/* up Facebook

Nov 20, 2009

பல அனுபவம்... சில புரிதல்... - ஒரு பார்வை - கோவை ஞானி


சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு பழைய புத்தகக்கடையில் குறைந்த விலைக்குக் கிடைத்த ‘men, women and morals’ என்ற நூலைப் படித்தபோது முழுஅளவில் பெண்ணின் பார்வையில் சொல்லப்படும் உலகம் பற்றி அறிந்து வியப்புற்றேன். பிரெஞ்சு பெண் ஒருவர் எழுதி ஆங்கில மொழியாக்கம் செய்யப்பட்ட நூல் அது. வியப்பு மேலிட்ட நிலையில் நண்பர்களும் இந்த நூலைப்படிக்க வேண்டுமென்று கடையில் கிடைத்த, 5/6 பிரதிகளையும் நண்பர்களுக்குத் தந்தேன். இந்த நூலைப் படித்த தோழர். எஸ்.என்.நாகராசன் அவர்களும் என்னைப் போலவே வியப்புற்றார். மார்க்சிய, வரலாற்றை ஒரு புதிய வெளிச்சத்தில் நமக்குக் காண்பிப்பதுபோல இந்த நூலும் வரலாறு, அரசாதிக்கம், மதபீடங்கள், பொருளியல் முதலிய அனைத்தையும் முற்றிலும் ஒரு புதிய வெளிச்சத்தில் நம் முன் வைக்கிறது.


வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் பெண்தான் இனக்குழு சமூகத்தின் தலைவியாக இருந்தாள். பின்னர் சமூக நிலவரங்கள் எத்தனையோ மாற்றங்களுக்கு உட்பட்டன. ஆண் தலைமைக்கு வந்த நிலையில்தான் தனியுடைமை, அரசதிகாரம் ஏற்பட்டன. படைக்கருவிகள், போர்கள், எதிரிகளை அழித்தல் என்றெல்லாம் நடைபெற்றன. நாகரிக சமூகம் என்று நாம் சொல்லும் சமூகச்சூழலில் எத்தனையோ நடைமுறைகள்! இவையெல்லாம் பெண்களை ஒடுக்கின. பெண்களின் உழைப்பைச் சுரண்டின. எனினும், பெண்கள் இல்லாமல் இந்தச் சமூகம் வாழமுடியாது. வரலாற்று இயக்கத்தில் இவள் பங்கு இல்லாமல் இல்லை. உடைமை முறை பெண்ணை ஒடுக்கியது. அரசதிகாரமும் மதபீடங்களும் பெண்ணை ஒடுக்கின.


இப்படி ஒடுக்குவதன் மூலம்தான் அவர்களை ஆதிக்க சமூகம் தன் தேவைக்குப் பயன்படுத்திக்கொள்ள முடியும். ஒடுக்கப்பட்ட நிலையில் பெண் அழிந்து போனாளா? இல்லை. பெண்ணை அழிக்கமுடியாது. ஒடுக்கப்பட்ட நிலையிலும் ஆணை பெண் கட்டுப்படுத்த முடியும். குடும்பச் சூழலுக்குள்ளும் வெளியிலும் பெண் கலவரம் செய்யமுடியும். ஆண்களைக் கலங்கவைக்க முடியும். அடிமைகள் என்றும் தங்கள் போர்க்குணத்தை விட்டுவிட மாட்டார்கள். வாய்ப்புக் கிடைக்கும் பொழுதெல்லாம் கலவரங்கள் செய்வார்கள். சமூகத்தை அதிர வைப்பார்கள். பெண்கள் இதைத்தான் காலந்தோறும் செய்து வருகிறார்கள். ஒருவகையில் குடும்பத்தைக் கட்டிக் காப்பவள் பெண். பெண்கள் இல்லாமல் உழவுத் தொழில் மட்டுமல்லாமல் எத்தனையோ சிறு தொழில்களும் நடைபெற முடியாது. ஆண் அதிகாரம் செய்யும்போது பெண் நிதானமாக நடந்து கொள்கிறாள். பெண்தான் யதார்த்தக் சூழலுக்குள் ஆணை நிறுத்துகிறாள். குழந்தை பெற்று வளர்த்து ஆளாக்குபவள் பெண்தான். குழந்தைப்பேறு, வளர்ப்பு, குடும்ப நிர்வாகம் ஆகியவற்றின்மூலம் பெண் எத்தகைய பேராற்றல் உடையவள் என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.பெண்ணின் தாய்மைப் பண்பு ஆழ்ந்த பொருளில் புரிந்துகொள்ளத் தக்கது. பெண்ணின் பார்வையில் வரலாறு, பொருளியல், மதம் முதலியவை புரிந்துகொள்ளப்பட வேண்டும். பெண்ணின் தலைமை நிலைபெற்றிருக்குமானால் இன்று வரையிலான வரலாறும், பொருளியலும், மதமும் எத்தகையனவாக இருந்திருக்குமென்று நாம் சிந்திக்க வேண்டும். பெண் இயற்கையையும் தாயெனப் பேணுவாள். இயற்கையை அழித்து தொழில்கள் வளர்ப்பதைப் பெண்ணால் ஏற்க முடியாது. நீர், நிலம், முதலியவற்றைப் பெண் பேணுவாள். கடுமையாக உழைப்பவள் பெண். ஆகவே, இவளால் எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ள முடியும். பெண் போரை ஏற்கமாட்டாள். பிறரை அழித்துத்தான் நாம் வாழமுடியுமென்று கருதமாட்டாள். ஒருவகையில் பெண்ணுக்கு அழிவில்லை. ஆக்கத்திறன்களுக்கு ஒட்டு மொத்தமான வடிவம் பெண். ஆண் கடவுள்கள்
ஆதிக்கத்திலிருக்கும் மதங்களில்கூட பெண்தான் சக்தி என மதிக்கப்படுகிறாள். பெண்ணை ஒதுக்கிவிட்டு மதபீடத்தில் அமரும் ஆண் செய்வது அழிவு அன்றி வேறில்லை. ஒருவகையில் இயற்கையைப் பெண்ணென்றும் தாயென்றும் போற்றுவதில் தவறில்லை. இந்த இயற்கைக்குத்தான், தாய்மைக்குத் தான் படைப்பாற்றல் உண்டு.


பெண்ணியச் சிந்தனையாளர்களில் ஒருவர் ஜீலியன் கிறித்தவா பெண்ணியம் பற்றி வேறு எவரைக் காட்டிலும் ஆழமாக கருத்துரைப்பவர் இவர். பெண், பெண்மை என்று தொடங்கும் இவர் இறுதியில் படைப்பியக்கத்தையும் தாய்மைப் பண்பையும் ஒன்றெனப் பார்க்கிறார். அப்புறம் இந்தப்பண்பு என்பது பெண்ணுக்கு மட்டும் உரியதன்று. எல்லோருக்கும் எல்லாம் என்ற முறையில் சமூகத்தை மாற்றியமைக்க போராடும் எல்லா மனிதருக்கும் உரியது இந்தப் பண்பு. ஏசு, சாக்ரடீஸ், புத்தர், வள்ளுவர், மார்க்ஸ், லெனின், காந்தி போன்றவர்க்குள் செயல்படுவது இந்தப்பண்பு. இது முழு அளவில் தாய்மைப்பண்பு. முழு அளவில் படைப்பாற்றல் இங்கிருந்துதான் பொங்கும்.


ஒரு கவிஞனுக்குள் செயல்படுவது இந்தப் படைப்பியக்கம்தான். இவன் கருணைமிக்கவன். எல்லாவற்றையும் ஒரு புள்ளியில் வைத்துப் பார்ப்பவன். பிரபஞ்சம், இயற்கை, சமூகம், வாழ்க்கை அனைத்தும் இவனுக்குள் ஒரு புள்ளியில் இயக்கம் பெறுகின்றன. இவன் என்றைக்கும் புதிய மனிதன். இவன்தான் சோசலிச சமூகத்திற்கான வித்து.


மார்க்சியப் பெண்ணியம் என்றும் பெண்ணிய மார்க்சியம் என்றும் முன்பே குறிப்பிட்டேன். சோசலிசப் பெண்ணியம் என்றும் பேசினோம். இதுதான் அசலான பெண்ணியம்.


பெரியாரும் பெண்ணியம் பற்றி பெரும் அக்கறையோடு பேசினார். இத்தனை அக்கறையோடு மார்க்சியர் பெண்ணியம் பற்றிப் பேசவில்லை. நாமாகக் கண்டுபிடித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. பெரியாரும் கருத்தடை பற்றி 1920வாக்கிலேயே பேசினார். நிறையக் குழந்தைகள் பெற்றுப் பெண்கள் துன்புறுவது கண்டு ஆத்திரத்தோடு பேசினார். ஆணின் தேவையை நிறைவேற்றுவதற்காகப் பெண் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதைப் பார்த்து வெறுத்துப் பேசினார். குழந்தைப் பேறில்லை என்றால் மனித இனத்தின் தொடர்ச்சி இல்லை, வரலாறு இல்லை என்பதெல்லாம் உண்மைதான்.


வரலாற்றின் தொடர்ச்சிக்கான இந்தப்பெரும் துன்பத்தைப் பெண் மட்டும்தான் ஏற்றுக்கொள்ள வேண்டுமா? என்பதுதான் பெரியாரின் ஆத்திரத்திற்கான காரணமாக இருக்க முடியும். மனைவி இறந்தபிறகு இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்வதில் ஆணுக்குத் தயக்கமில்லை. பெண் ஏன் தயங்கவேண்டும். இப்படித்தான் பெரியார் சிந்தித்தார்.


பெரியாரின் பெண்ணியச் சிந்தனைகளை தீவிரவாதப் பெண்ணியம் என்று சொல்வது பொருத்தம்தான். பெரியாரின் சிந்தனையை அராஜகவாதம் என்றும் சொல்லமுடியும். ஆனால் பெண்ணடிமைத் தனத்தையோ ஆணடிமைத் தனத்தையோ பெரியார் சிறிதளவும் ஏற்கவில்லை. முதலாளியம் பெண்மீது செலுத்தும் ஒடுக்குமுறையைப் பெரியார் தகர்க்க விரும்பினார். ஆதிக்கத்திற்கு மனிதன் அடிமைப்படுவதைப் பெரியார் வெறுத்தார். சாதி, மதம் முதலியவற்றால் மட்டுமல்லாமல் தேசம், இனம், தனியுடைமை, அரசதிகாரம் முதலியவற்றாலும் மனிதன் தன்மானம் இழந்து அடிமைப்பட்டு வாழ நேர்ந்துள்ளதைப் பெரியார் வெறுத்தார்.
ஆகவே, இவற்றைப் பெரியார் சாடினார். பெரியாருக்குள் கொதிப்பு இருந்தது. கோபம் இருந்தது. கூடவே, பகுத்தறிவு இருந்தது, நேயம் இருந்தது. தொகுத்துப் பார்க்கும்போது பெரியாரின் பெண்ணியம் என்பது எல்லாவற்றையும் உள்ளடக்கிய தாய்மைப்பார்வை. மார்க்சியமும், பெரியாரியமும் இங்கும் நெருங்கிவர முடியும். பெண்ணியம் உலகை உய்விக்கும் தத்துவம் என்று முன்பும் நான் எழுதினேன். இன்றும் இதையே திரும்பச் சொல்கிறேன். படைப்பியக்கம்- தாய்மை-பெண்ணியம்-பெரியாரியம்-மார்க்சியம் இவை நம்மை வாழ்விக்கும்.இடதுசாரி மார்க்சியம்தான் அசலான மார்க்சியம் என்றும், இடதுசாரிப் பெண்ணியம்தான் அசலான பெண்ணியம் என்றும் நாம் முடிவுக்கு வர இயலும். இத்தகைய பெண்ணியம்தான் உலகை உய்விக்கும் மெய்யியல் என்றும் பார்த்தோம். இதுபற்றி மேலும் இங்கு ஒன்றைக் குறிப்பிட வேண்டும். சுதந்திரம் பிரிவுபடாதது என்று மார்க்ஸ் கூறியதை தோழர் எஸ்.என்.நாகராசன் அடிக்கடி குறிப்பிடுவார். பாட்டாளி வர்க்கம் தன் விடுதலைக்காக முதலாளி வர்க்கத்தின் விடுதலைக்கும் சேர்த்துப் பாடுபடவேண்டும் என்றார் மார்க்ஸ். முதலாளி வர்க்கம் தன் பொருளியல் சூழலுக்குள்ளிருந்து தன்னை அது விடுவித்துக் கொள்ள முடியாது. இதே சூழலுக்குள் மாட்டிக் கொண்டிருக்கிற பாட்டாளி வர்க்கம், தனக்கு வேறு வழி எதுவுமில்லாததால் அந்தப் பொருளியல் சூழலை முற்றாக மாற்றித்தீர வேண்டும். அப்படி மாற்றும்பொழுது பாட்டாளி வர்க்கம் தன்னோடு சேர்த்து முதலாளி வர்க்கத்தையும் விடுவிக்கும். சுதந்திரம் பிரிவுபடாதது என்பதன் பொருளை இப்படித்தான் புரிந்துகொள்ள வேண்டும்.


பெண்ணும் அடிமைத்தனத்திலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள வேண்டுமானால் ஆணையும் அவன் அகப்பட்டுக் கொண்டுள்ள அடிமைத்தனத்திலிருந்து, ஆதிக்கத்திலிருந்து அவனை விடுவித்தாக வேண்டும். உடைமை, அரசு, மதம் முதலிய ஆதிக்கங்களைத் தனக்குக்கீழ் உள்ளவர்கள்மீது செயல்படுத்தும் கருவி என்ற முறையில் அந்த ஆதிக்கங்களுக்குள் அகப்பட்டு அவைதரும் சில வசதிகளை அனுபவித்துக் கொண்டு, அவற்றையே தனக்கான இன்பம் என்றும், அவற்றையே தனக்குப்பெருமை என்றும் ஆணவத்தோடும் தோரணையோடும் இருக்கிற ஆண் தானே விரும்பி தன்னைக் கட்டுப்படுத்துகிற அடிமைத்தனத்தை தகர்த்துக்கொள்ள முடியாது. இந்நிலையில் அவனையும் விடுவிக்கும் முறையில், அவனோடும் போராடி அவன் வழியாகச் செயல்படும் ஆதிக்கங்களின்மூலம் எது என அவனுக்கும் சுட்டிக்காட்டி அவனை எதிரியெனக் கருதிக் காயப்படுத்தாமல் அவனையும் தன்னோடு இணைத்துக்கொண்டு ஆதிக்கங்களுக்கெதிரான போராட்டத்தில், விட்டுக் கொடுக்காமல் செயல்பட வேண்டும். பெண்ணின் இத்தகைய தாய்மைப்பண்பு, அதன் ஆழத்தில் போர்க்குணமாக திரளும் என்பதில் ஐயமில்லை. பெண்ணுக்கு இத்தகைய மனவலிமை உண்டு.
பெண்ணைச் சக்தி என மதவாதிகளும் குறிப்பிடுவதை நாம் மறுக்க வேண்டியதில்லை.


ஆதிக்கங்களுக்கு எதிரான போராட்டம் என்றால் என்ன என்பது பற்றியும், எப்படி என்பது பற்றியும் நாம் சிந்திக்க வேண்டும். இயற்கைதான் நம் அனைவருக்கும் தாய் என்ற புரிதலோடு செயல்பட வேண்டும். தொழில் வளர்ச்சி என்ற பெயரால் இயற்கை நாசமாவதை நாம் ஏற்கமுடியாது. உழைப்பிலும், பகிர்விலும் நமக்கு உறுதி வேண்டும். நுகர்வியத்தை எந்த வடிவிலும் நம்மால் ஊக்குவிக்க முடியாது. புறத்தில் மட்டுமல்லாமல் அகத்தினுள்ளும் ஆதிக்கம் செயல்படுவதை நாம் ஏற்கவேண்டாம்.


பதவிக்கும் அதிகாரத்திற்கும் செல்வத்திற்கும் நாம் மரியாதை செய்யமுடியாது. எளிய வாழ்க்கை நமக்குப் போதும். கோடிக்கணக்கான மக்கள் வரலாற்றுக்காலம் முழுவதும் திரட்டிய அறிவும், அனுபவங்களும் கலையுணர்வும் நமக்குள் தங்கியுள்ளன. இவைதான் நம்மை மனிதராக்கின. நம் வாழ்வுக்கு ஒளிதந்தன. கல்வி என்ற வடிவத்தில் நாம் இதைத்தான் கற்கிறோம். உயிர்களை நாம் நேசிக்கிறோம். மலர்களைப்போல குழந்தைகளை நாம் நேசிக்கிறோம். சமூகத்திற்காக ஒட்டு மொத்தமான சமூக மேம்பாட்டுக்காக தன்னலம் துறந்து நாம் உழைக்கிறோம். ஒருவகையில் இதுவும் துறவுநிலைதான். எதிர்காலம் இந்த நிகழ்காலத்திலிருந்து நமக்குள்ளிருந்து உதயமாகிறது. பூமியை, பிரபஞ்சத்தை, நம் வாழ்வை நாம் கொண்டாடுகிறோம்.
இவற்றுக்கெல்லாம் சேர்த்து ஒட்டுமொத்தமாகப் பெண்ணியம் என்று பெயரிடுவதில் தவறில்லை.


இறுதியாக இப்படிக்கூறி இந்தக் கட்டுரையை முடிக்கலாம். முன்பே நான் கூறியபடி ஆணாதிக்கம்தான் நம்மைக் கட்டுப்படுத்துகிறது என்ற புரிதலை மட்டுமே கொண்டுள்ள மகளிர் முதலாளிய எல்லையைக் கடந்து செல்லமுடியாது. இவர்கள் தம்மையே முதன்மைப்படுத்தி, தம் உரிமைகளை முதன்மைப்படுத்தி, தன் உடலை முதன்மைப்படுத்தி பேசத்தான் செய்வர். இவர்களைக் காய்ந்து பயனில்லை. இவர்களையும் நம்மால் புரிந்துகொள்ள முடியும். பெண்ணியம் என்பதன் வகைகளைப் பாகுபடுத்தியும் தரம் பிரித்தும் இவர்கள் பேசிக்கொண்டு இருக்கட்டும். இத்தகைய பெண்ணியத்திலிருந்து நாம் விடுபட்டு நிற்கிறோம்.


ஆணாதிக்கம் பற்றி மட்டுமே பேசிக் கொண்டிராமல் நாம் வாழும் உலகம் பற்றி வரலாறு என்றும் பொருளியல் என்றும் இயற்கை என்றும் பலதிசைப் பார்வை நமக்குத்தேவை விடுதலை என்பது இப்படி பன்முகப் பரிமாணங்களில்தான் உருவாக முடியும். விடுதலையைப் பிறர் நமக்கு வழங்கமாட்டார்கள். விடுதலையை நாம்தான் படைத்துக்கொள்ள வேண்டும். பெண்ணியப் படைப்புக்கள் என்பவை தமிழக/ இந்திய/ உலகச்சூழலில் நம்மை பாதிக்கிற நெருக்கடிகள் அனைத்திற்கும் எதிர்வினை தருவனவாக இருக்கத்தான் வேண்டும்.
ஆணாதிக்கம் என்ற ஒருமுனையில் மட்டும் விடைத்துக் கொண்டிருப்பது நமக்குள் விரிந்த தளத்தில் செயல்படவேண்டிய படைப் பாளுமையைக் குறைக்கும். குறுகிய சூழலுக்குள் நம்மை நாமே சிறைப்படுத்திக் கொள்வதாக இது முடியும்.

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்