/* up Facebook

Nov 12, 2009

பர்தா மீதான பிரான்ஸ் அரசின் தடை: ஒரு பெண்ணிய நோக்கு - றஞ்சி


(சுவிஸ், மார்ச்2004)


பிரான்சில் எதிர்வரும் ஜுலை மாதம் முஸ்லிம் பெண்கள் பாடசாலைகளிலும் பல்கலைக்கழகங்களிலும் பர்தா அணியக்கூடாது என்ற சட்டம் கொண்டு வரப்படவுள்ளதாகவும், இச் சட்டம் சம்பந்தமான பலதரப்பட்ட விவாதங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன இவ் வேளையில் இச்சட்டத்தை எதிர்த்து ஈராக், ஈரான், கனடா, அமெரிக்கா, இந்தோனேசியா போன்ற நாடுகளிலும் பிரான்சிலும் முஸ்லிம் பெண்கள் தங்களது எதிர்ப்பை காட்டி வருவதுமட்டுமன்றி சீக்கிய, யூத, கிறிஸ்தவ இன மதத்தவர்களும் கூட தங்களது எதிர்ப்புக்களை காட்டி வருகின்றனர். பிரான்ஸ் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையான வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுமுள்ளது. இச் சட்டத்தின் வரைவுகளை ஆராய்வதற்காக 140 பிரெஞ்சு பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து ஆராய விருப்பதாகவும் கூறப்படுகிறது.


பிரான்சில் 5 மில்லியன் முஸ்லிம் இனத்தைச் சேர்ந்தவர்கள் வசித்து வருவதாகவும் இங்கு அல்ஜீரிய நாட்டைச் சேர்ந்தவர்களும் துருக்கிய நாட்டைச் சேர்ந்தவர்களும் கூடுதலாக வாழ்வதாகவும் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. பல ஆண்டு காலமாக கட்டப்பட்ட பள்ளிவாசல் ஒன்றும் இருப்பதாக கூறப்படுகிறது. உலகில் அதிக சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் வழங்கியுள்ள நாடுகளில் பிரான்சும் ஒன்று என தெரிவிக்கப்பட்டாலும் இவ்வகை ஜனநாயகமறுப்பு தனிய முஸ்லிம் இனத்தவரை மட்டும் பாதிக்கக்கூடியதல்ல எனவும் இச் சட்டம் சீக்கிய இனத்தவரையும், யூத இனத்தவரையும் ஏன் கிறிஸ்தவ மதத்தவரையும் கூட பாதிக்கக்கூடியது என கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. முஸ்லிம்கள் பர்தாவை அணிவதைப்போல் கிறிஸ்தவர்கள் சிலுவைச்சின்னத்தையும், யூத இனத்தவர்கள் தொப்பி தாடியையும,; அதே போல் சீக்கிய இனத்தவர்கள் அவர்களது தலைப்பாகையையும் அணிவதற்கு இச்சட்டம் பாதிப்பை ஏற்படுத்தலாம் என அஞ்சப்படுவதுடன் அவ் இனத்தை சேர்ந்த மக்கள் தமது கடும் விசனத்தை ஆர்ப்பாட்டங்கள் மூலம் தெரிவித்தும் வருகின்றனர்.
பெண்களின் உரிமைபற்றி ஆர்வம்கொண்டிருக்கும் பெரும்பாலான பெண்ணிய அமைப்புக்கள் பெண்ணியலாளர்கள் பெண்கள் பர்தா அணிவதில் உடன்பாடு கொண்டில்லை என்றபோதும், ஜனநாயக உரிமை என்ற அடிப்படையில் இதை சட்டத்தை பிரயோகித்து நிறுத்துவதை எதிர்க்கின்றன. முஸ்லிம் பெண்கள் தாங்களாகவே உணர்ந்து செயற்பட்டு அதனை அகற்றுவார்களேயானால் வரவேற்கத்தக்கது தான் என்கின்றனர். பெண்கள் தம்மை வெளியாட்களுக்கு காட்டிக்கொள்ளக் கூடாது இது இறைவாக்கு என்று முஸ்லிம்மத அடிப்படையில் விளக்கம் கொடுக்கப்படுகிறது. ஆப்படித்தான் இதை எடுத்துக்கொண்டாலுமே அந்த வாக்கை ஏற்பது செயற்படுவது என்பது பெண்களின் சுயமான தீர்மானத்தில் நிகழாதபடி ஆணாதிக்கம் அதிகாரத்துவமாச் செயற்படுகிறது என்பதுதான் நிதர்சனமாக இருக்கிறது. இதற்கு முஸ்லிம் நாடுகள் சிலவற்றின் அரசியல் சட்டங்கள்கூட சாட்சியாக இருக்கின்றன. இந்த இறைவாக்கை எப்படி ஆணாதிக்கம் பெண்களின் மேல் திணிக்க முடியாதோ அதே மாதிரித் தான் பெண்கள் நாம் இறைவனின் ஆணைப்படி உடம்பு மூடித்தான் வெளியில் போவோம் என்று கூறுவதையும் மறுக்கமுடியாது. மற்றவர்கள் அவர்கள் மேல் சட்டங்களையும் அதிகாரங்களையும் திணிப்பது ஒருவகையில் மனித உரிமையை மீறுவதுமாகும்.
முன்னொரு காலத்தில் அராபியப் பெண்கள் இன்றுள்ளதைக் காட்டிலும் அதிகம் சுதந்திரத்துடன் வாழ்ந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. தாய்வழிச் சமூகமானது தந்தைவழிச் சமூகமாக மாறியதன் விளைவாக பரம்பரைச்சட்டங்கள் இயற்றப்பட்டு பெண்பிள்ளைகளை விட ஆண்பிள்ளைகளுக்கே அதிக ஆதரவு காட்டி வந்தன என்றும் அதனால் இஸ்லாம் உறுதியான மத அடிப்படையின் கீழ் ஆணாதிக்கத்தை நிறுவியது என்றும் கூறப்படுகிறது. இ;ஸ்லாம் குறித்து பெண்கள் கொண்டிருந்த அணுகுமுறைகளில் முரண்பாடுகள் ஏற்பட்டிருந்தன என்றும் அரபுச் சமூகத்தில் பெண்கள் குறித்து சில சாதகமான பார்வைகளும் இருந்ததாகவும் அதற்கு உதாரணமாக சதிகா திருமணமும் அது போலவே பெண் சிசுக்கொலைகளும் தடுக்கப்பட்டுள்ளன என்றும் கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.


ஆனாலும் முஸ்லிம் ஆணாதிக்க சமூகத்தின் பெண்கள் மீதான அடக்குமுறையின் ஒரு வடிவமே இந்த பர்தா அணியும் முறையென முஸ்லிம் பெண்ணியவாதிகளாலும் மற்றும் பெண்கள் அமைப்புகளினாலும் கூறப்பட்டு வருவதுடன் அதற்கு எதிராகவும் குரல் எழுப்பியும் வருகின்றனர். அத்துடன் மதம், என்ற போர்வையில் ஏற்படுத்தியுள்ள ஆணாதிக்க அடையாளங்களை பெண்கள் களைய முன் வரவேண்டும் என்றும் பர்தா போன்ற பெண் அடிமைச்சின்னங்களை முஸ்லிம் பெண்கள் தமது போராட்டங்களினுடாகவே ஒழிக்கலாம் என்ற கருத்துக்களும் முன்வைக்கப்படுகின்றன. எல்லா மதங்களிலும் பெண்களை அடக்குபவனவாகவே உள்ளன. அந்த வகையில் முஸ்லிம் மதமோ பெண்கள் தங்களுடைய அழகை, உடம்பை வெளியில் காட்டக்கூடாது என்றும் அப்படி பர்தா அணியாத பெண்கள் ஒழு;க்கம் கெட்டவர்கள் என்றும் கண்ணியமான முஸ்லிம் பெண்கள் தங்கள் அலங்காரத்தையும் அழகையும் உடம்பையும் வெளிப்படுத்த மாட்டார்கள் என்ற முஸ்லிம் ஆணாதிக்க கருத்தியலை முஸ்லிம் மதம் உருவாக்கி வைத்திருப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது. முஸ்லிம் மதமும் மற்றைய மதங்களைப் போல் பெண்களை பிள்ளைகளைப் பெறும் ஒரு இயந்திரமாகவே பார்க்கின்றது என்றும் பெண் பாலியல் நுகர்வுக்கானவள் என்ற கருத்தியல் உட்பட பல பெண்களை திருமணம் செய்யும் முறையும் அது மதம் என்ற வடிவில் திணிக்கப்படுவதாகவும் கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. ஆணாதிக்கம் பற்றி கேள்விகள் எழுப்பும் பெண்கள் மதம் என்ற பெயரால் தண்டிக்கப்படுவதாகவும் குற்றிச்சாட்டுக்கள் கூறப்படுகின்றன. ஒரு முஸ்லிம் பெண் பாலியல் ரீதியாக தவறு செய்துவிட்டால் அவளை கல்லால் அடித்துக் கொள்வது, பலஆயிரம் ஆண்கள் பார்த்திருக்க கசையடிகள் வழங்குவது என தொடங்கி மரணதண்டனையும் வழங்கப்பட்டு வருகின்றது.பர்தா அணிவது ஒரு பெண்ணின் இயல்பான வாழ்க்கையை கூட நசுக்கி ஒடுக்கி விடுகின்றது என்றும் இதற்கு ஆப்கானிஸ்தான் பெண்கள் சிறந்த உதாரணம் என்றும் கூறப்படுகின்றது. முஸ்லிம் மதத்திலும் பெண்கள் மட்டுமே பர்தா அணியவேண்டும் என்று கூறப்பட்டுள்ளதா? இன்றைய "தலாக்" முஸ்லிம் பெண்களைக் கொடுமைப்படுத்துகிறதா? அல்லது மதம் என்ற பெயரில் அவர்களின் மேல் திணிக்கப்புடுகின்றதா? ஏன்ற கேள்விகள் எழுகின்றன ஆப்காஸ்தானில் உள்ள இஸ்லாமிய மதவாதிகளால் பெண்கள் பர்தாவினால் முகத்தை மூடியபடி வீட்டுக்குள்ளே நசுக்கப்படுவதாகவும் கொடுமைப்படுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது. அத்துடன் தலிபான் அரசாலும் இன்றுள்ள அரசாலும்கூட மனிதஉரிமை மீறல்களும், பெண்களுக்கு எதிரான சட்டங்களும் கொடுமைகளும் தொடர்வதாகவும் கூறப்படுகிறது. இது ஒரு பொருட்டாகவே முஸ்லிம் பெண்களாலும் ஏனைய பெண்கள் அமைப்புக்களாலும் கண்டுகொள்ளப்படாமலே இருந்து வந்துள்ளதாகவும் அப் பெண்களின் உரிமைகளுக்காக ஆர்ப்பாட்டங்களோ ஊர்வலங்களோ நடத்தப்படவில்லை ஏன்றும் குற்றம் சாட்டப்படுகிறது. இன்றும் ஆப்கானிஸ்தானில் பெண்கள் -தொலைக்காட்சிகளில், மேடைகளில்- பாடக்கூடாது, கண்முதல் அனைத்து அங்கங்களும் மூடியே பெண்கள் வெளியே செல்லவேண்டும் என்ற நிலை தொடர்கிறது. ~~இத்தா|| என்ற பெயரில் பெண்கள் சிறையில் அடைக்கப்படுகிறார்கள். தனியே பெண்கள் பயணம் செய்யக் கூடாது, வேலைக்குப் போகக்கூடாது, கார் சைக்கிள் உட்பட எந்த வாகனமும் ஓட்டக்கூடாது, வீதியால் போகும் யாரும் அவர்களைப் பார்க்காதிருக்க வீட்டு யன்னல்களில் தீரைச்சீலை தொங்கவிடப்படப்வேண்டும், நடக்கும் போதும் கூட பெண்கள் தங்கள் செருப்புச் சத்தம் கூட கேட்காத அளவுக்கு மெதுவாய் நடக்கவேண்டும், முக்காடு அணியாத பெண்களினால் ஆண்களின் இறை தியானம் குழம்பிவிடும் என்பதினால் வீட்டுக்குள்ளும் பெண்கள் முக்காடு அணியவேண்டும் என்ற நிலை தொடர்கிறது. பள்ளிவாசல்களுக்குள் பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. அதற்கான காரணமாக பெண்களின் மாதவிடாய் உடற்கூற்றியல் நிகழ்வையே காரணம் காட்டுகிறார்கள். இதனால் பல பெண்களுக்கு கல்வியறிவோ அல்லது சரியான இஸ்லாமிய அறிவோ இல்லை. என்றும் இதனால் இஸ்லாம் மதத்தில் கூறியுள்ள உரிமைகளை பெற்றுக்கொள்ளத் தெரியாமல் பல முஸ்லிம் பெண்கள் அவதிப்படுகின்றார்கள் எனவும்கூட கூறப்படுகின்றது.


அனைத்து மதங்களிலும் பெண்களுக்கெதிராக பல கட்டுப்பாடுகள் உள்ளன இதேபோல் தான் இஸ்லாம் மதத்திலும் 4 வயது நிரம்பிய பெண் குழந்தைகள் கூட பர்தா அணிகிறார்கள் என்றும் அவர்களுக்கு புர்தா அணிவது ஏன் என்ற விளக்கம் தெரியாது என்றும் விமர்சிக்கப்படுகிறது.எச்சரிக்கை!
உடலையும் மனத்தையும் மறைத்து
அங்கி அணிந்திருக்கும்
சதைக் கூட்டமாகிய நாங்கள்
பயனற்றவர்கள்
நிறமற்ற, சுவையற்ற
மணமற்ற
ஒரு வாழ்வை இழுத்து வரும்
வெளவால்கள் நாங்கள்
மெகரை முகத்தில் வீசியெறிந்து
மனைவிகளை
மாற்றிக் கொள்ளக் கூடியவர்கள்தான்
எங்கள் தற்காலிகக் கணவர்கள் என்பதை
தெரிந்தும் கூட
எங்கள் துப்பட்டாக்களை
அலங்கரித்துக் கொள்கிறோம்
புன்னகைகளால்.
போலி மணவாழ்க்கையும்
மூன்று முறை தலாக் கூறினால்
முறிந்துவிடும் என்று தெரிந்தும் கூட
மணமகளாவதில்
மகிழ்ச்சியடைகிறோம்
ஆண்மையின் பீடத்தில்
பலியாவதற்காக
கருப்பு மணிகளாக
மரபு மலைப்பாம்மை
சுற்றியிருக்கிறோம்.
அடர்ந்த தாடி, வெள்ளைக் குல்லாய்
பஜாமா, குர்தா
கஷார்,நமாஷ்


அய்யா!
நீங்கள் எல்லாம் அருள்மிக்கவர்கள்
புனிதமான மரபுகளைக் காக்கும்
கற்கதவுகள் நீங்கள்
உங்கள் சந்தோசத்திற்காக
பன்னிரெண்டு குழந்தைகளைப் பெற
செத்துப் பிழைக்கிறோம்
இல்லாவிட்டால்
நாங்கள் நரகத்திற்குத்தான் போவோம்!
ஏதோ இப்போது நாங்கள்
அனுபவிப்பது சொர்க்கம் என்பது போல
பழத்தை பிழிவது போல
எங்களைப் பிழிந்து சக்கையாக்கிய
பர்தாக்களுக்குள்
எங்களை நடைப்பிணங்களாக்கிய
குரலற்ற உடல்களாகவும்
குழந்தைபெறும் இயந்திரங்களாகவும்
ஏங்களை ஆக்கிய
உங்கள் மரபுகளுக்கு முதல் வணக்கம்
கூண்டில் என்னை அடைக்கும்
அந்தப் பர்தாவை
இப்போதே கிழித்தெறியப் போகிறேன்
காபிர் என்று என்னை
முத்திரை குத்தினாலும்
ஏனக்கு இனிப் பயமில்லை
உங்கள் காலைப் பிடித்த
இந்தக் கைகள்
உங்களைக் கட்டியணைத்த
இந்தக் கைகள்
இப்போது
முஷ்டிகளாக இறுகிக் கொண்டிருக்கின்றன.
மனதார விரும்பாவிட்டாலும்
உங்களோடு தொடர்ந்து வாழ்ந்ததற்காக
நாங்களும் சிந்திக்கிறோம்


(கவிதை -ஷாஜகானா, தொகுப்பு: புதிய கையெழுத்து -1தற்கால தெலுங்குக் கவிதைகள். தமிழில்: வெ. கோவிந்தசாமி)


இவரைப் போலவே பாத்திமா மெரின்னிசா என்ற பெண் தனது சிறு அனுபவத்தை இப்படிக் கூறுகின்றார், „நான் குழந்தையாக இருந்தபோது புத்தகங்கள் படிப்பதிலும் கேள்விகள் கேட்பதிலும் அதிகநேரம் செலவிட்டேன். எனது தாத்தா என்னைக் கூர்ந்து கவனித்து வந்தார். அத்துடன் அவர் ஒரு பெயர் பெற்ற இஸ்லாமிய மதத்தலைவருமாவார். ஏனக்கு நல்ல ஆதரவும் தந்து பாராட்டியும் வந்தவர் என்னையும் எனது சகோதரிகளையும் அழைத்து நீங்கள் எல்லோரும் ஆண்களைப்போலவே திறமையுடையவர்கள் தான் ஆனாலும் நீங்கள் அனைவரும் உங்கள் முடியையும், உடலையும் வெளியில் தெரியாமல் மறைத்துக் கொள்ளவேண்டும் என்று கூறினார் நான் திகைத்துப் போனேன். அதேபோல் நான் பெய்ரூட்டிலும் அமெரிக்காவிலும் உள்ள பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்றாலும் நான் வளர்ந்த பின்னணி, எனது மதம் பெண்கள் மேல் காட்டும் அடிமைத்தனம், அடக்குமுறை என்பன எனக்கு புரியாத புதிராகவே இருந்து வந்தது. குழப்பமும் அடைந்தேன் அதனால் என்னுள் ஒரு பெண்ணிய விழிப்புணர்வை வளர்த்துக் கொண்டேன் என்கின்றார். (நன்றி மார்க்சியம் : பெண்ணியம் உறவும் முரணும்)


இதேபோல் மரணப்பிடியில் உரிமைக்குரல் கொடுத்த தஸ்லிமா நஸ்ரீன் தனது நாட்டுப் பெண்களுக்காக உரிமைகோரியும் மதவாதிகளை எதிர்த்ததற்காகவும் பங்காளதேஷ் முஸ்லிம் மதவாத அரசால் மரண தண்டனை விதிக்கப்பட்டவர். அத்துடன் அவர் லஜ்ஜா(வெட்கம்) என்ற நூலையும் எழுதியுள்ளார். அதில் இஸ்லாமிய தேசமாக பிரகடனப்படுத்தப்பட்ட பங்காளாதேஷில் பெண்களின் நிலை மிகவும் பின்தங்கியதாகவே உள்ளதாகவும் மதங்களின் பெயரால் பெண்களை அடக்கி, அவளை எந்தவித மதிப்பும் அற்றவளாக்கி முக்காடு அணிதல், (பர்தா) கல்வி, தொழில், அரசியல் ரீதியான பாகுபாடு என ஒடுக்குமுறைகள் தொடர்கின்றன என்றும்; கூறுகிறார்.


பெண்களுக்கு உடலும் மனமும் உண்டு. பெண்கள் தமது உரிமைகளை அறியாத பட்சத்தில் அவற்றை அவர்களால் பிரயோகிக்க முடியாது என்பதே தஸ்லிமாவின் அபிப்பிராயமாகவும் இருந்ததாக கூறப்படுகிறது. தனது நாட்டுப் பெண்களுக்காக குரல்கொடுத்த போது தஸ்லிமா அந் நாட்டு மக்களாலும் குறிப்பாக பெண்களாலும் ஏனைய நாட்டு முஸ்லிம் மக்களாலும் அவள் தனித்தவளாய் விடப்பட்டாள் என்பது எந்தளவுக்கு பெண்கள்மீதான ஒடுக்குமுறையை பெண்களேகூட உணர்ந்துகொள்ள முடியாதபடி வைக்கப்பட்டார்கள் என்பதைக் காட்டுகிறது.


வியாபார விளம்பரங்களுக்கு பெண்உடலைப் பயன்படுத்தும் ஆணாதிக்க வித்தையைச் செய்யும் மேற்குலகம் பர்தா அணிவதை பெண்உரிமை மறுப்பாக சித்தரிக்கும் விடயத்திற்குப் பின்னால் முஸ்லிம் இனத்தவருக்கு எதிரான பிரச்சாரமே இருக்கிறது என கூறலாம். இதற்கும் பெண்கள் பலியாக்கப்படுகிறார்கள் என்பதே நிதர்சனம்.

2 comments:

TamilNenjam said...

குழந்தைகள் தின வாழ்த்துகள் என்றும் அன்புடன் வாழ்க வளமுடன்
தமிழ்நெஞ்சம்

அபிலாஷ்.ஆர் said...

முக்கியமான பதிவு.

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்