/* up Facebook

Nov 10, 2009

நிகழ் காலத்தில் கடந்தகால எதிர்கால பெண்ணிலை மைய எதிர்பார்ப்புகள்!

குடும்பம் என்றஅலகில் பெண்கள்- தேவகெளரிசமூகத்தின் முக்கியமான ஒரு கூறாகவும் தனிமனிதனின் அத்தியாவசிய மான தேவைப்புள்ளியாகவும் “குடும்பம்“ என்ற அலகு இருந்துவருகிறது.


குடும்பம் என்ற அலகு பற்றி செல்வி. திருச்சந்திரன் “பெண்ணிலைவாதமும் கோட்பாட்டு முரண்பாடுகளும் ஒரு சமூகவியல் நோக்கு“ என்ற நூலில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.


“குடும்பம்“ என்ற அலகு அதன் தோற்றத்தின்போது இருந்ததற்கும் இப்போது இருப்பதற்குமிடையில் நிறைய மாறுபாடுகள் அடைந்துள்ளது.அந்த வகையில் தற்போது எதிர்கால பெண்ணிலைமைய எதிர்பார்ப்புகளுக்கேற்ப நெகிழ்ச்சித்தன்னை கொண்டதாய் “குடும்ப“ அலகு அமையவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.


“குடும்பம்“ என்ற அலகு என்றைக்கும் நிலையான ஒரு வடிவத்தில் இயங்கவில்லை என்பதை மிக இலகுவாக பின்வருமாறு விளங்கிக் கொள்ளலாம். இதை மனித இனத்தின் வளர்ச்சி நிலையுடன் உணர்ந்து கொள்ளலாம்.


ஆரம்ப மனிதகுல வரலாற்றில் அவனது வாழ்வு இயற்கையுடன் இணைந்த ஒரு விலங்குத்தனமான வாழ்வு. கூட்டாக வாழ்ந்து வந்தனர். பாலுறவில் எந்தவித கட்டுப்பாடும் இல்லை. இதை இரத்த உறவுக் குடும்பங்கள் என்று கூறினர்.


அடுத்த கட்டம் உணவு சேகரிப்பு, விலங்கு வேளாண்மை காலகட்டம். இதில் பெண்களிடம் அதிகாரம் இருந்தது. குலங்களை அவர்கள் தம் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். தந்தை பற்றிய எண்ணப்பாடு இல்லை. தாய் முக்கியமானாள். இந்த இனக்குழுமங்களிடையே பூசல்களும் ஏற்படத் தொடங்கின.


அடுத்த கட்டத்தில் ஒரு இடத்தில் இருந்து வேளாண்மையில் ஈடுபடும் நிலை உருவாகியது. உற்பத்திக்கருவிகள் உதயமாயின. உற்பத்தியில் உபரிகள் பெறப்பட்டன. உற்பத்திக்கருவிகளை வைத்திருந்த ஆண் உபரிகளுக்குச் சொந்தக்காரன் ஆகிறான். இவற்றைக் கையளிக்கத் தன் வாரிசை உருவாக்க முயல்கிறான். அதன்போது தாயுரிமை தூக்கி எறியப்பட்டு ஒரு தாரக் குடும்பத்தை அமைத்தான். தனிப் பொருளாதார உறவாக குடும்பம் அமையத் தொடங்கிற்று. இங்கே பெண்ணின் நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்பட்டு அவள் இல்லத்திற்குரியவளாக்கப் படுகிறாள். இவை பற்றி 1884 இல் “குடும்பம்“, “தனிச்சொத்து“, “அரசு“ ஆகியவற்றின் தோற்றம் என்ற நூலில் “ஏங்கல்ஸ்” விரிவாக எழுதியுள்ளார்.


இன்று நிலைபெற்றிருக்கும் தனிச் சொத்துடமைக் குடும்ப அமைப்பு பல சிக்கல்களை எதிர் கொண்டு இன்று “குடும்பம்“ என்பது ஆண்¬பெண் இணைந்து வாழல் மட்டுமல்ல பெண்¬பெண், ஆண்¬ஆண் இணைந்து வாழும் நிலைக்குள்ளும் வந்து‘ அதையும் மீறி ஆண்¬குழந்தைகள், பெண்¬குழந்தைகள் என்ற தனித் தனி குடும்ப அலகு நிலைக்கும் வந்துள்ளது.பரிசோதனைக்குழாய்க் குழந்தை, வாடகைத்தாய், படியாக்கல் இவையெல்லாம் இவற்றை சாதகமாக்கியுள்ளன.


இன்று எமது நாட்டில் குடும்ப அலகு பற்றி நோக்குவோமானால், ஆண்¬பெண் குடும்ப அலகே முதன்மை பெற்றதாகவும் ஏற்றுக்கொள்ளத்த க்கதாகவும் இருந்து வருகிறது. ஆனாலும் போர்க்கால சூழ்நிலையால் பெண்¬குழந்தைகள் என்ற குடும்ப அலகும் அதிகம் அமைந்துதான் உள்ளன. அதிகரித்த விதவைத்தாய்மார் தம் குழந்தைகளுடன் குடும்பங்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.


இந்த நிலையில் குடும்ப அலகு பற்றி பார்க்கும் போது அதன் அமைவு இன்றும் பொருளாதார தளத்திலேயே நிருணயிக்கப்படுவதை அல்லது கட்டமைக்கப்படுவதைக் காணலாம்.


ஆனால், மாறிவரும் சூழ்நிலைக்கேற்ப குடும்ப அலகு தாக்கத்திற்குட்பட்டு வருகிறது. காரணம் “குடும்பம்“ என்ற அலகின் தோற்றம் எந்தத் தேவை கருதி உருவாக்கப்பட்டதோ அல்லது அமைந்ததோ, அத்தேவைகளையும் மீறி இன்றும் தேவைகள் அதிகரித்து, வளர்ச்சிகள் ஏற்பட்டு சமூதாய அசைவியக்கம் வாழ்தலுக்கான வழிகளை அவாவி நிற்கிறது.


பேராசிரியர் சிவத்தம்பி “சடங்கு“ என்ற செ. கணேசலிங்கத்தின் நாவலில் இவ்வாறு குறிப்பிடுகிறார். நிலப்பிரபுத்துவச்சமூதாய மாற்ற காலங்களில் நிலப்பிரபுத்துவத்தின் கூட்டுக்குடும்ப அமைப்பிற்கு வேண்டிய முறையில் நடத்தப்பெற்ற இணைப்பு பின்னர் அக்குடும்பம் அதன் அமைப்பிற்கு முற்றிலும் மாறுபட்ட சூழ்நிலையில் இயங்கும் பொழுது இது முறியவே செய்யும். சில குடும்பங்கள் மாத்திரமே மாறிவரும் சூழ்நிலைக்கு ஏற்ப வாழும். பல குடும்பங்கள் மாற்றத்தாற் பாதிக்கப்படும். குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றவெனின் குடும்பத்தின் அங்கங்களான கணவன்¬மனைவி¬ பிள்ளைகள் அனைவரும் துன்புறகின்றனர் என்பதே கருத்து.


இங்கே கூட்டுக் குடும்ப முறைமைக்கு ஏற்ப அமையப்பெற்ற அல்லது உருவாக்கப்பட்ட “குடும்பம்“ எவ்வாறு அந்த சூழ்நிலை மாறும்போது அது சிதைவடைகிறது என்பதை அதாவது குடும்பத்தினர் படும் துன்பங்களை பேராசிரியர் குறித்துள்ளார். இதே கருத்தில் இன்றைய குடும்ப அலகை வைத்துப் பாருங்கள். இன்று ஒவ்வொரு குடும்பத்திலும் துன்பங்கள் மலிந்து விட்டன. ஆனாலும் பழைய அமைப்பிலேயே குடும்ப நிறுவனத்தை கேள்வி கேட்காமலே அதைப் பேண வரிந்து கட்டிக்கொண்டு நிற்கிறோம்.


ஒருவன் தற்கொலை செய்து கொள்கிறான். அவனது மரணச்சடங்கை முறைப்படி செய்து முடிப்பதில் காட்டும் ஆர்வம் அவர் இறப்பிற்கான காரணம், சமூகத்தாக்கம். உளவியல் போக்கு, மீண்டும் ஒருவர் இவ்வாறு இறக்காமல் இருக்க என்ன செய்யலாம் என்பதை எவரும் சிந்திப்பதில்லை. அது போல்த்தான் “குடும்பம் புனிதமானது“ என வைத்தக்கொண்ட அதன் உள்ளார்ந்த அம்சங்களை யாரும் நோக்கமுயல்வதில்லை.ராஜம் கிருஷ்ணன் தன் “விடூ“ என்ற நாவலில் இவ்வாறு கூறுகிறார்.“குடும்பம் என்ற அமைப்பு வெளிப்பார்வைக்கு ஆழமாகத் தெரியக்கூடிய இழுத்து மூடப்பட்டதொரு அலங்காரம், தனி மனிதன் சுதந்திரம் வீட்டில் சமமாக வளர்ச்சி அடையவில்லை. ஆணுக்கு அதிகமாக உரிமையைத்தரும் அமைப்பு அது. பெண் அந்த அமைப்பில் ஒத்துப்போதல் என்ற அளவிலேயே உருவாக்கப்டுகிறாள்“


எனவே குடும்ப அலகில் பெண்ணின் இயங்கு நிலை என்பது சகல விதத்திலும் “ஒத்துப்போகும்“ நிலையில் தன்னை வைத்துக் கொள்வதில் தான் இருக்கிறது. இது ஒரு அடிமை நிலை பாலுணர்வு தொடக்கம் அவளது சிந்தனைத் தேடல்கள் வரை அவள் அவனுடன் ஒத்துப்போகக் கூடியதாகத் தன்னை ஆக்கிக் கொள்ள வேண்டியவளாகின்றாள். மதம், கலாசாரம், தொடர்பு ஊடகங்கள், கல்வி சகலதும் இதையே வலியுறுத்தி நிற்பதைக் காணலாம்.


இதனால்தான் “மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்“ என்றார்களோ? அதாவது இயக்கமில்லாத சார்ந்து நின்று எல்லாவற்றுக்கும் ஒத்துப்போகும் தன்மையை ஒரு மனித ஜீவி கொண்டிருக்கக்கூடிய சாத்தியக்கூறு உண்டா? இல்லையே ஆனால் அப்படியான பெண்தான் குடும்ப அலகிற்கு வேண்டும். அதனால்தான் மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்கிறார்களோ? பெண்ணுக்கு குழந்தைப் பேறே முழுமை என்பதை நன்றாகவே அவளுக்கு ஊட்டியுள்ளனர். இதனால் தாய்மையின் வலி, துன்பம், தன்னையே பணயம் வைத்தல், எல்லாவற்றையும் மீறி பெண் குழந்தைப்பேற்றிற்காக குடும்ப வாழ்வில் இணைவதுடன் சமூதாய அந்தஸ்து, பாதுகாப்பு என்ற கருத்துருவங்களும் பெண்ணை குடும்ப வாழ்வில் இணைக்கிறது.


இதன் அடிப்படையில் இன்று எங்கள் பெண்களின் நிலையைப்பாருங்கள் படித்துப்பட்டம் பெற்று ஆழுமையுடன் செயல்புரிந்து கொண்டிருக்கும் பல பெண்கள் திருமணத்திற்காக குடும்ப அமைதலுக்காக புலம்பெயர்ந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அங்கே பொருளாதாரத்தைப் பெருக்கிக் கொண்டு தனக்காக வாழ ஒருத்தியை எதிர்பார்த்துக்காத்திரு க்கும் ஆண்கள் அவர்களுக்கு குழந்தைகள் கூட இருக்கும். ஆனால் மரபுரீதியாக தாலிகட்டி குடும்பம் அமைப்பார்கள். ஏற்கனவே இருந்த தொடர்புகளும், குழந்தையும் எந்த அலகில் உள்ளடக்கப்படும்? நாம் யோசித்துப்பார்க்கலாம். குடும்ப உருவாக்கலில் ஆணின் எதிர்பார்ப்பு என்ன? அழகான, மெலிந்த குடும்பப்பாங்காக சமையல்தெரிந்த, அண்மையில் பெண் இருக்கவேண்டிய நிறையைக்கூட குறிப்பிட்டிருந்தார்கள். இதே நேரம் பெண்ணுக்கு எதிர்பார்ப்பு இருக்கமுடியாது. பெற்றோர் எதிர்பார்ப்பு உழைப்பும் ஊதியமும் ஒரு பக்கம் இருக்க சேவை மறுபக்கம் இருப்பதை தெளிவாகவே பறைசாற்றுகிறது. தற்போது சேவையுடன் பெண்கள் உழைப்பும் ஊதியமும் பெறத் தொடங்கிவிட்டார்கள்.ஆனால் நடந்தது என்ன? இரட்டைச்சுமை தான் வந்தது. எத்தனையோ ஆண்கள் வீட்டுவேலைகளில் ஈடுபடுகிறார்கள் என்று கூறுவார்கள். ஆனால் இயல்பாகவே ஆண்களுக்குள்ளால் அது இருந்து வருகிறதா? இல்லை. பெண்ணுக்குரியதில் அவன் உதவி செய்கிறான். இதே நேரம் பொருளாதாரத்தில் அவனுக்கு நிகராக சில வேளை அவனிலும் கூடுதலாக பெண் ஊதியம் பெறுகிறாள். இத்தகைய ஜனநாயகமற்ற முறைமை குடும்ப அலகில் இருப்பதால் பெண்ணின் இயங்குநிலை கவலைக்கிடமாகவே இருக்கிறது. அடிமைத்தனமும், ஆண்டான் நிலையும் இன்றும் குடும்ப அலகு நீடித்துக் கொண்டு இருப்பதையே காட்டுகிறது சுரண்டப்படுகின்ற பெண்களின் நிலை சோகங்களாக ஆக்கப்பட்டுள்ளன.


“குடும்ப அலகு“ சமூகப் பாதுகாப்பை பெண்ணுக்கு வழங்குகிறது என்ற கருத்தியலும் உண்டு. அது எவ்வாறெனில் பாலியல் வல்லுறவு, கீழ்த்தரமாக கதைத்தல் இவற்றில் இருந்து பாதுகாப்பு ஆனால் இவை குடும்ப அலகிற்குள்ளேயே நடந்தேறுகின்ற அவலம் இவற்றை சகித்துக்கொண்டு வாழ்வை நடாத்தும் பெண்கள் உண்டு. ஆனால் இன்று குறைந்து வருகின்றனர். இதனால் குடும்ப விரிசல் ஏற்படுகிறது. ஆண் ஒரு உடமைப் பொருளாய் பெண்களைப் பார்ப்பது குடும்ப அலகினுள்ளும் உண்டு. இதனால் தன் விருப்பிற்கு ஏற்ப அவளைக் கட்டாயப்படுத்துகிறான். இதன் போது பல பெண்கள் ஏனோ தானோ என்று வாழ்வது மட்டுமல்ல குடும்ப உறவிலும் ஈடுபடுகின்றனர். பல குடும்பங்களில் உள்ள விடயம் இது. இதனால் மேலும் ஒரு பிரச்சனை உருவாகிறது. பெண் ஏனோ தானோ என்று இருப்பதால் ஆண் வேறிடம் தேடிச்செல்கிறான். இப்படி இடியப்பச் சிக்கலாகிறது குடும்ப அலகின் நடைமுறைத் தத்துவங்கள்.


இந்த குடும்ப அலகில் பெண்களின் பாலுணர்வு கூட கணக்கில் எடுக்கப்படுவதில்லை என்பது இங்கே புலனாகின்றது. ஏன் பெண் கூட அதை உணர்ந்து கொள்வதில்லை. தன்னைகொடுப்பதாகத்தான் அவள் எண்ணிக்கொள்கிறாள்.


இத்தகைய நிலைமைகளால் இன்றைய குடும்ப அலகில் உள்ள பல பெண்களிடம் சலிப்புத்தன்மைகளைக் காணமுடிகிறது. இதற்கு என்ன காரணம்? உதாரணமாக வீட்டுவேலையில் ஈடுபட்டிருக்கும் பெண்கள் திரும்ப திரும்ப அதில் சலிப்படைந்து கொள்கின்றனர். வெளிவேலைகளில் ஈடுபடும் பெண்கள் இரட்டைச் சுமையால் அழுத்தப்படுகின்றனர். இதில் இன்னொரு விடயம் பெண் தனக்கு மனத்திருப்தி தரும் வேலைகள், செயல்கள் எதிலுமே ஈடுபடாத நிலை உண்டு. ஒத்துப்போக வேண்டிய தன்மைதான் இதை ஏற்படுத்துகிறது. இதனாலும் சலிப்புத்தன்மைக்கு பெண் விரைவில் ஆட்பட்டு விடுகிறாள். பிள்ளைகள் வந்துவிட்டார்கள். வாழ்ந்து முடிக்க வேண்டும் என்று வாழ்கிறோம் என்கின்றனர் பலர். அப்படியாயின் இந்த குடும்ப அலகு ஏன்? யார் நலன் காக்கிறது? யார் திருப்திப்படுகின் றனர்? இது பற்றி சிந்திக்க வேண்டியுள்ளது மறு பக்கத்தில் ஆண்கள் பற்றி பார்க்கின்ற போது பிரபலியமான பல ஆண்கள் அதாவது தமது முழு மன ஈடுபாட்டுடன் சமூகத்தில் உழைத்தவர்கள் மனைவிகளால் அல்லல்பட்ட வரலாறு நம்முடையது. அதாவது அவர்களுக்கு நல்ல குடும்ப வாழ்வு அமையவில்லை என்றோ நல்ல மனைவி அமையவில்லையென்றோ சொல்லிக் கொள்கின்றனர். இது உண்மைதானா?


பாரதியாரை எடுத்துக்கொள்ளுங்கள் மகாகவி குடும்பத்தில் பட்ட அல்லலோ ஏராளம் என்? மனைவி வீட்டிலிருந்து மனத் திருப்தியில்லாத ஊதியமற்ற சேவை செய்கிறாள். பாரதியார் சமூகதில் மன திருப்தியோடு ஊதியமற்ற சேவை செய்கிறார். குடும்பம் எப்படி இயங்குவது? பொருளாதாரத்திற்கு வழி என்ன? எனவே சிக்கல் வருகிறது. குடும்பத்தில் சலிப்பு வருகிறது.(இருவருக்கும் ) ஆளுமை பாதிக்கப்படுகிறது. எனவே இப்போது இருக்கின்ற குடும்ப அலகு தனி மனித ஆளுமையை கட்டுப்படுத்தும் ஒரு நிறுவனம் என்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும் அதையும் மீறி குடும்ப அலகில் உள்ள ஒருவர் உச்சாணி கொப்பிற்கு ஏறுகிறார் என்றால் ஒரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் நிற்பாள், என்ற சூத்திரம் கைகொடுக்க ஒரு பெண்ணின் இயங்கு நிலை ஒத்திசைவுடன் மட்டும் நின்றுவிட்டது என்பதை உணரலாம் ஆனால் இதனூடாக பெண் திருப்திப்படும் உளப்பாங்கையும்(ஆணின் வெற்றிக்குக் காரணமாக இருந்த போதும்) நாம் நன்றே வளர்த்திருக்கிறோம். இதன் போதுகூட குடும்பத்தின் அசமத்துவப் போக்கை நாம் உணரவில்லை.(பின் தூங்கி முன்னெழுவாள் பத்தினி என ஆண்கள் போற்றிக் கொண்டிருக்கும்போது) பேய்க்கு வாழ்க்கைப்பட்டால் முருங்கை மரம் ஏறவேண்டும் எனப் பெண்கள் தூற்றிக்கொண்டு சகித்துக்கொள்வதாகவே “குடும்ப அலகு“ இயங்குகிறது.


எனவே இந்த பொருளாதாரத்தில் கட்டமைக்கப்பட்டிருக்கும் குடும்ப அலகு மறுதலிக்கப்பட்டு இரு தனிமனித உளவியல்ரீதியான விருப்புடன் கட்டமைக்கப்படும் குடும்ப அலகில் சமத்துவத்தை நிலைநாட்டினால் மட்டுமே இனி வரும் காலத்தில் குடும்ப அலகின் வெற்றிகரமான முன்னெடுப்பு இருந்துகொண்டிருக்கும் சமத்துவம் இல்லாது போகும் பட்சத்தில் இணைந்து வாழலில் ஆண் ஆணுடனும் பெண் பெண்ணுடனும் அல்லது தனித்து ஆண். பெண் என்ற நிலையில் குடும்ப அலகு உருவாகும். இது தவிர்க்க முடியாதது. இனிவரும் காலத்தில் உலகில் பெண் சவால்களை எதிர்கொள்ளமாட்டாள். பெண்ணே உலகிற்கு பெரும் சவாலாக இருக்கப்போகிறாள். கர்ப்பப்பையை கண்டுபிடிக்குமட்டும். ஏனெனில் எந்த வகையில் மறு உற்பத்தி செய்யப்பட்டாலும் படியாக்கம், பரிசோதனைக் குழாய் கர்ப்பப்பை தேவைப்படுகிறது. இதனால் பெண் தேவை, எனவே இன்றைய குளோனிங் முறை கூட ஆண் இனத்தை இல்லாதொழித்துவிடும் என்ற அச்சத்தைக்கூட கொடுக்கிறது. ஏனெனில் பெண்ணில் இருக்கும் கர்ப்பப்பையில்த்தான் குழந்தை வளர்க்க முடியும் என்ற நிலையில் ஆண் இல்லாது பெண் தன்னில் இருந்து உருவாக்கிய சிசுவை எடுத்து வளர்க்கத் தொடங்கினால் இது எங்கு போய் முடியும்?


இவை வருடக்கணக்கில் நடைபெறக்கூடிய விடயங்கள் அல்ல. இவை பல நூறு வருடங்களின் பின் நிகழலாம். அதற்கான வாய்ப்புக்கள் நகர்வுகள் இப்போது தென்படுகின்றன.


எனவே சமூக உற்பத்தியில் முழுமையாக பெண் பங்குபற்றும் போது, மறு உற்பத்தியை தாமாக தீர்மானிக்கும் போது ஆண் ஆதிக்க குடும்ப அமைப்பு வலுவிழந்து, செயலிழந்து போகும்.


மேற்கு நாடுகளில் இதன் தன்மைகளை ஓரளவு உணரலாம். குடும்பத்தின் எதிர்காலம் பற்றி செ. கணேசலிங்கன் கூறுகையில் பெண்ணினம் அமைக்கப்போகும் புதிய சமூக அமைப்பு பெண்ணாதிக்கம் கொண்டதாகவும் அமையலாம். மீண்டும் ஆண்¬ பெண் என்ற வர்க்க போராட்டம் அங்கு ஏற்படலாம். முரண்பாடுகளும், போராட்டங்களும் சமூகத்தில் நிரந்தர மானவை ஆயினும் இங்கு ஆணினத்தின் எதிர்காலம் பெண்ணினத்தின் கருவிலேயே உள்ளது என்பதை நாம் மறந்துவிட முடியாது. விஞ்ஞான முறையில் அறிந்து ஆணினத்தை அவர்கள் கருச்சிதைவும் செய்து விடலாம் ஃபிராயிடின் உளவியல் கோட்பாடு ஒன்றுதான் ஆணினத்திற்கு நம்பிக்கை ஊட்டுவதாக எஞ்சி நிற்கிறது என்கிறார். இத்தகைய அம்சங்கள் ஆட்கொள்ளாத வண்ணம் “குடும்ப அலகை“ மறுவரையறை செய்யவேண்டியயதன் அவசியம் யாவராலும் உணரப்படவேண்டும்.


குடும்பத்துள் ஜனநாயக முறைமை, அசமத்துவ போக்கை தகர்த்தல் போன்றன ஓரளவிற்கு இருக்கக்கூடிய குடும்ப அலகை நெறிப்படுத்தியதாக அமையலாம். இதற்கான பெண்ணினச் சிந்தனைகள் விளங்கிக் கொள்ளப்பட வேண்டும் “பெண்ணினமானது ஆழமானது அறியமுடியாதது“ என்று கூறி தட்டிக்கழித்தலிலேயே நம்மவர்கள் மும்முரமாய் நிற்கின்றனர். தற்போதய சூழலில் வாழ்தலுக்கான தெரிவு குடும்ப அலகாக இருக்க வேண்டுமானால் அந்த அலகை அது அமையும் முறைமையை அமைந்த பின் அதன் இயங்கு நிலையை சரிவர அமைத்துக் கொள்ளவேண்டும்.


உசாத்துணை நூல்கள்

  • செல்வி திருச்சந்திரன்¬ பெண்ணிலைவாதமும் கோட்பாட்டு முரண்பாடுகளும்.
  • செ. கணேசலிங்கம்¬ பெண்ணடிமை.
  • டாக்டர். இரா.பிரேமா¬ பெண்ணியம் அணுகுமுறைகள் (தமிழ் புத்தகாலயம் சென்னை).
நன்றி - நிவேதினி

1 comments:

Divya said...

எதிர்கால உலகில் பெண்களின் ஆட்சி நடக்கும். ஆண்கள் அமைதியான வாழ்க்கை வாழ்வர். ஆனால் அடிமையாக வாழவேண்டும்.

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்