/* up Facebook

Nov 6, 2009

பெருகிவரும் வன்முறை - நேர்காணல்: அருந்ததி ராய்

சந்திப்பு: ஷோமா சௌத்ரி
தமிழாக்கம்: என்னெஸ்நாட்டில் வன்முறை பெருகிவரும் சூழல் நிலவுவதாகத் தோன்றுகிறது. இந்த அறிகுறிகளை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? எத்தகைய பின்னணியில் இவற்றைப் புரிந்துகொள்ள வேண்டும்?


இந்த அறிகுறிகளைப் புரிந்துகொள்ள நீங்கள் மேதையாக இருக்கவேண்டியதில்லை. நமது நடுத்தரவர்க்கம் தடாலடியான நுகர்வுக் கலாச்சாரத்திலும் மூர்க்கத்தனமான பேராசையிலும் ஊறி வளர்ந்திருக்கிறது. தொழில்மயமான மேற்கத்திய நாடுகளிலிருந்து வேறுபட்ட வகையில் இதற்கான வளத்தைச் சேகரிக்கவும் அடிமைப் பணியாளர்களைத் திரட்டவும் நம்மை நாமே காலனியமயமாக்கிக்கொள்ள நேர்ந்திருக்கிறது. நமக்குக் கீழே உள்ளவர்களைச் சுரண்டவேண்டியிருக்கிறது. நமது உறுப்புகளை நாமேதின்கிறோம். இப்படி உருவாகும் (இது தேசப்பற்றுக்கு மாற்றான ஒரு மதிப்பாக மார்க்கெட்டிங் செய்யப்படுகிற) பேராசையை, வலுவற்றவர்களின் நிலத்தையும் நீரையும் பிற ஆதாரங்களையும் ஆக்கிரமித்துத்தான் தீர்த்துக்கொள்ள முடிகிறது.


சுதந்திர இந்தியாவில் இதுவரை நடந்ததிலேயே மிக வெற்றிகரமாக நடந்துவரும் பிரிவினைப் போராட்டத்தைத்தான் நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். நடுத்தர வர்க்கமும் மேல்தட்டு வர்க்கமும் நாட்டிலுள்ள பிற மக்கள் கூட்டத்திடமிருந்து பிரிவதுதான் இந்தப் பிரிவினை. இந்தப் பிளவு நீளவாக்கில் நடைபெறுகிறது; குறுக்குவாட்டில் அல்ல. உலகிலுள்ள பிற மேல்தட்டு வர்க்கங்களுடன் இணைந்துகொள்ளவே அவர்கள் போராடுகிறார்கள். இயற்கை ஆதாரங்கள், நிலக்கரி, தாதுப் பொருட்கள், பாக்சைட், தண்ணீர், மின்சாரம் - எல்லாம் அவர்களது வசமாகியுள்ளன. புதிய எதேச்சாதிகாரத்தின் புதிய கௌரவப் பிரஜைகளுக்குப் புதிய சிறப்பான விளையாட்டுப் பொருள்களை - இன்னும் அதிகமான கார்களை, இன்னும் அதிகமான வெடிகுண்டுகளை, இன்னும் அதிகமான சுரங்கங்களை உருவாக்குவதற்கான நிலம் இப்போது அவர்களுக்குத் தேவைப்படுகிறது. எனவே இது வெளிப்படையான ஒரு போர். இரு தரப்பிலும் உள்ள மக்கள் தங்களுக்கான ஆயுதங்களைத் தேர்ந்தெடுத்துக்கொள்கிறார்கள். அரசும் நிறுவனங்களும் அமைப்பு ரீதியான சமரசங்கள், உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி, பன்னாட்டு மூலதனம், சாதகமான நீதிமன்ற ஆணைகள், சிநேகமான கொள்கை வகுப்பாளர்கள், 'நட்பான' கார்ப்பரேட் ஊடகங்கள், இவ்வளவையும் மக்களிடம் வலுக்கட்டாயமாகத் திணிக்கும் காவல் துறை ஆகியவற்றின் உதவியை நாடுகின்றன. இதை எதிர்ப்பவர்கள் இதுவரை மறியலையும் உண்ணாவிரதத்தையும் சத்தியாக்கிரகத்தையும் மட்டுமே ஆயுதங்களாகக் கொண்டிருந்தார்கள்; நீதிமன்றங்களையும் நட்பார்ந்த ஊடகத்தையும் நம்பியிருந்தார்கள். ஆனால், இப்போது அவர்கள் துப்பாக்கி ஏந்தத் தொடங்கிவிட்டார்கள். இந்த வன்முறை அதிகரிக்குமா? முன்னேற்றத்தையும் மக்கள் நல்வாழ்வையும் அளவிடுவதற்கு அரசு 'வளர்ச்சி விகித'த்தையும் பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணையும் தான் பயன்படுத்தும் என்றால் வன்முறை அதிகரிக்கத்தான் செய்யும். இந்த அறிகுறிகளை நான் எப்படிப் புரிந்து கொள்கிறேன்? அப்பட்டமாகத் தெரிவதைப் புரிந்துகொள்வது கடினமல்ல. வெள்ளம் தலைக்கு மேலே போய்விட்டது என்பதில் சந்தேகமில்லை.வன்முறையில் இறங்கமாட்டேன், ஆனால் நாட்டில் நிலவும் சூழலில் அதைக் கண்டனம் செய்வது தார்மீகமற்றது என்று நீங்கள் ஒருமுறை குறிப்பிட்டிருந்தீர்கள். இந்தக் கண்ணோட்டத்தை விரிவாக விளக்க முடியுமா?


நான் கெரில்லாவாக இருந்தால் சுமையாகத்தான் இருப்பேன்! 'தார்மீகமற்றது' என்னும் வார்த்தையை நான் பயன்படுத்தினேனா என்று சந்தேகமாக இருக்கிறது. தார்மீகம் என்பது பிடிபடாத சமாச்சாரம்; அது வெப்பநிலைபோல மாறிக்கொண்டே இருப்பது. வன்முறைசாரா இயக்கங்கள் பல ஆண்டுகளாக இந்த நாட்டிலுள்ள எல்லா ஜனநாயக நிறுவனங்களின் கதவுகளையும் தட்டிக்கொண்டே இருக்கின்றன. ஒவ்வொரு முறையும் அவை வெறுப்புடன் நிராகரிக்கப்படுகின்றன; அவமானப்படுத்தப்படுகின்றன. போபால் நச்சு வாயுவால் பாதிக்கப்பட்டவர்களையும் நர்மதா அணைத் திட்டத்தால் பாதிக்கப்பட்டவர்களையும் பாருங்கள். நர்மதைப் பாதுகாப்பு இயக்கத்திற்குச் சாதகமான பல அம்சங்கள் இருக்கின்றன - பிரபலமான தலைவர்கள், ஊடகச் செய்திகள், வேறு எந்த மக்கள் இயக்கத்தையும்விட அதிக வசதிகள் ... ஆனால், பிழை எங்கே நேர்ந்தது? மக்கள் கட்டாயம் தங்கள் போராட்ட உத்திகளை மாற்றிக்கொள்ளவே விரும்புவார்கள்.


தாவோசில் உலகப் பொருளாதார அமைப்புக் கூட்டத்தில் சோனியா காந்தி சத்தியாக்கிரகத்தின் மேன்மை பற்றிப் பேசத் தொடங்குகிறார் என்றால் நாம் நிமிர்ந்து உட்கார்ந்து சிந்திக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று பொருள். உதாரணமாக, ஒரு ஜனநாயக அரசமைப்பில் ஒத்துழையாமைப் போராட்டம் சாத்தியமா? தகவல் புரட்டும் கார்ப்பரேட் கட்டுப்பாட்டில் உள்ள வெகுஜன ஊடகமும் ஆதிக்கம் செலுத்தும் இந்த யுகத்தில் அது சாத்தியமா? உண்ணாவிரதப் போராட்டங்களுக்குப் பிரபலங்களின் அரசியலுடன் தொப்புள் கொடி உறவு இருக்கிறதா? நங்கலா மச்சியிலோ பட்டிசுரங்கங்களிலோ மக்கள் பட்டினிப் போர் நடத்தினால் அது பற்றி யாராவது கவலைப்படுவார்களா? இரோம் சர்மிளா ஆறு ஆண்டுகளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார். நம்மில் பலருக்கும் அது படிப்பினையாக இருக்க வேண்டும். பெரும்பாலான மக்கள் பட்டினி கிடக்கும் ஒரு நாட்டில் உண்ணாவிரதப் போராட்டம் ஓர் ஆயுதமாகப் பயன்படுத் தப்படுவது வேடிக்கையான முரண்பாடு என்றுதான் எனக்கு எப்போதும் தோன்றும். நாம் இப்போது வேறு காலத்தில், வேறு இடத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். வேறு மாதிரியான, மேலும் சிக்கலான எதிரிகளை எதிர்கொண்டிருக்கிறோம். நாம் என்.ஜி.ஓ. யுகத்தில் பிரவேசித்திருக்கிறோம். இதில் மக்கள் செயல்பாடு என்பது நம்பத்தகாத ஒன்றாக இருக்கக்கூடும். போராட்டங்கள் நிதியுதவியுடன் நடத்தப்படுகின்றன. மறியல்களும் சமூக அமைப்புகளும் ஸ்பான் சர்ஷிப்பில் நடக்கின்றன. இவை ஆக்ரோஷமாகக் குரல் கொடுக்கின்றன. ஆனால் தாம் போதிப்பதை அவை நிறைவேற்றுவதில்லை. எல்லா விதமான போலிப் போராட்டங்களும் நடக்கின்றன. சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு எதிரான கூட்டங்களுக்கு அந்த மண்டலங்களின் மாபெரும் ஆதரவாளர்களே நிதியுதவி செய்கிறார்கள். சுற்றுச்சூழல் சார்ந்த பணிக்கும் கூட்டு நடவடிக்கைக்குமான விருதுகளையும் நல்கைகளையும் சுற்றுச்சூழல் அமைப்புகளை மொத்தமாக ஒழித்துக்கட்டும் நிறுவனங்களே வழங்குகின்றன. ஒரிசா காடுகளில் பாக்சைட் அகழ்ந்தெடுக்கும் வேதாந்தா என்ற நிறுவனம் ஒரு பல்கலைக்கழகம் தொடங்க விரும்புகிறது. நாடு முழுவதிலும் உள்ள போராட்டக்காரர்களுக்கும் மக்கள் இயக்கங்களுக்கும் நேரடியாகவும் மறைமுகமாகவும் பொருளாதார உதவி வழங்கும் இரண்டு அறக்கட்டளைகளை டாடா நிறுவனம் நடத்துகிறது. நந்திகிராம் அளவு சிங்கூர் விமர்சிக் கப்படாதது அதனால்தானோ? இப்போது உள்ள என்.ஜி.ஓ.க்கள் மிகுந்த ஆரவாரம் ஏற்படுத்துகின்றன, ஏராளமான அறிக்கைகள் எழுதுகின்றன; அரசோ இவர்களுடன் அந்நியோன்யமாக இருக்கிறது. இதையெல்லாம் நாம் எப்படிப் புரிந்துகொள்வது? நிஜமான அரசியல் செயல்பாடுகளை மந்தப்படுத்துபவர்கள்தான் இங்கே குவிந்திருக்கிறார்கள். போலி எதிர்ப்பு ஒரு சுமையாகவே ஆகியிருக்கிறது.


ஒரு காலத்தில் மக்கள் இயக்கங்கள் நீதிக்காக நீதி மன்றங்களை நம்பியிருந்தன. மிகவும் அநீதியான, ஏழை மக்களை மிகவும் அவமானப்படுத்தும் வார்த்தைகளில் அமைந்த தீர்ப்புகளை நீதிமன்றங்கள் தொடர்ந்து வழங்கிக் குவித்திருக்கின்றன. அவற்றை நினைத்தாலே மூச்சு நின்றுவிடும்போலிருக்கிறது. சமீபத்தில் உச்ச நீதிமன்றம், வசந்த்கஞ்ச் மாலின் கட்டுமானப் பணியை - தேவையான ஒப்புதல்கள் எதுவும் அதற்கு இல்லாத நிலையிலும் - தொடர அனுமதி வழங்கியது. நிறுவனங்கள் முறைகேடுகளில் ஈடுபடுமா என்ற கேள்வி எழவே இல்லை என்பதைத்தான் நீட்டி முழக்கிச் சொன்னது உச்ச நீதிமன்றம். கார்ப்பரேட் உலகமயமாக்கம், கார்ப்பரேட் நில ஆக்கிரமிப்பு யுகத்தில், என்ரான், மான்சான்டோ , ஹாலிபர்ட்டன், பெக்டெல் யுகத்தில் அந்தக் கூற்றுக்கு அர்த்தம் பொதிந்ததாக இருக்கிறது. இது இந்த நாட்டிலேயே மிகச் சக்திவாய்ந்த அமைப்பின் சித்தாந்தத்தை அம்பலப்படுத்துகிறது. கார்ப்பரேட் பத்திரிகைகளுடன் இப்போது நீதித் துறையும் புதிய தாராளவாதச் செயல் திட்டத்தின் முதுகெலும்பாகவே தெரிகிறது.


இது போன்ற ஒரு சூழலில், மக்கள் இந்த முடிவற்ற 'ஜனநாயக' நடவடிக்கைகளால் ஓடாகத் தேய்ந்து போனது போல் உணரும்போது அவர்கள் என்ன செய்வார்கள்? இதற்கு வன்முறை, அகிம்சை என்ற இரண்டே தேர்வுகள்தாம் இருக்கின்றன என்றில்லை. ஆயுதப் போராட்டத்தை நம்பிக்கை வைத்திருக்கும் அரசியல் கட்சிகளும் இருக்கின்றன. ஆனால் அவை வன்முறையைத் தங்கள் ஒட்டு மொத்த அரசியல் உத்தியில் ஒரு அம்சமாக மட்டுமே வைத்திருக்கின்றன. இந்தப் போராட்டங்களில் ஈடுபடும் அரசியல் தொண்டர்கள் மிருகத்தனமாக நடத்தப்பட் டிருக்கிறார்கள்; கொல்லப்பட்டிருக்கிறார்கள்; பொய்யான குற்றங்கள் சுமத்தப்பட்டு சிறைவைக்கப்பட்டிருக்கிறார்கள். ஆயுதத்தைக் கையில் எடுப்பது என்றால் இந்திய அரசின் பலவிதமான வன்முறைகளுக்கு அழைப்பு விடுப்பது என்பதை மக்கள் நன்றாகவே உணர்ந்திருக்கிறார்கள். ஆயுதப் போராட்டம் ஒரு உத்தியாக மாறும் அந்த நொடியில் நம் உலகம் சுருங்கிவிடுகிறது; அதன் வண்ணங்கள் மங்கிக் கறுப்பு-வெள்ளை ஆகின்றன. ஆனால், மற்ற எல்லா வழிகளும் வேதனையில் முடிந்ததால் மக்கள் அப்படி ஒரு முடிவை மேற்கொண்டால் நாம் அதைக் கண்டனம் செய்தாக வேண்டுமா? நந்திகிராமில் மக்கள் மறியல் நடத்திப் பாட்டெல்லாம் பாடியிருந்தால் மேற்கு வங்க அரசு பின்வாங்கியிருக்கும் என்று சொன்னால் யாராவது நம்புவார்களா? செயலற்றுக் கிடந்தால் இருக்கும் நிலைமையை ஆதரிப்பதாகும் (நம்மில் சிலருக்கு அது வசதியாக இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை) காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். செயல்வேகம் கொண்டவர்களாக ஆகப் பெரிய விலை கொடுக்க வேண்டியிருக்கிறது. அந்த விலையைக் கொடுப்பவர்களைக் கண்டனம் செய்வது என்னால் முடியாது.இது தொடர்பாக நீங்கள் பல இடங்களுக்குப் பயணம் செய்துவருகிறீர்கள். இது போன்ற பிரச்சினைக்குரிய இடங்களில் என்ன நடக்கிறது என்று சொல்ல முடியுமா? இந்த இடங்களில் நடைபெறும் போராட்ட முறைகளைப் பற்றிச் சொல்ல முடியுமா?


பெரிய கேள்வி - நான் என்ன சொல்ல? காஷ்மீரில் ராணுவ ஆக்கிரமிப்பு, குஜராத்தில் நியோ பாசிசம், சட்டிஸ்கரில் உள்நாட்டுப் போர், ஒரிசாமீது பன்னாட்டு நிறுவனங்கள் நடத்தும் வன்கொடுமை, நர்மதைப் பள்ளத்தாக்கில் நூற்றுக்கணக்கான கிராமங்கள் நீரில் மூழ்கிப்போனது, முழுப் பட்டினியின் விளிம்பில் வாழும் மக்கள், கானக நிலத்தின் சீரழிவு, போபால் விஷவாயுக்கசிவில் உயிர் பிழைத்த மக்கள், அதே யூனியன் கார்பைடு நிறுவனத்தை - இப்போது அதன் பெயர் டோ கெமிக்கல்ஸ் - நந்திகிராமுக்கு அழைக்க மேற்குவங்க அரசு ஊக்கப்படுத்துவதைப் பார்ப்பது. ஆந்திரப்பிரதேசம், கர்நாடகம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கு நான் அண்மையில் போகவில்லை. ஆனால் லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு இறந்திருப்பது நமக்குத் தெரியும். ஆந்திரப் பிரதேசத்தில் நடைபெறும் போலி என்கவுண்டர்களையும் கொடும் ஒடுக்குமுறையையும் பற்றி நமக்குத் தெரியும். இந்த இடங்கள் ஒவ்வொன்றுக்கும் அதற்கென்று ஒரு வரலாறு, பொருளாதாரம், சுற்றுச்சூழல் ஆகியவை உண்டு. எனினும் இவற்றை இணைக்கும் சரடு ஒன்று உண்டு - அவைமீது மிகப்பெரும் சர்வதேச கலாச்சார, பொருளாதார நிர்பந்தங்கள் சுமத்தப்படுகின்றன. இந்துத்வச் செயல்திட்டங்களை எப்படிச் சொல்லாமல் இருக்க முடியும்? அது தனது விஷத்தை நுட்பமாகப் பரப்பிக்கொண்டு மீண்டும் வெடிக்கக் காத்திருக்கிறது. இவற்றையெல்லாம்விடப் பெரும் குற்றம், நாம் இப்போதும் தீண்டாமையைக் கடைப்பிடிக்கும் ஒரு நாடாக, கலாச்சாரமாக, சமுதாயமாக இருக்கிறோம் என்பதுதான். நமது பொருளாதார நிபுணர்கள் எண்களுடன் விளையாடி வளர்ச்சி விகிதத்தைப் பற்றி பெருமைப்பட்டுக் கொண்டிருக்க, லட்சக்கணக்கான மக்கள் - தோட்டிகள் - அன்றாட வயிற்றுப் பாட்டுக்காக மற்றவர்களின் மலத்தைக் கிலோ கணக்கில் தலையில் சுமந்து செல்கிறார்கள். அவர்கள் மலத்தைத் தலையில் சுமக்கவில்லை என்றால் பட்டினி கிடந்துசாக வேண்டும். இதுதான் ஒரு வல்லரசின் லட்சணமா?


அண்மையில் மேற்கு வங்கத்தில் நடத்தப்பட்ட அரசு -காவல்துறை வன்முறையை எப்படிப் பார்க்கலாம்?


மற்ற இடங்களில் நடைபெறும் போலீஸ் - அரசு வன்முறையிலிருந்து இது எந்த வகையிலும் மாறுபட்டதல்ல. மைய நீரோட்ட இடதுசாரிக்கட்சி உட்பட எல்லா அரசியல் கட்சிகளும் பகிரங்கப்படுத்திவரும் இரட்டை வேடத்திலும் இரட்டைப் பேச்சிலும்கூட மாற்றமில்லை. கம்யூனிசத் தோட்டாக்கள் முதலாளித்துவத் தோட்டாக்களிருந்து மாறுபட்டவையா என்ன? என்னென்னவோ நடந்து கொண்டிருக்கிறது. சவுதி அரேபியாவில் பனிபொழிகிறது. பட்டப் பகலில் ஆந்தைகள் உலாவுகின்றன. தனிச்சொத்துரிமைக்கு அனுமதி வழங்கிச் சீன அரசு சட்டமியற்றுகிறது. இவையெல்லாம் பருவநிலை மாற்றத்தால் ஏற்படுகின்றனவோ என்னவோ. சீன கம்யூனிஸ்டுகள் 21ஆம் நூற்றாண்டின் மாபெரும் முதலாளிகளாக மாறிக்கொண்டிருக்கிறார்கள். நமது நாடாளுமன்ற இடதுசாரிகள் மட்டும் விதிவிலக்காக இருப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியுமா? நந்திகிராமும் சிங்கூரும் தெளிவான அறிகுறிகள். எல்லாப் புரட்சிகளும் கடைசியில் நூதன முதலாளித்துவத்தில்தான் முடிய வேண்டுமா என்று யோசிக்க வேண்டியிருக்கிறது. பிரெஞ்சுப் புரட்சி, ரஷ்யப் புரட்சி, சீனப் புரட்சி, வியட்நாம் யுத்தம், தென்னாப் பிரிக்க அரசின் இனவெறிக் கொள்கைக்கு எதிரான போராட்டம், இந்தியாவில் காந்திய முறையில் நடந்ததாகச் சொல்லப்படும் சுதந்திரப் போராட்டம் . . . எல்லாம் சென்றடைந்த இடம் எது? இதற்கு மேல் சிந்திக்க வழி இல்லையா?


பீஜப்பூரில் நடந்த மாவோயிஸ்டுகளின் தாக்குதலில் 55 போலீஸ்காரர்கள் கொல்லப்பட்டார்கள். போராளிகளும் அரசின் இன்னொரு பக்கம்தானா?


போராளிகள் எப்படி அரசின் மறுபக்கமாவார்கள்? இனவெறிக் கொள்கைக்கு எதிராகப் போராடியவர்களை - அவர்கள் பின்பற்றிய வழிமுறைகள் எவ்வளவு குரூரமாக இருந்தாலும் - அரசின் மறுபக்கம் என்று யாராவது சொல்வார்களா? அல்ஜீரியாவில் பிரெஞ்சுக்காரர்களை எதிர்த்துப் போராடியவர்களை என்ன சொல்வீர்கள்? நாஜிகளை எதிர்த்துப் போராடியவர்களை என்ன சொல்வீர்கள்? காலனியாதிக்க ஆட்சிகளை எதிர்த்துப் போராடியவர்களை என்ன சொல்வீர்கள்? இராக்கில் அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு எதிராகப் போராடுபவர்களை என்ன சொல்வீர்கள்? அவர்களும் அரசின் மறுபக்கமா என்ன? அறிக்கைகளின் துணையுடன் நடக்கும் இந்த எளிய, புதிய 'மனித உரிமை' விவாதம், நாம் எல்லோரும் ஆட வேண்டியிருக்கும் இந்த அர்த்தமற்ற பழிபோடும் ஆட்டம், நம் எல்லோரையும் அரசியல்வாதிகள் ஆக்கிவிட்டு எல்லாவற்றிலிருந்தும் உண்மையான அரசியலை உறிந்தெடுத்துவிடுகிறது. நாம் எவ்வளவு தான் தூய்மையானவர்களாக இருக்க விரும்பினாலும், நமது ஒளிவட்டத்தை நாம் எவ்வளவுதான் மெருகேற்றிக் கொண்டாலும் களங்கமற்ற தேர்வுகள் நமக்கு இல்லை என்பதுதான் அவலம். சட்டிஸ்கரில் சட்டிஸ்கர் அரசின் ஆதரவுடன் ஓர் உள்நாட்டுப் போர் உரு வாக்கப்பட்டு நடந்து கொண்டிருக்கிறது. சட்டிஸ்கர் அரசு, புஷ் கொள்கையை வெளிப்படையாகக் கடைப்பிடிக்கிறது. 'நீங்கள் எங்களை ஆதரிக்கவில்லையா? அப்படியானால் நீங்கள் தீவிரவாதிகளை ஆதரிக்கிறீர்கள்.' வழக்கமான பாதுகாப்புப் படையினர் தவிர இந்தப் போரின் முதுகெலும்பாக இருப்பது 'சால்வா ஜுடம்' - ஆயுதம் ஏந்தவும் சிறப்புக் காவல் அதிகாரிகள் (எஸ்.பிஓ.) ஆகவும் நிர்ப்பந்திக்கப்பட்ட சாதாரண மக்களைக் கொண்ட, அரசு ஆதரவு பெற்ற போராளிப் படை இது. இந்திய அரசு இதை முன்பே காஷ்மீர், மணிப்பூர், நாகாலாந்து ஆகிய இடங்களில் செய்து பார்த்திருக்கிறது. ஆயிரக் கணக்கானவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்; லட்சக்கணக்கானவர்கள் சித்திரவதை செய்யப்பட்டிருக்கிறார்கள்; ஆயிரக்கணக்கானவர்கள் காணாமல்போயிருக்கிறார்கள். எந்தச் சீரழிந்த குட்டிக் குடியரசையும் (banana republic) மிஞ்சும் சாதனை இது. தோல்வியடைந்த இந்தத் தந்திரங்களை அரசு இப்போது நாட்டின் மையப்பகுதிகளுக்குக் கொண்டுவரப் பார்க்கிறது. ஆயிரக்கணக்கான ஆதிவாசிகள் கனிமவளம் நிரம்பிய சொந்த மண்ணிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு போலீஸ் முகாம்களுக்கு அனுப்பப்பட்டிருக்கிறார்கள். நூற்றுக்கணக்கான கிராமங்கள் வலுக்கட்டாயமாகக் காலி செய்யப்பட்டிருக்கின்றன. இரும்புத் தாது நிறைந்த அந்த நிலங்கள்மீது டாட்டாவுக்கும் எஸ்ஸாருக்கும் நோட்டம். உடன்படிக்கைகள் கையெழுத்திடப்பட்டுள்ளன. ஆனால், அவற்றில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்று யாருக்கும் தெரியாது. நிலம் கையகப்படுத்தல் தொடங்கிவிட்டது. உலகிலேயே மிக மோசமாகச் சிதில மடைந்திருக்கும் கொலம்பியா போன்ற நாடுகளில் இதுபோலத்தான் நடந்தது. அரசு ஆதரவுள்ள படைக்கும் கெரில்லா போராளிகளுக்கும் இடையில் அதிகரித்து வரும் வன்முறைமீது எல்லோருடைய பார்வையும் பதிந்திருக்கையில் பன்னாட்டு நிறுவனங்கள் கமுக்கமாகக் கனிமவளத்தைக் களவாடிக்கொண்டிருக்கின்றன. இந்த நாடகம்தான் சட்டீஸ்கரில் நமக்காக அரங்கேறிவருகிறது.


55 போலீஸ்காரர்கள் கொல்லப்பட்டது கொடூரமானதுதான். ஆனால் அவர்களும் வேறுயாரையும் போல அரசுக் கொள்கைக்கு இரையானவர்களே. அரசுகளையும் நிறுவனங்களையும் பொருத்தவரை அவர்கள் எதிரியின் துப்பாக்கிக்கு இரையாக வேண்டியவர்கள் - இன்னும் உயிர்ப்பலி பாக்கியிருக்கிறது. முதலைக் கண்ணீர் சிந்தப்படும், டிப்டாப்பான டி.வி. நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் அதைப் பற்றி நமக்குப் பாடம் நடத்துவார்கள், பிறகு துப்பாக்கிக்குப் புகட்ட மேலும் பல போலீஸ்காரர்கள் தயார்படுத்தப்படுவார்கள். மாவோயிஸ்ட் கெரில்லாக்களைப் பொருத்தவரை தாங்கள் கொன்ற போலீஸ்காரர்களும் எஸ்.பி.ஓ.க்களும் இந்திய அரசின் ஆயுதமேந்திய ஊழியர்கள். ஒடுக்குமுறை, சித்திரவதை, காவலில் வைத்துச் செய்யப்படும் கொலைகள், போலி என்கவுண்டர்கள் ஆகியவற்றில் நேரடியாக ஈடுபடுபவர்கள். எந்த வகையில் யோசித்தாலும் அவர்கள் அப்பாவிப் பொது மக்கள் (அப்படி யாரேனும் இருந்தால்) அல்லர்.


மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தலிலும் மிரட்டலிலும் ஈடுபடுபவர்கள் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை. சொல்ல முடியாத கொடுமைகளை அவர்கள் செய்திருக்கிறார்கள் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை. அவர்கள் உள்ளூர் மக்களின் முழு ஆதரவையும் பெறமுடியாது என்பதில் எனக்கு சந்தேகமில்லை - ஆனால், இது யாருக்கு முடியும்? இருந்தாலும் எந்த கெரில்லாப் படையும் உள்ளூர் மக்களின் ஆதரவும் உதவியும் இல்லாமல் பிழைத்திருப்பது சாத்தியமில்லை. மாவோயிஸ்டுகளுக்கான ஆதரவும் வளர்ந்துகொண்டுதான் இருக்கிறது; குறையவில்லை. இதில் விஷயம் இருக்கிறது. குறைந்தபட்ச ஆபத்தானவர்கள் என்று தாங்கள் நம்புபவர்களுடன் இணைவதைத் தவிர மக்களுக்கு வேறு வழி இல்லை.


ஆனால் பெரும் அநீதிக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் ஓர் எதிர்ப்பியக்கத்தை, அந்த அநீதியைச் செயல்படுத்தும் அரசுடன் ஒப்பிடுவது அபத்தம். அகிம்சை முறையிலான எல்லா எதிர்ப்பு முயற்சிகளுக்கும் அரசு கதவை அறைந்து அடைத்துவிட்டது. மக்கள் ஆயுதமேந்தும்போது சகலவிதமான வன்முறைகளும் நடக்கவே செய்யும் - புரட்சிகர வன்முறை, குருட்டுத்தனமான வன்முறை, கிரிமினல்வன்முறை என்று எல்லாம் இருக்கும். தான் உருவாக்கும் கொடூரமான சூழ்நிலைகளுக்கு அரசுதான் பொறுப்பு.


'நக்சலைட்டுகள்', 'மாவோயிஸ்டுகள்', 'அன்னியர்கள்' - இந்தப் பதங்கள் மிகவும் மேலோட்டமான பொருளில்தான் இப்போது பயன்படுத்தப்படுகின்றன.


தம்முடைய விளம்பரத்தை மட்டுமே நம்பிச்செயல்படத் தொடங்கியிருக்கும் அரசுகள் சொந்தக் குடி மக்கள்தாம் தமக்கு எதிராகக் கலகத்தில் ஈடுபடுவார்கள் என்று ஊகிக்க முடியாமல் ஒடுக்கு முறையின் ஆரம்பக் கட்டத்தில் பயன்படுத்தும் பொத்தாம்பொதுவான குற்றச்சாட்டுதான் 'அன்னியர்கள்'. வங்காளத்தில் சி.பி.எம். இந்த நிலைமைக்குத்தான் வந்திருக்கிறது. வங்காளத்தில் அடக்குமுறைகள் புதியவையல்ல; அது வேகம் பிடித்திருக்கிறது, அவ்வளவுதான் என்று சிலர் சொல்வார்கள். எப்படி இருந்தாலும், அன்னியர் யார்? எல்லைகளை வரையறுப்பது யார்? அவை கிராம எல்லைகளா? வட்ட, வட்டார, மாவட்ட, மாநில எல்லைகளா? பிராந்திய, இனச் சார்பான அரசியல்தான் புதிய கம்யூனிச மந்திரமா? நக்சலைட்டுகளைப் பற்றியும் மாவோயிஸ்டுகளைப் பற்றியும் சொல்லப்போனால் - இந்தியா ஒரு போலீஸ் அரசாக மாறிக்கொண்டிருக்கிறது. இப்போது நடந்துகொண்டிருப்பதை ஏற்றுக் கொள்ளாதவர்கள் எல்லாம் தீவிரவாதிகள் என்று அழைக்கப்படும் ஆபத்துக்கு ஆளாகிறார்கள். இஸ்லாமியத் தீவிரவாதிகள் இஸ்லாமியர்களாக இருந்தாக வேண்டும். ஆகவே அது நம் எல்லோரையும் உள்ளடக்கப் போதுமானதல்ல. அவர்களுக்கும் சேர்த்துப் பெரிய வலை ஒன்று தேவை. அதனால் மேம்போக்கான, வரையறுக்கப்படாத ஒரு விளக்கம் பயனுள்ள தந்திரமாகிறது. ஏனென்றால் நாமெல்லோரும் மாவோயிஸ்டுகள் அல்லது நக்சலைட்டுகள் என்று, தீவிரவாதிகள் அல்லது தீவிரவாதிகளின் அனுதாபிகள் என்று அழைக்கப்படும் நாள், மாவோயிஸ்டுகள் அல்லது நக்சலைட்டுகள் யார் என்று தெரியாத அல்லது அது பற்றிக் கவலைப்படாதவர்களால் ஒடுக்கப்படும் நாள் வெகுதூரம் இல்லை. கிராமங்களில் இது ஏற்கனவே தொடங்கிவிட்டது - அரசைக் கவிழ்க்கச் சதிசெய்த தீவிரவாதிகள் என்று மேம்போக்காகக் குற்றம்சாட்டப்பட்டு நாட்டில் ஆயிரக்கணக்கான பேர் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். யார் உண்மையான மாவோயிஸ்டுகள் அல்லது நக்சலைட்டுகள்? இந்த விஷயத்தில் நான் நிபுணரல்ல, ஆனால் இது மிக அடிப்படையான சுருக்க வரலாறு.


இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.ஐ.) 1925இல் அமைக்கப்பட்டது. நாம் இப்போது சி.பி.எம். என்று அழைக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 1964இல் சி.பி.ஐ.யிலிருந்து பிரிந்து தனிக்கட்சி அமைத்தது. இரண்டுமே நாடாளுமன்ற அரசியல் கட்சிகள்தாம். 1967இல் சி.பி.எம். காங்கிரஸிலிருந்து பிரிந்த ஒரு கோஷ்டியுடன் சேர்ந்து மேற்குவங்கத்தில் ஆட்சிக்கு வந்தது. அந்தச் சமயத்தில் கிராமப்புறங்களில் பட்டினியில் உழன்றுகொண்டிருந்த விவசாயிகள் மத்தியில் பெரும் அதிருப்தி நிலவியது. உள்ளூர் சி.பி.எம். தலைவர்கள் கனுசன்யாலும் சாரு மஜும் தாரும் நக்சல்பாரி மாவட்டத்தில் விவசாயிகள் போராட்டம் ஒன்றை நடத்தினார்கள்.


1969இல் அரசு கவிழ்ந்து சித்தார்த்த சங்கர் ரே தலைமையில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தது. நக்சலைட் எழுச்சி ஈவிரக்கமின்றி நசுக்கப்பட்டது - இந்தக் காலகட்டத்தைப் பற்றி மகாஸ்வேதா தேவி அழுத்தமாக எழுதியிருக்கிறார். 1969இல் சி.பி.ஐ. (எம்.எல்.) - மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் - சி.பி.எம்.மிலிருந்து பிரிந்தது. சில ஆண்டுகள் கழித்து 1971 வாக்கில் சி.பி.ஐ. (எம்.எல்.) பல கட்சிகளாகப் பிரிக்கப்பட்டது; சி.பி.எம்.-எம்.எல். (விடுதலை) பெருமளவு பிஹாரை மையப்படுத்தி இயங்கியது; சி.பி.எம்.-எம்.எல். (புதிய ஜனநாயகம்) பெரும்பாலும் ஆந்திரப் பிரதேசத்திலிருந்தும் பிஹாரிலிருந்தும் இயங்கியது; சி.பி.எம்.-எம்.எல். (வர்க்கப் போராட்டம்) பெருமளவு வங்காளத்தில் இயங்கியது. இந்தக் கட்சிகளுக்குப் பொதுவாக 'நக்ச லைட்டுகள்' என்று பெயரிடப்பட்டிருக்கிறது. இவை தங்களை மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் அமைப்புகளாகத்தான் கருதிக்கொள்கின்றன, மாவோயிஸ்ட் என்று சொல்ல முடியாது. இவை தேர்தல், மக்கள் நடவடிக்கை, பிறகு - கடும் நெருக்கடியில் தள்ளப்பட்டால் அல்லது தாக்கப்பட்டால் - ஆயுதப் போராட்டம் ஆகியவற்றில் நம்பிக்கை கொண்டுள்ளன. அந்தச் சமயத்தில் பெரும்பாலும் பிஹாரில் செயல்பட்டுவந்த எம்.சி.சி. - மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் மையம் - 1968இல் உருவானது. ஆந்திரப் பிரதேசத்தின் பெரும் பகுதியில் இயங்கிவந்த பி.டபிள்யூ. - பீப்பிள்ஸ் வார் - 1980இல் அமைக்கப்பட்டது. சமீபத்தில், 2004இல், எம்.சி.சி.யும் பி.டபிள்யூ.வும் இணைந்து சி.பி.ஐ. (மாவோயிஸ்ட்) என்ற கட்சியை உருவாக்கின. அவை முழுவீச்சிலான ஆயுதப் போராட்டத்திலும் அரசைக் கவிழ்ப்பதிலும் நம்பிக்கை வைத்திருக்கின்றன. அவை தேர்தல்களில் பங்கேற்பதில்லை. இந்தக் கட்சிதான் பிஹார், ஆந்திரப்பிரதேசம், சட்டீச்கர், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் கெரில்லா போர் நடத்துகிறது.
அரசும் ஊடகங்களும் 'மாவோயிஸ்டு'களைப் பெரும்பாலும் உள்நாட்டுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எனப் பார்க்கின்றன. அவர்களை அப்படித்தான் பார்க்க வேண்டுமா?
அப்படிப் பார்த்தால் மாவோயிஸ்டுகள் பெருமைப்பட்டுக்கொள்வார்கள் என்பது நிச்சயம்.


அரசைக் கவிழ்க்கவே மாவோயிஸ்டுகள் விரும்புகிறார்கள். எதேச்சாதிகாரக் கோட்பாட்டால் உத்வேகம் பெறும் அவர்களால் எத்தகைய மாற்று அமைப்பை உருவாக்க முடியும்? அவர்களுடைய அரசும் சுரண்டக்கூடியதாக, எதேச்சாதிகாரமானதாக, வன்முறையானதாக இருக்காதா? இப்போதே அவர்களது நடவடிக்கைகள் சாதாரண மக்களைச் சுரண்டிக்கொண்டு தானே இருக்கின்றன? அவர்களுக்கு உண்மையிலேயே சாதாரண மக்களின் ஆதரவு இருக்கிறதா?


மாவோ, ஸ்டாலின் ஆகிய இருவருமே கொலைகாரப் பின்னணி கொண்ட தலைவர்கள் என்பதை நாம் ஒப்புக் கொள்வது முக்கியம். அவர்களது ஆட்சியின் போது கோடிக்கணக்கானோர் கொல்லப்பட்டார்கள். சீனாவிலும் சோவியத் யூனியனிலும் நடந்தவை ஒருபுறமிருக்க, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உதவியுடன் போல் போட் கம்போடியாவில் இருபது லட்சம் பேரை அழித்தொழித்தார் (மேற்கு உலகம் கண்டும் காணாதது போல் இருந்தது). கோடிக் கணக்கானோரைப் பசியிலும் நோயிலும் தள்ளி அழிவின் விளிம்பிற்குக் கொண்டுவந்தார். சீனாவின் கலாச்சாரப் புரட்சி நடக்கவேயில்லை என்பதுபோல் இருந்துவிட முடியுமா? சோவியத் யூனியனிலும் கிழக்கு ஐரோப்பாவிலும் கட்டாய உழைப்பு முகாம்கள், சித்திரவதைக் கூடங்கள், அவர்களது உளவாளிகள், ரகசிய போலீஸால் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை லட்சம் பேர்? இந்த ஆட்சிகளின் இருண்மையான வரலாறுகள் மேலை நாடுகளின் ஏகாதிபத்திய வரலாற்றிற்குச் சற்றும் குறைந்தவையில்லை. இந்த ஆட்சிகளின் ஆயுட்காலம் மிகக்குறைவாக இருந்தது என்பதுதான் ஒரே வித்தியாசம். திபெத்திலும் செச்னியாவிலும் நடப்பவற்றைப் பார்த்து மௌனமாக இருந்துவிட்டு, ஈராக், பாலஸ்தீனம், காஷ்மீர்மீதான ஆக்கிரமிப்பைக் கண்டனம் செய்ய முடியாது. மக்களுக்கு எதிர்காலத்தின் மீதுள்ள நம்பிக்கையை வலுப்படுத்த மாவோயிஸ்டுகளும் நக்சலைட்டுகளும், ஏன், மைய நீரோட்ட இடதுசாரிகளும்கூடக் கடந்த காலத்தை நேர்மையுடன் ஒப்புக் கொள்வது முக்கியம் என்று நம்புகிறேன். நடந்தவை மீண்டும் நடக்காது என்றுதான் நம்பத்தோன்றுகிறது... இருந்தாலும் நேபாளத்தில் மாவோயிஸ்டுகள் முடியாட்சிக்கு எதிராகத் தைரியமாகவும் வெற்றிகரமாகவும் போராட்டம் நடத்திவருகிறார்கள். இந்தியாவில் இப்போது மாவோயிஸ்டுகளும் பல்வேறு மார்க்சிஸ்டு-லெனினிஸ்டு குழுக்களும் பெரும் அநீதிக்கு எதிரான போராட்டத்தை முன்னின்று நடத்திவருகின்றன. அவர்கள் போராடுவது அரசுக்கு எதிராக மட்டுமல்ல, நிலப்பிரபுத்துவவாதிகளுக்கும் அவர்களது ஆயுதமேந்திய படைகளுக்கும் எதிராகவும்தான். மாவோயிஸ்டுகளும் எம்.எல். குழுக்களும் மட்டுமே இப்போது தாக்கம் ஏற்படுத்திவருகிறார்கள்.


அதை நான் பாராட்டுகிறேன். அவர்கள் ஆட்சிக்கு வந்தால் நீங்கள் சொல்வதுபோல், மிருகத்தனமாக, அநீதியாக, எதேச்சாதிகாரமாக, அல்லது தற்போதுள்ள அரசைவிட மோசமாகவேகூடச் செயல்படக்கூடும். ஆனால் அப்படி நடப்பதற்கு முன்பே அதை அனுமானிக்க நான் தயாராக இல்லை. அவர்கள் அப்படி இருந்தால் அவர்களை எதிர்த்தும் போராட வேண்டியிருக்கும். அநேகமாக என்னைப்போல் யாரையாவதுதான் அவர்கள் முதல் வேலையாக ஏதாவது ஒரு மரக்கிளையில் தூக்கிலிடுவார்கள். ஆனால் இந்தச் சமயத்தில் அவர்கள் எதிர்ப்பில் முன்னணியில் இருப்பதால் வரும் வேதனைகளை அனுபவித்துவருகிறார்கள் என்பதை ஒப்புக்கொள்வது முக்கியம். யார் மத ரீதியாக அல்லது சித்தாந்த ரீதியாக நமக்கு இடம் தர மாட்டார்களோ அவர்களைத் தெரிந்தே ஆதரிக்கும் நிலைதான் நம்மில் பலருக்கும் ஏற்படத்தொடங்கியிருக்கிறது. எல்லோருமே ஆட்சிக்குவரும்போது அடியோடு மாறிவிடுவார்கள் என்பது உண்மையே - மண்டேலாவின் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸைப் பாருங்கள். அது சீர்கெட்டுப்போயிருக்கிறது, முதலாளித்துவத்தைக் கடைப்பிடிக்கிறது, சர்வதேச நிதியத்துக்கு அடிபணிகிறது, ஏழைகளை அவர்கள் வீட்டை விட்டுத் துரத்துகிறது, லட்சக்கணக்கான இந்தோனேசிய கம்யூனிஸ்டுகளைக் கொன்றுகுவித்த சுஹார்த்தோவுக்குத் தென்னாப்பிரிக்காவின் மிக உயர்ந்த மக்கள் விருதை அளித்து கௌரவிக்கிறது. இதெல்லாம் நடக்கும் என்று யார் எதிர்பார்த்திருப்பார்கள்? அதற்காகத் தென்னாப்பிரிக்கர்கள் இனவெறிக் கொள்கைக்கு எதிரான போராட்டத்திலிருந்து பின்வாங்கியிருக்க வேண்டும் என்று, அல்லது போராடியதற்காக அவர்கள் வருத்தப்பட வேண்டும் என்று சொல்ல முடியுமா? அல்ஜீரியா பிரெஞ்சுக் காலனியாகவே இருந்திருக்க வேண்டும் என்றோ காஷ்மீரிகள், இராக்கியர்கள், பாலஸ்தீனர்கள் ராணுவ ஆக்கிரமிப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றோ சொல்ல முடியுமா? யாருடைய தன்மானத்தின் மீது தாக்குதல் நடத்தப்படுகிறதோ அவர்களை வழிநடத்திச் சென்று போர் நடத்தப் புனிதர்கள் யாரும் இல்லை என்பதால் அவர்கள் தம் போராட்டத்தைக் கைவிட வேண்டுமா?


நன்றி: 'தெஹல்கா' வில் வெளிவந்த இந்த நேர்காணல் காலச்சுவடு இதழில் மொழியாக்கம் செய்யப்பட்டிருந்தது. அதன் முக்கியத்துவம் கருதி பெண்ணியம் இதனை நன்றியுடன் மறுசுரிக்கிறது.

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்