/* up Facebook

Dec 14, 2009

பெண் பிரஜை - சுனிலா அபயசேகர

ஆங்கில மூலம்; சுனிலா அபயசேகர
தமிழில்; அ ரஜீவன்தென்னாசியாவின் அரசாங்கங்கள், நலன்புரி அரசுகள் என்ற வரையறைக்குள் உள்ளடக்கப்படுகின்ற போதிலும் அவை பெரும்பாலும் சமூகத்தின் ஒரு பிரிவினரின் நலன்களை மட்டுமே மையமாக வைத்துச் செயற்படும் தன்மை கொண்டனவாக உள்ளன.


சமூகத்தின் விளிம்பு நிலையில் உள்ள மக்கள் குறித்து இவை அதிக கவனமெடுப்பதில்லை. எனினும் இந்த அரசாங்கங்கள் ஆட்சியில் தொடர்ந்து நீடிக்கும் வேட்கை கொண்டுள்ளமை காரணமாகச் சில வேளைகளில் சமூகத்தின் பின் தங்கிய பிரிவினருடன் தொடர்பு கொள்ள வேண்டிய தேவையும், அவர்களுக்குச் சிறிதளவாவது நலன்புரிச் சேவைகளை வழங்க வேண்டிய தேவைகளும் நிர்ப்பந்தங்களும் ஏற்படுகின்றன. இவ்வாறான ஊடாட்டங்களின் போதேஅரசாங்கங்கள் சில முற்போக்குச் சக்திகளை எதிர் கொள்ள வேண்டி நேரிடுகிறது.


அவை கொடுக்கின்ற அழுத்தங்கள் காரணமாக அரசாங்கங்களின் நிலைப்பாடுகள், கொள்கைகள் மாற்றியமைக்கப்படுகின்றன. தென்னாசியாவின் தொழிற்சங்கங்கள் கொடுத்த அழுத்தங்கள் காரணமாக தொழிலாளர் தொடர்பான சட்டங்களில் மாற்றங்கள் ஏற்பட்டது போன்று மகளீர் அமைப்புகளின் முயற்சி காரணமாகப் பெண்களுக்கு எதிரான வன்முறையில் ஈடுபடுவோருக்கு எதிராகக் கடுமையான சட்டங்களை அரசாங்கங்கள் கொண்டுள்ளன.


1975 இல் நடைபெற்ற முதலாவது சர்வதேச மகளிர் மாநாட்டின் பின்னர் தென்னாசியாவிலும் உலகின் ஏனைய பகுதிகளிலும் உள்ள மகளிர் விவகார அமைச்சு, ஆணைக்குழு போன்றவை ஏற்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தத் தொடங்கின. அதன் பின்னரே அரசாங்கங்கள் அதற்கான முயற்சிகளில் இறங்கின.


அதன் தொடர்ச்சியாக வறுமை ஒழிப்புத் திட்டங்களில் மகளிருக்கு வருமானத்தைப் பெற்றுக் கொடுக்கும் வேலைவாய்ப்புத் திட்டங்கள் முக்கியத்துவம் பெறத் தொடங்கின. சட்டங்கள் மூலம் மகளிருக்கான உரிமைகள் உறுதிப்படுத்தப்பட்டன. இவை யாவற்றையும் நாம் முன்னேற்றகரமான ஒளிமயமான பாதையை நோக்கிச் செல்வதற்காக நம்பிக்கையூட்டக்கூடும்.
எனினும் உண்மை எதிர்மாறாக உள்ளது. சிறிய சிறிய மாற்றங்களில் கவனம் செலுத்திய நாம் தந்தை வழிச் சமூகத்தை முழுமையாக மாற்றுவது குறித்து இன்னமும் சிந்திக்கவில்லை. அதன் காரணமாகத் துண்டங்களாக சிறு சிறு அளவினதாக மாத்திரமே நமக்கு வெற்றிகளும் நன்மைகளும் கிட்டியுள்ளன.


இது குறித்த சகல விதமான விவாதங்களும் நவீன சமூகத்தில் அரசாங்கங்கள் உள்வாங்கிக் கொண்டிருக்கும் மாற்றங்களைப் புரிந்து கொள்வது அவசியம்.


சர்வதேச மயமாக்கல் அரசாங்கங்கள் மீது வகையான தாக்கங்களைச் செலுத்தியுள்ளது. மக்களிற்கு நலன்புரிச் சேவைகளை அளிப்பதே அரசின் முக்கிய நோக்கம் னெ்ற காலாதிகாலக் கோட்பாடுகளை அது கேள்விக் குறியாக்கியுள்ளது. மேலும் முன் எப்போதையும்விட சமூகத்தில் தீவிரவாதத் தன்மை கொண்ட சக்திகளினதும் வன்முறையினதும் ஆதிக்கம் அதிகமாகக் காணப்படுகிறது.


சமூக, வர்க்க, இன, மொழி, மத, அடிப்படையில் அதிகமாகப் பிளவுண்டு போவதையும் காணக்கூடியதாகவுள்ளது. கருத்துச் சுதந்திரத்திற்கும் பொது மக்களின் செயற்பாடுகளுக்குமான உரிமைகள் அதிகமாக மறுக்கப்படுகின்றன.


இவ்வாறான பல மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்ற போதிலும் அரசாங்கங்களின் தந்தை வழிச் சமூக மனப்பாங்கில் எந்த வித மாற்றமும் ஏற்படவில்லை. அவை இன்னமும் பெண்களுக்கான அந்தஸ்தை வழங்குவதற்குத் தயாராகவில்லை. மாறாகக் காலம் காலமாக மகளிருக்கு எனச் சொல்லப்பட்டு வருகின்ற கருத்தாக்கங்களை நியாயப்படுத்துவதிலும் அவற்றைக் கட்டிக் காப்பதிலுமே ஆர்வமாக உள்ளன.அரசாங்கங்களின் இந்த மனோநிலையும் மாற்றங்களுக்குத் தயாராகாத தன்மையும் அவற்றின் செயற்பாடுகளில் பிரதிபலிக்கின்றன.


பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடமிருந்து நாம் தத்தெடுத்துக் கொண்ட ஆட்சிமுறை எண்ணிக்கைகளே முக்கியம் என்பதை நமக்குக் கற்றுத் தந்துள்ளன.
சிங்களவர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட அரசாங்கங்களே ஆட்சிக்கு வருவதற்கு உதவியுள்ளது.


பெரும்பான்மை வாக்குகள் என்பது அதிகளவிலான அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்கான உரிமை எனக் கருதப்பட்டதன் காரணமாக, இயல்பாகவே அரசியல் அதிகாரங்களே முக்கிய விடயங்கள் குறித்து தீர்மானம் எடுப்பதற்கான உரிமை அற்ற சிறுபான்மைக் குழுக்களும் உருவாகின.மகளிரையும் இந்த வரையறைக்குள்ளேயே உட்படுத்த வேண்டும். அதே வேளை ஜனநாயகத்துடனான எங்களது பரிசோதனைகள் ஆரம்ப காலம் முதலாகவே பிழையான வழியைப் பின்பற்றுவதாக உள்ளது.


பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் எமக்கு விட்டுச் சென்ற சமூகம் அதிகாரங்களின் மேல் கட்டப்பட்ட ஒன்றாகவே உள்ளது. இதனை மாற்றுவதற்கு எவ்வித முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை.
மூத்தோரைக் கனம் பண்ணுதல், அதிகாரத்திற்கு கேள்வியின்றி அடிபணிதல், தனிப்பட்ட நலன்களை விட சமூகத்தினதும் கூட்டு நலனிற்கு முக்கியத்துவம் அளித்தல் போன்ற விழுமியங்கள் குறித்துப் பதிய கேள்விகளை எழுப்ப வேண்டியுள்ளது.


தென்னாசிய சமூகத்தின் அதிகார வர்க்கம் மேற்குறிப்பிட்ட விழுமியங்களை மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருவதுடன் இதன் மூலம் மாற்றுக் கருத்தொன்று நிலவவதற்கான வாய்ப்புக்களை மூடிவிடுகின்றது. இதன் காரணமாக அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் பெண்களும் சிறுவர்களுமே.
அதிகார வர்க்கம் கட்டிக்காக்க முனையும் இந்த விழுமியங்கள் அதிகளவு வன்முறைக்கு வித்திடுவதுடன் அவை அதிகம் வெளிவராமல் இருப்பதை உறுதி செய்கின்றன.


சமீப காலங்களில் மகளிர் அமைப்புக்களின் இடைவிடாத முயற்சியின் பயனாக இவ்வாறான வன்முறைகள் குறித்து விழிப்புணர்வு அதிகரித்து வருகின்ற போதிலும் மதத் தலைவர்களாலும் ஆசிரியரிகளாலும் மேற்கொள்ளப்படும் வன்முறைகள், துன்புறுத்தல் குறித்து கேள்வியெழுப்புவதற்குத் தயங்கும் மனோநிலையே இன்னமும் அதிகளவில் காணப்படுகின்றது.
இதைவிட அரசாங்கங்களாலும் இராணுவங்களாலும் பெண்களுக்கும் சிறுவர்களுக்கும் எதிராக இழைக்கப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்தும் பல தென்னாசிய நாடுகளில் கனத்த மெளனம் நிலவுகின்றது.


தென்னாசியாவின் ஜனநபயகத்தில் காணப்படும் இன்னொரு முரண்பாட்டினையும் சுட்டிக் காட்ட வேண்டும். மக்கள் பாரானளுமன்றத்திற்கு சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட பிரிவினரையே தேர்ந்தெடுப்பதையும் அதன் காரணமாக அதிகார வர்க்கத்திற்கு எதிராகப் போராடுவதற்குப் போதிய வலுவற்ற நிலையை எதிர் கொள்வதையும் காணக்கூடியதாகவுள்ளது.


தென்னாசியா பல சமூக இயக்கங்களைத் தனது வரலாற்றில் எதிர் கொண்டுள்ள போதிலும் அவை ஒரு தனிப்பட்ட விடயத்தை மையப்படுத்தியதாகவும் ஒரு குறிப்பிட்ட பிரதேசத்திற்கும் மக்களுக்கும் உரியதாக மாத்திரமே அவை காணப்படுகின்றன.


தேசந் தழுவிய ஆர்ப்பாட்டங்கள் அருகி வருகின்றன. அரசாங்கத்தின் நாளாந்தச் செயற்பாடுகள் குறித்து கேள்வி எழுப்ப வேண்டியதன் அவசியத்தையும் அதன் மூலம் கொள்கைச் செயற்பாடுகளில் மாற்றம் ஏற்படுத்த வேண்டிய கடமையையும் மக்கள் மறந்து வருகின்றனர்.
இவ்வாறான விடயங்களில் ஆக்க பூர்வமான பங்களிப்பை வழங்குவதற்கு மகளிருக்கு வாய்ப்புக்கள் குறைவாக உள்ளன. குறைந்தளவிலான சந்தர்ப்பங்களே அளிக்கப்படுகிறது.


இதன் காரணமாக ஒரு தேசத்தின் பிரஜை என்ற வகையில் பெண்ணிற்குஅளிக்கப்படும் கெளரவம் குறித்துத் தீவிரமாக ஆராய வேண்டியுள்ளது.


ஒரு நாட்டின் பிரஜை எந்த வகையான பாகுபாட்டிற்கம் அப்பாற்பட்டவராக முழுமையாக சுதந்திரத்திற்கு உரித்தானவராக விளங்குகின்றார் எனத் தாராளவாத கோட்பாடுகள் முன்மொழிகின்ற போதிலும் எமது சமீபகால அனுபவங்கள் இதற்கு நேர்மாறானதாகவே உள்ளன.
பெண்களும், சிறுவர்களும் சிறுபான்மை இனத்தவர்களும் புறக்கணிக்கப்பட்டு அதிகாரமையத்திலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளமையைத் தென்னாசிய நாடுகளில் காணக்கூடியதாகவுள்ளது.


இதன் காரமாகப் பிரஜை ஒருவர் தனக்கான முழு உரிமைகளையும் அனுபவிக்க வழிவகுக்கக்கூடிய புதிய வகையான ஜனநாயகமொன்றினைக் கட்டியெழுப்புவது குறித்துச் சிந்திக்க வேண்டியுள்ளது.


இலங்கையில் சகல பிரஜைகளினது கெளரவத்தையும் அங்கீகரிக்கக்கூடிய அரசாங்கமொன்றினை உருவாக்கும் பணிகளில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம். இத்துடன் தென்னாசியாவின் வேறு அரசியல் போக்குகள் குறித்தும் கவனத்தில் எடுக்க வேண்டியுள்ளது.


இந்தியத் துணைக் கண்டம் யார் எந்த நாட்டிற்குச் சொந்தமானவர் என்ற பிரச்சனையை அதிகமாகக் கொண்டுள்ளது. இலங்கையில் வாழும் இந்திய வம்சாவழித் தமிழர்களையும் பூட்டானில் உள்ள நேபாள மக்களையும் இதற்கு உதாரணமாகக் காட்டலாம்.இவர்கள் பலவாறான நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.


பூட்டானில் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வந்த போதிலும் தற்போது அங்கிருந்து விரட்டப்பட்டு அகதிகளாகியுள்ள நேபாளியர்களின் அவலம் இதற்கோர் உதாரணம். இதனை அதனை மையமாக வைத்து நோக்கும்போது தென்னாசியாவில் குடியுரிமை என்ற அந்தஸ்தை நிர்ணயிப்பதில் தேசிய நலன்களே முக்கியம் பெறுவதைப் புரிந்து கொள்ள முடிகிறது.


இவை யாவற்றையும் அடிப்படையாக வைத்து நோக்கும் போது மகளிருக்கு உரிய அந்தஸ்தினை அளிக்கின்ற குடியுரிமையை உருவாக்குவதில் உள்ள சவால்கள் புரிய வரலாம். எனினும் முதல் முதலில் வெள்ளையினத்தவன் ஒருவனிற்கே சொந்தமாகவிருந்த வாக்குரிமை உலகின் சகல மக்களுக்கும் பொதுவான விடயமாக்கப்படாமை மிகவும் கடுமையான போராட்டங்களால் மாத்திரமே சாத்தியமாகியது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.


நன்றி; நிவேதினி

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்