Showing newest posts with label கட்டுரை. Show older posts
Showing newest posts with label கட்டுரை. Show older posts

சர்வதேச பெண்கள் தினம் நூறாவது ஆண்டு-நாம் என்ன செய்யவேண்டும்:தேவகி

புராதன காலத்தில் கிரேக்கத்தில் போரை முடிக்கு கொண்டு வர பெண்கள் போராடினார்கள். 1789 இல் சமத்துவம், சுதந்திரம், பிரதிநிதித்துவம் கோரி பிரஞ்சு புரட்சியின் போது பெண்கள் அணிதிரண்டனர். எட்டு மணிநேர வேலை நேரம், பெண்களுக்கான வாக்குரிமை மற்றும் ஊதியம் தொடர்பான கோரிக்கைகளை முன் வைத்தாக இப்போராட்டம் அமைந்தது.

1848 இல் பிரான்சில் இரண்டாவது குடியரசை நிறுவிய மன்னன் பெண்கள் அரசவை ஆலோசனைக்குழுவில் இடம் பெறவும், பெண்களுக்கு வாக்குரிமை வழங்கவும் சம்மதம் வழங்கிய தினம் மார்ச் 8 ஆம் திகதியாகும்.
1869 இல் பிரித்தானிய பாரளுமன்றத்தில் முதல் முதலாக பெண்களுக்கான வாக்குரிமை பற்றி பேசப்பட்டது.

இவ்வரலாற்றுப்பின்னணியில் நாம் கிளாரா சற்கின் (Clara Zetkin)) அவர்களின் பாத்திரத்தை மறந்து விடமுடியாது. 1870 இல் யேர்மனிய சோசலிச இயக்கத்தில் தன்னை அமைப்பு ரீதியான பணியில் இணைத்துக் கொண்டவர். 1881 இல் சோசலிஸ்ற்றுக்களுக்கு எதிராக விசேட தடைச்சட்டம் கொண்டு வரப்பட்ட போது தலைமறைவுப் பணிகளில் ஈடுபட்ட இவர் மேலும் தனது பணிகளை பிரான்ஸ், இத்தாலி மற்றும் ஒஸ்திரிய நாடுகளின் சோசலிச இயக்கங்களில் தொடர்ந்தார். 1889 இல் இரண்டாம் அகிலத்தை நிறுவும் பேராயம் பாரீஸில் நடைபெற்றது. இதன் அமைப்பாளர்களில் ஒருவராக கிளாரா செயற்பட்டார். 1890 இல் யேர்மனி திரும்பிய இவர் சமூக ஐனநாயக கட்சியின் பெண்கள் இயக்கத்தின் தலைமைப் பதவியை ஏற்றார். சோசலிச தொழிற்சங்கங்களில் பெண்கள் அமைப்பாதல், தொழிலாளர் அமைப்புக்களில் பெண்களை இணைப்பதிலும் இவரது பங்களிப்பு கணிசமானது. சமத்துவம் பத்திரிகையின் பொறுப்பாசிரியராக கடமையாற்றிய வேளையில் பெண் தொழிலாளர்களின் நலன் குறித்து பல விடயங்கள் இப் பத்திரிகையில் வெளி வந்திருந்தன.
1910 இல் ஹோப்பன்ஹேகனில் நடைபெற்ற இரண்டாவது அகிலப்பேராயம் வயது வந்த அனைவருக்கும் வாக்குரிமை கோரிக்கையை வலியுறுத்தியது. மார்ச் 8 ஆம் திகதியை சர்வதேச பெண்கள் தினமாக பிரகடனப்படுத்த வேண்டும் எனும் அறிக்கையை கிளாரா சட்கின் அவர்கள் தயாரித்தார். இக்கோரிக்கை இப் பேராயத்தில் நிறைவேற்றப்பட்டது.

இலங்கையில் வாக்குரிமைக்கான போராட்டம்
டொக்டர் நல்லம்மா முருகேசு என்பவரால் பெண்கள் வாக்குரிமைக்கு சார்பாக கொண்டு வரப்பட்ட பிரேரணை 1919 இல் இலங்கை தேசிய காங்கிரசின் முதல் அமர்வின் போது நிறைவேற்றப்பட்டது. பெண்களின் வாக்குரிமைக்கான முக்கிய ஆதரவு 1920 இலிருந்து தொழிற்சங்க இயக்கத்திலிருந்தும், தீவிரவாத அரசியல் பிரிவுகளிடமிருந்தும் கிடைத்தது.

1927 இல் டொனமூர் ஆணைக்குழு இலங்கைக்கு வருகிறது. 1927 மார்கழி மாதம் இலங்கை பெண்களின் வாக்குரிமைச் சங்கம் உருவாக்கப்பட்டது. பெண்கள் தமது வாக்குரிமைக்கான கோரிக்கையை எழுத்து வடிவில் டொனமூர் ஆணைக் குழுவிடம் சமர்ப்பிக்க முடிவு செய்திருந்தனர். அக்னேஸ் டி சில்வா, நீல் குணசேகரா ஆகியோர் இக்கோரிக்கைக்கு ஆதரவான கையெழுத்து சேகரிப்பதில் ஈடுபட்டனர். ஆனால் கையெழுத்துக்களை சேகரிப்பது அவ்வளவு இலகுவாக இருக்கவில்லை.

”சில இடங்களில் எங்களைத் திரும்பி போகும்படி வந்த வழியைக் காட்டிவிட்டனர். சில பெண்களின் கணவன்மார் கையெழுத்திடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். அப்படியிருந்தும் ஓய்வொழிச்சலற்ற றிக்க்ஷோ வண்டி ஓட்டத்தின் பின்னரும், அயராத முயற்சியின் பின்னரும் நாங்கள் பலவகைச் சமூகத்தையும், சாதிகளையும் சேர்ந்த பெண்களின் கையெழுத்துக்களைப் பெறுவதில் வெற்றி பெற்றோம “ என அக்னேஸ் அவர்கள் தெரிவித்திருந்தார். பெண்களின் வாக்குரிமை தொடர்பானதும் மற்றும் உரிமைகள் தொடர்பாக போராடியவர்கள் வரிசையில் மீனாட்சி நடேசய்யர், திருமதி ஆர். தம்பிமுத்து (இவருடைய சொந்த பெயரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. மன்னிக்கவும்) ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

பெண்கள் வாக்குரிமை சம்பந்தமாக அபிப்பிராய பேதங்கள் ஏற்பட்டன. பொன்னம்பலம் இராமநாதன் போன்ற அரசியல்வாதிகளின் கருத்துப்படி “சகலருக்குமான வாக்குரிமை என்பது பன்றிகளின் முன் முத்தை விதைப்பது” போன்ற செயலாகும் என சொல்லப்பட்டது.

பெண்களின் வாக்குரிமை சம்பந்தமாக பலமான ஆதரவு, வடமாகாணத்தைப் பிரதிநிதிப்படுத்திய சட்டசபை உறுப்பினரான எஸ்.ராஜரத்தினம் அவர்களிடமிருந்து கிடைத்திருந்தது. “ஏன் நாங்கள் இலங்கையிலுள்ள பெண்களை அடிமைகளாகவோ, அரை அடிமைகளாகவோ பாவிக்க வேண்டும். அத்தோடு அவர்கள் தங்கள் வாக்குகளை நியாயமாகவே பாவிப்பார்கள் என்பது எமக்கு தெரிய வேண்டும் என்றார் “|( Hansard; vol. III, 1928: 1722).

காலனித்துவ நாடுகளில் இலங்கையே முதன் முதலில் வாக்குரிமையைப் பெற்ற நாடாகும்.1945 இல் சான் பிரான்சிஸ்கோவில் ஏற்படுத்தப்பட்ட (ஐ.நா வின்) சமஉரிமை மற்றும் பெண்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்துதல், அடிப்படை உரிமை மேம்பாடு தொடர்பான உடன்பாடுகளுக்கமைய பெண்களுக்கான சமஉரிமை கோரிக்கை நிறைவேற்றப்பட்டது.
1975 ஆம் ஆண்டை சர்வதேச பெண்கள் ஆண்டாக ஐநா சபை அறிவித்தது. 1977 ஆம் ஆண்டு ஐநாவின் பொதுச் சபையில் சர்வதேச பெண்கள் தினத்தை ஐக்கிய நாடு பெண்கள் தினமாக கொண்டாட முடிவு செய்யப்பட்டது.

உலகளாவிய ரீதியில் தொடரும் போராட்டங்கள்
பெண்களது விடுதலைக்கான போராட்டமானது ஆரம்பத்தில் வாக்குரிமை தொடர்பாக தீவிரம் பெற்றாலும் கூட, காலப்போக்கில் அடுத்தடுத்த விடயங்கள் தொடர்பாகவும் இந்த போராட்டங்கள் தமது இலக்குகளை நகர்த்திச் சென்றன. சம வேலைக்கு, சம சம்பளம்: சொத்துடமை உரிமை: பிரசவகால விடுமுறை: விவாகரத்து உரிமை: கருத்தடை சாதனங்கள் மற்றும் கருக்கலைப்பிற்கான உரிமைகள்: பாலியல் தொல்லைகளுக்கு எதிரான போராட்டங்கள்……இப்படியாக இந்த போராட்டங்கள் இன்று வரையில் தொடர்ந்த வண்ணமே உள்ளன. இவற்றில் பலவற்றில் பெண்கள் வெற்றி பெற்றுள்ளார்கள். இன்னும் பலவற்றிற்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள். அல்லது போராடி பெற்றவைகளை மீண்டும் இழக்காமல் இருப்பதற்காக தீவிரமாக போராடியாகுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறார்கள். இவற்றில் சில எமது நாடுகளைச் சேர்ந்த பெண்களுக்கு அதிகம் சிரமம் இல்லாமலேயே வந்து சேர்ந்துவிட்டன. இன்னும் பல இன்னமும் வந்தடையாமலேயே இருக்கின்றன. இவற்றைவிட எமது சமூகத்தின் குறிப்பான ஒடுக்குமுறை வடிவங்களுக்கு எதிரான போராட்டங்களை நாமேதானே முன்னெடுத்தாக வேண்டிய நிலையில் இருக்கிறோம். இப்படியாக பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளும், அவற்றிற்கு எதிரான போராட்டங்களும் உலகளாவியவையாக இருப்பதால் நாமும் உலகலாவிய அளவிலும், எமது குறிப்பான பிரச்சனைகள் தொடர்பான குறிப்பான விடயங்களையும் உள்ளடக்கியதாக நாம் போராடியே ஆகவேண்டிய நிலையில் உள்ளோம். இப்படிப்பட்ட நிலையில் இந்த விதமான கொண்டாட்டங்கள் எமது போராட்ட பாதையை நினைவு படுத்தவும், எமது முன்னோர்கள் போராடி எமக்காக பெற்றுத் தந்துவிட்டுச் சென்றுள்ள உரிமைகளின் பெறுமதிகளை அங்கீகரிக்கவும், இன்னமும் வெல்லப்படாத உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு பெறவும் உதவும். எம்மை சுற்றியிருப்பவர்களும், எமது குழந்தைகளும் இப்படிப்பட்ட நிகழ்வுகளில் கலந்து கொள்வதன் மூலமாக மட்டுமே விழிப்புணர்வு பெறுவர் என்பதால் இவை கற்பித்தல் மற்றும் பயிற்றுவித்தல் நோக்கிலும் முக்கியத்துவம் பெற்றதாக ஆகின்றன.

நாம் ஏன் கொண்டாட வேண்டும்?
கொண்டாட்டங்கள், திருவிழாக்கள் என்பவை மனித இனத்திற்கு தேவையானவையும் சமூக ரீதியில் முக்கியமான அம்சங்களுமாகும். இவை தனிமனிதர்களின் வெறுமையை போக்கவும், தனி அடையாளங்களை இழந்து சகமனிதர்களுடன் வர்க்கமாக, சமூக சக்திகளாக ஒன்றுகலக்க உதவுவதுடன், உறவுகளை, நட்புகளை சந்திக்கவும் இன்ப துன்பங்களை, கருத்துக்களை பரிமாற, வாய்ப்புக்களை உருவாக்குகின்றன.

எல்லா சமூகங்களும் தமக்கென தனியான கொண்டாட்டங்களையும் பிரத்தியேக தினங்களையும் கொண்டிராமல் இல்லை. இவற்றின் சமூக பாத்திரத்தை நாம் சரியாக புரிந்து கொள்வது அவசியமாகும். இப்போது எம்மிடையே காணப்படும் கொண்டாட்டங்கள் பெரும்பாலும் சமய கொண்டாட்டங்களாக அமைந்து விடுகின்றன. இவ்வாறான கொண்டாட்டங்களை பிற்போக்கானவையாக நாம் காண்பதனால் எம் எல்லோராலும் திறந்த மனதுடன் இக் கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள முடிவதில்லை. மேலும் இவ்வாறான விடயங்களில் கலந்து கொள்வதை தவிர்ப்பதால் மட்டும் இவற்றை நாம் வழக்கில் இல்லாது ஒழித்து விடலாம் என்று கூறிவிட முடியாது. இவ்வாறான கொண்டாட்டங்களுக்கு மாற்றாக முற்போக்கானதும், மதசார்பற்ற நிகழ்வுகளுடன் தொடர்புடையதுமான கொண்டாட்டங்களை புதிதாக ஏற்படுத்திக் கொள்ள நாம் முன் வரவேண்டும். இதனை நாம் செய்ய தயங்கும் போது சமூகத்தில் காணப்படும் பிற்போக்கான அம்சங்களுக்கு எதிராக காத்திரமான போராட்டங்களை முன்னெடுப்பது சாத்தியமற்றதாகி விடுகிறது. நாம் பிற்போக்கானதும் மற்றும் பகுத்தறிவிற்கு அப்பால் பட்ட கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளாது இருப்பதுடன் மட்டும் நின்று விடாமல் மேதினம், சர்வதேச பெண்கள் தினம் போன்றவற்றை ஊக்கமுடன் கொண்டாடுவதுடன் எமது குடும்பத்தினரையும், பிள்ளைகளையும் இவற்றில் கலந்து கொள்ள ஊக்குவிக்க வேண்டும், இல்லாத போது எமது பிள்ளைகளே நாம் கொண்டாட மறுக்கும் கொண்டாட்டங்களை சமூகத்திலிருந்து பின்பற்றிக் கொள்ளவும், பேணவும் முன்வரலாம்.

ஆகவே புதியன படைப்பதில், இந்த கொண்டாட்டங்களும் முக்கியமான பங்கைவகிப்பதாக கருதி அவற்றை கொண்டாடுவதை ஊக்கமுடன் செயற்படுத்த வேண்டும். அவற்றிற்கான சிறப்பான நிகழ்வுகளை ஏற்பாடு செய்ய வேண்டும். நண்பர்களுக்கு வாழ்த்துக்களை பறிமாறிக் கொள்ள வேண்டும். புதிய கலாச்சாரத்தை படைப்பது என்பதை நாம் அன்றாட செயற்பாடுகள் மூலமாக சிறுகச் சிறுக கட்டமைக்க முன்வர வேண்டும். பொதுவாகவே கொண்டாட்டங்கள் என்பவை சமூகத்தில் இன்னமும் முக்கியமான பாத்திரங்களையும் ஆற்றுகின்றன. நண்பர்கள், உறவினர்கள் சந்தித்து கருத்துக்களை பறிமாறி மகிழ்ச்சியான இருப்பதும், வாழ்த்துக்களை பறிமாறிக் கொள்வதும் இந்த கொண்டாட்டங்களிலேயே. குழந்தைகள் புதிய உடைகளை உடுத்துவதும், இனிய உணவுப் பண்டங்களை ஒரு கை பார்ப்பதும் இந்த நாட்களிலேயாகும். இப்படிப்பட்ட முக்கியமான ஒரு சமூக, குடும்ப கொண்டாட்டத்தை எந்தவிதமான மாற்று ஏற்பாடுகளும் இன்றி ஒழித்துவிடலாம் என நினைப்பது தவறானது அல்லவா?

புலம் பெயர்ந்த நாடுகளில் எமது குழந்ததைகள் தமது அடையாளத்தை தேட முனைகின்றனர். நாம் புதியனவற்றை உருவாக்கி அவற்றை எமது கலாச்சார வெளிப்பாடுகளாக அவர்கள் முன் அறிமுகப்படுத்த தவறும் பட்சத்தில், நாம் கைவிட எப்போதோ தீர்மானித்துவிட்ட பழைய, பிற்போக்கான கொண்டாட்டங்களை தேடியெடுத்து அவற்றை கொண்டாட வேண்டும் என்று முனைகிறார்கள். பதின்ம வயதில் ஏற்படும் அடையாளப்படுத்தல் தொடர்பான அக்கறைகளும், சக வயதினர் கொடுக்கும் அழுத்தங்களும் (Peer Pressure) ), பல்வேறு கொண்டாட்டங்களும் வர்த்தகமய படுத்தப்பட்டிருப்பதும் இவற்றிற்கான முக்கிய காரணங்களாக அமைகின்றன. இன்று சாமத்திய சடங்கு நடத்துவது என்பதில் உறுதியாக நிற்பவர்கள் ஊரிலே பிறந்து வளர்ந்த பெற்றோர்கள் மாத்திரமல்ல. இங்கு பிறந்து, வளர்ந்து, கல்வி கற்று, இங்குள்ள கலை – கலாச்சார செயற்பாடுகளினூடாக வளர்த்தெடுக்கப்பட்ட சிறுமிகளும் தான். மாற்று சமுதாயத்தை கட்ட விழையும் நாம் எவற்றையெல்லாம் வெற்றிடமான விட்டுச் செல்கிறோமோ அவற்றையெல்லாம் சமூகத்தில் உள்ள படுபிற்போக்கான அம்சங்கள் நிரப்பத் தலைப்படுகின்றன. இது ஏன் நடைபெறுகிறது? பதில் இலகுவானதுதான். இயற்கையை போலவே சமூகமும் வெற்றிடத்தை அனுமதிப்பதில்லை. அந்த வெற்றிடத்தை நிரப்புவதற்கு தேவைப்படும் புதிய அம்சங்கள் உருவாக்கப்படவில்லையானால், பிற்போக்குத்தனமான கொண்டாட்டங்களால் இந்த வெற்றிடமானது இட்டு நிரப்பப்படுகிறது.

சித்தாந்தம் என்பது வெறுமனே நம்பிக்கைகள், கருத்துக்கள் மற்றும் விழுமியங்களின் தொகுப்பு மாத்திரமல்ல. சித்தாந்தத்திற்கு ஒரு ‘பொருள்வகை ‘ வெளிப்பாடும் இருக்கிறது. சித்தாந்தம் என்பது சடங்குகள், கொண்டாட்டங்கள் மற்றும் பல்வேறு நடைமுறைகளையும் உள்ளடக்கியதே. மாற்றான முற்போக்கு, ஜனநாயக, புரட்சிகர சித்தாந்தங்களை கட்டமைக்க முனைபவர்கள், தமது முயற்சிகளை வெறுமனே கருத்துக்களின் தளங்களில் மாத்திரம் மட்டுப்படுத்திக் கொள்வதனால் அவர்கள் அடைய விரும்பும் சித்தாந்த மேலாண்மையை அடைய முடியாது. மாற்றை படைப்பதற்காக கருத்துக்களின் தளத்தில் நாம் மேற்கொள்ளும் எமது முயற்சிகளானவை, நடைமுறை மட்டத்திலும் – மாற்றான கொண்டாட்டங்கள், சடங்குகள், நிகழ்வுகள் போன்றவற்றை ஒழுங்கமைப்பதன் மூலமாகவும் பலப்படுத்தப்பட வேண்டும். இல்லாதபோது, நாம் வரித்துக் கொண்ட கொள்கைகளுக்கும், எமது வாழ்க்கை முறைகளுக்கும் இடையில் திட்டவட்டமான ஒரு இடைவெளி காணப்படுவது தவிர்க்க முடியாததாக இருக்கும். இந்த இடைவெளிதான், அந்திய சித்தாந்தங்கள் வேரை ஊன்றுவதற்கான இடைவெளியை வழங்குகின்றன.

ஒருவரது சித்தாந்தத்திற்கும், அவரது ‘தன்னிலை’ (Subject) இடையிலான உறவென்பது மிகவும் சிக்கலானது. ஒருவிதத்தில் எமது சித்தாந்தங்களே எமது ‘தன்னிலை’களை கட்டமைக்கின்றன. மனிதருக்கும், அவர் தொடர்பு கொள்ளும் புறநிலை மற்றும் சமூகத்திற்கும் இடையிலான உறவென்பது மிகவும், நேரடியானதும், எளிமையானதுமல்ல. இந்த அர்த்தத்தில் அனுபவமானது நேரடியாக அறிவைத் தந்துவிடுவதில்லை. அறிவைப் பெறுவது அத்தனை இலகுவான, நேரடியான செயற்பாடாக இருப்பின் விஞ்ஞானிகளுக்கு தேவை இருக்கமாட்டாது அல்லவா? ஒவ்வொரு மனிதரும் சித்தாந்தத்தின் ஊடாகவே புற உலகுடன் தொடர்பு கொள்கிறார். இதனை இடையீட்டுச் செயற்பாட்டு ( Mediation ) என்பர். இந்த சிக்கலான உறவை மிகவும் எளிமைப்படுத்தி, இந்த கொண்டாட்டங்கள், மற்றும் அதனுடன் தொடர்புடைய நடைமுறைகளை நாம் முற்றாக நிராகரிக்க முனையும் போது நாம் மாற்றீடு செய்ய விரும்பும் சித்தாந்தமானது முறியடிக்கப்பட முடியாததாக நின்று நிலைப்பது தவிர்க்க முடியாததாகிவிடும். ஆகவே புதிய கலாச்சாரத்தை உருவாக்க முனைபவர்கள் இந்த சிக்கலான உறவுகளை புரிந்து கொண்டு, மாற்றான, கொண்டாட்டங்கள், நடைமுறைகள் போன்றவற்றை உருவாக்கிக் கொள்ள முனைப்பாக செயற்பட வேண்டும்.

ஒவ்வொரு தனிமனிதரது வாழ்விலும் நடைபெறும் முக்கியமான காலகட்ட மாற்றங்களை, வளர்ச்சியின் பருவ மாற்றங்களை குறிக்க சடங்குகள் இருப்பது உலகலாவிய நடைமுறையாகும். பிறப்பு, திருமணம், இறப்பு போன்றவை இவற்றுள் மிகவும் அடிப்படையானவையாகும். இப்படியாக வாழ்க்கையில் ஏற்படும் முக்கியமான கட்ட மாற்றங்கள், அதனுடன் கூடவே புதிய பொறுப்புக்களையும் கொண்டு வந்து விடுகிறது. இந்த உணர்வானது சம்பந்தப்பட்டவர்களது மனங்களில் ஆழமாக பதிவது, தாம் ஏற்றுக் கொள்ளும் புதிய பொறுப்புக்களை சரிவர மேற்கொள்ள மிகவும் அத்தியாவசியமானதாகும். இதனையே இவை தொடர்பான சடங்குகள் செய்ய முனைகின்றன. எமது சமுதாயத்தில் இந்த சடங்குகள் என்பவை முற்றிலும் மதம் சார்ந்தவையாகவும், தீட்டு – தூய்மை போன்ற பிற்போக்கு கருத்துக்கள் மற்றும் சாதிய நடைமுகள் போன்றவற்றுடன் நெருக்கமாக தொடர்புடையனவாக இருக்கின்றன. அவை தவிர முன்பொரு சிறிய குலமரபு ( Tribal) சமூகத்தில் தேவையாக இருந்த சில சடங்குகள், அவற்றின் தேவைக்கான காலகட்டத்தை கடந்துவிட்ட பின்னரும், இன்றைய நவீன சமுதாயத்தில், அதன் சமூக பாத்திரம் அனைத்தையும் இழந்த பின்னரும் வெறுமனே தேவையற்ற ஆடம்பரங்களாகவும், பிற்போக்கு கருத்துக்களுக்கு எண்ணையூற்றுவதாகவும் மட்டுமே செயற்படுகின்றன. இப்படிப்பட்டவற்றிற்கு எதிராக நாம் தீவிரமாக போராடியே ஆக வேண்டியுள்ளது. ஆனால் இந்த பிற்போக்கான சடங்குகள் மற்றும் திருவிழாக்களுக்கு மாற்றான புதிதான மதசார்பற்ற, முற்போக்கு, ஜனநாயக விழுமியங்களை பரப்பக் கூடிய கொண்டாட்டங்கள்; மற்றும் விழாக்களை உருவாக்காமல், அந்த புதிய விழாக்களில் நாம் பெருமிதத்துடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடும் நிலைமைகளை உருவாக்காமல் இந்த பிற்போக்கு கொண்டாட்டங்களை ஒழித்துவிட முடியாது. இப்படியாக புதிய விழாக்கள், கொண்டாட்டங்கள்; நடைபெறும் குடும்பங்களில் குழந்தைகளும் சிறுவயது முதவே இவை தொடர்பான கலந்துரையாடல்களின் ஊடாக வளர்க்கப்படுகையில் இவற்றை அவர்கள் தமது அடையாளப்படுத்தலின் ஒரு கூறாக இந்த புதிய விழாக்களை இயல்பாகவே ஏற்றுக் கொள்வார்கள்.

புரட்சிகர, முற்போக்கு, ஜனநாயக சக்திகள் என்ற வகையில் நாம் இந்த நாட்களை மிகவும் உற்சாகமாகவும், முடியுமானபோது அந்தந்த நாடுகளில் உள்ள பிரதான முற்போக்கு அணிகளுடனும் சேர்ந்தும் கொண்டாட வேண்டும். இந்த வகையான கொண்டாட்டங்கள் எமது பொறுப்புணர்வுகளை அதிகரிப்பதாக அமைய வேண்டும். எம்மை நாமே புதுப்பித்துக் கொள்வதாக, எமது உணர்வுகளை முனைப்பாக்கிக் கொள்ள, கூட்டான செயற்பாடுகளை முன்னெடுக்க பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நாம் இன்று அனுபவிக்கும் பல உரிமைகளுக்கு பின்னாலுள்ள முன்னைய தலைமுறைகளினது தியாகங்களை மதிக்கவும், நாம் எதிர் கொள்ளும் புதிய சவால்களை முறியடிப்பதற்கு திட சங்கற்பம் ஏற்கவும் இந்த விழாக்களை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இப்படி செய்வோமானால், இதற்கு மேல் இந்த தினங்கள் வெறுமனே சம்பிரதாயபூர்வமானவை என்ற நிலைமையைத் தாண்டி எமது போர்ப்பிரகடனங்களாக ஒலிக்கத் தொடங்கும். ஊர்வலங்களை ஒழுங்கு செய்வோம். அதில் நிறையவே சத்தம் செய்வோம். எமது உடைகளும், கொடிகளும், பதாகைகளும் எங்கும் உற்சாகத்தை ஊற்றெடுக்கச் செய்யட்டும். எமது உற்சாகம் அருகில் இருப்பவர்களையும், எமது சுற்றத்தினரையும் தொற்றிக் கொள்ளுமாறு செய்வோம்.

நீண்ட காலமாக தமிழர் மத்தியில் இப்படிப்பட்ட பாரம்பரியங்களை முறையாக செய்யாமல் இருந்துவிட்டு, இப்போது தொடங்குவது ஆரம்பத்தில் பெரிய அளவில் பயன்களைத் தராமல் போகலாம். ஆனால் அடுத்தடுத்த தடவைகளில் இது சிறிது சிறிதாக பெருத்து இவற்றை எமது சமூகத்தின் புதிய நியமங்களாக மாற்றவதற்கு நாம் ஓயாமல் உழைக்க வேண்டும்.

உசாத்துணை நூல் : Casting Perls, The Women’s Franchise Movement in Sri Lanka- Malathi de Alwis & Kumari Jayawardena

நன்றி - இனியொரு
...மேலும்

உங்களின் அன்னையரும், சகோதரிகளும், உங்களின் மனைவியரும், புதல்வியரும் எங்கே? - (முதலாம் பகுதி) குமாரி ஜயவர்த்தன




எகிப்தின் அரைவாசி மக்களது பிரதிநிதிகளையே நான் இங்கு பார்க்கிறேன். ஏனைய அரைவாசிப் பேர் எங்கே என்று நான் கேட்கலாமா? எகிப்தின் புதல்வர்களே, எகிப்தின் புதல்விகள் எங்கே? உங்களின் அன்னையரும், சகோதரிகளும், உங்களின் மனைவியரும், புதல்வியரும் எங்கே?

(1910ம் ஆண்டு பிரசில்சில் நடைபெற்ற எகிப்திய தேசியக் காங்கிரசின் கூட்டத்தில் இந்தியாவைச் சேர்ந்த பிக்காய்ஜி காமா அற்றிய உரையில் இருந்து)

19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் கீழைத்தேயத்தைச் சேர்ந்த ஒரு சில குறிப்பிட்ட நாடுகளில் பெண்ணியத்தின் ஆரம்ப வளர்ச்சி பற்றியும், அரசியல் போராட்டங்களில் பெண்கள் இயக்கங்களின் பங்கேற்புப் பற்றியும் இந்த ஆய்வு விளக்குகின்றது. தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளான துருக்கி, எகிப்து, ஈரான் ஆகியவை ஏகாதிபத்திய வல்லரசுகளுடன் தொடர்பு கொண்டிருந்தன என்ற வகையில் அவை தம்மிடையே ஓர் பொதுப் பண்பைக் கொண்டிருந்தன. எனினும் பண்பாடு, கருத்தியல் கொள்கைகள் என்பனவற்றில் அவற்றிடையே வேறுபாடுகள் காணப்பட்டன. இத்தகைய வேறுபட்ட கருத்தியல் கொள்ளைகள் அந்நாடுகளிலுள்ள பெண்களின் நிலை, பெண்களின் பங்கு, பெண்கள் இயக்கங்களின் தனிச்சிறப்புப் பண்புகள், அணுகுமுறைகள் என்பவற்றின் மீது தாக்கத்தை ஏற்படுத்தின. இதை நாடுகள் ரீதியாக இந்த நூல் விபரமாக எடுத்துக் காட்டுகின்றது.

பெண்ணியம், பெண்ணியலாளர் என்ற சொற்பதங்கள் மனக்கிளர்ச்சியையும், ஒருவித வெறுப்புணர்வையும் தூண்டுகின்றன. பெண்ணியம் என்பது ஓர் அண்மைக்காலக் கருத்தியல் அல்ல. அது 19ஆம் 20ஆம் நூற்றாண்டுகளின் போது ஐரோப்பாவிலும் ஏனைய பகுதிகளிலும் வேரூன்றிய ஓர் வாதவிடயம் என்பதை அனேகர் கவனிக்கத் தவறியுள்ளனர். அது பெண்கள் மீதான அடக்குமுறைகள், பெண்கள் (குடும்பத்துள், வேலைத்தளத்துள், சமூகத்துள்) சுரண்டப்படுதல் போன்ற விடயங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, அந்நிலையை மாற்றியமைப்பதற்கான உணர்வுபூர்வ செயல் நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதையும் பொருள்படுத்துகின்றது.

இது, சீர்கேடுற்ற மேற்கத்தேய முதலாளித்துவத்தின் விளைபொருள் எனவும், உள்நாட்டு பூர்ஷ_வா (முதலாளித்துவப்) பெண்களின் கருத்தியல் கொள்கை எனவும், அது பண்பாடு, சமயம், குடும்பப் பொறுப்பு, தேசிய விடுதலை, சோஷலிஸம் என்பவற்றிலிருந்து பெண்களை அந்நியப்படுத்தித் திசை திருப்புகின்றது எனவும் மரபுவாதிகள், பழமை பேணும் அரசியல்வாதிகள், ஏன் சில குறிப்பிட்ட இடதுசாரிகள் கூடச் சாடியுள்ளனர். மூன்றாம் உலகில் பெண்களின் விமோசனம் அல்லது பெண்களின் போராட்ட இயக்கங்கள் மேற்கத்தேய மாதிரிகளின் வெறும் பின்பற்றுதலே என்பது அவர்களின் கருத்தாகும்.

பெண்ணியமானது, மேற்கினால் மூன்றாம் உலகின் மேல் திணிக்கப்பட்ட ஒன்றல்ல என்பதையும், வரலாற்றுச் சூழ்நிலைகள் ஏற்படுத்திய கருப்பொருள், கருத்தியல் மாற்றங்கள் தான் பெண்களின் மீது தாக்கத்தை உருவாக்கியது என்பதையும் ஆராய்ந்து எடுத்துக் காட்டுவது அவசியம். என எனக்குத் தென்பட்டது. குறிப்பிடப்பட்ட நாடுகளில் ஏகாதிபத்தியத்தையும் மேலாதிக்கத்தையும் உதறித் தள்ளுவதற்கு முற்பட்ட முயற்சிகளாக-உள்நாட்டு சீர்திருத்தங்களைக் கொண்டு சமூகத்தை நவீனமயமாக்கல், உள்நாட்டு சீர்திருத்தங்களுக்கும் தடங்கலாக விளங்கும் ஆளும் வம்சாவழியினரையும் சமயமரபுக் கோட்பாடுகளையும் அழித்தொழித்தல், ஓர் தேசிய தனித்துவ அடையாளத்தை வலியுறுத்தி மக்களை அணிதிரட்டல் ஆகியவற்றின் பின்னணியில் இயங்கிய பெண்கள் விமோசன இயக்கங்கள் பற்றி இந்நூல் விபரமாக ஆய்வு செய்கின்றது.

மேற்கத்தேய மாதிரிகளைப் பின்பற்றுதல் மூலம் மேற்கத்தேய ஆக்கிரமிப்பை முறியடித்து, நாட்டைப் பலப்படுத்தி, தனித்துவப் பண்பாட்டு அடையாளத்தை நிலை நாட்டக் கையாண்ட யுக்தி, முரண்நகையானதொன்று எனக் கருதியாக வேண்டும். சர்வாதிகார ஆட்சிகளைக் கொண்ட துருக்கி, ஈரான் போன்ற நாடுகள், தேவைப்பட்ட நவீனமயமாக்கும் சீர்திருத்தங்களை தமது மக்கள் மீது திணித்தன. எனினும், எகிப்தில் சீர்திருத்தவாதம், தேசியவாதம் என்பன அக்காலகட்டத்தில் நிலவி வந்த வர்க்கக் கட்டமைப்புகள், முடியாட்சி அமைப்பு முறை என்பனவற்றின் வரையறைக்குள் வளர்ச்சியடைந்தன.

தேசியவாதம் ஓங்கி வளர்ந்ததும் உள்நாட்டு பூர்ஷ_வாக்களின் போராட்டங்கள் உள்வாரி, வெளிவாரி என இரு முனைகளில் மேற்கொள்ளப்பட்டன. இதன் போது தேசிய, பண்பாட்டுத் தனித்துவத்திற்கான அடையாளங்கள் வலியுறுத்தி, தேசபக்த அழைப்புகளை விடுக்க வேண்டியிருந்தது. கல்வி, விஞ்ஞானம், தொழில்நுட்பம், கைத்தொழில் என்பவற்றில் சீர்திருத்தங்களை ஊக்குவித்து, பிரதிநிதித்துவம் வாய்ந்த அரசாங்கம், சர்வஜன வாக்குரிமை, மனிதஉரிமை, தேசங்களின் உரிமை எனத் தாராளவாத கொள்கைக் குரல்கள் போராட்டங்களின் போது எழுப்பப்பட்டன. இதில் உள்நாட்டு பூர்ஷ_வாக்கள் பொருள்முதல்வாதத்தை அடிப்படையாகக் கொண்டு அரசியல், பொருளாதார பலத்தை அடைய முயன்றமை தென்படுகின்றது.

பண்பாட்டுத் தனித்துவ அடையாளத்தை உருவாக்குவதற்கும். அதை வலியுறுத்துவதற்கும் ஏகாதிபத்தியத்தின் வளர்ச்சியே ஓரளவு காரணமாக அமைந்ததெனக் கூறலாம். 18 ஆம் நூற்றாண்டின் போது. கீழைத்தேயத்தின் பண்பாடு, கட்டமைப்பு என்பன பற்றித் தெரிந்து கொள்வதில் ஐரோப்பாவில் பெரும் ஆர்வம் ஏற்பட்டது. அதன் விளைவாகப் புதிய கண்டுபிடிப்புகளுக்கான பயணங்களும் தொல்பொருள், வரலாற்று ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டன. இதனால் ஐரோப்பியப் பண்பாடு, புலமைத்திறன் என்பவற்றின் கண்ணோட்டங்களுடாக, ஐரோப்பியரல்லாதோரின் பண்பாடுகளை ஆராயும் ஓர் புதுக் கருத்துப் படிவம் உருவாகியது. காலப் போக்கில் இக்கருத்துப் படிவம் பண்பாட்டு ஆதிக்கம் செலுத்தும் கருவியாகவும் மாறியது.

பண்பாடுகளுக்கிடையிலான பிணைப்புகள் இருவழிச் செயற்பாடுகளாய் இருந்தன. பண்டைய கிழக்கின் பண்பாடே, நாகரிகத்தின் தோற்றுவாய் என்பதுவும் கீழைத்தேய மொழியான சமஸ்கிருதத்திற்கும் ஐரோப்பிய மொழிகளுக்கும் தொடர்புண்டு என்பது போன்ற எண்ணக்கருத்துக்களும் 19 ஆம் நூற்றாண்டு மேற்கத்தேய அரசியல் சிந்தனைகள் மீது ஆழ்ந்த செல்வாக்கைச் செலுத்தின. இதே மாதிரியாக, மேற்கத்தேய பண்பாட்டின் விழுமியங்களான இயற்கையான உரிமைகள், தாராளவாதம், பாராளுன்ற ஐனநாயகம் என்பவை ஆசிய, ஆபிரிக்க நாடுகளைக் கவர்ந்தன.

தெளிவான அறிவூட்டலுக்குத் தடங்கலாக இருப்பவரை (ழடிளஉரசயவெளைஅ) எதிர்த்துப் போராடி நடைமுறையிலிருக்கும் கட்டமைப்புகள், சமயப் பண்பாட்டு மரபுகள் போன்றவற்றைப் பகுத்தறிவிற்குப் பொருத்தமாக மாற்றியமைப்பதற்குத் தேசியவாதிகள் எடுத்த சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு ஐரோப்பாவிலுள்ள கீழைத்தேய நாகரிகப்பற்றுடையோரின் செல்வாக்கும், பிரெஞ்சுப் புரட்சிச் சிந்தனையாளர்களின் கருத்துகளும் மக்களுக்கு பிரக்ஞையை ஏற்படுத்தத் துணைபுரிந்தன.

புனித மார்க்க விரிவுரை விளக்கங்களுக்கு, புதியதாய் பொருள் விளக்கம் காணுதலையும், சமயகுரு மரபைச் சார்ந்த கட்டமைப்புகளை சீர்திருத்தம் செய்வதையும் நோக்கமாகக் கொண்டு, சமயப்புத்தெழுச்சி இயக்கம் செயற்பட்டது. அந்தக் காலகட்டத்தில் மத்திய கிழக்கில் நிலவிய சூழ்நிலைகளில் அரசியல் பொருளாதார வளர்ச்சிக்கு, இஸ்லாம் ஒரு தடங்கலாகக் கருதப்பட்டது. எனவே, இஸ்லாத்திற்கு புதிதாகப் பொருள் விளக்கம் தேடி அதை சமூக முன்னேற்றத்திற்கு ஒத்திசைவாக்கும் ஓர் பகுத்தறிவு வாய்ந்த சமயமாக உணரச் செய்வது பற்றியும் பெருமளவில் எழுதப்பட்டுள்ளன.

தேசியவாதத்தின் வளர்ச்சியை நிறைவேற்றுவதற்கோ, பெண்களின் விமோசனம் குறித்த செயல்முறைகளைக் கொண்டு சமூக மேற்கட்டமைப்புகளை சீர்திருத்தவோ, சமய குருமரபைச் சார்ந்த அதிகாரத்துவம் துணைபுரிந்ததாக இல்லை. எனவே அவர்களின் அதிகாரத்தைக் குறைப்பதற்கு பெருமளவு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பகாலத்தின் போது மதச்சார்பின்மை கொண்ட அரசியல் முறையொன்றை ஸ்தாபிப்பதற்கு இளம் துருக்கியர் மேற்கொண்ட முயற்சியை இங்கு விசேஷமாகக் குறிப்பிடலாம். இது அண்டைய இஸ்லாமிய நாடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

பிரக்ஞை ஒன்றை உருவாக்கி, கட்டமைப்புகளைத் திட்டமிட்டு மேற்கத்தேய மேலாதிக்கத்திலிருந்து தப்பிக் கொள்வதற்கு மேற்கத்தேய மதச்சார்பின்மைச் சிந்தனைகள் ஒரு முக்கிய பங்கு வகிப்பதை இங்கு நாம் காண்கிறோம். பூர்ஷ_வாக்கள் இந்த எண்ணக்கருத்தை உள்வாங்கி - ஓர் புதிய தேசியப் பிரக்ஞை. நவீனமாக்கம், மதச்சார்பின்மை கொண்ட அரசியற் கட்டமைப்புகள் ஆகியவற்றைப் படிப்படியாகக் கட்டியெழுப்ப அதைப் பிரயோகித்தனர். எனினும் இந்த உணர்ச்சி வேகம் குன்றி அதன் பின்னர், ஆணவப் பிடிவாதக் கருத்துரைகளும், மதங்களும் வியக்கத்தக்க வகையில் நீடித்து நிலைத்து நின்றன.

பிரக்ஞையை உருவாக்கிய மற்றுமொரு முக்கிய ஆக்கக் கூறு கல்வியாகும். ஆரம்பத்தில் அது, சமூகப்படி முறையில் உயர்மட்டத்தை வகித்தோர். சமயப்பற்றுடையோர் என்பவரிடையே மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. வெகுஜனக் கல்வியென்பது காலனித்துவ ஆதிக்கங்களால் பின்னொரு காலத்தில் இந்நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்ட ஓர் பூர்ஷ_வா உலகைச் சார்ந்த கருத்துப் படிவமாயிற்று. இதன் ஆரம்ப நோக்கம் மதமாற்றத்தை ஊக்குவிப்பதாகவும், நிர்வாகத் தொழிற்துறைக்கு உகந்தோரை உருவாக்குவதுமாகும். எனினும் பின்னர் இது வெகுஜனங்களிடையே எழுத்தறிவு பரவியதற்குக் காரணமாகி, செய்தித்தாள்கள், சஞ்சிகைகளின் விஸ்தரிப்பிற்கான அடித்தளத்தையும் இட்டது.

எழுத்தறிவு, செய்தித்தாள் என்பன விரிவடைந்ததன் காரணமாக ஒரு நாட்டின் அரசியல் நிகழ்வுகள் பற்றி மற்றைய நாடுகளில் தெரிவிக்கப்பட்டதனால், அது தேசியவாதிகள் மீதும் புரட்சியாளர்கள் மீதும் ஓர் துரிதமான தாக்கத்தை ஏற்படுத்திற்று. 1908இல் இளம் துருக்கியரின் புரட்சி, 1922இல் முஸ்தாபா கெமாலினால். துருக்கிய அரசு பிரகடனப்படுத்தப்பட்டமை ஆகியன இவற்றுள் சிலவாகும். இவை எல்லாவற்றிற்கும் மேலாக 1917இன் ரஷ்யப் புரட்சியையே மேலோங்கிய செல்வாக்கைச் செலுத்திய நிகழ்வாகக் கருதலாம்.

குறிப்பிட்ட நாடுகளில்-ஏகாதிபத்தியவாதம், அந்நிய மேலாதிக்கத்திற்கு எதிரான பலவகையான இயக்கங்கள் என்பவற்றை ஒரு பக்கமாகவும், சுரண்டல் போக்குக் கொண்ட உள்நாட்டு ஆட்சியாளர்கள், மரபார்ந்த ஆணாதிக்க மேலாட்சி முறை, சமயக் கட்டமைப்புகள் ஆகியவற்றை மறுபக்கமாகவும் நாம் காணலாம். இதன் பின்னணியில் எழுந்த பெண்ணியப் போராட்டங்களில் நாம் கவனம் செலுத்துதல் அவசியம். அந்தந்த நாட்டுக்குரிய அய்வுகளை நோக்குகையில் தேசிய எதிர்ப்பு இயக்கங்களை முழுமைப் படுத்துவதற்கு பெண்கள் விமோசனம் இன்றியமையாதது என்பதைக் கண்டு கொள்ளலாம். பெண்களின் பங்கேற்பு. பெண்களின் அந்தஸ்து போன்ற வாதவிடயங்கள் 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியின் போது தோன்றிய போதிலும் ஏகாதிபத்தியவாதம். முதலாளித்துவம் என்பன பரவிய வரலாற்றுக் காலகட்டத்தின் போது இந்த விடயம் புதிய பரிமாணங்களைக் கொண்டிருந்தது எனவே, பெண்கள் பழைய வினாக்களுக்குப் புதிய இயங்கியலின் தோற்றநிலைக்கு ஏற்ப பதில் தேட வேண்டியிருந்தது. சுருங்கக் கூறின் அது ஒரு ஜனநாயக உரிமை பற்றிய விடயமாய் மாறியது.

சமூகத்தில் பெண்களின் பங்கு மூன்று வகையாக எதிர்ப்பாக்கப்பட்டது. அதாவது - அந்நிய. உள்நாட்டு முதலாளித்துவவாதிகள், நிலஉரிமையாளர்கள் ஆகியோருக்கு மிக மலிவாகவும் எளிதாகவும் பெற்றுக் கொள்ளக் கூடிய தொழில் அணியினராகவும், காலணித்துவ பொருளாதாரத்தை நிர்வகிக்கும் உள்நாட்டு அதிகாரிகள், உள்நாட்டுத் தொழில் வல்லுனர்களுக்கு நல்ல மனைவியராய் அல்லது தாய்மார்களாகவும், உள்நாட்டு பூர்ஷ_வாக்களுக்குத் தமது நாடு, தமது நவீனத்துவம் ஆகியவற்றைப் பிரதிபலிக்கும் வகையிலும் (மேலைத்தேயமயமாக்கப்பட்ட கல்வியறிவு பெற்றோராக) அவர்கள் விளங்க வேண்டி இருந்தது.

ஆசியாவில் முதலாளித்துவம் வளர்ச்சியுற்றதும், பெண் தொழிலாளர் அணியின் முக்கியத்தவம் மேலோங்கியது. எனவே அந்நாடுகளில் பெண்களின் நடமாட்டங்களைக் கட்டுப்படுத்தும் மரபுசார்ந்த வழக்கங்கள் அதன் வளர்ச்சிக்கு கெடுதல் விளைவிப்பதாகவே கருதப்பட்டது. எனவே கைத்தொழில் அதிபர்கள், தோட்டத்துரைமார்கள். விவசாயிகள் ஆகியோருக்கு, பெண்களின் மேலதிக தொழிற்சேவையை வழங்கும் பொருட்டு. பெண்களின் விமோசனம் சார்பான எதிர்பார்ப்புக்கள் மேலும் அதிகரித்தன.

முடிக்குரிய பேரரசின் நிர்வாகத் தேவைகள், அந்நிய முதலீட்டுக்கு ஏற்ப புதுஉருவம் கொண்ட பொருளாதார அமைப்பின் தேவைகள்,முதலாளித்துவத்தின் விஸ்தரிப்பு என்பவற்றை நிறைவேற்றுவதற்கென உள்நாட்டு நிர்வாகிகள், தொழில் சார் நிபுணர்கள் அடங்கிய ஒரு பூர்ஷ_வா வர்க்கம் வெளிப்பட்டது. இவர்கள் பெண்ணியம் பற்றிய வாதவிடயங்களை ஐரோப்பிய அளவுகோல் கொண்டு நோக்கினர். எகிப்து, ஈரான். துருக்கி என்ற நாடுகளில் பெண்களுக்கு எதிராக இடம்பெறும் கொடூரமான துஷ்பிரயோகங்களான முகத்திரை அணிதல், பலதாரமணம், வைப்பாட்டிமுறை, பெண்கள் ஒதுக்கப்பட்டுத் தனிமைப்படுத்தப்படல் என்பவற்றிலிருந்து பெண்கள் விடுவிக்கப்பட வேண்டியது பற்றி அவர்கள் எடுத்துக் காட்டினர். இப்பேர்ப்பட்ட சமூகத் தீங்குகள். தம் பூர்ஷ_வா வாழ்க்கை முறையின் திடநிலைக்கு அச்சுறுத்தலாகலாம் என்பதை உணர்ந்து அவர்கள் சமூகக் கட்டமைப்புகளை பலப்டுத்துவதற்கான சீர்திருத்தங்கள் பற்றி பிரசாரம் மேற்கொண்டனரே தவிர, அவற்றை மாற்றியமைக்க முனையவில்லை. எனவே அநேக சீர்திருத்த இயக்கங்களில் ஓர் பழைமை பேணும் பக்கச் சார்பு உள்ளார்ந்து இருப்பதைக் காணலாம்.

முதலாளித்துவ விஸ்தரிப்புக் காரணமாக உருவாகிய சக்திகளின் சமநிலைத்தன்மையைப் பொறுத்து, இந்த நாடுகளில் எதிர்ப்பு இயக்கங்கள், அதிலடங்கிய பெண்ணியப் போராட்டங்கள் என்பவற்றின் இயல்புகள் வேறுபட்டிருந்தன. அநேக நாடுகளில் உள்நாட்டு பூர்ஷ_வாக்களே அவ்வியக்கங்களில் பிரதான பங்கை வகித்தனர். இதிலும் இரண்டு வகையினர் காணப்பட்டனர். ஒரு வகையினர் எதிர்ப்புப் போராட்டங்கள் சார்பாக மக்களை அணிதிரட்ட வேண்டியிருந்தவர்கள், மற்றைய வகையினர், படிப்படியான சீர்திருத்தங்கள் மேற்கொண்டு ஆட்சியாளர்களின் இடத்தை ஏற்றுக் கொள்ள வேண்டியிருந்தவர்கள். இந்த குறிப்பிட்ட தலைப்புகளில் சீர்திருத்தங்களை மேற்கொள்ளுவதற்கும் அப்பால் செயற்படவில்லை. இவர்கள் தேர்ந்தெடுத்த தலைப்புகள், பெருமளவிலான பெண்களின் அன்றாட வாழ்க்கை முறையில் சிறிதளவேனும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாக அமைந்திருக்கவில்லை.

சில நாடுகளில் உள்நாட்டு பூர்ஷ_வாக்கள் பேரரசு ஆட்சிக்காலத்து அதிகாரிகளின் இடங்களை ஏற்றுக் கொள்வதில் மட்டும் நின்று விடாது சோஷலிச சமூகத்தை ஸ்தாபிப்பதற்கான அடிப்படை நிலைமாற்றத்தை மேற்கொள்றுவதையும் நோக்கமாகக் கொண்டிருநதனர். இந்த இயக்கங்களின் பெண்ணியம் சார்ந்த பகுதி, ஓர் புரட்சிகர சக்தியாகி, அதன் உடன் நிகழ்வான சமுதாய நிலை மாற்றம், பெண்கள் அந்தஸ்தை மேம்படுத்துதல் போன்றவற்றிற்கும் துணைபுரிந்தது. பெண்ணியமென்பது வெறும் பொழுது போக்கோ அல்லது பூர்ஷ_வாக்களின் மனமாற்றாட்டமோ அல்ல என்பதையும், மாறாக போராட்டத்தின் சகல கட்டங்களும் தொடர்ச்சியான உறுதியான செயல்முறையாக அமைந்திருந்தன என்பதற்கு இப்பேர்ப்பட்ட நிகழ்வுகள் சான்று பகர்கின்றன.

பெண்களின் இயக்கங்கள் ஒரு வெற்றிடத்தில் செயற்படாது பரந்த சமூக இயக்கங்களின் ஒரு பகுதியாகவும், அதனுடன் ஒத்திசைந்து அதன் இயங்கியலுக்கு உட்பட்டதாகவும் அமைகின்றன. சமூகத்தின் பொதுவான பிரக்ஞைநிலை, அதன் எதிர்காலம் பற்றிய எதிர்பார்ப்பு, அதன் கட்டமைப்பு, அதில் ஆண், பெண்களின் பங்களிப்பு என்பன அவ்வியக்கங்களைக் கட்டுப்பாடு செய்கின்றன. எனினும் தன் நோக்குகளை அடையும் பொருட்டு அக்கட்டுப்பாடுகளை உடைத்தெறிந்து செயற்பட்ட துணிச்சல்மிகு பெண்கள் பற்றி இவ்வாய்வில் பெயரிட்டுக் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்கள் பற்றிய பொது அறிவு குறைவாக இருந்த காரணத்தால் அவர்கள் தோற்றுப் போனவர்களானார்கள்.

அனைத்து சமயக் கருத்தியல்களிலும் இஸ்லாமிய மதமே ஐரோப்பாவுடன் நீண்ட காலத் தொடர்பைக் கொண்டிருந்தது. இஸ்லாம், அதன் ஆரம்பகாலம் தொட்டு கிறிஸ்தவத்துடன் தொடர்ச்சியாக மோதிய போதிலும், ஐரோப்பாவில் நிலவிய மதச்சார்பின்மைக் கொள்கையே அதற்கு உண்மையான சவாலாக விளங்கியது. ஐரோப்பாவில் பெண்கள், சமயக் கட்டுப்பாடுகளிலிருந்து விடுவிக்கப்பட்டவர்களாகவும் சமூகத்தில் மதிக்கப்பட்டவர்களாகவும் நடாத்தப்படும் விதம், அங்கு நிலவும் ஒருதார மணம், மற்றும் அங்கு குடும்பம் தான் சமூகத்தின் அடிப்படை அலகு என்ற உண்மைநிலை ஆகியவை, ஐரோப்பாவில் பயணம் மேற்கொண்ட இஸ்லாமியர்களிடையே, மதச்சார்பற்ற சமூகம் பற்றிய புது எண்ணக் கருத்தையும் ஆர்வத்தையும் ஊட்டியது.

இக் காலகட்டத்தின் போது தம் நாட்டில் இஸ்லாமிய உயர் குழாத்தினர் கூடத் தம் பெண்களைத் தனிமைப்படுத்தி வைத்திருக்கும் வேளையில், ஐரோப்பாவில் சமூகக் கூட்டுறவு முயற்சிகளில் ஆண்களும் பெண்களும் இலகுவாக ஈடுபடுவதற்கு இடமளிக்கும் ஐரோப்பியரின் திறந்த மனப்பான்மையானது அப் பயணிகளை மிகவும் கவர்ந்தது. அதைத் தொடர்ந்து மேற்கத்தேய சமூகத்தில் வெளிப்படையாகக் காணப்படும் பெண்கள் சார்பான உரிமைகள் தான் அந்நாடுகளின் முன்னேற்றத்திற்கான திறவுகோலெனும் கருத்தும், "கீழைத்தேயத் தன்மைக்கு" பெண்களின் தாழ்த்தப்பட்ட அந்தஸ்தே ஓரளவு காரணம் என்ற விடயமும் ஆவலுடன் அவர்களால் வாதத்திற்கு உட்படுத்தப்பட்டன.

பெண்களின் அந்தஸ்து என்பதை ஓர் அளவுகோலாகக் கொண்டு நாகரிகத்தை மதிப்பீடு செய்யும் முறை பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தமையால் அநேக சீர்திருத்தவாதிகள் அப்பெண்களின் நிலைமையை மேம்படுத்தக்கூடிய சட்டவாக்கவியல் மீது கவனம் செலுத்தினர். துருக்கியானது வருங்காலத்தில் தேசியவாதம், தேசப்பற்று, உழைப்பு, உறுதியான குடும்ப அமைப்பு என்பவற்றுடன் ஜனநாயகம், பெண்ணியம் என்பதையும் அடித்தளமாகக் கொண்ட ஓர் ஒழுக்கவியல் கோவையை நிர்ணயித்தல் வேண்டும் என்பது அந்நாட்டின் சமகாலத்து ஆண்சீர்திருத்தவாதிகளின் அபிப்பிராயமாகும். நவீனத்துவம், அபிவிருத்தி, நாகரிகம் என்பவற்றிற்கான அடையாளமாகப் பெண்களுக்கு மதச்சார்பற்ற கல்வி, நடமாடும் சுதந்திரம், ஒருதார மணம் அவசியமென்பதை அவர்கள் அரசியல் மேடைகளில் எடுத்துரைத்தனர். அவர்களது மனைவியர், புதல்வியர்களை அக்கருத்துக்களைப் பின்பற்றச் செய்வதன் மூலம் அக்கருத்துக்களுக்கு புறவடிவத்தைக் கொடுக்க அவர்கள் கடும் முயற்சி மேற்கொண்டனர்.

ஓர் "தெளிந்த அறிவூட்டப்பட்ட பெண்" அவசியம் என்பதை இந்தப் புதிய பிரக்ஞைநிலை உணர்த்தியது. இந்தப் புதுமைப்பெண் மேற்கத்தேய கல்விமுறையில் கற்பிக்கப்பட்டவளாய், புதுவகையான பூர்ஷ_வா ஆணுக்கு இசைவுபடக் கூடிய வகையில் புதியபாணிகளில் உடையணிந்தவளாய் இருப்பினுங்கூட, இல்லத்தில் பிரதான பங்கைப் பொறுப்பேற்று நடத்தக் கூடியவளாயும், தான் பழைய சமூகத்தின் பிற்போக்குச் சிந்தனைகளுக்கு முரணானவள் என்பதையும் நிரூபித்துக்காட்ட வேண்டியிருந்தது. புதுமைப் பெண் என்ற சொற்பதம் வௌவேறு பிராந்தியங்களில் ஒரேமாதிரியாக பயன்படுத்தப்பட்ட போதிலும் அதன் எண்ணக்கரு பிராந்தியத்திற்குப் பிராந்தியம் வேறுபட்டிருந்தது. இஸ்லாமிய நாடுகளில் அது, பெண்ணின் பிற்போக்கான தன்மையையும் தனிமைப்படுத்தும் இயல்பையும் அடையாளப்படுத்தும் முகத்திரை அணிதலை, அகற்றும் நடவடிக்கைகளை சிறப்புக்குரிய நிகழ்வாகக் குறித்தது.

மற்றைய ஆசிய கலாசாரங்களில் பெண்களின் நடத்தை, நடையுடை பாவனை என்பன பற்றி மரபுபேணுவோர் கொண்டிருந்த கருத்திற்குச் சவால் விடுக்கும் விதத்தில் பெண்கள் ஆண்மையைப் பிரதிபலிக்கும் உடை அணிந்து அழகின் சின்னமான தலைமுடியை நவீனபாணியில் குட்டையாக வெட்டிக் கொண்டனர். எனினும் பழைய மரபுகளை உதறித் தள்ளிய பெண்கள், ஈரானில் இடம்பெற்ற எதிர்ப்புரட்சியின் போது, உடல்சார் வன்முறைகளுக்கு ஆளாக்கப்பட்டமை குறிப்பிடக் கூடியதொன்றாகும்.

ஆனால், இதுதான் முழுமையான தோற்றப்பாடு என்பதல்ல. ஓர் தனித்துவ தேசிய அடையாளத்தைத் தேடிக் காணும் பொருட்டு பூர்ஷ_வாக்கள் புதிதான முயற்சிகளில் ஈடுபட்டிருந்த போதிலும் தேசியப் பண்பாடு என்ற விடயத்தைப் பொறுத்தமட்டில் அவர்களின் பார்வை பின்நோக்கியே இருந்தது. பழமை வாய்ந்த பண்பாட்டிற்கு முற்றுமுழுதாக முரண்படும் வகையில் புதுமைப் பெண் என்பவள் இருக்க முடியாதென்றும். பெண்களுக்கெதிரான வெளிப்படையான அநீதிகள், வழக்கங்கள் என்பன இல்லாதொழிக்கப்பட வேண்டிய அதேவேளை, அவர்கள் தேசியப்பண்பாடு, தொன்றுதொட்ட சமயம். குடும்ப மரபுகள் என்பவற்றைப் பேணும் காப்பாளர்களாகவும் இருத்தல் வேண்டுமென எதிர்பார்க்கப்பட்டது. வேறுவகையில் கூறப்போனால் அவர்கள் நவீனமானவர்களாகவும் மரபுமுறை பேணுபவர்களாகவும் முரண்பட்ட இருவகைப் பங்கை வகிக்கக் கூடியவர்களாக இருத்தல் வேண்டுமென்ற எதிர்பார்ப்பு இருந்தது.

நிலையான ஒருதார மணம் கொண்ட குடும்ப அமைப்பு முறையை மையக்கருவாக உருவாக்கி, அதில் முதலாளித்துவ வளர்ச்சி, பூர்ஷ_வா கருத்துப்போக்கு என்பவற்றிற்கு ஒத்திசைவான கல்வியறிவு ஊட்டப்பட்ட தொழிலாற்றலுடைய பெண்களை உள்ளடக்கிக் கொள்வதை முதல் நோக்கமாக சீர்திருத்தவாதிகள் கொண்டிருந்தனர். இரண்டாவதாக, அப் பெண்கள் குடும்பத்துக்குரிய மரபு வழக்கங்களுக்கு கீழ்படியும் நிலையைப் பேணிக் கொள்வதையும் அவர்கள் ஆர்வமாக உறுதிப்படுத்தினர். ஐரோப்பாவில் முதலாளித்துவத்திற்கு முற்பட்ட காலத்தில் உற்பத்தித்துறையின் மையமாக விளங்கிய இல்லம், குடும்பம் என்பவை கைத்தொழில்புரட்சியின் போது பெருவளர்ச்சி கண்ட தொழிற்சாலை அமைப்பு முறைகளால் சீர்குலைக்கப்பட்டதன் எதிரொலியை இங்கு நாம் காண்கிறோம். முதலாளித்துவம் வறிய பெண்களை ஊதியம் ஊழைப்பவர்களாக இல்லங்களிலிருந்து தொழிற்சாலைகளுக்கு இடம்பெயர்த்தெடுத்த அதேவேளை, பூர்ஷ_வாப் பெண்கள் இல்லங்களில் தத்தமது குடும்பங்களைப் பராமரிக்கும் செயல்களில் ஈடுபட்டிருந்தமை பற்றி பூர்ஷ_வா ஊடகங்களினால் போற்றப்பட்டனர்.

இதன்பின்னர், கல்வி ஓர் முக்கிய பிரச்சினையாகியது. பொதுவாகப் பெண்களுக்கு முறைசார்ந்த கல்விக்கான வாய்ப்புகள் மறுக்கப்பட்டிருந்த போதிலும் அதற்கு விதிவிலக்காக மேட்டுக்குடிச் செல்வந்தர்கள், பெருஞ்செல்வந்த வணிகர்கள் என்ற வர்க்கங்களைச் சேர்ந்த அநேக பெண்கள் அறிவுசார் வட்டாரங்களில் தம்மை உறுதியாக நிலை நாட்டினர். உள்நாட்டு பூர்ஷ_வாக்களின் வளர்ச்சி, தேசியவாதத்தின் எழுச்சி என்பவை காரணமாக பெண் விமோசனம், பெண்களுக்கான கல்வி என்ற வாதவிடயங்கள் திறனறிவாளர்களுக்கும் தேசியத் தலைவர்களுட்பட பூர்ஷ_வாக்களின் பெண்களுக்கும் முதன்மையாகியது. ஆண்சீர்திருத்தவாதிகளின் நோக்கங்கள் பலவகைப்பட்டவையாய் இருந்த போதிலும் பெண்கல்வியைப் பொறுத்த அளவில் அவர்கள் ஒருமித்த கருத்தைக் கொண்டிருந்தனர். கல்விக்கான வாய்ப்பு மறுக்கப்பட்டதன் காரணமாக பெண்கள் தொழில், வருமானம், சமூக அங்கீகாரம் அற்றவர்களாக இருப்பதுடன் அவர்கள் அறிவுத்துறையில் ஆண்களுக்குக் கீழ்படுத்தப்பட்ட நிலையையும் கொண்டிருந்தனர் என அவர்கள் கருதினர்.

"பெண்" என்ற புது எண்ணக்கருத்தில் தெளிவின்மை உள்ளார்ந்து கிடந்ததன் காரணமாக பெண்களுக்கான கல்வியின் பொருளடக்கம், அதன் பண்பு என்பனவும் தெளிவற்றிருந்தது. மதமாற்றம் பெற்ற ஆண்கள் தாம் முன்னர் பின்பற்றிய சமய நம்பிக்கையை நோக்கி பின்நடை போடுவதைத் தடுக்குமுகமாக சமய அக்கறை கொண்ட மனைவிமார்களையும் தாய்மார்களையும் உருவாக்குவதையே மறைபரப்புவோர் பெண்கல்வியின் முதன்மை நோக்கமாகக் கொண்டிருந்தனர். தேசியவாதிகளும் சீர்திருத்த வாதிகளும் - சகலருக்கும் பால்சார்பற்ற கல்வி வாய்ப்புகள், அதை எட்டுவதற்கான ஜனநாயக உரிமைகள் என்பன பற்றி ஊன்றியுரைத்தனர்.

சம அடிப்படையிலான உயர்கல்வி சார்பாக ஐரோப்பியப் பெண்கள் கோரிக்கை விடுத்தது போன்றே, ஆசியாவைச் சேர்ந்த பூர்ஷ_வாப் பெண்களும் வருமானத்துடன் இணைந்த புதிய வாய்ப்புகள், கூடிய சுதந்திரம் என்பவற்றிற்கு தமக்கு வழிதிறந்து விடும்படி கோரினர். ஐரோப்பாவின் அறிவொளியூட்டுவர்களால் முதன்மை வாய்ந்ததாகக் கருதப்படும் ஜனநாயக உரிமைகளானது, சகலருக்கும் உரியதென ஆசியநாடுகளில் வெளிவேஷமாகக் காட்டப்பட்ட போதிலும், அது தொழிலாளர்கள், காலனிய மக்கள், பெண்கள் ஆகியோரை விலக்கி பூர்ஷ_வா ஆண்களுக்கென்றே திட்டமிடப்பட்டிருந்தது. (ஆநைள யனெ துயலயறயசனநயெ 1981:5). அதேமாதிரியாக, சொந்த நாட்டில் பிறந்து வளர்ந்த பூர்ஷ_வாக்கள், தம் சொந்த வர்க்கத்தைச் சேர்ந்த பெண்களுக்கு சில சலுகைகளை வழங்க இணங்கிய போதிலும், தம்சொந்த நாட்டின் மற்றைய பெண்கள், பெருந்திரளான தொழிலாளர் அணியினர், ஆகியோருக்குரிய இயற்கையான உரிமைகள், சுதந்திரம், சமத்துவம், சுயநிர்ணயம் என்பவை அடங்கிய எண்ணகருவை பயன்படுத்திக் கொள்ளும் நோக்கம் அவர்களுக்கு இருக்கவில்லை.

எல்லோருக்கும் எல்லாச் சூழ்நிலைக்கும் பொருந்தும் எனக் கூறப்படும் சுலோகங்களை புதுமுயற்சியாக விடுப்பதைத் தவிர்த்து, அடக்கப்பட்ட குழுவினர்கள் தாமாகவே தம் சார்பான வாதவிடயங்களின் மேல் கவனத்தை ஈடுபடுத்தி, மக்களை அணிதிரட்டுவதென்பது நடைமுறையில் சாத்தியமான தொன்றாகும். உதாரணமாக, தாம் கல்விகற்ற நிலையை அடைந்திருந்த போதிலும் தம்மைக் கீழ்மைப்படுத்தி வைத்திருக்கும் சமூக வழக்கங்கள், கட்டுப்பாட்டு விதிகள் கொண்ட சட்ட, பொருளாதார, அரசியல் செயல் முறைகள் என்பவற்றிலிருந்து தம்மை விடுவித்துக் கொள்வதில் பெண்கள் ஆர்வம் காட்டி வந்தனர். சில தீவிர போக்குக் கொண்ட பெண்கள் அரசியல், சமூக நிலை மாற்றத்திற்கான யோசனைகள் சார்பாகவும் வாதாடினர்,

கல்வி, எழுத்தறிவு என்பவை பரவிய காலத்தைத் தொடர்ந்து பெண்ணியம் சார்பான நூல்கள், சஞ்சிகைகள், இதழ்கள் என்பன பெண்கள் இயக்கத்தில் ஓர் முக்கிய பங்கை வகித்தன. இவற்றுள் அநேக பிரசுரங்களில் "பெண்கள் பற்றிய" வழமையான தலைப்புகள் கலந்துரையாடப்பட்ட போதிலும், பெண்களைக் கீழ்மைப்படுத்தல் என்ற விடயத்தை வாதத்திற்கு எடுத்துக் கொள்ள இப்பிரசுரங்கள் தவறியதில்லை. மற்றைய நாடுகளில் இடம்பெறும் பெண்விமோசனம், வாக்குரிமை பற்றிய நிகழ்வுகளும் இவ்விதழ்கள் மூலம் தெரிவிக்கப்பட்டன. 1914 இல் எகிப்தில், பெண்கள் சார்பான 15 இதழ்கள் அரபுமொழியில் பிரசுரிக்கப்பட்டன.

பெண்களுக்கான சஞ்சிகைகளும் எழுத்தாக்கங்களும் பெண்கள் என்ற பிரக்ஞைநிலையை விழிப்படையச் செய்தது. ஆண் நாவலாசிரியர்கள், அறிஞர்கள், செய்தியாளர்களும் கூட பெண்கள் தொடர்பான வாதவிடயங்கள் பற்றி எழுதினர். அநேக நாடுகளில் மரபுமுறைக்கு அடிமைப்பட்ட சமூகங்களில் பெண்களின் பங்குபற்றி முதன்முறையாக அக்கறை வெளிப்படுத்திய ஆண்களின் எழுத்தாக்கங்கள் பிரபல்யமடைந்தது மட்டுமன்றி சில வேளைகளில் வசைப் பெயரையும் வாங்கிக் கொண்டது. தாராள கருத்துப் போக்கைக் கொண்ட காசீம் அமீனுடைய நூல்கள் பெண்ணியத்தின் வித்து என அராபிய உலகில் கருதப்பட்டதன் காரணமாக அது பழமைபேணுவோர், சமய அடிப்படைவாதிகள் என்போரின் விரோதத்தை இன்னமும் சம்பாதித்து வருகின்றது. எனினும் 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் மூன்றாம் உலக நாடுகளில் பெண் எழுத்தாளர்கள், கவிஞர்கள் எனப் புதிய தலைமுறை ஒன்று தோன்றியதை விஷேடமாகக் குறிப்பிடலாம். அவர்கள் 19ஆம் நூற்றாண்டின் கல்விச் சீர்திருத்தங்களின் விளைவாக உருவாகியவர்களாதலால் அக்காலத்துக்குரிய பெண்ணியத்தின் நிலையை பிரதிபலிப்பதாக அவர்களின் எழுத்தாக்கங்கள் இருந்தன.

பெண்களின் கல்வி என்ற விடயம் வாக்குரிமை சார்பான போராட்டத்திற்கு ஓர் தூண்டுசக்தியாக உதவியது. இது ஜனநாயக உரிமைக்கான இயக்கத்திற்கு ஓர் முக்கிய வாதவிடயமாயிற்று. மூன்றாம் உலகைச் சேர்ந்த அநேக நாடுகளில், விசேஷமாக தேசியப் போராட்டங்களின் உச்சக்கட்டத்தின் போது சுயநிர்ணய உரிமை, சமத்துவம் என்ற வாத விடயங்கள் வாதத்திற்கு உட்படுத்தப்பட்ட வேளைகளில் பெண்களுக்கு வாக்குரிமை என்ற கேள்வியும் எழுப்பப்பட்டது. இதன் சார்பாக அமைதியான போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் சில சந்தர்ப்பங்களில் இது வன்முறை சார்ந்ததாகவும் அமைந்தது. பெண்கள், ஆர்ப்பாட்டங்களை ஒழுங்கு பண்ணித் தேசியப்பேரவையை முற்றுகையிட்டமையும் எகிப்தில் 1924இல் இடம்பெற்றிருந்தது.

ஐரோப்பிய பெண்ணியவாதிகள் தமது நாட்டுக்குள்ளேயும் வெளியேயும் பரவலாகப் பயணங்களை மேற்கொண்டனர் (ஆநைள யனெ துயலயறயசனநயெ 1981: 17 யனெ 61). அது போலவே மூன்றாம் உலகைச் சேர்ந்த முன்னோடிப் பெண்ணியவாதிகளும் பயணம் மேற்கொள்ளுவதற்கு தம்மீது விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை மீறி, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பரவலாகப் பயணங்கள் மேற்கொண்டு, பெண்கள் சங்கங்கள், அரசியற் குழுவினர் என்போருடன் தொடர்பு கொள்ளுவதன் பொருட்டு போதியளவு வளங்களையும் வாய்ப்புகளையும் திரட்டிக் கொள்ளக் கூடியதாயிற்று. 1920 ஜூலையில் மொஸ்கோவில் நடந்த சர்வதேச கம்யூனிட் கூட்டமைப்பு (ஊழஅiவெநசn) அமர்வின் போது, பெண்களிடையே எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றிய பிரேரணை ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்த இயக்கத்தில் லெனினின் மனைவி க்ருப்ஸ்காயா உட்பட, பல முக்கிய கம்யூனிஸ்ட் பெண்களும் சில ஆசியப் பெண்களும் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

தேசியவாதப் போராட்டங்களில் முக்கிய பங்கு வகித்த அரசியல் குழுவினருடன் இணைந்து சுயாதீனப் பெண்கள் அமைப்புகள், சங்கங்கள் உருவாகியமை, அந்தக் காலகட்டங்களின் போது ஆசியப் பெண்ணியவாதத்தின் மிக முக்கிய வெளிப்படுத்தல் எனலாம். துருக்கியில் பெண்களுகக்கான முதற் கழகம் சிவப்பும் வெள்ளையும் (1928) என்ற பெயரில் இளம்துருக்கியர் இயக்கத்தின் அரசியல் செயற்பாடுகளுடன் இணைந்திருந்தது. 1911இல் அரசியல் கிளர்ச்சி உச்சக்கட்டத்தை அடைந்த வேளையில் பாரசீகப் பெண்கள் சங்கம் உருவாகியது.

எல்லா நாடுகளிலும் இடம் பெற்ற வாத புரட்சிகர கிளர்ச்சிகளின் ஆரம்பத்தின் போது, சகல வர்க்கத்தினையும் சேர்ந்த பெண்கள், தேசியமட்டத்தில் அக்கறைக்குரிய வாதவிடயங்கள் சார்பாக போராட்டம் செய்யும் பொருட்டு வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டங்கள் செய்தனர். அக்காலகட்டத்தின் போது, மூன்றாம் உலக நாடுகளில் பல முன்னோடிப் பெண்கள் உருவாகினர். ஹ_தா ஷராவி (எகிப்து), ஹாலிட் எடிப் (துருக்கி), அத்திக்கா தௌலதாபாடி, ஹனு}ம் அஸ்மேதே (ஈரான்) ஆகியோர் அவர்களுள் சிலராவர். அவர்களின் துணிச்சலான ஈடுபாடுகள், தகுந்த விதத்தில் அங்கீகரிக்கப்படவில்லை. வரலாற்றின் அடிக்குறிப்புகளுக்குள் மட்டுமே அவர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அநேக சந்தர்ப்பங்களில் அவர்களின் சாதனை பற்றி சொந்த நாடுகளிலேயே அறிந்திராதவர்கள் இருந்தார்கள். ஆண் தலைவர்களுடன் சேர்த்து அவர்களின் பெயர்கள் நினைவுகூரப்படுவது அபூர்வமே.

ஆசியாவில் முதலாளித்துவம் வளர்ச்சி கண்டதன் விளைவாகத் தொழிலாளர் அணியில் பெண்கள் பங்கேற்பதற்கு அதிகரித்த வாய்ப்புகள் ஏற்பட்டன. பொருளாதாரத்தின் பெரும்பான்மைப் பகுதியில் அத்தகைய பங்கேற்பை ஏற்றுக் கொள்ளும் வகையில், பெண்கள் விமோசனம் சார்பான போராட்டங்களின் அங்கங்கள் இணைந்து இயங்கின. தொழிலாளர் அணியில் ஊதியம் பெறும் பெண்கள் இருந்ததன் காரணமாக, தொழிற் சங்கங்களிலும் மற்றைய தொழிலாளர் சங்கங்களிலும் அவர்கள் இணைந்து வேலை நிறுத்தங்கள், கைத்தொழிற்துறை சர்ச்சைகள் என்பவற்றில் ஈடுபடுவதற்கு வாய்ப்புகள் உண்டானது. ஈரான், எகிப்து, துருக்கி ஆகிய நாடுகளில் மக்களைப் போராட்டத்திற்குத் திரட்டுவதற்கு எதிராக அடக்குமுறைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், பெண்கள் ஆண்களுடன் இணைந்து இடதுசாரி அரசியற் குழுக்கள், தொழிற் சங்கங்கள் என்பனவற்றை நிறுவினர்.

இறுதியாக, விமோசனம் சார்பான பெண்ணிய இயக்கங்களில், பெண்களின் பங்கேற்பும் அதன் உடன் நிகழ்வான தேசிய விடுதலை, சமூக நிலைமாற்றங்களுக்கான போராட்டங்கள் என்பவற்றைத் தொலைநோக்காகக் கொண்டு ஆசிய வரலாற்றின் ஓர் காலகட்டத்தை ஒப்பிட்டுக் காண இவ்வாய்வு முயற்சிக்கின்றது. "பெண்கள் உரிமைகள்" சார்பாக ஆதரவு வழங்கிய ஆண்சீர்திருத்தவாதிகள், அரசியற் தலைவர்கள் என்போரின் பங்கேற்பு, நோக்குகள் என்பவற்றை மதிப்பீடு செய்தலும் இதில் அடங்கியுள்ளது. தவிர்க்க முடியாக் காரணங்களுக்காக வரலாற்று ஆதாரங்கள் கிடைக்கப்பெற்ற நாடுகள் மாத்திரமே இந்த ஆய்வுக்குள் எடுக்கப்பட்டுள்ளது. அதனால் ஆய்வின் எல்லை மட்டுப்படுத்தப்பட்டதாகத் தென்படலாம். ஆசியாவில், வறுமையால் பீடிக்கப்பட்ட பெருந்திரளான பெண்கள், பலவகையான எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டது பற்றி விரிவான வரலாற்று ஆய்வு ஒன்று இன்னும் முயற்சிக்கப்படவில்லை என்பதையும் நான் இங்கு வற்புறுத்திக் கூறவேண்டும். ஆசியாவின் பூர்ஷ_வாக்கள், குட்டி பூர்ஷ_வாக்கள் என்ற வர்க்கத்தைச் சார்ந்த பெண்கள் ஈடுபட்ட இயக்கங்கள் பற்றிய வரலாற்றாதாரங்கள் கிடைக்கக் கூடியதாய் இருப்பினுங்கூட, உழைக்கும் வர்க்கத்தினர், விவசாயக் குடிமக்கள் என்போர் வர்க்கப் போராட்டங்களிலும் ஏகாதிபத்தியவாத எதிர்ப்புப் போராட்டங்களிலும் ஈடுபட்டமை பற்றி நுண்ணிய ஆய்வு மேற்கொண்டு, விரிவான தகவல்களை வெளிப்படுத்துவது அவசியமாகும்.

ஆசியாவில் காலனித்துவமும் முதலாளித்துவமும் தாக்கத்தை ஏற்படுத்துவதற்கு முற்பட்ட காலத்தில் இருந்த சமூகங்களில் பெண்களின் பங்கு என்ற விடயத்தில் ஆய்வுகள் பற்றாக்குறையாக இருப்பதைக் காணலாம்.

பெண்கள் மீது கருத்தியல் கொள்கைகள் ஏற்படுத்திய தாக்கங்கள் பற்றி சில ஆய்வுகள் வாதிக்கின்றன. இந்த ஆய்வுகளிலிருந்து பொருள் பிரித்தெடுக்கப்பட்டு முடிவுகள் எட்ட வேண்டியிருக்கும். நடைமுறை வாழ்க்கையில் கருத்தியல் கொள்கைகள் எந்த மட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அது எந்த மட்டத்தில் செயல்விளைவை ஏற்படுத்தும் என்ற விடயங்கள் பற்றி நமக்கு அறிவு போதாதிருக்கின்றது.

ஆசியாவின் அநேக நாடுகளில் பெண்கள் இயக்கங்கள், ஆண்களுக்குச் சமமாக அரசியல் சமத்துவம், நீதித்துறை, சட்டமன்ற நடவடிக்கைகளில் சமத்துவம் என்பவற்றை எட்டிய போதிலும், அது ஆணாதிக்கம் வாய்ந்த குடும்ப சமூகக் கட்டமைப்புக்குள் பெண்களைக் கீழ்மைப்படுத்தல் என்ற விடயம் மீது கவனம் செலுத்தத் தவறியுள்ளது. ஒருசில குறிப்பிட்ட விதிவிலக்குகளைத் தவிர, பெண்ணியம் பற்றிய பிரக்ஞைநிலை, மரபுசார்ந்த ஆணாதிக்கக் கட்டமைப்புகளுக்கு சவால்விடும் அளவிற்கு வளர்ச்சி அடைந்திருக்கவில்லை. துருக்கி,. எகிப்து, ஈரான் ஆகிய நாடுகளில் இடம் பெற்ற சூழ்நிலைகளையும், அவற்றில் பெண்களின் பங்களிப்புகள் செயற்பாடுகள் பற்றியும், அதன் வெற்றி தோல்விகள் பற்றியும் இனிவரும் கட்டுரைகளில் விரிவாக ஆராயப்படும்.

(குமாரி ஜயவர்த்தனவின் மூன்றாம் உலகில்  பெண்ணியமும் தேசியமும் என்ற நூலின் இரண்டாம் பாகம் இது)
...மேலும்

மகளிர் தினமும் மலையகப் பெண்களின் மேம்பாடும்

மலையகப் பெருந்தோட்ட பெண்களின் பின்புலத்திலும் பல்வேறு உண்மைகள் மறைந்து புதைந்து கிடக்கின்றன. ஆனால் இதனை உணர்ந்து கொள்ளாத பல சக்திகள் கட்டியுள்ள கட்டுமானங்களை அவிழ்ப்போம். அடிமைத்தனத்திலிருந்து அவர்களை விடுவிப்போம் மற்றும் விடுதலை விடிகிறது என்றெல்லாம் ஆண்டுக்கொருமுறை ஆலாபனை வார்த்தை சொல்லுவதை மாத்திரம் தாரகமாகக் கொண்டுள்ளன. இன்றைய மகளிர் தின கொண்டாட்டமும் மேற்கூறியவற்றை மெய்ப்பிக்கும் என்பதில் ஐயமில்லை.

வேண்டுவதை வேண்டாமென்று தடுக்கும் போதுதான் வேட்கை அதிகரிக்கிறது. அதுதான் ஆசைகளை அறுப்பதற்கு பதிலாக தானாகவே அவ்வாசைகள் அறுந்து விடுகின்றன. நிஜங்களைக் கண்டு அவற்றின் மதிப்பீடுகளை உணர்ந்தால் தான் உண்மை உள்ளத்தை உலுக்கும்.
மலையகப் பெண்களின் மேம்பாடு பற்றிப் பேசும் போது அந்தப் பெண்கள் எழுப்புகின்ற கேள்விகள் நினைவுக்கு வருகின்றன.

எண்ணற்ற இளம் பெண்களின் இந்த இயல்பான ஏக்கத்தை நோக்கின் பரிதாபப் பிறவிகளாக பார்க்கப்பட வேண்டியவர்கள் எல்லாருமல்லர். ஆனால் கல்வியில் பின்தங்கி காலத்தின் கட்டாயத்ததால் சமூகப் பொருளாதார சுமைகளிலிருந்து விடுபடுவதற்கு உழைப்பையே தஞ்சமாகக் கொண்டிருக்கும் பெருந்தோட்டப் பெண்களைப் பற்றித்தான் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயம் நிலவுகிறது.

வளர்ந்து வருகின்ற இந்தச் சமுகம் இன்னுமொரு பெண்ணின் உரிமையை கொடுக்க மறுப்பதால்தான், உழைக்கும் பெண்களின் மாண்பு உதாசீனப்படுத்தப்படு கிறது. பெருந்தோட்ட பெண்களும், இந்த வேள்விப் பட்டியலில் கேள்விப் பொருளாக மாறியுள்ளனர். நிறைந்த உழைப்பு, குறைந்த வருமானம், செறிந்த அடிமைத்தனம், இதுவரை வாழ்க்கை என்ற ஏக்கப் பிரவாகம் இவர்களின் வெளிப்படாத வேதனையாக நிறைந்து நிற்கிறது. நாட்டிலுள்ள எல்லாப் பெண்களுக்கும் ஒரே மாதிரியான சமூக நீதியே காணப்படுகின்ற போது பெருந்தோட்டப் பெண்களும் அதற்குள் தானே அடங்குகின்றார்கள் என்ற சிலரின் நியாயப்படுத்தல்கள் தொடரக்கூடும். எனினும் பெருந்தோட்டப் பெண்கள் ஆணாதிக்கம், சம உரிமையின்மை, பாரபட்சம், பாதுகாப்பின்மை, சந்தேகம், வரதட்சிணை, பாலியல் வன்புணர்ச்சி, அடக்குமுறை அதிகாரம், உலகமயதாக்கம், சட்டவிரோத மது தயாரிப்பின் பாதிப்பு போன்ற காரணங்கள் முழுவாசியை முதன்மையாகிக் கொள்வதில் முக்கிய இடம் பெறுகின்றனர் என்பதை பெருந்தோட்ட பெண்களிடையே நடத்தப்பட்ட ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன.

பெண்ணியம் என்னும் கருத்தியல் பிரெஞ்ச் சமூகவியலாளர் சார்லஸ் போரியர் என்பவரால் உருவாக்கப்பட்டது. அவர், தன்னையும் உருவாக்கிக்கொண்டு ஒரு மாறுபட்ட சமுதாயத்தின் உருவாக்கத்திற்க்கும் பங்களிக்கும் பெண் உருவத்தை ‘புனித பெண்மை’ என அடையாளம் காட்டினார். அப்படியானால் தேசத்தின் மாறுபட்ட பொருளாதாரத்திற்கு தன்னை அர்ப்பணமாக்கும் பெருந்தோட்டப் பெண் தொழிலாளியும் இந்த புனிதத்துக்குள் புதைந்து கொள்கிறாள் எனலாம்.

17ம் நுற்றாண்டில் இங்கிலாந்து நாட்டில் ஆரம்பிக்கப்பட்ட பெண்கள் இயக்கத்தின் வியாபகமே இன்றுவரை பெண்ணியம் பற்றி பேசிக்கொண்டிருக்கின்றது. இந்த வரிசையில் மலையகப் பெருந்தோட்ட பெண்கள் பற்றி அமைப்பு ரீதியாக தொழிற்சங்கங்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள், பெண்கள் அமைப்புக்கள் என்பன தவறாமல் பேசிக்கொண்டிருக்கின்றன. அதிகமான அமைப்புக்கள் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வாழிவியலோடு ஒன்றிப்போய் கரிசனை காட்டத் தவறினாலும், அவர்கள் பற்றிய விடயங்களை ஊடகங்களில் வெளியிட்டு உலகுக்கு தெரிவிக்க மறந்ததில்லை. எது எப்படியாயினும்,
என்று நீங்குமோ எங்களின் கொடுமைகள்?

எப்போது மலருமோ விடுதலைப் பூக்கள் என்ற கேள்வியோடு வாழும் தோட்டப் பெண்கள் மாறுபட்ட சூழலில் வாழுகின்ற தன்மையினை கவனத்திற்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

இலங்கையைப் பொறுத்தளவில் சார்க் வலய நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் இலங்கைப் பெண்களின் வாழ்வியல் பின்னணி சற்று திருப்திகரமாகவே இருக்கின்றது. என்றாலும் பெருந்தோட்டப் பெண்கள் இன்னும் பிற்படுத்தப்பட்டவர்களாகவும் புறக்கணிக்கப்பட்டவர்களாகவுமே உள்ளனர். அநீதிகளுக்கு ஆளாகி வரும் இவர்கள் நாட்டின் அபிவிருத்திக்காக அளித்து வருகின்ற பங்களிப்பு கண்டுகொள்ளப்படாததாக இருந்து வருகின்றது.
இன்றைய சமூக பொருளாதார காரணிகளாலும் பெருந்தோட்டங்களில் இருந்து ஆண் தொழிலாளர்கள் படிப்படியாக வெளியேறி வருவதனாலும் ஆண் தொழிலாளர்கள் மேற்கொண்ட பல்வேறு கடமைகளை தாமே மேற்கொள்பவர்களாக மாத்திரமின்றி பெருந்தோட்டத்தில் எஞ்சியவர்களாகவும் பெண்களே விளங்குகின்றனர் எனலாம். இதனால் அவர்கள் குடும்பத்தில் பிரதான வருவாய் ஈட்டுபவர்களாகவும் ஓய்வுபெற்ற தமது குடும்ப அங்கத்தவர்களை பராமரிக்கக் கூடியவர்களாகவும் தனது குழந்தைகளை பராமரிக்க வேண்டியவர்களாகவும், எல்லாவற்றுக்கும் மேலாக நேரத்தோடு போராடுபவர்களாகவும், விறகு சேர்த்தல் முதல் வீட்டிற்கு பொருட்கள் கொள்வனவு செய்வது வரை கவனிக்க வேண்டிய கடமைகளை கொண்டவர்களாகவும் விளங்க வேண்டியுள்ளது. ஓய்வில்லாமல் உழைக்கும் பெருந்தோட்ட பெண்ணைச் சுற்றியிருக்கிற வலைப்பின்னல்கள் வறுமைப் பின்னல்களாகவும், வெறுமைப் பின்னல்களாகவும் விளங்குகின்றன.

அடிப்படைக் கல்வியில் அபிவிருத்தி பெறாத இவர்கள் ஒடுக்குமுறைக்கு உட்பட்டிருப்பதால் அரசியல், தொழிற்சங்கம், ஆலயம், சமூகப் பிரதிநிதித்துவம் என்பவற்றிலும் பின்தங்கியவர்களாகவே இருக்கின்றனர்.

மேலும் இவர்களுக்கு குறைவான போதிய சத்துணவின்மை, குடும்பத்தவர்களில் ஆண்களின் மதுப் பாவனை, பொருளாதார தாக்கம் போன்ற பல்வேறு காரணிகள் சுமைகளாகி வருகின்றன. பொதுவாக தொழில் பாதுகாப்பு, தமக்கான சீருடை, வேலைத்தளத்தில் எந்தவொரு அடிப்படை வசதிகள் இல்லாமையாலும், பெண்களை நிருவகிக்கும் பெண் நிருவாகிகள் இல்லாமலும் ஓரங்கட்டப்பட்டதொரு ஒடுக்குமுறைச் சின்னமாகவும் விளங்குகின்றனர். ஏனைய துறையினரோடும், சமூகங்களோடும் தொழில் ரீதியாகவும் ஒப்பிடும் போது எல்லா வகையிலும் பால்நிலை சமத்துவமற்ற நிலையில் பரிதாபத்துக்குரியவர்களாகவே விளங்குகின்றனர்.
ஆகவே பெருந்தோட்ட சமுதாயப் பெண்கள் மாண்புற்று வாழ்வதற்கு இவ்வருட மார்ச் 08ம் திகதி பெண்கள் தினமாவது ஒரு புரட்சிகரமான முன்னுருவாக்கத்தை உருவாக்குமேயானால் அதுவே அவர்களை ஒதுக்கலிலிருந்தும், ஓரங்கட்டலிலிருந்தும் மீட்டு சிந்தனை உசுப்பலுக்கு வித்திடும் என்பதில் ஐயமில்லை.

ஓ தோட்டப் பெண்ணே!
ஆடிவரும் தென்றலும்
பாடி வரும் பறவையும்
ஓடிவரும் அருவியும்
உலகத்தில்
சுதந்திரமாக சுவடு பதித்ததைப் பார்!
நீ! இயற்கையின் சிகரமல்லவா!
உன் அறியாமைச் சிறையை விட்டு
வெளியே வா!
கட்டுக்களை உடைத்தெறி - ஏன்
உடைத்து எரி!
அப்போது விடுதலை தேடும் உனக்கு
வானம் கூட
தொடு தூரத்தில் எரியும் என்பது போல்
மலையக பெருந்தோட்ட பெண்கள் அறியாமையை கட்டவிழ்த்து உணர்வுகளில், எண்ணங்களில் சொற்களில், செயல்களில், வாழ்க்கையில் நம்பிக்கையோடு விடுதலை தேடும் நாள் உதயமாக சர்வதேச மகளிர் தினம் அடிகோலட்டுமாக!

பசறையூர்
க. வேலாயுதம்

நன்றி - தினகரன் வாரமஞ்சரி
...மேலும்

தொழிலாளர் வர்க்க சக்திகளே பெண் விடுதலைக்கான இயக்கத்தை முன்னெடுக்க வேண்டும்.


சர்வதேச மகளிர் தினம் ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் 08ம் திகதி சர்வதேச ரீதியில் உணர்வு பூர்வமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு உழைக்கும் பெண்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு பெண் விடுதலைக்காக கோராடி அர்ப்பணித்த தலைவிகளுக்கும் விடுதலை போராளிகளுக்கும் புரட்சிகர அஞ்சலியை சமர்ப்பித்து அவர்களை 0நினைவு கூருவோமாக.

கம்யூனிஸ்ட் அறிக்கையும் பெண் விடுதலை இயக்கமும்

1848ம் ஆண்டு கம்யூனிஸ்ட் அறி;க்கையிலும் பின் சர்வதேச கம்யூனிஸ்ட் சோஷலிச இயக்கங்களிலும் பெண் விடுதலைக்கான கோஷங்கள் எழுப்பப்பட்டன. பல போராட்டங்களும் நடைபெற்றன. தொழிலாளர் தோழியர் கிளேரா ஷெட்கின் தலைமையில் உருவாகிய சோஷலிச பெண்கள் இயக்கம் பெண் விடுதலைக்காக அளப்பரிய சேவையாற்றியுள்ளது. சோஷலிச சக்திகளே பெண் விடுதலைக்கான போராட்டத்தை முன்னெடுத்து பல வெற்றிகளை பெற்றுள்ளன.

சமகால போராட்டங்கள்

சம காலத்திலும் பெண் விடுதலைக்கான போராட்டங்கள் தொடர்கின்றன. குறிப்பாக உழைக்கும் பெண்கள் உரிமைகளுக்கான போராட்டங்கள் தொடர்கின்றன. வர்க்கப் போராட்டத்திலிருந்து பெண் விடுதலை போராட்டத்தை பிரிக்க முடியாது.

அக்டோபர் புரட்சியும் பெண் விடுதலையும்

1817ம் ஆண்டு நவம்பர் மாதம் 07ம் திகதி மாமேதை லெனின் தலைமையில் சோவியத் ஒன்றியத்தில் அக்டோபர் புரட்சி வெற்றி பெற்றது. இந்த வெற்றியைத் தொடர்ந்து சோவியத் யூனியனிலும் சோஷலிச நாடுகளிலும் பெண்களுக்கு சம உரிமை வழங்கப்பட்டது. சகல துறைகளிலும் பெண்கள் சம உரிமை பெற்றனர். இதன் தாக்கம் மேலை நாடுகளில் எதிரொலித்தது. அங்கேயும் பெண் விடுதலை இயக்கங்கள் வளர்ந்தன. பெண்கள் பல்வேறு உரிமைகளை வென்றனர். பிரபுத்துவ பழைய கலாச்சாரம் தகர்ந்தது. ஆனாலும் மூன்றாம் உலக நாடுகளில் பெண் விடுதலை தீவிரமாக பரவவில்லை.

மார்க்ஸிசம், லெனினிசம் பெண் விடுதலைக்கு உந்து சக்தியாக விளங்கின.

மூன்றாம் உலக நாடுகளில் தொடரும் பிரபுத்துவ பழைய கலாச்சாரம் ஆதிக்கமும் பெண் விடுதலையை, சமத்துவத்தை தடுக்கிறது. ஆகவே பிரபுத்துவ மத, முதலாளித்துவ ஆதிக்க சிந்தனைகளுக்கு எதிராக போராடாமல் பெண் விடுதலைக்கான இயக்கம் வேகமாக வளர முடியாது.

பெண்களின் உடை

தேயிலைத் தோட்ட தமிழ் பெண்கள் முதலில் தமது தற்போதைய ஆடை அணியும் முறையை மாற்ற வேண்டும். சேலை, படங்கு, றப்பர் சீட் போன்றவற்றை இல்லாதொழிக்க வேண்டும். பிரபுத்துவ காலனித்துவ ஆடை அணியும் கலாச்சார நிலையிலிருந்து மாறி நவீன யுகத்திற்கு வர வேண்டும். டெனிம் காற்சட்டை(லோங்ஸ்) கோட்டு, தொப்பி, கையுறை காலுக்கு பூட்ஸ் அணியும் நிலைக்கு மாற வேண்டும். தலையில் கூடை சுமக்கும் முறையை மாற்ற வேண்டும். கூடை காலாச்சாரமும் தகர்க்கப்பட வேண்டும். இது பற்றி செங்கொடிச் சங்கம் பல ஆண்டுகளாக பிரச்சாரம் செய்த போதும் பலனில்லை.

மேல்தட்டு மத்தியதர வர்க்க கலாச்சாரம்

கல்வியறிவு இல்லாததனாலேயே பெருந்தோட்ட தமிழ்ப் பெண்கள் மூட நம்பிக்கையில் வாழ்கிறார்கள் என்பதில் உண்மையில்லை. உதாரணமாக கல்வித் துறையில் சேவை செய்யும் படித்த பெண்களும், பழைய கலாச்சாரத்தையே பின்பற்றுகின்றனர். தற்போது தொலைகாட்சி கலாச்சாரத்தை மத்திய வர்க்க தமிழ்ப் பெண்கள் பின்பற்றுகின்றனர். வருமானத்தின் பெரும் பகுதியை அழகு சாதனங்களுக்கு தலை அலங்காரத்திற்கு மத சடங்குகளுக்காக என செலவிடுகின்றனர். தொழில்களில் நிறப் பாகுபாடு பின்பற்றப்படுகிறது. கருமை நிறமான பெண்கள் புறக்கணிக்கப்படுகின்றனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் பிரகடனம்.

ஐக்கிய நாடுகள் சபை 1997ம் ஆண்டு சர்வதேச பெண்கள் தினமாக மார்ச் 08ம் திகதியை பிரகடனப்படுத்தியவுடன் முதலாளித்துவ அரசாங்கங்களும் மத்திய தர பெண்கள்அமைப்புக்களும் சர்வதேச பெண்கள் தினத்தை கொண்டாடுவதில் தமது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்து சர்வதேச பெண்கள் தினத்தின் வர்க்க குணாம்சத்தை மழுங்கடிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டன. வர்க்கப் போராட்டத்திலிருந்து பெண் விடுதலையை பிரிக்க முடியாது. உதாரணமாக சிறிமாவோ பண்டாரநாயக்காவும், சந்திரிகா குமாரதுங்காவும் பிரதமராக, ஜனாதிபதியாக பதவி வகித்த போதிலும் இலங்கையின் தொழிலாள விவசாய பெண்கள் விமோசனம் பெறவில்லை. தொழிலாளர் வர்க்க சக்திகளே பெண் விடுதலைக்கான இயக்கத்தை முன்னெடுக்க வேண்டும். மார்க்ஸிய சிந்தனையை வர்க்கப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

சர்வதேச பெண்கள் தினத்தின் அறைகூவல்.

சர்வதேச பெண்கள் தினத்தை கொண்டாடும் பெண்கள் அமைப்புக்கள், பெண்கள், பகுத்தறிவு, பரட்சிகர படலத்தி;ல் அணிதிரள வேண்டும் கார்ல் மார்க்ஸ், பெரியார் ஆகியோர் உட்பட புரட்சிகர சீர்திருத்த கருத்துக்களை படித்து விழிப்புணர்வு பெற வேண்டும்

ஓ.ஏ. இராமையா

செங்கொடி சங்கம்
...மேலும்

ஈழவிடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு! - -சாகரன்

சர்வ தேச மகளிர் தினம் இன்று. ஈழவிடுதலைப் போராட்டப் போக்கில் பெண்களின் பங்கு பற்றிய விடயங்களின் அடிப்படையில் இவ்தினத்தை சற்ற பார்ப்போம். இன்று நேற்று மட்டும் அல்ல ஆதிப் பொதுவுடைமைச் சமுதாயத்தில் இருந்து இன்றைய ஜனநாக, சோசலிஷ, முதலாளித்துவ சமுதாய அமைப்புகள் வரை நிர்வாகத்தில் சிறந்து விளங்குவது பெண்களே. ஆண் மேலாதிக்க சமுதாயம் இதனை ஏற்காமல் அவளை அடுப்பங்கரையிலும் ஆத்துக்குள்ளும் முடக்கி. அடக்கி ஒடுக்கி வைத்திருப்பதுவுமான நிலமைகளே பெண்கள் விடயத்தில் மேலோங்கி இருக்கின்றன. இதனை உடைத்தெறிய புறப்பட் பெண் போராளிகள் பலரைக் கொண்டதே ஈழவிடுதலைப் போராட்ட வரலாறு.

ஈழவிடுதலைப் போராட்டத்தின் 80 களில் பெண்விடுதலைக்கான முஸ்தீபுகள் மிகவும் ஆரோக்கியமாக ஆரம்பித்திருந்தன. குறிப்பாக ஈபிஆர்எல்எவ், புளொட், ஈரோஸ் போன்ற விடுதலை அமைப்புக்கள் பெண்கள் விடுதலை தேசியவிடுதலைப் போராட்டத்தின் ஒரு அங்கம் என்றும் தேச விடுதலையைத் தொடர்ந்த வர்க்க விடுதலை என்பது பெண்களின் விடுதலை இல்லாமல் இல்லை என்பதை கோட்பாடாக ஏற்றுக் கொண்டு பெண்களையும் தமது விடுதலை அமைப்புக்களில் இணைத்து செயற்பட்டு வந்தனர். பெண்விடுதலையை முன்னெடுக்கும் முகமாக பத்திரிகைகள், போராட்டங்கள், அரசியல் வகுப்புக்கள், பாசறைகள் என அவர்களின் செயற்பாடுகள் நீண்டு கொண்டே வந்தன.

புளொட்டில் சாந்தி, கலா என பெண் போராளிகளும் ஈபிஆர்எல்எவ் இல் அஞ்சலி ஞானா அக்கா, தாரணி, பானு, மேரி, அம்பிகா என்று பெண் போராளிகளின் பட்டியலும் நீண்டு விரிந்து போகின்றது. இப் பெண் போராளிகள் வெறும் துப்பாக்கிளை ஏந்த மட்டும் பாவிக்கப்படவில்லை. மாறாக பெண்களின் விடுதலைக்காக அவர்கள் ஈழவிடுதலைப் போராட்டத்தில் இணைந்து செயற்பட்டதாகவே வரலாறு பதிவு செய்துள்ளது. 80 களின் நடுப்பகுதியில் தொடர்ந்த புலிகளின் மாற்ற அமைப்புக்களைத் தடை செய்தல் என்ற நிகழ்வுகளினால் இவர்கள் தொடர்ந்தம் தமது பெண் விடுதலைக்கான செயற்பாட்டை முன்னெடுக்க முடியாமல் போனது இன்று வரை தொடர்கின்றது. புலிகளின் மாற்று கருத்தாளர்கள் மீதான துப்பாக்கித் தடைகள் அன்று ஏற்படாவிட்டால் இன்று ஈழத்து பெண்களின் விடுதலை இன்னும் முன்னேற்றகரமான ஒரு பாதையில் மேலும் உக்கிரமாக முன்னெடுத்துச் செல்லப்பட்டிருக்கும். தமது விடுதலைக்காகவும் ஈழவிடுதலைக்காகவும் வர்க்க விடுதலைக்காகவும் அவர்களால் நடாதப்பட்ட பத்திரிகைகள், வெளியீடுகள் இன்று பதிவுகள் இன்று மறைக்கப்பட்டாலும் அவர்களின் பெண்விடுதலைக்கான செயற்பாட்டின் தாக்கங்கள் இன்றும் எம் சமுதாயத்தில் தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றன.

புலிகளைப் பொறுத்தவரையில் தமது இராணுவ செயற்பாடுகளுக்கு பாவித்தல் என்ற அணுகு முறையே பெண்கள் விடயத்தில் அவர்கள் பெரிதும் கையாண்டு வந்தனர். யாழ்பாண மத்தியதர வர்க்க குணாம்ச சிந்தனையை அடிப்படையாக வைத்தே பெண்களை குறி வைத்து அடல் பாலசிங்கம் அணிதிரட்டினார். 1000 ரூபாய் மாதக் கொடுப்பனவு, புது ஏசியா பெண் துவச்சக்கர வண்டி, நீலநிற அழகு கைப்பை ‘புதிய பறவையடா! கவனம்’ என்ற எச்சரிகையை கொடுக்கும் மிரட்டல் பார்வை என்ற அணுகு முறமையை கொண்டு பெண்களை அணிதிரட்டினர். உளவு பார்த்தல் என்ற நடைமுறைக்களுக்குள் இவர்களை மட்டுப்படுத்திக் கொண்டனர். முளிவாய்காலில் புலிகளின் மரணம் சங்கமிக்கும் வரை புலிகளின் ‘பெண்விடுதலை’ இராணுவத்துடன் துப்பாக்கிச் சமரில் மடிதல் என்ற வளர்ச்சிப் போக்கு வரையும்தான் வளர முடிந்தது. அதுவரைதான் வளரவும் விட்டடார்கள் புலிகளில் இருந்து ஆணாதிக்கவாதிகள். வாழ்கைத் துணைவரைக் ‘கொன்றுவிட்டு வெள்ளை சீலை கொடுத்தனுப்புதல்’ என்ற வக்கிரமான படுபிற்போக்குத்தனமான அணுகுமுறையை மட்டும் புலிகள் கொண்டிருந்தனர். இது மாத்தையாவின் மனைவிக்க மட்டும் அல்ல பல இடங்களில் புலிகளினால் பாவிக்கப்பட்ட ‘முற்போக்கு’ செயற்பாடு ஆகும். புலிகளின் பெண் தளபதிகளும் இதனை ஏற்றே இருந்தனர்.

போரின் கொடுமைகளினால் புலம் பெயர்ந்த பெண்கள், புலம் பெயர்நாடுகளில் நிலவும் டாலர்களை ஈட்டும் பொருளாதார சுதந்திரம் ஈழத்துப் பெண்களையும் தைரியமாக சுதந்திரமாக முடிவெடுக்கும் நிலைகளுக்கு தள்ளியிருக்கின்றது என்பது ஒரு ஆரொக்கியமான நிலமையாக இருக்கின்றது. இதன் மறுபுறத்தில் குடும்ப உறவுகளில் முரண்பாடுகள், பிரச்சனைகள் ஏற்படும்போது குந்தி இருந்து பேசித்தீர்க்கக் கூடிய பிரச்சனைகளையும் ‘எடுத்தேன் முடித்தேன்’ என்று தனியாக பிரிந்து பிள்ளைகளைத் தவிக்கவிடும் நிலைமைகளை ஏற்படுத்தியும் இருக்கின்றது. இதன் அர்த்தம் ஆணாதிக்கத்திற்கு அடங்கி ஒடுங்கி அடிமையாக இருத்தல் என்பதல்ல. பிள்ளைகளை முன்னிலைப்படுத்தி மண முறிவைத்த விர்த்தல் என்று அணுகுமுறையை முன்னிலைப்படுத்தி செயற்படுதல் என்பதனை பின்னுக்கு தள்ளியுள்ளது என்பதாகும். இது போன்ற மண முறிவுகளில் ஆணுக்கும், பெண்ணுக்கும் பிள்ளைகளைத் தவிக்கவிடுவதில் ஏதோ ஒரு வகையில் சம பங்களிப்புள்ளதை நாம் காணக் கூடியதாக இருக்கின்றது.

தன்னைக் கொலை செய்ய பிரபாகரனால் அனுப்பட்ட பெண் புலி உறுப்பினர்களை மன்னித்து விடுதலை செய்த மனித நேய மிக்க முற்போக்கு சிந்தனை தோழர் நாபா இடம் இருந்தது வரலாறு. ஈழவிடுதலைப் போராட்டத்தில் பெண்களின் முற்போக்கான பாத்திரத்தை அங்கீகரித்தே அவர்களை விடுதலை செய்யச் சொன்னார். ஆமைப்பு வேறுபாடுகளுக்கு அப்பால் வீட்டு அடிமைத்தனம், சமூக அடிமைத்தனம், ஆண்மேலாதிக்கம் போன்ற அடக்கு முறைகளை உடைத்தெறிந்த வண்ணம் போராட புறப்பட்ட பெண்கள் வரிசையில் இப் புலிப் பெண் உறுப்பினர்களைப் தான் பார்ப்பதாகவும், இப் பெண்கள் தம் முன்னே உள்ள தடைகளை உடைத்தெறிந்து போராடப் புறப்பட்ட முற்போக்குத் தன்மைக்காக விடுதலை செய்த பத்மநாபாவின் பெண்கள் விடுதலை சம்மந்தமான கண்ணோட்டத்தை இவ் மகளிர் தினத்தில் சீர்தூக்கிப் பார்தல் அவசியமாகின்றது.
நான் இன்று உயிர் வாழ்தலுக்கான முக்கிய காரணமாக இருந்த ஒரு கால் வழங்காத நிலையில் உள்ள அம்மாவையும் இவ் சர்வதேச மகளிர் தினத்தில் சீர்தூக்கிப் பார்கின்றேன். எம் சமூகத்தில் இலை மறை காயாய் ஒளிந்திருக்கும் இப் போர்குணம் மிக்க அம்மாக்கள் ஈழவிடுதலைப் போராட்டத்தில் கிராமங்கள் தோறும் இலை மறைகாயாய் இருந்திருகின்றனர், இன்னும் இருக்கினறனர். செம்மண் பிரதேசமாம் சிறுப்பிட்டி உரும்பிராய் பகுதியில் போராளிகளுக்கு வறுமையிலும் உணவ+ட்டி பாதுகாத்த தேவி அக்காவையும், தோழர் நக்கீரனின் வாழ்வுத் துணையையும் நாம் மறக்க முடியுமா?. மண் திண்ணையிலும் இரவு பகல் பராமல் எம்மை பராமரித் தோழர் திலக்கின் சகோதரிகள், தயார் போன்றோரும் மிக மகத்தான பங்களிப்பை ஈழவிடுதலைப் பேராட்டத்தில் செய்தே இருக்கின்றனர்.

மருதமுனைக் கிராமத்தில் விசேட அதிரடிப்படையினரிடம் இருந்து போராளிகளைக் காப்பாற்றிய அந்த முஸ்லீம் சகோதரி எந்த ‘சமூகக் கட்டுப்பாடுகளை’யும் உடைத்து போராளிகளை தனது வாழ்கைத் துணைவர் என படுகை அறையில் வைத்துக் காப்பாற்றிய வீரவரலாற்றை கொண்டதல்லவா எமது ஈழப் பெண்களின் வரலாறு. மேற் கூறிய வரலாறுகள் எமது மண்ணில் கிராமம் தேர்றும் நிகழ்ந்தன என்பது பதிவு செய்யப்பட வேண்டிய விடயம். இன்றைய சர்வ தேச மகளிர் தினத்தில் இவ் எம் குலத்து தாய்களுக்கு, சகோதரிகளுக்கு சிரம் தாழ்த்தி வணங்குவதில் நாம் பெரும் மகிழ்ச்சி அடைகின்றோம்

சிவரமணி, செல்வி, தயாவர்சினி, போன்ற கவிஞர்களின் காத்திரமான பங்களிப்புகளும், ராஜினி திரணகம போன்ற சமூகவியலாளர்களின் பங்களிப்பும் இன்று புலிகளினால் மண்ணோடு புதைக்கபபட்டுள்ளன. இவை தவிர்க்கப்பட்டிருப்பின் பெண்களின் விளிப்புணர்வு ஈழத்தில் மேலும் மெருகூட்டப்பட்டிருக்கும். நான் பல்கலைக் கழகத்தில் படித்த காலத்து முற்போக்கு கவிதையாயினி சாவச்சேரி இரததி;னபூபதியின் கவிதைகளும், சமூக பெண் ஒடுக்குமுறைக்கான போராட்ட வரைவுகளும், ஈழவிடுதலைப் போராட்டத்தில் நிலவிய அராஜகப் போக்கினால், அவர் பிறந்த சமூகப் பின்னணியினாலும் வெளியே எழும்பி வரமுடியாமல் முடக்கப்பட்டதும் சோக வரலாறுதானே.
யாழ்பாணப் பல்கலைக் கழகத்தில் சுதந்தரப் பறவை என்று புலிகளால் அமைக்கபட்ட பெண்கள் அமைப்பு புலிகளின் தேவைகளை, உளவுகளை பார்பதற்கு மட்டும் பாவிக்கப்பட்டு இன்று மண்ணோடு மண்ணாய் போய்விட்டது. இதில் ஆரம்ப காலத்தில் வேலை செய்த போர்குணம் மிக்க புனிதா, சாந்தி போன்றவர்களின் குரல் வளைகள் நசுக்கப்பட்டு இன்று ஏதொ ஒரு மூலையில் ஒடுங்கியதும் உண்மைதானே. பிரபாகரன் மதிவதனியை கடத்தி பின்பு நிர்பந்த விருப்பு மணம் செய்ததும் ஒரு வகை பெண் ஒடுக்கு முறையின் உச்சக்கட்டம்தான். தவிர்க்க முடியாத சூழலில் பிரபாகரனின் விருப்பை ஏற்று தன சுயவிருப்பைத் தவிர்த்து பிரபாகரனுடன் வாழ முற்பட்டது எந்தவகையிலும் ஆண் மேலாதிகத்தில் இருந்து பிரித்து பார்க்க முடியாது ஆகும். மதிவதனியின் ஆத்மாவிற்கு மட்டும் தெரிந்த இந்த உண்மை ஆய்வாளர்களால் எதிர்வு கூறப்பட்ட ஒன்றும் ஆகும்.

மறுமணம் என்று வரும் போது ஆணின் விருப்புகள், உணர்வுகளுக்கு அளிக்கும் முக்கியத்துவம், தேவை பெண்களுக்கு ஒரு வீதமேனும் கொடுப்பதில்லை என்ற கொடுமையான நிலமையே ஈழத்து பெண்களிடத்து இன்றும் இருக்கினறது. இதில் பாரிய மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும். சமூகம் இதில் பெரும் தடைகற்களை கலாச்சாரம், பண்பாடு, ஒழுக்கம் என்ற வரையறைகளைப் பெண்களுக்கு மட்டும் போட்டு பெண்களுக்கு தண்டனை வழங்குகின்றது என்றே கூறவேண்டும். ஆண்கள் மறுமணம் செய்யும் போது பிள்ளைகளைப் பார்த்துக் கொள்ள ஒரு அம்மா தேவை என்று சொல்லும் காரணத்தை பெண்களின் மறுமணத்திலும் இணைத்துப்பார்கத் தயாரா? என்றால், இல்லை என்பதே பொதுவான பதில். இது ஆணாதிக்க செயற்பாட்டின் ஒரு வடிவம்தானே. இதற்கு பலரும் கூறும் வசதியான காரணம் அப்பா இல்லாமல் பிள்ளைகளை வளர்கலாம், ஆனால் அம்மா இல்லாமல் வளர்க்க முடியாது என்பதே. இதில் பெண்ணின் வலிமை, இயலுமை ஏற்றுக் கொள்ளும் விடயங்கள் தொனிப் பொருளாக இருந்தாலும் பொதுமை என்று வரும் போது பெண்கள் ஆணில் தங்கியிருப்பவள் என்ற எல்லைக்குள் முடக்கி தமது ஆணாதிக்க செயற்பாட்டை நிலைநாட்டும் முரண்பாட்டையே நடைமுறையில் நாம் காண்கின்றோம்.

மலையகப் பெண்களின் தினக் கூலி வாழ்வும் அதனைத் தொடர்ந்த மாலை நேர குடும்ப வேலைச் சுமைகளும் மீளமுடியாத துன்ப வாழ்விற்குள் மலையகப் பெண்களைத் தள்ளியுள்ளது. பெண்களுக்கு மாதத்தில் வரும் உபாதை நாட்கள், குழந்தைகளை வயிற்றில் சுமக்கும் கடினமான கால கட்டங்;கள், கழந்தையைப் பெற்றெடுத்த பின்னான ஓய்வு அதவையான நாட்கள் போன்றவற்றை இவர்களுக்கு இருக்கும் பொருளாதாரச் சுமை வேலைக்குச் செல்லாமல் ஓய்வெடுத்தலை தவிர்க்க வைக்கின்றது. இதில் மலையகப் பெண்களுக்கு விடுதலை வேண்டும். இதற்கான போராட்டத்தை முன்னெடுப்போம் என்ற இச்சர்வ தேச மகளிர் தினத்தில் உறுதி எடுப்போம்.

இலங்கையில் ஏற்பட்ட போர் நிலமைகளினால் விதவைகள் ஆக்கப்பட்ட பெண்களின் எதிர்கால வாழ்வு ஆணாதிக்கமற்ற சமூகப் பிரஞ்ஞையுடன் அணுகி தீர்க்கப்பட வேண்டிய முக்கியமான ஒன்றாகும். போரினால் கணவனை, அன்புக்குரியவனை, மகனை, தந்தையை ஏன் குடும்ப உறுப்பினர் அனைவரையும் இழந்து தவிக்கும் பெண்களின் மறுவாழ்வு என்பது இன்றய பிரதான விடங்களில் ஒன்றாக அமைகின்றது. இதில் குறிப்பாக இளைஞர்கள் மறுவாழ்வு அளித்தல் என்பதில் அர்பணிப்புடன் செயற்பட்டு தவித்து, தனித்து நிற்கும் எம்மின சகோதரிகளின் வாழ்வில் இணைந்து, இயைந்து ஒரு நம்பிக்கையான வாழ்வுத் தடத்தில் அவர்கள் பயணிக்க வாழ்வை இழந்த பெண்களுக்கு உறுதுணையான வாழ்க்கைத் துணைகளாக தம்மை ஆக்கும் முற்போக்குச் சிந்தனை வட்டத்திற்குள் தம்மை இணைத்துக் கொள்ள வேண்டும். இதனைவிடுத்து மீண்டும் பழைய ஆணடிமைச் சமுதாயச் சிந்தனையில் செயற்படுதல் ஏற்புடையதல்ல.

இந்த சர்வதேச மகளிர் தினத்தில் ஈழப் போராட்டத்தில் வாழ்வை ஏதொ ஒருவகையில் பறிகொடுத்த பெண்களின் மறுவாழ்விற்காக நாம் இணைந்து செயற்படுவொம் என்று சத்தியப்பரமாணம் எடுத்துக் கொள்வோம்.

பங்குனி 08, 2010
நன்றி - நெருப்பு
...மேலும்

சர்வதேச மகளிர் தினம் - மார்ச்,8

பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்க கானகங்களில் சுற்றிக்கொண்டிருந்த குரங்கினங்களில் ஒன்று மனித இனமாகப் பரிணமித்த போது தோன்றிய முதல் மனித உயிர் ஆணல்ல, அது ஒரு பெண். ஆம்! அவள் தான் நமது மூதாய் என்று அறிவியல் உறுதியாகச் சொல்கிறது. நாகரிகம் தோன்றாத அந்தக் காலத்தில் வேட்டையாடிக் கொண்டு குகைகளில் மனித இனம் வாழ ஆரம்பித்தது. இந்த ஆதிப் பொதுவுடமைச் சமுதாயத்தில் பெண்ணே தலைமைப் பாத்திரம் வகித்தாள்; பெண்ணே வேட்டைக்குத் தலைமைத் தாங்கினாள்; பெண்ணே சமுதாயத்தை இயக்கினாள். படைத்து காத்து ரட்சிப்பது கடவுளல்ல, பெண் தான் என்பது அந்த காட்டுமிராண்டி மனிதர்களுக்கு தெரிந்திருந்தது.

காலங்கள் சென்றன, ஆரம்ப கால நாகரிகங்கள் உருவாகின. மனித அறிவின் வளர்ச்சியால் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டன. வாழ் முறைகள் பெரும் மாற்றத்துக்குள்ளாயின. உற்பத்தியில் ஈடுபட்டு ஓரிடத்தில் நிலையாக வாழ ஆரம்பித்த மனித இனத்தில் தனியுடமைத் தோன்றிற்று, தற்கால குடும்ப முறையும் உருப்பெற்றது. இப்போது தலைமைப் பாத்திரம் பெண்களிடமிருந்து ஆணுக்கு மாறியிருந்தது. எனினும் பெண்கள் சமுதாயத்தில் அனைத்து நிலையிலும் பங்கு பெற்றனர். உலகின் முதல் விஞ்ஞானியானாலும், முதல் விவசாயி ஆனாலும் அல்லது உலகின் முதல் கவிஞர் ஆனாலும் சரி- அவர்கள் பெண்களாகவே இருந்தனர்.

அரசுகளும், மத நிறுவனங்களும் வளர்ச்சியடைந்த பின்னர் நிலை மாறியது. எங்கும் ஆண்களின் அதிகாரம் நிலைநாட்டப்பட்டது. பெண்ணினம் அடிமைப்படுத்தப்பட்டது, அனைத்து சட்டங்களும் கருத்தியல்களும் ஆண்களின் அதிகாரத்தை நிலை நிறுத்தும் வகையில் உருவாக்கப்பட்டன. அரசியல், சமுதாய, பொருளாதார நடவடிக்கைகளில் இருந்து பெண்கள் விலக்கி வைக்கப் பட்டனர். பெண்களின் எல்லைகள் வரையறுக்கப்பட்டு வீட்டுக்குள் முடக்கப்பட்டனர். இத்தடைகளை மீறி சிலர் உயர் நிலையை அடைந்தாலும் அவர்கள் விதிவிலக்குகளே. மனித இனத்தின் சரிபாதியான பெண்கள் இரண்டாந்திர குடிமக்கள் ஆக்கப்பட்டனர். இப்படியாக பல நூற்றாண்டுகள் கடந்தன.

ஐரோப்பிய கண்டத்தில் நிலவிய நிலவுடமை சமூக அமைப்பு அறிவியல் கண்டுபிடிப்புகளாலும் புதிய கடல்வழி கண்டுபிடிப்புகளாலும் மாற்றம் அடைந்தது. புதிய உற்பத்தி முறையுடன் முதலாளித்துவம் தோற்றம் பெற்றது. முதலாளித்துவ உற்பத்தி முறையில் தேவைபட்ட அதிக மனித உழைப்பை ஈடுகட்டவும், உழைப்புச் சுரண்டலின் மூலம் முதலாளிகளின் லாபத்தை அதிகரித்துக்கொள்ளும் பொருட்டும் தொழில்துறை உற்பத்தியில் பெண்கள் ஈடுபடுத்தப்பட்டனர். ஒரு புறத்தில் இச்சுரண்டல் பெண்களுக்கு எதிராக இருந்தாலும் அன்றைய இறுகிய சமூக அமைப்பில் ஒரு தளர்ச்சியை/நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் ஐரோப்பிய மறுமலர்ச்சி சிந்தனைகளால் 15,16,17ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பிய நாடுகளில் பெரும் அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்தன, மனித உரிமைகள் பற்றிய சிந்தனை எழுச்சிப்பெற்றது.

பெண்களும் தம் தாழ்நிலைக்கு எதிராக, உரிமைக்கு குரல் கொடுக்க ஆரம்பித்தனர். கி.பி.1789ல் சுதந்திரம், சமத்துவம், பிரதிநிதித்துவம் என்ற உரிமை முழக்கங்களுடன் பிரான்ஸ் நாட்டின் பாரீஸ், வெர்செயில்ஸ் ஆகிய நகரங்களில் பெண்கள் கிளர்ச்சியில் இறங்கினர். இந்தப் போராட்டமானது லூயி மன்னரின் அரசாட்சியையே முடிவுக்குக் கொண்டு வந்தது. அமெரிக்க சுதந்திரப் போரிலும் பெண்கள் குறிப்பிடத்தக்க பங்காற்றியிருந்தனர். ஆனாலும், பெண்களின் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை. எனினும் இப்போராட்டம் பல நாடுகளில் உள்ள பெண்களுக்கும் நம்பிக்கையையும் உரிமை வேட்கையையும் விதைத்தது.

மேரி வோல்ஸ்டன் கிராப்ட்(1759-1797) என்ற பெண்ணுரிமைப் போராளி எழுதிய The Vindication Of the Rights of Women என்னும் புத்தகமும் ஜான் ஸ்டூவர்ட் மில்(1806-1873) என்னும் ஆங்கிலேய சிந்தனையாளர் எழுதிய The Subjection of Women என்னும் புத்தகமும் பெண்ணிய சிந்தனையில் புதிய அலையை உருவாக்கின.

தொடர்ச்சியான பிரச்சாரத்தின் காரணமாக விழிப்புற்ற பெண்களால் இத்தாலி, அமெரிக்கா, பிரஷ்யா, கிரீஸ், ஆஸ்திரியா, டென்மார்க் என பல நாடுகளிலும் போராட்டங்கள் வெடித்தன. பிரஷ்யவில் பெண்களின் முழக்கத்தை கண்டு அஞ்சிய அரசன் 1848, மார்ச் 19ஆம் தேதியன்று பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கவும் அரசவை ஆலோசனைக் குழுக்களில் பெண்களுக்கு பிதிநிதித்துவம் தரவும் ஒப்புக்கொண்டான். ஆனால் அதுவும் நிறைவேற்றப்படவில்லை.

1840ஆம் ஆண்டு லண்டன் மாநகரில் அகில உலக அடிமை ஒழிப்பு மாநாடு நடந்தது. இம்மாநாட்டில் உறுப்பினர்களாக பெண்களை சேர்த்துக் கொள்ளவில்லை. இதனால் வெகுண்டெழுந்த பெண்ணுரிமை போராளிகள் 1848ல் நியூயார்க்கில் உள்ள செனீகா ஃபால்ஸ் என்னும் ஊரில் நடந்த மாநாட்டில் பெண்களின் உரிமை பிரகடனத்தை (Declaration of the Rights of Women) வெளியிட்டனர். இது பெண்ணுரிமை போராட்டங்களில் ஒரு மைல்கல்லாக கருதப்படுகிறது.

அதில் ‘ஆண்களும் பெண்களும் இயற்கையில் சமமானவர்களாகவே படைக்கப் பட்டுள்ளனர். அவர்கள் மாற்றமுடியாத உரிமைகளைக் கடவுளின் மூலம் பெற்றுள்ளனர். இவ்வுரிமைகளுள், வாழ்விற்கும், சுதந்திரத்திற்கும், மகிழ்ச்சியுடன் இருப்பதற்கும் தேவையான உரிமைகளைப் பெறவே அரசாங்கம் என்னும் அமைப்பு ஆளப்படுபவர்களின் அனுமதியுடன் நிறுவப்பட்டுள்ளது..... இதுவரை அரசாங்கம் செய்த கொடுமைகளைப் பெண்கள் பொறுமையோடு அனுபவித்திருக்கின்றனர். இப்பொழுது அவர்கள் தங்களுக்குச் சம உரிமை கோரிப் போராட வேண்டியது அவசியமாகிறது.....பெண்ணின் வாழ்வெல்லைகள் விரிவாக்கப்பட வேண்டும். பெண் ஓட்டுரிமை பெறவேண்டும். மனித சம உரிமை எல்லா இன மக்களுக்கும் ஒரே விதமான திறமைகளும் பொறுப்புகளும் உள்ளன என்பதை அடிப்படையாகக் கொண்டது. பெண் ஆணுக்கு சமமான உரிமைகளையும் கடமைகளையும் பெறவேண்டும். இதற்கு எதிரானவை எல்லாம் மனிதனுக்கு எதிரானவை என்றும் தீர்மானிக்கிறோம். இந்த வெற்றியை ஆணும் பெண்ணும் சேர்ந்து உழைத்துப் பெற்று இருவரும் எல்லா நிலைகளிலும் பங்கு பெற வேண்டுமெனத் தீர்மானிக்கின்றோம்.’ என பிரகடனம் செய்தனர்.

1857ல் பருத்தி நூற்பாலைகளிலும், ஆடை உற்பத்தியிலும் ஈடுபடுத்தப்பட்ட ஆயிரக்கணக்கான பெண் தொழிலாளர்கள், மோசமான பணிச் சூழல், மிகக்குறைந்த கூலி, தொழில் உரிமையாளர்களின் ஒடுக்குமுறை ஆகியவற்றை எதிர்த்து அமெரிக்க நாட்டின் நியூயார்க் நகரில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டமும் அரசாங்கத்தால் கடுமையான முறையில் ஒடுக்கப்பட்டது.

அமெரிக்க நாட்டில் 1908ல் குறைந்த வேலை நேரம், நியாயமான கூலி, வாக்குரிமை ஆகியவற்றைக் கேட்டு மீண்டும் பெண்களின் போராட்டம் வெடித்தது. இது உலகமெங்கும் பெண்களிடையே பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியது. டென்மார்க்கின் கோபன் ஹேகன் நகரில் 1910ல் ஜெர்மனியின் சமூக ஜனநாயகக் கட்சியின் பெண்கள் பிரிவு தலைவரான கிளார ஜெட்கின் தலைமையில் கூடிய பெண்கள் மாநாடு சர்வதேச மகளிர் அமைப்பைத் தோற்றுவித்தது. பெண்களுக்கு வாழ்வின் எல்லா தளத்திலும் சம உரிமைகள், பிரதிநிதித்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்பதை உலகத்தின் செவியில் ஓங்கி ஒலித்திடவும் தமது உரிமைகள் குறித்து பெண்களுக்கு நாடு, தேச எல்லைகள் கடந்து விழிப்புணர்வையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தவும் தமது ஒற்றுமையை காட்டும் விதமாக சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாட வேண்டும் என்ற எண்ணம் போராளிகள் மனதில் உதித்தது.

அதன் விளைவாக 1911, மார்ச் 19ஆம் தேதியன்று ஜெர்மனி, டென்மார்க், ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்து போன்ற ஐரோப்பிய நாடுகளில் முதல் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. ரஷியாவில் 1913ல் முதல் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. பின்னர் கூடிய சர்வதேச மகளிர் பிரதிநிதிகள், ஆண்டு தோறும் மார்ச் 8ஆம் தேதியன்று உலகம் முழுவதும் மகளிர் தினம் கடைபிடிக்கப்பட வேண்டும் என்று தீர்மானித்தனர்.

1917ல் மகளிர் தினத்தன்று ரஷிய ஜார் மன்னனுக்கு எதிராக உழைக்கும் வர்க்கத்தின் தலைமையில் தமது வாக்குரிமைக்காகவும், உணவுக்காகவும் போராட்டத்தில் இறங்கினர் 90,000க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்களும் அவர்களின் ஆதரவாளர்களும். இதில் வெற்றியும் பெற்றனர். இந்தப் போராட்டமே ரஷிய புரட்சிக்கு ஆரம்பமாகும். அடுத்த எட்டு மாதங்களில் ரஷிய புரட்சி வெற்றி பெற்றது. புதிதாக மலர்ந்த சோசலிஷ சோவியத் யூனியனில் பெண்களுக்கு முழுமையான வாக்குரிமை அளிக்கப்பட்டது. அனைத்து துறைகளிலும் பெண்களின் பங்கேற்பு உறுதி செய்யப்பட்டது.

பல அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் படிப் படியாக வாக்குரிமைகள் பெண்களுக்கு வழங்கப்பட்டன.

உலகமெங்கும் தொடர்ந்து நடந்தப் போராட்டங்களின் பயனால் பெண்கள் கொஞ்சம் கொஞ்சமாகத் தமது உரிமைகளை மீட்க ஆரம்பித்துள்ளனர்.

மேற்கத்திய கல்வியின் விளைவாக இந்திய சமூகத்திலும் பெரும் விழிப்புணர்வு எற்பட்டது. ராஜாராம் மோகன் ராய், கேசவ சந்திர சென், மகாதேவ கோவிந்த ரானடே, ஈஸ்வர சந்திர வித்யாசாகர், பண்டித ரமாபாய், மகாத்மா பூலே முத்துலட்சுமி ரெட்டி போன்ற பல சிந்தனையாளர்களும் இந்திய பெண்களின் விடுதலைக்கு அளப்பரிய பங்காற்றியுள்ளனர். காந்தியடிகளும் பெண்களின் பங்கேற்பை பெரிதும் வலியுறுத்தியுள்ளார். அரசியல், பொருளாதார, சமூக உரிமைகளைப் பெற சட்டரீதியான அங்கீகாரத்துக்காகப் போராடினார் அண்ணல் அம்பேத்கர். முழுமையான பெண் விடுதலைக்கு இன்றும் நமக்கு வழிகாட்டிக் கொண்டிருக்கிறன தந்தை பெரியாரின் சிந்தனைகளும் போராட்டங்களும்.

பெண்களின் அரசியல், சமூக, பொருளாதார, பண்பாட்டு சம உரிமையை அங்கீகரித்துள்ள ஐக்கிய நாடுகள் சபை 1975ஆம் ஆண்டை சர்வதேச மகளிர் ஆண்டாக அறிவித்து விழிப்புணர்வு பணிகளை முடுக்கிவிட்டது. 1960களில் எழுச்சி பெற்ற தீவிர பெண்ணிய சிந்தனைகளும் பெண்களுக்கான உரிமை போராட்டங்களுக்கு உத்வேகமளித்து வருகிறது.

பெண்களின் போராட்டங்களும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. உலக அளவில் பெண்களின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள சொத்துகளின் அளவு மொத்த மதிப்பில் 2 % க்கும் குறைவு; கருவிலேயே அழிக்கப்படும் பெண் சிசுக்களின் எண்ணிக்கை இந்தியாவில் மட்டும் ஆண்டுக்கு பத்து லட்சம்; இந்தியாவில் ஒரு லட்சம் குழந்தைகள் பிறந்தால் 450 பெண் குழந்தைகள் கொல்லப்படுகின்றன; தலித் பெண்களில் எழுத்தறிவு பெற்றோர் வெறும் 7 % மட்டுமே; உலகம் முழுவதும் வீட்டிலிருக்கும் அதாவது சும்மா தமது வீட்டு வேலைகளை செய்யும் பெண்களின் பணியின் மதிப்பு அதாவது ஆண்டுக்கு 11 ட்ரில்லியன் டாலர்கள். இந்தப் புள்ளிவிவரங்கள் சொல்லும் செய்தி என்ன? நாம் பெண்கள் முன்னேற்றத்தில் நெடுந்தொலைவு செல்ல வேண்டியிருக்கிறது என்பதுதான்.

சாதி, இன, மத, மொழி ஒடுக்கு முறைகளை விடக் கொடியதும் அதிகம் பேரை பாதிப்பதும் இந்த பெண்களின் மீதான ஒடுக்குமுறை தான். மனிதர்கள் என்ற அளவில் சுய மரியாதை, சமூக மதிப்புடன் அரசியல், சமூக, பொருளாதார, பண்பாட்டு சுதந்திரம் பெற்று ஆண்களுக்கு நிகரான சம உரிமைகளுடன் சமமான வாழ்வு பெறும் போதுதான் மனித சமுதாயம் உயர்வடையும். இதற்கு உத்வேகமளிக்கக் கூடிய நாளாக சர்வதேச மகளிர் தினமான மார்ச் 8ஆம் நாள் விளங்குகிறது.

“பெண் அடிமை என்பது மனித சமூக அழிவு என்பதை நாம் நினைக்காததாலேயே, வளர்ச்சி பெற வேண்டிய மனித சமூகம் பகுத்தறிவு இருந்தும் நாள்தோறும் தேய்ந்து கொண்டே வருகிறது” - தந்தை பெரியார்

பெண்ணியத்திற்காக இம்மானுவல்
...மேலும்

சமவுரிமை சமவாய்ப்பு அனைவருக்கும் உயர்வு -தில்லை


மார்ச் 8 - சர்வதேச பெண்கள் தின நினைவாக
2010 ஆண்டின் சர்வதேச பெண்கள் தினத்தின் பிரதான தொனிப்பொருளாக சமவுரிமை, சமவாய்ப்பு மற்றும் அனைவருக்கும் உயர்வு என்பதனை ஜக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. இதனை முன்னுதாரணமாக கொண்டு சமூகத்தில் பெண்களை ஒன்றிணைப்பதும் சமூக, பொருளாதார ரீதியாக பெண்களை விரைவாகவும் இலகுவாகவும் பலம் பெறச்செய்வதும் அவசியமானதாகும். சமூகமேம்பாட்டுத்திட்டங்களில் பெண்களின் அதிகளவான பங்கேற்றலையும், பதவிகளையும் வலியுறுத்துவதோடு பாராம்பரிய எண்ணக்கருக்களில் இருந்து பெண்கள் சிந்தனைத் தெளிவு பெறக்கூடிய புரிந்துணர்வை ஏற்படுத்துவதும் அவசியமாகும்.

சமூக மேம்பாட்டுத்திட்டமிடல் முறைமைகளில் ஆண்களின் விகிதாசாரத்திற்கு ஏற்ப பெண்களும் பங்குபற்றுவதற்கான வாய்ப்புக்கள் வழங்கப்படுவதோடு பெண்கள் பங்காளிகள் ஆவதற்கும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும். சமூகமேம்பாட்டு நிறுவனங்களின் அபிவிருத்தி திட்டமிடல் முறைமைகளில் ஆண்களைப் போன்று பெண்களும் சம அளவான அங்கீகாரம் பெறக்கூடிய வாய்ப்புக்களையும் வளப்பகிர்வினையும் வழங்கும் மனநிலை ஆண்நிலைப்பட்டசமூகத்திடம் உருவாகவேண்டும்.

மனிதகுல வரலாறு என்பது பல்வேறுபட்ட தத்துவ, கருத்தியல் வளர்ச்சிப்போக்கையும், வளர்ச்சிக்காலகட்டங்களையும் கடந்து வந்திருக்கிற போதும் வரலாறு முழுவதும் அதிகாரத்துவ படிமங்களையும் உட்கொண்டுதான் அது வந்து சேர்ந்திருக்கிறது. மனித நாகரிகத்துக்கான தத்துவங்களும் கூட அதிகாரத்துவத்தை தக்கவைப்பதற்கும் அதேவேளை அதனை மறுப்பதற்குமான தத்துவங்களும் கூடவே போராட்டங்களும், நடைமுறைகளையும் கடந்து வந்திருக்கிறது. ஆனால் பெண்களின் மீதான அதிகாரத்துவத்திற்கும் அடிமைத்துவத்திற்கும் இவை எல்லாவற்றிலும் இடம் இருந்திருக்கிறது. வரலாறு முழுவதுமே பெண்களின் மீதான அடக்குமுறையைப் பாதுகாக்கின்ற மரபு ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவே இருந்துவந்திருக்கிறது.

பெண்களின் மீதான அனைத்துவித உரிமை மறுப்புகளும், அடக்குமுறைகளும், பாரபட்சங்களும் சமய, கலாசார, பண்பாட்டின் பேரால் நியாயப்படுத்தப்பட்டு வந்திருக்கிறது.

பெண்களின் மீதான பிரச்சினைகளை தனித்து அடையாளம் கண்டு அதற்கான கருத்துருவாக்கம் கண்டடையப்பட்டது சமீப நூற்றாண்டுகளில் தான்.
பெண்கள் தம்மீதான பாரபட்சங்களை எதிர்த்து குரல் கொடுக்கவும், தமது பிரச்சினையானது தனித்தது, உலகளாவியது, உலக சனத்தொகையில் சரிபாதியினரது என்பதை எடுத்துக்கூறினர். வீதியிலிறங்கினர், நிறுவனமயப்பட்டனர். அந்த வகையில் சர்வதேச பெண்கள் தினம் இன்று உலகலாவிய ரீதியில் பெண்களின் எழுச்சி நாளாக ஆகிவிட்டிருக்கிறது.

பெண்கள் தமது உரிமைகளைப் பெறுவதற்குச் சமூகமேம்பாட்டுத் திட்டமிடலில் சமவாய்ப்பையும் நாட்டின் அபிவிருத்தியில் சாதகமான பலனைப்பெறவேண்டும். சுமூகமான, ஆரோக்கியமான, பெண்களுக்கெதிரான வன்முறைகளற்ற தீர்மானங்களை எடுப்பதற்கு பெண்கள் சகல மட்டங்களிலும் வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும். பழம்பெரும் வழக்காறுகளை உடைத்துதெறிந்து பெண்களின் பிரச்சினைகளுக்குப் பெண்களே முன்னின்று வெளியில் வந்து போராட வேண்டும்.

பெண்கள் தமது கருத்துக்களைச் சுதந்திரமாகச் சொல்வதற்கும் உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கும் உரித்துடையவர்கள். தமது சமூகத்திற்குப் பொருத்தமான மேம்பாடான கல்வியை வடிவமைப்பதற்கும் தகுதியுடையவர்கள். பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும், சொத்துரிமை மற்றும் தமக்கு விருப்பமான தொழிற்துறையைத் தெரிவு செய்வதற்கும் உரிமையுடையவர்கள். பெண்களே சுயமாகச் சிந்திக்கவும் முடிவெடுக்கவும், தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கும் முன்வரவேண்டும்.

எந்தவொரு சமுதாயத்தின் எழுச்சிக்கும் வளர்ச்சிக்கும் பெண்களின் பங்களிப்பு அவசியமானதும் அடிப்படையானதுமாகும். ஆண், பெண் சமத்துவம் தொடர்பான கருத்துருவாக்கம் வளர்வதற்கும் எமது சமூகத்திற்குப் பொருத்தமான மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் விழிப்புணர்வும், சுயதிறன் விருத்தியும், பெண்களுக்கு ஏற்படுத்தப்பட வேண்டும். பொருளாதார நடவடிக்கைகளில் பெண்கள் ஈடுபாடுகாட்டுவதோடு சர்வதேச வியாபார நடவடிக்கைகளில் பெண்களும் பங்குபெறவேண்டும்.

கிராமியப்பொருளாதார நடவடிக்கைகளில் பெண்களை ஒன்றிணைப்பதற்கும் அபிவிருத்தி திட்டமிடல் முறைமைகளில் பெண்களின் பங்கேற்றலைத் துரிதப்படுத்துவதற்கும் ஆற்றலும் ஆளுமையும் கொண்டவர்கள் முன்வரவேண்டும். சமூகத்தில் பெண்கள் பலம் பெற வேண்டுமெனில் அவர்களின் ஆற்றல்கள் மழுங்கடிக்கப்படாது ஆரோக்கியமான, உழைப்பைச் சுரண்டாத திட்டமிடல் வழிமுறைகளில் பெண்களும் உள்வாங்கப்படவேண்டும். அபிவிருத்தி வேலைகள் முன்னெடுக்கப்படும்போது அதில் பெண்களின் அங்கத்துவமும் சம அளவில் இடம்பெற வேண்டும். எமது சமூகம் மீளுருவாக்கம் பெறுவதற்கு பெண்களின் கருத்துருவாக்கம் வளரவேண்டும்.

பெண்களின் உரிமை மறுப்புக்கள் காலம் காலமாகத் தொடாந்தவண்ணமேயுள்ளது. இவை பல்வேறு ஆதிக்க கருத்துக்களால் நியாப்படுத்தப்பட்டும் வந்துள்ளது. இவ்வாறான நியாயப்படுத்தல்களைக் எதிர்த்துப் பெண்கள் குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளோம்.

பெண்களையும் ஆண்களையும் ஒன்றிணைக்கும் சமூகமேம்பாட்டு வேலைத்திட்டங்களை உருவாக்குவதோடு அதிகளவான பெண்களின் பங்குபற்றுதலையும் பங்களிப்பைப்பையும் பெறுவதற்கான வாய்ப்புக்கள் அதிகரிக்கப்படவேண்டும். கடந்தகாலங்களில் சமூகமேம்பாட்டு அமைப்புக்கள் தூண்டுதல் அளித்தபோதிலும் அது வரையறுக்கப்பட்ட வெற்றியையே தந்துள்ளது. பெண்களின் மனங்களில் கருத்தியல் ரீதியான சிந்தனை மாற்றத்தை ஏற்படுத்துவதோடு மரபு ரீதியான சிறுமைப்படுத்தலை ஆண்கள் கைவிடவேண்டும்.

சமவாய்ப்பும் சமவுரிமையுமே உண்மையான விடுதலைக்கு இட்டுச்செல்லுமெனில் ஆண்களும் பெண்களும் சமூக, பொருளாதார, அரசியல், சட்ட, நீதி, நிர்வாகம், போன்றவற்றில் சம அளவில் பங்கேற்கவேண்டும். இதற்கூடாகவே ஆதிக்கக்கட்டுமானங்களில் இருந்து அனைவரும் உயர்வு பெறமுடியும்.

பெண்கள் உடல், உள ரீதியாக வலுப்பெறுவதோடு ஆளுமைகளை வளர்த்துக் கொள்வதற்கூடாகவே ஆண்களோடு சமஅளவில் பங்குபற்ற முடியும்.

ஆண்களும் பெண்களும் பக்கபலமாகவும் பரஸ்பரம் உந்து சக்தியாகவும் இருப்பதற்கூடாகவே சமூக விடுதலையை வென்றெடுக்கமுடியும். ஆண் பெண் இருபாலாரின் முழுமையான அர்ப்பணிப்பே விடுதலையைப் பெற்றுத்தரும். எனவே பெண்கள் முழுமையான பெண் விடுதலையைப் பெற முன்னின்று உழைப்பதோடு சமூகவிடுதலைக்கும் உழைப்பதற்கூடாகவே தேசவிடுதலையையும் பெண் விடுதலையையும் வென்றெடுக்கலாம். மானிட விடுதலையும் இதிலேயே தங்கியுள்ளது.

எது எவ்வாறு இருப்பினும் பெண்கள் தமது உரிமை மறுப்புக்கள் தொடர்பாக சர்வதேச அளவில் அரசியல் நிலைப்பட்ட செயற்பாடுகளையும் கோரிக்கைகளையும் முன்வைத்து வருகின்றனர். இருந்தும் பெண்களுக்கெதிரான வன்முறைகள் இன்னும் குறைந்தபாடில்லை. சமூகத்தில் சகல ஒடுக்குதல்களுக்கும் உட்பட்ட பெண்கள் வெளியில் வந்து சமவுரிமை, சமவாய்ப்பை பெற சமூக அபிவிருத்தியில் ஒன்றிணையவேண்டும். சமூக மேம்பாட்டு உருவாக்கத்தில் பெண்களும் ஆண்களும் ஒருங்கிணைந்து செயற்பட்டால் மாத்திரமே சுதந்திரமான பெண் விடுதலையையும், ஆரோக்கியமான சமூக விடுதலையையும் வென்றெடுக்க முடியும்.
...மேலும்