/* up Facebook

Nov 3, 2009

பணிப்பெண்கள்: "நவீன கொத்தடிமைகள்" - தில்லை


பெண்களுக்கெதிரான அடக்குமுறைகள் பல்வேறுபட்ட வடிவங்களில் அதிகரித்துள்ள நூற்றாண்டில் நாம் நிற்கின்றோம். பெண்களில் சுமத்தப்பட்டுள்ள இரட்டைச்சுமை நவ உலகமயமாக்கலின் பின் மேலும் அதிகரித்திருப்பதை நாம் கண்முன் கண்டுவருகிறோம். சுரண்டல்.., சுரண்டல்.., சுரண்டல்...


குவைத்தில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய இலங்கையைச் சேர்ந்த தமிழ்ப் பெண் இந்தியாவிலிருந்து இலங்கை செல்ல மறுத்திருக்கிறார். அவர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ஓருவரை குவைத்தில் காதலித்திருக்கிறார். அந்த இளைஞர் குவைத்தில் இருந்து ஆந்திரா திரும்பியவர் மீண்டும் குவைத் செல்லவில்லை. இதைத் தொடர்ந்து அந்த இளைஞரை தேடிக் கொண்டு குவைத்தில் இருந்து அந்தப் பெண் 2 ஆண்டுக்கு முன்பு ஆந்திரா சென்றுள்ளார்.


அப்போது குடியுரிமை அதிகாரிகள் அவரை சோதனை செய்த போது அவரிடமிருந்தது போலி பாஸ்போர்ட் என தெரியவந்துள்ளது. இதற்கு அவருக்கு 3ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இவரது நன்னடத்தை காரணமாக 2 வருடத்தில் அவரை நீதிமன்றம் விடுதலை செய்தது. உடனடியாக இலங்கை செல்ல அவசரசான்றிதழ் வழங்க உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவுப்படி அப்பெண்ணை இலங்கை அனுப்பி வைக்க ஆந்திர போலீசார் சென்னை வந்தனர். அவருக்கு இலங்கை செல்ல டிக்கெட் ஏற்பாடுசெய்யப்பட்டு இருந்தது. இவர் விமான நிலையத்துக்கு உள்ளே சென்று விமானத்தில் ஏறிய பின்னர் அவசர சான்றிதழை கிழித்து விட்டார். இதனால் விமானத்தில் இருந்து அவரை அதிகாரிகள் இறக்கி விட்டனர். இதையடுத்து அவர் மீண்டும் இலங்கைச் செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஆந்திர போலீசார் செய்து வருகின்றனர். அண்மையில் இணையத்தளங்களில் வெளிவந்தது இந்தச் செய்தி.


இந்த நிலையில் வெளிநாடுகளில் பணிபுரியும் உழைப்பாளிப் பெண்களின் பிரச்சனைகள் குறித்தும் அவற்றின் பின்புலம் குறித்தும் மேலோட்டமாக பார்ப்பது இப்பெண்ணின் நிலைபற்றி ஓரளவு அறிய உதவும். கடந்தகாலங்களில் இவ்வாறான பெண்களின் நிலைமைகளைக் கண்டும் கேட்டும் அவர்களுடனான வேலைத்திட்டங்களில் பணியாற்றியவள் என்ற வகையில் இவ்வாறான செய்திகளின் பின்னணியில் உள்ள ஆழத்தை நன்றாக உணர முடிகிறது.


கடந்தகால யுத்தமானது உறவினர்கள், வீடு வாசல், சொத்துச் சுகங்கள், ஆகியனவற்றை இழந்த பெண்கள் சமூகத்தையே உருவாக்கியுள்ளது. யுத்தம் ஆண்களை இழந்த குடும்பங்கள் பலவற்றை நாடுமுழுவதும் உருவாக்கியிருக்கிற போதிலும் பெண்களே இவ்வனைத்துக்குமான அவலத்தைச் சுமப்பவர்களாக உள்ளனர். அதிலும் பெரும்பாலானோர் தமிழ்ப்பெண்கள் ஆவார். இவர்களில் எல்லைப்புற கிராமங்களைச் சேர்ந்த தமிழ்ப் பெண்களே அதிகளவு அல்லல்படும் நிலைமைகளுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இந்த நிலைமைகளுக்கு யுத்தத்தில் ஈடுபட்ட இருதரப்பினருமே பொறுப்புச் சொல்ல வேண்டும். பெருந்தொகையினரான இளைஞர்களும் யுவதிகளும் ஆண்களும் எல்லைப்புற கிராமங்களில் தான் அதிகளவு பாதிக்கப்பட்டனர் என்பது மனங்கொள்ளப்பட வேண்டியது


இவ்வாறான குடும்பங்களைச் சேர்ந்த ஆண்களும் பெண்களும் ஆட்சேர்ப்பு பீதியின் காரணமாக சிறு வயதிலேயே திருமணம் செய்துகொள்பவர்களாகவும், வருமானத்திற்கு மேலதிகமாகக் குழந்தை பெற்றுக் கொள்ளும் நிலைமைகளுக்கும் ஆளாகினர்.


இவ்வாறு குடும்பத்தில் தனது தந்தையையோ, கணவனையோ சகோதரனையோ பறிகொடுத்த அதிகளவான பெண்கள் உள்நாட்டில் கூலி வேலை செய்து குடும்பச் சுமையைச் சுமப்பவர்களாகவே பெருமளவு வாழ்கின்றனர். இவர்கள் தமது சொந்த இடங்களில் தொழில் செய்ய முடியாத நிலைமையும், ஒரு நேர உணவிற்கும் வழியில்லாமல் தமது குழந்தைகளையும், குடும்பத்தையும் பேணும் பொறுப்பும் பெண்களிடம் சுமையாக்கிவிட்டிருந்தது. ஆண்களும் கூடத் தமது சுய தொழில்களான விவசாயம், மீன்பிடி, மற்றும் கூலித்தொழில்கள், மேசன் வேலை போன்றன செய்யமுடியாத சூழலுக்குள் தள்ளப்பட்டனர். ஆண்கள் வெளியே செல்லுவதில் பீதி நிலவியது. பெரும்பாலான குடும்பங்கள் சொந்த இடங்களையும் உறவுகளையும் இழந்து அகதி முகாம்களில் தொடர்ந்து தங்கி வாழும் நிலைமை ஏற்பட்டது. இவ்வாறான நிலைமைகளே பெண்களை வெளிநாடு சென்று உழைக்கத் தூண்டின.


வறுமையும், அடக்குமுறையும், எந்தவிதமான கேள்வியையும் கேட்க அனுமதிப்பதில்லை


இந்தப் பெண்களின் வறுமையை வெளிநாட்டு முகவர் நிலையங்களும் , தரகர்களும் மிகவும் இலகுவாகவே பயன்படுத்தினர். வறுமையும், அடக்குமுறையும் எந்தவிதமான கேள்வியையும் கேட்க அனுமதிப்பதில்லை. இவ்வாறு கடந்த காலங்களில் வெளிநாடு சென்ற பெண்களின் பிரச்சனைகள் இன்றுவரை தீவரமடைந்து செல்வதற்கு யுத்தமும் வறுமையுமே காரணமாகியது.


தமது குடும்பங்கள் துன்பப்படுவதையும் அவலப்படுவதையும் கண்களால் பார்க்க முடியாத இந்தப் பெண்கள் தமது முகவரியைக் கூட எழுதத்தெரியாத அதிகமான பெண்கள் "பணிப்பெண்களாக" பதிவுசெய்யப்படாமலேயே அனுப்பப்பட்ட கொடுமைகளும் அரங்கேறின. அவ்வாறான பெண்கள் குவைத்திலும், யோர்தாதானிலும் அதிகளவினராக அநாதரவான நிலையில் கைவிடப்பட்ட செய்திகள் கடந்த காலங்களில் மனதை உருக்கும் செய்தியாக பரபரப்பாகப் பேசப்பட்டன. இந்தப்பெண்கள் பலரிடம் பணமோ, பாஸ்போர்ட்டோ, விசாவோ எதுவும் இருக்கவில்லை, என்பதுடன் இவர்கள் தாங்கள் வேலைக்கு அமர்த்தப்பட்ட வீட்டுக்காரர்களினால் பெருமளவு சித்திரவதைகளுக்கும் பாலியல் துன்புறுத்தல்களுக்கும் ஆளாக்கப்பட்டமை எமது பெண்களின் அவலத்தை இன்னும் தீவிரப்படுத்தின.இவ்வாறான பெண்களின் அறியாமையாலும், வறுமையாலும் தாங்கள் எங்கு கொண்டு செல்லப்படுகிறோம், எந்த வேலை, எவ்வளவு நேர வேலை, ஒதுக்கப்பட்ட ஓய்வு நேரம், அவர்களுக்கான தொழில்காப்புறுதி, எதுவுமே அறிவிக்கப்படாது ஆசைகாட்டப்பட்டு தரகர்களால் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதிசெய்யப்படுகிறார்கள். பெண்களின் அறியாமையும், வறுமையின் விளைவாக அவர்களின் பொறுமையும், விட்டுக்கொடுப்பும், வெளிநாட்டுத் தொழிற்தருனர்களால் பெண்கள் அதிகம் சுரண்டப்படுவதற்கு வாய்ப்பாக அமைந்ததோடு அதிகம் வேலைவாங்கவும், சம்பளம் வழங்காது ஏமாற்றவும், அதிகளவு கொடுமைப்படுத்தவும், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவதற்கும் சாதகமாக இருந்தது.
இவ்வாறன பெண்களை வெளிநாட்டுக்கு அனுப்பும் முகவர்கள் பலர் உரிய முறையில் இவர்களை அனுப்பாததாலேயே இந்நிலைமை மேலும் தீவிரமடையக் காரணமாயிற்று.


வெளிநாட்டுக்கு உழைக்கச்சென்ற பெண்களின் நிலை இவ்வாறு இருக்க உள்ளூரில் அவளின் குடும்பம் அதைவிட மோசமடைந்த நிலைமைளும் உண்டு. குறிப்பாக வடக்கு கிழக்கு பகுதிகளில் கைதுக்கு ஆளாதல், காணாமல்போதல், காயத்திற்குள்ளாதல், உளநிலை பாதிப்படைதல் ஆட்கடத்தல் ,குழந்தைகள் கல்விகற்கமுடியாத நிலைமை, தற்கொலை, மரணம், கணவன் வேறு திருமணம் செய்தல், என துயரங்களின் பட்டியல் இன்று வரை நீள்கின்றது. பெண்களை இந்நிலைமைக்கு ஆளாக்கிய யுத்தமும் வறுமையும் இன்னும் இன்னும் அப்பெண்களின் கழுத்தையே குறிபார்க்கிறது.


இலங்கை அரசாங்கம் அன்னியச்செலவாணியைப் பெருக்குவதற்கான சிறந்த உத்தியாக இவ்வாறாக வறுமைப்பட்ட பெண்களைப் பெரும் தொழிற்படையினராக சவுதி அரேபியா, குவைத், கட்டார் சைப்பிரஸ், சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுக்கு அனுப்புகின்ற போதிலும் அவ்வாறு நாடுகளில் வேலை செய்வோரின் நலனில் அக்கறையும் கவனமும் செலுத்தும் செயற்பாடுகளைச் சரிவர நடைமுறைப்படுத்தாத நிலையே இன்றுவரை நீடித்து வருகின்றது. வெளிநாட்டுத் தூதரகங்கள், கொழும்பு புலம்பெயர்சேவைகள் நிலையம், வெளிநாட்டு வேலையாட்களுக்கான செயற்பாட்டு வலையமைப்பு (ACTFORM) வெளிநாட்டுச் சேவை நிலையம் சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் அரசசார்பற்ற நிறுவனங்கள் என இப்பெண்களின் பிரச்சனைகளைக் கவனத்தில் கொள்வதற்காக அமைக்கப்பட்ட நிறுவனங்களென அரசு கூறியபோதிலும், அவை வெறும் மேற்பூச்சுக்கான உத்திகளே என்பது இப்பெண்கள் பற்றிய தினசரிச் செய்திகள் உறுதிப்படுத்திவருகின்றன.


வெளிநாடுகளில் பணிபுரிகின்ற பெரும்பாலான பெண்கள் வீட்டுப்பணிப் பெண்களாகவே தொழில் புரிந்து வருகின்றனர்.இவ்வாறான பெண்கள் தொடர்ந்தும் உழைப்புச் சுரண்டல், உடற்சுரண்டல், உளச்சுரண்டல் மற்றும் பாதுகாப்பின்மை போன்ற பிரச்சனைகளை எதிர் நோக்க வேண்டியவர்களாகவே இருக்கின்றனர். இவர்களுக்கு முழுமையான ஈடேற்றம் கிடைக்காவிட்டாலும் அவர்களுக்குச் சாதகமான நிலைமைகளைத் தோற்றுவிக்கக் கூடிய நிலைமைகளையாவது கவனத்தில் கொள்வது அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை வெளிக்கொணர்வதற்கும் சம்பந்தப்பட்டவர்களை அவை குறித்து அக்கறைகொள்ளச்செய்ய உதவியாக இருக்கும். இப்பெண்களின் நிலைமைகளைக் புரிந்து கொண்டு இவற்றுக்கு பொறுப்பான அனைத்து நிறுவனங்களும் நாட்டின் பொருளாதாரச் செழிப்புக்கும் சமூக மற்றும் குடும்ப நலன்களுக்கும் கடுமையாக உழைக்கும் பெண்களின் உரிமைகளை அங்கீகரித்து, அவர்களுக்குச் சட்டப் பாதுகாப்பையும் சமூக அங்கீகாரத்தையும் வழங்க முன்வரவேண்டும்.


நமது நாட்டில் தற்போது நிலவுகின்ற சமூக யதார்த்தத்தைப் புரிந்து கொண்டு உள்ளூரில் கணவனையிழந்த பெண்களின் பொருளாதார நலன்களையும், பணிப்பெண்களின் சமூக அந்தஸ்த்தையும், கெளரவத்தையும் வழங்குவதற்கு அனைவரும் அவர்களுக்கு ஒத்துழைப்பும், ஊக்குவிப்பும், உற்சாகமும் கொடுக்க வேண்டிய பொறுப்புடையவர்களாகச் செயற்படவேண்டியுள்ளது.ஆண்டாண்டு காலமாகச் சமூகத்தில் இருந்து வரும் நடைமுறையானது குடும்ப பொறுப்புகளைச் சுமக்க வேண்டியவர்கள் பெண்களே என்கிற எதிர்பார்ப்பை நிலைநிறுத்தியுள்ளது. இருந்த போதிலும் எமது நாட்டு யுத்தம் கடந்த காலங்களில் மிக அதிகளவான தமிழ்ப் பெண்களை பொருளாதார பலமற்றவர்களாக நலமடித்து அவர்களை வெளிநாட்டுப் பணிப்பெண்களாக்கி மிகப்பெரிய அவல நிலைமைக்குத் தள்ளியுள்ளது.


இவ்வாறான ஒரு சூழ்நிலையில் வீட்டிலுள்ள ஆண்கள் குடும்பப் பொறுப்பையும் பராமரிப்பையும் மேற்கொள்வது தமது சமூக பால்நிலை ரீதியான மேலாதிக்கத்திற்கு இழுக்கானது எனக் கருதுகின்றனர். இந்தப் பொறுப்பற்ற பொருத்தமற்ற யதார்த்தமற்ற கற்பனை காரணமாக குடும்பத்திலும் சமூகத்திலும் புதிய புதிய அவலங்கள் உருவாகின்றது.


எனவே இவ்வாறான குடும்பங்களைச் சேர்ந்த ஆண்கள் சமகால யதார்த்தத்தைப் புரிந்து கொண்டு தமது சமூகப் பால்நிலைப்பட்ட மேலாதிக்க கருத்துக்களைத் தவிர்த்து நடைமுறைக்குச் சாத்தியமான நிலைப்பாடுகளை மேற்கொள்வார்களானால் குடும்ப சமூக அவலங்களைத் தவிர்க்கக் கூடியதாக இருக்கும்.


மேற்குறிப்பிட்ட பெண் சுரண்டலுக்கு உள்ளாக்கப்பட்டு வரும் பல லட்சக்கான பெண்களில் ஓருத்தி மட்டும்தான். இது வெறும் தனிநபர் பிரச்சினை மட்டுமல்ல. ஆணாதிக்கம், சுரண்டல் என்பன சமூகத்தின் தற்காலிகப் பிரச்சினையல்லவே. அது நிரந்தரப் பிரச்சினை. அதற்கான தீர்வும் நிரந்தரமாவே அமையும் போது மட்டுமே விடுதலையை அனைவரும் அனுபவிக்கலாம். பெண்ணின் விடுதலையிலேயே ஆண்களின் விடுதலையும் தங்கியிருக்கிறது என்பதில் யாருக்கு சந்தேகம்...?

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்