/* up Facebook

Apr 12, 2019

34 வது பெண்கள் சந்திப்பு நெதர்லாந்தில்


34 வது பெண்கள் சந்திப்பு நடைபெறும் விலாசம் மாற்றப்பட்டுள்ளது என்பதைக் கவனத்திற் கொள்ளவும். பெண்கள் சந்திப்பில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் தம்மை முன்கூட்டியே பதிவு செய்யும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். தங்குமிடவசதி தேவைப்படுபவர்கள் அழைப்பிதளிலுள்ளத் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளவும். விமானத்தில் வருபவர்கள் Amsterdam விமானநிலையத்தில் வந்திறங்கி மூன்றாவது மேடையிலிருந்து Amersfoort நோக்கி புறப்படும் ரெயிலில் ஏறி இறுதித்தரிப்பிடமான Amersfoortல் இறங்கவும். புகையிரதத்தில் வருபவர்கள் Amersfoortல் அல்லது Utrecht ல் வந்திறங்கவும். அங்கிருந்து 0031(0) 618944970 என்ற இலக்கத்துடன் தொடர்புகொண்டால் உங்களைத் தங்குமிடத்திற்கு அல்லது மண்டபத்திற்கு அழைத்துச்செல்லப்படும்.

ஏனேய தொடர்புகளிற்கு:
Thresita Anthony 0031 0684102168 / 0031 (0) 687116387
...மேலும்

Mar 7, 2019

பெண்களுக்கு ரயிலில் தனிப்பெட்டி : பால்வாத (Sexist) முடிவு!


 2019 - சர்வதேச பெண்கள் தினத்தையொட்டி இலங்கை அரசு ரயிலில் பெண்களுக்கான தனிப்பெட்டியை அறிமுகம் செய்து வைக்கிறது. இது பால் சமத்துவத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக மேலும் அசமத்துவத்தை ஊக்குவிக்கும் ஒன்றாக ஆகப் போகிறது என்பதை தெளிவாக உணர்த்துகிறது. அது குறித்து ஞாயிறு தினகரன் வார மஞ்சரியில் வெளிவந்த  சில பெண் செயற்பாட்டளர்களின் கருத்துக்களை இங்கே பதிவு செய்கிறோம்.

ரயிலில் தனிப்பெட்டி ஒதுக்கப்படுவது தொடர்பில் சமூக ஆர்வலர்கள் வழங்கிய கருத்துக்களை இங்கே தொகுத்து தருகிறோம்

ஏற்பதா? மறுப்பதா?

அமைச்சர் அர்ஜூன ரணதுங்க வியாங்கொடை ரயில் நிலையத்தை மேற்பார்வை செய்வதற்காக அண்​ைமயில் சென்றிருந்தார். அங்கு அவர் ஊடகங்களுக்கு தெரிவித்த அதிரடி அறிவிப்பு இன்று பெண்கள் மத்தியில் சமூகத்தில் பேசு பொருளாக்கப்பட்டுள்ளது. இதை சில பெண்கள் வரவேற்றாலும் எம்மால் இதை ஏற்க முடியாதுள்ளது. அவரின் இவ் அறிவிப்பானது எமக்கு வேறு ஒரு கோணத்தின் சிந்தனையை தூண்டுகிறது. 'நாங்கள் அப்படித்தான் செய்வோம்'. நீங்கள் தனியாக செல்லுங்கள்்' என்ற ஆணாதிக்க அடக்குமுறை ஒளிக்கப்பட்ட கருத்தாக இதனை நோக்க வேண்டியுள்ளது. பெண்கள் செல்வதற்கு ரயிலில் தனி பெட்டி ஒதுக்குவது பெண்களுக்கு வழங்கும் உரிமையாக எப்படி கருத முடியும்? பெண்களுக்கு பொது போக்குவரத்தில் பாலியல் சீண்டல்கள் முடிவிலியாக தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இவ்வாறான தீர்வுகளினால் அச் செயற்பாடுகளை முற்று முழுதாக ஒழிப்பது எவ்வகையில் சாத்தியப்படும் என்ற நடைமுறை சாத்தியமான சிந்தனைக்கு அப்பாற்பட்டே இருக்கிறது. பெண்களை தனி பெட்டியில் செல்ல அனுமதித்தால் பாலியல் சீண்டல் குறையும் என்று அமைச்சர் எவ்வாறு ஊகித்தார் என்று எமக்கு விளங்கவில்லை. அமைச்சரும் ஓர் ஆண் என்ற நோக்கில் அவரின் கருத்தை பார்க்க வேண்டியுள்ளது. ஆணாதிக்க அதிகார வர்க்கம் ஏதோ எங்களுக்காக பாவப்பட்டு இச் சலுகைகளை வழங்கியதா? இதை எவ்வாறு எங்களுக்கான உரிமை என்று ஏற்றுக் கொள்வது? நாங்கள் கேட்பது சமத்துவம் அன்றி தனித்துவம் அல்ல. ஆண், பெண் சமநிலையே எமக்கான நிரந்தர உரிமையாகும். இதில் ஆண் பெண் வேறுபடுத்தலால் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை எவ்வாறு ஒழிக்க முடியும். பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டலுக்கு ஏன் சட்டங்களை நடைமுறைப்படுத்த முடியாது?
பொதுப் போக்குவரத்துகளில் பாலியல் சீண்டலில் ஈடுபடுவது பெரும் குற்றமாகும். அதற்கு எதிராக சட்ட நடவடிக்ைக எடுக்கலாம் என்று பிரசுரங்கள் ஒட்டப்பட்டிருந்தாலும் கூட எங்காவது அதற்கு எதிரான சட்ட நடவடிக்ைக எடுக்கப்பட்டதா என்று கேட்டால் இல்லை என்றே சொல்லலாம். சட்டங்கள் வெறுமனே அறிவிப்பு பலகைகளில் மட்டுமே உள்ளது.
முதலில் பொது போக்குவரத்துகளில் பெண்களுக்ெகதிராக நடக்கும் பாலியல் சீண்டல்களை எவ்வாறு தடுப்பது அதற்குரிய சட்ட நடவடிக்ைககளை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது போன்றவற்றுக்கு தீர்வு காணாமல் பெண்களை தனிமைப்படுத்துவதால் மட்டும் ஆண்களின் மனதிலுள்ள வன்மத்தை அழிக்க முடியாது. ஆண்களின் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சிகளின் முன்னேற்றம் காண்பதே பாலியல் சீண்டலுக்கான நிரந்தர தீர்வாகும் என நாம் கருதுகிறோம்.

பத்மா சோமகாந்தன் (எழுத்தாளர்)

நீண்டகாலமாக பெண்களுக்கு தங்களுக்கான பிரத்தியேக வசதி வாய்ப்புக்கள் கிடைக்கவில்லையே என்ற ஓர் ஏக்கம் இருந்தது. அதனால் பல போராட்டங்கள், கருத்து முரண்பாடுகள் நிலவின.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் அமைச்சர் அர்ஜூனவின் அறிவிப்பு வரவேற்கக் கூடியது. கல்வியில் முன்னோக்கி நகர்ந்த பெண்கள் வேலை வாய்ப்புகளுக்கு செல்வதால் சமுதாயத்தில் பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.

பெண்கள் தனியே செல்லும் சந்தர்ப்பங்கள் இன்று எற்பட்டுள்ளதால் ஆண்களினால் ஏற்படுகின்ற பாலியல் சீண்டல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.

இவற்றை நோக்கும் போது 'பெண்களுக்கான தனியான ரயில் பெட்டி ஒதுக்கீடு' வயதான பெண்கள், நோயாளர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகளுடன் செல்லும் பெண்கள் ஆகியோருக்கு பேருதவியாக அமையும். மகளிருக்கு மாத்திரம் தனியே ரயில் பெட்டி என்பதை வரப்பிரசாதம் என்றே குறிப்பிடலாம்.

இருப்பினும், எல்லா விடயங்களிலும் சமத்துவம் தேவை என்று நாம் குரல் கொடுக்கிறோம். ஆனால் பெண்களுக்கு மாத்திரம் தனியான ஒதுக்கீடு எதற்கு.

இவ் விடயம் எம்மை ஒதுக்கி வைப்பது போல் அல்லவா தோன்றுகிறது? காலம் காலமாக பெண்கள் ஒடுக்கப்படுகிறார்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்று போராடினோம். இச் சூழலில் இவ்வாறான தனிமைப்படுத்தல்கள் ஏன் என்பதுவும் நியாயமான கேள்வி தான்.

அதற்கான பதில் என்ன? பெண்களும் ஓர் உயிருள்ள இனம், அவர்களுக்கும் வாழ்வதற்கு உரிமை இருக்கின்றது.

பொது போக்குவரத்தில் பெண்களை சமத்துவமாக பராமரிக்க வேண்டும் என்ற எண்ணங்கள் சமுதாயத்தில் தற்போது குறைந்து போனதால் தான் இந் நடவடிக்கைகள் எடுக்க காரணமாக அமைந்துள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் ஆண்-, பெண் வேறுபாடுகள் கிடையாது. வேறுப்படுத்தும் சிந்தனைகள் களையப்பட வேண்டும்.

பிரத்தியேக ஒதுக்கீடுகளால் பெண்களின் பிரச்சினைகளை தீர்க்க முடியாது.

குற்றம் புரிபவர்களுக்கு கடுமையான தண்டனை விதிப்பதால் மட்டுமே குற்றங்களை குறைக்கலாம் என்பது எனது வாதமாகும்.


பேராசிரியர் அ. மங்கை இந்தியா அரங்கியல் செயற்பாட்டாளர்

இலங்கையை பொறுத்தவரை 'பெண்களின் பாதுகாப்பு கருதி' இத்திட்டத்தை கொண்டு வருகின்றார்கள் என்றால், ஆண்கள் மோசமானவர்கள் என்று அவர்களே அவர்களின் பிழையை ஏற்றுக் கொள்கின்றார்கள் என்று தான் அர்த்தம்.

அதனால் தான் பெண்களுக்கு பாதுகாப்பு தர வேண்டும் என்றால் அவர்களை ஒதுக்கி வைக்க சொல்கிறார்கள்.

அந்த தர்க்கத்தை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது. சமூக ரீதியில் கருத்தை அடிப்படையாக வைத்து கேட்க வேண்டும் என்பது தான் எங்களுடைய கோரிக்கையாக இருந்தது.

70களில் பெண்கள் அமைப்புகள் வைத்த கோரிக்கைகளில் ஒன்று தான் பொது வெளிகளில் பெண்களுக்கான தனி இருக்கைகள் கொடுக்க வேண்டும் என்பது.

பெண்ணியத்தினுடைய ஓர் அம்சம் சமூக நீதி என்கின்ற கருத்தில் சாதிய ரீதியாக, பாலின ரீதியாக நீங்கள் பல காலம் ஒதுக்கி வைத்ததை மாற்ற வேண்டும் என்றால் எடுத்த எடுப்பில் சமமாக முடியாது.

அதற்கான ஒரு சூழலை நீங்கள் உருவாக்கித் தர வேண்டும் என்பதற்கான வாதத்தை தான் முன் வைத்தார்கள். அது இன்று வரை தொடர்கிறது.

மும்பாயில் முழுக்க முழுக்க பெண்களுக்கான விசேட ரயில் சேவை இருக்கின்றது. மாலை நேரத்தில் அலுவலகத்தில் இருந்து செல்வதற்கு பெண்களுக்கென்றே தனி ரயில் ஒதுக்கப்பட்டுள்ளது.

அது மட்டுமல்லாது, இன்றும் எல்லாவற்றிலும் பெண்களுக்கான பிரத்தியேக பயிற்சியாளர்கள் இருக்கின்றார்கள். இத் திட்டம் இந்தியாவில் சகல இடங்களிலும் இருக்கின்றது.

இலங்கையை பொறுத்தவரை தனி ரயில் பெட்டி ஒரு விதத்தில் பெண்களுக்கு பாதுகாப்பை தர கூடியது தான்.ஆனால் சமத்துவம் என்ற கருத்தில் இது ஏற்றுக் கொள்ளக் கூடிய விடயம் அல்ல.

பாத்திமா மஜீதா லண்டன் (எழுத்தாளர்)

ஒரு வகையில் இத்தகைய நடைமுறை போக்குவரத்தில் நடைபெறும் வன்முறைகள் குறைவதற்கு வாய்ப்புக்கள் உண்டு. ஆனால் பெண்களை வேறுபடுத்தி அவர்களுக்கென்று தனியே அறைகளை ஒதுக்கீடு செய்வதென்பது சமூகம் கட்டமைத்து வைத்திருக்கும் பால்நிலை அடிப்படையில் பெண்களை வேறுபடுத்தலுக்கு சமமானது. அதாவது இத்தகைய ஒழுங்கு முறை ஆணியச்சமூகத்தினை மீளுருவாக்கம் செய்கின்ற முறையாகும். இதன் மூலம் பெண்கள் தொடர்பாக சமூகத்தில் இருக்கின்ற மதிப்பீடுகள் மேலும் மேலும் நிலைநிறுத்துப்படுமேயன்றி ஆண், பெண் சமத்துவம் என்ற கொள்கை மறைந்து விடுவதற்கான சாத்தியப்பாடுகள் அதிகரிக்கும். அதேநேரம் சட்டத்தின் மூலம் போக்குவரத்தில் பெண்கள் எதிர்நோக்கும் பாலியல் ரீதியான வன்முறைகளை இல்லாதொழிப்பதற்காக இலங்கை அரசினால் கொண்டுவரப்பட்ட சட்டங்கள் வலுவிழந்துவிடக்கூடிய நிலையையும் தோற்றுவிக்கலாம். எனவே அரசானது வன்முறைகளை தோற்றுவிக்கின்றவர்களை தண்டிப்பதில் வன்முறைக்கு ஆளாகின்ற பெண்களினை வேறுபடுத்தி வைப்பது நியாயமற்ற நடவடிக்கையாகும்.

நதீ கம்மல்லவீர (எழுத்தாளர், நடிகை)

சர்வதேச பெண்கள் தினத்திலிருந்து ரயிலில் பெண்களுக்கான தனியான பெட்டியை இணைக்க அமைச்சர் அர்ஜூன ரணதுங்க எடுத்த நடவடிக்கையை நான் நகைச்சுவையாகவே நோக்கினேன். கடவுளே இந்நாட்டு மக்கள் எந்த நூற்றாண்டில் வாழ்கின்றார்கள் என எண்ணினேன். நாம் எல்லா விடயத்திலும் மிக வேகமாக பின்னோக்கி மூட நம்பிக்கைகளுக்கு முன்னுரிமையளித்து பயணிக்கும் இனமாக மாறி வருகின்றோம்.

பெண்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும். அந்த பெட்டியில் பெண்கள் யாரும் ஏறக் கூடாது. பெண்களுக்கு ஆண்களுடன் ஒன்றாக பயணம் செய்ய முடியாதென்பதே இதன் அர்த்தம். பெண்கள் ஆண்களால் இம்சிக்கப்படுகின்றார்கள், அவர்கள் அநாதரவானவர்கள் என்பது தானே அதன் அர்த்தம். இதற்கு ஆணையும் பெண்ணையும் பிரிப்பதல்ல நடைமுறை. அவ்வாறான செயலில் ஈடுபடுபவர்களுக்கு சரியான தண்டனை வழங்கக் கூடிய முறையொன்றை உருவாக்க வேண்டும். அவ்வாறான முறை தொடர்ந்து செயல்படுத்தப்படும் போது பொதுப் போக்குவரத்தில் மாத்திரமல்ல ஏனைய பொது இடங்களிலும் பெண்களை கௌரவத்துடன் நோக்கும் எண்ணம் சமூகத்தில் உருவாகும்.

ஆணையும் பெண்ணையும் பிரித்தால் அது ஒரு வகையில் அடிப்படை மனித உரிமை மீறலாக கருதப்படலாம்.

ஆண், பெண் சமத்துவ கருத்துக்கு இது முற்றிலும் எதிரானதாகும். அதேவேளை ஆண்களின் பக்கம் இருந்து நோக்கும் போது இது அவர்களுக்கு ஒரு அவமானமான விடயமாகும்.

நாங்கள் அனைவரும் இணைந்து அமைச்சர் அர்ஜூனவின் இந்த பிற்போக்குத்தனமான கூற்றுக்கு எதிராக செயற்பட வேண்டும். உலகிலுள்ள பிற்போக்கான கலாசாரத்தில் பெண் அடிமைத்தனம் மாத்திரமல்ல இவ்வாறான செயற்பாடுகளும் அடங்கும்.

நாம் அரசியல்வாதிகளின் கைபொம்மைகளாக இருக்காமல் இவ்வாறான தீர்மானங்களுக்கு எதிராக நின்று மனித சுதந்திரம் மற்றும் கௌரவத்துக்காக குரல் கொடுக்க வேண்டும். அபிவிருத்தியடைந்த நாடுகளிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது ஏராளம். அதை நாம் செய்ய வேண்டும்.

சீதா ரஞ்சனி  (மூத்த பத்திரிகையாளர், ஊடக செயற்பாட்டாளர்)

பொது போக்குவரத்து சேவைகளில் பெண்கள் அனுபவிக்கும் இன்னல்கள் தொடர்பில் நீண்ட காலமாகவே பேசப்பட்டு வருகின்றது. இதற்கு முன்னர் பெண்களுக்கான தனியான பஸ் சேவையொன்று ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் அது குறுகிய காலத்தில் செயலற்றுப்போயின. தனியாக வேலைக்கு செல்லும் பெண்களுக்கு இரவு, பகல் பஸ் சேவைகளை நடத்துவதாக இருந்தால் அனைத்து பிரதேசங்களிலும் செயல்படுத்த வேண்டும். அத்தோடு இன்றைய சூழ்நிலையில் அநேக பெண்கள் தனிமையிலேயே பிரயாணம் செய்கின்றனர். பொது போக்குவரத்து சேவைகள் போதுமான அளவு நடைபெறாத நிலையில் பெண்களுக்கான தனியான சேவை சாத்தியமற்றது. அது இலாபத்தை நோக்காக கொண்டதாக இருக்கக் கூடாது. எமது நாட்டில் சிரமமின்றி பிரயாணிகள் பயணம் செய்யக்கூடிய நல்ல போக்குவரத்து சேவையே அவசியம். நெரிசலின்றி இருக்கைகளில் அமர்ந்து செல்லக் கூடியதாக இருக்க வேண்டும.இவ்வாறான காரணங்களினாலேயே பெண்கள் பொது போக்குவரத்தில் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள்.

இந் நிலையில் ரயில்களில் பெண்களுக்கான தனியான பெட்டிகளை இணைப்பது போற்றுதற்குரியதாகும். ஆனால் அவை வெறுமனே பிரசாரத்துக்கானதாக மட்டும் இருக்கக் கூடாது. அத்துடன் அவை குறுகிய காலத்தில் நிறுத்தப்படவும் கூடாது.

நன்றி - தினகரன்

...மேலும்

Feb 13, 2019

சினேகா : "சாதியற்றவர்" "மதமற்றவர்" சான்றிதழைப் பெற்ற இந்தியாவின் முதல் பெண்


ஆனந்தகிருஷ்ணன்- மணிமொழி சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட தம்பதியரின் மூத்த மகள் நான். காவல்துறையினரால் கடுமையாக தாக்கப்பட்டு சிறையில் உயிர் நீத்த போராளி சிநேகலதா நினைவாக சிநேகா என பெயரிட்டனர். அம்மாவின் முதல் எழுத்தை முதலிலும், அடுத்தது அப்பாவின் முதல் எழுத்து என ம.ஆ.சிநேகா ஆனேன்....

முதல் வகுப்பு சேர்க்கையில் தான் பள்ளி நிர்வாகம் முதலில் நான் என்ன சாதி என்று கேட்டது. எனக்கு சாதி இல்லை என்று என் பெற்றோர் சொல்ல, மதத்தையாவது சொல்லுங்கள் என்றனர். மதமும் இல்லை என்றனர் என் பெற்றோர்.....

இப்படி தான் தொடங்கியது என் முதல் பிரச்சாரம்.... 
பள்ளி முதல் கல்லூரி வரை எதிலும் சாதி மதம் குறிப்பிட்டதில்லை. சாதி சான்றிதழும் இல்லை.....

என் தங்கைகள் மும்தாஜ் சூரியா, ஜெனிபர் அவ்வண்ணமே வளர்த்தனர்....
என் இணையர் கி.பார்த்திபராஜா உடனான என் இணை ஏற்பு விழா சாதி, மத சடங்குகள் அற்ற தாலி போன்ற சாதிய அடையாளங்கள் அற்ற புரட்சிகர விழாவாக நடத்தினோம்....

ஆதிரை நஸ் ரீன், ஆதிலா ஐரீன், ஆரிபா ஜெசி என பெயரிட்டு எங்கள் மகள்களை சாதி மத அடையாளங்கள் இன்றி வளர்கிறோம்.....

சாதி சான்றிதழை எல்லா இடங்களிலும் கேட்கும் இந்த அமைப்பிற்கு நாங்கள் அந்நியர்கள் ஆனோம்....

சாதிய அமைப்பிற்கு அடையாளமாக இருக்கும் சாதி சான்றிதழ் போல், சாதி மதம் அற்றவர் என்ற எங்கள் வாழ்விற்கு ஒரு அடையாளமாக ஒரு சான்று வேண்டும் என முடிவு செய்து அதற்காக முயற்சித்தேன்.

நீண்ட முயற்சியில்....... என்ன சாதி என்று சொல்லவே எங்களுக்கு உரிமை உண்டு, சாதி இல்லை மதம் இல்லை என சொல்ல எங்களுக்கு அதிகாரம் இல்லை என பல முறை மறுப்பு தெரிவிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டேன்.....

எனினும் இறுதியில் வெற்றி பெற்றோம். சாதி இல்லை மதம் இல்லை என்று அரசால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழை பெற்று வெற்றி பெற்றேன்.....

“மதம் மக்களின் அபின்” – 
என்றார் மார்க்ஸ்

மதம் என்பது அதிகாரத்திற்கு ஆதாரம் என்பதை இந்திய வரலாறு புலனாக்குகிறது.......
என்றார் அம்பேத்கர்

சாதி, மதம், பழக்கவழக்கம் ஆகியவைகளில் மாற்றம் செய்யச் சம்மதிக்கவில்லையானால் வேறு எந்த விதத்தில் இந்நாட்டு மக்களுக்கு விடுதலையோ, மேன்மையோ, சுயமரியாதையோ ஏற்படுத்த முடியும்? 
என்றார் பெரியார்......

சாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும்.......
இதோ இவர்களின் சாதி மத வர்க்கம் அற்ற சமூகத்தற்கான கனவின் முதல் புள்ளி....

லட்சியங்கள் வெறும் கனவுகளல்ல. போராடினால் சமூக மாற்றம் சட்டங்களாகும்.

சாதி மதம் அற்றவரென அரசு சான்றிதழ் பெற்ற முதல் இந்தியர் என்பதில் பெருமை கொள்கிறேன்.

கொள்கை காற்றில் கரையும் வெற்று முழக்கமல்ல. சமூக புரட்ச்சிக்கான வலுவான விதை....

தோழமையுடன், 
ம.ஆ.சிநேகா.

நன்றி:

இந்த புரட்சிகரமான சான்றிதழை அளிக்க பரிந்துரை செய்த திருப்பத்தூர் சார் ஆட்சியர் திருமிகு.பிரியங்கா பங்கஜம் அவர்கள், சான்றளித்த திருப்பத்தூர் வட்டாட்சியர் திருமிகு.சத்தியமூர்த்தி அவர்கள், அனைத்து விதங்களிலும் பேருதவியாக இருந்த தோழர்.அறவேந்தன் அவர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

தோழர் சினேகாவின் முகநூல் பதிவிலிருந்து...
...மேலும்

Oct 22, 2018

வைரமுத்துக்கள் மட்டுமல்ல, பெரும்பான்மையான சமூகமும் We Too ஆணாதிக்க பேய்கள் தான்!


இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் பெண்கள் தமக்கு இழைக்கப்பட்ட பாலியல் வன்முறைகள் பற்றிப் பேச முன் வந்திருக்கிறார்கள். இப்பெண்களிற்கு எதிராக பொதுவெளிகளில் எழும் எதிர்வினைகள் தமிழ்ச் சமுதாயத்தின் பெரும்பகுதி ஆணகள் இன்னும் ஆணாதிக்க பேய்களாகத் தான் இருக்கிறார்கள் என்பதை எடுத்துக் காட்டுகின்றன. தமக்கு நிகழ்ந்த பாலியல் கொடுமைகளைப் பேசும் பெண்களின் மனவேதனைகளைப் பற்றி சிறிதளவிலேனும் நினைத்துப் பாராமல் அப்பெண்களையே குற்றவாளிகள் என்று சாடும் மிக மோசமான ஆணாதிக்க மனப்பான்மை கொண்ட சமுதாயமாகத் தான் எமது சமூகம் இருக்கிறது.

பாலியல் கொடுமைக்கு உள்ளாகினேன் என்று வெளிப்படையாக பேசும் பெண்களில் தொண்ணூற்று ஒன்பது சத விகிதமானவர்கள்  உண்மையையே சொல்கிறார்கள் என்று உளவியல் மருத்துவர்கள், மனோதத்துவவியல் அறிஞர்கள் சொல்லுகிறார்கள். பாலியல் வன்முறைக்கு உள்ளான பெண்கள் மனதாலும், உடலாலும் எவ்வளவு காயப்படுகிறார்கள் என்பதை மருத்துவ அறிக்கைகள் எடுத்துச் சொல்கின்றன. தம்மைத் தாமே காயப்படுத்துவதில் இருந்து தம்முயிரையே மாய்த்துக் கொள்வது வரை என்று பாதிக்கப்பட்ட பெண்கள் தம் வாழ்நாள் முழுவதும் மரணத்தில் வாழ்கிறார்கள்.  

பெண்களை ஒரு போகப் பொருளாகப் பார்க்கும் வலதுசாரிகளான மதவாதிகள், இனவாதிகள், மொழி வெறியர்கள், சாதி வெறியர்கள் என்பவர்கள் வழக்கம் போல தமது ஆணாதிக்கத்தை, பிற்போக்குத்தனத்தை வக்கிரம் பிடித்த மொழிகளில் வெளிப்படுத்துகிறார்கள். ஆனால் வைரமுத்துவிற்கு எதிராக சின்மயி வைத்த பாலியல் குற்றச்சாட்டின் போது தம்மை பகுத்தறிவாளர்கள் என்று சொல்லிக் கொள்ளும் சிலரும் இந்த வலதுசாரி கும்பல்கள் பேசும் ஆணாதிக்க மொழியிலேயே தாமும் பேசுவது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது.

சமுக வலைத் தளங்களில் பாலியல் வன்முறை குறித்து தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள், விமர்சனங்கள் என்னும் ஆணாதிக்க வக்கிரங்களில் சிலவற்றை இங்கே தொகுத்து தந்திருக்கிறோம். இவற்றைப் படிக்கும் உங்களிற்கு இவ்வளவு கேவலமாகவா எங்களது சமுதாயம் இருக்கிறது என்னும் கோபம் வரக் கூடும். ஆனால் கீழே தந்துள்ளவை ஒரு துளி மட்டுமே. பெண் உடல் குறித்த கேவலமான வசவுகளை கொண்ட பெரும்பான்மையான வக்கிரங்களை இங்கே தவிர்த்திருக்கிறோம்.

பாலாபாலா
Me too (நானும் தான்)  ￰பிரச்சாரம்  சில விபச்சாரிகளின் அபாண்டமான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள்  மூலமாக தனது நம்பகத்தன்மையை  மிக விரைவில் இழந்து  நிற்கும் என்பது தான் கசப்பான  உண்மை....  Me too (நானும் தான்) - ஆதாரம் இல்லா சேதாரம்.

Durai Kesavan  எவ்வளவு இடத்தில் பார்கிறோம். ஒருத்தனை பழிவாங்க.அல்லது அசிங்க படுத்த முடிவெடுத்தால் பெண் சொல்ற புகார் என் கைய பிடித்து இழுத்தான்.கண்ணடித்தான் பினனாடி தட்டினான் என்று

Tamil Viral   ஏண்டி குடிகார நாய்களே. ஸ்விஸ் போய் நீயும் உன் ஆத்தாளும் குடிச்சுட்டு பண்ணுன அக்கப்போரை பத்தி இசைமைப்பாளர் சொன்னதை பத்தி சொல்லுங்கடி. குடிகார நாய்களா. நீங்கதான் சமுதாயத்தை திருத்த போறீங்களா. 

JOKER TV  சின்மயி டார்லிங் உன்னால கோர்ட்டுல நிரூபிக்கமுடியாது - இதுக்கு ஒரே வழி நீ வைரமுத்துவ நைசா வீட்டுக்கு கூப்பிட்டு கற்பழிச்சிடு - வைரமுத்து கர்பமாகி கோர்ட்டுக்கு அலையட்டும் - பழிக்கு பழி

bhagyaraj bhagya  நல்ல குடும்ப பெண்கள் போகமாட்டார்கள் சில தாசிகள் விளம்பரத்திற்காக  

பெண்ணடிமைத்தனம் என்னும் கொடுமையை ஒழித்துக் கட்டி ஆணும், பெண்ணும் சரிநிகர் சமானம் என்னும் சமத்துவத்தை சமூதாயத்தின் தலையாய விதியாக கொண்டு வரும் வரை பெண்களிற்கு எதிரான கொடுமைகள் தொடரத் தான் செய்யும். பாலியல் வன்முறை, ஊதியங்களில் சமமின்மை, சொத்துரிமை இல்லை, வழிபாட்டு இடங்களில் ஒதுக்கப்படுதல் போன்ற அநீதிகளிற்கு எதிராக முற்போக்கு சிந்தனை கொண்ட பெண்களும், ஆண்களும் சேர்ந்து போராடும் போதே ஆணாதிக்க பிற்போக்கு சமுதாயம் உடைந்து நொறுங்கும். அன்று ஆணாதிக்க பேய்களை வீழ்த்தி பெண்ணே நீ மறுபடி எழுவாய்!!

நன்றி - பூவரசு
...மேலும்

Oct 21, 2018

மீடூ: அடுத்தகட்ட பாதை இதுதான்!


தென்னிந்திய திரைத்துறை பெண்கள் மையம் சார்பில் மீடூ விவகாரம் குறித்த பத்திரிகையாளர் சந்திப்பு இன்று(அக்டோபர் 20) சென்னையில் நடத்தப்பட்டது. இதில் பின்னணி பாடகி சின்மயி, இயக்குநர்கள் லட்சுமி ராமகிருஷ்ணன், லீனா மணிமேகலை ஆவணப்பட இயக்குநர் மாலினி ஜீவரத்திரனம், நிகழ்ச்சி தொகுப்பாளினி ஸ்ரீரஞ்சனி ஆகியோர் பங்கெடுத்தனர். பத்திரிகையாளர் சந்திப்பில் நடைபெற்றவை வாசகர்களுக்காக.

லீனா மணிமேகலை

“மீ டூ போன்ற இயக்கங்கள் மூலம் பாலியல் குற்றச்சாட்டுகளை மட்டும் கூறுவதோடு நில்லாமல், அதுபோன்ற குற்றங்கள் கவனிக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். பெண்களின் பிரச்சினைகள் கவனிக்கப்படுவதோடு அல்லாமல், தங்களுக்குள் மறைத்து வைத்திருக்கும் இது போன்ற விவகாரங்களை பொது வெளிக்குள் கொண்டு வரும் பெண்களுக்கு முழுமையான பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். பாலியல் தொடர்பான புகார்களுக்காகவே மீடூ போன்ற தளங்கள் இருக்கிறது. சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கைகளையும், அடுத்து யாரும் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கைகளையும் எடுக்க வேண்டும். பெண்கள் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளை துணிந்து வந்து சொல்லும் பெண்களே ஆதாரம் என்பதுதான் மீடூ இயக்கத்தின் அடிப்படை. இதன் மூலம் மாற்றம் உருவானால் அதுவே உண்மையான சமூக மாற்றம்”

லட்சுமி ராமகிருஷ்ணன்

எனக்கு ஒரு பிரச்சினை இருக்கிறது என்றால் போலீஸ் ஸ்டேஷன் போவதற்கே தயங்குகிறேன். ஏழு வயது சிறுமி ஹாசினியை சீரழித்தவர்களை சட்டம் என்ன செய்திருக்கிறது. இது தான் இன்றைய நிலை. மீடூ இயக்கம் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கக்கூடிய இடம் கிடையாது. இது அந்த பெண்களுக்கு தைரியத்தையும், ஆதரவையும் தரக்கூடிய ஒரு மாஸ் மூவ்மெண்ட். இனிமேல் ஓர் ஆண், ஒரு பெண்ணிடம் பொது இடத்திலோ அல்லது வேலை நிமித்தமாகவோ தவறாக நடந்து கொள்வதற்கும் அவளிடமிருந்து எதையும் எதிர்பார்ப்பதற்கும் ஓர் அச்ச உணர்வை ஏற்படுத்தக்கூடியதாக இவ்வமைப்பு உருவாகும். காம்ப்ரமைஸ், அட்ஜெஸ்ட்மெண்ட் போன்றவற்றுக்கு தயாராக இல்லாத பெண்கள் இருக்கிறார்கள். தயாராகவும் சிலர் இருக்கிறார்கள்; இல்லையென்று நான் சொல்லவில்லை.


சின்மயி

வைரமுத்துவுக்கு எதிராக அவர் மீது வழக்கு தொடர ஆவணங்களை சேகரித்து வருகிறேன். சுவிட்சர்லாந்து சென்றபோது பயன்படுத்திய பாஸ்போர்ட் தேடிக்கொண்டிருக்கிறோம். கிடைத்ததும் சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பேன். வைரமுத்து குறித்து எனது நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் இதற்கு முன்பே தெரிவித்திருக்கிறேன். வைரமுத்து பற்றி பெண்களுக்குத் தெரியும். ஆண்களுக்குத் தான் தெரியாது. மீடூ விவகாரத்தில் எத்தனை ஆண்கள், பெண்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர்? 1997ஆம் ஆண்டு விசாகா சட்டம் அமல்படுத்தப்பட்டது. 2000ஆம் ஆண்டு மத்திய அரசு அலுவலகங்களில் அந்த குழுக்கள் அமைக்கப்பட்டன. ஆனால் இன்று வரை ஊடக அலுவலகங்களில் இது அமைக்கப்படவில்லை என்று சில பெண் பத்திரிகையாளர்களே கூறியுள்ளனர். திரைப்பட துறையைவிட பெண் பத்திரிகையாளர்கள் பாலியல் சீண்டல்களுக்கு அதிகம் ஆளாகிறார்கள். திரைத்துறையில் இப்போதுதான் விஷால் இது பற்றி மூன்று பேர் கொண்ட குழு அமைக்க போவதாக அறிவித்திருக்கிறார். அது எந்த மாதிரி இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் .

ஆண்டாள் பிரச்சினையில் எந்த ஒரு கருத்தும் நான் சொன்னது கிடையாது. மற்றவர்கள் என்னை வைத்து அரசியல் செய்தால் அதற்கு நான் ஒன்றும் பண்ண முடியாது. என் பிரச்சினை; அது எனக்கு நடந்தது. இடது, வலது, மையம் என எல்லா அரசியல் கட்சி தரப்பில் உள்ள ஆண்களும் இதில் சிக்கியுள்ளனர். கடவுள் நம்பிக்கை உடையவர், இல்லாதவர், பத்திரிகையாளர், அமைச்சர், கார்பரேட் என எல்லா தரப்பில் உள்ளவர்கள் பெயரும் இதில் அடிப்பட்டுள்ளது.

பெண்களுக்கு இருக்கும் பிரச்சினைகளை வெளியில் கொண்டுவரும்போது அத்தனை பேரும் சேர்ந்து இழிவுப்படுத்தினால் எங்களால் ஒன்றும் செய்ய முடியாது. பெண்களை நாங்கள் நம்புவோம். உறுதுணையாக நிற்போம். இந்த மாதிரியான ஒரு சமூகத்தில் எழுந்து நிற்போம். அதற்கான ஆதரவு வரும் என்று எதிர்பார்க்கவில்லை. தற்போது வந்துவிட்டது. கேள்வி கேட்போம். கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டே இருப்போம்.

நன்றி - மின்னம்பலம்
...மேலும்

Oct 20, 2018

சினிமா முழுக்க இந்த கேவலம் இருக்கு - வரலெட்சுமி

"Mee too" குறித்த விடயங்கள் பரவலாகவும், பரபரப்பாகவும் பேசப்பட்டு வரும் இந்த நிலையில் பல பெண்கள் மனம் திறந்து பேச முன்வந்துள்ளார்கள். சினிமாத்துறையினர் தான் இதில் அதிகமாக பேசுகின்றனர். அதிகமாக முறைகேடுகள் நடக்கும் துறையும் அதுதான் என்பதில் உண்மையும் உண்டு.
வரலட்சுமியின் இந்த நேர்காணல் அப்படியான வெளிப்படையான ஒன்று.


...மேலும்

Oct 19, 2018

METOO உளவியல் சார்ந்த வெற்றி


‘MeToo’ சமீப காலமாக ஆண்கள் மத்தியில் பெரும் பிரளயத்தை ஏற்படுத்தியிருக்கும் சொல் இது. சமூக வலைத்தளங்களில் MeToo பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தாலும் முழு உலகமுமே வெகுண்டெழுந்து வாசிக்கும் செயலியாக (App) இது விஸ்வரூபம் எடுத்துள்ளது. மேலைத்தேய நாடுகளிலே பிரபல்யம் அடைந்துள்ள MeToo அண்மையில் ஆசியாவையும் உலுக்கி வருகிறது. ஆண்களால் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படும் பெண்கள், பதிவிறக்கம் செய்யும் தகவல்களால் பல பிரபல்யங்கள் முதல் சாதாரண ஆண்கள் வரை அனைவரையும் பீதியடைச் செய்துள்ளது.

MeToo இயக்கம் பெண்களுக்கு உளவியல் ரீதியான வெற்றியைத் தரும்.அதே வேளையில் எளிய பின்னணியில் உள்ள பெண்கள் இது போன்ற துன்புறுத்தலை சந்தித்தால் அதை எளிதாக​ கூற இயலுமா என்று தெரியவில்லை.

'ஆனால், பாலியல் துன்புறுத்தல் மற்றும் அத்துமீறல்களுக்கு எதிரான முயற்சி மற்றும் வெற்றிகளில் இது நிச்சயம் ஒரு நல்ல தொடக்கமாகும்.

Metoo என்பது அமெரிக்காவில் வாழ்ந்து வரும் ஆபிரிக்க பெண்மணியான Tarana burke (டரானா பேர்க்) என்பவரே இவ் இயக்கத்தை ஆரம்பித்தவர். இவர் ஒரு மனித உரிமை சிவில் செயற்பாட்டாளர். 2006 ஆம் ஆண்டு அமெரிக்காவில் இவ் இயக்கத்தை ஆரம்பித்த இவர், பெண்கள் தாம் எச்சந்தர்ப்பத்தில் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கோ அல்லது தொல்லைகளுக்கோ முகங்கொடுத்தோமா அதை தைரியமாக சமூகத்துக்கு சொல்ல வேண்டும் என்று பெண்களை வலுவூட்டும் செயற்பாடுகளில் ஈடுபட்டார். டைம்ஸ் சஞ்சிகை இவரை 2017 ஆம் ஆண்டின் சிறந்த நபர் என்று கௌரவப்படுத்தியது. ஆனால் தற்போது தான் Metoo பிரபல்யமடைந்துள்ளது.

Metoo தகவல்களால் அச்சமடைந்திருக்கும் ஆண்கள் பற்றி பிபிசி ஒரு பத்திரிகையாளரின் மனந்திறந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளது.

சமூகத்திலுள்ள பெரும்பாலானவர்களை போல் ஒவ்வொரு ஐந்து நிமிடமும் தன்னை அறியாமலேயே வாட்ஸ்ஆப், சமூக ஊடகங்களை கைபேசியில் பார்ப்பவர்களில் பத்திரிகையாளரான நானும் ஒருவன். ஆனால், கடந்த நான்கு -ஐந்து தினங்களாக, "Ms XYZ mentioned you in their tweet" என்பது போன்ற அறிவிப்பு எனக்கும் வந்திருக்குமோ என்ற பயத்தில் கைபேசியை கையில் எடுப்பதற்கே தயங்குகிறேன்.

என்னை போன்ற ஆயிரக்கணக்கான ஆண்கள் ட்விட்டரில் பூதாகரமாகி வரும் MeToo-வில் தாங்களும் சிக்கிவிடுவோமோ என்ற பயத்தில் கடந்த ஒரு வாரமாக வாழ்ந்து வருகிறோம்.

ஆண்களின் பாலியல் அத்துமீறல்களை பெண்கள் ட்விட்டரில் MeToo என்ற பதத்தை பயன்படுத்தி வெளிக்கொணரும் நிகழ்வு கடந்த ஒருவருடத்திற்கு முன்பு ​ெஹாலிவூட்டில் தொடங்கி, பிறகு ​ெபாலிவூட்டை அடைந்து, தற்போது இந்திய ஊடகங்களையே வந்தடைந்திருக்கிறது. பல வகைகளில் தங்களிடம் அத்துமீறிய ஆண்களின் செயல்பாட்டை பல தசாப்தங்களாக மனதில் மூடி வைத்திருந்த பெண்கள், கடைசியாக தற்போது முழு மனவுறுதியுடன் அதை ட்விட்டரில் வெளிப்படுத்தி வருகிறார்கள்.

ஆனால், சட்டரீதியாக பார்க்கும்போது தற்போது வெளிவந்துள்ள குற்றச்சாட்டுகளில் எத்தனை உண்மையான குற்றச்சாட்டுகள் என்பதில் தெளிவில்லாமல் பலர் சமூக ஊடகங்களில் போரிட்டு வருகிறார்கள்.

ட்விட்டரில் எழுத்துகள் மூலமாகவும், படங்கள் மூலமாகவும், ஸ்கிரீன் ​ெஷாட்டுகள் மூலமாகவும் வெளிவந்துள்ள பல்வேறு குற்றச்சாட்டுகளை நான் மறுக்கிறேன் என்றோ, எதிர்த்து பேசுகிறேன் என்றோ இதற்கு அர்த்தமல்ல. ஆனால், சில விடயங்களில் மற்றொரு கோணமும் இருக்கும். இந்த இயக்கம் தனிப்பட்ட முறையில் பெண்கள் தங்களுக்கு வேண்டாதவர்களை பழித் தீர்த்துக்கொள்வதற்காக தவறான வழியில் பயன்படுத்தபடுமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது.

என்னுடைய ட்விட்டர் செய்தியோடையில் பலரும் MeToo இயக்கத்தை செம்மையாகவும், நீர்த்துப்போகாமலும், நேர்மையுடனும் தொடர்ந்து செயல்பட வைப்பதற்கு வலியுறுத்துகின்றனர்.

MeToo வாயிலாக குற்றச்சாட்டுக்குள்ளான ஒருவர், தன் மீதமான குற்றச்சாட்டுகள் குறித்து மறுப்பு கூட தெரிவிக்காமல், "இன்றைய காலகட்டத்தில் பெண்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு எதிர்வினையாற்றுவதென்பது வீண் செயல். ஏனெனில், பெண்கள் என்ன கூறுகிறார்களோ அது..." என்ற பதிலோடு முடித்துக்கொண்டார்.

MeToo வாயிலாக வெளிவந்த குற்றச்சாட்டுகள் குறித்து பல ஊடக நிறுவனங்களில் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. அதுமட்டுமன்றி, பல ஊடகங்களின் ஆசிரியர்கள் பதவி விலகினர், சிலர் தாங்கள் பல வருடங்களுக்கு முன்னர் அத்துமீறிய பெண்களிடம் குற்றத்தை ஒப்புக்கொண்டு, மன்னிப்பு கேட்க முயன்று வருகிறார்கள்.

நீங்கள் இதுவரை பெண்ணொருவரை தொந்தரவு செய்துள்ளீர்களா? என்ற கேள்விக்கு உங்களது அடிமனது கூறும் பதில் இதற்கு போதுமானது.

இந்த கடுமையான சூழலை எப்படி கடந்து செல்வது?

முதலில் இந்த MeToo என்பதை ஆண்களை மையமாக கொண்ட ஒன்றாக மட்டும் ஆக்கிவிட வேண்டாம். இதன் பிறகும் உங்களுக்கு பயமிருந்தால், பெண்களின் உலகத்திற்கு வாருங்கள். ஆம், தங்களது வாழ்க்கையின் பெரும்பகுதியை பெண்கள் இப்படித்தான் கழிக்கிறார்கள்.

இரண்டாவதாக, MeToo இயக்கம் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துள்ள அளவையும், இதுபோன்ற ஏற்றுக்கொள்ள முடியாத நடத்தைகள் சமூகத்தில் எப்படி ஆழ வேரூன்றியுள்ளது என்பதையும் புரிந்துகொள்ளுங்கள்.

மூன்றாவதாக, இனியாவது பெண்களிடம் தவறாக நடந்துகொண்ட உங்களது நண்பர்களை புகழ்வதை, பாராட்டுவதை நிறுத்திவிட்டு, அதன் வீரியத்தை யோசித்து பாருங்கள்.

உங்களது ஆண் நண்பர்கள் குழுவில், பைத்தியக்காரத்தனமாக பேசும் விடயங்கள் எப்படி ஒரு பெண்ணுக்கு வாழ்நாள் முழுவதும் பயத்தை உண்டாக்கும் நிகழ்வாக மாறுகிறது என்பது குறித்து பெரும்பாலானவர்கள் புரிந்துகொள்வதில்லை.

இனி பெண்களிடம் தவறாக நடந்துகொள்ளும் உங்களது நண்பர்களை ஆதரிப்பதை நிறுத்துங்கள், இல்லையெனில் நீங்களும் அந்த குற்றத்திற்கு துணை போனவராக கருதப்படுவீர்கள்.

கிட்டத்தட்ட கடந்த ஒருவாரமாக பரபரப்பை உண்டாக்கி இருக்கும் இந்த விவகாரம், ஆண்களின் செயல் மற்றும் பேச்சுரீதியிலான நடத்தையில் சுய-விழிப்பை உண்டாக்கியுள்ளது. பணியிடத்தை பெண்களுக்கு பாதுகாப்பானதாக்கும் முயற்சியில் இது ஒரு படி முன்னேறியதை காட்டுகிறது.

ஆனால், இந்த MeToo இயக்கம் ஆண்களை தனிமைப்படுத்தி, மோசமான நிலைக்கு இட்டுச்செல்லும் ஒன்றாக மாறாது என்பதை நாம் உறுதிப்படுத்த வேண்டும். ஆண்கள் தங்களது நிகழ்கால செயல்பாடுகள் எதிர்காலத்தில் பிரச்சினைகளை உண்டாக்கலாம் என்று உணர்வதை போன்று, ட்விட்டுகள் நீக்கப்படலாம், ஆனால் ஸ்கிரீன் ​ெஷாட்டுகள் அப்படியே இருக்கும் என்பதை பெண்களும் உணர வேண்டும்.

நன்றி - தினகரன்
...மேலும்

Oct 14, 2018

சபரிமலைத் தீர்ப்பு: ஆண்களின் மனசாட்சி! - என்.சரவணன்


பெண்கள் சபரிமலைக்கு நுழைவதற்கு இருந்த தடையை நீக்கி இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தமை தென்னிந்தியாவில் சர்ச்சைக்குள்ளாகியிருப்பதுடன். இலங்கையிலும் அது எதிரொலித்ததை செய்திகளில் கண்டோம்.

ஆனால் இந்தத் தீர்ப்பு ஒரு வகையில் தீண்டாமைக்கு எதிரானத் தீர்ப்பே. எப்படி கடந்த காலங்களில் சாதியத் தீண்டாமையை ஒழிப்பதில் சட்டம் பங்கு வகித்ததோ அதே வழியில் தான் பெண்களுக்கு எதிரான தீண்டாமையை எதிர்த்து இந்த தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. வரலாறு நெடுகிலும் வெறும் நம்பிக்கைகளால் நசுக்கப்பட்ட உரிமைகளை சட்டம் தான் மனித குலத்திற்கு பெற்றுக்கொடுத்திருக்கிறது.

அன்று சாதியத் தீண்டாமை, கோவில் பிரவேச மறுப்பு, தேவதாசி முறை, என்பவை தெய்வத்தைக் காரணம் காட்டி ஐதீகங்கள் மத நம்பிக்கை, சமூக வழக்கு, மரபு என்பவற்றின் பேரால் தான் நியாயப்படுத்தப்பட்டன. அவற்றுக்கான நீதியை  சட்டங்கள் தான் பின்னர் பெற்றுக்கொடுத்தன.

இந்தத் தீர்ப்பு தெய்வ நம்பிக்கைகளின் பேரால் “மறுக்கப்படுகின்ற உரிமைகளுக்கு” எதிரான சிறந்த முன்னுதாரணத் தீர்ப்பு.

தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தன்னுடைய தீர்ப்பில் பக்தி என்பது தீண்டாமைக்கு வழி வகுக்கக் கூடாது என்று குறிப்பிட்டார். மேலும் ஆன் வழிச் சமூக சிந்தனைகளும் விதிமுறைகளும் மாற்றப்பட வேண்டும். வழிபாடு போன்ற விசயங்களில் பாலியல் வேறுபாடுகளை கருத்தில் கொண்டு அனுமதியை மறுப்பதை சற்றும் ஏற்றுக் கொள்ள இயலாது என்று கூறினார்.

நீதிபதி கான்வில்கர் கேரள மக்களின் இந்து வழிபாட்டுத் தளங்கள் விதிமுறைகள் 1965 இந்து பெண்களின் மத நம்பிக்கைகளை புண்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது என்று கூறினார். வயதை காரணம் காட்டி தடை விதிப்பதை ஒரு மத வழிமுறையாக பின்பற்றுதல் கூடாது என்று கூறினார்.

இதே விதிமுறைகளை எடுத்துக் கூடி நீதிபதி நரிமன் “இது பெண்களின் அடிப்படை உரிமை” என்று குறிப்பிட்டார்.

நீதிபதி சந்திரசூட் தன்னுடைய தீர்ப்பில் “பெண்கள் அவர்களின் இனப்பெருக்க காலங்களை வைத்து அவர்களை கோவிலுக்குள் நுழைய விடாமல் தடுப்பது தவறு. 10 வயதில் இருந்து 50 வரையிலான பெண்களை கோவிலுக்குள் அனுமதிக்காமல் இருப்பது அவர்களுக்கு அவமரியாதையை உருவாக்குவதாகும்” என்று குறிப்பிட்டார். மத நம்பிக்கையுள்ள பெருவாரியான ஐயப்ப பெண் பக்தர்கள் பலர் இந்தத் தீர்ப்பை ஆதரிப்பார்கள் என்றோ, கோவிலுக்குச் செல்வார்கள் என்றோ பொருள் கொள்ள முடியாது. ஆனால் பெண்களைத் தீட்டுக்கும் துடக்குக்கும் உள்ளாக்கி அவர்களுக்கான சந்தர்ப்பங்களை மறுத்தும் கட்டுப்படுத்தியும் வரும் வைதீக சமூகம் காலாவதியாகி வருகிறது.

சுதந்திரம், ஜனநாயகம், சமத்துவம் என்பவற்றை மதத்தின் பேரால் கட்டுப்படுத்துகின்ற காலம் இன்று கேள்விக்குள்ளாக்கப்பட்டு வருகிறது. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்கிற அரசியலமைப்பின் அடிப்படை உரிமையை எந்த மத சடங்குகளாலும், வைதீக நிர்ப்பந்தங்களாலும் கட்டுப்படுத்த முடியாது என்பதை சகலறும் உணர வேண்டும்.

உலகில் உள்ள எந்த மத விதிகளும் பெண்களால் உருவாக்கப்பட்டதில்லை. ஆண்களே உருவாக்கினார்கள். ஆணாதிக்க சமூகத்தை மறுத்து தொழிற்பட முடியாத பெண் சமூகம் அதனை பின்பற்ற நிர்ப்பந்திக்கப்பட்டது. காலப்போக்கில் அந்த விதிகளை அவர்களே பேண வேண்டும் என்கிற நம்பிக்கைக்கு அவர்களே ஆளாக்கப்பட்டார்கள். அதன் விளைவு; பெண்களே பெண்களுக்கு எதிரான ஆசாரங்களை பாதுகாத்து நியாயப்படுத்தி, அமுல்படுத்தும் நிலைக்கு ஆனார்கள். அதாவது ஆணாதிக்க நிகழ்ச்சிநிரலை தாமே ஏற்று நடத்தினார்கள். அதன் பின்னர் ஆணாதிக்க விதிகளையும், நிர்ப்பந்தங்களையும் அமுல்படுத்த நேரடியாக ஆண்கள் தேவையில்லை. பெண்களே அதனைப் பார்த்துக் கொள்வார்கள்.


உதாரணத்திற்கு இன்றும் போது வழக்கில் கூறப்படும் சில காரணிகளைப் பார்ப்போம்.
“பெண்கள் தான் இன்று வரதட்சினை கேட்கிறார்கள். ஆண்கள் அல்ல” என்பார்கள்.
“சபரிமலைக்கு பெண்கள் நுழைவதை எதிர்த்து பெண்களே போராடுகிறார்கள்!” என்று செய்தி வரும்.
இப்போது சொல்லுங்கள் பெண்கள் தான் வரதட்சனையை  வலியுறுத்துகிறார்களா? அல்லது ஆணாதிக்க அவசியத்தின் முகவர்களாக பெண்கள் செயல்படுகிறார்களா? 

சபரிமலை தரிசனத்தை பெண்களுக்குத் தடை செய்திருப்பது தீட்டு, துடக்கு போன்ற காரணங்களால் என்றால் அதனை வலியுறுத்தியது பெண்களா அல்லது ஆணாதிக்க விதிகளா? இந்த விதிகளை இயற்றியது பெண்களா? அல்லது ஆண்களா? அல்லது ஐயப்பன் தான் இந்த சட்டத்தை இயற்றினாரா?
இயற்கையான மாதவிலக்கை தீட்டு, துடக்குகுள்ளாகி தம்மை அசிங்கப்படுத்தும் ஆணாதிக்க சிந்தனையை கேள்விக்கு உட்படுத்தாமல் அதை ஏற்றுக்கொள்ள நம் பெண்களுக்கு எப்படி முடிகிறது?

பாலுறவுக்கு பாலுறுப்பு வேண்டும், பரம்பரை தழைக்க பாலுறுப்பு வேண்டும். ஆனால் அதன் இயற்கை இயல்பு மட்டும் எப்படி தீட்டானது. அதைக் காரணம் காட்டி எப்படி உரிமைகளைத் தடுக்க முடிகிறது? சடங்குகளுக்கும், வைதீக மரபுகளுக்கும் அப்பால் மனசாட்சியின் பால் ஆண்கள் சிந்திக்க முடியாதா? தன்னை ஈன்ற தாயை,  வாழ்க்கையின் சக பயணியை, தான் பெற்ற மகளை தீட்டு - துடக்கின் பேரால் பலவற்றிலும் ஒதுக்கி வைக்கும் நிலையை நெஞ்சில் ஈரமுள்ள ஆண்கள் ஆதரிக்க முடியுமா? சகிக்க முடியுமா? எதிர்க்க வேண்டா? கொதித்தெழ வேண்டாமா?

வைதீக நம்பிக்கைகள், சடங்குகள், மரபுகள் அனைத்தையும் கேள்விக்குட்படுத்தும் நவீன சமூகத்தில் உலகம்; உரிமைகளுக்கும், சுதந்திரத்திற்கும், ஜனநாயகத்துக்கும், சமத்துவத்துக்கும்  முன்னுரிமை கொடுத்து அடுத்தக் கட்டத்திற்கு வளர்ந்து கொண்டு செல்கிறது.

இன்றைய நீதித்துறையும் அதன் அடிப்படையிலேயே வைதீக நம்பிக்கைகளை கேள்விக்குள்ளாக்குகிறது. சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்கிறது.

நன்றி - தினகரன்

...மேலும்

Oct 9, 2018

'மாதவிடாய் காலத்தில் பெண்களின் வழிபாட்டு உரிமையை பறிக்க முடியுமா?'


"மாதவிடாய் காலத்தில் உள்ள பெண்ணின் கையால் உணவு உண்டாலோ நீர் அருந்தினாலோ நீங்கள் இறந்துவிடுவீர்களா? மாதவிடாய் உள்ள பெண்களின் வழிபாட்டு உரிமையை உங்களால் எப்படி பறிக்க முடியும்," என்று கேட்கிறார் அனிகேத் மித்ரா. இவர் பெண்களின் மாதவிடாய் காலத்தை மையமாக வைத்து உண்டாக்கிய கணினி வரைபடங்கள் சமூக வலைத்தளங்களில் பெரும்பாலும் பகிரப்பட்டன.

மாதவிடாய் காலங்களில் பெண்கள் பின்பற்றும் சடங்குகளை இவர் நேரடியாகவே கண்டுள்ளார்.

அவர் வரைந்த படம் ஒன்றில் நேப்கின் மீது ரத்த நிறத்தில் தாமரை மலர்ந்து உள்ளது. அதன் கீழே 'சக்தி ரூபென்' என்று வங்க மொழியில் எழுதப்பட்டுள்ளது. அதன் பொருள் 'பெண்களின் சக்தி'

"என் மனைவி மற்றும் சகோதரிகளை போலவே பல பெண்கள் விழாக்களிலும் பிற நல்ல நிகழ்ச்சிகளிலும் மாதவிடாய் காலங்களில் கலந்துகொள்ள முடிவதில்லை,"என்று கூறும் அனிகேத், அவர்கள் அப்போது மூலையில் முடிங்கிக்கிடக்க வேண்டியுள்ளது என்கிறார்.

"பெண்கள் குடும்ப நிகழ்வுகளிலும் வழிபாட்டிலும் கலந்துகொள்ள விரும்புகிறார்கள். ஆனால் அவர்களின் உடல்நிலையை காரணம்காட்டி அது மறுக்கப்படுகிறது. ஏன் இந்தத் தடை, " என்று அவர் வினவுகிறார்.

பெண் கடவுளின் மாதவிடாய்

"பெண்கள் கோயிலுக்குள் நுழைய ஆதரவாக இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆனால் வீடுகளில் இருப்பவர்கள் மாறத் தயாராக இல்லை. சமூகமும் இதை விலக்கியே வைக்கிறது. இதனால் சமூகத்தை பின்னோக்கியே இழுக்கிறார்கள்."

அஸ்ஸாமில் காமக்கியா தேவி கோயிலில் பெண் கடவுளுக்கு மாதவிடாய் உண்டாகும்போது மூன்று - நான்கு நாட்கள் கோயிலின் கதவுகள் மூடப்பட்டு திருவிழா கொண்டாடப்படுவதை சுட்டிக்காட்டும் அவர் கடவுளின் அவதாரமாகக் கருதப்படும் பெண்களை விலக்கி வைப்பது குறித்து யாரும் கவலைப்படுவதில்லை என்கிறார்.

சமூக வலைத்தளத்தில் கேலி
மாதவிடாய் குறித்த தனது சமூகவலைத்தளப் பதிவுகளைப் படிப்பவர்கள் தம்மைக் கேலி செய்வதாகவும், மதத்துக்கு எதிரானவன் என்றும் துரோகி என்று அழைப்பதாகவும் கூறும் அனிகேத் தம்மை கடவுள் மீது நம்பிக்கை உள்ள மதத்தை பின்பற்றுபவர் என்று கூறுகிறார்.

"எங்கள் வீட்டில் பூசை செய்கிறோம், நான் மத விழாக்களில் கலந்துகொள்கிறேன். நான் எப்படி இந்து மதத்துக்கு எதிரானவனாக இருக்க முடியும்? என் பதிவுகளை அழிக்கக்கோரி கடுமையான அழுத்தம் கொடுக்கப்படுகிறது."

"என்னைக் கேலி செய்பவர்கள் மோசமானவர்கள் அல்ல. அவர்கள் அறியாமையில் இருப்பவர்கள்," என்று கூறும் அனிகேத் பலரும் தமக்கு ஆதரவாக செய்திகள் அனுப்பி ஊக்கிவித்ததாக கூறுகிறார்.

மனைவியின் ஆதரவு
"பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை வெகு சில ஆண்களே பேசுகின்றனர். பெண்கள் நான்கு நாட்கள் அனுபவிக்கும் இதை ஆண்கள் ஒரு நாளாவது அனுபவிக்க வேண்டும். அப்போதுதான் பெண்களை எப்படி நடத்த வேண்டும் என்று உணர்வார்கள்," என்கிறார் அனிகேத்தின் செயல்களை முழுமையாக ஆதரிக்கும் அவரது மனைவி பிரியம்.

"மாதவிடாய் நேரங்களில் வீட்டு வேலை அலுவலக வேலை என அனைத்தையும் செய்தாலும் யாரும் இதற்கு அங்கீகாரம் அளிப்பதில்லை," என்கிறார் பிரியம்.

படத்தில் என்ன தவறு?

பாலியல் மருத்துவத்துறை பேராசிரியர் பிரகாஷ் கோத்தாரி இது குறித்து பிபியிடம் பேசினார்.

"கோயில்கள் உள்ளிட்ட மதம் சார்ந்த இடங்களில் பாலுறவைக் குறிக்கும் சின்னங்கள் இருப்பதைப் பார்க்க முடியும். ஒரு வேளை இது பாலியல் கல்விக்காகக் கூட இருக்கலாம். அந்தக் காலத்தில் பாலியல் என்பது மிகவும் இயல்பானதாகப் பார்க்கப்பட்டது," என்கிறார் கோத்தாரி.

"பழங்கால இலக்கியங்களையும் நூல்களையும் பார்க்கும்போது பாலுறவு மனித வாழ்வின் அடிப்படையாகப் பார்க்கப்பட்டதை உணர முடியும். இந்த படங்களில் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் எதுவும் இருப்பதாக நான் கருதவில்லை," என அனிகேத் வரைந்த படம் குறித்து கோத்தாரி கூறுகிறார்.

"முதல்முறை பார்த்தபோது எனக்கும் கொஞ்சம் சங்கடமாகவே இருந்தது. தாமரை நம் பண்பாட்டில் மிகவும் மதிக்கத்தக்க ஒன்றாக இருப்பதால் அப்படித் தோன்றியது. ஆனால்,இதன்மூலம் மாதவிடாய் குறித்த விழிப்புணர்வை உண்டாகவே அவர் முயல்கிறார்," என்கிறார் பெண்கள் பற்றிய சமூக ஆய்வில் ஈடுபடும் பேராசிரியை விபூதி படேல்.

பிரீத் கராலா
பிபிசி குஜராத்தி

நன்றி - பிபிசி
...மேலும்

Sep 6, 2018

நம் காலத்து நாயகி : சுனிலா அபேசேகர (1952-2013) - என்.சரவணன்

பட்டறிவு

சுனிலாவின் ஐந்தாண்டு நினைவாக கொழும்பில் சில நிகழ்வுகள் இந்த வாரம் ஏற்பாடாகியுள்ளன. அவரின் நினைவாக இந்தக் கட்டுரை

90களின் நடுப்பகுதியில் ஒரு நாள் நடந்த சம்பவம் இது.... திம்பிரிகஸ்யாயவிலுள்ள எமது சரிநிகர் அலுவலகமும் சுனிலாவின் இன்போர்ம் நிறுவனமும் எதிரெதிரில் அலுவலகங்கள் இருந்தன. எமது சகோதர நிறுவனமும் கூட.

சக தமிழ் பணியாளர்களின் பாதுகாப்பில் அனைத்து சிங்கள நண்பர்களும் மிகுந்த அக்கறை எடுப்பார்கள். அப்படி பல சம்பவங்கள் நினைவுக்கு வருகின்றன. அது இருக்கட்டும். எனக்கு ஒரு நாள் நேர்ந்தத்தை பதிய வேண்டும்.

ஒரு நாள் காலியில் உள்ள ஒரு தோழர் ஒருவரை சந்திப்பதற்காக சென்ற இடத்தில் திரும்பி வர இரவு பஸ்சும் இன்றி நான் சிக்கிவிட்டேன். அது ஒரு கிராமம் அங்கிருந்து தொலைபேசியில் அறிவிக்கக் கூட வசதி இல்லை. இருட்டிய பின்னர் அவர்கள் என்னையும் வெளியில் அனுப்புவதாக இல்லை. வழமையாக நான் எங்கு சென்றாலும் இரவில் தங்கும் நிலை ஏற்பட்டால் நான் பத்திரமாக இருப்பதை வீட்டுக்குத் தெரிவித்து விடுவேன். அன்று அதற்கு வழியில்லை என்றாகிவிட்டது. விடிந்ததும் கிளம்பத் தயாராக இருந்தேன்.சுனிலாவின் குரலில் அமைந்த பாட்டுப் பின்னணியுடன் இந்த காணொளி செய்யப்பட்டிருக்கிறது.

அன்று விடியவே அந்த கிராமத்திலிருந்து ஒரு மாட்டு வண்டிலை பிடித்து சந்திவரை வந்து இன்னொரு ட்ரக்டரில் என்னை ஏற்றிவிட்டார் தோழர். அங்கிருந்து டவுனுக்கு வந்து காத்திருந்து பஸ் பிடித்து கொழும்பு வந்து, கொழும்பில் இருந்து நேராக அலுவகத்திற்கு வந்து சேர்ந்தேன். சற்று பின்னேரமாகியிருந்து.

அங்கு அலுவலகம் அல்லோல கல்லோலமாக இருந்தது. என்னைத் தூரத்தில் கண்டவுடன் அங்கு அலுவலக பணியாளர் அதோ சரா வருகிறார் என்று சிங்களத்தில் கத்திய சத்தம் கேட்டதும் அலுவலகத்தின் உள்ளிருந்து சக நண்பர்கள் பதட்டத்துடன் வெளியே வந்தார்கள். அருகில் உள்ள இன்போர்ம் அலுவலகத்திலிருந்தும் நண்பர்கள் வந்து என்ன நடந்தது என்று பதட்டமாக கேட்டார்கள்.

அவர்களைப் பார்த்து நானும் பதட்டமடைந்தேன். எங்கு போயிருந்தாய் உன்னை காணவில்லை என்று ஊடக செய்திகள் வரை போய் விட்டது. நான் நடந்ததைக் கூறினேன். சுனிலா அங்கிருந்து வந்து என் மண்டையில் ஒரு அடி அடித்தார்.

“வீட்டுக்கு நீ நேற்று வரவில்லை என்று அம்மா காலையில் தொடர்பு கொண்டு கூறினார். நாங்கள் பதட்டப்பட்டு மங்களவுக்கு தெரிவித்தோம் (மங்கள சமரவீர: ஒரு சமயத்தில் நம்முடன் நட்புடன் இருந்த இன்றைய அமைச்சர், அன்றைய ஊடக அமைச்சர்). உன்னைக் கடத்திக் கொண்டு போயிருக்கலாம் என்ற பயத்தில் சற்று கடுமையாகவே நாங்கள் உரையாடினோம். பொலிஸ் நிலையங்களில் அப்படி ஒருவர் உள்ளே இல்லை என்றும் பொலிஸ் மா அதிபரும் கூறிவிட்டார். அப்படி கண்டு பிடித்தால் அறிவிப்பதாக கூறியிருக்கிறார். இங்கே நாங்கள் ஏனைய ஊடகங்களுடனும் தொடர்புகொள்ள தயாராகிக் கொண்டிருக்கிறோம். நீ ஹாயாக வந்து இருக்கிறாய்...”

மற்ற நண்பர்கள் சூழ இருந்து பார்த்துக்கொண்டிருந்தார்கள். சிலர் இடைக்கிடை என்னை திட்டித் தீர்த்துக்கொண்டிருந்தார்கள். குற்றவாளியாக அதிர்ச்சியடைந்து இருந்தேன்.

ஏதாவது ஒரு வழியில் எமக்கு நீ தகவல் தந்திருக்க வேண்டும் என்பதே அனைவரது ஆத்திரத்திலும் இருந்த சாராம்சம். நான் காலி டவுனில் அதை செய்திருக்கலாம். எனது தவறை நினைத்து வெட்கித்தும், என்னிலே ஆத்திரமும் கொண்ட தருணம் அது. இவ்வளவு அசட்டையாக நான் பாதுகாப்பு விடயத்தில் பொதுவாக இருந்ததில்லை. அன்று எனக்கு பெரிய பாடம் கிடைத்தது. என்னில் அக்கறை கொண்டவர்களை நான் இப்படி பதட்டத்துக்கும், பயத்துக்கும் உள்ளாக்கியிருக்கிறேன். குறிப்பாக என்னை எந்த இடத்திலும் தன் தத்துப் பிள்ளையாக அறிமுகப்படுத்தும் சுனிலாவை நான் காயப்படுத்திவிட்டேன் என்று மிகுந்த வேதனைப்பட்ட நாள் அது.

சுனிலா உலகறிந்த ஒரு மனித உரிமை செயற்பாட்டாளர். அவரின் கருத்துக்களை அசட்டை செய்ய மாட்டார்கள். எனவே சுனிலா மீண்டும் உரிய இடங்களுக்கு நான் பத்திரமாக இருப்பதை அறிவித்தார்.

சுனிலா இறப்பதற்கு சரியாக ஒரு வருடத்துக்கு முன்னர் 2012 ஒக்டோபர் மாதம் ஒஸ்லோ வந்திருந்தார். ஒஸ்லோவில் மனித உரிமை குறித்த ஒரு கலந்துரையாடலை எனது நிறுவத்தில் ஒழுங்கு செய்தேன். அப்போது பல இடங்களில் இலங்கையின் மனித உரிமை மீறல் குறித்து உரையாற்ற அழைக்கப்பட்டிருந்தார், ஏற்கெனவே திட்டமிட்டபடி என்னையும் அங்கெல்லாம் அழைத்துச் சென்றார். சுனிலா தங்கியிருந்த ஹோட்டலுக்கு சென்று அழைத்துக் கொண்டு வெளியே வரும்போது வெளியில் மழைத்தூரலும், குளிருமாக இருந்தது. நான் எப்போதும் போல எனது ஜெக்கட்டை மூடாமல் அனாயசமாக குடையை அவருக்குப் பிடித்தேன். என் தலையில் அதே குட்டு விழுந்தது.

“முதலில் ஜெக்கட் சிப்பை இழுத்து மூடு. குளிராக இருக்கிறது. விளையாடுகிறாயா... வியாதியை இழுத்துக்கொள்....”

அன்று தான் நான் அந்த இறுதிக் குட்டை வாங்கினேன். அது தான் நான் அவரை சந்திக்கும் இறுதி நாள் என்று எனக்கு தெரிந்திருக்கவில்லை.

சுனிலா புற்றுநோயால் போராடிக்கொண்டிருந்தார். ஆனால் அவரை இறுதியாக சந்தித்த வேளை தான் மிகவும் தேறிவிட்டதாகவும், ஆபத்தான கட்டத்திலிருந்து மீண்டுவிட்டதாகவும் கூறினார். அப்போது அவர் நெதர்லாந்தில் சிறிது காலம் வாழ்ந்து வந்தார். நோயுற்று இருந்த நிலையிலும் இலங்கை திரும்பமுடியாத படி அவருக்கு உயிரச்சுறுத்தல் தொடர்ந்து கொண்டிருந்தது. தமிழ் மக்கள் மீதான இலங்கை அரசின் அக்கிரமங்களை உலகெங்கும் பிரச்சாரம் செய்து கொண்டிருந்ததால் மகிந்த அரசாங்கத்தின் அச்சுறுத்தலுக்கு ஆளாகி நாடு திரும்ப முடியாத நிலையில் இருந்தார். அவரை கிட்ட இருந்து கவனிக்க என்று முமுதினி சாமுவேல், செபாலி இன்னும் சில சக தோழிகள் இலங்கையில் இருந்து மாறி மாறி நெதர்லாந்து வந்து தங்கியிருந்து அவரைக் கவனித்துச் சென்றார்கள்.

“நான் ஒரு அகதியைப் போல நாட்டுக்கு நாடு திரிந்து அலைந்து என்னைத் துரத்திய எமனிடமிருந்து தப்ப முயற்சித்தேன். ஆனால் எமன் எனது உடலுக்குள்ளேயே ஒளிந்திருந்தான். என்று அவர் இன்னொரு நண்பியிடம் தெரிவித்திருந்தார்.

சுனிலாவின் வீடு புற்றுநோயாளும் வேறு உடல் உபாதைகளாலும் பாதிக்கப்பட்ட பல நட்புகளுக்கு உறைவிடமாக ஒரு காலத்தில் இருந்ததை நான் அறிவேன். பேராசிரியர் மௌனகுருவுக்கு இதய சத்திரிசிகிச்சை செய்து சுனிலாவின் வீட்டில் இருந்தபோது அவர் அங்கு தான் இருக்கிறார் என்பதை அவரின் வீட்டுக்கு அருகிலேயே இருந்த எங்கள் அலுவலகத்தில் எவருக்கும் தெரியாதிருந்தது. பார்க்க வருபவர்களால் அவருக்கு இடைஞ்சல் ஏற்படக்கூடும் என்று கவனமாக இருந்தார்.

எங்கள் சரிநிகர் பத்திரிகையை வெளியிட்ட மேர்ஜ் நிறுவனத்தின் ஸ்தாபகரும், நீண்ட காலமாக தன தலைவராகவும் இருந்த பிரபல மனித உரிமையாளர் சார்ள்ஸ் அபேசேகரவின் மகள் தான் சுனிலா.

இலங்கையில் அவரோடு சேர்ந்து பணியாற்றிய காலம் மிகவும் பசுமையானது. நகைச்சுவை உணர்வை எப்போதும் பேணுபவர். அவருடன் நிறைய பயணம் செய்திருக்கிறேன். பல்வேறு விடயங்களை விவாதித்து, உரையாடியிருக்கிறேன். பெண்ணியம், மனித உரிமைகள் சார்ந்த கூட்டங்கள் பலவற்றில் அவரின் மொழிபெயர்ப்பாளராக நான் இயங்கியிருக்கிறேன். எங்கும் என்னை தனது தத்துப் பிள்ளை என அறிமுகப்படுத்துவது அவரது வழக்கம்.

உயிரச்சுறுத்தல் காரணமாக இலங்கையை விட்டு பலரும் தப்பிப் போவதற்கு தனிப்பட்ட ரீதியில் நூற்றுக்கணக்கானோருக்கு அவர் உதவி செய்திருக்கிறார். அது மட்டுமன்றி பின்னர் அவர்கள் தஞ்சமடைந்த நாடுகளில் அகதி அந்தஸ்து பெறுவதற்கு சுனிலா காரணமாக இருந்திருக்கிறார்.


மனித நேயம் மிக்கவராக மட்டுமல்ல சிறந்த மனித உரிமையாளராகவும் உலகளவில் அறியப்பட்டிருந்தார் சுனிலா. 1999ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை சிறந்த மனித உரிமையாளருக்கான விருது அவருக்கு அன்றைய செயலாளர் நாயகம் கொபி அனானால் வழங்கப்பட்டது.

அவர் போன்ற ஒரு பெண் ஆளுமையை நான் இதுவரை இலங்கையில் கண்டதில்லை. 70களின் இறுதியில் புரட்சிகர மேடைகளில் அவரின் குரல் மிகவும் பிரசித்தம். ஜே.வி.பியின் செயற்பாடுகளில் தீவிரமாக செயற்பட்ட அந்த காலப்பகுதியில் “விமுக்தி கீ” (விடுதலை கீதம்) என்கிற பிரச்சாரக் குழுவில் முக்கிய பாடகி. மனித உரிமையாளர், பெண்ணுரிமையாளர், தமிழர்களின் உரிமைக்காகவும் இறுதிவரை குரல்கொடுத்தவர். ஒட்டுமொத்தத்தில் சகல ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் சகல தளங்களிலும் போராடியவர் அவர். சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். பின்னணிப் பாடகியாகவும் குரல் கொடுத்திருக்கிறார்.

அவர் நம்மை விட்டுப் பிரிந்து செப்டம்பர் 9ஆம் திகதியோடு சரியாக ஐந்து வருடங்கள் ஆகிவிட்டன. அவர் நம் காலத்து நாயகி. நம் காலத்து வீராங்கனை.

நன்றி - அரங்கம்
...மேலும்

Aug 6, 2018

MMDA சீர்திருத்தத்தை வலியுறுத்திய பெண்களின் போராட்டமும் எதிரலைகளும் - பாத்திமா மாஜிதா“எம் அனைவருக்கும் விடுதலை கிடைக்கும் வரை எமக்கு விடுதலை இல்லை” என்ற கோட்பாட்டு வாசகத்தினை உள்ளடக்கிய அறிக்கையுடன் இலங்கை முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டத்தில் அனைத்து முஸ்லிம்களுக்கும் சமத்துவத்தையும் நீதியையும் உத்தரவாதப்படுத்தி சீர்திருத்தப்படல் வேண்டும் என்ற முஸ்லிம் பெண்களின் பரிந்துரைகளின் படி அரசாங்கம் அதனை மாற்றியமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பெண்கள் கூட்டமைப்பு கண்டனப்போராட்டமொன்றினை அண்மையில் ஏற்பாடு செய்திருந்தது. இதனைத்தொடர்ந்து இப்போராட்டத்திலில் பங்குபற்றிய பெண்களைக் கொச்சைப்படுத்தியும் வன்மமாக திட்டியும் பேஸ்புக், இணையதளங்களில் பல ஆண்கள் பதிவுசெய்து வருகின்றமையைக் காணக்கூடியதாக உள்ளது.


மட்டக்களப்பு மாவட்டத்தின் அனர்த்த முகாமைத்துவ பெண்கள் கூட்டமைப்பின் இணைப்பாளராக ஒரு சில வருடங்கள் கடமையாற்றியிருப்பதாலும் இக்கூட்டமைப்பின் செயற்பாடுகள் தொடர்பிலான பரந்தளவிலான அனுபவத்தினை நான் பெற்றிருப்பதாலும் சில விடயங்களை தெளிவுபடுத்தலாம் என்று நினைக்கின்றேன். சுனாமிப்பேரலையின் பின்னர் ஆரம்பிக்கப்பட்ட இப்பெண்கள் கூட்டமைப்பில் தமிழ், முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்த பல சிவில் சமூக நிறுவனங்கள் அங்கம் வகிக்கின்றன. அதேநேரம் இக்கூட்டமைப்பின் செயற்பாடுகள் தனியே ஒரு மத அல்லது இனத்தினை அடிப்படையாகக்கொண்டதல்ல. இவ்வமைப்பினால் ஏற்பாடு செய்யப்படும் அனைத்து நிகழ்வுகளிலும் அனைத்து சமூகங்களையும் சேர்ந்த பிரதிநிதிகளும் பங்களிப்பு செய்து வருகின்றனர்.

இந்தநிலையில் முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டச் சீர்திருத்தத்தினை ஆதரித்து ஒழுங்கு செய்யப்பட்ட இப்போராட்டம் இக்கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் முஸ்லிம் அமைப்புக்களின் ஆதரவுடனேயே ஏற்பாடு செய்யப்பட்டன. இதனைத்தொடர்ந்தே தமிழ் பெண்கள் இப்போராட்டத்தில் பங்குபற்றினார்கள். பேரினவாத சக்திகளின் கருப்பொருளாக முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டம் அமையுமாயின் ஆபத்தான விளைவுகள் ஏற்படும் என்பது வெளிப்படையான உண்மை. அதேநேரம் குறித்த சட்டச் சீர்திருத்தம் தொடர்பிலான முன்னெடுப்புகள், கலந்துரையாடல்கள் முஸ்லிம் பெண்களின் தலைமையிலேயே நடைபெற்று வருகின்றன. இங்கே முஸ்லிம் பெண்களுக்கு ஆதரவு வழங்குவதை நோக்கமாகக் கொண்டே இப்போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தினை முன்னிட்டு வெளியிடப்பட்ட அறிக்கையை வாசிக்கும்பொழுது இதனைப் புரிந்துகொள்ள முடியும்.

ஆனால், பெரும்பான்மை இனத்தினைச் சேர்ந்த பெண்கள் தங்களுடன் இணைந்து வாழ்க்கை நடத்தும் முஸ்லிம் பெண்களின் நலன்களுக்காக ஆதரிப்பதை பேரினவாத சக்திகளாக அடையாளப்படுத்தி ஒரு விம்பத்தினை இங்கே உருவாக்குவது பெரும் கண்டனத்திற்குரியது. “எங்களது சட்டத்தினை நாங்கள் பார்த்துக் கொள்கின்றோம். அதனைப் பற்றி கதைப்பதற்கு நீங்கள் யார்” என்ற கேள்விகளை சில முஸ்லிம் ஆண்கள் முன் வைக்கின்றார்கள். அப்படியென்றால் பலதார திருமணம், பராமரிப்பு வழங்காமை, விவாகரத்து போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட பல முஸ்லிம் பெண்கள் தங்களுக்கு நீதி கிடைக்க உதவி கோரி ஒவ்வொரு நாளும் இக்கூட்டமைப்பின் நிறுவனங்களினை நாடி வருகின்றனர். இவ்வாறான பிரச்சினைகளைத் தீர்த்துவைப்பதற்கான முயற்சிகளில் இப்பெண்கள் கூட்டமைப்பு முஸ்லிம் பெண்களுக்கு ஆதரவு வழங்கி வருகின்றது. ஆகவே, இத்தகைய சந்தர்ப்பங்களில் வாய்மூடி மெளனமாக இருக்கின்ற ஆண்கள் ஏன் எங்களது பாதிக்கப்பட்ட முஸ்லிம் பெண்களுக்கு உதவி செய்யவில்லை. அல்லது இச்சட்டத்தினை திருத்துவதற்காக முப்பது ஆண்டுகளாக போராடிவருகின்ற பெண்களுக்கு ஆதரவு தெரிவித்து எங்கேயாவது இந்த ஆண்கள் போராட்டம் நடத்தியிருக்கின்றீர்களா? குறைந்தது கண்டனைத்தையாவது கூறியிருக்கின்றீர்களா?

ஆனால், வேறு ஒரு சமூகத்தினைச் சேர்ந்தவர்கள் இச்சட்டத்தினை திருத்தம் செய்ய குரல்கொடுக்கும்பொழுது மட்டும் உங்களுடைய ஞானக்கண் திறக்கப்படுவது ஏன்? வன்முறையை ஏற்படுத்தும் பாரபட்சமான சட்டங்களைத் திருத்தம் செய்யுமாறு கோரிக்கை விடுப்பது அல்லது அவை தொடர்பில் தங்களது கண்டனங்களை வெளிப்படுத்துவதற்கான கருத்துச்சுதந்திரம் இந்நாட்டின் ஒவ்வொரு பிரஜைக்குமான அடிப்படை சுதந்திரமாகும். இங்கே இன, மத அடிப்படையிலான பாரபட்சம் அவசியமில்லை. இதனை இலங்கை அரசியலமைப்பும் உறுதி செய்கின்றது. இவ்வரிமையை அடிப்படை இஸ்லாமிய விழுமியமும் ஆதரிக்கின்றது.

இன மத ரீதியான வன்முறைகளை இஸ்லாம் ஒரு பொழுதும் அனுமதிப்பதில்லை. தங்களுடன் சேர்ந்து நீதிக்காக பயணிக்கும் இப்பெண்களை காபிர் என்றோ அல்லது வேறு வசைச்சொற்களால் திட்டுவதையோ எநதவொரு உண்மையான முஸ்லீமினதும் அடிப்படை செயலல்ல. தந்தை வழிச் சமூகத்தினை மீண்டும் மீண்டும் காப்பாற்ற பல கட்டுமானங்களை இன்றைய ஆணியச்சமூகம் தகவமைக்கின்றது. ஒன்று, ஆண் மூளையால் சிந்திக்கின்ற பெண்களினை தக்கவைப்பது. இரண்டாவது, அதற்கு எதிராக குரல்கொடுக்கும் பெண்களினை உடல் உள ரீதியாக தாக்குவது. இவற்றினை மேலும் மெருகூட்ட இன மதச் சாயங்கலையும் சிலர் பூசிக்கொள்கின்றார்கள். எனவே, அவ்வாறானவர்களுக்கு பின்வரும் ஹதீஸ் வசனத்தை கூறி இப்பதிவினை முடிக்கின்றேன். அல்லாவிற்கு அஞ்சுங்கள்! உங்களது சமூகத்தைச் சேர்ந்த பெண்களுக்கும், சிறுமிகளுக்கும் அநீதியை ஏற்படுத்தாதீர்கள்.


...மேலும்

Jun 15, 2018

இலங்கையில் கருக்கலைப்பை சட்டமாக்குதல் ஒரு பார்வை


இலங்கையில் கருக்கலைப்பை சட்டமாக்குவதற்கு எதிராக சில மத நிறுவனங்கள் அண்மையில் கூச்சல் மேற்கொண்டதைத் தொடர்ந்து நான் இந்த கட்டுரையை எழுதுகிறேன். நான் இவ்விடயம் தொடர்பாக உலகளாவிய கருத்துகள், நூல்களைப் பற்றி அறிந்துள்ளேன். அத்துடன் சர்வதேச நிபுணர்களுடனும் இது குறித்து கலந்தாலோசித்துள்ளேன். இங்கு நான் கருக்கலைப்பு குறித்த எனது அறிவைத், தகவல்களை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். சில சர்வதேச நிபுணர்கள் அயர்லாந்து குடும்ப திட்டமிடல் சங்கத்துடனும் பிரஜைகள் பணியகத்துடனும் இணைந்து கருக்கலைப்பை அயர்லாந்தில் தளர்த்துவது தொடர்பாக பணியாற்றி வருகின்றனர். 

அயர்லாந்தில் கருக்கலைப்பு செய்வது சட்டவிரோதமாகும். அயர்லாந்து பிரஜைகள், பணியகம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினரிடையே நான் கருக்கலைப்பு தொடர்பான அயர்லாந்து சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என முயன்று வருகிறேன். 

அயர்லாந்து பாராளுமன்றத்தில் விவாதத்தின் பின்னர் (சட்டப்பிரிவு– 08) கருக்கலைப்பை சட்ட ரீதியாக மேற்கொள்வதற்கு 2018 இல் கருத்துக்கணிப்பு மேற்கொள்வது என தீர்மானிக்கப்பட்டது. சட்டவிரோத கருக்கலைப்பை மேற்கொள்ளாதிருக்க, அதாவது கருக்கலைப்பை சட்ட ரீதியாக்க இலங்கையில் இதுவே தக்க தருணம். இலங்கையில் சட்டவிரோத கருக்கலைப்பு தாய் மரணத்திற்கு முக்கிய காரணமாக உள்ளது. 

இந்த விடயம் தொடர்பில் பதிலளிக்கக்கூடிய முக்கிய கேள்விகளாக பின்வருவன அமைகின்றன; 

* சட்டபூர்வ கருக்கலைப்பு சேவையை வழங்க சுகாதாரசேவை அடிப்படைக் காரணம் என்ன? 

* எதிர்காலத்தில் இலங்கையில் கருக்கலைப்பு சட்டம் தொடர்பில் தொடர்புபட்ட மனித உரிமைகள் நிலைவரம் என்ன? 

* இலங்கையில் சிறந்த இனப்பெருக்க சுகாதார சேவையை உறுதி செய்ய என்ன கொள்கைகள் முன்வைக்கப்பட வேண்டும்?

இக்கேள்விகளுக்கு சர்வதேச மகளிர் நோயியல் மற்றும் மகப்பேற்று மருத்துவ மன்றத்தின் எப்.ஐ.ஜி.ஓ தீர்மானத்தின் வழிநின்று பதில் பெறமுடியும். 

* மருத்துவ காரணங்களுக்காக (வாழ்க்கைக்கும் சுகாதாரத்திற்கும் ஆபத்தான கட்டத்தில் கருக்கலைப்பானது சிறந்த இனப்பெருக்க சுகாதார சேவையாக பொதுவாக அனைத்து நாடுகளாலும் கருதப்படுகின்றது. 

மருத்துவ காரணங்களுக்கு அப்பாற்பட்ட கருக்கலைப்பு தொடர்பாக எப்.ஐ.ஜி.ஓ. என்ன கருதுகிறது என்றால் பெண்களின் உரிமைகள் தொடர்பாக பாதுகாப்பற்ற கருக்கலைப்பை தவிர்த்து பாதுகாப்பான கருக்கலைப்பை நியாயப்படுத்தல். 

பல பொதுமக்கள், வைத்தியர்கள் உட்பட கருதுவது என்னவென்றால் இயன்றவரை கருக்கலைப்பை தவிர்ப்பது என்பதாகும். 

இக்குழுவின் தீர்மானமாகப் பெண்களுக்கு உரிய வழிகாட்டுதலின் கீழ் சிறந்த முறையில் கருக்கலைப்பு மேற்கொள்ள அவர்களுக்கு உரிமை உள்ளது என்பதாகும். 

எம்.ஐ.ஜி.ஒ. மற்றும் உலக சுகாதார ஸ்தாபனம் போன்ற சர்வதேச அமைப்புகள் ஏன் பாதுகாப்பான கருக்கலைப்பை சிபார்சு செய்கின்றன? 

பாதுகாப்பற்ற கருக்கலைப்பானது வலியையும் மரணத்தையும் ஏற்படுத்தக்கூடியது. 

கருக்கலைப்பு குற்றமானது. மரண வீதத்தையே அதிகரிக்கும். குற்றமற்ற கருக்கலைப்பு மரண வீதத்தை நிச்சயம் குறைக்கும். குற்றமற்ற கருக்கலைப்பு, கருக்கலைப்பு வீதத்தை அதிகரிக்காது. 

உலகளாவிய ரீதியில் ஆண்டுதோறும் பாதுகாப்பற்ற கருக்கலைப்பிற்கு 50,47,540 பெண்கள் உட்படுகிறார்கள். கருக்கலைப்பை குற்றமற்றதாக்குதல் தாய் மரண வீதத்தை நிச்சயம் குறைக்கும். தென் ஆபிரிக்க பொது மருத்துவமனைகளில் 1994 சட்ட மறுசீரமைப்பிற்கு முன்னர் ஆண்டுதோறும் பாதுகாப்பற்ற கருக்கலைப்பு மூலம் 425 மரணங்கள் ஏற்பட்டன. கருக்கலைப்பை அங்கு சட்டபூர்வமாக்கியப் பின்னர் ஆண்டுக்கு 36 மரணங்கள் என குறைந்தது. 1975 இல் பிரான்ஸிலும் இத்தாலியிலும் கருக்கலைப்பை சட்டபூர்வமாக்கிய பின்னர் மரண வீதம் 20 இல் இருந்து 10 வீதத்திற்கு குறைந்தது. 

உடனடி பொது சுகாதாரம் 

“பல நாடுகளில் கருக்கலைப்பும் உயர் தாய், சேய் மரண வீதமும் பொது சுகாதார பிரச்சினையாக உள்ளது” உலக சுகாதார சபை தீர்மானம் 20:41 ,+ 23 மே 1967 பாதுகாப்பற்ற கருக்கலைப்பு பெண்களுக்கு பாரியதொரு பொது சுகாதார பிரச்சினையாக உள்ளது. இது தொடர்பாக அரசுகள், தொண்டு நிறுவனங்கள் என்பன சட்டவிரோத கருக்கலைப்பை குறைக்க / கைவிட நடவடிக்கை எடுக்க வேண்டும். மனித உரிமைகள், இனப்பெருக்க உரிமைகள் நீண்ட தொலைநோக்கு உடையவையாயினும் பேணப்பட வேண்டும். 

உலகளாவிய மனித உரிமைகள் தீர்மானம்(1948) அதி உச்சபட்ச சுகாதாரம் என்பது அடிப்படை உரிமைகளில் ஒன்று ஆகும். சுகாதாரம் என்பது இன, மத, அரசியல் நம்பிக்கை, பொருளாதார, சமூக நிலைப்பாடுகளுக்கு அப்பாற்பட்டு பேணப்பட வேண்டும். 

உலக சுகாதார ஸ்தாபனம் (Who) அரசியலமைப்பு 1948 உள, உடல் மற்றும் சமூக சிறப்பான நிலையே சுகாதாரம் ஆகும். இது நோயை தடுத்தல் என்பது மட்டும் ஆகாது. 

மனித உரிமைகள் தொடர்பில் ஐ.நா. சர்வதேச மாநாடு டெஹரான் (1968) இனப்பெருக்க உரிமை என்பது மனித உரிமைகளில் ஒரு பகுதியாகும். மனித உரிமைகள் என்ற வகையில் பாதுகாப்பான கருக்கலைப்பு உரிமை பின்வரும் தலைப்புகளில் கருதப்பட வேண்டும். 

வாழ்வதற்கான உரிமை, சுகாதாரத்திற்கான உரிமை, பாகுபாடற்ற சமத்துவத்திற்கான உரிமை, கொடூரமான, மனிதாபிமானமற்ற தரக்குறைவான பேணல் அற்ற தன்மைக்கான உரிமை, சுதந்திரம் தனிநபர் பாதுகாப்பு மற்றும் தனித்திருந்தல் என்பதற்கான உரிமை, தகவல் மற்றும் கல்விக்கான உரிமை. 

பாதுகாப்பான கருக்கலைப்பு பற்றி புரிந்துணர்தலுக்கு எது அவசியமாகிறது, இது கருக்கலைப்பை தூண்டுவதாக அமையக்கூடாது, சிந்தாந்த கோட்பாடை மதிப்பதாக இருக்க வேண்டும், பெண் கருவுறும் கர்ப்ப காலத்தை வரையறுத்து தீர்மானித்தல், கருக்கலைப்புக்கான தேவையை வலியுறுத்தும் நிபந்தனைகள், கருக்கலைப்பை குறைப்பதற்கான சிறந்த ஆளுமையுடன் தலையீடு செய்தலை தூண்டுதல், பாதுகாப்பான கருக்கலைப்புக்கு திட்டமிடுதல் மற்றும் முகாமை செய்தல், அனுபவம் உள்ள திறமையானவர்களின் சேவை, சான்றுள்ள தராதரம் மற்றும் வழிகாட்டல்கள், கருக்கலைப்பின் வகைகள் யாரால் எங்கு மேற்கொள்ளப்படுகிறது என்ற தகவல், கருக்கலைப்பு முறைகள், சுகாதார சேவை நிபுணர்கள் மற்றும் வசதிகள் தொடர்பில் சான்று மற்றும் அனுமதி, தகுந்த நபரின் (வைத்தியரின்) அணுகுமுறை 

இக்கட்டுரை எமது நாட்டில் கருக்கலைப்பு பற்றி எவ்வாறு உதவக்கூடும்? 

பிறப்பு, கருக்கலைப்பு, இறப்பு என்பன மனித இனம் தோன்றிய காலத்தில் இருந்து தொன்றுதொட்டு நிலவி வருகிறது. இலங்கையில் தாய் மரண வீதத்தில் மூன்றாம் இடத்தில் கருக்கலைப்பு காணப்படுகிறது. இலங்கையில் பிரித்தானியர் காலத்தில் 1885 இல் கருக்கலைப்பு குற்றமாக இருந்து வருகிறது. நூற்றுக்கு நூறு வீதம் பாதுகாப்பான மகப்பேறு என்று எந்தவொரு நாட்டிலும் இல்லை. தாய் மரணம் என்பது இடம்பெறவே செய்யும். ஆனால் குறைக்க முடியும். இங்கு தாய், சேய் நல மருத்துவர்கள் 320 பேர் உள்ளனர். உங்களின் திருமணமாகாத ஒரே 16 வயது மகள் கர்ப்பமுற்றால் நீங்கள் என்ன செய்வீர்கள்? பல பெற்றோர் இது தொடர்பான பிரச்சினையுடன் என்னை அணுகியுள்ளனர். திருமணம் ஆகாமல் கர்ப்பமான பெண்களை பராமரிக்கும் நிலையத்திற்கு உங்கள் மகளை அனுப்பி பிள்ளை பெற்றாலும் பிள்ளையை தத்துக்கொடுத்துவிட்டு வீடு திரும்பவும் என கூறலாமா அல்லது கருக்கலைப்பு சட்ட ரீதியான சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு அனுப்பவும் என கூறலாமா? கருக்கலைப்பின் ஒரு வாரத்திற்கு பின்னர் அப்பெண் பாடசாலை செல்ல முடியும். மகளின் எதிர்காலமே இங்கு முக்கியம். 

இத்தனை வருடகாலமாக கருக்கலைப்பு பற்றிய எந்தவொரு கூக்குரலும் கூச்சலும் இடம் பெறவி ல்லை. கருக்க லை ப்பை அண்மையில் சட்டபூர்வமாக்க எத்தணித்தபோதே கூச்சல் போடுகின்றனர். கருக்கலைப்பால் எந்த ஒரு உயிரிழப்பும் ஏற்படாத ஐக்கிய இராச்சியம் போன்று ஏன் இலங்கை மாறக்கூடாது? கருக்கலைப்பை சட்ட ரீதியாக மாற்றாவிட்டால் சட்டவிரோத கருக்கலைப்பு வியாபாரம் கொடிகட்டிப் பறக்கும். நானே வயது முதிர்ந்த மகப்பேற்று மருத்துவர் ஆகும். சட்டவிரோத கருக்கலைப்பில் இரத்தப்பெருக்கிற்கு உட்பட்டு பல பெண்கள் மரணிப்பதைப் பார்த்துள்ளேன். ஒருவர் சட்டபூர்வ கருக்கலைப்பிற்கு ஆதரவு வழங்கா

விட்டால் அவர் மறைமுகமாக சட்டவிரோத கருக்கலைப்பிற்கு ஆதரவு வழங்குகிறார் என்ற பேராசிரியர் எஸ் அருட்குமரனின் வசனத்துடன் இதனை நிறைவு செய்கிறேன்.

(பேராசிரியர் வில்பிரட் பெரேரா)

நன்றி - வீரகேசரி

...மேலும்

Apr 9, 2018

சூரியாவின் "எக்சக்குட்டிவ் லுக்" கட்டமைப்பது எதனை? - நிர்மலா கொற்றவை


திரு. சூர்யா நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை உணர்ந்துதான் செய்கிறீர்களா, அல்லது வெறும் நடிகன் என்கிற உணர்விலிருந்து மட்டுமே உங்கள் தேர்வுகளை பொதுவெளியில் மேற்கொள்கிறீர்களா?

மீண்டும் மீண்டும் தவறான கருத்தியலை, பாகுபாட்டை நியாயப்படுத்தும் வகையிலான விளம்பரங்களிலேயே நடிக்கிறீர்களே, இதன் ஆபத்தை எப்போது உணர்வீர்கள்?

உஜ்ஜாலா கிர்ஸ்ப் & ஷைன் என்னும் விளம்பரத்தை இன்று காண நேர்ந்தது. அதில் என்ன திறமை இருந்தாலும் இந்த உலகம் ஒருவனின் உடையை வைத்துத்தான் மதிக்கிறது என்று ‘அக்கறையுடன்’ பேசியுள்ளீர்கள். குறைந்தபட்சம் அதையாவது பேசினீர்களே, மகிழ்ச்சி. ஆனால் அப்படி பாகுபடுத்திப் பார்க்கும் ஒரு பிரச்சினைக்குத் தீர்வு பாதிக்கப்பட்டவருக்கு அறிவுரை வழங்குவது, அல்லவா? இது எவ்வளவு வன்முறையானது, ஆபாசமானது என்பதை உணர முடிகிறதா உங்களால்?முதல் விளம்பரத்தில், ஒரு அதிகாரி உங்கள் மிளிரும், விரைப்பான உடையக் கண்டு சுரேஷ் என்பவராக உங்களை நினைத்து புன்னகையுடன் அழைக்கிறார், அது தாங்கள் இல்லை என்றதும் மங்கலான கசங்கிய சட்டையுடன் வரும் மற்றொருவரைப் பார்த்து அந்த அதிகாரியின் முகம் கோணுகிறது. சந்திப்பதை தவிர்த்து செல்கிறார். ஆம் இதுதான் சமூக யதார்த்தம்.

அடுத்த விளம்பரத்தில் நேர்முகத் தேர்வுக்கு வந்திருக்கும் ஒருவர் தன்னுடைய MERITகளை சொல்லி பெருமை பேசுகிறார், ஆனால் அதே திறமைகளைக் கொண்டிருக்கும் உங்களின் உடைக்காக அந்த நிறுவனம் உங்களை தேர்ந்தெடுப்பதாகச் சொல்கிறது. உடனே “இந்த உலகம் நம்ம திறமையை மட்டுமல்ல, நம்ம டிரஸ்ஸையும் எடை போடும்” என்று உருக்கமாகப் பேசுகிறீர்கள்.

ஆனால் இதற்குத் தீர்வு – உஜாலாவுக்கு மாறுவதா? அல்லது அப்படி பேசிய அதிகாரியின் சட்டையைப் பிடித்துக் கிழிப்பதா? உங்கள் திரைப்படங்களில் அநியாயங்களை எதிர்த்தும், ஒடுக்குபவனை அடித்தும் பேசும் தார்மீக்க் கோபங்கள் எங்கு போனது? உங்களைப் போன்றோரை கதாநாயகனாக கட்டமைக்க ‘படைப்பாளிகள்’ அக்கறையோடு புனையும் வசனங்களையும், சிந்தனைகளையும் ஓய்வாக இருக்கும் போது அசை போட்டு பார்த்தாலே, கொஞ்சமேனும் அரசியல் விழிப்புணர்வு ஏற்படுமே. அதில் பெண் விடுதலைக்கு இடமில்லை எனினும், அநியாயங்களை தட்டிக் கேட்க வேண்டும், ஏற்றத்தாழ்வு கூடாது என்னும் Formula உணர்வையாவது எடுத்துக்கொள்ளலாமே.

இந்த நாட்டில் (உலகெங்கிலும்) மொழி, இனம், சாதி, மதம், பாலினம், உடல் திறன் என்று பல்வேறு ’அடையாளங்களை’ வைத்து மனிதர்கள் பாகுபாட்டிற்கு உள்ளாகிறார்கள், ஒடுக்கப்படுகிறார்கள், அடித்துக் கொல்லப்படுகிறார்கள். எல்லாரும் உஜாலாவுக்கு மாறிவிட்டால் தப்பித்துக்கொள்லலாமா? உலகம் இப்படித்தான் இருக்கு நாமதான் மாறணும் என்பது என்னவிதமான சமூக அக்கறை, என்னவிதமான அரசியல் புரிதல்? பெண்களும், குழந்தைகளும் வன்புணர்வுக்குள்ளாகையில் அவர்களின் உடைதான் காரணம் என்று இந்த ஆணாதிக்க சமூகம் வியாக்கியானம் செய்கிறதோ, அதற்கு நிகரான ஒரு உபதேசத்தை நீங்கள் இந்த விளம்பரத்தில் செய்துள்ளீர்கள். அதைப் பார்க்க பார்க்க நெஞ்சு பதைபதைக்கிறது. விளிம்பு நிலையில் உள்ளவர்களுக்குத் தான் அதில் உள்ள ஆபத்தான வணிகப் பேச்சின் பாதிப்பு புரியும். நீங்கள் எல்லாம் ‘மேட்டுக் குடியினர்’ உங்களைப் போன்றோருக்கு ‘சமூக அக்கறை’ என்பது பொழுதுபோக்கு, பெயர், புகழ், புண்ணியம் சேர்க்கும் வழிமுறையாக இருக்கலாம். எங்களுக்கோ அது வாழ்க்கைப் போராட்டம். போராட்டமே எங்கள் வாழ்க்கை என்னும் நிலையில் உள்ளோம். போராடுபவர்கள் அதற்கும் உரிமை இன்றி சிறையிலடைக்கப்படுகிறார்கள். போலீஸும் அரசும் அப்படித்தன் ஒடுக்கும், விரைப்பான உடை அணிந்து சென்றால் விட்டுவிடும் என்று நாம் சொல்ல முடியாது சூர்யா.

இந்த நாட்டின் பெரும்பான்மை மக்கள் திரள் (உழைப்பாளிகள்) உடுத்த கோவணம் கூட இல்லாமல் இருப்பதைக் கண்ட காந்தி தன் மேலாடையைத் துறந்தார். இந்த விளம்பரத்தில் வருவது போல் - பிறப்பாலேயே ஒரு பிரிவினர் தீண்டத்தாகாதோர், நாகரீகமற்றோர், குற்றப்பழங்குடிகள் என்றெல்லாம் ஒதுக்கப்பட்ட சமூகத்திலிருந்து தலைவனாய் மேலெழுந்த அம்பேத்கர் ’நாகரீக’ உடை அரசியலை கையிலெடுத்தார். அப்போதும் அவரது சாதியைச் சொல்லி ஆதிக்க சமூகம் அவரை அவமானப்படுத்தி, ஒதுக்கி வைத்து கொடுமைகள் செய்தது. தங்களை வன்புணர்வு செய்யும் இராணுவத்திற்கு எதிராக பெண்கள் சிலர் முழுவதுமாக ஆடைகளைத் துறந்து தங்கள் நிர்வாண உடலை ஆயுதமாக்கினர். இப்படிப்பட்ட போராட்டங்கள் எல்லாம் அதிகாரத்திற்கு எதிராக ஆயுதமேந்துவதாக இருந்ததே ஒழிய பாதிக்கப்பட்டவர்களுக்குப் (வணிக ரீதியான) பொருள்களை வழங்கி உங்களை நீங்கள் மாற்றிக் கொள்ளுங்கள் என்று சொல்லவில்லை. முதலாளிகளே உங்கள் விடிவெள்ளி, அவர்கள் தயாரிக்கும் பொருள்களே எங்கள் ‘உயர்வுக்கு’ வழி என்பது எவ்வளவு சுயநலம் மிக்க போதனை.

சமத்துவத்தை நிலைநாட்ட யார் மாற வேண்டும்?

நீங்கள், இயலாதவர்களுக்கு கல்வி கொடுக்கும் இலட்சிய அமைப்பை நடத்துகிறீர்கள்.

முதலாளிகளுக்கு மலிவான கூலிகளை உற்பத்தி செய்வதற்கான கல்விதான் அது எனினும், அதன் பயனைக் கூட வீணடிப்பதில் திரைப்படங்களும், விளம்பரங்களும் முதன்மைப் பங்கு வகிக்கின்றன.

உலகெங்கிலும் வறுமையே மரணத்திற்கான முதல் காரணமாக இருக்கிறது. அதில் மூன்றில் ஒரு பங்கு இந்தியர்கள். ஒருநாளைக்கு 20 ரூபாயில் வாழும் நிலையில் 836 மில்லியன் மக்கள் இருப்பதாகவும், தினம் தினம் 7000 இந்தியர்கள் வறுமையின் காரணமாக இறப்பதாகவும் சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதைத் தவிர ஊட்டச்சத்து குறைபாட்டால் இறக்கும் குழந்தைகள், பெண்களின் எண்ணிக்கை இலட்சக் கணக்கில், ஆனால் நமக்கிருக்கும் கவலையோ முதலாளிகளின் பொருள்களுக்கு நுகர்வோரைப் பிடித்துக் கொடுத்து (ஆம், ஆட்பிடிக்கும் வேலைதான் அது) அவர்களை காப்பதாகவே இருக்கிறது.

மிகவும் வேதனையாக உள்ளது சூர்யா.

திரைத்துரையில் பெரும்பாலும் எதையோ செய்து பிழைக்கிறீர்கள்… பிற்போக்குத்தனமான சிந்தனைகளை உயர்த்திப் பிடித்து இந்த சமூகத்தை பின்னுக்குத் தள்ளுவதில் முனைப்புடன் இருக்கிறீர்கள். அதை பொறுத்துக்கொள்கிறோம். ஆனால் விளம்பரங்களிலும் அதுபோன்ற கருத்தியல்களை போதித்து இச்சமூகத்தை சீரழிவிற்குத் தள்ளிவிடாதீர்கள். ஏனென்றால் திரைப்படம் என்பதை பார்க்க அல்லது பார்க்காமல் இருக்க குறைந்தபட்ச தேர்வு எங்களிடம் உள்ளது, ஆனால் விளம்பரம்என்பது எங்களின் அனுமதியின்றி எங்கள் படுக்கையறை வரை எட்டிப் பார்க்கும் சாதனம். அது மீண்டும் மீண்டும் ஒளிபரப்பாகிறது. குறிப்பாக குழந்தைகள் விளம்பரங்களால் மிகவும் ஈர்க்கப்படுகின்றனர். அவர்களின் சிந்தனைகளை விளம்பரங்கள் கட்டமைக்கவல்லது. குறிப்பாக தரம், அந்தஸ்து, வெற்றி, இலட்சியம் பற்றி விளம்பரங்கள் போதிப்பவை எல்லாம் போட்டி போட்டுக்கொண்டு மனிதனை மனிதன் வெறுக்கச் செய்தலே. அதிலிருந்து அவர்களை மீட்டெடுப்பது பெரும் சவாலாக மாறி வருகிறது.


இச்சமூகத்தை நுகர்வு கலாச்சார அடிமைகளாக்குவதில் விளம்பரங்களே பெரும்பங்கு வகிக்கின்றன. அதனால் பயனடைவது முதலாளிகளே அன்றி மக்கள் அல்ல. Pl do not work hard to make a Capitalist Reach at the cost of our lives & problems.

கூடுதலாக இதற்கும் ஆலோசனை வழங்குங்கள்: பெண்கள் என்பதால் அவர்களின் உடலை இழிவாகப் பார்க்கும், நுகர நினைக்கும், வன்புணர்வால் சிதைக்கும் “எக்சக்குட்டிவ் லுக்கிலிருந்து” தங்களைக் காத்துக்கொள்ள பெண்கள் எதற்கு மாற வேண்டும்?

உங்களைப் போன்று உச்சத்தை எட்டாமல் கூலிக்கு மாறடிக்கும் நிலையில் உள்ளவர்களை நோக்கி நாம் இக் கேள்விகளை எழுப்பும் அவசியமில்லை, ஆனால் எல்லாவிதத்திலும் இன்று நீங்கள் ஓர் உயர்நிலையை எட்டியுள்ளீர்கள். தேர்வு செய்யும் சுதந்திரமும், அதிகாரமும் உங்களிக்கிருக்கிறது. அதை கூருணர்வுடன் பயன்படுத்துங்கள்.

உங்களின் சமூக அக்கறையின் காரணமாகவே இந்த வேண்டுகோளை நாங்கள் விடுக்கிறோம். அத்தோடு, இது உங்களுக்கு மட்டுமான வேண்டுகோளன்று விளம்பரங்களில் நடிக்கும் அனைத்து நடிகர்கள், நடிகைகள் மற்றும் இதுபோன்ற ஆபத்தான, பிற்போக்குத்தனமான, வணிகரீதியான சமூக அக்கறையை பண்டமாகப் பயன்படுத்தி விளம்பரங்களை உருவாக்கும் ‘படைப்பளிகள்’ ஆகியோரிடமும் வைக்கும் வேண்டுகோள்.

விளம்பரங்கள் மிகவும் ஆபத்தான பிரச்சாரம் … சமூக பொறுப்புடன் செயல்படுங்கள்.

நன்றி
கொற்றவை
...மேலும்

Mar 15, 2018

உஜ்வாலாவும் நானும் - ரானா அயூப்


நான் அந்தப் பேரணியில் கலந்து கொள்வதற்கு முன்னால் என்னுடைய முகத்தில் மிகத் தாராளமாக ‘சன்ஸ்கிரீன்’ தடவிக் கொண்டேன். நடக்கும்போது கொதிக்கும் கோடை வெயிலால் தலைவலி வந்து விடாமல் இருப்பதற்கு என்னுடைய அம்மா ஒரு பாட்டில் உடலில் நீர்ச்சத்தை தக்க வைக்கும் திரவம் (ஓஆர்எஸ்) என்னிடம் கொடுத்திருந்தார். நான் என் தலை மற்றும் முகத்தை துணிகொண்டு மூடியிருந்தேன். ஓடுவதற்குப் பயன்படுத்துகின்ற நைக் ஷூ என்னுடைய கால்களில் இருந்தது.

பிறந்து ஒரு மாதமே ஆகியிருந்த குழந்தையை வீட்டில் விட்டுவிட்டு, தன்னுடைய கிராமத்தினருடன் இந்தப் பேரணியில் கலந்து கொண்டிருக்கும் உஜ்வாலாவோடு சேர்ந்து நடந்த போது, நகர்ப்புறத்தில் மிகுந்த பாதுகாப்புடன் யாருக்கும் கிடைக்காத வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் எனக்கு மிகவும் சங்கடமாக இருந்தது. அவளது தலை உச்சியில் இருந்த மயிரிழையில் இருந்து ஒருதுளி வியர்வை வழிந்தோடியபோது நான் அவளுக்கு என்னிடம் இருந்த ஓஆர்எஸ் பாட்டிலைக் கொடுத்தேன். அவள்சிரித்துக் கொண்டே, மராத்தி மொழியில் சொன்னாள்: “நன்றி அக்கா! எங்களுக்குப் பழகி விட்டது. உங்களுக்குத் தேவைப்படலாம்” என்றாள்.

உஜ்வாலா வைத்திருந்த பை, ஆவணங்களால் நிறைந்திருந்தது. பெரும்பாலும் உள்ளூரில் இருக்கும் வங்கிகளுக்கான விண்ணப்பங்கள். கிராமப்புற பதிவாளரிடமிருந்து, உள்ளூர் பஞ்சாயத்திடமிருந்து பெறப்பட்ட மராத்தியில் எழுதப்பட்ட சில கடிதங்களும் இருந்தன. கடந்த மாதம் குழந்தை பெற்ற பிறகு, கடுமையான ரத்த சோகையின் காரணமாக உள்ளூர் மருத்துவமனையில் உஜ்வாலா அனுமதிக்கப்பட்டாள்; குழந்தை மிக எடை குறைவாகப் பிறந்திருந்தது. சத்துள்ள உணவு என்பதே ஆடம்பரப் பொருளாக இருப்பதால், மூன்று வேளை சாப்பாடு என்பது ஒரு போராட்டமாகவே இருந்தது. சில நாட்களில் அவளுடைய குடும்பம் அரிசி மற்றும் சர்க்கரையை மட்டும் வைத்து ஒருவேளை மட்டுமே சாப்பிடும் நிலைமையும் ஏற்படும். அதனால் அவள் தன்னுடைய குழந்தைக்கு சரியாகத் தாய்ப்பால் கொடுக்க முடிவதில்லை.

கடந்த ஆண்டு, அவளுடைய சிறிய நிலத்தில் விளைந்திருந்த பயிர்கள் அனைத்தும் பூச்சிகளால் நாசம் செய்யப்பட்டன. அவளுடைய குடும்பம் மாவட்டக் கூட்டுறவு வங்கியில் இருந்து பெற்ற கடனை செலுத்த முடியவில்லை. இதையெல்லாம் கூறிக்கொண்டே அவளது விண்ணப்பங்களை ஒப்படைப்பதற்கு யாராவது அரசாங்கத்தில் தெரிந்தவர்கள் இருக்கிறார்களா என்று என்னிடம் கேட்டாள். நான்அவளுக்கு கொஞ்சம் பணம் கொடுக்க முயன்றேன். வேண்டாம் என்று மறுத்து விட்டாள். நீங்கள் கொடுக்கும் பணம் ஒரு மாதத்திற்கு கூட நீடிக்காது. அரசாங்கம் மட்டுமேஎங்களுக்கு உதவ முடியும், உங்களால் முடியுமானால் எங்களைக் கவனிக்குமாறு அவர்களிடம் சொல்லுங்கள் என்றாள்.

“லால் சலாம்” என்ற முழக்கங்களை எழுப்பிக் கொண்டு சிவப்புத் தொப்பி, கொடிகளை வைத்திருந்த இளம் சிறுவர்கள் அவளுக்கு சற்றுப் பின்னால் நடந்து வந்து கொண்டிருந்தார்கள். மஜ்தூர் படத்தில் திலீப்குமார் பாடும் பாடலை அவர்கள் பாடிக்கொண்டு வந்தார்கள். அவர்களில் ஒருவர் அந்தப் பாடலில் இருந்த ஒரு வரியை மறந்து போனபோது, சிரித்துக் கொண்டே மராத்தி பாடலுக்கு மாறினார்கள். இடதுசாரிக் கட்சியில் உறுப்பினர்களாக இருக்கிறீர்களா என்று நான் அவர்களிடம் கேட்டேன். அவர்கள் சிரித்துக் கொண்டே, தொலைக்காட்சி சேனலில் வேலை செய்கிறீர்களா என்று என்னிடம் கேட்டார்கள். மற்றொருவர் "அக்கா, நாங்கள் எல்லாம் விவசாயிகள்" என்றார்.

மாலை வேளையின் இறுதியில், பேரணியில் கலந்துகொண்ட சிலர் சாலையில் இருந்த தேநீர் கடை முன்பாக சற்று நின்று செல்ல முடிவு செய்தனர். 70 வயதிற்கு மேற்பட்டவராக அந்தக் குழுவில் இருந்த வயதான ஒருவருக்கு தொண்டர் ஒருவர் தேநீர் வழங்கினார். யாரோ ஒருவர் பார்லே-ஜி பிஸ்கட்டை அவரிடம் கொடுத்தார். நான் அவரிடம், நாசிக்கிலிருந்து மும்பைக்கு இந்த வயதில் நடந்துவருவது உங்களுக்குத் தேவைதானா என்று கேட்டேன். நான் ஒன்றும் தனியாக இல்லை, என்னுடைய நண்பர்கள் பலரும் இந்த பேரணியில் கலந்து கொண்டிருக்கிறார்கள் என்று அவர் தெரிவித்தார். நேற்று இரவு என் கால்கள் மரத்துவிட்டன என்று சொல்லி விட்டு தனக்கிருக்கும் நீரிழிவு நோயைப் பற்றி என்னிடம் கூறினார். இந்த நடை அவருக்கு மிகவும் கடினமாகவே இருந்தது, ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கொரு முறை அவர் கழிப்பறைக்குச் செல்ல வேண்டியிருந்தது. ‘‘நகரத்தில் உள்ள உங்கள் மக்கள் மிகவும் நல்லவர்கள், எங்களுக்கு உணவு, தண்ணீரை கொடுத்தார்கள், மந்திராலயாவில் (மகாராஷ்டிரா தலைமைச் செயலகம்) உட்கார்ந்திருக்கும் உங்கள் தலைவர்களிடம் எங்களுக்கு நல்லது செய்யுமாறு கேட்கவே நாங்கள் வந்திருக்கிறோம். கிராமத்தில் இருந்து கால்நடையாக உங்கள் நகரத்திற்கு வருமாறு அவர்கள் எங்களைக்கட்டாயப்படுத்தி விட்டார்கள். எனக்கு உடல்நிலை சரியில்லாவிட்டாலும் கூட, என்னுடைய மகனுக்கும் அவனது பிள்ளைகளுக்கும் ஏதோ செய்திருப்பதாகவே நான் நினைக்கிறேன். வீட்டில் உட்கார்ந்துகொண்டிருந்தால் கடனை அடைக்க முடியாது” என்றார் அவர்.

அவருக்கு நம்பிக்கை இருக்கிறது. அவர் என்னிடம் தன்னுடைய மற்றும் தனது பேரனின் ஆதார் அட்டைகளைக் காட்டினார். “அவர்களுக்குத் தேவையான எல்லா பொருட்களும் எல்லா ஆவணங்களும் என்னிடம் இருக்கின்றன, வாக்காளர் அடையாள அட்டையும் நான் வைத்திருக்கிறேன்” என்றார்.

இதற்கிடையே சிவசேனா கட்சியின் இளைஞர் பிரிவின் தலைவரும், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயின் மகனுமான ஆதித்யா தாக்கரே பேரணியில் கலந்து கொண்டவர்களிடம் உரையாற்றினார்; “உங்கள் சிவப்புக் கொடிகளை அவர்கள் பார்க்கிறார்கள், நான் உங்கள் ரத்தத்தின் சிவப்பு நிறத்தைப் பார்க்கிறேன்,” என்று தங்களுடைய கட்சிஅங்கம் வகிக்கின்ற கூட்டணி அரசாங்கத்தைச் சீர்குலைக்க இடதுசாரிகள் முயற்சிப்பதாக பாஜக தலைவர்கள் கூறுவதைப் பற்றி விமர்சனம் செய்யும் வகையில் பேசினார். அரசியல் மறதிக்குள் வீழ்ந்துகொண்டிருக்கும் நவநிர்மாண் சேனா கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரேவும் கூட கலந்து கொண்டார்.


என்னைச் சுற்றிலும் இருந்தவர்களிடம் நான், சிவசேனா அல்லது காங்கிரஸ் கட்சி உங்களுடைய பேரணிக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டுமா என்று கேட்ட போது, கொடிகளின் நிறம் பற்றி எங்களுக்கு கவலையில்லை என்றனர். ‘‘மன்மோகன் சிங் ஒரு விவசாயியின் மகனாகவே இருந்தார். மோடியும் அப்படித்தான் கூறுகிறார். அவர் தேநீர் விற்றுக் கொண்டிருந்தவர். எங்கள் மீது அக்கறை கொண்டவர்கள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தால் என்ன? எங்களை இந்த இக்கட்டில் இருந்து விடுவிப்பவர்கள் எங்களைக் காக்க வந்த ரட்சகர்களாகவே இருப்பார்கள்.’’

சிவப்பு நதி மும்பையை நெருங்க, நெருங்க ஆள்பவர்களின் வாட்ஸாப் குழுக்களும், ட்விட்டர் கைத்தடிகளும் செயலில் இறங்கின. மாநிலத்திலும், மத்தியிலும் இருக்கின்ற பாஜக தலைமையிலான அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மையைக் குலைப்பதற்காக மாவோயிஸ்டுகள் திட்டமிட்டு இருப்பதாக செய்திகள் பறக்க விடப்பட்டன. மும்பை பாஜக எம்பி பூனம் மகாஜன் நாடாளுமன்றத்திற்கு வெளியில் இருந்து பத்திரிகையாளர்களிடம் பேசும் போது, நகர்ப்புற மாவோயிஸ்டுகளால் இந்த விவசாயிகள் போராட்டம் ஊக்குவிக்கப்படுகின்றது என்றார். ஒருவேளை நாடாளுமன்றம் நடைபெறாமல் இருந்திருந்தால், தனது தொகுதியைத் தாண்டிச் செல்கின்ற விவசாயிகளின் கால்களில் உள்ள கொப்புளங்களை அவர் பார்த்திருக்கலாம்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம், மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் விவசாயிகளின் கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்து அறிவித்தார். விவசாயிகள் சங்கத் தலைவர்கள் தங்களுடைய போராட்டங்களை அப்போது விலக்கிக் கொண்டனர். அந்த அறிவிப்பின் மூலம் 89 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள் என்று கூறப்பட்டது.
ஆனால் தன்னிச்சையான கடன் தள்ளுபடி செயல்முறையால் 31 லட்சம் விவசாயிகளே பயன் பெற முடிந்ததாக இந்தப் பேரணியின் அமைப்பாளர்கள் கூறினார்கள்.

இந்த ஆண்டு ஜனவரி முதலே, தேசியவாத காங்கிரஸ்,காங்கிரஸ் மற்றும் சிவசேனா கட்சிகளின் மூத்த தலைவர்கள் மாநில அளவிலான போராட்டம் பற்றி பேசி வந்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய விவசாயிகள் சங்கம் மாநிலம் முழுவதும் உள்ள ஒவ்வொரு கிராமங்களுக்கும் சென்று கிராமவாசிகளிடம் இருந்து கடன் தொடர்பான விவரங்களைச் சேகரித்து விபரங்களை எடுத்துக் கொண்டு விவசாயிகளைத் திரட்டியது.

நான் இதை எழுதும்போது, ​​விவசாயிகள் தங்களுடைய போராட்டத்தை முடித்துக் கொண்டுள்ளனர்.
முதலமைச்சர் பட்னாவிஸ் அனைவரின் எதிர்பார்ப்பின்படியே, விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்வதாக அறிவித்தார். அடுத்த ஆண்டு மகாராஷ்டிரா மாநிலமும் நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்ந்து தேர்தலை எதிர்கொள்ளவிருக்கிறது. விவசாயிகளின் குரல்கள் இப்போது நம் வீடுகளுக்குள், மும்பையில் இருப்பவர்களின் வீடுகளில் மட்டுமல்லாது, நாடு முழுக்க இருக்கின்ற வீடுகளில் எதிரொலித்துக் கொண்டிருக்கின்றன. வேதனையைத் தரும் இந்த துன்பகரமான பேரணியை அனைவரும் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.

களைப்படைந்த முகங்கள், காயமடைந்த கால்களின் படங்கள் மூலமாக, வழக்கமாக ‘வளர்ச்சியை’ மையப்படுத்துகின்ற வாட்ஸாப் பதிவுகளும் பார்வேர்டுகளும் மாற்றி அனுப்பப்பட்டன. நாட்டைப் பீடித்திருக்கும் விவசாயத் துயரத்திற்கு ஆதரவாக குரல் கொடுப்பதற்கான சாத்தியத்தை இந்த இயக்கம் கொண்டிருக்கிறது. இப்போதைக்கு வாக்குறுதி கொடுத்து, காற்றின் திசையை மாற்ற மோடியும் பட்னாவிசும் முயற்சித்திருக்கிறார்கள். ஆனால் மகாராஷ்டிராவில் உள்ள விவசாயிகளோ தங்களை மிக எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது என்பதை நாட்டின் பிற பகுதிகளுக்கும் திசை திருப்பி தெளிவுபடுத்தி உள்ளனர்.

கடந்த காலத்திலும் வாக்குறுதிகள் வழங்கப்பட்டிருக்கின்றன என்றாலும், முன்பு மாதிரி இப்போது அது நிறைவேற்றப்படாமல் இருக்கப் போவதில்லை. நம்முடைய விவசாயிகள் மீண்டுமொரு முறை எச்சரிக்கை வழங்குவதற்காக நமது அலட்சியமான நகரத்திற்கு அடுத்த வருடம் திரும்பி வரலாம் என்று கருதி ஆட்சியாளர்கள் சமரசம் செய்து கொள்ளக்கூடிய வாய்ப்புகளும் இருக்கின்றன.
ஆனால், விவசாயிகளின் துயரக் கதைகள்,விவசாயிகளின் தற்கொலைகள் என்று பத்திரிகைகளின் முக்கியத்துவமற்ற மூலைகளில் வெளியிடப்பட்டு வந்த செய்திகள் இப்போது அனைவராலும் பேசப்படுபவையாக மாறி விட்டன. நாடு அதன் ஆன்மாவை இழந்துவிடவில்லை என்பதற்கு மிகவும் தேவையான உறுதியை அளிப்பதாக இந்தப் பேரணி அமைந்துவிட்டது.

- ராணா அயூப்,
பிரபல பத்திரிகையாளர்
*
தமிழில்: பேரா. தா.சந்திரகுரு
தீக்கதிர் 15-03-2018
...மேலும்

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்