/* up Facebook

Mar 2, 2017

இந்து மதமும் பெண்களும்!


சில மாதங்களிற்கு முன்பு திருமண மந்திரங்கள் பற்றிய ஒரு பதிவை சில தளங்களில் எழுதினேன். இதையடுத்து நான் எழுதியது சரியா என்று ஒரு விவாதம் ஏற்பட்டது. ஒரு பத்திரிகையில் இந்த மந்திரங்கள் பற்றி எழுதிய போது, யரோ ஒரு பார்ப்பனர் "மந்திரங்கள் புனிதமானவை, அதை குற்றம் சொல்லக் கூடாது" என்று ஒரு கடிதம் மட்டும் எழுதியிருந்தார். வேறு எந்த விளக்கமும் எழுதவில்லை.ஆனால் கருத்துக் களங்களில் திருமண மந்திரங்கள் பற்றிய என்னுடைய கருத்து தவறு என்று சிலர் வாதிட்டார்கள். சில விளக்கங்களை முன்வைத்தார்கள். அவைகளுக்கு பதில் அளிக்க முனைந்த பொழுதே, அது நீண்டு இப்படியான ஒரு தொடருக்கு வித்திட்டது. அந்த வகையில் இந்தத் தொடருக்கு காரணமான திருமணங்களில் சொல்லப்படும் மந்திரங்கள் பற்றி முதலில் ஒரு முறை பார்ப்போம்.தமிழர்களைப் போன்று ஒரு இளிச்சவாயர்களை நான் எங்கும் காணவில்லை. தனக்குத் தெரியாத ஒரு மொழியில் எந்த ஒரு விடயத்தையும் யாரும் செய்ய மாட்டார்கள். அப்படிச் செய்வது என்றாலும், சொல்லப்படுவதன் அர்த்தத்தை புரிந்து கொண்டுதான் செய்வார்கள்.ஆனால் நாமோ பிறப்பில் இருந்து இறப்பு வரை மதத்தின் பெயரில் எமக்கு தெரியாத ஒரு மொழியிலேயே அனைத்து சடங்குகளையும் செய்து வருகிறோம். உண்மையில் இந்தச் சடங்குகளும், அதில் சொல்லப்படும் மந்திரங்களும் எம்மை இழிவுபடுத்துவதை நாம் உணர்ந்து கொள்வதும் இல்லை. உணர்ந்து கொள்ள விரும்புவதும் இல்லை.திருமணத்தின் போது சொல்லப்படும் சில மந்திரங்களை பார்ப்போம்
'சோமஹ ப்ரதமோ விவிதே கந்தர்வோவிவித உத்ரஹ த்ரியோ அக்னிஸ்டே பதிதுரியஸ்தே மனுஷ்ய ஜாஹ'

இந்த மந்திரம் மணமகளை நோக்கி சொல்லப்படுகிறது.நீ முதலில் சொமனுக்கு (சந்திரன்) உரியவளாக இருந்தாய், பின்பு கந்தர்வன் உன்னை அடைந்தான், பின்பு அக்கினி உன்னை அடைந்தான். இப்பொழுது நான்காவதாக ஒரு மானிடனை அடைகிறாய். இதுதான் இந்த மந்திரத்தின் அர்த்தம்.அதவாது மணமகள் ஏற்கனவே மூன்று பேருக்கு மனைவியாக இருந்தவளாம். இப்பொழுது நான்காவதாக ஒருவனுக்கு மனைவியாகப் போகிறார்களாம். அத்துடமன் அவள் எந்தக் காலத்தில் யாருக்கு மனைவியாக இருந்தால் என்று ஆபாசமான விளக்கங்கள் (ரோமம் வளரும் போது கந்தர்வனுக்கு....) வேறு இருக்கிறது.இதை பல பார்ப்பனர்களே இன்று ஒத்துக் கொள்கிறார்கள். ஆனால் மக்களை ஏமாற்றி தலையில் மிளகாய் அரைப்பதை மட்டுமே வழக்கமாக கொண்டுள்ள சிலர் வேறு அர்த்தம் சொல்வார்கள்.
அதாவது மந்திரத்தில் உள்ள "பதி" என்ற சொல் கணவன் என்ற அர்த்தத்தில் சொல்லப்படுவது இல்லை. பாதுகாவலன் என்ற அர்தத்தில்தான் சொல்லப்படுகிறது. "முதலில் சந்திரன் அவளை பாதுகாத்தான், பின்பு கந்தர்வன் பாதுகாத்தான், பின்பு அக்னி பாதுகாத்தான்" என்று ஒரு விளக்கத்தை இவர்கள் சொல்வார்கள். பெண்ணின் உடலில் ஏற்படும் வளர்ச்சிக்கு அமைய இந்த மந்திரங்கள் அமைக்கப்பட்டது என்று "அறிவியல்" விளக்கம் வேறு தருவார்கள்.சிலர் இன்னும் ஒரு படி மேலே போய் சோமன், கந்தர்வன், அக்னி ஆகியோர் அந்தப் பெண்ணிற்கு தந்தையாக இருந்தார்கள் என்று சொல்வார்கள்.ஆனால் வேதங்களிலும் புராணங்களிலும் ஒரு பெண்ணிற்கு "பதி" என்பது அவள் கணவன் என்றுதான் சொல்லப்படுகிறது. அத்துடன் அதே வேதங்களிலும் புராணங்களிலும் "பொம்பிளைப் பொறுக்கிகளாக" சொல்லப்படுகின்ற சோமன், கந்தர்வன், அக்னி போன்றவர்களின் "பாதுகாப்பில்" தன்னுடைய மனைவி இருந்தாள் என்பது குறித்து எந்தக் கணவன் மகிழ்ச்சி அடைவான் என்ற கேள்வியும் இங்கு எழுகின்றது.திருமண மந்திரங்கள் இவற்றுடன் முடிந்து விடவில்லை. தொடர்ந்து வருகின்ற திருமண மந்திரங்கள் இவர்கள் சொல்கின்ற இந்த மோசடி விளக்கத்தை சுக்கு நூறாக உடைக்கின்றன.

உதீர்ஷ்வாதோ விஷ்வாவஸேர் நம ஸேடா மஹேத்வாஅந்யா ப்ரபர்வ்யகும் ஸஞ்ஜாயாம் பத்யா ஸ்குஜஉதீர்ஷ்வாத பதிவதீ ஹ்யேஷா விஷ்வாவஸீந் நமஸ கீர்ப்பீரிடடேஅந்யா மிச்ச பித்ரு பதம வ்யக் தாகும் ஸதே பாகோ ஜனுஷா தஸ்ய வித்தி

இந்த மந்திரங்களின் பொருள் என்னவென்று தெரியுமா?விஷ்வாவஸ் என்னும் கந்தர்வனே! இந்தப் படுக்கையில் இருந்து எழுந்திருப்பாயாக!உன்னை வணங்கிக் கேட்டுக் கொள்கிறோம். நீ வேறு கன்னிகையை விரும்புவாயாக! என் மனைவியை அவளுடைய கணவனுடன் சேர்த்து வைப்பாயாக!இந்தப் படுக்கையில் இருந்து எழுந்திருப்பாயாக! இந்தப் பெண்ணுக்கு கணவன் இருக்கிறான் அல்லவா! விஷ்வாவஸாகிய உன்னை வணங்கிக் கேட்டுக் கொள்கிறோம். தகப்பின் வீட்டில் இருப்பவளும், இதுவரை திருமணம் ஆகாத கன்னிகையை நீ விரும்பவாயாக! உன்னுடைய அந்தப் பங்கு பிறவியினால் ஆகிவிட்டது என்று அறிவாயாக!இப்பொழுது சற்றுச் சிந்தித்துப் பாருங்கள்! மணமகளிற்கு தந்தை ஸ்தானத்தில் இருந்து பாதுகாவலனாக விளங்கிய கந்தர்வனுக்கு அந்தப் பெண்ணின் படுக்கையில் என்ன வேலை?

நான் சொன்னதை மீண்டும் சொல்கிறேன். சோமன், அக்னி, கந்தர்வன் போன்றவர்களை மணமகளின் கணவர்கள் என்றுதான் மந்திரம் சொல்கிறது. இவற்றை விட மணமகளை முப்பது முக்கோடி தேவர்களுக்கும் மனைவியாக்கி, பின்பு புரோகிதம் சொல்லும் பார்ப்பானுக்கு மனைவியாக்கி, இவற்றிற்கு எல்லாம் கணவனின் சம்மதம் பெற்று... இப்படி இந்த மந்திரங்கள் நீண்டு செல்கின்றன.இவைகள் இருக்கட்டும். வேறு சில திருமண மந்திரங்களை பார்ப்போம்.

தாம்பூஷன் சிவதமாம் ஏவயஸ்வயஸ்ஸாம் பீஜம் மனுஸ்யா பவந்த்தீயான ஊரு உஷதி விஸ்ரயாதையஸ்யா முஷந்தஹா ப்ரஷரே 
பஷேபம்

இதனுடைய அர்த்தம்: நான் அவளோடு உறவு கொள்ளும் பொழுது எமது பாகங்கள் பொருந்துவதற்கு தேவதைகளே நீங்கள் உதவ வேண்டும். இன்னும் ஒரு மந்திரம்:

விஸ்ணுர் யோனி கர்ப்பயதுதொஷ்டா ரூபானி பீமிசதுஆரிஞ்சது ப்ரஜாபதிதாதா கர்ப்பந்தாது

இதனுடைய அர்த்தம், பெண்ணினுடைய அந்தரங்க பகுதி மூன்று பாகங்களாக பிரிக்கப்பட்டிருக்கிறது. மூன்று பாகங்களிலும் மூன்று தெய்வங்கள் இருந்து காவல் காக்கிறார்கள். (தெய்வங்களுக்கு வேறு வேலையே இல்லையா? )உறவின் பொழுது எல்லாம் சரியாக நடக்கிறதா என்று கண்காணிக்கின்ற வேலையையும் இவர்கள் செய்கிறார்கள்.ஒன்றிற்கு மூன்று தெய்வங்கள் பெண்ணின் அந்தரங்க உறுப்பில் இருந்து கொண்டு எல்லாம் சரியாக பொருந்துகிறதா என்று காவல் காக்கிறார்கள் என்றால், ஒரு பெண் வல்லுறவிற்கு உட்படுத்தம்படும் போது, அதை தடுத்தால் மிகப் பெரிய உபகாரமாக இருக்குமல்லவா? அதற்கும் ஏதாவது மந்திரங்கள் சொன்னால் நன்றாக இருக்குமே!இப்படியான மந்திரங்களை சொல்லி நடக்கின்ற திருமணங்களையே எமது தமிழர்கள் செய்கிறார்கள். இவைகளை விட்டு திருக்குறள் சொல்லி திருமணங்கள் செய்யுங்கள் என்றால், "கடவுள், மதம்" என்று அடம்பிடிக்கிறார்கள்.தமிழினத்தை எப்படி திருத்த முடியும்?திருமண மந்திரங்கள் ஒரு மணமகள் எவ்வளவு தூரம் இழிவுபடுத்தப்படுகிறாள் என்பதை பார்த்தோம். எம்மை ஈன்றெடுத்த தாயையே இந்த மந்திரங்கள் மிக மோசமாக கொச்சைப்படுத்துகின்றன என்பது உங்களுக்கு தெரியுமா?

மணமுடிக்கப் போகின்றவளை ஏற்கனவே பலருக்கு மனைவியாக இருந்தவள் என்றும், அவர்களோடு படுக்கையில் இருந்தவள் என்றும் சொல்லி கொச்சைப்படுத்தும் திருமணங்களை பார்த்தோம்.இனி எம்மை ஈன்றெடுத்த தாயையே கொச்சைப் படுத்துகின்ற இரண்டு மந்திரங்களைப் பார்ப்போம்.மதத்தை தாய் தந்தையுடன் ஒப்பிட்டுப் பேசுகின்ற பலரை நான் கண்டிருக்கிறேன். அவர்களுடைய பார்வையில் மதம் என்பது தாய் தந்தை போன்றது. எப்படி நாம் தாய் தந்தையை மாற்ற மாட்டோமோ, எப்படி நாம் தாய் தந்தை மீது சந்தேகம் கொள்ள மாட்டோமோ அதே போன்று மதத்தை மாற்றவோ, அதன் மீது சந்தேகம் கொள்ளக் கூடாது என்பது அவர்களுடைய வாதம்.மதம் மாறுவது எனக்கும் ஏற்புடையது அன்று. ஒரு குப்பையில் இருந்து இன்னொரு குப்பைக்குள் போவது முட்டாள்தனமானது. மதங்கள் என்ற குப்பைகளை விட்டு வெளியே வந்த நல்ல காற்றை சுவாசிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய கருத்து.ஆனால் மதம் மாறக் கூடாது, மதம் பற்றி கேள்வி எழுப்பக் கூடாது என்று சொல்வதற்காக தாய், தந்தையுடன் மதத்தை ஒப்பிடுவது மிக அபத்தமானது.மதம் குறித்து என்னுடன் வாதிட்ட ஒருவர் "அத்தாட்சிப் பத்திரம் காட்டினால்தான் நீங்கள் உங்களுடைய அப்பா, அம்மாவை நம்புவீர்களா?" என்றெல்லாம் ஆவேசமாக கேள்வியை எழுப்பினார். இன்னொருவர் நான் அப்பாவையே மாற்றி விட்டேன் என்று மறைமுகமாக என்னுடைய தாயை வசைபாடினார். இப்படியானவர்களைப் பார்த்து என்னால் பரிதாபப்படத்தான் முடிகிறது.இவ்வாறான கேள்விகளை மதவெறியுள்ளவர்களும் சிந்தனை வறட்சியுள்ளவர்களுமே கேட்பதால், அவர்களுக்கு உண்மையை புரிய வைப்பதும் மிகக் கடினமானதாகவே இருக்கிறது. ஆனால் இவர்கள் எல்லோரும் நாக்கைப் புடுங்கிக் கொண்டு சாவது போன்று இவர்களுடைய இந்த மதமே "அப்பன் பேர் தெரியாதவன்" என்று இவர்களை சொல்வதுதான் இதில் வேதனையான வேடிக்கை.எம்மவர்கள் சம்பிரதாயம் என்ற பெயரில் செய்கின்ற பல முட்டாள்தனமான விடயங்களில் இறந்தவருக்கு திதி கொடுப்பதும் ஒன்று. என்ன செய்வது? பிறப்பில் தொடங்கி இறப்பு வரை பார்ப்பான் வந்து சமஸ்கிருதத்தில் அசிங்கமாகவும் அருவருப்பாகவும் திட்டிவிட்டுப் போனால்தான் தமிழனுக்கு நிம்மதியாக இருக்கின்றது.இப்பொழுது இறந்தபின் நடக்கின்ற சடங்குகளில் சொல்லப்படும் இரண்டு மந்திரங்களைப் பார்ப்போம். முதலில் இறந்த தந்தைக்கு திவசம் செய்கின்ற போது சொல்லப்படும் ஒரு மந்திரம்

யன்மே மாதா பிரலுலோப சரதி அனனு விருதாதன்மே ரேதஹ பிதா விருங்க்தா ஆபுரண் யோபபத்யதாம் ரங்கராஜ சர்மணே ஸ்வாஹாரங்கராஜ சர்மணே அஸ்மது பித்ரே இதம் நமமகிருஸ்ண 
கிருஸ்ண கிருஸ்ண...

இந்த மத்திரத்தின் அர்த்தம்:என்னுடைய அம்மா பத்தினியாக இல்லாது இருந்து, என்னை வேறு ஒருவருக்கு பெற்றிருந்தால், இந்த திவசத்திற்கு உரிமை கோரி என்னுடைய உண்மையான தகப்பனார் வருவார். அப்படி இல்லாது என்னுடைய அம்மாவின் கணவரே இந்த திவசத்தை பெறட்டும். இதுதான் இந்த மந்திரத்தின் அர்த்தம். அதாவது திதி கொடுப்பவனுடைய தாய் சில வேளைகளில் சோரம் போய் வேறு யாருக்காவது அவனைப் பெற்றிருக்கலாம் என்று இந்த மந்திரம் சொல்கிறது. உன்னுடைய அப்பா வேறு யாராவதாக இருக்கலாம், நீ அப்பன் பேர் தெரியாதவனாக இருக்கலாம் என்று இந்த "புனித" மந்திரம் சொல்கிறது.தந்தைக்கு திவசம் செய்கின்ற போதுதான் இப்படி என்று நினத்து விடாதீர்கள். இந்து மதம் தாய்க்கு செய்கின்ற திவசத்திலும் வஞ்சகம் வைக்கவில்லை. அம்மாவிற்கு திவசம் செய்கின்ற போது சொல்கின்ற ஒரு மந்திரம் இது

என்மே மாதா ப்ரவது லோபசரதிஅன்னவ் வ்ரதோ தன்மே ரேதஹபிதா வ்ருந்த்ததாம் ஆபுரண்யஹாஅவபத்ய நாம....

என்னுடைய அம்மா யாருடன் படுத்த என்னைப் பெற்றாளோ தெரியவில்லை. ஒரு நம்பிக்கையில்தான் அவளை என்னுடைய அப்பாவின் மனைவியாகக் கருதுகின்றேன். அந்த அம்மாவிற்கு இந்த திவசம் போய் சேரட்டும்.உண்மையில் இந்த மந்திரம் அர்த்தம் அற்றது. தாய்க்கு கொடுக்கின்ற திதியில் தந்தை யார் என்ற கேள்வி எழத் தேவையில்லை. தந்தைக்கு திதி கொடுக்கின்ற போதாவது தாய் சோரம் போயிருந்து, அதனால் உண்மையான தந்தை வந்து விட்டால் என்னாவது என்ற கேள்வியோடு அந்த மந்திரத்தை தொடர்புபடுத்தலாம். ஆனால் தாயக்கு கொடுக்கும் திதியிலும் அவள் சோரம் போயிருக்கலாம் என்று சொல்வதற்கு அவசியமே இல்லை. ஆயினும் மந்திரம் அப்படித்தான் சொல்கிறது.

எந்த மதத்தை தாய், தந்தையோடு ஒப்பிட்டு உறுதியாக நம்புகிறீர்களோ, அந்த மதத்தின் சம்பிரதாயங்களே உங்களுடைய அம்மாவை "நம்பத்தகாதவள்" என்கிறது. நடத்தை கெட்டவளாக இருக்கலாம் என்கிறது. நீங்கள் வேறு அப்பனுக்கு பிறந்திருக்கலாம் என்கிறது. சம்பிரதாயம் என்று பிதற்றுபவர்களுக்கும், மதத்தை பெற்றோரோடு ஒப்பிடுபவர்களுக்கும் இதை விட வேறு கேவலம் ஏற்படப் போவதில்லை.இந்த மந்திரங்கள் பற்றிய விவாதம் ஒன்றில் ஒருவர் என்னிடம் சில கேள்விகளை எழுப்பியிருந்தார். "இந்த மந்திரங்களை பார்ப்பனர்கள் தங்கள் வீட்டு நிகழ்வுகளில் சொல்ல மாட்டார்களா? அப்படிச் சொன்னால் தங்கள் வீட்டுப் பெண்களை கேவலப்படுத்துவது போன்று இல்லையா? பார்ப்பனர்கள் என்ன அவ்வளவு முட்டாள்களா?" இவ்வாறான கேள்விகளை அடுக்கினார்.இங்கேதான் நாம் சில விடயங்களை சற்று ஆழமாகப் பார்க்க வேண்டும். இந்த மந்திரங்களில் ஒரு விடயத்தை கவனித்திருப்பீர்கள். திருமண மந்திரங்கள் மணமகனை கொச்சைப்படுத்தவில்லை. மணமகளைத்தான் கொச்சைப்படுத்துகின்றன. ஈமச் சடங்கின் மந்திரங்கள் தந்தையை கொச்சைப்படுத்தவில்லை. தாயைத்தான் கொச்சைப்படுத்துகின்றன.இப்படி மந்திரங்கள் பெண்களைத்தான் கொச்சைப்படுத்துகின்றன. இது ஏன்? இந்து மதத்திற்கு பெண்ணின் மேல் அப்படி என்ன வெறுப்பு?

நன்றி - http://kuttippaiyan.blogspot.no/

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்