாமல் முன்னேற வேண்டும்
கடவுள்கள் அருளும் ஆசிகளை
அனைத்தையும் பெற நான் முயற்சிப்பேன்,
ஆழத்திலுள்ள அனைத்து அறிவைப் பெறுவேன்,
கவிதைக் கலையின் ஆழத்தைத் தொடுவேன்
எனவே நாம் எல்லாவற்றையும் இழக்கத் தயாராவோம்.

நன்றி: ரேகுப்தி

1 comments:

kannaki said...

நான் வேண்டியதெல்லாம், 'நீ எப்போதும் என்னுடனேயே இருக்க வேண்டும்.. என் ஒவ்வொரு இன்பத்திலும் துன்பத்திலும்... ஏற்றத்தாழ்வுகளிலும் ஒரு ஆறுதலாக நீ இருக்கவேண்டும்..' என்பதுதான். அவனும் இருந்தான்... உலகம் எனை வஞ்சித்துவிட்டதாய் உணர்ந்து மனமுடைந்து அழுதபோதெல்லாம், 'யாமிருக்க பயமேன்..?' என்று கூறிச்சென்றான்.. அசட்டுக் குழந்தையே என்று அடிக்கடி என்னைக் கடிந்தும் கொண்டான்.

ஏன் இந்த நம்பிக்கையெல்லாம் சடுதியாகக் கைநழுவிப் போயிற்று..? சடங்குகள், ஒழுக்க ஆசாரங்கள், மரபு வழிவந்த (மூட) நம்பிக்கைகளை எந்தக்காலத்திலும் நான் ஏற்றுக்கொண்டதில்லையெனினும் ஏன் கடவுளரை வெறுக்க ஆரம்பித்தேன், நான்..?

வியாபாரமாகிப்போன பக்தி... தரகர்களாக மாறிப்போன பூசாரிகள்... கேலிக்கூத்தாய்ப்போன கிரியைகள்... மேலும் இந்தத் தெய்வ புத்திரர்கள்... கடவுளரின் மைந்தர்களாய்த் தம்மை அடையாளங்காட்டிக் கொள்பவர்களில் ஒருத்தியாய் - வெட்கித்தலைகுனிந்து - நானுமிருக்கக் கூடாதென்ற வீறாப்பில்தான் அவர்களைத் தூக்கியெறிந்தேன். இந்த மதமும், அதன் பாதுகாவலர்களும் என் பெண்மையை அவமதித்தபோது.., பெண்ணென்ற ஒரே காரணத்திற்காய் எத்தனையோ சந்தர்ப்பங்களில் என்னைப் புறக்கணித்தபோது... வெறியும் திமிரும் கிளர்ந்தெழ... என்னை மதிக்காத எதையும், எவரையும் நானும் மதிக்கப்போவதில்லையென முடிவெடுத்து இவர்களின் போலி அரிதாரங்களை அலட்சியப்படுத்தத் தொடங்கினேன். இந்த இந்த நாட்களில் என்னை நெருங்காதே என்று எந்த இறைவன் வந்து சொல்லிப் போனானாம் இவர்களிடம்..?! இறைவர்களை விடுங்கள்.. இறைவியரைக்கூட நெருங்க வேண்டாமாம்... அநியாயமாயில்லை.. அபத்தமாயில்லை..?? நான் மிக மிகப் புனிதமானதாக மதிக்கும் தாய்மையை இவ்வுலகத்தின் சிருஷ்டிகர்த்தாக்களாகக் கூறிக்கொள்ளும் சக்திகளே அவமதிக்கும்போது நான் மானுட இயலுமைகளுக்கும், புரிதலுக்கும் அப்பாற்பட்ட அமானுஷ்ய சக்தியொன்று இருப்பதை நானும் ஏற்றுக்கொள்கிறேன்தான் என்றாலும், அவ்வமானுஷ்ய சக்தி/ பரப்பிரம்மம் ஒரு சமுத்திரமென்றால்... அதில் நானும் ஒரு சிறுதுளி... நீயும் ஒரு சிறு துளி... அவனும்.. அனைவரும். இப்படி எத்தனையோ துளிகள் ஒன்றிணைந்துதான் ஒரு சமுத்திரம் உருவாகின்றதென்ற புரிதல் ஏற்படும்போது... அதன்பிறகும் எவரையும் வெறுக்கவோ, அலட்சியப்படுத்தவோ எம்மால் முடியப்போவதில்லை இந்த உணர்வுதான் ஒவ்வொரு பெண்ணுக்கும் தேவை.
ஆணித்த்ரமான எழுத்துக்கள்.
என்னுடைய ஆன்மாவின் கருத்து வெறியை
என்னால் ஒருபோதும் அமைதிப்படுத்த இயலவில்லை
எதையும் நான் சுலபமென்று நினைக்கவில்லை
நான் ஓய்வில்லாமல் முன்னேற வேண்டும்
கடவுள்கள் அருளும் ஆசிகளை
அனைத்தையும் பெற நான் முயற்சிப்பேன்,
ஆழத்திலுள்ள அனைத்து அறிவைப் பெறுவேன்,
கவிதைக் கலையின் ஆழத்தைத் தொடுவேன்
எனவே நாம் எல்லாவற்றையும் இழக்கத் தயாராவோம்.
மார்க்ஸ்சின் கருத்தை ஏற்று க்கொள்வோம்.
மனதை வருடும் எழுத்துக்கள் உங்களுடையது.

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்