/* up Facebook

Nov 1, 2009

அணைத்து வருடும் விரல்களுக்கான தவம்: இரா. தமிழரசி

கவிதை எழுதும் பெண்ணை, ஏதோ செய்யக் கூடாத குற்றத்தைச் செய்பவளாகவே பார்க்கிறது சமூகம், அத்தகைய சமூகத்தில் தன்னைப் பாதித்த, தன் மனதை நெகிழ்வித்த சம்பவங்களை ஒளிவு மறைவின்றி பதிவு செய்துள்ளார் கவிஞர் அரங்க மல்லிகா. எத்தனையோ பெண்கள் தம் வலியோடு கூடிய படைப்புகளை சமையலறையிலும், தலையணை அடியிலும் தான் இன்றும் கூட மறைத்து வைத்துள்ளனர்.சிறுகதையின் தந்தை, புதுக்கவிதையின் தந்தை, நாடகத்தின் தந்தை இப்படிப் பெயர்கள் சொல்லத்தக்க ஆண் படைப்பாளர்களுக்கானதாகவே விரிந்து பரந்திருக்கிறது. இலக்கிய வரலாற்றுப் பக்கங்கள், விதிவிலக்குகள் இனிவரும் காலங்களில் நிகழும் பெண்ணின் மொழியால் மட்டுமே வடிவமைக்கக் கூடியதான தனித்துவமான வலிகள் நூல்முழுவதும் பரவியுள்ளன.


சிக்கலாய்த் தெரியும் கோலங்களையும் பொருத்தமாய் முடிக்கத் தெரிந்த பெண்ணான இவருக்கு, அம்மாவுக்குப் பிடித்தது எது, பிடிக்காதது எது என்பது மட்டும் இறுதிவரை தெரியாமல் போய்விடுகிறது மாநகர வாழ்வில் புழுதியும் அதிகம், புளுகுகளும் அதிகம் என்பதை உணர்ந்த கவிஞர், ஓடும் பேருந்துகளாலும், அவை போடும் பேரிரைச்சலாலும் சீர்கெட்டுப் போன சூழலியலை பதிவு செய்துள்ளார்.


நூல் முழுவதும் தலித்தியச் சிந்தனைகளும், பெண்களின் சிக்கல்களும் தான் ஊடுபாவி ஓடுகிறது. மீன் நீச்சலில் வாழ்க்கையைப் புரிந்துகொள்ளும் ஆற்றலோடு, வெண்மணி, தாமிரபரணியில் உழைக்கும் மக்கள் பட்ட உயிர்வதையையும் புலப்படுத்தியுள்ளார்.


அம்மாவின் உழைப்பையும், மன உறுதியையும், எவரையும் எதற்காகவும் சார்ந்திராத தனித்துவத்தையும், நூல் முழுவதும் கூறியும் நிறைவுறவில்லை கவிஞர் மனம். இரண்டு கொப்பரை நெல் அவிந்துக் கொட்டுவதற்குள் ஒன்றாய் கலந்தது அம்மாவின் வியர்வையும், நெல் ஆவியும் என்று அவளின் உழைப்பைக்கண்டு உருகி, உழைத்துப் பொருளிட்டக் காற்றாய்ப் பறக்கும் கால்களோடு நாலுகிராமம் தள்ளிப்போய் வேலைசெய்வதைக்காட்டி நெகிழ்கிறார். கணவன் இறந்ததுகூடத் தெரியாமல் வேலைசெய்யும் அவள் இறுதிச்சடங்கிலாவது கலந்து கொள்ள வந்துவிடுவாளா என்று ஏக்கப்படும் நிலையில் அதிரும் குரலோடு அழுவதைக்கண்டு,
“அதிரும் தண்டவாளம்தான் / அம்மாவின் இருதயம் /
பயணிகளுக்கு வாழ்வளிக்க”


என்று முடிக்கிறார் கவிதையை புதுவிதப் படிமங்களும் உவமைகளும் வாசிப்பவர் மனதிற்குள் ஆச்சர்ய விதைகளைத் தூவும் வலியைக் காட்சிப்படுத்த,


இயந்திர ஓட்டத்தில் /சிக்குண்டு நசுங்கும் அரிசியாய் / தொப்புளைச் சுற்றி வலி எனத் தொடங்கி, மாதவிலக்குத் துன்பங்களையும், அச்சூழலில் அணைத்துத் தடவி வரும் இதயத்திற்காக ஏங்கும் பெண்ணுள்ளத்தின் பிரதிபலிப்பாய் இக்கவிதை அலுவலகம் செல்லும் பெண்ணாயிருக்கும் நிலையில் அத்தகைய வேதனையை அரிதாரத்திற்குள் மறைத்துப் புன்னகைக்கும் வலியையும், அவ்வலியை உடனிருந்து உணரும் மனிதர்கள் வேண்டும் என்னும் விழைவையும் புலப்படுத்துப் பெண்மொழிப் புனைவு இது.நகரத்து வாழ்வில் ஒலிப்பான்கள் அதிர வந்து நிற்கும் தண்ணீர் லாரியையும், சேறாகித்தேங்கி நிற்கும் கிணற்று நீரையும் காட்டி, முட்டிமோதிப் பிடிக்கும் தண்ணீரால் பக்கத்துவீட்டு மனிதர்களோடும் எழும் பகைமை உணர்வைச் சுட்டியுள்ளார். தம் மற்றொரு கவிதையில், நடைபாதை வாழ் மனிதர்கள் அசுத்தங்களோடு வாழநேரும் அவலவாழ்வைக் காட்டுகிறார்.


உறவின்றியும் அன்பைப்பொழியும் நிலையைக் கூற வந்தவர்,
“உடல்முறுக்கி நெளியும் / உரிக்கப்பட்ட தெருவில்
கிடக்கும் பாம்பின் சட்டையாய்
என் மனதையும் / குப்பைத் தொட்டியில்
தூக்கியெறியப்பட்ட / என் உடலையும்
எடுத்து அணைத்தாய் ...”
என்கிறார். தெருவில் கிடக்கும் பாம்பின் சட்டையைப் படிமமாக்கியுள்ளவர், “உரிக்கப்பட்ட தெருவில்” என வரி வடிவமைப்பில் தவறிவிடுவதும் குறிக்கத்தக்கது.


உழைப்பாளிகளைப் பற்றிய கவிதைகள் உணர்வு பூர்வமானவை.பண்ணையார் படுத்தும் பாடு தாங்காமல் உழவுமாட்டை அடிக்கும் உழைப்பாளியைக் காட்டுகையில்
“பண்ணையை உதைக்கத் / திராணியற்று
உழவுமாட்டை அடித்தது / உள்ளத்தைக் கிள்ளும்”
என்பதோடு, உலக இயக்கமே உன் கால் சேற்றிலும் கை மண்வெட்டியிலும் பதிந்தபோதுதான். அப்படியிருக்கநீஎதற்கு இடைத்துண்டை அக்குளில் இருக்குகிறாய் ! அதிகாரக் கலப்பையை எடு, ஆதிக்கவயலை உழு என உத்வேகம் ஊட்டுகிறார் தம் எழுத்தால்,
பாட்டி, அம்மா என வழிவழியாய் உழைத்த, உழைக்கும் மக்களைக் கண்முன் நிறுத்துகிறார். உழைக்கம் பெண்கள் மாதவிலக்கு நாள்களிலும் வேதனையைப் பொருட்படுத்தாது விரல்களை, ஆயுதமாக்கி நாற்றுப் பிடுங்குவார்கள், முதுகு வளைத்து நாள்முழுவதும் களைப்பறிப்பார்கள், நாற்று நடுவார்கள் என்பதைப் புலப்படுத்துகிறது கவிஞரின் “முதுகு” என்னும் தலைப்பிலமைந்த மிகச்சிறந்த கவிதை.


உழைக்கும் கிராமத்துப் பெண் எப்போதும் கணவனுக்கு அஞ்சி தொட்டாற்சிணுங்கியாய் இருப்பதில்லை. என்னும் உண்மையை,
“அப்பாவின் இடிக்குரலில் / தொட்டாசிணுங்கியாய்


ஒருபோதும் இருந்ததில்லை
இறுக்கி முடிஞ்சு வைச்ச/ சுருக்குப்பையின் கனத்தில்
கொஞ்சம் / தினவோடு இருப்பாள் அம்மா”


என்ற வரிகளால் பொருளாதாரச் தற்சார்பு மட்டுமே பெண்ணின் துணிச்சலை வளர்க்கும் என்னும் பொருண்மைப் புரிதலாய் அமைகிறது கவிதை. இத்தகைய பொருளைத் தேட,
“வெற்று வயிற்றோடு / ஆறு மைல் நடந்து
இருளையும் சேர்த்து / அறுவடை செய்யும்
அம்மாவிற்குப் பிடித்தது / வரப்புகளை தாண்டி
மடிநிறைய புல் அறுப்பது”
என்கிறார். விலங்குகளையும் கருணையோடு காக்கும் அம்மா, படித்து நகரத்தில் பணிபுரியும் மகளை மட்டும் தள்ளி வைத்து வேடிக்கை பார்த்தல்தான் புதிராக உள்ளது.


‘தலித்’ ‘பெண்’ என்னும் இருவித தளைகளால் பிணிக்கப்பட்ட பெண்களை, மேட்டுக்குடி ஆண்கள் தங்கள் உடற்பசிக்கு உணவாகப் பயன்படுத்திக் கொள்வதையும், ஆசைக்கு அடிபணிந்த அவர்கள் சுவாசிக்க மறந்து போவதையும் கூற வந்தவர்,
பண்ணைகளின் / பசித்தினவுக்கு / உடற்சோறு தந்து
ஊருக்கு வெளியே / சுவாசிக்க மறந்த கருப்பாயி
என்றும், பதவிகள் பெற்றுங்கூட, அதற்கான அதிகாரமின்றி காலணி அணியத் தடை செய்யப்பெற்ற, பெண் கவுன்சிலர்களையும் சாதிச் சூழலையும் பதிவு செய்துள்ளார்.


சாதிவெறி பிடித்தவர்கள் தலித்துகளின் மூச்சுத்திணறலில் முகம் மலருபவர்கள். வெட்டுண்டு உயிர்துறந்த இவர்களின் மூச்சுக்காற்று,
"வாயில் மலம் திணித்தக் / கோட்டானை
தாகம் தீர்க்கச் சிறுநீர் தந்தவனை
வல்லுறவில் வெறிக்கூத்து / ஆடியவனை
கசாப்புக்காரனை''


புயற்காற்றாகி இழுத்துச் செல்லும் என்று கூறுவதால், அவரின் விழைவைப் புலப்படுத்தியுள்ளார். உழைத்து உற்பத்தி பெருக்கி, நெல்லடித்துக் களத்தில் காவலிருக்கும் இவர்களின் பசிக்கொடுமை கண்டு துவள்கிறது கவியுள்ளம்.


மணி மேகலைகள் தாயின் வற்புறுத்தலால் புறக்கணித்து மௌனிக்கிறார்கள் உதயகுமாரர்களின் காதலை, உணர்ச்சிப் பூகம்பங்கள் மலர்வனங்களிலும் பரவுகிறது. தொடரும் உதயகுமாரர்கள் மடியநேர்கிறது விஞ்சையன் வாளால் மணிமேகலைகள் தம் காதலை அட்சய பாத்திரங்களில் போடுவதாகக் கூறும் தொன்ம நிகழ்வழி, இன்றைய மணிமேகலைகளின் மனநிலையைக் காட்டியுள்ளார்.


பெண் தன் உடலையோ, உணர்வுகளையோ வெளிப்படுத்தக்கூடாது என்னும் மரபு மாற்றி சங்ககால ஒளவையாய்,


கொதிக்கும் உலையாக/தகிக்கும் காமம்
கோப்புகளில் / கணினி ஒளித்திரையில்
இரவை அணைக்க”
“ஓரு கோடை வெயிலின்/உக்கிரத்தில்
உருகிடும் தாராய்/வழிந்தோடும் என் காமம்”


என வேட்கைப்பதிவுகளுக்கும் இடமிருக்கிறது இவரின் நூலில் பொய்யை உண்மை போலச் சொன்னால் சிறுகதை உண்மையைப் பொய்போலச் சொன்னால் கவிதை என்னும் அப்துல்ரகுமானின் கூற்று இவன் மறுதலையாகச் சிந்திக்கத் தக்கது. இவர் உண்மையை உண்மையாகவே சொல்லியிருப்பது இந்நூலின் சிறப்பு.


நீர் கிழிக்கும் மீன்
அரங்கமல்லிகா,
பாலம் வெளியீடு, சென்னை.
விலை ரூ. 35/


(நன்றி அணி சஞ்சிகை)

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்