/* up Facebook

Nov 6, 2009

நீரளவேதானா நீராம்பல்? சமகால ஈழத்துப் பெண் கவிதை


1986இல் சொல்லாத சேதிகள். அதற்குப்பிறகு 1992இல் புகலிடத்திலிருந்து மறையாத மறுபாதி தொகுப்பு. இவையிரண்டுக்கும் பிற்பாடு ஈழத்தமிழ்க் கவிதைப் பரப்பில் பெண்கள் எடுத்துக்கொண்ட இடம் எத்தகையது என்பது தொடர்பில் விரிவாகவே பேசப்பட்டுள்ளது. இவற்றின் பின்பாகவே ‘பெண்ணின் தன்நிலை‘ வலுவாக பிரக்ஞைக்கும் பிரச்சனைக்கும் உட்படுத்தப்படுகிறது. பெண்ணியம் தொடர்பான விழிப்புணர்வும் அதிகரித்த காலப்பகுதியாக 90களை சொல்லலாம்.


மேற்குறித்த கவிதைத் தொகுப்புகளில் உள்ள கவிதைப்பிரதிகள் கவிதைகள் தானா? இவை உண்மையாகவே பெண்ணிய அரசியலை பேசுகிற பிரதிகள் தானா? இப்படியான கேள்விகள் ஒருபுறமிருக்க, இத்தொகுப்புகள் முன்னெப்போதுமில்லாத விதத்தில் பெண்ணின் தனித்துவமிக்க குரலை ஈழத்துக் கவிதை வெளிக்குள் ஒலிக்கும் வகை செய்தவை என்பதை மறுக்கவியலாது. சிவரமணி, செல்வி போன்றோரின் கவிதைச்செயற்பாடுகள் இன்னமும் கூட ‘தூக்கியெறியப்பட முடியாத கேள்விகள்‘ தான். 90களில் சிவரமணி கவிதைகள் தொகுப்பாக்கப்பட்டன. அதேபோல் வானதி, தூயவள் ஓன்ற போராளிப்பெண்கவிகளது கவிதைகளும் தொகுப்பு வடிவையடைந்தன. 95இல் சுல்பிகாவின் ‘விலங்கிடப்பட்ட மானுடம்‘ தொகுதி வெளிவந்தது. 90களின் பிற்கூற்றில் ‘உயிர்வெளி‘ ‘கனல்‘ தொகுதிகள் வெளியிடப்பட்டன. இவை தவிர பெண் எழுத்து 90களில் எவ்வாறிருந்தது என்பதற்கான ஆவணங்கள் இல்லை. இக்காலப்பகுதியில் வெளிவந்த சிறுபத்திரிகைகள்/மாற்றுப்பத்திரிகைகள் அனைத்துமே பெண்களால் எழுதப்படும் கவிதை/புனை பிரதிகளுக்கு முக்கியத்துவமளித்து வெளியிட்டன. 90களின் முற்கூற்றில் ‘திசை‘ பத்திரிகை வழியாக மைதிலி அறிமுகமாகிறார். பின்பு சரிநிகர், பூவரசு, மூன்றாவது மனிதன், நோக்கு போன்றவற்றில் பெண்ணியா, கலா, ஔவை, ஆழியாள் ஆகியோர் எழுதினர். தாயகம் இதழும் சில பெண் கவிதைகளை பிரசுரித்திருக்கிறது.


2000மாம் ஆண்டின் பின்னரே அதிகளவு பெண் கவிதைத்தொகுப்புகள் வெளி வந்தன. ‘எழுதாத உன் கவிதை‘ தொகுப்பு நூல், ஆழியாளின் ‘உரத்துப்பேச‘ (மறு.2000) ‘துவிதம்‘ (மறு.2005), ஒளவையின் ‘எல்லை கடத்தல்‘ (மூன்றாவது மனிதன்.2000), மைதிலியின் ‘இரவில் சலனமற்றுக் கரையும் மனிதர்கள்‘ (காலச்சுவடு.2003), அனாரின் ‘ஓவியம் வரையாத தூரிகை‘ (மூன்றாவ்து மனிதன்.2004), ரஞ்சினி கவிதைகள் (உயிர்மை.2005) பெண்ணியாவின் ‘என் கவிதைக்கு எதிர்த்தல் என்று தலைப்பு வை‘ (ஊடறு.2006) என்பன முக்கியமான கவிதைப்பிரதிக் குழுமங்கள். 2000த்திற்கு பின்னர் மூன்றாவது மனிதன், வெளிச்சம் இதழிலும் உயிர்நிழல், அற்றம் போன்ற புகலிட சஞ்சிகைகளிலும் அதிகளவில் பெண் கவிகள் இயங்கினார்கள். ஊடறு இரண்டு தொகுப்பு நூல்களில் பல கவிதைகள் இடம் பெற்றிருந்தன. புகலிடத் தொகுப்புகள் (இன்னுமொரு காலடி, கண்ணில் தெரியுது வானம்) பலவற்றிலும் பெண்களது கவிதைகள் இருந்தன. வீரகேசரி ‘உயிர் எழுத்து‘ பகுதியும் பெண்கள் பலரது கவிதைகளை பிரசுரித்து ஊக்குவித்தது. ஆகர்ஷியா, பிரதீபா, ரி.உருத்திரா, தான்யா, பஹீமா ஜகான், விநோதினி (அநந்திதா), எஸ்.கார்த்திகா, சித்தி றபீக்கா, துர்க்கா, தில்லை, மலரா, ராசு போன்றவர்கள் இக்காலப்பகுதியில் அச்சு ஊடகங்கள் வாயிலாக அறியப்பட்டவர்கள். இணையத்தளங்கள், வலைப்பதிவுகள் வாயிலாக அறிமுகமானோரில் முதலிடம் கற்பகம் யசோதரவுக்கும் (மூன்றாவது மனிதனிலும் சில கவிதைகள் பிரசுரமாயுள்ளன) ‘ரேகுப்தி‘ நிவேதாவுக்கும் உரியது.


2000க்குப் பின்னான ஈழத்துப் பெண்கவிதைப் பரப்பில் பாடுபொருளின் தீவிரம், பெண்ணிய அரசியலையும் கவிதையியலையும் புரிந்து கொண்டமை, பயில் புலத்தின் வடக்கு மையம் அகன்று போதல், முஸ்லிம்/புகலிட அனுபவங்கள் கவிதை வெளிக்குள் வருதல் எனச் சில சாதகமான அம்சங்களை பட்டியலிட முடியும்.


சமூகத்தில் தமது நிலை, தாம் ஒடுக்கப்பட்டவர்களாயிருக்கிறோம் என்பது குறித்த புரிதல் மேற்குறித்த பெண் கவிகள் அனைவரிடமும் உண்டு.ஆயினும், ‘பெண் எழுத்து‘ என்ற வகைமையை அடிப்படையாகக் கொண்டு பார்க்கையில், ஈழத்துப் பெண்கவிதையின் போதாமைகள் இலகுவில் புலப்படும். இதுவரையான ஈழத்துப்பெண்கவிதை பெற்று வந்த விமர்சனங்கள் இந்த நிலைக்கு முக்கிய காரணம். ‘பெண்‘ என்பதற்காகவே முன்னுரிமையும் முற்சாய்வும், அணுகல் முறையில் ஒருவித பரிதாபமும் சேர்ந்து விடுகிறது. சிவசேகரம், மு.பொ, மதுசூதனன் என அனைத்து தரப்பினரதும் பலவீனம் இதுதான். ‘பெண்‘ அதிலும் ‘ஈழத்துப் பெண்‘ என்று வருகையில் ‘கவிதை‘ ‘கோட்பாடு‘ எல்லாம் இரண்டாம் மூன்றாம் பட்சமாகி விடுகிறது. இந்த பண்பை தீவிர இடதுசாரி விமர்சகரான சி.சிவசேகரம் ‘சொல்லாத சேதிகள்‘ ‘மறையாத மறுபாதி‘ இரண்டுக்கும் செய்த விமர்சனப் பிரதிகளில் காண முடியும். விமர்சனம் என்பது மிஞ்சிப்போனால் கவிதையியல்/மொழிப்பிரயோகம் சார்ந்ததாக மாத்திரம் தன்னை மட்டிறுத்திக் கொள்கிறது. இவற்றையொட்டியே சி.சிவசேகரத்தின் ஏற்பும் மறுப்பும் அமைந்து விடுவதை துல்லியமாய்க் காண இயலும். குறித்த க்விதைப் பிரதிக் குழுமங்கள் கோரி நின்ற அரசியல் வாசிப்புகளை சிவசேகரமோ அல்லது அக்காலப்பகுதியில் தாமும் கதைத்தாய் நினைப்பவர்களோ செய்யவில்லை. இதன் காரணமாகத்தான், சிவரமணியையொத்த இன்னொருத்தரை இன்றளவும் ஈழத்துக் கவிதைப் பரப்பு சந்திக்கவேயில்லை.

ஈழத்துப் பெண் கவிதைகளில் சிறப்பாக குறித்துச் சொல்லப்பட வேண்டியது ஆயுத வன்முறைக்கெதிராக அக்கவிதைகளில் எழுந்துகொண்டேயிருக்கும் ஈனக்குரலிலான ஓலமும் எதிர்ப்பு மறுப்பும் தான். ஆன்கவிகள் வன்முறையை உவந்தேற்றுப் பாடுபவர்களாக இருந்த காலப்பகுதிகளிலேயே சிவரமணி, மைதிலி, ஔவை போன்றோர் அதை மறுத்துரைப்போராய் இருந்தனர். வன்முறைக்கெதிரான தாயின் அநாதைகுரலாய் இவர்களது கவிதைகள் ஒலித்தன.


பெண்ணாக போரை, வன்முறையை பதிவு செய்வதில் கலாவும் கற்பகம் யசோதரவும் முக்கியமானவர்கள். கலாவின் கோணேஸ்வரிகள் ஏற்படுத்திய அதிர்வுகளை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். கற்பகம் யசோதர வன்முறையின் அவலமிக்க தருணமொன்றை பின்வருமாறு கவிதையாக்குகிறார்;


// அந்தரா, ரூபி, மித்தாலியா..
தூரத்தில் என் பிள்ளைகள் கதறின…
தூக்கி குறிபார்த்து கல்லை
எறிய - கூடிருந்து சிதறிட
பறவைகள் . கலைந்து…
(ஓ… ஒரு நாயைப் போல கிடந்தாய்)
சேர்ட் பட்டன்கள்
அறுந்து விழுந்து
திறந்த நெஞ்ச மயிர்களில்
சிதறி இரத்தம் -
இன்னும் பிளந்தால்
நெஞ்சு வெடித்துக் கதறும்
என் பிள்ளைகள் இருப்பார்கள்//

கவிதைக்கான தனிமொழியென தமிழில் கற்பிக்கப்பட்டு வந்ததை சிதிலப்படுத்தி நேரடியாக புலம்புகிற/ எடுத்துச்சொல்கிற தொனியில் அதிர வைக்கும் கற்பகம் யசோதர வன்முறைக்குள் பெண்ணாக இருத்தலின் பதிவுகளை கவிதையாக்குவதில் முதன்மையானவர். கலா அரசியல் சரிபிழைகளுக்குள் குறுகி நின்றுவிட கற்பகம் யசோதர எல்லாவற்றையும் புறக்கணித்து இயங்குகிறார். கழிவிரக்கத்தையும் கையாலாகாத உணர்வையும் இன்னும் என்னென்னவோ அந்தரமிக்க உணர்வுகளையும் தொற்றச்செய்து விடும் கவிதைகள் முதன்முறையாக ஈழத்துக் கவிதையில் யாசோதரவிடமிருந்து மட்டுமே கிடைக்கின்றன. ‘யுத்தத்தை நிறுத்தியிருந்த போது…‘ கவிதையில்;


//பதுக்கப்பட்டு
கடந்த வதைகளின் தடங் காட்ட
வன்மங் கொண்டு நிற்கிறது
யுத்த காலம்!
இப்படித்தான் தன் துணையிழந்து
இங்கே ஒரு பெட்டை நாய்
தனது குட்டிகளை வளர்க்க
உங்கள் விசர் தீர்க்க
தனது குறியை
“இருக்கிறதும் கிழிய“ விட்டபோது
அத்
தீராக் கிடங்கில் விழுந்து
எழுந்த
ஒருத்தன் சுட்டான்
எக்களிப்புடன்.


வெட்கங் கெட்டவன்கள்
ஆண் குறியைக் பிடித்துத் தொடர்ச்சியாய்
தம் பத்திரிக்கைகளில் அடித்தார்கள்:
“தெரு நாய் கொலை!“
ஆனால் அருகிருந்து கதறிய பிள்ளைகள் அழுதது
திசையறியா ஓர் எதிர்காலத்தின் மீதாக.
அவை அழுதன,அழுதன, தொடர்ந்து அழுதன!//
என்கிறார்.


knives & collapses i இல் யுத்தத்தினுள் பெண்ணாயிருத்தலை கச்சிதமாக படம் பிடித்துக் காட்டுகிறார்;


//அவளிடம் யாரும் சொன்னார் இல்லை
வெடுக் வெடுக்கென நடக்கும் கோழிபோல
உள்ளுணர்வுகளில் அனர்த்தம் வெடுக்கென நீட்ட
கைப்பிள்ளையோடு
ஒரு விசரியாய் ஓடினாள் அவள்
(அந்தரா அப்போ உனக்கு வயது நான்கு)
உணர்வுகள் கணமும் காயம் பீரிட்டு வெளிப்பட நிக்கும்
அவளிடம் சொல்ல
யாரும் துணிந்தாரில்லை
வயிற்றலடித்து அழுதாள் அம்மையின் அம்மா
ஐயோ.. என்ர பிள்ளைக்கு இப்பிடி ஆனதே
என்ர பிள்ளைக்கு இப்பிடி ஆனதே
வன்னிக் காடே உனக்கு நினைவிருந்திருக்கும்
குடா நாட்டுக் கடல்களே உங்களுக்கு நினைவிருந்திருக்கும்
ஒரு கறிக்குதவா மரக்கறியாய்
உணர்ச்சியற்ற மரமாக
‘வழங்காத‘ உடலாக ஏனும்..ஏனும்
‘உயிருடன்‘ கடவுளே
அவனைத் திருப்பித் தா
திருப்பித் தா
- என அவள் கதறிய கதறலை//

கலா, கற்பகம் யசோதர ஆகியோருக்கு அடுத்து அனாரை சொல்ல முடியும். ‘மேலும் சில இரத்தக் குறிப்புகள்‘ என்ற அவரது கவிதை இந்த வைகையில் முக்கியமானது,


//சித்திரவதை முகாம்களின்
இரத்தக் கறைபடிந்திருக்கும் சுவர்களில்
மன்றாடும் மனிதாத்மாவின் உணர்வுகள்
தண்டனைகளின் உக்கிரத்தில்
தெறித்துச் சிதறியிருக்கின்றன
வன்மத்தின் இரத்த வாடை
வேட்டையின் இரத்த நெடி
வெறிபிடித்த தெருக்களில் உறையும் அதே இரத்தம்
கல்லறைகளில் கசிந்து காய்ந்திருக்கும் அதே இரத்தம்
சாவின் தடயமாய்
என்னைப் பின் தொடர்ந்து கொண்டே இருக்கிறது//

கலா, கற்பகம் யசோதர, அனார் போல இல்லவிடினும் கூட வன்முறைக்கெதிரான குரல் என்பது பிற பெண்களிடமும் உள்ளது தான். இப்படியான உதாரணங்களை ஒவ்வொருத்தரிடமிருந்தும் பெற்றுத் தர முடியும். போராளி கவியான அம்புலி கூட வன்முறைக்கெதிரான தனது உணர்வுகளை எழுதியிருக்கிறார். அம்புலியின் ‘நான் எப்போதும் மரணிக்கவில்லை‘ கவிதை இவ்வாறு தொடங்குகிறது.


//குண்டு மழைக்குளிப்பில்
குருதியுறைந்த வீதிகளில்
நிணவாடை கலந்த சுவாசிப்புகளில்
வெறுப்படைகிறேன்//


இந்த ஒரு அம்சமே ஈழத்துப் பெண் கவிதைகளுக்கு முக்கியத்துவத்தை வழங்குகிறது. இப்படியான அம்சங்கள் ஏற்படுத்தும் மனக்கிளர்வையும் முற்சாய்வையும் நீக்கி விட்டு இக்கவிதைகளை வாசிப்புச் செய்ய வேண்டும்.

இவர்கள் கவிஞர்கள் தான் என்பதில் எனக்கு மறுப்புக்களோ சந்தேகங்களோ இல்லை. அடையாளச்சிக்கல், பின் காலனித்துவம் என்றெல்லாம் புத்திபூர்வமான வாசிப்புகளை கோரும் கவிதைகள் ஆழியாளிடம் உண்டு.(துவிதம் தொகுப்பு) ஹனீபா சொன்னது போல கவிதையை அசையும் ஓவியச்சீலையென மாற்றும் திறமை பஹீமா ஜகானின் (ஒரு கடல் நீரூற்றி…) மொழிக்கு உண்டு. ஆயினும் தமது கவிதைக்குள் எந்தளவு தூரம் ‘பெண்களாய்‘ இவர்கள் இருக்கிறார்கள்?


பெண் மொழி பற்றி தமிழில் விவாதிப்போரில் முன்னணியில் இருக்கும் மாலதி மைத்ரி எழுதுவதைப் பாருங்கள்;


“பெண் மொழி என்று கவிதையில் தனியாக அடையாளப்படுத்த சில தெளிவுகளும் அதற்கான கோட்பாடும் உருவாக வேண்டியிருக்கிறது. பெண் பாலுறுப்பை குறிக்கும் கவிதைகளை பயன்படுத்தினால் பெண் மொழி உருவாகி விடாது. பெண் மொழி என்பது அரசியல். பெண்ணிருப்பை பற்றியும் பெண் உடல் பற்றியும் சமூக குடும்ப நிறுவன வெளிகளில் உருவாக்கப்பட்டுள்ள அவளுக்கெதிரான கருத்தாக்கங்களையும் மதிப்பீடுகளையும் சிதைத்து அவற்றின் வன்முறைக்கெதிராக குரலெழுப்புவதுதான் பெண்ணின் மாற்று அரசியல். ஆண்மைய மொழிக் கலாசாரத்தின் அகப்புற வெளி எல்லைகளை மீறி மொழிக்குள் இயங்குவதன் மூலம் பெண் மொழியை உருவாக்க முடியும். காலங்காலமாக சுமத்தப்பட்ட நிர்ப்பந்திக்கப்பட்ட கருத்தியல் வன்கொடுமைகளுக்கு எதிராக அரசியல் கவிதைகள் தமிழில் அதிகம் உருவாகும் போதுதான் பெண்மொழி/பெண்ணிய மொழி சாத்தியமாகும்‘ (விடுதலையை எழுதுதல். காலச்சுவடு ப.12)


தம்து எழுத்துக்குள் உருவாகவேண்டிய இந்த அரசியல் போர்க்குணத்தை, அதன் வரலாற்று நிர்ப்பந்தத்தை ஆழமாக பல ஈழப்பெண்கவிகள் உணரவில்லை. உணர்ந்த ஒரு சிலர் ஆண் எதிர்ப்பு பிரகடனங்கள், அறிவுரைகள், துறவு என முடங்குகிறார்கள். உணர்ந்தவர்களில் வேறு சிலர் அந்த அரசியலுக்கு முரணாகவும் இயங்குவதைக் காணலாம்.


தனது கவிதை வெளிப்பாட்டு மொழியிலும் உத்திகள் படிமங்களிலும் அபாரமாக வளர்ச்சியடைந்து வரும் அனாரின் ‘நிறங்களாலானவனைக் காத்திருக்கிறேன்‘ கவிதை தனக்கு உவப்பானவனை கவிதை வெளிக்குள் உருவாக்கிப் பார்க்க முனைந்து தோற்றுப் போய் காவியக் காத்திருப்பை மேற்கொள்கிறது. பெண்ணியா கண்ணீர்த்துளிகளுடன் எல்லாம் வெறுத்து சன்னியாசினியாகி விடுகிறார். இடைக்கிடை பிரகடனங்கள் செய்து கொள்வது அவரது ஸ்ரைல்.


சித்தி ரபீக்கா, ராசு ஆகியோர் பெண்ணாக அனுபவிப்பவற்றை அரசியல் பிரதிகளாக மாற்ற முனைவதேயில்லை. இவர்களது கவிதைகள் வெறுமனே புலம்பல்களாக எஞ்சிப்போய் விடுகின்றன. தில்லையின் கவிதைகள் இப்புலம்பலில் இருந்து சற்று மேல் நகர்வது போல் தோன்றினாலும் கூட திரும்பவும் யதார்த்த வட்டத்துள் வந்து வீழ்கிறது. அன்னா அஹ்மதோவாவின் கவிதையியல் பற்றி விரிவாக பேசும் ராசு பெண்ணிய அரசியலையே மறுக்கும் விதமாக ஆணை மட்டுமன்றி அவனது வன்முறையையும் சேர்த்தே உவந்தேற்றுப் பாடுகிறார்.


எ.கா;
‘நண்ப
என் ஆதர்ஸ நண்ப
அலையோடு அள்ளி
கதைகளை எறிந்த
உன் மௌனம்
உலக மொழிகளுள் சிறந்தது‘


பெண்ணியா ஆணை நோக்கிய விழைவைப் பாடுதலை சினிமாத்தனமான படிமங்களுடனும் சோகத்துடனும் செய்கிறார். எனினும் கூட பெண்ணிய பிரக்ஞையுடன் அவர் வெளியிடும் கவிதைப் பிரகடனங்களில் சில வலிமையாக இருப்பதை மறுக்கவியலாது;


//என் பயணம் ஆரம்பித்தாயிற்று
முடிவுகளற்ற இலக்கை நோக்கி
தனித்தாயினும் பயணிப்பதே இயன்றவரை
என் சிறகுகளின் மீது நீளும்
எல்லா கைகளுக்கெதிராகவும்
என் கனவுகளின் மீது
கொடூரங்களை வரைய நீளும்
எல்லா தூரிகைகளுக்கெதிராகவும்//

ஆனாலும் கூட இந்தவகைப் பிரகடனம் 80களுக்குரியது, காலவழக்கொழிந்தது என்பதை சொல்ல வேண்டியுள்ளது. பெண்ணியா காலவழக்கொழிந்த பிரகடனங்களை மீறி நகராமல் இருப்பது அவரது பலவீனம். இதை விட பெண்ணியாவை குறித்து இன்னுமொன்று; தானே நான்கு விதங்களில் விளிம்பாக்கப்பட்டவராய் இருந்து கொண்டு(முஸ்லிம்-தமிழ்-இஸ்லாமிய-பெண்) ‘நான் உன்னதம், உங்களில் ஒருத்தியில்லை‘ என்றெல்லாம் இறுமாப்பு கொள்ள இயலுமாகிறது;


//தோற்கடிக்கப் படலாமென உணர்ந்தும்
நான் போரிடுகின்றேன்
உங்களுள் ஒருத்தியாய் அல்ல
ஓர் உன்னதப் பிறவியாய்//

அறிவுஜீவித்தனமானவையாகவும் கோட்பாட்டு ரீதியான அணுகல் முறை கொண்டவையாகவும் பார்க்கப் படக்கூடிய கவிதைகளைத் தந்த ஆழியாளின் கவிதைகள் பெண்ணிய அரசியல் நோக்கில் பெறும் வீழ்ச்சி துயரமானது. ‘பறத்தல் அதன் சுதந்திரம்‘ தொகுப்பாளர்களான பெண்ணியர்களுடன் கூட சமரசத்தை விரும்பாத ஆழியாள் தனது ஒடுக்குமுறையாளனுடன் பண்ணிக் கொள்கிற சமரசம் சிரிப்பை வரவழைப்பது;


//நீயும் நானும்
வரையறைகளைக் கடக்கவேண்டும் - நான்,
உன் விவேகத்தோடும்
நீ என் வீரியத்தோடும்
கடக்கவெண்டும்.
எனினும்
என் கருவறையை
நிறைப்பது உன் குறியல்ல
என்ற புரிதலோடு
வா!


ஒன்றாய்க் கடப்போம்.
நீ என் விவேகத்தோடும்


நான் உன் வீரியத்தோடும்// (‘தடைதாண்டி‘ உரத்துப்பேச தொகுப்பு)


அவனது ஒடுக்கு முறையை உணர்ந்து கொண்டதன் பின்போ என்னவோ சண்டை இடுகிறார்;


//இத்தனைக்குப் பின்னும் பெண் போகமா உமக்கு
போக்கிடமே இல்லையா அவளுக்கு?// (உரத்துப் பேச)
பின்னர் நிலையுணர்ந்து…


//ஆளுமை கண்டால் ஆட்டக்காவடி என்பீர்
அஞ்சி ஒடுங்கிவிட்டால் அசல் குத்துவிளக்கு என்பீர் - அந்த
வெள்ளிடிதான் உம்வாயில்


விரைந்தோடி வீழாதோ?// (உரத்துப் பேச)

என சபிக்கிறார். இவ்வளவு தான் ‘உரத்துப் பேச‘ தொகுப்பில் ஆழியாள் எனும் பெண் கவிஞர் செய்வது.புலம்பலும் சபித்தலும் திட்டலும் பிறிதொரு சமயம் சமரசம் செய்தலுமாய் இவர்களது கவிதைப் பரப்பு நிரம்புகிறது. தொகுத்துப் பார்த்தால் இந்தப் பெண் கவிகள் சாடலும் ஊடலும் கூடலுமாய் கணவ்ன் காலடியில் கிடக்கும் தமிழ்ப் பெண்டாட்டி வகைமாதிரிகளே தவிர வேறில்லை.இந்த மென்போக்கு பெண்கவிகளின் கிணற்றுத்தவளைத் தனத்தில் இருந்து வேறுபட்ட கவிதை வெளியை, தமக்கான அரசியலை உருவாக்க முனைவோராக ஒரு சிலரையே சொல்லலாம். கலா, கற்பகம் யசோதர மற்றும் மைதிலி ஆகியோர் குறிப்பிட்டுச் சொல்லப்படக் கூடிய முன்னுதாரணங்கள்.


கலாவின் சர்ச்சைக்குள்ளான ‘கோணேஸ்வரிகள்‘ கவிதையை சிங்களXதமிழ் முரணைப் பின்புலமாகக் கொண்டு அணுகுவது தவிர்க்க முடியாதது தான் என்றாலும் ஆண்Xபெண் முரண்பாட்டில் சிக்கற்பாடான பெண்ணிய வெளிப்படுகையாகவும் கூட அதை வாசித்துப் பார்க்கலாம். அப்படிக் கொள்ளப்படுமாகில் அக்கவிதை ஏற்படுத்தும் அர்த்த விரிவுகள் எல்லையற்றவை. தனியே சிங்கள இன ஒடுக்குமுறைக்கான அரசியல் எதிர்ப்பு பிரதியாக மாத்திரமன்றி பெண்ணிய அரசியல் பிரதியாகவும் உள்ளது. ‘இக்கவிதையில் கையாளப்படும் யோனி எனும் குறியீடு படைப்பின் அதி உச்ச சாத்தியப்பாட்டை புலப்படுத்தி நிற்பதாக‘ கூறுகிறார் சி.ரமேஷ் (காண்க. ஈழத்து நவீன கவிதையில் பெண் புனைவு. சி.ரமேஷ். தெரிதல்)


-


மைதிலியின் கவிதைப் பரப்புக்குள் ஆண் பலமான தாக்குதலுக்காளாகிறான். வெளிப்படையாகவே சொல்லப்போனால் மைதிலியின் கவிதைகள் ஒடுக்குமுறையாளனை Castrate செய்ய முயற்சிப்பவை. தனது நிலையை உணர்ந்து கொண்ட விதத்தை இவ்வாறு எழுதுகிறார் மைதிலி;


//குறும்பும் சிரிப்பும் கொண்டவளாய்
கனத்த மார்புகளுடையவளாய்
நேசிக்கப் படுகிறேன் நான்.//


இதற்கான எதிர்ப்புணர்வு ஆதங்கமிக்க கேள்வியாய் வெளிப்படுகிறது;


//யோனி முலைகளற்ற பெண்ணை
யாரும் காதல் கொள்வாரா?//


தன் ஒடுக்குமுறையாளனின் போலி வேஷங்களையும் ஒடுக்குமுறையின் நுண்ணிய உத்திகளையும் புரிந்து கொள்கிறார் மைதிலி. அவற்றை அவரால் இனங்கண்டு நிராகரிக்கவும் முடிகிறது;


//கலங்குகின்றன உன் விழிகள்
தலையை வருடுகின்றன கரங்கள்
இது ஒன்றும் விசேடமானதல்ல எனக்கு
நீ நடக்கிற பாதையில்
ஒரு மரத்தைக் கடக்கிறாய்
அவ்வளவேதான்//


வெகு இயல்பாக மிகவும் அழுத்தமாக தான் அவனைப் பொறுத்தவரை ஒரு பொருள் மாத்திரமே என்பதை சொல்கிறார்.


//அவன் தனது பேனாவால்
தாள்களில் கிறுக்குவது போல
தனக்குரிய சீப்பால்


தலையை அழுத்தி வாரிக் கொள்வது போல
தாடியைச் சீவுகிற சவரக் கத்தியை
கவனமாக கையாள்வதைப் போல
எல்லாம் முடிந்து
அமைதியாய் தூங்குகிறான் அருகே
என் இத்தனை நாளைய
காதலும் கனிவும்
இதந்தரு மென்னுணர்வுகளும்
பொங்கியெழுந்த குறியின் முன்
ஒழுகிக் கிடக்கிறது
கட்டிலின் கீழே//


இவ்வாறு ஆணை நிராகரித்து வரும் மைதிலி ஆண்குறியின் உன்னத Filler பிம்பத்தை உடைத்து castrate செய்து விடும் இடம் இது;


//கோபம்
உன் குறியை


சூம்ப வைத்து விடுகிறது// (பக்62. இரவில் சலனமற்றுக் கரையும் மனிதர்கள்)மூன்றாவது மனிதன் இதழ்கள் சிலதிலும் பெரும்பாலும் இணையத்திலும் எழுதும் கற்பகம் யசோதர, போரின் அவலம், பெயர்தல், அகதியாக்கப்படல், வன்முறை, பெண்ணாயிருத்தல் என தனது கவிதை வெளியை உற்பவிக்கிறார். இவருடைய கவிதை மொழி தமிழுக்கு முற்றிலும் புதியது. வித்தியாசமான அதிர்வுகளை தரக்கூடிய நேரடி முன்நிலை விபரிப்பு பெரும்பாலான கவிதைகளில் பயன்படுத்தப் படுகிறது. பெண்ணிய அரசியல் மாத்திரமன்றி ஈழதேசப்போராட்டத்தையும் அதன் உடன்நிகழ்வுகளையும் பாடுபொருளாக்கும் யசோதர ஆண்களின் அரசியல்/சமூக/போராட்ட களங்களில் பெண்ணாக வலியற்றிருப்பதன் அசாத்தியங்களைப் பேசுகிறார். தாய்மை, நேசம், மென்னுணர்வுகள் பொங்கும் பெண்ணொருத்தி வன்முறைக்குள் இயக்கமடையும் விதங்களை எழுதும் வல்லமை யசோதரவுக்கு அபரிமிதமாக கைகூடி வந்திருக்கிறது.


//சைக்கிளை மிதித்துக் கொண்டு
பிரதேசத்தின் வயல் வெளிகளில்
இன்னுமொரு கொலைநாளில்
ஓர் இன்னுமொரு கொலைநாளில்
உல்லாசமான பாடல்களின் சீட்டியடிப்புகளின்றி
வதைமுகாம்கள்
இராணுவ முகாம்கள்
சோதனைச் சாவடிகள் ஊடு
முகமூடி“யாரோ”
எதிர்ப்படும் நொடி வரையில்
இரண்டு சகாப்தங்களாய்
யாராலோ கொல்லப்படுவதற்காகவே
காலங்கள் சுழலும்
இத் தெருக்களில்
போய்க் கொண்டிருக்கிறேன்//


ஔவை போன்றவர்களின் போலித்தனங்கள் நீங்கி அதீத பின்நவீன யாதார்த்தப் பாங்கில் நகரும் வரிகள்.மொழியின் அர்த்தம், தொடர்ச்சி அற்றுப்போக ஒரு ஓப்பாரியைப் போல அல்லது இடப்பெயர்வின் நடுவே அந்தரமிக்க துக்க விசாரிப்பை போல ஒலிப்பவை இவை;


//எம் பால்யத்தின் ஓலைவீடு மழைக் காற்றில்
அடிஅடிப்பதை விடவும்,
மயிரிழையில் ஆடும் நம்பிக்கையில்
அச்சங்களிற்கு அப்பால்
எதை நோக்கிச் செல்கிறீர்கள்?
கோணமலையிருந்து புறப்பட்ட குடும்பமொன்று
இடைவழியில்
படகு மூழ்கி
தன் பிள்ளையைப் பறிகொடுத்த
தகப்பனின் கதறலோ
கரைகளை அடையவில்லை
கொந்தளித்த அலைகளுள் சிறு குரலோ எழும்பவில்லை
நட்சத்திரங்கள் கொட்டியில்லாத கரைகளில்
பாதங்கள் படிகிற போதினில்
(என் அன்பே, நண்பனே)


உமைத் தோய்ந்திருந்த குருதி
கழுவுப்பட்டு இருப்பதாக,
குரல்வளையைப் பிடித்திருந்த கொடும் கரங்கள்
இங்கும் நீட்டப்படா திருப்பதாக,
கிராமத்து தேவாலயங்களில் தஞ்சமடைந்த
பிள்ளைகளை


“அவர்கள்” கொன்று போட்ட குருதி
வற்றிப் போக முன்னார,
அரசியலேதுமற்ற ஓர் அப்பாவிக் குடிமகனும்
“போகுது சவம்” என
”தட்டப்படும்” உயிர் குறித்த கரிசனைகளுள்,
அவனும் இவனும் போவ வர சுட்டுச் சுட்டுப்
போனவர்கள் விட்டுச் சென்ற கண்ணீர்…//


என்னதான் அன்பு பாசம் நேசம் தாய்மை என்று சொன்னாலும் ஆண் உலகின் வன்முறை மீது யசோதர அளவு கடந்த வெறுப்பை உமிழ்கிறார். ஆண் அரசியல் தான் அனைவரையும் ஆட்சி செய்கிறது என்பது தொடர்பில் யசோதர தெளிவாயிருக்கிறார். எழுதும் பெண்களுக்கு முதலாவது தணிக்கையாளனாய் இருக்கும் அறப்பொறுப்புணர்வில் இருந்து விடுபட்டு ஆண் அரசியல் மீது கீழ்வரும் விமர்சன வரிகளை எழுதுகிறார்;


//உன் தேச நலனிற்காய் நீ பிற இனத்தவரை ஓள
அனுப்பப்பட்டிருக்கிறாய்//
//யோனிகளைப் பிளப்பதற்கான பத்திரத்துடன்
ஆக்கிரமித்த நிலப் பெண்களின் காதலர்களின்
குறிகளை வெட்டும் அனுமதியுடன்
தவிரவும் சித்ரவதைக் கூடங்களிற்கான திறப்புகளுடன்;
துப்பறியும் பொலிஸ்காரர் கட்டை அவிழ்த்து
சாவை முகர்ந்துவர விடப் படும்
நாயினது துரிதத்துடன்
பார், பார் நகரின் அரசியல் தலைவர் அனுப்பிய
குண்டர் கொட்டாந் தடியுடன்
எதற்கும் தயாராக! ஜீப் ஜீப்பாய் தொங்கிக் கொண்டு//

//வெட்கங் கெட்டவன்கள்
ஆண் குறியைக் பிடித்துத் தொடர்ச்சியாய்
தம் பத்திரிக்கைகளில் அடித்தார்கள்//

தனது நிலை தொடர்பான புரிதலுடன் ஆத்திரத்தை முன்வைத்து தனது அன்பு, நேசம், காதல் காமம் எல்லாம் வீணாய்ப்போய் விட்டதான ஆத்திரத்துடன் மாற்றுப்பாலியல் (சுயபுணர்வு, லெஸ்பியன்) சார்ந்து நகரும் உந்துதலும் யசோதர கவிதைகளில் உண்டு;


//தெருவோரம் நின்று
சிறிதளவு அன்பிற்காய்
மண்டியிட்டிருந்தவள் நான்.
இன்றோ-
நான் யார் யாரோ
நினைப்பிற்கும் “ஆட”ப் பிறக்காத்
தாடகை சிறாம்பி!
கடவுளின் ஒரு பகுதி;
அல்லது நானே கடவுள்.
இத் தற் பிரேமங்கள் குறித்து
எதுவும் பேசாதே -


என்றைக்கோ
எனக்கான முத்தங்களைக்
காற்று விழுங்கிவிட்டது
என்னை என்னால்(க்) கை
விட முடியாது முடியவில்லை//
//தலை தேய்த்துத் தோயவிட்ட தோழி


நாம் பேச ஒன்றுமற்றுப் போய்விட்டது
(தோழியைப் புணரு)

பெருஞ்சாலைகளில் துணை வருகிற ரத்த உறவானவளிடம்
உதட்டின் சுவை உணரக் கேட்கத் தயக்கம்
(அவளைப்… //


கற்பகம் யசோதரவின் கவிதைகளில் சில வலிமையான Allusionகளைக் கொண்டவை. புத்திபூர்வமான வாசிப்பிற்கு உட்படுத்தப்பட வேண்டியவை. கற்பகம்.யசோதரவின் Knives & Collapses ii கவிதையை வாசிப்பதற்கு முன்னர் ஒருவர் Frida Khaloவின் Broken Column ஓவியத்துடனும் ஆன் செக்ஸ்டனுடனும் தன்னை பரிச்சயப்படுத்திக் கொள்வதவசியம்.மேற்குறித்த மூன்று பெண்கவிகளிடமும் தென்படும் வலிமையான அரசியலையும் கவித்துவத்தையும் சாதிக்கக் கூடியவர்கள் என்று சிலரைக் கூற முடியும். இருண்மை மிக்க அலூஷன்களுடன் கவிதையெழுதும் பிரதீபா, கவிதையியல் தொடர்பில் நிறைந்த அறிவுடனிருக்கும் ஆழியாள், பூடகமானதும் வலிமையானதுமான படிமங்கள் நிரம்பிய கவிதைகளைத் தரும் தான்யா, அன்றாட வாழ்வில் இருந்து சாதாரண படிமங்களை கோர்ப்பதனூடாக வித்தியாசமான வாசிப்பனுபவத்தைத் தரும் ஆகர்ஷியா, தனது முதலாவது தொகுப்பின் பிரகடன தொனியில் இருந்து விடுபட்டு முன்நகரும் அனார், புணர்வின் அதிருப்தி/ஜமேய்க்க காதலன் என தடைகளற்றுப் பாடும் ரஞ்சனி, மனோரதியமாகவெனினும் வெளிப்படையாக எழுதும் நிவேதா, என்போர் நம்பிக்கையளிக்கிறார்கள்.


பஹீமா ஜகான், தில்லை, ஔவை, பெண்ணியா, மலரா, சித்தி ரபீக்கா, ராசு, என நீளும் இதர பெண் கவிகள், தமது அன்றாட வாழ்வியல் நெருக்கடிகளுக்கூடாகவும் கவிதை/எழுத்து என இயங்குவதற்காய் முக்கியத்துவமளிக்கப் பட வேண்டியவர்கள் தான் என்ற போதும் விமர்சிக்கப் பட வேண்டியவர்களே. இவர்களது கவிதைகள் சராசரி வாசிப்பாளருக்கு அருட்டுணர்வையும் பாதிப்பையும் தருகிற போதும் ‘எழுத்து‘ பெண்ணிடம் கோரி நிற்கிற விடயங்களை பூர்த்தி செய்வதாயில்லை.


ஆணாதிக்கத்திலிருந்து மட்டுமன்றி தாமே உருவாக்கி வைத்திருக்கும் வரம்புகள், கட்டுகள், சினிமாத்தனங்களிலிருந்து விடுபடுகிற போது இவர்கள் செல்லக்கூடிய தூரம் அதிகம்.


கவிதை வெளி விரிந்து பரந்து கொண்டேயிருக்கிறது. அதற்குள் பெண்ணின் தனித்துவமிக்க குரலை செப்பமாக ஒலிக்கச்செய்பவர்களுக்காக இன்னமும் காத்திருக்க வேண்டித்தான் இருக்கிறது.


(நன்றி - முரண்வெளி)

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்