/* up Facebook

Nov 25, 2009

ஊடகங்களில் குழந்தைகளின் மீதான வன்முறை - சரளா


குழந்தைகள் தாம் ஒரு சமூகத்தின் கண்ணாடி. எல்லா நன்மைகளையும், எல்லாத் தீமைகளையும் அப்படியே பிரதிபலிக்கும் கண்ணாடி. துரோகம், சுயநலம், வஞ்சகம் என சமூகத்திடம் இருக்கும் எல்லா நோய்களும் குழந்தைகளுக்கு எளிதில் தொற்றக்கூடிய தொற்று வியாதிகள். குழந்தையின் முன்பு பெற்றோர் எப்படி நடந்து கொள்கிறார்களோ அதேபோல இரண்டு மடங்கு, குழந்தைகள் பிரதிபலிப்பார்கள். ஏனென்றால் "போலச் செய்தல்' என்பதுதான் குழந்தையின் உளவியல்.


குழந்தை வளர்ப்பு என்பது அற்புதமான கலை. நம்மில் பலருக்கு அது கைவருவதே இல்லை. அதனால்தான் குற்றங்கள் நிறைந்ததாக இருக்கிறது சமூகம். குழந்தை வளர்ப்பு பெண்களுக்கே உரிய பொறுப்பென்று நினைத்து ஆண்கள் சமுதாயம் ஒதுக்குவது சரியானதன்று. குழந்தை வளர்ப்பில் ஆண் என்றும் பெண் என்றும் பாலியல் வேறுபாடு காட்டாமல் சமமாக வளர்க்க வேண்டிய பொறுப்பு இரு பாலாருக்கும் இருக்கிறது. அன்பு குறைகிற இடம்தான் அத்தனை குற்றங்களுக்கு ஆரம்பம்! இதனை ஆய்வதே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்.


இந்தியாவில் மட்டும் ஏழு லட்சம் சிறுமிகள் ஒவ்வொரு ஆண்டும் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப் படுகிறார்கள் என்கிறது ஓர் ஊடகத்தின் புள்ளி விவரம் (ஆனந்த விகடன்). நம் தேசத்தின் பாலியல் தொழிலாளர்களில் 15 சதவீதம் பேர் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் என்பது கவனத்திற்கு உரியது. பண்பாடும் பாரம்பரியமும் உள்ள ஒரு சமூகம்தான் குழந்தைகளை இப்படி நடத்துகிறது என்றால் நாம் எதை நோக்கிப் பயணம் செய்கிறோம் என்பதற்கான பதில் தலைகுனிவான விஷயமாக இருக்கிறது.


ஒவ்வொரு ஆண்டும் பள்ளிகளின் தேர்வு முடிவுகள் வந்ததும் சராசரியாக இந்தியா முழுவதும் 2,000 பள்ளிக் குழந்தைகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். இதில் குறைந்தபட்சம் இருநூறு குழந்தைகளைத் தற்கொலைக்குத் தூண்டுகிறது வன்முறை. ஒரு நாட்டின் மகத்தான வளர்ச்சியில் குழந்தைகள் முக்கிய கவனத்திற்குரியவர்கள். குழந்தைகளைப் பற்றிக் கவலைப்படாத எந்தத் தேசமும் வளமான எதிர்காலத்தைக் கொண்டிராது. எந்தக் குழந்தையும் ஆரோக்கியமாக வளரும்பொழுது குடும்பமும், சமூகமும் சுமுகமாக இயங்கும். ஆனால் வறுமைத் துன்பத்திற்கு ஆட்படும் குழந்தைகள் கட்டுப்பாட்டிலிருந்து இருந்து விலகுகிறார்கள். இதனால் சமூகத்தில் தீயசக்திகள் பெருகுகின்றன. குறிப்பாக சமூக நெருக்கடிகளால் வளரும் இளைஞர்கள் தவறான மதிப்பீடுகளால் வழிநடத்தப் படுகிறார்கள். இதனால்தான் வன்முறை பிறக்கிறது. இவ்வன்முறை ஊடகங்களின் வழி பெரிதுபடுத்தப்படுகின்றது. இக்கட்டுரையில் குழந்தைகள் எதிர்கொள்ளும் வன்முறையே சிறப்பு கவனத்திற்கு உட்படுகிறது. இவ்வன்முறையை பின்வருமாறு வகைப்படுத்திக் கொள்ளலாம்.


1. பெற்றோர்களால் ஏற்படும் பிரச்சினை.
2. இன்றைய கல்வியின் தரத்தினால் ஏற்படும் மன அழுத்தம்
3. பாலியல் பலாத்காரம்
4. இளம்தொழிலாளர்களாக அவதிப்படும் இன்னல்
பெற்றோர்களும், குழந்தைகளும் :


"எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே, அவர் நல்லவராவதும், தீயவராவதும் பெற்றோர் வளர்ப்பினிலே'' என்ற பாடலுக்கு ஏற்பக் குழந்தைப் பருவத்தில் பெற்றோர்களைச் சார்ந்து வாழ்தல் அவர்களுடைய பழக்கத்தைப் பின்பற்றுதல் என்பதை சார்பு மனநிலை என்று கூறுவார்கள். குறிப்பாக குடும்பப் பாரம்பரிய, வழிபாடு, சடங்குகளைப் பின்பற்றுதல் இக்கால கட்டத்தில் இயல்பாக ஏற்றுக்கொள்ளப்படும். குழந்தைகளின் வளர்ச்சியில் பெற்றோர் ஒரு தூண்டுகோலாக இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் போகும்போது குழந்தையின் மனநலம் பாதிப்படைகின்றது. போதிய ஆதரவு குறைகிறது. இதனால் குழந்தைகள் வீட்டை விட்டு வெளியேறும் அவலம் நேர்கிறது. இது ஒருபுறம். மற்றொரு புறம், பெற்றோரைத் தாண்டி, கல்வி கற்கும் சூழ்நிலையில் ஒரு குழந்தைக்கு அரவணைப்பாக இருக்க வேண்டியவர் ஆசிரியரே. ஆனால்,


"ஆசிரியை கண்டித்ததால் பள்ளி மாணவி தற்கொலை'' (தினமணி) என்று செய்தி வெளியாகிறது.


ஆசிரியர்கள் மாணவர்களைக் கண்டிப்பதற்குப் பதிலாக தண்டிக்கிறார்கள். இதனால் பல தற்கொலைச் சம்பவங்கள் நிகழ்கின்றன. ஒரு பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தி மாணவ சமுதாயத்திற்கு வளமான எதிர்காலத்தை உணர்த்த வேண்டிய ஆசிரியரின் வன்முறைப் போக்கினால் ஒரு குழந்தையின் எதிர்காலம் ஒடுக்கப்படுகிறது. சமூகத்தை அழிவுநிலைக்குத் தள்ளும் இந்தப் போக்கு, மாணவ சமுதாயத்துக்கு உகந்ததா என சமூகம் உற்று நோக்குதல் இங்கு அவசியம். மேலும், இன்றைய கல்வியின் தரம் குழந்தைகளை இதுபோன்ற தற்கொலைப் போக்கிற்குத் தள்ளுகின்ற சூழ்நிலையும் இருக்கவே செய்கிறது.1. மாணவர்களிடையே எழும் மனப்போராட்டங்களுக்கு ஆலோசனை வழங்க வேண்டியவர்கள் ஆசிரியர்கள்.


2. பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் இடையே ஒரு பாலமாக இருக்க வேண்டியவர்கள் ஆசிரியர்களே.


3. ஒரு குழந்தை எல்லாவிதமான வளர்ச்சிகளோடும் வளர்வதற்கு ஆசிரியராக ஆலோசகர் அவசியம் தேவைப் படுகிறார்கள். (ப.35. அரங்க மல்லிகா, வழிகாட்டுதலும் ஆலோசனை கூறுதலும்).


குழந்தைப் பருவத்தில் பெற்றோரின் கவனிப்பின்மையும், ஆசிரியரின் ஆதரவான அணுகுமுறை குறைவதால் குழந்தைகள் மீதான வன்முறை தொடர்கதையாகிறது.


"தேர்வில் தோல்வி. பள்ளி மாணவி தற்கொலை'' -(தினமணி)


குழந்தைகளைப் பேணுதல் என்பது குழந்தைகளைப் பயமுறுத்தலோ அல்லது அடக்கி வைத்தலோ இல்லை. அவர்களுடன் நெருக்கமாகப் பழகுவதன் மூலம் அச்சத்தினையும், அன்பான அறிவுரைகள் கூறுவதன் மூலம் வெறுப்பினையும் போக்க முடியும்.


குழந்தைகள் அச்சமும் வெறுப்புமின்றி மனம்விட்டுப் பெற்றோர்களுடன் கலந்து பழகுகிற சுதந்திரத்தைக் குடும்பத்தினர் வழங்கவேண்டும். ஒவ்வொரு குடும்பத்திலும் இதுபோன்ற அணுகுமுறை உருவானால் ஒரு வன்முறையற்ற வருங்காலம் உருவாகும். தனிமனிதர்களை இணைப்பதுதான் குடும்பம். குடும்பங்களின் இணைவுதான் சமுதாயம் என்கிற வளர்ச்சி நிலையைப் பெறுகிறது.


"ஒவ்வொரு ஆணும், பெண்ணும் தன்னை திருத்திக் கொண்டால் ஒழிய, சமுதாயத்தைத் திருத்த முடியாது. சமுதாயச் சீர்திருத்தத்திற்கும், வளர்ச்சிக்கும், முதல்நிலை தனிமனிதச் சீர்திருத்தமே'' என்கிறார் ச.வே.சுப்ரமணியன்.


பெற்றோர்கள் தங்கள் வாழ்வில் நடக்கும் பிரச்சினைகளை குழந்தைகள் முன்னால் வெளிப்படுத்தும் பொழுது குழந்தைகளின் மனநலம் சீர்கேடு அடைகிறது. குழந்தைகளைக் கொலை செய்யும் சூழல் தாய்க்கோ அல்லது தந்தைக்கோ ஏற்படுகிறது என்பதும் குழந்தைகளின் மீதான வன்முறைப் பதிவுகளே ஆகும். ஒரு நாட்டின் வருங்காலத் தூண்கள் குழந்தைகள் ஆவர் என்ற வரலாறு பெற்றோர்களின் பொறுப்பற்ற செயல்களால் அழிக்கப்படுகின்றது.


"வரதட்சிணைக் கொடுமையால் ஓசூர் அருகே 2 குழந்தைகளைக் கொன்று தாய் தற்கொலை'' என்கிறது ஒரு நாளிதழின் செய்தி. ஒழுங்குமுறையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்து உணர்த்த வேண்டிய ஒரு தாயே இதுபோன்ற சூழ்நிலையை எதிர்கொள்ள முடியாமல் குழந்தைகளைக் கொல்லும் போக்கு சமூக ஆரோக்கியத்திற்கு உகந்தது அல்ல. இதனையே மு.இராசமாணிக்கம் அவர்கள், "ஒவ்வொரு குழந்தையும் ஒரு குடும்பத்தின் உறுப்பினர். எனவே குழந்தைகளுக்குக் குடும்பம்தான் அடிப்படையான சமூகக் குழுவாக இருந்து வருகிறது. குழந்தையின் நடத்தையிலுள்ள பிரச்சினைக்கும், பெற்றோர்களின் நடத்தைக்கும், குழந்தையை அவர்கள் வளர்க்கும் பழக்கத்திற்கும் மிகுந்த தொடர்புகள் உண்டு'' (மு.இராசமாணிக்கம், உளவியல் துறைகள் தொகுதி இரண்டு. பக்-434) என்று தெளிவாகக் கூறுகிறார்.


பாலியல் வன்முறை


சமூகத்தில் பெண்களின் மீதான வன்முறை அதிகரித்து வருவதை ஊடகங்கள் செய்தியாக வெளிப்படுத்தி வருகின்றபோதும், பாலியல் வன்முறை குறித்த நிகழ்வுகள் அதிகரித்தவண்ணமே உள்ளது. பாலியல் வன்முறை என்பது ஆண், பெண்ணின் உடலைத் தன்னுடையதாக்கிக் கொள்ளும் அதிகாரத்தை உள்ளடக்கியது. தந்தை மூலமும், மகன் மூலமும், குடும்பத்தில் ஆண் ஆதிக்க அதிகாரம் தொடர்வதைப்போல சமூக இயங்குதளத்தில் பெண்ணின் உடலை நுகர்வுப் பொருளாக்கி தன்னுடையதாக்கிக் கொள்ளும் வன்முறை நிகழ்த்துதல் தொடர்கின்றது. இதனைக் கீழ்வரும் சான்றுகள் உறுதிப்படுத்துகின்றன.


"எவ்வளவுதான் பொருளாதார சமுதாய, சமய முன்னேற்றம் ஏற்பட்டாலும், எத்துணை நாகரிக வளர்ச்சியில் மனிதன் முன்னேறினாலும் பாலுணர்வைப் பண்படுத்தாத வரை மானுடத்தை அதன் அழிவிலிருந்து காக்க முடியாது'' என்று இர.மானுவேல் கூறுகிறார். (தற்கால தமிழ்ச் சமூக நாவல்களில் பாலுணர்வு, பக்.28)


1. 10 வயது சிறுமி கற்பழித்துப் படுகொலை. கரும்புத் தோட்டத்தில் நிர்வாணமாக கிடந்தாள். இடம் கடலூர்.


2. சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்த முதியவருக்கு 7 ஆண்டு சிறை. சிறுமியின் வயது 11. முதியவரின் வயது 65.


3. போலிஸ்காரரின் 16 வயது மகளைக் கடத்தி மானபங்கம்.


4. சாத்தான்குளம் அருகே பாலியல் பலாத்காரம். சிறுமி கொலை. இளைஞர் கைது.


இதுபோன்ற அன்றாடச் செய்திகளில் காணக் கிடைக்கும் பாலியல் வன்முறைகள் நாளுக்குநாள் அதிகரித்து வருவதற்கு உரிய சமூகப் பின்னணி என்ன என்பதை ஆய்வுக்குட்படுத்த வேண்டும். சமூகம், சாதியத்தாலும், மதத்தாலும் கட்டப்பட்டிருக்கிறது. சாதீயம், மனிதருக்கிடையே அதிகாரத்தையும், அடக்குமுறையையும் உள்ளடக்கி இயங்கி வருகிறது. மதம் சடங்குகளாலும், ஒழுக்கங்களாலும் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. சடங்குகள் ஆண்,பெண் ஆகிய இருவருக்கும் வேறுவேறான விதிமுறைகளை எடுத்துக் கூறுகின்றன. ஆணுக்கான ஒழுக்கத்தை சமூக அங்கீகாரத்திற்கு உரியதாகவும், பெண்ணுக்கான ஒழுக்கத்தைக் கண்காணிப்பதாகவும் இயங்கி வருகிறது. இந்தச் சூழலில்தான் பெண்மீதான பாலியல் ஒழுக்கங்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன. ஆண், பெண்ணைத் தொடும்போது பெண் அடங்கி இருக்க வேண்டும் என்ற பண்பாடு காலந்தோறும் பெண்ணை, பெண்மையை வன்முறைக்கு உட்படுத்துகிறது.


ஊடகங்களின் வழியே அச்சில் ஏறாத பல வன்முறை நிகழ்வுகள் அரங்கேறி இருக்கலாம். இதுபோன்ற செய்திகள் மானிட சமுதாயத்திற்கு ஒரு பெரிய தலைக்குனிவு என்பதை மறுத்துவிட முடியாது.


குழந்தை தொழிலாளர்கள் :


பெற்றோர் சிலர் வருவாய் தேடுவதிலேயே முனைப்பு கொண்டு குழந்தையின் முறையான வளர்ப்பை மறந்து விடுகின்றனர். "காசு கொடுக்கிற பலத்தைவிட அன்பு கொடுக்கிற ஆரோக்கியம் மிகப்பெரியது. அன்பு என்பது ஒருமுகப்பட்ட அக்கறை. அக்கறையின் வெளிப்பாடுதான் அன்பு''.


எனவே ஒரு நாட்டின் வளர்ச்சியில் அக்கறை உள்ள குடும்பத்தினரும், சமூகத்தினரும் குழந்தைகளைச் சரியான திசையில் வளர்க்க வேண்டிய பொறுப்பிற்கு உட்படுகிறார்கள். குழந்தைத் தொழிலாளர் பிரச்சினை ஒழிப்பதில் அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. அரசுப் பள்ளிகளில் வளமான கல்வி வழங்கப்படுதல் தேவையாக இருக்கிறது. வளரும் சமுதாயம் வன்முறையற்ற சமுதாயமாக மாற பெற்றோர், ஆசிரியர், அரசு ஆகிய முப்பிரிவினரும் தீவிர கண்காணிப்பைச் செய்ய வேண்டியவர்களாக இருக்கிறார்கள். பெற்றோரின் பொறுப்பற்ற தன்மையாலும் குழந்தைத் தொழிலாளர் பிரச்சினை உருவாகிறது.


தினசரியில் குழந்தைகளுக்கான பகுதியில் "ஓடி விளையாடு பாப்பா''.....என்ற தலைப்பின்கீழ் வெளியான செய்தி ஒன்று. ஐந்து வயதிலேயே இந்தக் குழந்தைகள் கொலுசு மற்றும் இரும்புப் பட்டறைகளுக்கு அனுப்பப் பட்டுள்ளனர். இவர்களுக்குக் கையெழுத்து போடக்கூட தெரியாது. வாங்கும் சம்பளத்தை எண்ணிப் பார்க்கவும் தெரியவில்லை. இந்தக் கசப்பான உண்மையை எல்லாம் நாம் விழுங்கித்தான் ஆக வேண்டும் என்ற உருக்கமான செய்தியில் இந்தக் குழந்தைக் தொழிலாளர்களின் அவலநிலை நம் எல்லோரையும் விழப்படையச் செய்தல் வேண்டும்.


அரசாங்கமும் இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். சமூகப் பிரச்சினைகளுக்கு மேலோட்டத் தீர்வு காணாமல் நிரந்தரத் தீர்வையும், இளைய சமுதாயத்தை வளமாக உருவாக்கும் மிகப்பெரிய பொறுப்பும் அரசாங்கத்திற்கு இருக்கிறது. இன்றைய இளைய சமுதாயம் போற்றிப் பாதுகாக்க வேண்டிய விஷயத்தை மறுத்துவிட்டுப் பாலுணர்வை அதிகம் தூண்டுகிற தொலைக்காட்சியின் முன்பு பல மணிநேரம் செலவிடுவதை அரசு கவனத்தில் கொள்ளவேண்டும். மாற்று நடவடிக்கைகளை ஆராய்ந்து உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.


ஒவ்வொரு குழந்தையுமே வருங்காலத்தில் மிளிரப்போகும் உயர்வான படைப்பாளிகள். ஆனால், இன்றைய அவசர யுகத்தில் பெரும்பாலான குழந்தைகளுக்கு வெளிச்சமும், விரிந்த உலகமும் பரிச்சயமே இல்லை. இன்றைய கல்விமுறையில் மனப்பாடம் செய்து மதிப்பெண் வாங்குவது என்பதுதான் முக்கியம். வாழ்க்கைத் தரம் உயர்ந்து வாழும் தரம் குறைந்துபோன கீழ்மையான கலாச்சாரத்துக்கு ஆட்படும் சூழலே எங்கும் நிலவி வருகிறது. பொருளாதார அழுத்தத்தால் பெற்றோர் வேலைக்குச் செல்லும் வீடுகளில் உள்ள குழந்தைகளுக்கு ஏற்படும் இழப்பில் ஒன்று சுற்றத்தாரின் அன்பான அரவணைப்பு. குடும்ப எல்லை சுருங்கி தனிக்குடித்தனக் கலாச்சாரம் அரங்கேறியதில் நாம் அடைந்த பெரும் தீங்கு தனிமை. கலாச்சார மாற்றம் எவ்வளவு ஏற்பட்டாலும் அடிப்படையான அன்பும், அரவணைப்பும் எப்போதும் தேவை என்பதை உணர வேண்டும்.


அற்புதமான அறிவியலாளர்களையும், உயர்ந்த கலைஞர்களையும், எதற்கும் அஞ்சாத வீரர்களையும் இந்த உலகுக்குக் கொடுத்தது ஒரு தாயும், தந்தையும் தான். பெற்றோர் சிறந்தவர்களாக இருந்து விட்டால் அந்தக் குடும்பத்தில் வளரும் குழந்தைகளும் சிறந்து விளங்குவார்கள் என்பதில் ஐயமில்லை. பெற்றோர் சிறக்க, சமூகம் சிறப்பாக இயங்க வேண்டும். சமூகம் சிறப்பாக இயங்க அரசு ஆவன செய்தல் வேண்டும்.


நன்றி - பெண்ணியம் - சஞ்சிகை

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்