Showing newest posts with label கவிதை. Show older posts
Showing newest posts with label கவிதை. Show older posts

பெண்ணியாவின் ‘இது நதியின் நாள்’ கவிதைத் தொகுப்பை முன் வைத்து...

தொண்ணூறுகளின் நடுப்பகுதியிலிருந்து எழுதிவரும் பெண்ணியா, இதுவரை ‘என் கவிதைக்கு எதிர்த்தல் என்று தலைப்புவை’ மற்றும் ‘இது நதியின் நாள்’ ஆகிய இரண்டு கவிதைத் தொகுப்புக்களை வெளியிட்டிருக்கிறார்.

‘இது நதியின் நாள்’ கவிதைத் தொகுப்பு 2008ஆம் ஆண்டு, மார்கழி மாதம் வெளிவந்திருக்கிறது. இத்தொகுப்பில் காணப்படும் அதிகமான கவிதைகள் 2007- 2008 ஆம் ஆண்டு காலப்பகுதியில் எழுதப்பட்டுள்ளன. இலங்கையைப் பொறுத்தவரை இந்தக்காலப்பகுதி யுத்தத்தின் கோரப்பிடிக்குள் சிக்குண்டிருந்தமையால் இங்கு வாழ்ந்த எல்லா இன மக்களும் ஏதோ ஒரு வகையில் அதன் பாதிப்புக்குட்பட்டேயிருந்தனர். ஆதலால் இக்காலப்பகுதியில் எழுந்த அனேகமான படைப்புக்களில் அதைப்பற்றிய பதிவுகள் உள்ளதை அவதானிக்க முடிகிறது. இதற்கு மாறாகப் பெண்ணியாவின் கவிதைகள் இதினின்றும் விடுபட்டுத் தனிமனித நெகிழ்வுகள், உடைவுகள், வலிகள், இயலாமை பற்றியே தன்னை அதிகமும் வெளிப்படுத்துகின்றன. தவிரவும் பெரும்பாலான கவிதைகள் பெண்மொழி பேசுவையாகத் தம்மை இனங்காட்டுகின்றன.

‘கயல்விழி விரிந்த தோள்’ எனும் கவிதையில் ‘படுக்கை விரிப்பைச் சரி செய்வதையும் புதிய சமையலைக் கண்டுபிடிப்பதையும் விட இந்த உலகம் விரிவதேயில்லை’ என்று மிகவும் எளிமையான புழங்கும் வார்த்தைகளால் தன்னைச் சுற்றியுள்ள சமுகத்தின் மீது உள்ள வெறுப்பையும் சினத்தையும் வெளிப்படுத்தி நிற்கின்றார். ‘நிகழ்தல்’, ‘அரசியாகும் ஓர் கழுகு’, ‘பூக்கள்’, எனத்தொடரும் இவருடைய ஒரு சில கவிதைகளை வாசித்துணர்கையில் பெண்களின் நெருக்கடியான பொழுதுகளைப் பேசுவதோடு ஆண் உறவுகள் மீதான கேள்விகளோடும் அவையுள்ளன

‘இரவினில் நீ

இரைந்து கத்துகிறாய்

பகல்களையும்

விட்டுவிடாமல்

உன்

அவதூறு கொண்டு

அலங்கரிக்கத்தொடங்குகிறாய்...’

என்று கவிதையின் ஆரம்பத்திலேயே பேச்சு மொழிச்சாயல் பூசப்பட்டு அது தன்னை நெகிழ்த்திக் கொள்வதால் கவிதை பலமின்றிப் போய்விடுகிறது. இறுதியில்

‘இதற்கெல்லாம் பதிலாய்

அவள் தன்னை

ஆழ்ந்த மௌனத்தில்

வெளிப்படுத்திக்கொண்டேயிருக்கிறாள்’

என கவிதையின் முடிவில் பெண்ணியா தனக்கான அவதானிப்பை வெற்றிகரமாகத் தக்கவைத்துக்கொள்கிறார். இது போன்றே ‘காதல், நீலமான இரவு’ எனும் கவிதையிலும் பெண்ணியாவின் ஆளுமை சுயம் பேசுதல் எனும் வகை பாகத்தினூடாக வெளிப்படுகிறது.

‘ஆண்மை வழியும் இரவில்

இராப்பிச்சைக்காரனின்

கெஞ்சலும் தோற்றமும்

மிகைப்பட

கையேந்துகிறாய் ஒரு இரவுக்காக...’

என்று தன்னுடைய பிறிதொரு கவிதையில் அந்தரங்கங்களையும் கூட விட்டுவைக்காமல் பேசியிருக்கிறார். அனார், பகிமாஜஹான், சலனி போன்ற ஏனைய கவிஞர்களோடு ஒப்பிட்டுப்பார்க்கின்றபோது பெண்ணியாவின் கவிதைகள் பெண் ஒடுக்குமுறைக்கு எதிரான குரலாக வெளிப்படுகிறது எனலாம்.

‘இரவுநேரத் தொ ழிலாளி தன் பங்கிற்கு இரவினில் எழுகிறான் மரங்களை வெட்டுகிறான் அவர்களுக்கான உணவினையும் சமைக்கிறான்...’ இவ்வாறு தொடர்ந்து செல்லும் வரி வார்த்தைகள் இறுதியில் ‘தனக்கான ஒரு நிமிடம் தானும் ஒதுக்கமுடியாத தொழிலாளி எதற்காய் தொழில் புரிகின்றான்...?’ எனத் தன்னை எதிர்ப்பால் நிலையில் உருவகித்து எதுவுமற்றுப் போகின்ற வாழ்க்கையினை உணரவைக்கிறார். பெண்ணியாவிற்கு இந்தக் கவிதை ஓர் ஆறுதல் நிலையைத் தரலாம், உலகில் எத்தனையோ தாய்மார்கள் இரவு நேரத்தொழிலாளிகளாகவே வாழ்ந்து வாழ்வை நிறைவும் செய்திருக்கிறார்கள் என்பது உண்மையே.

‘என் குழந்தை ஓவியம்’ என்னும் பெண்ணியாவின் கவிதை அவருக்குக் கைவரப்பட்ட ஓர் கவிதையாக வெளிப்படுகிறது. உண்மையில் கவிதை, எழுதுவதற்கான ஓர்

படைப்புக்கலையல்ல: அது அனுபவங்களால் தன்னைக் கட்டிக்கொள்கிறது அல்லது செய்யப்படுகிறது என்றேதான் கூறவேண்டும். ஏனெனில் கவிதையுணர்வு எல்லோருக்கும் வாய்த்துவிடும் ஒன்றல்ல. அது பல தடவைகள் கவிஞர்களையே ஏமாற்றியும் விடுகிறது. (மேற்படி கவிதையில் குழந்தை பற்றிய செயலுணர்வுகளை நம்மில் தொற்றவைத்தாலும்) ‘தனித்த இடைவெளியில் அவன் வரைந்த சுவர் ஓவியங்களின் உருவங்கள் இறங்கி வந்து அவனை ஒத்த பாவனைகள் செய்து தங்கள் தங்களின் இடங்களில் உறைகின்றன என் வீடு முழுக்க ஓரு குழந்தையால் நிரப்பப்பட்டிருக்கிறது.’

எனும் இந்த வரிகளில் கவிதையில் ‘மௌனம்’ என்று சொல்லப்படுகின்ற உச்ச நிலை வெளிப்படுகின்றது. இது போன்ற பெண்ணியாவின் அனேகமான கவிதைகளில் குறிப்பிட்ட வரிகள் கவிதையின் நுண்ணுணர்வை வெளிப்படுத்துகின்றன.

பெண்ணியாவைப்பற்றிச் சலனி குறிப்பிடும்போது ‘இந்தச் சமூகம் பெண்ணுக்கென வழங்கியிருக்கும் வாழ்வை நன்கறிவேன். இதற்குப் பெண்ணியாவும் நானும் எனது நண்பிகளும் விதிவிலக்கானவர்கள் அல்ல. எனவே இந்த வாழ்வு, சமூகப்போக்குமீது பெண்ணியா ஆற்றும் எதிர்வினை என்னுடையதும் தான்’ எனக்குறிப்பிடுகிறார்.

ஒரு சமூகத்தின் மீது எதிர்வினையாற்றுதல் என்பது அதனுடைய பல பாகங்களையும் பல பரிமாணத்தன்மையில் நோக்குதலையே கொண்டிருத்தல் வேண்டும். தவிர எதிர் வினையாற்றலால் நாம் சாதித்துக் கொள்பவை யதார்த்தத்தில் பெரும் வெற்றிடமாகவே இருந்தும் விடுகின்றது. இது கூர்ந்தும் நோக்கப்படவும் வேண்டியது. ஆண் ஒடுக்குறவுக்கெதிராக அவ்வது ஆண் வெறுப்புணர்வைப் பேசும் பெண்மொழிகள் பெரும் துக்கத்துக்குரியதாகவே இருந்து விடுகின்றது. ஏனெனில் குறித்த கவிஞர்கள் படைப்புணர்வுகள் இதற்குப்பின் வாழ்வை எதிர் கொள்ளல் என்பது பெரும் போராட்டங்களுடே அமைந்தும் விடுகின்றது. பெண்ணியா தனது எல்லாக் கவிதைகளுக்கும் அப்பால் வாழ்ந்துகொண்டிருக்கிறார். அதற்கு அப்பாலும் அவர; செல்ல வேண்டியபாதை இருந்துகொண்டேயிருக்கிறது.

- மருதம் கேதீஸ்
...மேலும்

பெண்ணியக் கவிதை வளர்ச்சி - இலங்கை பெண் கவிஞர்களின் வழியாக

- மேமன்கவி-

இலங்கையின் கவிதை வளர்ச்சியினை பற்றி பேச முற்படும் நாம் பெரும்பாலாக இலங்கையில் தமிழில் எழுதப்படும் கவிதைகளின் வளர்ச்சியினை பற்றிய பிரஸ்தாபிப்புடன் நின்று விடுவது வழக்கமாகவுள்ளது. என் போன்றோர் உட்பட. அதே நேரத்தில், இலங்கையில் மூவினத்தினரும் (தமிழர், முஸ்லிம், சிங்களவர்) மும்மொழிகளிலும் (தமிழ், சிங்களம், ஆங்கிலம்) படைக்கும் கவிதைகளைக் கொண்டுதான் இலங்கை கவிதை வளர்ச்சியினை நோக்குவதே சரியாக இருக்கும் என நான் கருதுகிறேன்.

(இச்சிந்தனை எனக்குள் எழ தூண்டுகோலாக அமைந்தவை இரண்டு மொழிபெயர்ப்புத் தொகுப்புக்களாகும். ஒன்று சோ,பத்மநாதனின் ‘’தென்னிலங்கை கவிதை’’(2003) , அடுத்து, கெக்கிராவ ஸ_லைஹாவின் ‘’பட்டுப் ப+ச்சியின் பின்னுகைப் போலும்’’(2009). இவ்விரு தொகுப்புக்களிலும் கணிசமான முறையில் இலங்கையர்களால் ஆங்கிலத்திலும், சிங்களத்திலும் எழுதப்பட்ட கவிதைகளின் தமிழ் மொழிபெயர்ப்புக்கள்; இடம் பெற்றுள்ளன.. இக்கட்டுரையில் எடுத்துரைக்கப்படும் தமிழில் எழுதப்பாடாத அனைத்து கவிதைகளும் இவ்விருரது தொகுப்புக்களிலிருந்து எடுக்கப்பட்டவை என்ற வகையில் அவ்விருவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.)


தமிழ் பேசும் இலங்கையர்களான நாம், நமது எந்தவொரு துறை சார்ந்த வளர்ச்சியினையும், தமிழகத்;தில் அத்துறைகள் அடைந்திருக்கும் வளர்ச்சியோடு; ஓப்பிடுவது வழக்கமாக கொண்டிருக்கிறோம். இந்த வழக்கத்தினூடாக, சில சமயங்களில் தமிழகத்தில் குறிப்பிட்ட சில துறைகள் அடைந்திருக்கும் வீழ்ச்சியினை கூட, வளர்ச்சி என மயங்கி, ஓப்பீட்டு, அத்துறைகளில் நாம், வளர்ச்சியினை அடையாது மாறாக வீழ்ச்சியினைதான் அடைந்திருக்கிறோம்.(உதாரணம்: தமிழ் நாடகத்துறை, தமிழ் சினிமாத்துறை)

ஆனால், அதிஷ்;டவசமாக பிற துறையை போல் அல்லாது இலங்கை கலை இலக்கியத்துறையை பொறுத்தவரை, தமிழகத்தின் மாயைக்குள் (வளர்ச்சி என சொல்லப்பட்ட வீழ்ச்சிக்குள்) ஆட்படுதல் என்பது, காலனித்துவ காலத்தின் இறுதி காலத்திலும், பின் காலனிய காலகட்டத்தில் சிறிது காலமும் ஆட்பட்;டதொழிய, 50 கள் தொடக்கம் இலங்கை கலை இலக்கியம், இலங்கையின் தமிழ் கலை இலக்கியம் உட்பட, ஓரு தனித்துவமான வளர்ச்சி போக்கில் தம்மை வளர்த்துக் கொண்டுள்ளது.

இத்தனித்துவத்துமானது, தமிழக கலை இலக்கிய வளர்ச்சியோடு, நமது கலை இலக்கிய வளர்ச்சியை ஓப்பீடும் சாத்தியத்தை இல்லாமல் செய்து விட்டது எனலாம். அதிலும், குறிப்பாக 70களில் ஏற்பட்ட சமூக அரசியல் நெருக்கடி நிலைகளும்;, மாற்றங்களும்;, 80களுக்கு பின் சமூக அரசியல் நிலைப்பாடுகளால் உருவாகிய போர்ச்சூழல், கலவர நிலை என்பன அச்சாத்தியத்தை முழுமையாக இல்லாமல் செய்து விட்டதற்கான முழுநிலை காரணியாக அமைந்தன.

போர்ச்சூழல், போர்களம், என்பன பற்றிய அனுபவம் என்பது தமிழக மக்கiளை பொறுத்த வரை (நான் இந்தியா முழுவதையும் குறிப்பிடவில்லை) பழந்தமிழ் கலை இலக்கியங்களில் தரிசித்தவையாகவும், மிஞ்சிப் போனால், இரு உலகப்போர்களை பற்றிய இலக்கியங்களை தமிழ் மொழிபெயர்ப்புகளில் படித்தவை வழியாகவோ, அல்லது அவ்விரு உலகப்போர்கள் சுதேசிய மட்டத்தில் ஏற்படுத்திய சமூக பொருளாதார நெருக்கடிகள்; வழியாகவோ, இன்னும் கொஞ்சம் மிஞ்சிப் போனால், அவ்விரு உலகப்போர்களில் பணியாற்றிய. எழுத்தாற்றல் மிக்க ஓரு சிலர் படைத்த இலக்கியப் படைப்புகள் வழியாகவோ அறிந்துக் கொண்டதோடு சரி. ஆனால் இலங்கையின் மூவினத்தினரை பொறுத்தவரை போர்ச்சூழல், போர்கள அனுபவம், இனத்து ரீதியான கலவர நிலை என்பது, அவர்தம் வாழ்வுநிலையின் மிக அருகேவும், அவர் தம் இருப்புக்களை அசைய வைத்தவையாகவும், அதிர வைத்தவையாகவும் அமைந்தவையாக இருந்ததன் காரணமாக, அத்தகைய சூழலில் இலங்கையர்களால் படைக்கப்பட்ட கலை இலக்கியங்கள் அவ்வனுபவங்களை பேசியதன் மூலம், ஓரு தனித்துவமான வளர்ச்சி கட்டத்தினை அடைந்தது.ம். அந்த வளர்ச்சி கட்டத்தில் இலங்கையின் கவிதையும் தமிழ்க்கவிதையும் உட்பட் பங்கேற்றது எனலாம்.

இத்தகைய சிந்தனைகளின் பின்ணணியில், போர்ச்சூழல் போர்கள அனுபவம், இனத்துவ ரீதியான கலவர நிலை, போன்ற நிலைகள் குறிப்பாக, பெண்ணின் உடல் வெளி மீது அத்தகைய சூழல்கள் எத்தகைய அதிர்வுகளை ஏற்படுத்தின என்;பதை எடுத்துச் சொல்லும் மூவின பெண் கவிஞர்களால் மூம்மொழிகளிலும் எழுதப்;பட்ட கவிதைகள் கொண்டு, அக்கவிதைகள் எவ்வாறு இலங்கையின் பெண்ணிய எழுத்துகளாக அடையாளமாகுகின்றன என்பதை சில கவிதைகளை கொண்டு பேசுவதே இக்க்கட்டுரையின் நோக்கமாகும்.

பெண்ணியத்தை பொறுத்தவரை இன்று உலக மட்டத்தில் பரவலான ஓர் இயக்கமாக வளர்தெடுக்கப்பட்டுள்ளது. அதன் ஓரு ஆயுதமான பெண்ணிய கலை இலக்கியம் என்பது கூட,இற்றை வரை இந்த உலகத்தை பற்றிய பார்வையானது, (பெண்களை பற்றியும் உட்பட) ஆணாதிக்க சொல்லாடல்களால்; விவரிக்கப்பட்ட போக்கினை மாற்றி, தமக்கான ஓரு மொழியாடலை கையாண்டதன் மூலம், பெண்ணிய எழுத்து என்றதொரு எழுத்து போக்கினை உருவாக்கியதோடு, அப்போக்கின் ஓர் அம்சமாக பெண்ணிய விமர்சன பார்வை உருவாகியதன் மூலம், அதுவரை காலம் ஆணாதிக்கப் பார்வையின் அடிப்படையில் படைக்கப்பட்ட கலை இலக்கிய் படைப்புக்களில் உள்ளொளிந்துக் கொண்டிருந்த ஆணாதிக்கத்தின் கூறுகளை பகிரங்ப்படுத்தியது. எனலாம்.

இவ்விடத்தில் ஓன்றை குறிப்பிட வேண்டும் இன்று பெண்ணிய எழுத்து இயக்கம், பெண்ணிய விமர்சனப் பார்வை என்பன வளர்ச்சி அடைந்த பின்னும், ஆணாதிக்கப் பார்வை கொண்ட படைப்புகளை இன்றும் சில பெண்களும் படைத்தவர்களாக இருப்பதையும், அவ்வாறான நிலையில் அப்பெண்கள் படைக்கும் அப்படைப்புக்கள் பெண் விடுதலையை பேசுவதாக சொல்லபட்டாலும், அப்படைப்புக்கiளை கட்டுடைக்க தேவையில்லை ஆழ்ந்த வாசிப்புக்கு உட்படுத்தினால் போதும், அப்படைப்புக்கள் முழுக்க முழுக்க ஆணாதிக்கத்தை தக்க வைக்கும் வகையாக படைக்கபட்டிருக்கின்றன என்பது தெரியவரும். அத்தோடு ஆண்களால் பெண்ணிய கலை இலக்கியங்களை பற்றி எழுதப்படும் கட்டுரைகளில் கூட, அவர்கள் விதந்து கூறும் பெண்ணிய கலை படைப்புக்களை நோக்கும் நோக்கில் ஆணியப் பார்வையே மேலேந்து நிற்கிறது என்பதையும் இங்கு குறிப்பிடவேண்டி இருக்கிறது.

போர்ச்சூழல், போர்;களச்சூழல், கலவரநிலை இவ்வாறான பல்நிலைகளில் நேரடியாகவோ மறைமுகமாகவோ, மிக மோசமான முறையில் பாதிப்புக்கு உள்ளாகுவது பெண்ணினம்தான் என்பது உலகளாவிய ரீதியாக நாம் கண்டறிந்த உண்மை. அத்தகைய நிலைகள் நிலவும் இலங்கையின் பெண்ணினமும் அதற்கு விதிவிலக்கல்ல.

அத்தகைய சூழ்நிலைகள் வழியாக பெண்ணினம் அடையும் பாதிப்புகள் பல்வகையானது. அப்பாதிப்புகளில் முதன்மை வகிப்பது பாலியல் வன்முறையாகும். ஆத்தோடு, துணைகளை இழந்த நிலை, அகதி வாழ்வு இடப்பெயர்வு, புலப்பெயர்வு போன்ற நிலைகளில், ஆணாதிக்க சமூக அமைப்பில பாதுகாப்பு அற்ற சூழல், பெண்களாக இருப்பதானால் மட்டுமே, அந்நிலைகளில் எதிர்;கொள்ளும் பிரச்சினைகள் என அப்பாதிப்புக்கள் பல்வகை பட்டவையாக இருக்கின்றன. அதன் காரணமாய் அவ்வனுபவங்களை பேசுகின்ற கவிதைகள் அதிக அளவில் இலங்கை பெண் கவிஞர்களால் எழுதப்பட்டுள்ளன என்பதனால்,அப்படியும்; இத்தகைய சூழ்நிலைகளை பற்றி இலங்கை ஆண் கவிஞர்களால் கவிதைகள் படைக்கப்பட்டிருந்தாலும், அக்கவிதைகளை ஆழ்ந்துப் படித்தால் ஆணிய அனுபவங்களாக முன் வைக்கப்பட்டவையாகவே அமைந்துள்ளன. அத்தோடு அப்படைப்புகளில், இத்தகைய நிலைகளில் அதிகமாக பாதிக்கப்படுவது பெண்கள் என அறிந்திருந்தும்;, அப்பாதிப்புக்களை வெறுமனே செய்திகளாக மட்டுமே பதிவு செய்திருப்பதை பெண்ணிய விமர்சனப் பார்வையில் அப்படைப்புக்கள் படிக்கப்படும் பொழுது தெரியவரும் உண்மையாகும்.

இனி அத்தகைய சூழ்நிலைகளை பற்றி பேசும் இலங்கையின் பெண் கவிஞர்களால் எழுதப்பட்ட ஓரு சில கவிதைகளைப் பார்ப்போம்..

இலங்கையில் தமிழில் எழுதும் அனாரின் ‘’மேலும் சில இரத்தக் குறிப்புகள்’ எனும் கவிதை இப்படித் தொடங்குகிறது.

‘’மாதம் தவறாமல் இரத்தத்தைப் பார்த்து

பழக்கப்பட்டிருந்தும்….’’

இக்கவிதையின் இத்தொடக்கமே இதனை ஓரு பெண்ணியக் கவிதை ஆக்கி விடுகிறது. வெறுமனே பெண்ணின் உடல் சார்ந்த சொல்லாடலோடு அக்கவிதை ஆரம்பமாகிறது என்ற ஓரு காரணத்திற்காக மட்டுமே, அக்கவிதையை பெண்ணியக் கவிதையாக மாற்றி விடவில்லை. அதற்கு மேலாக, அக்கவிதை பெண்ணின் சுயமான அனுபவத்துடன் தொடங்குவது என்பதற்காகவே இக்கவிதை பெண்ணியக் கவிதையாகுகிறது.

ஓரு பெண்ணின் இரத்தத்தை பற்றிய சுய அனுபவத்துடன் தொடங்கி, தன் இரத்த உறவு இரத்தம் சிந்தும் காட்சியுடன் நகர்ந்து(‘’குழந்தை விரல் அறுத்துக் கொண்டு அலறி வருகையில்’’) புறத்தே விரிகிறது.

‘’வன்கலவி புரியப்பட்ட பெண்ணின் இரத்தம்’’

‘’கொல்லப்பட்ட குழந்தையின் உடலிருந்து

கொட்டுகின்றது இரத்தம்’’

‘’களத்தில் இரத்தம் அதிகம் சிந்தியவர்கள்’’

‘’அதிகம் இரத்தத்தை சிந்த வைத்தவர்கள்’’

‘’சித்திரவதை முகாம்களின்

இரத்தக் கறைபடிந்திருக்கும் சுவர்களில்’’

‘’வன்மத்தின் இரத்த வாடை’’

‘’வேட்டையின் இரத்த நெடி’’

‘’வெறிபிடித்த் தெருக்களில் உறையும் அந்த

இரத்தம்’’

‘’கல்லறைகளில் கசிந்து காய்ந்திருக்கும் அந்த

இரத்தம்’’
இவ்வாறான வரிகளின் வழியாக, புறத்தே காணப்படும் இரத்தக் காட்சிகளை விவரித்து, கொண்டு கவிதை நகர்கிறது.
முதல் வாசிப்பில் இக்கவிதை இரத்தத்தை பற்றிய பெண் நிலை நின்று எழுதப்பட்ட கவிதையாக நமக்கு தெரிய வந்தாலும், இந்த இரத்தம் சிந்துதலுக்கான காரணத்தை ஓரு வாசக மனம் தேட முனையும் வேளை, அதற்கு அடிப்படை காரணமாக இருப்பது போர்ச்சூழலும், கலவர நிலையும்; தான் என கண்டறியும்; பொழுது இக்கவிதைப் பிரதியானது போரை பற்றி பேசும் ஓரு பிரதியாகவும் அடையாளமாகுகிறது.
அந்த வகையில், அனாரின் இக்கவிதைப் பிரதியானது இலங்கை பெண் கவிஞர்களின்; போர்ச் சூழலில் வாழ்வு நிலை என்பதை பற்றி பேசும் கவிதைப்பிரதிகளில் மிகுந்த கவனத்தை பெறுகின்ற ஓரு பிரதியாக நமக்கு கிடைத்திருக்கிறது.

அடுத்து தமிழ் மொழிபெயர்ப்பில் படிக்க கிடைத்த இலங்கையில் ஆங்கிலத்தில் எழுதும் கமலா விஜேயரத்ன வின் மூன்று கவிதைகளை பார்ப்போம்.

1. “ஓரு படை வீரனின் மனைவி அழுகிறாள்” (மொ-பெ கெகிறாவ ஸ_லைஹா)

2. “அந்த ஓற்றையடிப்பாதையில் வெள்ளைக் கொடி பறப்பது கண்டு….” (மொ-பெ- கெகிறாவ ஸ_லைஹா)

3. “வெள்ளைச் சேலை” (மொ-பெ- சோ,பத்மநாதன்)
மூன்று கவிதைப்பிரதிகளாக இருப்பினும், இக்கவிதைகளின் பாடுப் பொருளானது, அப்பிரதிகளை ஒற்றைப் பிரதியாக மாற்றி விடுகிறது. அக்கவிதைப்பிரதிகள், ஓரு சமூகத்தின் இளைஞர்களின் அகால மரணங்களை எதிர்கொண்டவர்களின் மூன்று தளப்பார்வைகளின் வெளிப்பாடாக அமைந்திருக்கின்றன.
ஆந்த வகையில் ஒரு படை வீரனாக பணியாற்றிய இளைஞனின் மனைவியின் அக வெளிப்பாடாகவும், (“ஓரு படை வீரனின் மனைவி அழுகிறாள்’’), அப்படை வீரனான இளைஞனின் மரண ஊர்வலத்தை காணக் கிடைத்த ஒரு பார்வையாளரின் பார்வையிலும் (“அந்த ஓற்றையடிப்பாதையில் வெள்ளைக் கொடி பறப்பது கண்டு….’’),, அன்றைய இலங்கையில் நிலவிய கலவரச் சூழலில் கொல்லப்பட்ட் இளைஞர்களின் ஈமச்சடங்குகளில் கலந்துக் கொள்ளும் ஓரு பெண்ணின் பார்வையிலும்(“வெள்ளைச் சேலை”), என அம்முன்று கவிதைப் பிரதிகள் அமைந்திருக்கின்றன. இம்முன்று கவிதைப்பிரதிகளிலும் நான் அவதானித்த ஓர் அம்சத்தை இங்கு விஷேடமாக குறிப்பிட வேண்டும். பொதுவாக அக்காலகட்டங்களில் இலங்கையில் நிலவிய போர்ச்சூழலின், மற்றும் அன்று நிலவிய கலவர நிலையின் பொழுதும், எழுதப்பட்ட, பாடப்பட்ட படைப்புக்களில் வெளிப்பட்ட, “இன வெறுப்பு”, துளி அளவேனும் இக்கவிதைப்பிரதிகளில் வெளிப்படவில்லை என்பதுதான்.
மேலும், மேற்குறிப்பிட்டது போல் அந்த இளைஞர்களின் அகால, அந்நியாமான மரணங்களிட்டு எழுதப்பட்ட, பாடபட்ட படைப்புக்களில் இன வெறுப்பு என்பது அவ்வாறான மரணங்களுக்கு காரணமாக குறித்த ஓர் இனத்தையே காரணமாக காட்டுவதாக வெளிப்பட்டன. ஆனால் கமலா விஜேயரத்ன வின் அந்த மூன்று கவிதைகளும் அத்தகைய மரணங்கள் பெண்நிலையில் நின்று, அக ரீதியாக ஏற்படுத்திய உணர்வுகளை எடுத்துக் காட்டும் வகையில் அமைந்திருக்கின்றன. அதே வேளை முன்று கவிதைகளில் ஓன்றான ‘’வெள்ளைச்சேலை’’ எனும் கவிதையில் -

“தம் வாழ்வை மறுத்த

தம்மை ஏமாற்றிய

வயதானவர்களை

நெடுநாளவாழ்பவர்களை

குற்றமஞ்சாட்டும் அவ்விளம் முகங்களை

ஐவத்தகண் வாங்காது பார்க்கிறேன்.’’ எனும் வரிகள் மூலமும்,

“அந்த ஓற்றையடிப்பாதையில் வெள்ளைக் கொடி பறப்பது கண்டு….’’ எனும் கவிதையில் பின்வரும் வரிகள் வழியாக, இந்த இளைஞர்கள் யாருக்காக மடிந்தார்கள் என்ற கேள்விக்கு பதிலாக,
“அரசர்க்காகவும், அன்னைப+மிக்காகவும்’’
என்ற வரிகளாக பதில் சொல்வது மூலமூம், மேலும் அக்கவிதையில் ஓரிடத்தில்

“தேசம் வெறுமனே வந்து

உனக்கு இறுதி மரியாதை

செய்து விட்டு போகின்றது.

உனதண்டை வீடு

கிரிக்கெட் வெற்றிகளைச் சொல்லி,

கூக்குரலிடுகிறது.

சுற்றி வர அமர்ந்து அவர்கள்

“கொகா கோலா”குடிக்கிறார்கள்.

தொலைக்காட்சிப்பெட்டியின் திரை,

அவர்களை வசியப்படுத்தி வைத்திருக்கிறது

.உன் பின் புற வீட்டிலிருந்து

பெருத்த இசையோடு

பாடல்கள் ஓலிக்கின்றன.

வெடி முழக்கம் கேட்கிறது.

அண்டை வீட்டிலின்று ஏதோ நிச்சயதார்த்தமாம், வரவேற்போ

‘இன்டர்கொன்டினென்டல் ஹோட்டலிலாம்’’
எனும் வரிகள் மூலமும்,
அந்த இளைஞர்களின் மரணங்களுக்கு காரணமானவர்கள் யார் என்பதை மிக நுண்ணியமான முறையில் அடையாளம் காட்டுகிறார்.
ஓரு கலைப்படைப்பு பெண்ணியப் படைப்பாக உருவாகுவதிலலும், உணரப்படுவதிலும், சில முக்கிய அம்சங்கள் பங்கு வகிக்கின்றன. அதில் முக்கியமானது மொழியாகும். அவ்விலக்கியப் படைப்பில் செயற்படும் பெண் நிலை இருப்பு-அவ்விருப்பக்காக அப்பிரதியில் கையாளப்படும் சொல்லாடல்கள் மிக முக்கிய பங்கினை வகிப்பதையே பெண் மொழியாகி, அப்படைப்பு பிரதியை பெண்ணியப் படைப்பாக அடையாளப்படுத்துகிறது.

அந்த வகையில் கமலா விஜேயரத்ன யின் அக்கவிதைகளில், அவர்; கையாண்டிருக்கும் பாடு பொருள்கள் பெண் சார்ந்து இருப்பதோடு, அதற்காக அவர் கையாண்டிருக்கும் மொழி, பெண் மொழியாக இருப்பதும், அக்கவிதைகளை பெண்ணியக் கவிதைகளாக மாhற்றுகின்றன. அதிலும் பெண்ணின் ‘உடல் வெளி’ யுடன் சார்ந்தவை என்பதால், அக்கவிதைகள் முழுமையாக பெண்ணியப் படைப்புகளாக இனம் காணப்படுகின்றன.

“ஓரு படை வீரனின் மனைவி அழுகிறாள்’ எனும் கவிதையும், “வெள்ளைச் சேலை’’ எனும் கவிதையும் நேரடியாக பெண்களின்; குரல்களில் பேச, “அந்த ஓற்றையடிப்பாதையில் வெள்ளைக் கொடி பறப்பது கண்டு….’’ எனும் கவிதை முதல் வாசிப்பில் பொதுவான ஓரு பார்யாளரின் குரலில் பேசுவதாக தெரிந்தாலும், அக்கவிதையின் கையாளப்பட்டிருக்கும் ‘’உனதனைனை’ ‘உன் தங்கை..’ என்ற சொல்லாடல்கள், அக்கவிதையும் பெண்ணின் குரலில்தான் பேசுகிறது என்பதை காட்டுகிறது.

கமலா விஜேயரத்ன சார்ந்த சமூக அமைப்பில் பெண் உடல் வெளியுடன்; சார்ந்த ஓரு சொல்லாடல் அல்லது உருவகம் அம்முன்று கவிதைப்பிரதிகளில் தொடர்ந்து கையாளப்படுவது பெண்ணின் இருப்பை அக்கவிதைகளில் உறுதிச் செய்கிறது. அச்சொல்லாடல் அல்லது உருவகமானது வெள்ளை நிறம் அல்லது வெள்ளைச் சேலை என்பதாகும். “வெள்ளைச் சேலை’’ எனும் கவிதையில் அந்த உருவகம் கவிதை முழுவதும் தொடர, “ஓரு படை வீரனின் மனைவி அழுகிறாள்” எனும் கவிதையில் வெள்ளைக்கொடி என்ற உருவகமாக வருகிறது.

மேலும், கமலா விஜேயரத்ன அந்த காலகட்டத்தில் போர்ச்சூழலும், கலவர நிலையியும்; தொடர்ந்து நிலவியக் கொண்டிருந்தவையாக இருந்தன என்பதை அக்கவிதைகளில் துல்லியமாகவும், நுணுக்கமாகவும் சொல்லி இருக்கிறார். .‘’அந்த ஓற்றையடிப்பாதையில் வெள்ளைக் கொடி பறப்பது கண்டு….’’ எனும் கவிதையின் தொடக்க வரிகளான “மழையில் நனைந்து கிழிந்து போன வெள்ளைக்கொடி” எனும் வரிகள். அடிக்கடி அக்கொடி உபயோகிக்க படுகிறது எனபதை சொல்வதன் மூலமும், “வெள்ளைச் சேலை” எனும் கவிதையை

“இல்லை, இல்லை

அலுமாரித் தட்டில் சேலையை வைக்கமாட்டேன்

அதைக் கொடியில் தான் போடுவேன்

எப்போ தேவைப்படுமென்று எனக்கே தெரியாது”
எனும் வரிகளுடன் முடித்திருப்பதன் மூலமும், அவ்விஞர்களின்; மரணங்கள் நடக்கும் நிச்சயமற்ற தன்மையையும் தொடர்ச்சியையும் பதிவுச் செய்து, அன்றைய காலட்டத்தின்; போரின், கலவர நிலைமையின் நீட்சியினை நம் முன் கொண்டு வருகிறார்.
இந்த வகையில் போரான வாழ்வை பற்றியும்,; கலவர நிலையை பற்றியும் இலங்கை பெண் கவிஞர்களால் எழுதப்பட்ட கவிதைகளில் இம்மூன்று கவிதைப்பிரதிகள்; மிகுந்த கவனத்தை பெறக்கூடியதாக இருக்கின்றன
இனி, தமிழில் இலங்கை பெண் கவிஞர்களால் எழுதப்பட்ட நான்கு கவிதைகளை எடுத்துக்காட்டுக்காக பார்ப்போம்.;
அருட் கவிதா தேவநாகத்தின் “சில வருடங்களுக்கு முன்’

ஆழியாளின் “மன்னம்பெரிகள்’’

ரங்காவின் “உண்மையிலும் உண்மை’’

ஜெயந்தி தளையசிங்கத்தின் “இனியும் நான் தனியாக இல்லை’’
(இக்கவிதைகள நான்கும் தமிழகத்தில் வெளிவந்த அ.மங்கை தொகுத்த “பெயல் மணக்கும் பொழுது’’ எனும் ஈழப்பெண் கவிஞர்களின் தொகுப்பிலிருந்து எடுக்கபட்டவை.)

இந்த நான்கு கவிதைகளிலும் போர் மற்றும் கலவர நிலை என்பன பெண்ணின் உடல் வெளி மீது புரியப்பட்ட வன்முறையையும், பெண்ணின் உடல் எதிர்கொண்ட நெருக்கடிகளையும்;, சொல்லும் கவிதைகளாகும்.
அருட் கவிதா தேவநாகத்தின் “சில வருடங்களுக்கு முன்” எனும் கவிதையில் ஓரிடத்தில்

“பருவடைந்து வீட்டினுள் இருந்த என்னை

வெளியே கலைத்தனர்.’’
எனத்; தொடங்கி இடையில்
“குருதி தேய்ந்த

என் தாயின் உடலையே

கண்டேன்.

எரிகிறது

என் மனம் எரிக்கிறது.’’
என நகரும் வரிகள் பெண்ணியக் கவிதைப் பிரதியாக நம்மால் அக்கவிதை வாசிக்கப்பட்டு, போரான வாழ்வில் பெண்ணின் உடல் வெளி சிதைக்கப்படும் அவலத்தை என்பதை சொல்லி செல்லுகிறது.
பெண்;நிலையை பொறுத்தவரை பெண் என்பவள் எந்தவிதமான பேதங்களுமின்றி(மதம், நிறம், வர்க்கம், தேசம், இனம், உறவு-பந்தம் என இப்படியாக எல்லா வகையான அடையாளங்களையும் கடந்து அல்லது மறந்து, அவள் பெண்ணாக இருக்கிறாள் என்ற ஓரே ஓரு காரணத்திற்காக அவள் உடல் வெளி சிதைக்கபபடுகிறது என்பதை ஆழியாளின் “மன்னம்பெரிகள்’’எனும் கவிதை இப்படி பேசுகிறது.
“காலப் பொழுதுகள் பலவற்றில்

வீதி வேலி ஓரங்களில்

நாற்சந்திச் சந்தைகளில்

பிரயாணங்கள் பலவற்றில் கண்டிருக்கிறேன்.’’

எனத் தொடங்கி,
“அம்மிருகம் துயின்று

நாட்கள் பலவாகியிருக்கும்’’
என பெண்ணின்; உடலை குதறும் அம்மிருகத்தை அறிமுகப்படுத்தி,


“அழகி மன்னம்பேரிக்கும்

அவள் கோணேஸ்வரிக்கும்

புரிந்த வன்மொழியாகத்தான்

இது இருக்கும் என

அவதியாய் எட்டிக் கடந்து போனேன்”

எனச்சொல்லி,

“அன்றைய அலைச்சலும்

மனக்குமைச்சலும் கூடிய

தூக்கத்தின் இடையில்-நானும்

அவள்களுக்குப் புரிந்த

அதே அதே ஆழத்திணிக்கப்பட்ட

பாஷை புரிந்து கொண்டேன்.
அருகே கணவன்

மூச்ச ஆறிக்கிடக்கிறான்.’’
என்றெலாம் பேசி முடியும் கவிதை, சகல பேதங்களை கடந்து, உறவு நிலைகளை கடந்து பெண் உடல் மீதான வன்முறையின் பாஷை பேசப்படும் விதத்தை கூறுகிறது..

இதே விடயத்தை குடும்ப எனும் கட்டமைப்புக்குள், அது சொந்த அண்ணாக இருந்தாலும் என்ன அவன் ஆண் என்ற நிலை நின்று வெளிப்படுத்தும், மற்றும் எதிர் நிலையில் ஆணாதிக்கம் வளர்தெடுத்த ஓழுக்கங்களுக்கு அடிமைகளாகி விட்ட பெண்களாக இருப்பினும் என்ன அவர் தம் நடத்தையில் வெளிப்படும் கொடூரத்தை சொல்லுகிறது ரங்காவின் “உண்மையிலும் உண்மை’’ எனும் கவிதை.

“விரிந்து கிடந்த

கூந்தலை முடித்து

கலைந்து போன ஆடைகளை

அணிவதற்காய் நானும்

மெதுவாக எழுந்த போது

‘இவள் அவனோட விரும்பித்தான்…’

வார்தைகள் என்னை

அறுத்து வதைத்தன.

திரும்பிப் பார்தேன்

அம்மா, அக்கா, அண்ணா அனைவருமே

என்னைப் பிழையாக….

‘தான் செத்திருக்கலாம்

இல்லாட்டி அவனைச் சாக்காட்டியிருக்கலாம்

இரண்டுமில்லாமல் எங்கட மானத்தை…?’’

எனத் தொடங்கும் ரங்காவின் “உண்மையிலும் உண்மை’’ மேலும் இப்படி பேசுகிறது

“தொடந்தன பொறிகள்

ஆனால்..? நான் சிரித்தேன்.

‘இராணுவக் கற்பழிப்புக்காய் கலங்கிடலாகாது’ என

மேடையேறி முழங்கிய அண்ணன்

புத்தகங்களில் எழுதிய அக்கா,

இன்று….எனது ஊரவன்

அதே நிலையில்….

எனக்குப் புரியவில்லை

அந்தியன் ஆத்திரத்தில்

அடக்குமுறையின் வடிவில் நடந்து கொண்டான்

ஆனால்…இவனோ…

காமானாய்…கயவனாய்…

இவனை என்ன செய்யலாம்?’’
என நகரும் கவிதை புனிதம் என இவர்கள் போற்றும் பெண்ணின் தூய்மை என்பது ஓரு வன்முறையினால் சிதைப்பட்டுள்ளது என தெரிந்தும், அப்பெண்ணை வெறுக்கும் கொடூரத்தை வெளிப்படுத்துகிறது அக்கவிதை.
ஆனால், அப்படியான நிலை அடைந்த பெண் தளரவில்லை என்பதை ஜெயந்தி தளையசிங்கத்தின் “இனியும் நான் தனியாக இல்லை’’ எனும் கவிதை பின்வருமாறு உணர்த்துகிறது.
“அமைதி காக்க வந்தவர்கள்

என் வாழ்வின் அமைதியைக் கெடுத்தனரே

புகுந்தனரே என் வீட்டினுள்

பதறியது என் தேகம்

பாய்ந்தனர் என் மீது

பதம் பார்த்தனர் என் உடலை’’
எனத் தொடங்கி,
“குரங்கின் கையில் அகப்பட்ட

மாலையாய் ஆனதோ என் உடல்

உடல் முழுக்க நோ

உள்ளத்திலும் பாரம்-ஆனாலும்

என் இருப்பு உறுதியானது’’
என பிரகடனப்படுத்தி, இத்தகைய கொடூர நிலைக்கு பின்னும் பெண்ணினத்தின் இருப்பு உறுதியானது எனச் சொல்லி, அத்தகைய கொடூரத்திற்கு எதிரான போராட்டத்தின் தொடர்ச்சியினை பதிவு செய்கிறது.
பெண்ணினத்தின் இத்தகைய நிலைகளை எடுத்துரைக்கும் அத்தகைய் பல கவிதைகள் இலங்கை தமிழ் பெண் கவிஞர்களால் 80களுக்கு அதிக அளவில் எழுதப்பட்டு, இதுவரை காலம் இலங்கை கலை இலக்கியப் பரப்பில் ‘சொல்லாத’ பல ‘சேதி’களை சொல்லி இருக்கின்றன. இத்தகைய கவிதைகள் இலங்கை தமிழ் பெண் கவிஞர்களின் முதல் தொகுப்பான “சொல்லாத சேதிகள்’’ எனும் தொகுப்பு முதல,; தமிழகத்தில் அ.மங்கையினால் தொகுப்பட்ட “பெயல் மணக்கும் பொழுது’’ வரையிலான பல தொகுப்புக்களில் இடம் பெற்றுயிருக்கின்றன.

ஆக்கவிதைகளுடன் இலங்கையில் ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் எழுதும் பெண் கவிஞர்களானAlfreda de Silva, Amirthanjali Sivapalan>  Anne RanasingheJean ArasanayagamKamala Wijerathne,  Prianthi Wikramasuriya,  Roshani Jayathilake, Geeta Premaratane, Parvathi Arasanayagam, Monica Ruwanpatirana, Maureen Seneviratne, Manel Abeyratne, Yasmine Gooneratne போன்ற நமக்கு அறிமுகமான, பெண் கவிஞர்களின் கவிதைகளுடன் இணைத்துப் பார்த்தால், ஆணாதிக்க சமூக அமைப்பில் குடும்பம் எனும் கட்டமைப்புக்குள்ளும், ஆண்-பெண் உறவு நிலைகளிலும், பெண்களின் அக உணர்வுகளை வெளிப்படுவதிலும், நாம் இக்கட்டுரையில் பார்த்த பெண்ணின் உடல் வெளி மீதான வன்முறைiயை பேசுவதுமாக இப்படியாக பல விடயங்களில் பெண்ணிய நிலை நின்று பார்த்தால், அக்கவிதைகள் பேசியிருப்பதன் மூலம், இலங்கை பெண்ணியக் கவிதை வளர்ச்சியில் பங்காற்றி இருக்கின்றன எனலாம்.

அக்கவிதைகளை கொண்ட நீண்டதொரு விரிவான ஆய்வினை மேற்கொள்ளும்; பொழுது, இலங்கை பெண்ணியக் கவிதைகளின் வளர்ச்சியினை இன்னும் நாம் ஆழமாக அறியக் கூடியதாக இருக்கும்.

மேலும், அத்தகைய ஆய்வின் மூலம், இலங்கை பெண்ணியக் கவிதையின் வளர்ச்சியானது, பின்காலனிய இலக்கிய (Post-colonial Literature) போக்கில,; பின் காலனிய பெண்ணிய எழுத்துக்களின்(Post-colonial Feminist Literature) வளர்ச்சியோடு; இணைத்துப் பார்க்க கூடியதாக இருக்கும் எனலாம்.

இலங்கை சட்டக்கல்லூரி வெளியிட்ட நீதிமுரசு நூலில் வெளிவந்த இக்கட்டுரையை பெண்ணியத்திற்காக அனுப்பி வைத்த கவிஞர் மேமன்கவி அவர்களுக்கு நன்றி
...மேலும்

பெண் கவிஞர்கள் இன்று- திலகபாமா

(திருச்சி சீதாலட்சுமி ராமசாமி கல்லூரியில் வாசிக்கப் பட்ட கட்டுரை)

கவிஞர்கள் காலம் காலமாக வாழ்வை , வாழ்வின் முரணை விசாரணைக்குள்ளாக்கி அதன் முன்னகர்தலை மொழியின் இயங்கியலூடாக சிந்தனை தளத்திற்கு வேரடி நீராய் மாற்றித் தருபவர்கள்.
இதில் ஆண் பெண் கவிஞர்கள் பேதமில்லை . மொழி நாடு இனம் வரையறை இல்லை எனினும் மொழி தன் இருப்பினூடாக பதிவு செய்து போகும் காலமும் இடமும் விமரிசனப் பார்வையில் பிரித்துப் பார்ப்பதற்கும் கவிதைகளின் நுண் துளைவழி உற்று நோக்கு வதற்கும் வாசகனின் மையக் குவியத்தை ஒரு முகப் படுத்துவதற்கும் இப்பிரித்தல்கள் உதவுமென்பதால் பெண் கவிஞர்கள் மட்டும் அதுவும் இன்றைய பெண் கவிஞர்களை மட்டும் கணக்கிலெடுத்துக் கொண்டு ஒரு உரை என்பது சரியாக இருக்கும்
நான் என் வாசிப்பினூடாக 3 வகைப்படுத்தல்களை முன் வைக்கின்றேன்

1 கவிதை ஒரு செயல் என நம்புபவர்கள்
2, கவிதை எங்கள் வாழ்வென்று நம்புபவர்கள்
3 கவிதையை தங்கள் இருப்பாக்குபவர்கள்

கவிதையை செயலாக நம்புபவர்களின் துவக்கம் முதல் முதலாக எழுதத் துவங்குபவர்களிடம் தொடங்குகின்றது . ஆரம்பத்தில் கவிதை எழுதுவதை செயலாகவே நம்பத் துவங்குகின்றோம். பெரும்பாலான நேரங்களில் அடுத்தவரிடம் சொல்லத் தயங்குவதை எழுத்தில் வடிகாலாக மகிழ்வாக மட்டும் வடிய விட்டுப் போகின்றவர்கள். இளமைப் பருவத்தில் பதின்ம வயதில் பேசத் தயங்குகின்ற விசயத்தில் தொடங்குகின்ற இவர்கள் வேறு செயல்கள் வாய்க்கின்ற வரையில் கவிதையோடு தொடர்கின்றார்கள்
வேலை திருமணம் , இடம் மாறுதல் போன்றவை சிலரின் கவிதைகளை நிறுத்தி விடுகிறதெனில் அவர்கள் கவிதையை ஒரு செயலாக நம்பி விட்டவர்கள். இன்னும் சிலரோ தொகுப்பு போட்ட நிலையில் அச்செயல் முடிந்ததாய் நின்று போகின்றார்கள். திருமணம் ஆனதும் காதல் வெற்றியடைந்ததாய் சுபம் சொல்லி முடிப்பவர்கள் போல.
இக்கவிதைகளில் பாடுபொருள் வெறும் பெண்களின் பிரச்சனைகள் என்று கவனத்திலெடுப்பதாக நினைத்துக் கொண்டு கள்ளிப் பால், திருமணம் , காதல் தோல்வி, அதிலும் காத்திருப்பு, வரதட்சனை என்பதாக வெற்றுக் கோசங்களையும் தட்டையான மொழியூடாகவும் பேசப் பட்டும் விடுகின்றது.

நமது பார்வை குவிய வேண்டிய இடமென்பது கவிதை எங்கள்வாழ்வு என மொழியை வாழ்வோடு இயங்க அனுமதித்தவர்களிடம்தான்.எல்லா சம்பவங்களும் கவிதையல்ல.சம்பவங்களுக்கு பின்னாலிருக்கின்ற உணர்வுகள் ஏற்கனவே இருக்கின்ற வார்த்தைகளின் முகத்திலிருந்தே புதிய தரிசனங்களாக்கி வாசிக்க தருவதே கவிதை
அவ்வகையில் பெண் கவிஞர்களின் துவக்கம் இரா மீனாட்சியிலிருந்து துவங்குகின்றது. கவிஞர்களின் பெயர் பட்டியல் தவிர்த்து கவிதைகள் வாயிலாக கவிஞர்களை வாசிக்க வேண்டுமென நம்புகின்றேன். அவ்வகையில் இப்பகுதியைச் சேர்ந்த கீதாஞ்சலி பிரிய தர்ஷிணியின் “திருமதியாகிய நான்” எனும் என் சமீபத்திய வாசிப்பு அத்தளத்தில் பேசுவதற்கான வாய்ப்பைத் தந்திருக்கின்றது.

நாம் இரண்டு விசயங்களைத் தெளிவாகப் புரிந்து கொள்ளுதல் அவசியம்
ஆணின் வாழ்வும் வெற்றியும் பெண்ணின் வாழ்வும் வெற்றியும் அன்று தொடங்கி இன்று வரை வேறு வேறொன்றாகவே இருக்கின்றது. அதன் வாசிப்பில் தான் எழுதப் படுகின்ற மொழியின் இயங்கியலும் அதன் வெற்றி தோல்வியும் வாசிக்கப் படுகின்றது. சில கவிதைகளின் வெற்றி யாருமே உணர்ந்து கொள்ளாத இடமிருந்தும் கூட நிகழ்ந்து கொண்டே இருக்கின்றது தன்னைத் தானே மரித்துக் கொண்டு

இன்னுமொன்று பிரபலமாகுவதை , புகழ்பெறுவதை உச்சமென வாசிக்கின்ற மனோநிலையும் ஆணின் வெற்றி வாழ்வு அடிப்படையில் தீர்மானிக்கப் படுவதாய் இருக்க மௌன அங்கீகாரங்களுக்கிடையே வெற்றி பெற்றதாய் சொல்லப் படாத கவிதைகளை , எழுத்துக்களை , எழுதப் படாத வெற்றுத் தாளாய் மனதை வைத்துக் கொண்டு வாசித்தால் தான் அதன் வாழ்வின் மொழி புரியும். இதுவரை இருந்திருக்கின்ற ஆண்களின், சமூக குரல்களிலிருந்து புதிய தரிசனங்களை தருகின்ற குரல் பெண்களிடமிருந்து ஒலிக்கத் துவங்கியிருக்கின்றது

கடல் சிறுமி

கடல்பற்றி ஒரு கவிதை
எழுதச் சொல்லிக் கேட்டபடி மாலையில்
நெளிந்தபடி வந்தாள்
எதிர்வீட்டுச் சிறுமி

உனக்கு கடல்பற்றி ஏதும்
தெரிந்தால் நீயே எழுது என்றேன்
தெரியாதே என்ற அவள்
கொஞ்சம் யோசித்து
கடல் ப்ளூவாக இருக்கும் என்றாள்
இன்னும் சொல் என்றதும்
நாலு வரி போதும் என்று
ஆசிரியை சொன்னதாகச் சொன்னாள்
நாலு வரிகளுக்குள்
அடங்கி விடக் கூடியதான ஒரு கடலை
தனியே உட்கார்ந்து
தேடிக் கொண்டிருக்கிறேன்



கவிஞனின் கவிதையில் ஒரு சொல் வெறும் அச்சொல்லாகவே இல்லாது பன்முகத் தன்மை கொண்டிருப்பதும் எல்லாவற்றுக்குமான பொதுமையாகிப் போவதும் தான் சிறப்பு.
இக்கவிதை ரொம்ப எளிதாகப் புரிந்து கொள்ளப் பட்டு விட்ட சொற்களுக்கிடையில் கடலைப் புரிந்துகொள்ள முடியாமல் போன வியப்பையும் ஏற்கனவே தீர்மானிக்கப் பட்ட விசயமாக சிறுமிக்கான கடல் நிலை கொண்டிருப்பதையும் அது மேலும் விரிவு படாமல் அதற்குள்ளாகவே தாங்கள் பார்த்து விட்ட நாலு வரிகளுக்குள்ளாகவே இருந்து விடக் கோருவதும் , முன் தீர்மானங்களின் வழி வாசிக்கக் சொல்வதையும் சொல்லாமல் சொல்லிச் செல்கின்ற கவிதை வரிகள் இவை.
கவிதை புரிதலுக்கானது அல்ல உணர்தலுக்கானது .
இதோ இன்னுமொரு கவிதை உங்கள் உணர்தலுக்காக

பொருட்காட்சி விட்டு வந்து
வெகுநேரம் ஆகியிருந்தும்
தலைக்குள் ஓடிக் கொண்டுள்ளது

பொம்மை ரயில் ஒன்று
சிரிக்கும் புத்தர் பொம்மை கூடவும்
கான்டீன் மிளகாய் பஜ்ஜியும்
கொதிக்கிறது மனதில் கரித்து விடாமல்
பிரியமானவர்களுடன் எடை பார்த்து
துப்பும் காகிதச் சீட்டு ஒன்றையும்
மல்லிகைச் சரத்தையும் எறிய
சாக்கடையில் மிதக்கிறது நிலா
என் கைப்பைக்குள் அவிழ்ந்த
ரிப்பனாய் சுருண்டபடி நான்
என் பொருட்காட்சி விட்டு நடந்து

கடைசி ஐந்து வரிகளில் கவிதை எப்பவும் நாம் பேசுகின்ற பொருட்காட்சியிலிருந்து வேறு இடத்திற்கு நகட்டிக் கொண்டு போய் விடுகின்றது. பொருட்காட்சிக்கு முன் “ என் “ என கவிஞர் சேர்க்கின்ற வார்த்தை பொருட்காட்சி என்கின்ற வார்த்தையை வாழ்வாக வாசிக்க வைத்து விடுகின்றது.

பெண்கள் சார்ந்த விசயங்கள் தான் என்றில்லாது , சமூகம் பெண்களூடாக எங்கெல்லாம் பயணிக்கிறதோ எங்கெல்லாம் அவளைப் பெண்ணாக நிறுத்தி விட முனைகிறதோ, இப்படி எல்லா தளமிருந்தும் பெண்களின் குரல் வரத் துவங்கி விட்டது தட்டையான வாசிப்பை உணருதலை புறம் தள்ளி

தாயுள்ளத்தைத் தவிர வேறெந்த உள்ளமும் ஆண் உடலுக்குள்ளிருந்தாலும் பெண் உடலுக்குள்ளிருந்தாலும் ஆணின் சுயநல உள்ளமே
எப்பவும் எனக்கு இது பிடிக்கும் எனது நினைப்பு இது எனது ஏக்கம் எனது வலி இப்படியே சொல்லிக் கொண்டிருக்கின்ற சுயநல உள்ளமே ஆண்களுக்கும் ஆண் மனதுகளுக்கும் வாய்க்கிறது
பெண்களிலும் நிறைய ஆண் உள்ளங்கள் இருக்கவே செய்கின்றன
அவை சுயம் பேசுவதன் மூலமும் தன் வழியாகவே தன் நிறத்தின் சாயலாகவே எதையும் பார்க்க வல்லவை. ஆனால் தாயுள்ளம்தான் உண்மையில் பெண் மனம் அதுவே கவிஞனின் மனமும் கூட அதனாலேயே தன்னைப் பெண்ணாகப் பாவித்து எழுதிய ஆண்கவிஞர்கள் நம்மிடையே நிறைந்து இருந்தார்கள். அப்பெண் மனமே தனக்கு ஏதொன்று கிடைத்திருந்தால் நல்லாயிருக்குமே என்று நினைக்கும் போதே அதே போல் ஒன்றைத் தன் எதிராளிக்குத் தந்து விடத் தயாராகி விடும். அப்படிப்பட்ட கவி மனம் கவிதையை வாழ்வாக நம்புபவர்களிடமிருந்து நமக்கு நம் வாழ்வின் அடுத்த நகர்தலுக்கான அச்சாணியாய் மாற்றி விடும் அதிசய சொற்களாய் ஆகி விடுகின்றது

கவிதையை தங்கள் இருப்பாக்குபவர்களின் இடமிருந்து வாசகன் கவனமாய் இருத்தல் அவசியம். நிஜம் போல பொய்யும் வலி போல தங்களையும் எப்பவும் கவிதை வாயிலாக முன்னிறுத்திக் கொள்பவர்கள்.இவர்கள் கவிதைகள் அவநம்பிக்கையையும். இதுவரை பேசப் படாத துணிச்சல்களாக பொய்மைகளையும் மாற்றி முன் வைத்து விட்டுப் போகின்றது. இக்குரல்கள் ஊடகங்களினால் பிரபலப் படுத்தப் படுகின்றன. அப்படி சில பெண் கவிஞர்கள் இதுவரை ஆண் எழுதிய எங்கள் உடலை நாங்களே எழுதினால் என்ன என எழுதிக் கொண்டிருக்கிறார்கள். காலம் காலமாக பெண் உடல் சார்ந்த வளாக சித்தரிக்கப் பட்டதாலேயே அவள் உடமைப் பொருளாயும், வணிகப் பொருளாயும் மாறிப் போனாள் இந்த உலகமய மாக்களில். அதிலிருந்து மீள பெண் தான் உடல் மட்டுமல்ல . இச்சமூகம் சிதைப்பது அவள் உடலை மட்டுமல்ல அவள் உணர்வுகளையும் தான் எனவும், அவள் அறிவும் ஆற்றலுமானவள் அவள் பார்வைகள் நாலு அறைகளுக்குள்லானது மட்டுமல்ல நாலு அறைகளுக்குள்ளாகவும் அவள் பெற்ற அனுபவம் இந்த உலகத்துக்குமானது என்பதை நிரூபிக்க வேண்டும். ஒரு கவிதை உண்மையான வாழ்வின் துயரத்தை சரியான பொதுமையில் பேசுமாயின் அக்கவிதை அவளுக்கானதாக மட்டுமல்லாது வாசிப்பவருடைய அனுபவமாக மாறி விடக் கூடும்
உதாரணமாக
எனது ஒரு கவிதை

நேசிக்கின்ற படியால்
கொலை செய்யப் படுகின்றேன்
உனக்கு வலிக்குமென்றுதான்
உண்மைகளைப் புதைக்கின்றேன்
புதைபடுகின்ற வலியோடு
கூடு தேடி அலையும்
எந்தன் உடலும்

சொல்ல முடியா உண்மைகள் சூழ்ந்து விட
தூரப் போகின்றேன்
நெருக்கடி தாங்காது
பார்க்கின்ற தூரத்தில் இருந்தும்
உணர முடியா தூரத்தில் நீ
சொல்லிப் போகின்றாய்
பெண் புதிரானவளென்று

இக்கவிதை வாசிக்க நேர்ந்த ஒரு அமைதிப் படையில் வேலை செய்த காவல் அதிகாரி இக்கவிதை இலங்கைப் பிரச்சனையை பேசுகிறது என்கின்றார்.
ஆதிக்கத்துக் கெதிராக ஒரு பெண்ணாயிருந்து எழுதப் பட்ட கவிதை , ஆதிக்க அரசாங்கத்துக்கெதிரான ஒரு இன விடுதலைக்கானதாய் வாசிக்கவும் முடியுமென்பதற்கு அச்சம்பவம் ஒரு சாட்சி

ஆனால் கவிதையை தன் இருப்பாக்குபவர்கள் தன்னையையே எழுதத் தொடங்கி , தன்னின் நிஜத்தையும் எழுதாது மேலெலும்பாது தான் மட்டுமாகவே சுருங்கிப் போவது நிராகரிக்க வேண்டியது

இன்றைய வாழ்வுதான் உனது எனதுமான நிஜம்
ஆனால் ஆண் கட்டமைத்த இச்சமூகத்தில் பொய்யைத் தான் நிஜமென வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்ற உண்மையை எடுத்துச் சொல்ல பெண் குரல்கள் பழைய மற்றும் மேற்கத்திய சாயங்கள் ஏறாத பெண் நிலை வாதமாக முன்னெடுக்கப் படவெண்டும் அப்படி முன்னெடுப்பவர்கள் பட்டியலில் வைகை செல்வி, இளம்பிறை , தமிழச்சி, நந்திதா, சக்தி ஜோதி இன்னும் பலரது கவிதைகள் புதிய புதிய தளங்களாக வந்த வண்ணம் இருக்கின்றன.அவற்றை வாசிப்பதுவும் வளர்த்தெடுப்பதுவும் வாசகனின் வேலை.

நன்றி திலகபாமா
...மேலும்

பெண் கவிதை மொழி- சுகுமாரன்

தமிழிலக்கியச் சூழலில் இன்று உரக்க ஒலிக்கும் விவாதங்களிலொன்று பெண்கள் எழுதும் கவிதைகளைப் பற்றியது. எல்லா விவாதங்களையும் போல இதிலும் முன்னெடுத்துச் செல்வதற்கான கருத்துக்கள் குறைவு; ஆரவாரங்கள் அதிகம். இது இயல்பானது என்று இலக்கிய வரலாற்றைப் பார்க்கும்போது புலனாகிறது. தமிழில் புதுக் கவிதையின் வருகை இதுபோன்ற விவாதங்களை உருவாக்கியது. பெரும் எதிர்ப்புகளையும் விமர்சனங்களையும் முன்வைத்தது. அன்று புழக்கத்திலிருந்த கவிதையியல் சார்ந்து எழுதிக்கொண்டிருந்தவர்கள் புதிய குரலை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கவில்லை. மொழியும் இலக்கியமும் அவை உருவாகும் வாழ்நிலைகளும் மாறுவதற்கேற்ப புதிய போக்குகள் நிகழும் என்ற உண்மையை அறிந்திருக்கும் இந்த எதிர்நிலை விவாதத்தில் ஈடுபட்டிருந்தனர்.

கருத்துச் சார்ந்த பிடிவாதங்களை விடவும் காலத்தின் போக்கும் வாழ்நிலையின் தேவையும் வலுவானவை என்பதனால் மாற்றங்கள் இயல்பாகவே
நிகழ்ந்தன.

மாற்றங்களுக்குத் தடையாக நின்றவர்களே அதன் பகுதியாகவும் நடைமுறையாளர்களாகவும் ஆனார்கள். இது இலக்கிய நியதி என்றே கருதுகிறேன்.

இன்று பெண்களும் தலித்துகளும் எழுதும் கவிதைகளைப் பற்றியும் அதுபோன்ற விவாதங்கள் உரக்க ஒலிக்கின்றன. இங்கு பேசப்படும் பொருள் பெண்களின் படைப்பாக்கத்தை முன்னிருத்தியது என்பதனால் அது குறித்த கருத்துக்களை மட்டுமே கவனப்படுத்த விரும்புகிறேன்.

இலக்கியத்தில் நிலவும் பாகுபாடுகள் அடிப்படையில் அதை அணுகுவதற்கும் உதவும் கருவிகள் என்று மட்டுமே நம்புகிறேன். எனினும் காலமும் சூழலும் பெண்ணெழுத்து என்ற பாகுபாட்டை எதார்த்தமாக்கி இருக்கின்றன. ஆண் மையச் சிந்தனைகளே மதிப்பீடுகளை நிர்ணயிக்கும் அமைப்பில் இந்தப் பாகுபாடு இயல்பானதும் கூட. தமிழ்க் கவிதைக்கு நீண்ட மரபு உண்டெனினும் பெண்ணெழுத்து தற்கால நிகழ்வு. எனவே முன் மாதிரிகள் இல்லாதது. பெண்கள் இதுவரை நடைமுறையிலிருந்த கவிதை மரபை மறு உருவாக்கம் செய்வதோடு தங்களது மொழியையும் படைக்க வேண்டியிருக்கிறது. இந்தப் புத்துருவாக்கம்தான் விமர்சனங்களையும் சர்ச்சைகளையும் எழுப்புகிறது. இலக்கியம் என்ற பரந்த வெளியை ஆண்களே அடைத்துக் கொண்டிருக்கும் சூழலில் பெண் தனக்கான இடத்தை நிறுவிக்கொள்ளும் இயல்பான செயலாகவே பெண்ணெழுத்து மதிப்பிடப்பட வேண்டும்.

ஆனால் நம்மிடையே நிகழும் விவாதங்கள் அதற்கு எதிரானவையாகவும் அழுத்தமாகச் சொன்னால் அவற்றை மலினப்படுத்துவதாகவும் தென்படுகின்றன.

தமிழில் எழுதப்படும் பெண் கவிதைகளைப் பற்றி இரண்டு வகையான கருத்துக்கள் நிலவுகின்றன. ஒன்று - பெண் எழுத்தின் மீது தீண்டாமை கற்பிக்கும் சிலரின் கருத்து. இரண்டாவது கருத்து - பெருந்தன்மையாளர் களுடையது. யாரெல்லாமோ கவிதைகள் எழுதுகிறார்கள்.
பெண்களும் எழுதிவிட்டுப் போகட்டுமே. இது மேம்போக்கானது. இவ்விரு கருத்துக்களும் இலக்கியத்தின் அடிப்படைகளுக்கு எதிரானது.

ஒரு புதிய போக்கை ஏற்றுக்கொள்ள முடியாத மனப்பாங்கு இலக்கியத்தை அடுத்தகட்ட வளர்ச்சி நோக்கிச் செலுத்த இயலாது என்ற விதியை ஒப்புக்கொண்டால் இந்தக் கருத்துக்களின் வெறுமையை நாம் உணர முடியும்.

இந்த விதியைச் சார்ந்தே இலக்கியம் புதிய களங்களைக் கண்டிருக்கிறது.

கவிதை அனுபவமும் கருத்தும் ஒருங்கிணைந்த படிமம் என்ற கருத்தை கவிதையியலின் ஆதாரமாகக் கருதுகிறேன். இதுவரை நாம் கவிதையின் பரப்பில் கண்டவை ஆணின் உலகம் சார்ந்த அனுபவங்கள். தனி வாழ்க்கையிலும் சமூக வாழ்க்கையிலும் பெண்ணின் துணையின்றி ஆணின் இருப்பு சாத்தியமில்லை. அப்படியானால் பெண்ணுக்கும் அனுபவங்களும் அவற்றையொட்டிய கருத்தாடல்களும் நிகழுமில்லையா? அவை ஏன் இலக்கிய மதிப்புப் பெறவில்லை? அப்படி மதிப்புப் பெறாமல் போவது ஒரு சமூகத்தின் அரைகுறையான வரலாற்றை, முழுமையற்ற கலாச்சாரத்தை, நிறைவு பெறாத படைப்பாற்றலையல்லவா அடையாளப்படுத்தும்? இந்தக் கேள்விகள்தாம் பெண்ணெழுத்து முன்வைப்பவை.

அனுபவம் ஒவ்வொருவருக்கும் பிரத்தியேகமானது. என்னுடைய கவிதை என்னுடையதாக அமைய இந்த அனுபவம்தான் அடிப்படை. இந்த அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ளத்தான் நான் முற்படுகிறேன். இதே விழைவு பெண்ணுக்கும் உண்டு. இதே பிரத்தியேகத்தன்மை பெண் அனுபவத்துக்கும் உண்டு. சரியாகச் சொல்வதென்றால் பெண்ணின் பல அனுபவங்களை நான் உணர்வது இயற்கையாகவே அசாத்தியமானது. கமலாதாசின் கவிதையொன்றில் கருப்பையிலிருந்து பிறப்புறுப்பு வழியாக ஓர் உயிர் ஊர்ந்து இறங்கும் செயலைக் குறிப்பிடுகிறார். இந்த அனுபவத்தை நான் ஒருபோதும் பட்டறிய முடியாது. கவிதை புதிய அனுபவங்களுக்கான நிரந்தர வேட்கையுடன் இயங்குவது. எனவே இந்த அனுபவத்தை நான் விலக்க இயலாது. இதை ஒரு பெண் தவிர யாரும் வெளிப்படுத்திவிடவும் இயலாது. இந்த அனுபவம் எனக்கு உணர்வாக மாறுகிறபோது ஒரு பெரிய மானுடத் தொடர்ச்சியின் பகுதியாக நானும் என்னுடைய படைப்பும் மாறுகிறோம். இது இலக்கியத்தின் இயல்பு.

இந்த அனுபவங்கள் பின் தள்ளப்பட்டு விடும்போது வாழ்க்கையின் கேள்விகளை வெளிப்படுத்துவதற்கான என்னுடைய முனைப்பும் தேவையும் ஊனம் அடைகின்றன என்று கருதுகிறேன். இந்தக் கேள்விகளிலிருந்துதான் வாழ்க்கை பற்றிய கருத்துக்கள் உயிர் கொள்ளுகின்றன. இது நிகழாமற்போனால் வாழ்க்கையோட்டம் நிலைத்து விடும். பெண் கவிதைகள் அண்மைக்காலமாகத்தான் இந்தக் கேள்விகளை முன் எறிகின்றன. இந்தக் கேள்விகளை எதிர்கொள்ள ஆண் மனம் பதறுவதில்தான் எதிரான விமர்சனங்கள் எழுகின்றன. அந்தப் பதற்றம்தான் பொய்யான இலக்கிய விலக்குகளை உருவாக்குகிறது. உண்மையில் இலக்கியத்தில் விலக்கப்படக் கூடியதாக எதுவுமில்லை.

பெண் கவிதைகள் உடலைச் சார்ந்த ஆரவாரமாக எழுதப்படுபவை என்ற கருத்தும் புழக்கத்தில் இருக்கிறது. பெண்ணின் அங்கங்களைப் பற்றிய குறிப்புகள் அப்பட்டமாகக் கவிதைகளில் இடம் பெறுவது பலரையும் மிரட்சியடையச் செய்துமிருக்கிறது. உடல் தொடர்பான வலிகளை, வாதைகளை, ஆனந்தத்தை வேறு எந்தச் சொற்களால் குறிப்பிட முடியும்?

பெண் கவிதை மொழியே உடலும் உடலின் உபாதைகளும் வேட்கைகளும் சார்ந்தது என்று ஜீலியா கிறிஸ்தவா குறிப்பிடுகிறார். இது ஒரே சமயத்தில் மறுப்பும் படைப்புமாகிறது. இதுவரை தன் உடல்மேல் பதிந்திருக்கும் ஆண்மையச் சித்திரிப்பை உதறும் மறுப்பு. தன் உடல் தன்னுடைய உரிமைப் பொருள் என்று உணரும் சுதந்திரம். இந்த நோக்கில் வெறும் வஸ்துவாக சுட்டிய சொற்கள் பெண்ணால் உச்சரிக்கப்படும் போது உடலைக் கடந்த இயக்கமாகின்றன. குட்டி ரேவதியின் ‘முலைகள்’ என்ற கவிதையை சுகிர்த ராணியின் ‘சிரைக்கப்பட்ட காடுபோல என் நிர்வாணம்’ என்ற வரியை இந்த அர்த்தத்தில்தான் புரிந்துகொள்ள முடியும்.

ஆண் மையக் கருத்தாக்கங்கள் ஆயத்தம் செய்து வைத்திருக்கும் பெண் என்ற படிமத்தை பெண்களே எழுதும் மொழி நிராகரிக்கிறது. சாதி, இன, பால் வேற்றுமைகள் கொண்ட கலாச்சாரம் முன்வைக்கம் நிபந்தனைகளையும் சலுகைகளையும் மறுக்கிறது. ஒரு சமயம் இது மொழியின் சிக்கல். அதே சமயம் இது கலாச்சாரத்தின் சிக்கலும் கூட. இவற்றை எதிர்கொள்ள உருவாக்கப்படும் சுதந்திரம் கவிதையின் சுதந்திரமும் கலாச்சாரத்தின் சுதந்திரமும் ஆகிறது. விரிவான தளத்தில் யோசித்தால் இந்த சுதந்திரம் பெண்ணை பெண்ணுக்குள்ளேயே சிறைப்பட அனுமதிக்காது என்று கருதலாம். தமிழில் இன்று கேட்கும் பெண்குரல்கள் இந்த நோக்கில் அமைந்திருப்பவையாகவே கருதுகிறேன். அது ஆம் என்று உறுதிப்படுமானால் தமிழ்க் கவிதை இன்னும் வீரியம் பெறும்.


...மேலும்

மழைப் பறவைகள் நீங்கிய வானம் - ஃபஹீமாஜஹான்


தூறலாய் சாரலாய்
பெரும் துளிகளாய் மாறித்
தன்னை நிகழ்த்திக் காட்டிக் கொண்டிருந்தது
அந்தி மழை

தாளம் தப்பாத பாடல்களை
அதனதன் குரல்களில் இசைத்தபடி
களிகூர்ந்து பறக்கத் தொடங்கியிருந்தன
வானில் வந்து கூடிய மழைப்பறவைகள்

தனது கவிதைப் பொருள்களெலாம்
சிறகடித்து நனைவதை
இரசித்தவாறு
மெய்மறந்து கிடக்கிறாள் அவள்

அகப்பட்ட பசிய மரங்களையெலாம்
பூவோடும் பிஞ்சோடும் எரித்தவாறு
வழமையான தனது வழியொன்றால்
தெறித்து வந்ததொரு மின்னற் தீ
அவளைச் சூழ வீழ்ந்தோய்ந்ததும்
அக்கணத்தில் தான்

கவிதைகளை வாறிச் சுருட்டிக்கொண்டு
கண்ணெட்டாத் தொலைவுக்கப்பால்
போய் மறைந்தன மழைப் பறவைகள்

செல்லப் பறவைகள்
விடைபெற்ற இருண்ட வானத்தை
வலுக்கத்தொடங்கிய மழையில் கை விட்டுவிட்டு
அவளும் காணாமற் போயிருந்தாள்

ஃபஹீமாஜஹான்
2009.12.07
...மேலும்