/* up Facebook

Oct 14, 2017

கௌரி லங்கேஷ் படுகொலை குறித்து குங்குமம் தோழி இதழில்...


அறிவியலுக்குப் புறம்பான நம்பிக்கைகளை உடைக்கும் பகுத்தறிவு சிந்தனையாளர்களை மத அடிப்படைவாத சமூகம் எப்படி எதிர்கொண்டதை என்பதை வரலாறாக நாம் படித்திருக்கிறோம். மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பு மேற்குலகைச் சேர்ந்த பகுத்தறிவாளர்கள், மத அடிப்படைவாதிகளால் மூர்க்கமாக வேட்டையாடப்பட்டார்கள். ரத்தக்கறை படிந்த அந்த வரலாற்றை நமக்கு மீண்டும் நினைவுபடுத்துகின்றன, நம் அருகாமை மாநிலங்களில் அடுத்தடுத்து அரங்கேறும் படுகொலைகள்.

கடந்த நான்காண்டுகளில் நடந்த பகுத்தறிவாளர்களும் சமூக செயல்பாட்டாளர்களுமான பன்சாரே, தபோல்கர், கல்புர்கி ஆகியோரின் படுகொலைகள் சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தின. அந்த அதிர்வு அடங்காத நிலையில், பத்திரிகையாளரும் அடிப்படைவாத இந்துத்துவ கருத்துக்களை எதிர்த்தவருமான கௌரி லங்கேஷ் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தப் படுகொலைகள் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகுதான் நடத்தப்படுகின்றன என்கிற கருத்து இருக்கிறது. பாஜக ஆட்சிக்கு வந்தபிறகு, அதன் அஜெண்டாவான் ‘இந்துராஷ்டிரம்’ கோருகிற துண்டு துக்கடா அமைப்புகள் அனைத்தும் மிகத் தீவிரமாகவும், சுதந்திரமாகவும் செயல்பட ஆரம்பித்துள்ளன என்பதை தினந்தோறும் பார்க்கிறோம். ஆனால், சனாதானத்தைத் தூக்கிப் பிடிக்கிற அமைப்புகள் எல்லா ஆட்சிகளின்போதும் பெரும்பான்மை மக்களின் மத அடையாளத்துக்குள் ஒளிந்துகொண்டு தங்களை வளர்த்துக்கொண்டனர். அவர்கள் மத அடிப்படைவாதத்தை பரப்ப சடங்குகள்-யாகங்கள்-பாரம்பரியத்தை மீட்டெடுத்தல் போன்றவற்றை தூக்கிப் பிடித்து பிரச்சாரத்தை மேற்கொண்டார்கள். இந்தப் பிரச்சாரத்துக்கு எதிர் பிரச்சாரம் செய்ய கிளம்பிய பகுத்தறிவாளர்கள்தாம் படுகொலை செய்யப்பட்ட பன்சாரே, தபோல்கர், கல்புர்கி, கௌரி லங்கேஷ் ஆகியோர்.

2008-ஆம் ஆண்டு கர்நாடகத்தில் பாஜக ஆட்சியமைக்க முனைந்த போதும், ஆட்சியமைத்த பிறகும் பாஜக-சங்பரிவார் அமைப்புகளின் அடிப்படைவாத செயல்களை நுணுக்கமாக கண்டுணர்ந்து எழுதிவந்தவர் கௌரி லங்கேஷ். கர்நாடகம், தென்னகத்தின் குஜராத்தாக மாறிக்கொண்டிருப்பதாக அவர் அப்போதே எழுதினார். கர்நாடகம், மகாராஷ்டிர மாநிலங்கள் அடிப்படைவாத செயல்பாடுகளுக்கு பெயர் பெற்றவை. அடிப்படைவாத செயல்கள் மூலம் பெரும்பான்மை சமூகத்தின் உணர்வுகளைத் தூண்டி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய அவர்கள், தங்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக கருதுவது, தங்களுடைய பேனா முனையால் போரிட்டுக்கொண்டிருக்கும் இந்த எளிய மனிதர்களைத்தான். இவர்களை பட்டியல் போட்டு, படுகொலை செய்கிறார்கள். ‘நாங்கள் அடுத்து இவர்களைத்தான் படுகொலை செய்யப்போகிறோம்’ என அடிப்படைவாதிகள் வெளிப்படையாக அறிவிக்கிறார்கள். எதிர் அரசியல் பேசினாலும் ஆட்சியாளர்களால் இவர்களை நெருங்கக்கூட முடிவதில்லை.

பொது சமூகமாக இந்தப் படுகொலைகளைப் பார்த்துக்கொண்டிருக்கும் நாம் என்ன செய்ய வேண்டும்? பொது சமூகத்தின் நல்லிணக்கத்துக்காகவும் மூடக்கருத்துகளை எதிர்த்தும் நம்மில் ஒருவராக வாழும் கௌரி லிங்கேஷ் போன்றோரை பாதுகாப்பது எப்படி? சமூகத்தின் மனசாட்சியாக விளங்கும் இவர்களை நாம் கைவிடக்கூடாது இல்லையா? சாதியின் பேரால், மதத்தின் பேரால் நம்மை பிரித்தாள நினைக்கும் சக்திகளை நாம் ஒருபோதும் ஆதரித்துவிடக்கூடாது. அதைத்தான் நாம் முதன்மையாக செய்ய வேண்டும். தமிழகம், பகுத்தறிவாளர்களின் பிறப்பிடம். இங்கே அடிப்படைவாதம் தன்னுடைய வேலையைக் காட்ட பெரும்பாடுபடுகிறது. ஆனால், அடிப்படைவாதிகள் நெருங்கிவிட்டார்கள்! அவர்கள் வளர்ச்சியின் பேரால் நம்மை ஒருங்கிணைப்பார்கள், ஊழல் எதிர்ப்பு பேசுகிறோம் என்பார்கள். ஒருபோதும் அவர்கள் சொல்லும் வாக்குறுதிகளை நம்பிவிடாதீர்கள். அனைத்தும் பொய்யின் மேல் கட்டப்பட்ட போலி பிம்பங்கள். இந்த போலிகளை நம்பி இறங்கினால், நம்மின் மனசாட்சிகளாக வளம் வரும் கௌரியையோ கல்புர்கியையோ இங்கேயும் பலிகொடுக்க வேண்டியிருக்கும். மனசாட்சியில்லாத சமூகம் காட்டுமிராண்டித்தனமாக மாறிவிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அங்கே அமைதியும் வளர்ச்சியும் இருக்காது...வெறித்தனம் மட்டுமே இருக்கும்!

நன்றி: கி.ச. திலீபன், குங்குமம் தோழி டீம்...
...மேலும்

Oct 10, 2017

தமிழீழ ஒறுப்புச் சட்டமும், பெண்களின் உரிமைகளும் - என்.சரவணன்


இக்கட்டுரையை 1996 - ஏப்ரல் 20 இல் வெளியான சரிநிகர் பத்திரிகையில் எழுதியிருந்தேன். அப்போது தமிழீழம் என்கிற ஒரு அரசாங்கம் இயங்கிக் கொண்டிருந்த காலம். விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழீழ குற்றவியல் சட்டத்தில் (Penal code of tamil ealam) பெண்களின் நிலை பற்றியது இந்தக் கட்டுரை. இக்கட்டுரையில் தான் தமிழ்ச் சூழலுக்கு முதல் தடவையாக “கற்பழிப்பு” என்கிற பதத்துக்கு மாற்றுப் பதமாக “பாலியல் வல்லுறவு” என்கிற சொல்லை அவர்கள் அறிமுகப்படுத்தினார்கள். அச்சொல்லை முதலில் புழக்கத்துக்கு கொண்டுவந்ததும் சரிநிகர் பத்திரிகை தான். தற்போது பெண்கள் தொடர்பான சில சட்டங்கள் விவாதத்துக்கு வந்துள்ள நிலையில் காலப்பொருத்தம் கருதி மீளவும் இங்கே
-என்.சரவணன் 
இன்று தென்னிலங்கையில் எவர் விரும்புகிற அல்லது விரும்பாத போதும் ''தமிழீழம்"" என்கின்ற அரசாங்கம் ஒன்று இயங்கி வருவதை நாம் அறிகிறோம். அந்த அரசாங்கம் அரசொன்றைக் (State) கொண்டிராத போதும் அரசாங்கம் ஒன்று அங்கு இயங்கிக் கொண்டிருப்பதை எவரும் மறுக்க மாட்டார்கள்.

அந்த வகையில் வடக்கில் எழுதப்படாத அரசியலமைப்பொன்று நடைமுறையில் இருக்கத் தான் செய்கிறது. அந்த எடுகோளிலிருந்து வடக்கில் அமுலாக்கப்பட்டிருக்கிற சட்டங்களை அலசிப்பார்ப்பது அவசியமானதொன்றே. அந்த வகையில் ''தமிழீழ ஒறுப்புச் சட்டம்"" (Penal Code of Tamil Ealam - PCTE) ('தண்டனை' இங்கு ''ஒறுப்பு"' என அழைக்கப்படுகிறது.) முக்கியமான ஒன்று.

அச்சட்டத்தில் பெண்களது உரிமை பேணப்பட்டிருக்கிறதா? என்பதை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கம். அதில் பெண்களுக்கான உரிமை பாதுகாக்கப்படக்கூடிய வகையில் சட்டம் ஆக்கப் பட்டிருக்கும் என்ற நம்பிக்கை கூட இருக்கிறதா? என்ற வினாவை ஒரு சிலர் எழுப்பக்கூடும். ஆனால் விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனது பொன்மொழிகள் என சொல்லப்படுப வையோடு இது எத்தனை தூரம் பொருந்துகிறது என்கின்ற கேள்வியை எழுப்பிக் கொண்டு இது பற்றிய விமர்சனங்களை முன்வைக்கலாம் என்று தோன்றுகிறது. வே.பிரபாகரன் சொன்னதை இங்கு நோக்குவோம்.

'பெண்கள் சம உரிமை பெற்று சகல அடக்குமுறையில் இருந்தும் விடுதலை பெற்று ஆண்களுடன் கௌரவமாக வாழக்கூடிய புரட்சிகர சமுதாயமாகத் தமிழீழம் அமைய வேண்டும் என்பதே எனது ஆவல் -தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன்" (ஆதாரம்:- நாற்று-2வது இதழ்-மாறன் பதிப்பகம், பக்கம்-6, தமிழீழ பெண்கள் ஆய்வு நிலையம்)

''ஆணாதிக்க ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் என்பது ஆண்களு க்கு எதிரான போராட்டம் அல்ல. இது ஆணாதிக்க அறியாமைக்கு எதிரான கருத்துப் போராட்டமாகும்." (அதே நூல்-பக்கம்-31)

''பெண் விடுதலை என்பது அரச ஒடுக்குமுறையில் இருந்தும் சமூக ஒடுக்கு முறையிலிருந்தும் பொருளா தாரச் சுரண்டல் முறையிலிருந்தும் விடுதலை பெறுவதேயாகும்." (அதே நூல்- பக்கம்-35)

நடைமுறையில் உலகமெங்கும் சகல ஆட்சி நிர்வாக துறைகளிலும் ஆண்களது செல்வாககும் மேலாதிக்க முமே நிறைந்து காணப்படுவதை எவரும் அறிவர். சட்டமியற்றுதல், அதனை பிரயோகித்தல், என்பனவற்றைக் கூட ஆண்களே மேற்கொள்கின்றனர். எனவே ஆண்நிலைப்பட்ட ஆணாதிக்க தீர்மாணங்களும், முடிவுக ளுமே பொதுவாக பெண்கள்மேல் திணிக்கப்படுகிறது. எனவே பெண்கள் தொடர்பான மரபு ரீதியான கருத்தியல் சிந்தனையிலிருந்து வெளிவரும் சட்டங்களினால் பெண்கள் பல்வேறு முறைகளில் பாதிப்புக்குள்ளாகி வருவது சர்வசாதாரண நிகழ்வாகியு ள்ளது. அந்த எடுகோளுடன் பார்த்தால் 'தமிழீழ ஒறுப்புச் சட்டம்" கூட இவ்விடயத்தில் விதிவிலக்கல்ல. இனி ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.


தண்டனை
தண்டனைக்குரிய பதமாக தமிழீழ ஒறுப்புச் சட்டத்தில் "ஒறுப்பு" எனும் பதம் பிரயோகிக்கப்படுகிறது. இந்த தண்டனை விடயத்தில் எவருக்கெல் லாம் தண்டனை விதிக்கப்படல் வேண்டும் எனும் வறையறைக்குள் கீழ்வருமாறு கூறப்பட்டுள்ளது.

''குற்றவாளியாகக் காணப்படும் காலத்தில் கருவுற்றிருக்கும் பெண்ணுக்கு எதிராக மரண தண்டணை விதிக்க ப்படலோ, பதியப்படலோ ஆகாது. ஆனால் அதற்கு மாறாக கடுஞ்சிறை யொறுப்போ எளிய சிறையொறுப்போ வழங்கலாம்" (பார்க்க-PCTE-சரத்து-47)

கருவுற்றிருக்கும் காலத்தில் பெண்ணுக்கு மரண தண்டனை விதிக்கக்கூடாது என சொல்லப்பட்டது சரி. ஆனால் கருவுற்றிருக்கிற பெண்ணுக்கு கடுஞ்சிறையொறுப்பு வழங்கலாம் என்ற விடயம் பாரதூரமானது. "கடுஞ்சிறையொறுப்பு" என்பதன் அர்த்தம் கடுமையான உடல் உழைப்போடு கூடிய தண்டனை என்பது குறிப்பிடத்தக்கது. (பார்க்க-PCTE-சரத்து-45.ஆ(1)).

ஏற்கனவே கருவளச் சுமை பெண்ணிடம் சுமத்தப்பட்டுள்ள நிலையில் "கடும் உடலுழைப்பு" என்பது மிகவும் மோசகர மான தண்டனையாகவே கொள்ள முடியும்.

அது தவிர அந்த குறிப்பிட்ட பெண்ணுக்கு மாத்திரமல்லாது கருவுற்றிருக்கும் அப்பெண்ணின் கருவளத்திற்கும் ஏற்படுத்தும் உடல், உள ரீதியிலான தண்டனையாகவே இதனைக் கொள்ள முடியும்.

எனவே, செய்த குற்றத்திற்கான தண்டனையாக எளிய சிறையொறுப்பு போதுமானதெனலாம் அதிலும் கருவுற் றிருக்கிற நிலையில் சிறைக்குள் அவளது செயற்பாடுகளுக்கான சுதந்திரம் வழங்கப்பட்டிருத்தல் வேண்டும்.


கருக்கலைப்பு

கருக்கலைப்பு சுதந்திரமென்பது ஒவ்வொரு பெண்ணினதும் அடிப்படை உரிமையாதல் வேண்டும்.

ஒறுப்புச் சட்டத்திலும் இது விடயத்தில் பிழையான அணுகு முறைகளையே காணக்கூடியதாக இருக்கிறது. உதாரணமாக:

உயிரைக் காப்பாற்றும் நோக்குடன் மட்டுமே கருக்கலைப்பு செய்யலாம் அல்லாது போனால் 3 ஆண்டுகள் வரை நீடிக்கக்கூடிய எவ்வகை சிறையொறுப்பும் வழங்கலாம். அப்பெண் உயிர்ப்புடன் துடிக்கும் கருவினை உடையவராக இருந்தால் ஏழு ஆண்டு சிறைத் தண்டனையுடன் குற்றக் காசிறுப்புக்கும் ஆளாதல் வேண்டும் என சொல்லப்பட் டுள்ளது. (PCTE -சரத்து-215)

சகல பெண்களும் விரும்பித்தான் கருவுறுகின்றனர் என்று கொள்ளவும் முடியாது. பாலியல் வல்லுறவுக்கூடாகவும், அவள் கருவைத் தாங்க நேரிடக்கூடும்;. (அது குடும்பத்தில் கனவனால் மேற்கொள்ளப்படும் பாலியல் வல்லுறவாகவும் இருக்கலாம்.) உற்ற கருவை கலைக்க முடியாமலும் போயிருக்கலாம். பாலியல் வல்லுறவு, அடிப்படையாக அமைந்தால் கருக்க லைப்பு செய்வதில் தவறில்லை என அதே சரத்தில் "புறநடை விலக்கு" எனும் பகுதியில் கூறப்பட்டிருக்கிறது. என்ற போதும் 'புறநடை விலக்கு" (2) இல் கருக்கலைப்பு செய்வதானால் ஆணினதும் 'இசைவு" தேவை என கூறப்பட்டுள்ளது.

கருவை சுமக்கும் பெண்ணிடம்தான் கருவை சுமக்கும் சம்மதம் பற்றிக் கேட்டறிய வேண்டுமேயொழிய கனவ னது இசைவை அங்கு வலியுறுத்துவது பாரதூரமானது. பெண் விரும்பாத போதும் ஆணின் நிர்ப்பந்தத்தால் இப்படி நடப்பதுவுமுண்டு. அதாவது கருவை சுமப்பவள், தான் விரும்பாத போதும் ஆணின் கட்டாய ஆணையின் பேரில் அதனை சுமக்க வேண்டும் என இதன் மூலம் மறைமுகமாக நிர்ப்பந்திக் கப்படுகிறது. அது மட்டுமன்றி ஆணாதி க்க திணிப்புச் சூழலும் பெண்ணடிமை கருத்தியற் சமூக அமைப்பும் இன்று "பாலியல் வல்லுறவு" என்பதை புறநிலையிலேயே கொள்கிறது. மனைவி விரும்பாத போதும் கனவனால் கட்டாய பாலியல் உறவுக்கு உள்ளாகும் வழமையான இயல்பு நிலையை பாலியல் வல்லுறவாக கொள்ளும் நிலை பல நாட்டு சட்டங்களில் இல்லை. எனவே இப்படியான சூழ்நிலையில் கருவை சுமத்தல் அல்லது கலைத்தல் தொடர்பான உரிமைகளை பெண்ணி டமே விட்டுவிட வேண்டும்.

கருக்கலைப்பு விடயத்தில் சில வேளை புலிகள் இயக்கத்தினர் தங்களது போர்க்கால மனித வள திரட்டலுக்கான (நீண்ட கால நோக் கைக் கொண்ட) - தந்திரோபாயமாக இதனைக் கொண்டிருக்கக் கூடும். என்ற போதும் போராட்டத்திற்கான பயன்படு த்தலுக்கு மாத்திரம் பெண்களைப் பயன்படுத்திக் கொண்டு அவர்களது உரிமைகளுக்கு எதிராக நடந்து கொள்கிறார்கள் என்ற அபிப்பிராயம் பரவுவதற்கும் இது வழிவகுக்கிறது.


மறுமணம்

"மறுமணம்" விடயத்தில் அது இப்படிக் கூறுகிறது. ''துணைவனோ, துணைவியோ உயிருடன் இருக்கும் போது அல்லது விவாகரத்து நடவாதிருக்கும் போது அவர்களில் எவரும் மறுமணம் செய்யக்கூடாதெ ன்றும் செய்தால் ஏழு ஆண்டுகள் வரை சிறைதண்டனை வழங்க வேண்டும். (PCTE-சரத்து 273) எனக் கூறப்பட்டிருக்கிற போதும் அதன் 'புறநடை" பகுதியில் திருமணமான எவரும் துணைவியைப் பற்றியோ துணைவ னைப் பற்றியோ தகவல் எதுவுமில்லா மலிருப்பின் 5 வருடங்கள் காத்திருத்தல் வேண்டுமென நிர்ப்பந்திக்கிறது.

திருமணமான எவரும் துணைவி யைப் பற்றியோ துணைவனைப் பற்றி யோ தகவல் எதுவுமில்லாமலிருப்பின் 5 வருடங்கள் காத்திருத்தல் வேண்டு மென நிர்ப்பந்திக்கிறது.

திருமண கட்டமைப்பு என்பதே அது ஆண், பெண் ஆகிய இரு சாராரினதும் சகல சுதந்திரங்களையும் கட்டுப்ப டுத்தும் நிறுவனம் என்பது அறிந்ததே. பெரும்பாலும் திருமண கட்டமைப்பி னால் ஆணைவிட பெண், அதிக பாதிப் புக்குள்ளாகிறாள் என்பது இன்னொரு விடயம். இந்நிலையில் மேலே குறிப்பிட் டுள்ள 'காத்திருக்கும் வரையறை" என்பது அத்தியாவசியமானதென கருதமுடியாது.


பாலியல் வல்லுறவு

பாலியல் வல்லுறவு குறித்து பல விடயங்களை நல்ல முறையில் அணுகியிருக்கிற போதும் ஆங்காங்கு சில பலவீனங்களைக் காண முடிகிறது.

"பாலியல் வல்லுறவு குற்றம்" புரிந்த ஒருவருக்கு மரண தண்டனையோ அல்லது 14 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையுடன் கூடிய குற்றக்கா சிறுப்போ விதிக்கப்படுமென கூறுகிறது. (PCTE -சரத்து-279-(அ)) குற்றம் புரிந்தவர் 24 வயதையடையாதவராக இருப்பின் தண்டனையைக் குறைக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது, என்ற போதும் 'பாலியல் வல்லுறவு" பற்றிய குற்ற வழக்கானது, அத்தவறு இழைக்கப்பட்டதிலிருந்து 3 மாதங்களுக்குப் பின் தொடரப்படலாகாது எனக் கூறப்பட்டு ள்ளது. (PCTE -சரத்து-283-(4)) சில நிர்ப்பந்தங்கள் காரணமாகவோ அல்லது வேறு காரணங்களாலோ முதல் மூன்று மாதங்களுக்குள் வழக்கு தொடர முடியாமல் போனவர்களுக்கு நீதித்துறை நீதி வழங்க முடியாது என கூறுவது சரியான ஒன்றல்ல.

இச்சட்டத்தில் "பாலியல் வல்லுறவு", "பாலியல் வன்முறை" இரண்டுக்கும் வெவ்வேறு அர்த்தங்கள் காட்டப்பட்டி ருக்கிறது. அந்த வரையறை இதுவரை வேறு யாரும் செய்யாத ஒன்று என்ற ரீதியில் தமிழீழ ஒறுப்புச் சட்டத்திற்கு பெருமையுண்டு. உதாரணத்திற்கு,

''ஆண் குறியை சிறிதளவு பெண்குறியினுள் நுழைத்தாலும் "பாலியல் வல்லுறவு"' நடைபெற்றதாகக் கொள்ளப்படும்" என்றிருக்கிறது.

''பெண்ணின் விருப்பத்திற்கு மாறாக அவளது பாலியல் உறுப்புக்களில் பாலியல் உணர்வுடன் அல்லது அவரை இழிவு படுத்தும் நோக்குடன் தீண்டுவது "பாலியல் வன்முறை"த் தவறாகும்" என்றும் கூறப்பட்டுள்ளது.

என்றாலும் இது தொடர்பாக ஒறுப்புச் சட்டத்திலுள்ள பலவீனமென்ன வென்றால் மேற்படி வரையறையிலிருந்து "பாலியல் வல்லுறவு" மற்றும் பாலியல் வன்முறை" ஆகியன ஆணொ ருவன் ஆண் மீது அல்லது பெண் பெண் மீது பிரயோகிக்கப்படும் 'பாலியல் வல்லுறவு"களையும் பாலியல் வன்முறைகளையும் கண்டும் காணாது விடுவதா என்ற கேள்வி எழுகின்றது. மேலும் இன்று குடும்பங்களில் கணவ னால் மேற்கொள்ளப்படுகின்ற பலாத்கார பாலியல் உறவுகளையும் இங்கு கவனத்தில் எடுக்க வேண்டியது அவசியம். சமூக யதார்த்த நிலையில் பெண், ஆண்மீது பாலியல் பலாத்காரம் பண்ணுமளவு நிலைமை இல்லை என்பதை நாமறிவோம். சில வேளை இது மிக அபூர்வமாகவே இடம் பெறும். ஆனால் ஆண், ஆண் மீது இக்குற்ற த்தை இழைப்பது இன்று சாதாரணமாகி வருவதை நடைமுறையில் அறிய முடிகிறது.

இதை விட "பாலியல் வல்லுறவு" (Rape) மற்றும் "பாலியல் வன்முறை" (Secual Violation) என்பதைப் போலவே 'பாலியல் தொந்தரவுகள்" (Sexual Disturbances) என்ற ஒன்றை வேறுபடுத்தி பார்க்க வேண்டிய அவசியமும் உள்ளது. குறிப்பாக பாலியல் வக்கிர நோக்கில் தீண்டுவது, இழி சொற்களைப் பயன்படுத்துவது, மற்றும் தொடர்பு சாதனங்கள், கலை வடிவங்களுக்கூடாக பாலியல் ரீதியிலான இழிவுகளைப் பிரதிபலிக்கச் செய்தல். அசிங்கப்படுத்திக் காட்டுதல் என்பவற்றை வேறு படுத்தி இனங்காண வேண்டியதும் அவசியமானதாகும். இவ்வகையில் பாலியல் துஷ்பிரயோக நடவடிக்கைகளை வேறுபடுத்தி இனங்காண்பது நீண்ட நோக்கில் நன்மைகள் பயக்கும். குறிப்பாக இது தொடர்பான தண்டனையளித்தலின் போதும் வேறுபடுத்தி பரிசீலிப்பதற்கு இது மிகவும் துணைபுரியும். எதிர்காலத்தில் இப்பாகுபடுத்தல் மேலும் விரிவடையலாம்.

இச்சட்டத்திலேயே முதற் தடவை யாக "பாலியல் வல்லுறவு" எனும் பதம் தமிழில் பாவிக்கப்பட்டுள்ளது. ஆரம்ப த்தில் தமிழில் 'கற்பழிப்பு" எனும் பதம் பயன்படுத்தப்பட்டபோது பெண்களுக்கு மட்டுமே கற்பின் தத்துவத்தை வலியுறு த்துவதாக அப்பதம் அமைந்திருந்ததாலும் பொருத்தமில்லாத சொல்லாக இருந்ததாலும் புதிய மாற்றுப் பதம் ஆக்கப்பட வேண்டியதன் அவசியம் தொடர்பாக பெண்ணிலைவாதிகளால் கருத்தாடப்பட்டதைத் தொடர்ந்து "பாலியல் பலாத்காரம்" மற்றும் "பாலியல் வன்முறை" ஆகிய பதங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இப்பதத்தை அறிமுகம் செய்ததில் "சரிநிகர்" பத்திரிகைக்கு மிகுந்த பங்குண்டு. ஆனாலும் 'பாலியல் பலாத்காரம்" மற்றும் "பாலியல் வன்முறை" ஆகிய பதங்களில் "பாலியலுறவு" என்பது உள்ளடக்கப்படவில்லை என பல பெண்ணிலைவாதிகளால் பேசப்பட்டது. இந்நிலையில் தமிழீழ ஒறுப்புச்சட்டம் அறிமுகப்படுத்தியிருக்கிற "பாலியல் வல்லுறவு" எனும் பதத்தில் பாலியல் (Sexual) + வன்மை (violence) + உறவு (intercource) ஆகிய மூன்று விடயமும் உள்ளார்ந்திருப்பதால் இப்பதமே பொருத்தமானது என்பதைப் பலர் ஏற்றுக் கொள்கின்றனர். சில வேளைகளில் இதை விட நல்ல பதம் எதிர் காலத்தில் கண்டுபிடிக்கப்படலாம்.


இயற்கைக்கு முரணான பாலியல் உறவு

எவரேனும் ஆணுடன் அல்லது பெண்ணுடன் அல்லது ஏதேனும் விலங்குடன் இயற்கை இயல்புகளுக்கு முரணாக உடலுறவு கொள்ளும் எவரும் 10 ஆண்டுகள் வரை இருவகையிலொருவகை சிறைத் தண்டனையுடன் குற்றக்காசிறுப்புக்ளும் உள்ளாதல் வேண்டும் என கூறுகிறது. (PCTE -சரத்து-(286))

இதில் 'இயற்கை இயல்புக்கு முரண்" என எதனை வறையறுத்திருக்கின்றனர் என்பதை குறிப்பிடாதது குழப்பத்தை ஏற்படுத்துகிறது.

இன்று பெண்களது விடுதலைக்கு தடையாக இருக்கும் முக்கிய ஒரு பிரச்சினையாக பாலியல் சுரண்டல் பாலியல் உறவுக் கட்டுப்பாடு என்பன காணப்படுகிறது. இந்நிலையில் மேற்குலக நாடுகளில் பெண்களின் பாலியல் தேவை பாலியல் சுரண்டலிலிருந்து விடுதலையடைதல் என்பன அங்கு புதிதாக விஞ்ஞான ரீதியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள செயற்கை பாலியல் புணர்வு முறைகள் அறிமுகமானதிலிருந்து சில வளர்ச்சிகளையும் ஏற்படுத்தியிருக்கிறது. மரபு ரீதியிலான கருத்தியல் கட்டுப்பாடு நிலவும் நாடுகளுக்கு இவை வழக்கத்துக்கு வர சில காலமெடுக்கக் கூடும். எனவே இயற்கைக்கு மாறாக உறவு கொள்தல் கூடாது என கூறுவது பெண்களது மட்டுமல்ல ஆண்களி னதும் சுதந்திர இயல்புகளினதும் மீதான மோசகரமான கட்டுப்பாட்டு திணிப்பாகும்.

பரத்தமை

'பரத்தமை" (பாலியல் தொழில்) பற்றி இன்னமும் நமது சமூகத்தில் நிலைபெற்றிருக்கிற கருத்தியல் காரணமாக பரத்தமையை குற்றத்திற்குரிய ஒன்றாகவே காண்கிறதே ஒழிய அதற்கான ஒட்டு மொத்தமான சமூக நிர்ப்பந்தத்தை இனங் காண்பதில் தவறிழைத்தே வருகிறது.


பரத்தமையில் ஒரு பெண் ஈடுபடுவதற்குக் காரணமாக பெண்ணின் பாலியல் மேலுணர்வை கொள்ள முடியாது. அதற்கான சமூகச் சூழலே பரத்தமை நிலையினை அடையக் காரணமாக இருக்கிறது. எனவே, அந்தச் சூழல் மாற்றியக்கப்படாதவரை இவற்றிற்கான தீர்வுமில்லை.

''காசு நோக்கத்திற்காக ஒரு பாலார் மறுபாலாருடன் உடலுறவு கொள்ளுதல் 'பரத்தமை" தவறாகும். இத்தவறுக்கு நான்கு ஆண்டுகள் வரை நீடிக்கக்கூடிய இருவகையிலொருவகை சிறையொறுப்பு வழங்கப் படுதல் வேண்டும்." (PCTE -சரத்து (481),(420))

பரத்தமை விடயத்தில் எப்போதும் பெண்ணே தண்டிக்கப்பட்டு வரும் இயல்பை நாம் காணலாம்.

''பணம் கொடுத்து பாலியல் புணர்ச்சிக்கு அழைப்பதற்கு ஆண்கள் தயாராக இருக்கும் போது பெண் மட்டும் ஏன் தண்டிக்கப்படுகிறாள்?" என வினவுகிறார் பெண்ணிலைவாதிகளில் ஒருவரான சுனிலா அபேசேகர.

இக்கேள்வியின் நியாயத்தன்மை சரியானதே. லஞ்சக் குற்றச்சாட்டின் போதெல்லாம் லஞ்சம் வாங்கியவரை மட்டுமல்லாது லஞ்சம் வழங்கிய வரையும் தண்டிக்கும் இந்த சட்டங்கள் பரத்தமை விடயத்தில் மாத்திரம் பரத்தமையை தூண்டும் ஆண்களைத் தப்ப விட்டுவிட்டு பெண்களை மட்டும் தண்டிப்பது மிக மோசமான நடைமுறை.

மேலும் 'விபச்சாரி" அல்லது 'வேசி" என்று இறுதியில்தூற்றப்படும் செய்கை கூட பெண்களுக்கு எதிராக மாத்திரமே பாவிக்கப்படுகிறது. இவ்வகையான பதப் பிரயோகம் கூட ஆண் மேலாதிக்க த்தை வெளிப்படுத்தும் பதப் பிரயோ கமே. அப்பதங்களை பெண்கள் மீது மட்டுமே பிரயோகிக்க ஆணாதிக்கம் முயல்கிறது.

ஆண்கள் பல பெண்களுடன் பாலியலுறவில் ஈடுபட்டால் அவனை ''விபச்சாரன்" அல்லது ''பரத்தன்" போன்ற பதங்களைப் பாவிப்பதற்கான தமிழ்ச் சொல் வழக்காடல் இன்னமும் இல்லை. பெண்ணே தொடர்ந்தும் அவதூறுக்கும், அவமானத்துக்கும் உள்ளாகிறாள்.

இப்படி ''தமிழீழ ஒறுப்புச் சட்டம்" தயாரிக்கப்படும் போது பெண்கள் தொடர்பான விடயங்களில் பிற்போக்கான பார்வையைக் கொண்டிருப்பதாகவோ, ஆழமான தூரநோக்குடையதாகக் இருப்பதாகவோ கொள்ளமுடியாது.

ஒறுப்புச் சட்டத்தில் இதுவரை காணாத பல புதிய நல்ல கருத்துக்களுடன் கூடிய சட்டமியற்றல் நடைபெற்றிருக்கிற போதும் சிற்சில பலவீனங்களை உள்ளடக்கியிருப்பதை உணராது விட முடியாது. அதிலுள்ள "பெண்கள்" பற்றிய சிறு மதிப்பீடு மட்டுமே இதில் அடங்கியிருக்கிறது.

முழுமையாக அவை விமர்சனத்துக்கும் திருத்தங்களுக்கும் உள்ளாக வேண்டியதன் அவசியத்தை சம்பந்தப்பட்டவர்கள் உணர்வார்களாயின் ஆரோக்கியமான நகர்வுக்கு அவை சிறிதளவாவது வழி சமைக்கும்.

(1996 - ஏப்ரல் 20 சரிநிகர்)


...மேலும்

Oct 1, 2017

வித்தியாவிற்குக் கிடைத்த நீதியும், இசைப்பிரியாவிற்குக் கிடைக்காத நீதியும் - நிலாந்தன்


வித்தியாவிற்குக் கிடைத்த நீதி பரவலாக வரவேற்பைப் பெற்றிருக்கிறது. 29 மாதங்களின் பின் வழங்கப்பட்ட தீர்ப்பின் மீது மேன்முறையீடு செய்யப் போவதாகக் குற்றவாளிகளின் சட்டத்தரணிகள் கூறியிருக்கிறார்கள். ஆயுத மோதல்கள் முடிவிற்கு வந்தபின்னரான ஒரு காலச்சூழலில் குறிப்பாக ஐ.நாவின் வார்த்தைகளில் சொன்னால் நிலைமாறுகால நீதிச் சூழலில் இலங்கைத்தீவின் நீதிபரிபாலனக் கட்டமைப்பை சாதாரண தமிழ்ப் பொதுமக்கள் பாராட்டும் விதத்தில் தீர்ப்பு அமைந்திருக்கிறது. தமிழ் ஊடகங்களிலும், இணையப்பரப்பிலும் இத்தீர்ப்பு சிலாகித்து எழுதப்படுகிறது. வித்தியாவின் தாய்க்கு வழங்கிய வாக்குறுதியை அரசுத்தலைவர் ஒப்பீட்டளவில் குறுகிய காலத்துள் நிறைவேற்றியிருப்பதாக பாராட்டும் கிடைத்திருக்கிறது.

சில வாரங்களுக்கு முன் ஐந்து நாள் விஜயமாக இலங்கைக்கு வந்த ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் பென் எமேர்சன் அப்போதிருந்த நீதியமைச்சரைச் சந்தித்த போது கடுமையாக முரண்பட்டிருந்தார். சந்திப்பை இடைநடுவில் முறித்துக்கொண்டு வெளியேறினார். அதன் பின் அவர் வெளியிட்ட அறிக்கையில் சட்டமா அதிபரைப் பின்வருமாறு கடுமையாக விமர்சித்திருந்தார். “நீதித்துறையின் கரங்களை சட்டமா அதிபர் கட்டி வைத்திருக்கிறார். இது ஜனநாயக நீதித்துறையின் அடிப்படைத் தத்துவம் மற்றும் சட்டத்தின் ஆட்சிக்கு முற்றிலும் முரணானது. எந்தவொரு பிணை மனுவையும் நிராகரிக்கும் அதிகாரம் பெற்றவராக சட்டமா அதிபர் இருக்கிறார். இந்த நடைமுறை இன்னமும் சிறிலங்காவில் உள்ளது.”இவ்வாறான அனைத்துலக மட்டத்திலான விமர்சனங்களின் பின்னணியிலேயே மேற்படித் தீர்ப்பு வந்திருக்கிறது.

2015ம் ஆண்டு ஜெனீவாத் தீர்மானத்தின் போது அரசாங்கம் 25 பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டது. அவை யாவும் இலங்கைத் தீவில் நிலைமாறுகால நீதியை ஸ்தாபிப்பதற்கு அவசியமானவை என்று கருதப்படுகிறது. அவற்றுள் ஒரு பொறுப்பு “சட்ட ஆட்சியை நிலை நிறுத்தல் மற்றும் நீதி முறைகளில் நம்பிக்கையைக் கட்டி எழுப்புதல” என்று கூறுகின்றது. மேற்படி வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு அரசாங்கத்திற்கு மேலும் இரண்டு வருடகால அவகாசம் இவ்வாண்டு ஜெனீவாவில் வழங்கப்பட்டிருக்கிறது. இக்கால அவகாசத்தின் பின்னணிக்குள்தான் மேற்படித் தீர்ப்பு வந்திருக்கிறது.

இதை ரணில் மைத்திரி அரசாங்கம் தனது அடைவுகளில் ஒன்றாகக் காட்டக்கூடும்;. தமிழ் மக்கள் இலங்கைத்தீவின் நீதிபரிபாலனக் கட்டமைப்பின் மீது நம்பத்தக்க விதத்தில் அக்கட்டமைப்பானது மறுசீரமைக்கப்படுகிறது என்ற ஒரு தோற்றத்தை இது உருவாக்கும். ஏற்கெனவே கடந்த மார்ச்மாத ஜெனிவாக் கூட்டத்தொடரிற்கு முன்னர் ரணில் விக்கிரமசிங்க அதைக் கூறிவிட்டார். “கலப்பு நீதிப் பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும் என்பது மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தில் உட்சேர்க்கப்பட்ட போது சிறிலங்காவின் நீதிச் சேவை மீது அனைத்துலக சமூகம் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளில் சிறிலங்கா அரசாங்கமானது நாட்டின் நீதிச்சேவையை சுயாதீனமானதாக ஆக்கியுள்ளது. ஆகவே கலப்பு நீதிமன்றம் என்கின்ற கோரிக்கை தற்போது தேவையற்றதாகும்”

கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தரும் ஆட்சி மாற்றத்தின் பின் நீதிபரிபாலனக் கட்டமைப்பில் மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதாகக் கூறியிருக்கிறார். கடந்த ஆண்டு மன்னாரில் இடம்பெற்ற ஒரு கலந்துரையாடலின் போது முன்னரைப் போல இப்பொழுது ஒரு தொலைபேசி அழைப்பின் மூலம் நீதிமன்றத் தீர்ப்புக்களை மாற்றிவிட முடியாது என்று அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

இத்தகையதோர் பின்னணிக்குள் வித்தியாவிற்கு வழங்கப்பட்டிருக்கும் நீதியானது இலங்கைத்தீவின் உள்நாட்டு நீதியின் அந்தஸ்தை உள்நாட்டளவிலும், உலக அரங்கிலும் உயர்த்துவதற்கு உதவக்கூடும். ஆனால் இங்கு பிரச்சினை என்னவென்றால் இந்த நீதியின் வீச்செல்லை எதுவரை விரிந்து செல்லும்? என்பதே. ஏனெனில் வித்தியாவிற்கு 29 மாதங்களில் நீதி கிடைத்துவிட்டது. ஆனால், இசைப்பிரியாவிற்கும், அவரைப் போன்று போர்க்களத்தில் குதறி எறியப்பட்ட பெண்களுக்கும் எட்டு ஆண்டுகள் கழிந்த பின்னரும் நீதி கிடைக்கவில்லை.

இசைப்பிரியா என்பது இங்கு ஒரு குறியீடுதான். அவரைப்போல இறுதிக்கட்டப் போரின் போதும் அதற்கு முன்பும் கைது செய்யப்பட்டபின் அல்லது சரணடைந்தபின் குதறி எறியப்பட்ட எல்லாப் பெண்களுக்கும் இசைப்பிரியா ஒரு குறியீடாகிறார். அவர் ஒரு இயக்கப் போராளி. அவர் கைது செய்யப்பட்ட பின் அல்லது சரணடைந்த பின் ஒரு போர்க் கைதியாகவே நடத்தப்பட்டிருந்திருக்க வேண்டும். போர்க் கைதிகளுக்குரிய சட்ட ஏற்பாடுகளுக்கமைய அவர் விசாரிக்கப்பட்டிருந்திருக்க வேண்டும். ஆனால் அப்படி எந்த விசாரணைகளும் நடந்திருப்பதாகத் தெரியவில்லை. கிடைக்கப் பெறும் ஒளிப்படங்கள், கானொளிகள் என்பவற்றைத் தொகுத்துப் பார்க்கும் பொழுது ஒரு நவீன யுத்தத்தில் கைது செய்யப்பட்ட அல்லது சரணடைந்த போர்க்கைதிகளுக்கு கிடைக்க வேண்டிய பாதுகாப்போ, கௌரவமோ அவருக்கு வழங்கப்பட்டிருக்கவில்லை என்றே தெரிகிறது. பண்டைய நாகரிகமடையாத காலங்களுக்குரிய யுத்தகளங்களின் போது தோற்கடிக்கப்பட்ட தரப்பின் பெண்கள் எப்படியெல்லாம் வேட்டையாடப்படுவார்களோ அப்படித்தான் அவரும் அவரைப் போன்ற பெண்களும் விலங்குகளைப் போல வேட்டையாடப்பட்டிருக்கலாம் என்று கருதத்தக்க விதத்தில்தான் அக்காட்சிகள் அமைந்திருக்கின்றன. யுத்த களங்களில்; கைதிகளையும் சரணடைந்தவர்களையும் அவ்வாறு அவமதிப்பதற்கு பூமியில் உள்ள எந்தவொரு எழுதப்பட்ட சட்டமும் அனுமதிப்பதில்லை.

அக்காட்சிகளைப் படம் பிடித்தது தமிழ்த்தரப்பு அல்ல. அல்லது கடைசிக்கட்ட யுத்தத்தின் போது கள்ள மௌனம் சாதித்த சக்தி மிக்க நாடுகளின் செய்மதிக் கமராக்களுமல்ல. மாறாக போரில் வெற்றி கொண்ட தரப்பே தனது கைபேசிக் கமராக்களின் மூலமும், ஏனைய கமராக்களின் மூலமும் அப்படங்களை எடுத்திருக்கிறது. வெற்றிக்களிப்பில் நிதானமிழந்து தமது வெற்றிக்குச் சான்றாக அவர்கள் எடுத்துக் கொண்ட செல்ஃபிகளே இப்பொழுது அவர்களுக்கு எதிரான சாட்சியங்களாகத் தொகுக்கப்பட்டுள்ளன.

அவ்வொளிப்படங்களிலும், கானொளிகளிலும் காணப்படும் பெண்களைப் பற்றியே இக்கட்டுரையில் எழுதப்படுகிறது. அவர்களில் அநேகமானவர்கள் ஆடைகளின்றிக் கிடக்கிறார்கள்.குருதி வடிந்து காய்ந்த முகங்கள். அவர்களுடைய அவயவங்கள் குதறப்பட்டுள்ளன அல்லது சிதைக்கப்பட்டுள்ளன. கொல்லப்பட்ட பின்னரும் அவர்களை ஆடைகளின்றி வரிசையாக அடுக்கி படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. மிருகங்களின் உடல்களைத் தூக்கி எறிவது போல அவர்களுடைய நிர்வாண உடல்கள் வாகனங்களில் ஏறியப்படுகின்றன.

அவர்களில் ஒரு பகுதியினர் அவர்களுடைய அரசியல் நம்பிக்கைகளுக்காக ஆயுதமேந்தியவர்களாக இருந்திருக்கலாம். ஆனால் ஒரு யுத்தகளத்தில் சரணடைந்த பின் அல்லது கைது செய்யப்பட்ட பின் அவர்களை எப்படி நடத்த வேண்டும் என்பதற்கு மனித நாகரீகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட உலகளாவிய சட்ட ஏற்பாடுகள் உண்டு. ஆனால் அந்த சட்ட ஏற்பாடுகள் அனைத்திற்கும் முரணாகவே அவர்கள் நடாத்தப்பட்டிருக்கிறார்கள். அவ்வாறு அவர்கள் நடாத்தப்பட்டதற்கு எதிராக யாரிடம் நீதி கேட்பது? வித்தியாவிற்கு வழங்கப்பட்டதைப் போல அவர்களுக்கும் நீதி வழங்கப்படுமா? நிலைமாறுகால நீதிப் பொறிமுறைகளின் கீழ் அவர்களுக்கு நீதி வழங்கப்படுமா?

ஆனால் அரசாங்கத்தை ஆதரிக்கும் லிபரல் ஜனநாயக வாதிகளான ஜெகான் பெரேரா போன்றவர்களே பின்வருமாறு எழுதுகிறார்கள். “போர்க்குற்றங்களை மையமாகக்கொண்ட நிலைமாறுகால நீதிச் செய்முறை முன்னோக்கி நகரப் போவதில்லை என்பது இப்போது தெளிவாக விளங்கிக் கொள்ளப்படவேண்டும். பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கு சர்வதேச விசாரணை மன்றம் அல்லது கலப்பு முறையிலான நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நிலைமாறுகால நீதிக்கு எதிரானவர்களின் கரங்களையே பலப்படுத்துகிறது. சர்வதேச சமூகம் மற்றும் தமிழ் அரசியல் சமூகம் என்பவற்றின் சில பிரிவினரால் வலியுறுத்தப்படுவது போன்று நிலைமாறுகால நீதியின் மைய விவகாரமாக போர்க்குற்ற விசாரணையைக் கருதினால் நிலைமாறுகால நீதிக்கு மக்களின் ஆதரவைப் பெறுவதென்பது மேலும் சிரமமானதாகிவிடும்”.

அதாவது நிலைமாறுகால நீதிப் பொறிமுறைக்குள் குற்றவிசாரணை என்ற பகுதியை நீக்கிவிடவே அரசாங்கம் முயன்று வருகிறது. உள்நாட்டுப் பொறிமுறை ஒன்றுக்கூடாகவே அந்த விசாரணைகளைச் செய்யலாம் என்று உலக சமூகத்தை நம்ப வைக்க முயற்சிக்கிறது. வித்தியாவிற்கு வழங்கப்பட்ட நீதியானது நீதிபரிபாலனக் கட்டமைப்பின் நம்பகத்தன்மையை உயர்த்த உதவும். இத்தீர்ப்பை வழங்கிய நீதிபதிகளில் ஒருவர் ஏற்கெனவே கிருசாந்தி வழக்கிலும், விஸ்வமடு வழக்கிலும் துணிச்சலான தீர்ப்புக்களை வழங்கியிருக்கிறார். ஆனால் இது போன்ற தீர்ப்புக்களை சில நீதிபதிகளின் தனிப்பட்ட அறமாகவே பார்க்க வேண்டும். அவர்கள் சார்ந்த ஒரு கட்டமைப்பின் கொள்கை முடிவாக பார்க்க முடியாது. ஏனெனில் குமரபுரம் படுகொலை வழக்கில் தீர்ப்பு எப்படி அமைந்தது என்பதனை இங்கு சுட்டிக்காட்டலாம். அதாவது சில நீதிபதிகளின் தனிப்பட்ட நீதியை ஒரு கட்டமைப்பின் நீதியாகக் கருத முடியாது.

ஆட்சி மாற்றத்தின் பின் ரணில் – மைத்திரி அரசாங்கம் குறிப்பிட்ட சில வழக்குகளை வேகப்படுத்தி தீர்ப்புக்களை வழங்கி வருகிறது. இதில் பெரும் பகுதி வழக்குகள் ராஜபக்க்ஷ அணிக்கு எதிரானவை. அவை கூட போர்க்குற்றம் சம்பந்தப்பட்டவை அல்ல. பதிலாக அதிகார துஸ்பிரயோகம், ஊழல் போன்றவற்றோடு தொடர்புடையவை. அதே சமயம் சில பிரமுகர்களின் படுகொலை வழக்குகளும் முன்னெடுக்கப்படுகின்றன. இவற்றிலும் கூட ராஜபக்க்ஷ அணியோடு நெருங்கிச் செயற்பட்ட தமிழ் மற்றும் சிங்களத் தரப்புக்களே தண்டிக்கப்பட்டுள்ளன. எனவே ஆட்சி மாற்றத்தின் பின் வழங்கப்பட்ட தீர்ப்புக்களில் பெரும்பாலானவை சிங்கள பௌத்த கூட்டு உளவியலை அச்சுறுத்தாத தீர்ப்புக்களே.

ஆனால் போர்க்குற்ற விசாரணைகள் அப்படிப்பட்டவையல்ல. முழு நிறைவான விசாரணைகள் நடத்தப்படுமாக இருந்தால் சாட்சிகளுக்கு முழு நிறைவான பாதுகாப்பு வழங்கப்படுமாகவிருந்தால் நிலமை எப்படி அமையும்? இன்று தென்னிலங்கையில் வெற்றி நாயகர்களாகக் கொண்டாடப்படும் பலரும் குற்றவாளிக் கூண்டில் ஏற வேண்டியிருக்கும். வெளிநாட்டுத் தூதுவர்களாக ராஜதந்திர அந்தஸ்து வழங்கப்பட்ட பலரும் குற்றவாளிக் கூண்டில் ஏறவேண்டியிருக்கும். அவ்வாறான விசாரணைகளின் முடிவில் வழங்கப்படும் தீர்ப்புக்கள் நிச்சயமாக சிங்கள பௌத்த கூட்டு உளவியலை பீதிக்குள்ளாக்கக் கூடியவை என்பதனால்தான் அரசுத் தலைவர் சிறிசேன படைத்தரப்பைச் சேர்ந்த யாரையுமே தான் காட்டிக் கொடுக்கப் போவதில்லை என்று அண்மையில் திட்டவட்டமாக கூறியிருக்கிறார்.

எனவே இசைப்பிரியாக்களுக்கு நீதி கிடைப்பது என்று சொன்னால் இலங்கைத்தீவின் நீதிபரிபாலனக் கட்டமைப்பின் அடிச்சட்டமாக இருக்கும் சிங்கள பௌத்த கூட்டு மனோ நிலையில் மாற்றம் ஏற்பட வேண்டும். அரசறிவியலின் ஆரம்பப் பாடங்களின் படி ஒர் அரசை மூன்று அலகுகள் கட்டியெழுப்புகின்றன. முதலாவது சட்டவாக்க சபை. அதாவது மக்கள் பிரதிநிதிகளின் சபை. இரண்டாவது பாதுகாப்புக் கட்டமைப்பு, மூன்றாவது நீதிபரிபாலனக் கட்டமைப்பு. ஓர் அரசை உருவாக்கும் இவ் மூன்று மூலக்கூறுகளும் அவ்வரசின் கொள்கைகளைப் பாதுகாப்பவை. இலங்கைத் தீவின் அரசு எனப்படுவது அதன் இயல்பில் ஒரு சிங்கள பௌத்த அரசு. எனவே சிங்கள பௌத்த கூட்டு உளவியலை பாதுகாப்பதே அதன் நீதிபரிபாலனக் கட்டமைப்பின் பணியாகும். இப்படிப் பார்த்தால் அக்கூட்டு உளவியலில் மாற்றம் ஏற்படும் பொழுதே இசைப்பிரியாக்களுக்கு நீதி கிடைக்கும்.

அக்கூட்டு உளவியலில் மாற்றம் ஏற்படுவது என்றால் அது குற்ற உணர்ச்சி கொள்ள வேண்டும். அக்குற்ற உணர்ச்சியைத் தூண்டுவதற்கு புத்த பகவானையே துணைக்கழைக்கலாம். சிங்கள பௌத்த பண்பாடு எனப்படுவது மூத்தோரை, பெரியோரை மதிக்கும் இயல்புடையது. அதிகாலையில் வீட்டிலுள்ள மூத்தவர்களை காலைத் தொட்டு வணங்கி விட்டு வேலைக்குச் செல்லும் ஒரு சமூகம் அது. அந்தச் சமூகத்திலிருந்து வந்த ஒரு பகுதியினர் தான் இசைப்பிரியாக்களை குதறியபின் ஆடைகளின்றி வன்னி கிழக்குத் தரவைகளில் வீசியெறிந்தார்கள். பின்னர் அதைப் படமும் எடுத்தார்கள். அந்தப் படங்களை அவர்கள் யாருக்கு காட்டுவதற்காக எடுத்தார்கள்? அதை அவர்கள் தங்களுடைய மனைவிமார்களுக்கோ, காதலியர்களுக்கோ சகோதரிகளிற்கோ இதுதான் எமது வீரம் என்று கூறிக் காட்ட முடியுமா? காலையில் காலைத் தொட்டு வணங்கிய தாய்க்கும், தந்தைக்கும், தாத்தாவிற்கும், பாட்டிக்கும் காட்ட முடியுமா? அப்படி யாருக்கும் காட்ட முடியாதென்றால் எதற்காக அந்தப் படங்களை எடுத்தார்கள்? பௌத்த தர்மத்தின் கர்மக் கோட்பாடு அவர்களை உந்தித்தள்ளியிருக்குமோ? கைபேசியால் காட்டிக்கொடுக்கப்பட்ட ஒரு நாடு.?

ஆனால் இது விடயத்தில் சிங்கள பௌத்த கூட்டு உளவியலின் குற்ற உணர்ச்சியைத் தூண்டுவதற்கு தமிழ், சிங்கள அரசியல்வாதிகளும், செயற்பாட்டாளர்களும் போதியளவு உழைத்திருக்கவில்லை. ஆன்மீகவாதிகளும், மதப்பெரியார்களும் போதியளவு செயற்படவில்லை. புத்திஜீவிகளும், கருத்துருவாக்கிகளும், ஊடகவியலாளர்களும், படைப்பாளிகளும் போதியளவு செயற்படவில்லை. நிலைமாறுகால நீதியை காசு காய்க்கும் மரமாகக் கருதும் என்.ஜி.யோக்கள் அதைச் செய்யப் போவதில்லை. ஓர் அரசுடைய தரப்பின் குற்றங்களை அரச தரப்பாகிய தமிழ்த்தரப்பு இழைத்திருக்கக்கூடிய குற்றங்களோடு சமப்படுத்த விளையும் எவரும் அப்படி ஒரு குற்றவுணர்ச்சியைத் தூண்ட முடியாதவர்களும், தூண்டுவதில் ஆர்வமற்றவர்களும்தான்.

இசைப்பிரியாக்கள் குதறி எறியப்பட்ட ஒளிப்படங்கள் சிங்கள பௌத்த கூட்டு உளவியலின் குற்ற உணர்ச்சியை நொதிக்க வைப்பதற்கு மிகப் பொருத்தமானவை. சிங்கள பௌத்த பண்பாட்டை அவை எப்பொழுதும் குற்றவுணர்ச்சி கொள்ளச் செய்பவை. ஓஷோ கூறுவது போல குழுமனோநிலையில் இருந்து செய்யும் பொழுது சில செயல்கள் குற்றங்களாகத் தெரிவதில்லை. அதற்கு ஒரு கூட்டு நியாயம் கற்பிக்கப்படும். ஆனால் அதையே தனியே இருந்து சிந்திக்கும் போது மனச்சாட்சி வேலை செய்யத் தொடங்கும். குற்ற உணர்ச்சி மேலெழும்.திருமதி சந்திரிகாவின் மகன் சனல் நாலு வெளியிட்ட படத்தைப் பார்த்து விட்டு வெட்கப்பட்டதாகக் கூறப்படுவதை இங்கு சுட்டிக்காட்டலாம்.

இவ்வாறு ஒரு கூட்டுக் குற்றவுணர்ச்சியைத் தூண்டினால் மட்டுமே இலங்கைத் தீவின் நீதிபரிபாலனக் கட்டமைப்பை தலைகீழாக மாற்றலாம். அப்பொழுதுதான் இசைப்பிரியாக்களுக்கும், கோணேஸ்வரிகளுக்கும் உரிய நீதி கிடைக்கும். இனப்படுகொலைகளுக்கு எதிரான நீதியும் கிடைக்கும். அது மட்டுமல்ல. இனப்பிரச்சினைக்கான முழு நிறைவான ஒரு தீர்வைக் காண்பதற்கு அது இன்றியமையாத ஒரு முன் நிபந்தனையுமாகும்.

நன்றி - தினக்குரல்
...மேலும்

Sep 17, 2017

கருக்கலைப்பு: என் உடல்! என் தெரிவு! என் உரிமை!- என்.சரவணன்


“பெண்களுக்கு கர்ப்பப்பை இருப்பதால்தான், தாய்மை என்பதை வலியுறுத்தி, அவர்களை ஏமாற்ற, ஆண்களால் முடிகிறது. எனவே, பெண்களே உங்களின் கர்ப்பப்பைகளை தூக்கி எறியுங்கள்” என்று எச்சரித்தார் தந்தை பெரியார்.

கருக்கலைப்புக்கு அனுமதியளிக்கும் வகையில் சட்டம் கொண்டு வரப்படவுள்ளது. இந்த உத்தேச சட்ட மூலத்திற்கு அமைச்சரவை அங்கீகரித்திருக்கிறது. இனி நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்தைப் பெறவேண்டியது தான் மிச்சம். கடந்த ஆட்சி காலங்களில் இதற்கான சட்டத்தைக் கொணர்வதற்கான முயற்சிகளை இழுத்தடித்து இறுதியில் பாராளுமன்றத்துக்கு கூட அதைக் கொண்டுவர விடவில்லை. அதே பாணியில் இம்முறையும் இதற்கான சட்டமூலம் இழுத்தடிக்கப்பட்டுவருகிறது.

இம்முறை இத்தகைய இழுத்தடிப்பு எதுவுமின்றி உடனடியாக சட்டமூலத்தை நிறைவேற்றவேண்டும் என்று பல பெண்ணுரிமை இயக்கங்கள் குரல் கொடுத்துவருவதுடன், ஏனைய ஜனாக சக்திகளின் ஆதரவையும் கோரியிருக்கிறது.

பாதுகாப்பான கருக்கலைப்புக்கான தடைகளை இலங்கை நீக்க வேண்டும் என்று ஐ.நா சபையின் பெண்களுக்கெதிரான அனைத்து வகையான பாரபட்சங்களையும் இல்லாது செய்தவற்கான சமவாயம் (CEDAW) மார்ச் மாதம் வெளியிட்டிருந்த அறிக்கையில் கோரியிருந்தது.

அதேவேளை இதுவும் முழுமையான அனுமதியல்ல. பாலியல் வன்முறையால் தரிக்கும் கர்ப்பம் மற்றும் மரபணு பிறழ்வுக்குள்ளான கருக்களை கலைப்பதற்கும் (அந்தத் தாயின் விருப்பத்தின் பேரில்) மாத்திரமே சட்ட ரீதியாக அனுமதியளிக்கும் வகையில் இச் சட்டம் கொண்டு வரப்படவுள்ளது. இந்த இரு காரணங்களைக் கூட இலங்கையின் மதத் தலைமைகளை எதிர்க்கத் தொடங்கியுள்ளன.

தற்செயலாக/திட்டமிடப்படாத நிலையில் கர்ப்பம் தரித்துவிடுதல் என்பது உலகில் சாதாரணமாக நிகழும் போக்கும். அடுத்தது தவறான பாலுறவின் காரணமாக, பாலியல் வல்லுறவின் காரணமாக, சிறுவர் துஷ்பிரயோங்கங்களின் காரணமாகவும் கருவுருதல் நிகழ்ந்துவிடுகிறது. அப்படியான சந்தர்ப்பங்களில் சட்டம் அதனை கலைக்க அனுமதி மறுப்பதால் மிக மோசமான விளைவுகளை சம்பந்தப்பட்ட பெண்களும், இந்த சமூகமும் எதிர்கொண்டு வந்திருக்கிறது.


கத்தோலிக்க பேராயர் சம்மேளனம் ஒக்ஸ்ட் 26 அன்று தாம் இதனை வன்மையாக எதிர்ப்பதாக அறிக்கைவெளியிட்டிருந்தது. கரு உருவானதிலிருந்து மனித உயிர் ஆரம்பித்துவிடுகிறதென்று கத்தோலிக்க சபை நம்புவதால் எவருக்கும் உயிரைப் பறிக்கும் உரிமை எவருக்கும் கிடையாதென்றும் அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தது.

அஸ்கிரி விகாரையின் தரப்பிலிருந்து வேதாகம தம்மானந்த ஹிமி வெளியிட்டிருந்த கருத்தில் தமது தரப்பிலும் கருக்கலைப்பு சட்டத்துக்கு எதிர்ப்பை தெரிவித்திருந்தார்.

தற்போது கத்தோலிக்க, பௌத்த, இஸ்லாமிய மதத் தலைமைகளே இந்த விடயத்தில் தமது எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றன. கடந்த காலங்களைப் போல அரசு இந்த சக்திகளுக்கு அடிபணியாமல் கருக்கலைப்பு அனுமதிக்கான சட்டமூலத்தை பாராளுமன்றத்துக்கு கொண்டு வரவேண்டும். மக்கள் பிரதிநிதிகள் இதனை பொறுப்புடன் ஆதரிக்க வேண்டும். மதத் தலைவர்களுக்கு இதனை எதிர்க்க தமது மத நம்பிக்கைகள் பயன்படுமேயொழிய தமது பெண்களின் உடல், உள ரீதியிலான துன்பத்துக்கு தீர்வு சொல்ல முடியாது.

கருக்கலைப்பை சட்டமாக்கும் யோசனையானது கருவுற்ற பெண்களை இழுத்துப்பிடித்து கருவைக் கலைப்பதற்கான லைசன்ஸ் அல்ல. கருவைச் சுமக்கும் பெண் தனது அல்லது குழந்தையின் நலன் கருதி எடுக்க தனக்கு இருக்கும் உரிமை பற்றியதே பற்றியதே அது.


கருவைக் கலைப்பதற்காகவே நாடு முழுவதும் சட்டவிரோத கருக்கலைப்பு நிலையங்கள் இது வரை இயங்கி வந்துள்ளன. அது போல தொழில்முறை சாராதோரும் கூட இந்த கருக்கலைப்பில் ஈடுபடுவதால் பல பெண்கள் பாதிக்கப்பட்டும் இருக்கிறார்கள். இது சட்டவிரோதமாக்கப்பட்டிருப்பதால் சமூக அளவிலும் இதனை ஒரு குற்றச்செயலாகவே பார்க்கப்பட்டு வந்திருகிறது.

இலங்கையில் வருடாந்தம் நான்கு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கர்ப்பம் தரிக்கும் போது நாளாந்தம் ஏறத்தாள 658க்கும் மேற்பட்ட கருக்கலைப்பு இடம்பெறுவதாக அறியப்படுகிறது. அதாவது வருடாந்தம் கிட்டத்தட்ட 2,50,170 "சட்டவிரோத" கருக்கலைப்புகள் மேற்கொள்ளட்டுவருகின்றன. சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள தகவல்களின் படி கருக்கலைப்பு செய்து கொள்வோரில் ஏறத்தாள 24,000 பேர் குறைந்த வயதுடைய சிறுமிகள் என்றும் தெரிவித்துள்ளது. இவர்களில் அதிகமானோர் குருநாகல், தம்புள்ள போன்ற பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே அதிகம் என்றும் அறியப்படுகிறது. பெண்களும் பணிபுரியத் தொடங்கிய பின்னர் அவர்களின் பெண் பிள்ளைகள் பாதுகாவலர்களால், அல்லது குடும்ப உறுப்பினர்களால் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு ஆளாகின்ற போக்கு பற்றி நிறையவே பதிவாகியுள்ளது. குறிப்பாக தகப்பனால் அல்லது சகோதரர்களால் பாலியல் துஷ்பிரயகத்துக்கு உள்ளாகிவரும் பல செய்திகளை நாளாந்தம் நாம் கடந்து வருகிறோம். அப்படியான சந்தர்ப்பங்களில் கருக்கலைப்புத் தடை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு என்ன நன்மையை செய்துவிட முடியும். அப்பெண்ணுக்கு இரட்டிப்பு கொடுமையையே கருக்கலைப்பு தடை எற்படுத்த முடியும்.

குடும்ப சுகாதார செயலகத்தினால் 2012 வெளியிடப்பட்ட அறிக்கையின்படி இலங்கையில் மரணமுறும் கர்ப்பிணிப் பெண்களின் எண்ணிக்கையில் 13% வீதமானோர் பாதுகாப்பற்ற கருக்கலைப்பினால் மரணமுறுபவர்கள் என்று தெரிவித்திருந்தது.

தாயொருவர் கர்ப்பம் தரித்து 20வது வாரத்தில் தான் சிசுவின் மரபணு பிறழ்வு பற்றி வைத்தியர்களினால் இனம் காண முடியும். பிறப்பு குறைபாடுடைய பிரசவத்தினால் தாய்மார்கள் பல்வேறு துன்பங்களை வாழ் நாள் முழுவதும் அனுபவிக்க வேண்டியேற்படுகிறது.

இந்த சட்டமானது பெண்களின் ஆரோக்கியத்தையும், சுகாதாரத்தையும் பலப்படுத்துமே ஒழிய அது அவர்களை பாதிக்காது. இலங்கையில் கருக்கலைப்புக்காக பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களும், மோசமான முறைகளாலும் கர்ப்பமுறுவதை நிரந்தரமாக பாதிக்கச் செய்த சம்பவங்களும், பயன்படுத்தப்பட்ட கருவிகளால் வேறு நோய்களுக்கு ஆளாகிய சம்வங்களும் கூட இதற்கு முன்னர் பதிவாக்கியிருக்கின்றன. உள்ளே ஏற்பட்ட காயங்களால் புற்றுநோய்க்கான எச்சரிக்கையும் கூட செய்யப்பட்டிருக்கின்றன.

பாலியல் தவறுகளையும், துஷ்பிரயோகங்களையும், பாலியல் தொழிலையும் இது ஊக்குவிக்கும் என்கிற ஒரு வாதமும் இந்த சட்டத்துக்கு எதிரான வாதமாக முன்வைக்கப்படுகிறது. ஏதோ இந்த தடை இருப்பதால் தான் இவை அனைத்தும் நடக்காமல் பார்த்துக் கொள்ளப்படுகிறதா என்ன?


கிராமப் புறங்களில் இருந்து நகர்ப்புறங்களுக்கு வந்து தங்கி தொழில் புரியும் பல பெண்கள் காதலின் பேரால் ஏமாற்றப்பட்டு கர்ப்பம்தரித்து அதனை களவாக கருக்ககலைப்பு செய்வதற்காக பிழையான சக்திகளிடம் போய் சிக்கி சீரழிந்த கதைகளை நாம் எத்தனையோ அறிந்திருக்கிறோம். பிழையான வழிகளில் கருக்கலைப்பு செய்துகொள்ளப்பட்டவேளை பெண்ணும் இறந்துபோன சம்பவங்களும் பதிவாகியிருக்கின்றன.

வசதிபடைத்தவர்கள் இந்தப் பிரச்சினைகளில் இருந்து மீள பல வாய்ப்பு வசதிகளை அளித்திருக்கிற இந்த சமூகத்தால் வசதியற்ற ஏழைப் பெண்களுக்கு கவலையையும், கண்ணீரையும், அவலத்தையும் தான் வழங்கியிருக்கிறது. இந்த புதிய சட்டம் இப்படி பிரச்சினைகளுக்கு உள்ளாகும் அபலைப் பெண்களுக்கு ஒரு புறமாவது ஆறுதலைத் தரும். கருக்கலைப்பு செய்ய முடியாமல் போன பெண்களுக்கு சமூகத்தால் ஆறுதல் கிட்டியதில்லை. பெரும் பிரச்சினையே சமூகத்தால் எதிர்கொள்ளும் பிரச்சினையே. உலகிலேயே தற்கொலைக்கு பேர் போன இலங்கையில் பெண்களின் தற்கொலைக்கு இதுவும் ஒரு காரணியாக இருந்து வருகிறது என்பதை சில அறிக்கைகளும் இதற்கு முன்னர் சுட்டிக் காட்டியிருக்கின்றன என்பதையும் நாம் கவனத்தில் எடுக்க வேண்டும்.

ஏற்கெனவே சமூக, மத, பண்பாட்டு, ஐதீகங்களும் ஆணாதிக்க அரசியல் காரணிகளும் இந்த விடயத்தில் தீர்மானகரமான தலையீட்டைச் செய்துவந்தன. சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு அது பற்றிய தீர்மானத்தை எடுக்கும் உரிமை மறுக்கப்பட்டிருந்து. தனது உடலின் மீதான முடிவுகள் தனக்கு வெளியில் தீர்மானிக்கப்படும் கொடூரமே நடைமுறையில் இருந்து வந்தது. கர்ப்பமடைதல், அதனை சுமத்தல், கர்ப்பகாலத்தில் பராமரித்தல், தாய்சேய் நலன்களை ஆரோக்கியமாகப் பேணுதல், கடும் வேதனையுடன் பிரசவித்து ஒப்படைத்தல் என்பதை தாயின் கடமையாகவும், பொறுப்பாகவுமே கொள்ளப்பட்டு வருகிறது.

தென்னாசியாவில் அபாகானிஸ்தானுக்கு அடுத்ததாக மோசமான ரயரைகளைக் கொண்டிருப்பது இலங்கை தான். பங்களாதேஷ், பாகிஸ்தான், மாலைதீவு போன்ற நாடுகள் கூட இலங்கையை விட இந்த விடயத்தில் நெகிழ்ச்சியான போக்கு கடைபிடிக்கப்படுகிறது. பூட்டானில் பெண்ணை காப்பதற்காக அல்லது பாலியல் வல்லுறவு போன்ற பின்னணியின் காரணமாக கருக்கலைப்பை அனுமதிக்கிறது. இந்தியாவில் சமூக பொருளாதார காரணிகளுக்காகக் கூட கருக்கலைப்பு செய்து கொள்ள முடியும். ஆனால் இலங்கை இந்த விடயத்தில் பெண்களுக்கு பாதுகாப்பாக இல்லை.

பெண்களின் துன்பம் போக்க இந்த சட்டம் கொண்டுவரப்படவே வேண்டும். ஒரு ஜனநாயக நாட்டில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்றத்தை வைதீக சக்திகள் கட்டுப்படுத்துவதை அனுமதிக்கமுடியாது. நமது சனத்தொகையில் அதிகமானவர்கள் பெண்களாக இருந்தும் பெண்களின் முக்கிய பிரச்சினைகளில் பெண்களுக்கு பாதகமான முடிவுகள் எடுக்கப்படுவது துரதிஸ்டமே.

சந்திரிகா ஆட்சிகாலத்திலும் ஜீ.எல்.பீரிஸ் நீதியமைச்சராக இருந்த வேளை பெண்கள் அமைப்புகளின் நிப்பந்தத்தின் காரணமாக கருக்கலைப்பை சட்டபூர்வமாக்குவதற்கான கலந்துரையாடல்களும் பின்னர் அதற்கான மசோதாவும் உருவாக்கப்பட்டு வந்தது. ஆனால் மதத் தலைவர்களின் கடும் எதிர்ப்பின் காரணமாக அது இறுதியில் கிடப்பில் போடப்பட்டது.


பெண்களை கர்ப்பக் காவிகளாக இயற்கை விதித்திருந்தாலும் பெண்களை கலாசாராக காவிகளாகவும் ஆக்கியிருப்பது இந்த ஆணாதிக்க சமூகமே. கர்ப்பத்தையும் ஏற்படுத்தி தப்பி விடும் ஆணாதிக்க சமூகம் அக்கர்ப்பத்தை சுமந்து பெற்றே தீரவேண்டும் என்பதையும் பண்பாட்டின் பேராலும், ஐதீகங்களின் வழியாலும் பெண்களை நிப்பந்தித்திருக்கிறது இந்த சமூக அமைப்பு. கருக்கலைப்பு குறித்த இருவேறு நிலைப்பாடுகள் உலகம் முழுவதும் நீண்ட காலம் நிலவி வருவது தான்.

உலக அளவில் கருக்கலைப்புக்கு ஆதரவாக போராடும் பெண்களின் பிரசித்தமான சுலோகம் ‘என் உடல்! என் உரிமை” ('My body, My choice, My rights') என்பது. இலங்கையிலும் பெண்கள் அமைப்புகள் பல அந்த கோஷத்தை முன்னெடுத்து வருகிறார்கள்.

கருக்கலைப்பு என்பது ஒரு கலாசார விடயமாக அணுகப்படுவது போல “சிசுக்கொலை” என்கிற பாணியில் உணர்ச்சிபூர்வமான (Sentiment) விவகாரமாகவும் ஆக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இது நடைமுறை (Practical) விவகாரம். எதிர்கொள்பவர்கள் பெண்கள். இதுவரை காலம் பெரும்பான்மை ஆண்களால் ஆக்கப்பட்ட சட்டங்களே பெண்களின் சுய விருப்பையும், சுயப் பிரச்சினையும் தீர்மானித்தன.

மாற்றமடைந்துவரும் புதிய யுகத்தில் இதனை ஜனநாயக் ரீதியிலும், மனிதாபிமான அடிப்படையிலும், நடைமுறை யதார்த்ததிலிருந்துமே இந்த பிரச்சினை அணுகப்படவேண்டும். அந்த வகையில் பெண்களுக்கான நீதியையும், பாதுகாப்பையும் ஓரளவாவது உள்ளடக்கியிருக்கிற இந்த சட்டம் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. இதை நிறைவேற்றுவதற்கான அழுத்தத்தை நாம் அனைவரும் கொடுக்கவேண்டும்.

நன்றி - தினக்குரல்


...மேலும்

Jul 25, 2017

அம்மா எப்படி அபசகுனமாவார்?என் சித்தப்பா மகன் திருமண வரவேற்புக்கு அம்மாவுடன் சென்றேன். மண்டபத்துக்குள் நுழைந்ததுமே மணமேடைதான் முதலில் கண்ணில்பட்டது. மணப்பெண், மெலிந்த தேகத்துடன் உலகத்தின் பாரங்கள் ஏறாத முகத்துடன் ரோஜா மாலையும் கழுத்துமாக பூரிப்புடன் அமர்ந்திருந்தாள். மாப்பிள்ளையோ முகமெல்லாம் பல்லாக ரோஜா மாலையுடன் வருவோர் போவோரிடமெல்லாம் கைகுலுக்கிக்கொண்டு பிஸியாக இருந்தான். 

எங்களைக் கண்டதும் ஒரு பெருங்கூட்டம் சூழ்ந்துகொண்டு ஆர்வத்துடன் நலம் விசாரித்தது மகிழ்ச்சியாக இருந்தது. அம்மாவுக்கு அதைவிட மகிழ்ச்சி. சொந்தங்களைப் பார்த்ததும் பழைய நினைவுகள் எல்லாம் கரை புரண்டு ஓடின.

உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் நான் அன்றுதான் பல உறவினர்களை முதன்முதலாகப் பார்த்தேன். நன்றாக எண்ணெய் தேய்த்த முடியை கையாலேயே வாரி கொண்டையாகப் போட்டு, மல்லிகை சூடி, மஞ்சள் முகங்களில் குங்குமப் பொட்டு வைத்து, பின்பக்கம் கொசுவம் வைத்த சேலை கட்டிச் சிரித்த முகத்துடன் சத்தமாக பேசியபடியே வளையவந்தனர் பெண்கள். பட்டு வேட்டி சட்டையுடனும் பளீர் சிரிப்புடனும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது ஆண்கள் கூட்டம். அந்த இடம் முழுக்க நகர்ப்புற வாசனை மறைந்து கிராமத்து மணம் வீசி மனதை ரொம்பவே கிறங்கடித்தது.

நான் இப்படி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தபோதே எல்லோரையும் சாப்பிட அழைத்தார்கள். டைனிங் ஹாலில் மர பெஞ்சு, மர டேபிள் போட்டிருந்தார்கள். மண் தரை சாணம் தெளிக்கப்பட்டு ஈரமாக இருந்தது. கலர் பொடிகளால் பெரிதாகக் கோலம் போட்டிருந்தார்கள். ஆட்கள் அமர அமர கேட்டுக் கேட்டு இட்லி, இடியாப்பம், கேசரி, சப்பாத்தி, குருமா, சாம்பார், தேங்காய்ச் சட்னி, வடை என்று சத்தமாகப் பேசிக்கொண்டே வைத்தார்கள். பேச்சுச் சத்தம், மைக்கில் பேசும் சத்தம், பாட்டுச் சத்தம், பாத்திரங்கள் சத்தம் என அந்தப் பகுதியைச் சத்தம்தான் ஆண்டுகொண்டிருந்தது. ஆனால், கொஞ்சம்கூட எரிச்சல் தரவில்லை. காதுக்கு இனிமையாக இருந்தது.

எத்தனையோ உறவினர்களை அறிமுகப்படுத்திய சித்தப்பா, மணப்பெண்ணின் தாயை அறிமுகப்படுத்தவில்லை என்று அப்போதுதான் ஞாபகம் வந்தது. உடனே, “பானுவோட அம்மா எங்க சித்தப்பா? நான் இன்னும் அவுங்கள பார்க்கலை” என்ற என் கேள்வி சித்தப்பாவை அதிர்ச்சியடையவைத்தது. “என்ன கேக்கறமா நீ? தாலி அறுத்தவுங்க எப்படிக் கல்யாணத்துக்கு வருவாங்க? அது அபசகுனம் இல்லையா?”, அவர் சொன்னது எனக்குப் புரியவே சில நிமிடங்கள் பிடித்தது. அப்படியே உறைந்து போனேன்.

பெற்ற தாய் ஒரு பெண்ணுக்கு அபசகுனம் ஆவாரா? ஆக முடியுமா? என்ன ஒரு முட்டாள்தனமான நம்பிக்கை இது. திடீரென்று என் முன்னே இருந்த அனைவருமே காணாமல் போனார்கள். முகம் தெரியாத அந்த அம்மா மட்டும் தனியே தெரிந்தார். அவர் தன்னந்தனியே கணவர் துணை இல்லாமல் சோறு ஊட்டியபோது, “நீங்கள் ஊட்டாதீர்கள், அது அபசகுனம். நாங்கள் ஊட்டுகிறோம்” என்று யாராவது சொல்லியிருப்பார்களா? அவர் மகளைப் பள்ளிக்கு அனுப்பிய காலத்தில், “நீங்கள் படிக்க வைக்காதீர்கள், அது அபசகுனம். நாங்கள் படிக்கவைக்கிறோம்” என யாராவது முன்வந்திருப்பார்களா?

அதுகூட வேண்டாம். “கணவர் இல்லாத நீங்கள் அனுப்பிய நகைகள் அபசகுனம். சீர்செனத்திகள் அபசகுனம், அதனால் வேண்டாம்” என்று யாராவது திருப்பியனுப்பினார்களா? பெருமையாக எல்லோர் பார்வையிலும் படும்படிதானே அவற்றையெல்லாம் அடுக்கி வைத்திருக்கிறார்கள்? இந்தப் பாத்திரம் பண்டத்தில் வராத அபசகுனம் அந்த அம்மா நேரில் வந்தால் மட்டும் வந்துவிடுமா?

இதுவே அந்தப் பெண்ணின் அப்பா உயிருடன் இருந்து அம்மா இல்லாமல் இருந்திருந்தால் நிலைமையே தலை கீழாக அல்லவா இருந்திருக்கும்! அவரே முன்னின்று எல்லாவற்றையும் நடத்தியிருப்பார். கூடவே புது அம்மாவும் நின்றிருப்பார். “தாயில்லாத பெண்ணை நல்லா படிக்கவச்சு எப்பிடி கட்டிக் குடுத்துருக்கான் பாரு” என்று அவரைச் சகட்டுமேனிக்குப் புகழ்ந்து தள்ளியிருப்பார்கள். என்னவொரு விந்தையான உலகம் இது! உறவுகளை நல்ல முறையில் பேணி மகிழ்ச்சியாக வாழத்தெரிந்த இந்த மக்களுக்கு, ஒரு பெண்ணின் துயரம் மட்டும் புரியாமல் போனது எப்படி? பெற்ற மகளின் திருமணத்தைக் கண்குளிரப் பார்க்கமுடியாமல் அந்தத் தாயின் மனம் எப்படித் தவித்திருக்கும்? இன்னும் நெருடிக்கொண்டுதான் இருக்கிறது அந்த நிகழ்வு.

நன்றி -  தி.இந்து 
...மேலும்

Jul 22, 2017

இலங்கையின் பெண்ணுரிமை முன்னோடி மேரி ரட்னம் - என்.சரவணன்

“அறிந்தவர்களும் அறியாதவையும்” 18

மேரி ரட்னம்
மேரி ரட்னம் இலங்கையின் பெண்கள் உரிமைக்காக போராடிய முக்கிய முன்னோடியாக அறியப்படுபவர். 

02.06.1873ஆம் ஆண்டு கனடாவிலுள்ள ஒன்ராறியோ மாநிலத்தில் பிறந்த மேரி ஏர்வின் ஐரிஷ்-ஸ்கொட்டிஷ் பரம்பரையைச் சேர்ந்தவர்கள். திருச்சபைக் கிறிஸ்தவர்கள். கிறிஸ்தவர்கள் சமூக சீர்திருத்தங்களில் பங்குபற்றி சமூகத் தீமைகளை அகற்றும் நோக்குடன் மிஷனரி பணிகளில் ஈடுபடுபட்டு வந்த காலம்.  மேரி ரட்னத்தின் இள வயது காலத்தில் இப்படியான பணிகளில் ஈடுபட்டார். அவர் மருத்துவக் கல்லூரியில் பயிற்சிபெற்று 1896இல் பட்டம் பெற்றார். வைத்திய சமூகப் பணிகள் செய்யும் “உலக சகோதரத்துவம்” என்கிற கிறிஸ்தவ இலட்சியத்தால் ஈர்க்கப்பட்ட அவர் வெளிநாட்டில் மிஷன்களுக்கான பணியில் ஈடுபட நியுயோர்க்கில் பயிற்சி பெற அனுப்பப்பட்டார்.
எஸ்.சீ.கே.ரட்னம், மேரி ரட்னம் தம்பதிகள் 1898
நியுயோர்க்கில் மேரி ஏர்வின் யாழ்ப்பாணத்து வேலணையைச் சேர்ந்த கிறிஸ்தவரான சாமுவேல் கிறிஸ்மஸ் கனக ரட்னத்தை சந்தித்து நட்பானார். கிறிஸ்தவ பாரம்பரிய குடும்பத்தைச் சேர்ந்த ரட்னம் இலங்கையிலும், இந்தியாவிலும் மிஷனரிக் கல்வி நிறுவனங்களில் கல்வி கற்று பம்பாயிலிருந்த லண்டன் மிஷனரி சங்கத்தின் உயர்நிலைப் பாடசாலையின் அதிபராகவும் ஆனவர். மெய்யியலிலும், தர்க்கவியளிலும் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ.பட்டம் பெற்ற அவர் உலக நாடுகள் பலவற்றுக்கு விரிவுரைச் சுற்றுப்பிரயாணங்களை செய்து வந்தார். மேரி ஏர்வின் யாழ்ப்பாண மிஷன் வைத்தியசாலைக்கு நியமனம் பெற்றத்தைத் தொடர்ந்து அவரை சந்தித்த ரட்னம் மேரிக்கு தமிழ் கற்பிக்கவும் முன்வந்தார். சில மாதங்களுக்குப் பின்னர் 16.07.1896 இல் இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.

இணுவிலில் பெண்களுக்கான மக்லியோட் வைத்தியசாலையை நிறுவும் பொறுப்பு மேரிக்கு வழங்கப்பட்டு இலங்கை வந்தடைந்தார். அவர் திருமணமான செய்தியை மிஷன் அறிந்திருக்கவில்லை. இலங்கையில் வைத்து அந்த தகவலை அறிந்த மிஷன் மேரி ரட்னத்தை கனடாவுக்கு திருப்பி அழைத்துக்கொண்டது. அவரது கணவர் ரட்னம்; மிஷனின் இந்த மோசமான முயற்சியைக் கண்டித்து பத்திரிகையில் எழுதினார். அமெரிக்க மிஷனில் இருந்தும் விலகிய ரட்னம் கொழும்பு வந்தார். 1897இல் மேரி ரட்னமும் கனடாவிலிருந்து கொழும்பு வந்தடைத்தார். தன்னை விலக்கியமைக்குப பின்னால் நிறவாதத்தின் வகிபாகம் இருந்தததையும் கண்டு நொந்தாராயினும் அதனை அவர் விமர்சிக்கவில்லை. ஆனால் கணவர் ரட்னம் பகிரங்கமாக நிரவாதத்தைக் கண்டித்தார்.

மேரி ரட்னம் பல்வேறு சமூக சீர்திருத்த வேலைகளில் தன்னை ஈடுபடுத்தினார். குறிப்பாக வர்க்கம், சாதி, இன, மத வேறுபாடுகளுக்கு அப்பால் பெண்களது சமூக அரசியல் உரிமைகள் தொடர்பான மேரி ரட்னத்தின் பணிகள் மக்களைக் கவர்ந்தது.

மேரி ரட்னம் கனடாவில் தனது குடும்பத்துடன்
கூடவே அவர் கொழும்பில் பெண்களுக்கான லேடி ஹெவ்லொக் அரச வைத்தியசாலையில் தற்காலிகமாக கடமையாற்றிக்கொண்டிருந்தார். கனேடிய பட்டத்தை அங்கீகரிக்காமல் அவருக்கு நிரந்த நியமனத்தையும் வழங்க மறுத்து வந்தது. இதற்கு எதிராக கணவரும் சேர்ந்து போராடிய போதும் தீர்வு கிட்டவில்லை. இறுதியில் மகப்பேற்று மருத்துவராக தனியார் மருத்துவத் தொழிலில் ஈடுபட்டார். இதேவேளை 1899 இல் ரட்னம் புறக்கோட்டையில் ஆண்களுக்கான பாடசாலை ஒன்றை ஆரம்பித்தார். 1900இல் அது மத்திய கல்லூரி என்று பெயர் மாற்றம் பெற்று கொட்டாஞ்சேனைக்கு இடம்மாற்றப்பட்டது. ரட்னம் அதன் அதிபராக ஆனார். அவர் ஒரு சந்தர்ப்பத்தில் இலங்கைப் பல்கலைக் கழகச் சங்கத்துக்கு செயலாளராகவும் நியமிக்கப்பட்டார்.


மேரி ரட்னம் 1904-இல் யுவதிகள் நட்புறவுச் சங்கத்தை (Girls Friendly Society) நிறுவினார். அதே வருடம் இலங்கைப் பெண்கள் சங்கத்தையும் (Ceylon Women's Union) ஆரம்பித்தார். சகல இனத்து பெண்களும் அங்கம் வகித்ததுடன் பல கிளைகளும் உருவாக்கப்பட்டு இயங்கி வந்தது. அந்த சங்கத்தின் மூலம் பெண்களின் உடல் நலம், சுகாதாரம் , மருத்துவம், போன்ற விடயங்களில் அதிக பிரசாரங்களையும், கூட்டங்களையும், விரிவுரைகளையும் நாட்டின் பல்வேறு இடங்களில் மேற்கொண்டார். அவர் 1923இல் வெளியிட்ட பாடசாலைகளுக்கான உடல்நலக் கைநூல் (A Health Manual for Schools), 1933 இல் வெளியான இலங்கைப் பாடசாலைகளுக்கான வீட்டுப் பனிக் கைநூல் (Home Craft Manual for Ceylon Schools) என்பன ஆச்சரியத்துடன் பார்க்கப்பட்டவை. சிறுவர் தொழிலாளர்கள் பற்றிய சமூக விமர்சனங்களையும் உள்ளடக்கியது இந்த நூல். இலங்கையின் பாலியல் கல்வியின் முன்னோடியாக மேரி ரட்னத்தை குறிப்பிடுகிறார் கலாநிதி குமாரி ஜெயவர்த்தனா. குடும்பத் திட்டமிடல் பற்றிய பிரசாரங்களை மேற்கொண்ட மேரி அதன் அவசியத்தை வலியுறுத்தினார். அரசாங்கத்துக்கு அவர் வற்புறுத்தியும் பாடத்திட்டத்தில் அதனை சேர்க்க அரசாங்கம் மறுத்துவிட்டது. பின்னர் அவரே மாநாடுகள், கருத்தரங்குகளை மேற்கொண்ட வேளை பலத்த எதிர்ப்புக்கும் உள்ளானார். இலங்கையின் “குடும்பத் திட்டமிடலின் தாய்” என மேரி ரட்தினத்தைக் குறிப்பிடுகிறார் குமாரி ஜெயவர்த்தன. மதுவிலக்கு இயக்கத்தின் முக்கிய பிரமுகராகவும் முக்கிய பேச்சாளராகவும் மேரி ரட்னம் இயங்கினார்.


1927 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட பெண்கள் வாக்குரிமைச் சங்கத்தின் (Women's Franchise Union) ஸ்தாபகர்களில் ஒருவர் மேரி ரட்னம். இந்த அமைப்பு மேற்கொண்ட போராட்டங்களின் விளைவு தான் 1931 இல் டொனமூர் சீர்த்திருத்தத்தின் மூலம் இலங்கையின் சர்வஜன வாக்குரிமை அளிக்கப்பட்டபோது பெண்களும் ஆண்களுக்கு நிகராக வாக்குரிமையைப் பெற்றுக்கொண்டார்கள். டொனமூர் குழுவின் முன் இந்த சங்கத்தைச் சேர்ந்த மேரி ரட்னம் உள்ளிட்ட பல பெண்கள் அளித்த சாட்சியம் வரலாற்றுப் பதிவுமிக்க கருத்துக்கள். இதன் விளைவாக 1931 இல் நடந்த தேர்தலில் எடலின் மொலமூரே, நேசம் சரவணமுத்து ஆகியோர் சட்டசபைக்கு முதலாவது பெண்களாக தெரிவானார்கள். பின்னர் இந்த சங்கம் “பெண்கள் அரசியல் சங்கம்” (Women’s Political Union) என்று பெயர் மாற்றம் பெற்றது. இந்த இதுவே 1944 இல் அகில இலங்கை பெண்கள் சங்கம் (All Ceylon Women’s Conference) உருவாக காரணமானது. இந்த சங்கத்தின் முதலாவது கூட்டத்தில் அதன் ஆரம்பகர்த்தாக்களில் ஒருவரான மேரி ரட்னம் “சீதனத்தை சட்டபூர்வமாக ஒழிக்கவேண்டும்”  என்று விபரமாக உரையாற்றினார்.

1920 களின் பிற்பகுதியில் மேரி ரட்னம் கனடா சென்று கிராமியப் பெண்கள் மத்தியில் உள்ள பெண்கள் நிறுவனங்கள் பற்றி அறிந்து கொள்வதற்காக கல்விச் சுற்றுப் பயணமொன்றை மேற்கொண்டார். அங்கு பெற்ற அனுபவத்துடன் திரும்பி 1930 இல்“லங்கா மஹில சமித்தி” என்கிற அமைப்பை ஆரம்பித்தார். அதன்  இந்த அமைப்பு கிராமியப் பெண்களையும், நகர்ப்புறப் பெண்களையும் இணைத்து பல்வேறு வேலைத்திட்டக்னலை முன்னெடுத்தது. 1948 இல் நாட்டின் பல பகுதிகளிலும் 125 கிளைகளுடனும் 6000 அங்கத்தவர்களுடனும் அது இயங்கியிருந்தது. 1959 இல் 1400 கிளைகளும் 150,000 அங்கத்தினர்க்களுமாக அது உயர்ந்தது. பிற்காலத்தில் உலகில் முதல் பிரதமராக தெரிவான ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க 1941 இல் இதில் இணைந்ததன் மூலம்தான் பொதுப்பணிகளில் ஈடுபடத் தொடங்கியிருந்தார். அந்த அமைப்பின் பொருளாளராகவும், உப தலைவராகவும் சிறிமா இருந்து வந்தார். 1960இல் பிரதமாராகும் வரை அதில் தீவிர செயற்பாட்டாளராக இருந்தார் சிறிமா.

மேரி ரட்னத்தின் பிறந்தநாளின் போது சிறிமாவோ பண்டாரநாயக்க
சூரியமல் இயக்கம், மலேரியா ஒழிப்பியக்கம் என்பவற்றில் இடதுசாரிகளுடன் இணைந்து அவர் பணியாற்றினார். 1934-1935 காலப்பகுதியில் இலங்கையில் மலேரியா நோய் பரவி ஒரு லட்சத்துக்கும் அதிகமானோரை பலிகொண்டது. அதிகமாக பாதிக்கப்பட்ட கேகாலை மாவட்டத்தில் மேரி ரட்னமும் அவரது மகன் ரொபினும் மேலேறிய ஒழிப்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டார்கள்.  

1937இல் அவர் பம்பலப்பிட்டி தொகுதியில் முனிசிபல் கவுன்சிலரானார். இலங்கையில் முதலாவது பெண் முனிசிபல் கவுன்சிலர் மேரி ரட்னம் தான். அந்தத் தேர்தலில் மேரியை “அந்நியர், கொம்யூனிசத்தைப் பிரசாரம் செய்பவர்; சமயப்பற்றற்ற வெளிநாட்டவர், குடும்பத் திட்ட பிரச்சாரகர்” என்றெல்லாம் அவமதிக்கப்பட்டார்.
“நான் கனடாவில் பிறந்தேன் என்பது உண்மைதான். ஆனால் நாற்பது வருடங்களாக இந்நாட்டு மக்களில் ஒருவராக வாழ்ந்துள்ளேன். எனது நலன்களும் அவர்களது நலன்களும் ஒன்று எனவே கருதினேன். எனது நீண்ட காலச் சேவையானது எனது எதிர்ப்பாளரின் குரலை விடப் பலம் மிக்கது." என்றார் மேரி ரட்னம்
லங்கா சம சமாஜக் கட்சியின் முக்கிய செயற்பாட்டாளராக ரொபின் ரட்னம் விளங்கியமையாலும் அக்காலத்தில் மேரி ரட்னத்துக்கு என். எம்.பெரெரா அளித்த ஆதரவின் காரணமாகவும் மேரி ரட்னத்தின் மீது தமது எதிர் பிரசாரத்தை மேற்கொண்டனர்.

இவ்வளவு எதிர்ப்பின் மத்தியிலும் அவர் 540 வாக்குகளைப் பெற்று தேர்தலில் வெற்றி பெற்றார். அவருடன் போட்டியிட்டவர்களான பிபின் சில்வாவும், ரொபின் சொய்சாவும் முறையே 261, 233 வாக்குகளையே பெற்றனர். நகர சபை மண்டபத்திற்கு வெளியே தேர்தல் முடிவுக்காகக் காத்து நின்ற பெருந்தொகையான மக்கள் மத்தியில் உரையாற்றும் போது "முதலாவது பெண் கவுன்சிலரை முனிசிப்பல் கவுன்சிலுக்கு அனுப்பியமைக்காகப் பம்பலப்பிட்டி பெருமைப்பட வேண்டும்" எனக் கூறினார்.


அவர் பதவி வகித்த காலத்தில் சுகாதாரம், சந்தைகள், வீட்டுவசதிகள், நகர முன்னேற்றம், பொது நுாலகம், நெருக்கடி நிவாரணம் போன்ற விடயங்களில் அதிக சேவைகளைச் செய்தார். ஆனால் அவரை அரசியலிலிருந்து துரத்துவதற்கு எதிரிகள் விடாப்பிடியாக முயற்சி செய்தனர்.

1938 இல் அவரது முகவரி மாற்றம் தொடர்பாக, வாக்காளர் பட்டியலில் இடம் பெற்ற தவறு காரணமாக பதவியிலிருந்து விலக்கப்பட்டார். இதனால் மூன்று வருடங்களும் முழுமையாக அவரால் சேவையாற்ற இயலவில்லை. அதன் பின்னர் அவர் தேர்தலில் போட்டியிட வில்லை.

1949 தேர்தலில் விவியன் குணவர்த்தன, ஆயிஷா ரவுப் ஆகியோரை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். "நான் தொடங்கிய பணியைத் தொடர்வதற்குக் கவுன்சிலில் ஒரு பெண் வேண்டும், அனுபவம், அறிவு, ஆற்றல் கொண்ட இவ்வேட்பாளரை நான் முழு மனதுடன் சிபார்சு செய்வேன்" என்றார்.

மேரி ரட்னத்துக்கு நான்கு ஆண்களும், ஒரு பெண்ணுமாக ஐந்து பிள்ளைகள் இருந்தனர். மூன்றாவது மகன் ரொபின் ரட்னம் (1904-1968) கனடாவில் இடைநிலைக் கல்வி பயின்று மக்ஹில் பல்கலைக்கழகத்தில் உளவியல் முதுமாணிப்பட்டம் பெற்றார். பின்னாளில் கனேடியப் பிரதமரான லெஸ்டர் பிபர்சன் அவரது நண்பராகவும் ஆசிரியராகவும் இருந்தார். 1920 களின் பிற்பகுதியில் லண்டனில் வசித்த ரொபின் தேசியவாதிகளும், சோசலிஸ்டுகளுமான இந்தியாவையும், இலங்கையையும் சேர்ந்த மாணவர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். இலங்கை திரும்பிய பின் யூத் லீக் (youth league) இயக்கத்தில் சேர்ந்தார்.இலங்கையின் முதலாவது அரசியல் கட்சியான லங்கா சமசமாஜக் கட்சியின் ஸ்தாபகர்களில் ரொபினும் ஒருவர் அதன் செயலாளராகவும் கடமையாற்றியிருக்கிறார்..

பிலிப்பைன்சில் வருடாந்தம் ஆசியாவில் சிறந்து விளங்கும் நபர்களுக்காக வழங்கப்படும் “ரமோன் மக்சேசே” விருது (Ramon Magsaysay Award) 1958ஆம் ஆண்டு தொடக்கப்பட்டபோது அதே ஆண்டு முதல் விருது மேரி ரட்னத்துக்குத் தான் வழங்கப்பட்டது. இந்த விருது ஆசியாவின் நோபல் பரிசு என்று அழைக்கப்படுகிறது. ஆனால் மேரி ரட்னம் ஒரு இலங்கையர் அல்ல, ஆசிய நாட்டைச் சேர்ந்தவரும் அல்ல. இலங்கையராக வாழ்ந்த ஒரு கனேடியர்.

மேரி ரட்னம் 15.05.1962 இல் மரணமானார். இலங்கையர்களுக்காகவே வாழ்ந்து மடிந்த அந்நிய நாட்டவர் வரிசையில் மேரி ரட்னம் தனித்துத் தெரிபவர்.

உசாத்துணை:
...மேலும்

Jul 16, 2017

ஆயிஷா றவுப் எனும் விதேச பெண் ஆளுமை - என்.சரவணன்


இந்த பத்தியில் இலங்கைக்காக பணியாற்றிய அந்நியர்கள் பற்றியே அதிகம் பேசிக்கொண்டு வருகிறோம் அந்த வகையில் இந்தியாவை பிறந்த இடமாகவும், இலங்கையை புகுந்த இடமாகவும் ஆக்கிக்கொண்டு இலங்கையின் வளர்ச்சியில் பங்குகொண்ட ஆயிஷா பற்றியது இன்றைய பத்தி. இந்த ஆண்டு அவரின் நூற்றாண்டு கொண்டாடப்படுகிறது.

1917இல் கேரளாவில் தெல்லிச்சேரி எனும் பகுதியில் பிறந்த ஆயிஷா பீபியின் (Ayesha Beebi Mayen) தந்தை ஒரு முற்போக்காளராவார். மதப் பழமைவாதத்திற்கு அப்பாற்பட்டவராக இருந்துவந்தவர். இந்திய தேசிய காங்கிரசிலும், முஸ்லிம் லீக்கிலும் தலைமைத்துவத்தில் இருந்தவர். 6 வயதிலேயே தாயை இழந்த ஆயிஷா தந்தையின் சுதந்திர வளர்ப்பில் உயர்ந்தவர். தாயில்லாத ஆயிஷா தகப்பனின் அரசியல் செயற்பாடுகளுடன் தான் வளர்ந்து வந்தார்.  மிக அரிதாக பெண்களே பயின்று வந்த அக்காலத்தில்; மலபார் பகுதியிலேயே முதலாவதாக பட்டம் பெற்ற (சென்னைப் பல்கலைக்கழகத்தில்)  முஸ்லிம் பெண் என அறியப்படுபவர். அதன்பின்னர் அங்கேயே சிறப்பு கல்வி அதிகாரியாக நியமனம் பெற்றார்.

கோயம்புத்தூரில் வாழ்ந்து கொண்டு இலங்கையில் வர்த்தகம் செய்து வந்த வர்த்தகர்  எம்.எஸ். எம். றவூப் என்பவரைத் 1943 இல் திருமணம் செய்து 1944 இல் கொழும்பில் குடியேறினார். அன்றைய அரசாங்க சபை உறுப்பினராக இருந்த முஸ்லிம் தலைவர்களில் ஒருவரான சேர் ராசிக் பரீத் முஸ்லிம் சமூகத்துக்கு அயேஷாவின் கல்விப் புலமையைப் பயன்படுத்தச் செய்ய வேண்டும் என்று; இலவசக் கல்வியின் தந்தை என்று நாம் கொண்டாடும் கல்வி அமைச்சர் அன்றைய கல்வி அமைச்சர் சீ.டபிள்யு.டபிள்யு. கன்னங்கரவுக்கும் கல்வி அதிகாரிகளுக்கும் அறிமுகப்படுத்தினார். அவர்களின் மூலம் மருதானை மகளிர் பாடசாலைக்கு ஆசிரியராக நியமிக்கப்பட்டார்.

1945ஆம் ஆண்டு உலக யுத்தம் முடியும் வரை பம்பலப்பிட்டியில் இருந்த ராசிக் பரீதுக்கு சொந்தமாக இயங்கிவந்த அரை ஏக்கர் நிலத்தில் இருந்த பாடசாலை மூடப்பட்டு இராணுவத்தினரால் பயன்படுத்தப்பட்டு வந்தது. போர் முடிந்ததும் 1946ஆம் நவம்பர் 1ஆம் திகதி ராசிக் பரீத் அந்தக் காணியில் மீண்டும் ஆயிஷாவை அதிபராகக் கொண்டு (ஆங்கில மூல) முஸ்லிம் பெண்கள் கல்லூரியை ஆரம்பித்தார்.

மிகுந்த சிரமத்துக்கு மத்தியில் வெகு இரு ஆசிரியைகளும், இருபது மாணவிகளுடனும் சிரமத்தின் மத்தியில் அவர் கட்டியெழுப்பிய அந்தக் கல்லூரியில் இருந்து 25 வருட சேவைக்குப் பின் அவர் 1970 ஆம் ஆண்டு ஓய்வு பெறும்போது ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகளைக் கொண்ட பிரபல பாடசாலையாக ஆக்கப்பட்டிருந்தது. இன்று அது 3500க்கும் மேற்பட்ட மாணவிகளைக் கொண்ட பிரமாண்ட பாடசாலை. பெருமளவு முஸ்லிம் பெண்கள் அப்போது கல்வி கற்று உயர்கல்வியையும் முடித்துக் கொண்டு பல உயர் பணிகளில் ஈடுபடத் தொடங்கியிருந்தார்கள். 1960ஆம் ஆண்டு பதியுதீன் முகமத் கல்வி அமைச்சரான வேளை பல தனியார் பாடசாலைகள் அரசாங்க பாடசாலைகளாக ஆக்கப்பட்டபோது இந்தக் கல்லூரியும் அரசின் கீழ் வந்தது.

முஸ்லிம் பெண்கள் கல்லூரி
கல்வி நடவடிக்கைகளை விட அரசியல் நடவடிக்கைகளுக்கே ஆயிஷா அதிக நேரம் செலவிடுகிறார் என பெற்றோரர்கள் மத்தியில் இருந்து கடும் விமர்சனங்கள் எழுந்தன. அதன் காரணமாக அவரது பதவிக் காலம் முடியுமுன்பே அவர் மாநகர சபையிலிருந்து 1961இல் விலகினார். 12 வருடகால அரசியல் வாழ்க்கைக்கு முழுக்கு போட்டுவிட்டு முழுநேர கல்விப் பணியில் ஈடுபடுத்திக் கொண்டார். அவர் அரசியலில் தோல்வியுற்று விலகியவரல்ல, மாறாக கல்விச் சேவைக்காக அரசியல் பணியை பதவியில் இருக்கும்போதே விட்டுக்கொடுத்துவிட்டு வந்தவர்.

அரசியல்
பெண்கள் வாக்குரிமைச் சங்கத்தைச் சேர்ந்த மேரி ரத்னம் (இலங்கை உள்ளூராட்சி சபையின் முதலாவது பெண்) அயேஷாவின் அரசியல் பிரவேசத்துக்கு போதிய ஊக்குவிப்பைச் செய்தார். அதுபோல ஆயிஷாவின் கணவர் றவுப் உற்சாகம் கொடுத்து ஊக்குவித்து வந்தார்.

கொழும்பில் இயங்கி வந்த மலையாள வர்த்தகர் சங்கத்தைச் சேர்ந்த பெண்களின் சமூக செயற்பாடுகளை ஊக்குவித்து வழிகாட்டி வந்திருக்கிறார். மலையாளிகள் சங்கத்தில் ஆயிஷா வந்த காலத்திலிருந்தே ஈடுபாடு காட்டி வந்தார். 30களில் மலையாளிகளுக்கு எதிரான போக்கு தலைதூக்கியிருந்தபோது இந்த சங்கம் தொழிற்சங்கங்களாலும், இடது சாரிக் கட்சிகளாலும் ஆதரவளிக்கப்பட்டன.

1947ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் ஆயிஷா போட்டியிட்டார். ஏ.ஈ.குணசிங்க, பீட்டர் கெனமன், டீ.பீ.ஜாயா ஆகியோருடன் போட்டியிட்டிருந்தார் என்பது கவனிக்கத்தக்கது. அந்தத் தேர்தலில் தனது கணவரின் உறவினரான எம்.எச்.எம்.முனாஸ் (M.H.M.Munas) அவர்களும் போட்டியிட்டிருந்தார். முனாஸ் நான்காவது இடமும் (8600 வாக்குகள்) ஆயிஷா  8486 வாகுகளைப் பெற்று ஐந்தாவது இடத்துக்கும் வந்தார்கள். முஸ்லிம் வாக்குகள் அவ்வாறு சிதைக்கப்படாமலிருந்தால் ஆயிஷா பாராளுமன்றத்துக்கு அன்று தெரிவாகியிருப்பார்.

அது போல இலங்கை இந்தியர் காங்கிரஸ் (Ceylon India Congress) இல் அப்துல் அசிஸ் அவர்களோடும் பணி புரிந்த ஆரம்ப காலத்தில் இந்திய வம்சாவளியினரின் குடியியல் உரிமைக்காக குரல் கொடுத்தார் ஆயிஷா. ஆனால் அவர் எந்த கட்சியிலும் இணையவில்லை. ஆரம்பத்திலிருந்தே சுயேச்சை வேட்பாளராகவே போட்டியிட்டார். அவரை பிரதி மேயராக ஆக்குவதற்கு முழு ஆதரவையும் அன்றைய இடதுசாரிக் கட்சிகள் வழங்கின. 1954இல் அவர் இடதுசாரிக் கட்சிகளுடனான உறவிலிருந்து துண்டித்துக் கொண்டு ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்தார்.

1949இல் கொழும்பு மாநகரசபைத் தேர்தலில் போட்டியிட்டு போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதே மாநகர சபையில் ஏக காலத்தில் விவியன் குணவர்த்தன, மேரி ரத்னம் ஆகியோருடன் சேர்ந்து மூன்று பெண்கள் அங்கம் வகித்தார்கள். ஆயிஷா; உள்ளூராட்சி மன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்ட முதல் முஸ்லிம் பெண் மட்டுமல்ல அவர். இலங்கையின் முஸ்லிம் அரசியலில் பிரவேசித்த முதல் பெண்ணும் அவர் தான். 1952ம் ஆண்டுத் தேர்தலிலும் வெற்றி பெற்று கொழும்பு மாநகரசபையின் துணை மேயரானார். 

1961 வரை மாநகர சபை அரசியலில் தீவிரமாக கடமையாற்றினார். கொழும்பு மாநகரத்துக்குள் இருந்த சேரிவாழ் மக்களுக்காக பல நலன்களை மேற்கொண்ட அவர் குறிப்பாக சிறுவர்களுக்கான விளையாட்டு திடல்களை அமைப்பது, அங்கு சுகாதார வசதிகளை மேம்படுத்துவது, கழிப்பறை வசதிகளை பெருக்குவது போன்ற விடயங்களில் அதிக கவனத்தை செய்து வந்தார்.

1956 -1960ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கையின் கல்வி அமைச்சின் மத்திய ஆலோசனைக் கொமிட்டி உறுப்பினராக இருந்திருக்கிறார். முஸ்லிம் பெண் கல்வியை ஊக்குவித்த முஸ்லிம் பெண் கல்விமானாக முஸ்லிம் மக்கள் மத்தியில் புகழ் பெற்று விளங்குகிறார். அவரின் 12 வருட அரசியல் காலத்தில் அவர் பெண் கல்விக்காகவும், முஸ்லிம்கள் மத்தியில் உள்ள வரதட்சணை முறையை நீக்குவதற்கான சட்டத்தைக் கொணர்வதற்காகவும் பாடுபட்டார்.

ஓய்வு பெற்றதன் பின்னர் 1971ஆம் ஆண்டு அவர் சாம்பியா நாட்டு உயர் கல்வி நிறுவனத்தில் அரசியல் விஞ்ஞான ஆசிரியையாக கடமையாற்றச் சென்றுவிட்டார்.

1977ஆம் ஆண்டு தேர்தலில் அவருக்கு மீண்டும் அரசியலுக்குத் திரும்பும் ஆர்வம் இருந்தபோதும் அவரை வேட்பாளர் பட்டியலில் உள்ளிட ஐ,தே.க. தவறியிருந்தது. ஆனாலும் அவர் ஜாபிர் ஏ. காதர், ஆர்.பிரேமதாச, வின்சன்ட் பெரேரா போன்றோரின் வெற்றிக்காக பிரச்சாரம் செய்தார்.

இலங்கையின் அரசியலில் பங்குபற்றிய முதல் முஸ்லிம் பெண்; இலங்கையர் அல்லாதவர் என்பதுடன் முஸ்லிம் பெண்களின் அரசியலுக்கு வழிகாட்டிய முன்னோடி; ஒரு அந்நியர் என்பதும் கவனிக்கத்தக்கது.

அயேஷவுக்குப் பின்னர் 2000இல் பேரியல் அஷ்ரப் (கணவர் M.H.M.அஷ்ரப் ஹெலிகொப்டர் விபத்தில் பலியானதைத் தொடர்ந்து) அரசியலுக்கு வரும் வரை முஸ்லிம் சமூகத்திலிருந்து பெண்கள் அரசியலில் பரதிநிதித்துவம் வகிக்கவில்லை.

ஆயிஷாவின் கணவர் எம்.எஸ்.எம்.றவுப் 1964ஆம் ஆண்டு தனது 49வது வயதில் மாரடைப்பால் காலமானார். அதன் பின்னர் அவர் தனது இரண்டு பிள்ளைகளுடனும் ஆறு பேரக்குழந்தைகளுடனும் கொள்ளுபிட்டியில் வாழ்ந்தார். 1990ஆம் ஆண்டு தேசபந்து என்கிற உயரிய அரச விருது அரசியலிலும், கல்வியிலும் அவர் ஆற்றிய சேவைக்காக கிடைத்தது.

08.01.1992 அன்று ஆயிஷா தனது 75வது வயதில் மாரடைப்பால் கொழும்பில் காலமானார். ஒரு முஸ்லிம் பெண்ணாக இருந்தபோதும் அவர் மதத்தோடு தன்னை பிணைத்து வைத்திருக்கவில்லை. அதன் காரணமாகவோ என்னவோ இத்தனை மாண்புக்குப் பிறகும் அவருக்கு முஸ்லிம் சமூகத்தில் உரிய இடம் கிடைக்கவில்லையோ என்று அவர் பற்றி எழுதிய பர்சானா ஹனீபா குறிப்பிடுகிறார்.

நன்றி - வீரகேசரி - சங்கமம்


...மேலும்

Jul 5, 2017

டொரின் விக்கிரமசிங்க : சோஷலிசப் பெண் போராளி - என்.சரவணன்


இலங்கையின் இடதுசாரித்துவம், அரசியல், கல்வி, சுகாதாரம், சமூக சேவைகள், பெண்கள் போன்ற விடயங்களில் டொரினுக்கு நிகராக ஈடுபட்ட வேறெந்த விதேச பெண்ணும் வரலாற்றில் கிடையாது.

குடும்பப் பின்னணி
1907ஆம் ஆண்டு பெப்ரவரி 15ஆம் திகதி இங்கிலாந்தில் செஷர் பகுதியில் பிறந்த ‘டொரின் வினிப்ரெட் யங்’ (Doreen Winifred Young) மூன்று தலைமுறையாக இடதுசாரி பாரம்பரியமுள்ள குடும்பத்தில் பிறந்தவர். டொரினின் பாட்டனார் (தாயாரின் தந்தை) ரொபர்ட் வியர் (Robert Weare) லண்டனில் பலராலும் அறியப்பட்ட ஒரு இடதுசாரி செயற்பாட்டாளர். அதன்வழியே அவர் மகள் லில்லி வியர் (Lily Weare) ஒரு இடதுசாரி தொழிற்சங்க செயற்ப்பாட்டளராக இருந்தார். அப்பேர்பட்ட சூழலைக் கொண்ட பின்னணியில் டொரின் மட்டும் விதிவிலக்காவாரா என்ன.

டொரீன் கற்ற வித்தியாசமான பாடசாலையாக திகழ்ந்த சென் கிரிஸ்டோபர் கல்லூரி அன்று பிரம்மஞான சங்கத்தைச் சேர்ந்தவர்களால் நடத்தப்பட்டது. அவர்களின் முற்போக்குக் கொள்கையாலும், மதச்சார்பற்ற வழிநடத்தலாலும் வளர்ந்தார் டொரின். அங்கு தான் முதன்முதலில் அவர் இந்திய விடுதலைப் போராட்டம் பற்றிய விபரங்களை அறிந்தார். அந்த பாடசாலையின் “பேச்சு நாளில்” (Speech day) ஒரு முறை; பிரம்மஞான சங்கத்தைச் சேர்ந்த அன்னி பெசன்ட் பிரதம அதிதியாகவும் கலந்து கொண்டிருக்கிறார்.

அதன் பின்னர் லண்டன் பொருளாதார கல்லூரியில் (LSE – London School of Economics and Politics) உயர்தரத்தை கற்றார். அப்போது அக்கல்லூரியில் கிருஷ்ணமேனன் (பிற்காலத்தில் இந்தியாவில் வெளியுறவு அமைச்சராக இருந்தவர்.) லண்டனில் கல்வி கற்றுக்கொண்டே வரலாறு கற்பிக்கும் விரிவுரையாளராக இருந்தார். அவரது விரிவுரையினூடாக இந்திய சுதந்திரப் போராட்டம் பற்றிய சிந்தனைகள் மாணவர்கள் மத்தியில் பரவின. இவரிடம் கற்ற டொரின் கிருஸ்ணமேனனின் ஆலோசனையின்படி 1926இல் பல்கலைக்கழகத்தில் பொருளாதார அரசியல் துறைகளை கற்கத் தொடங்கினார். “இந்தியா லீக்” (India League) எனப்படும் அமைப்பில் கிருஷ்ணமேனனின் செயலாளராகவும் டொரின் பணியாற்றினார். 

சுதந்திரப் போராட்டத்தில் ஈர்ப்பு
அந்த இயக்கத்தில் ஏகாதிபத்தியத்துக்கு எதிராக இயங்கிய இந்தியர்களும், இலங்கையர்களும் அறிமுகமானார்கள். அங்கு தான் பிற்காலத்தில் அவரது கணவராக ஆன எஸ்.ஏ.விக்கிரமசிங்கவின் அறிமுகமும் கிடைத்தது. எஸ்.ஏ.விக்ரமசிங்க இலங்கையில் பிரம்மஞான சங்கம் உருவாக்கிய மகிந்த கல்லூரியில் கல்வி கற்றவர். ஒரு நிலச்சுவாந்திர குடும்பத்தைச் சேர்ந்தவர்.

பல்கலைக்கழகத்தில் முக்கியப் பிரமுகராக இருந்தவரும் மார்க்சீய கருத்துக்களைக் கொண்டவருமான ஹெரால்ட் லஸ்கியின் கருத்துக்களால், ஈர்க்கப்பட்டார் டொரீன். கூடவே லண்டனில் பிரம்மஞான சங்கத்தில் ஈடுபாடு காட்டி வந்தார். லண்டனில் இருந்த கொம்யூனிஸ்ட் செயற்பாட்டாளர்களும், பிம்மஞான சங்கத்தைச் சேர்ந்தவர்களும், ஏகாதிபத்திய விரோத செயற்ப்பாட்டாளர்களுமே அவரின் நட்பு வட்டமானது. அந்தக் கல்லூரியின் மாணவர் இயக்கத்தின் செயலாளராகவும் இயங்கியதில் அவரது தலைமைத்துவ பண்பை உயர்த்த வழிவகுத்தது.

டொரினின் நெருங்கிய பள்ளித் தோழி சார்லி (Charlotte Jonas). சார்லி ஒரு யூதப் பெண். இருவரும் சேர்ந்து ஒரு சமயத்தில் சுவீடனில் கோடைகால கற்கையை முடித்துக் கொண்டு ஜேர்மனிலும் ஒன்றாக கற்றார்கள். இருவரும் சேர்ந்து இந்தியாவுக்குச் சென்று அங்கு ஏதாவது ஒரு தொழிலைச் செய்துகொண்டே சுதந்திரப் போராட்டத்தில் பங்கு கொள்வதே டொரீனின் இலக்காக இருந்தது. என்ற போதும், அம்முயற்சிகள் தோல்வியடைந்தன. டொரினுக்கு இலங்கையில் வேலையொன்றையும் தேடித்தருவதாக எஸ்.ஏ.விக்கரமசிங்க ஒப்புக்கொண்டதன்பின் டொரின் இலங்கை வரத் தீர்மானித்தார்.

இலங்கை வருகை
1930இல் இங்கிலாந்திலிருந்து கப்பலில் தனது தோழி சார்லியுடன் ஒரே நோக்கத்துக்காக (Charlotte Jonas) புறப்பட்டார். அந்தக் கப்பலில் பயணம் செய்த தோட்ட உரிமையாளர்களை காரசாரமாக கண்டித்து விமர்சித்த டொரினும் சார்லியும் பலரது கவனத்துக்குமுள்ளானார்.

1930 நவம்பர் மாதம் கொழும்பை வந்தடைந்தார். அடுத்த நாள் பத்திரிகையிலேயே அவர் மாத்தறை சுஜாதா வித்தியாலயத்தில் பாடசாலை அதிபராக நியமிக்கப்பட்டிருக்கிறார் என்கிற செய்தியும் வெளிவந்தது. அப்போது அவருக்கு வயது 23. டொரினும் சார்லியும் மாத்தறை சென்றடைந்தபோது அங்கு பலத்த ஆரவாரமான வரவேற்பு அளிக்கப்பட்டது. மாத்தறை சுஜாதா வித்தியாலயம் பிரித்தானிய மாதிரியைக் கொண்டதான, பிரித்தானிய விசுவாசத்தை பிரதிபலிக்கின்ற ஒரு பாடசாலையாக இயங்கியதைக் கண்டு ஆச்சரியப்பட்ட அவர். அந்த பாடசாலையில் பல்வேறு சீர்திருத்தங்களை செய்தார்.

சுஜாதா பாடசாலையில் சார்லியும் ஒரு ஆசிரியையாக கடமையாற்றியதோடு அங்கு பணியாற்றிய ஏனைய ஆசிரியைகளும் தீவிர லட்சியவாதிகளானார்கள். அந்தப் பாடசாலையில் பணியாற்றியபடி தனது அரசியல் வேலைகளையும் செய்யத்தொடங்கினார். அப்பாடசாலையில் கடமையாற்றிய ஏனைய ஆசிரியர்களும் தேசிய அரசியல் சுதந்திரப் போராட்டம் என்பனவற்றில் ஈடுபாடுகொள்வதற்கு டொரின் காரணமானார். இந்த ஆசிரியர்கள் பிற்காலங்களில் ”சூரியமல்” இயக்கத்திலும் தீவிரமாக ஈடுபாடுகொண்டனர். 

அதிபராக...
அதன் பின்னர் டொரீனை கொழும்பிலுள்ள பிரபல பாடசாலையான விசாகா மகளிர் கல்லூரியில் பணிபுரிய அழைப்பு வந்தது. ஆனால் அதற்கிடையில் காலனித்துவ, மற்றும் ஆங்கிலேய எதிர்ப்பாளரான எஸ்.ஏ.விக்கிரமசிங்கவை (அப்போது அவர் 1931இலிருந்து அரசாங்க சபையில் அங்கத்துவம் வகித்து வந்தார்.) டொரீன் திருமணம் செய்துகொள்ளப் போகிறார் என்பதை அறிந்த அவர்கள் அந்த அழைப்பை திரும்பப் பெற்றுக்கொண்டனர்.


1933 ஏப்ரல் 26ஆம் திகதி டொரின் எஸ்.ஏ.விக்கிரமசிங்காவை மணந்தார். எஸ்.ஏ.விக்கிரமசிங்க இலங்கை பாராளுமன்றத்துக்கு தெரிவுசெய்யப்பட்ட (1931) முதலாவது இடதுசாரி. லங்கா சம சமாஜக் கட்சியின் ஆரம்பகர்த்தாக்களில் ஒருவர். பின்னர் அதிலிருந்து  கொம்யூனிஸ்ட் கட்சி பிரிந்ததன் பின் நீண்ட காலம் அதன் தலைவராக இருந்தவர். காந்தி சிறையில் இருந்த போது எஸ்.ஏ.விக்கிரமசிங்காவும் டொரினும் சென்று சந்தித்துவிட்டு வந்தனர். எஸ்.ஏ.விக்கிரமசிங்கவின் பாராளுமன்ற உரைகளை டொரீன் சில தடவைகள் தயாரித்துக் கொடுத்திருக்கிறார் என்றும் குமாரி ஜெயவர்தன தனது நூலில் விபரிக்கிறார்.

அதன் பின்னர் இலங்கையின் முன்னணி பாடசாலையான ஆனந்த கல்லூரியின் சகோதர பாடசாலையான ஆனந்தா மகளிர் பாடசாலைக்கு அதிபராக நியமிக்கப்பட்டார் (1933-1935). அந்தக் கல்லூரியில் பல்வேறு மாற்றங்களை செய்தார். சேலை கட்டிக்கொண்டு இலங்கைப் பெண்ணாகவே அவர் காட்சியளித்தார்.

1934ஆம் ஆண்டு இந்தியாவிலிருந்து ரவீந்திரநாத தாகூர் சாந்தி நிகேதனைச் சேர்ந்த தனது பாடகர்கள், நடனக் கலைஞர்களுடன் வந்திருந்தபோது டொரீன் இந்த பாடசாலையில் தான் தங்கவைத்து உபசரித்தார்.

“சூரியமல்” இயக்கம்

இலங்கையின் முதலாவது அரசியற் கட்சியும் இடது சாரிக் கட்சியுமான லங்கா சமசமாஜக் கட்சி தோற்றம் பெறுவதற்கு முன்னோடி இயக்கமாக ”சூரிய மல்” (சூரிய மலர் – பூவரசுப் பூ) இருந்தது. முதலாம் உலக யுத்த காலத்திலிருந்து ஆண்டு தோறும் போர் வீரர்களுக்கு நிதி திரட்டும் முகமாக பிரித்தானிய சாம்ராஜ்ஜியத்தின் கீழ் இருந்த நாடுகளில் “பொப்பி பூ” விற்கும் நாள் இலங்கையிலும் நிகழ்ந்து கொண்டிருந்தது. அதே யுத்தத்தில் ஈடுபட்ட உள்ளூர் வீரர்களுக்கு அதனால் எந்த நன்மையும் கிடைப்பதில்லை என்பதால் இலங்கையர் நலனுக்காக 1931இல் நவம்பர் 11ஆம் திகதியன்று “சூரியமல் தினம்” ஏலியன் பெரேரா என்கிற முன்னாள் வீரரால் உருவாக்கப்பட்ட அந்த இயக்கத்தில் தலைமையேற்றதன பின்னர் டொரின் அதன் தொனிப்பொருளை விரிவான தளத்திற்கு எடுத்துச் சென்றார். அவர். பாசிச எதிர்ப்பு, போர் எதிர்ப்பு, காலனித்துவ எதிர்ப்பு, ஏகாதிபத்திய எதிர்ப்பு, அமைதி, சமாதானம். போன்ற பிரசாரங்களுக்கு அதனை இட்டுசென்றார்கள். 

இரண்டாம் உலக யுத்தம் தொடங்கும் வரை அந்த இயக்கம் இயங்கியது. நிதி திரட்டுவதில் பெரிய வெற்றி ‘சூரியமல்” இயக்கத்திற்கு கிட்டாவிட்டாலும் அவர்களுக்கு சிறந்த பிரச்சார களமாக அமைந்தது அது.  "ஒவ்வொரு சூரிய மலரும் ஏகாதிபத்தியம், பாசிசம், போர் ஆகியவற்றுக்கு எதிராகக் குரல் கொடுக்கும்" என்பதே பிரதான சுலோகமாக இருந்தது.

ஆனந்தா மகளிர் பாடசாலை மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் தேசிய உணர்வு ஊட்டப்பட்டது. “சூரியமல்” இயக்கத்தின் தலைமையகமாக இருந்தது அந்த பாடசாலை. தனது இரு குழந்தைகளில் மூத்த மகளுக்கும் “சூரிய” என்கிற பெயரைத் தான் சூட்டினார்.

மலேரியா எதிர்ப்பியக்கம்
1934-1935 காலப்பகுதியில் இலங்கையில் மலேரியா நோய் கடுமையாகப் பரவி லட்சத்துக்கும் மேற்பட்ட உயிர்களை பலிகொண்ட போது டொரின் தலைமையிலான “சூரியமல்” இயக்கம்; ஒரு மலேரியா நிவாரண இயக்கமாக ஆக்கிக்கொண்டு களத்தில் இறங்கியது. குறிப்பாக கேகாலை, குருநாகல், கண்டி போன்ற மாவட்டங்கள் மட்டுமன்றி மலையகத்திலும் பல இந்தியா வம்சாவளி தமிழர்கள் மரணமானார்கள். கொல்வின் ஆர் டீ சில்வா, என்.எம்.பெரேரா, பிலிப் குணவர்த்தன போன்ற தலைவர்கள் நிவாரண உதவிகளை திரட்டிக் கிராமம் கிராமமாகச் சென்று பங்களித்தார்கள். டொரினின் கணவர் எஸ்.ஏ.விக்கிரமசிங்க தனது மருத்துவ நிபுணத்துவத்தை பயன்படுத்தி சிகிச்சை முகாம்களை நடாத்தினார். மக்கள் அவரை டொக்டர் என்றே அன்பாக அழைத்தார்கள். அரிசி பருப்பு போன்றவற்றைப் பகிர்ந்த என்.எம்.பெரேராவை “பருப்பு மாத்தயா”என்றே அழைத்தார்கள்.  இந்த இயக்கம் தான் இலங்கையின் முதலாவது அரசியல் கட்சியும், இலங்கையின் முதலாவது தொழிலாளர் வர்க்க இடதுசாரிக் கட்சியுமான லங்கா சமசமாஜக் கட்சியின் தோற்றத்துக்கு வித்திட்டது.

1920களின் இறுதியில் இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சி கண்டது. வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்தது. 1933இல் வெள்ளவத்தை ஆலைத் தொழிற்சாலை வேலைநிறுத்தப் போராட்டத்துக்கும் அன்றைய இடதுசாரி இளைஞர்கள் பலரை ஈடுபடச்செய்தது. தீவிர தொழிலாளர் இயக்கமாக கருதப்பட்ட ஏ.ஈ.குணசிங்காவின் இலங்கை தொழிற் கட்சி சிதறிக்கொண்டிருந்தது. டொனமூர் அரசியல் சீர்திருத்தத்தின் அறிமுகம், இலங்கை தேசிய காங்கிரசின் (CNC-Ceylon National Congress) மிதவாதம் போன்ற சூழல்; ஒரு இடதுசாரிக் கட்சியின் உடனடி அவசியத்தை உந்தியது.


முதலாவது இடதுசாரிக் கட்சியின் தோற்றம்
எஸ்.ஏ.விக்கிரமசிங்க 1935 டிசம்பர் மாதம் லங்கா சமசமாஜக் கட்சியை ( LSSP - இலங்கையின் முதலாவது அரசியல் கட்சி) தனது தோழர்களான கொல்வின் ஆர்.டீ.சில்வா, பிலிப் குணவர்த்தன, என்.எம்.பெரேரா போன்றோருடன் இணைந்து ஆரம்பித்தனர். அவர்கள் அனைவரும் இங்கிலாந்திலிருந்து உயர்கல்வியைக் கற்று திரும்பிய மாக்சிய செயற்பாட்டாளர்களாக இருந்தனர். அக் கட்சியின் முதல் விஞ்ஞாபனத்தில் தொழிலாளர் சீர்திருத்தம், நிவாரணம்,  விவசாயிகள், சிறுவர் நலன், பொருளாதார சீர்திருத்தம் மற்றும் சிங்கள .தமிழ் மொழிகளின் உபயோகம் என்பன முதன்மை பெற்றது.

கட்சியை உருவாக்குவதன் பின்னணியிலும், அதன் செயற்த்திட்டங்களிலும் தீவிரமாக உழைத்தார் டொரீன். பிற்காலத்தில் விமலா விஜயவர்தன, விவியன் குணவர்த்தன போறோருக்கு வழிகாட்டியாக இருந்ததுடன் இலங்கையின் முதலாவது இடதுசாரி பெண்கள் இயக்கமான “ஐக்கிய பெண்கள் முன்னணி” (எக்சத் காந்தா பெரமுன / United Women's Front) இயக்கத்தை ஆரம்பித்தார்.

சாதியெதிர்ப்பு
டொரீன் மலேரியா எதிர்ப்பியக்கத்தில் செயற்பட்டுக்கொண்டிருந்தவேளை சாதிமுறையின் கொடூரத்தையும் அவர் உணர்ந்துகொண்டார். பெரும்பாலான இடதுசாரி  செயற்பாட்டாளர்கள் பலர் கலப்பு திருமணத்தையே  செய்து கொண்டார்கள். ஒடுக்கப்படும் சாதியினரின் மீட்சிக்கான பணிகளையும் முன்னெடுத்தார்கள். குறிப்பாக இந்தக் காலப்பகுதியில் சிங்கள சமூகத்தில் அதிகம் ஒடுக்கப்பட்ட  சமூகமாக கணிக்கப்பட்ட “ரொடி” சாதியினருக்கு கல்வி வழங்கி அவர்களை சுயமரியாதையுள்ள சூழலுக்கு கொண்டுவருவதற்கான பணிகளையும் மேற்கொண்டார்கள் என்று குமார் ஜெயவர்தனா தனது நூலில் விபரிக்கிறார்.

1934 இல் எஹெலியகொட எனும் பிரதேசத்திலிருந்த ரொடி சமூகத்தைச் சேர்ந்த கமலா எனும் பெண் குழந்தையை விக்கிரமசிங்க உள்ளிட்ட இடதுசாரி தோழர்கள் தத்தெடுத்து வளர்த்தார்கள். ஆனந்தா மகளிர் பாடசாலையில் கல்வி கற்கவைத்து பின்னர் ஒரு தாதியாக ஆகி பின்னர் எஸ்.ஏ.விக்கிரமசிங்கவின் மருத்துவமனையில் பணிபுரிந்தார். பின்னர் இங்கிலாந்தில் திருமணமாகி அங்கேயே நிரந்தரமாக வசித்தார் கமலா.

இங்கிலாந்து பயணம். 
எஸ்.ஏ.விக்கிரமசிங்க 1936 ஆம் ஆண்டு தேர்தலில் மொரவக்க தொகுதியில் தோல்வியடைந்தார். பிரிட்டிஷ் எதிர்ப்பு பணிகளின் காரணமாக டோரீனும் ஆனந்தா மகளிர் கல்லூரியில் இருந்து நீக்கப்பட்டார். வாழ்வாதாரத்துக்கான வருமானமும் குடும்பத்துக்கு நின்று போனது. கணவர் விக்கிரமசிங்கவின் அரசாங்கசபை பணிகளுக்கு ஒத்துழைப்பு, மகளிர் இயக்க பணிகள், சூரிய மல் இயக்க வேலைகள், இரண்டு பாடசாலைகளை தரமுயர்த்துவதில் மேற்கொண்டு வந்தமை போன்ற பல்வேறு பணிகளில் தொடர்ச்சியாக செயற்பட்டுவந்த டொரீன் சோர்வும், களைப்புமுற்று இருந்தார். சிறிது காலம் இங்கிலாந்து சென்று ஓய்வெடுக்கும் படி அவருக்கு அறிவுறுத்தப்பட்டது.

1936 ஓகஸ்டில் அவர் இங்கிலாந்து சென்றார். அங்கு அவர் தனது வருவாய்க்காக வீட்டுப் பணிப்பெண்ணாக  லண்டனில் வசித்து வந்த திருமதி ஹீகார் வீட்டில் (Ms.Heaglaar) பகுதி நேரமாக பணிபுரிந்தார். ஹீகார் பெல்ஜியத்தைச் சேர்ந்த பிரம்மஞான சங்கத்தின் செயர்ப்பாட்டாளர். இந்திய சுதந்திரப் போராட்டத்துக்காக பணிபுரிந்தவரும் கூட.  1937 இல் டொக்டர் விக்கிரமசிங்கவும் லண்டன் வந்தடைந்தார். டொரீனின் பெற்றோர் தமது சேமிப்பில் இருந்த பணத்தை தெற்கு லண்டனில் (Camberwell) சிறு வைத்திய நிலையத்தை அமைக்க விக்கிரமசிங்கவுக்கு கொடுத்துதவினர்.  அதேவேளை இருவரும் லண்டனில் தமது இடதுசாரி இயக்கப் பணிகளைத் தொடர்ந்தனர். யுத்த எதிர்ப்பு நடவடிக்கைகளில் தம்மை ஈடுபடுத்தினர்.

இலங்கை திரும்பலும் கைதும்
டொரீன் இந்த இடைவெளியில் லண்டன் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் கற்கையை முடித்துக்கொண்டார்.  1939 செப்டம்பரில் டொரீன் இலங்கைக்குத் திரும்பினார். அவருக்கு முன்னரே இலங்கை திரும்பியிருந்த எஸ்.ஏ.விக்கிரமசிங்க பிரிட்டிஷ் எதிர்ப்பு நடவடிக்கைகளின் காரணமாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தார்.

விக்கிரமசிங்க இலங்கை வந்திருந்த போது அந்த மூன்று ஆண்டுகால இடைவெளிக்குள் கட்சியிலும் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்திருந்தன. “கொழும்பு சோசலிஸ்ட் கிளப்” என்கிற அமைப்பும் ஐக்கிய சோஷலிச கட்சி (USP – United Socialist Party) எனும் இயக்கத்துடனும் சேர்ந்து போரெதிர்ப்பு, காலனித்துவ எதிர்ப்பு பிரசாரங்களை செய்ததால் அவர் கைதுக்குள்ளாகியிருந்தார்.

டொரீன் தனது முன்னைய கல்விப் பணியை திரும்பத் தொடர்ந்தார். கொழும்பில் நவீன கல்வித்திட்டத்தைக் கொண்ட சொந்த பாடசாலையை இளம் மாணவர்களுக்காக ஆரம்பித்தார். ஆங்கிலம் மீதான மோகத்தின் காரணமாக சிங்கள மொழியை கற்பதை கௌரவமாக பார்க்காத நிலை இருந்ததால் அவர்களுக்கு சிங்கள மொழியை நுணுக்கமாக கற்றுக்கொடுக்கும் வழிமுறைகளை அறிமுகப்படுத்தினார். புதிய வழியிலான சிறுவர்களுக்கான நூல்களையும் வெளிக்கொணர்ந்தார். 1942 இல் ஜப்பான் கொழும்பில் விமானத் தாக்குதல் நடத்தும் வரை ஆப்பாடசாலை இயங்கியது. அந்தப் பாடசாலை இடதுசாரி இயக்கத் தோழர்கள் ஒன்று கூடி உரையாடும் இடமாக இருந்தது. “கொம்யூனிஸ்ட் கட்சி”யின் ஆரம்பத்துக்கு தூபமிடப்பட்டதும் அங்கு தான்.

பாடசாலை மூடப்பட்டதுடன் டொரீன் இரு குழந்தைகளுடனும் 1942 கண்டிக்கு இடம்பெயர்ந்து சிறு வீடொன்றில் வாடகைக்கு இருந்தார். 1943 இல் டொக்டர் விக்கிரமசிங்க மாத்தறை வெள்ளமடம என்கிற கடற்கரையோரமாக ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து குடும்பத்துடன் குடியேறினார். அந்த வீடு கொம்யூனிஸ்ட் கட்சி முடிவுகளை எடுப்பதற்காகக் கூடும் முக்கிய கேந்திர ஒன்றுகூடல் இடமாக ஆனது. 

இரண்டாம் உலக யுத்தத்தில் சோவியத் யூனியனும் இணைந்துகொண்ட போது பாசிசத்துக்கு எதிரான போருக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று சோவியத் யூனியனுக்கும் அதன் நேச அணிக்கும் ஆதரவளித்தது கொம்யூனிஸ்ட் கட்சி. கொக்கல முகாமில் இருந்த பிரிட்டிஷ் துருப்பினர்கள் பலர் (குறிப்பாக பிரிட்டிஷ் தொழிற்கட்சி ஆதரவாளர்கள்) ஒன்றுகூடி விருந்துவைக்கும் இடமாகவும் டொக்டர் விக்கிரமசிங்கவின் வீடு இருந்தது வேறு கதை.

டொரீன் 1945 இல் மீண்டும் குழந்தைகளுடன் இங்கிலாந்து பிரயாணமானார் அங்கு வெஸ்ட் ஹம்ஸ்டீட் இல் அவர் தங்கியிருந்ததும் யுத்த காலத்தில் இலங்கையில் தொழிற்பட்ட கடற்படை அதிகாரி ஐவனின்  (Ivan) மனைவி ஆண் கிளௌட் (Ann clout) வீட்டில் தான். அவர் தொழிற்கட்சியைச் சேர்ந்தவர். அங்கு தங்கியிருந்த போது கொம்யூனிஸ்ட் கட்சி முன்னெடுத்த பல்வேறு போராட்டங்களிலும் பங்குபற்றினார். கூடவே தீவிரமாக பெண்ணுரிமைப் போராட்டங்களிலும் கலந்துகொண்டார். அந்த அனுபவம் தான் அவர் 1946இல் இலங்கை திரும்பியதும் 1947 இல் “ஐக்கிய பெண்கள் முன்னணி” என்கிற இடதுசாரிப் பெண்கள் இயக்கத்தை தோற்றுவிக்க உந்துதலாக இருந்தது. இந்த இயக்கத்தின் சாதனைகளைப் பற்றி தனியாக நிறையவே குமாரி ஜெயவர்த்தனா எழுதியிருக்கிறார்.

பாராளுமன்றத்துக்குத் தெரிவு
கொம்யூனிஸ்ட் கட்சியை பலப்படுத்த டொரீன் கடுமையாக உழைத்தார். 1947ஆம் ஆண்டுத் தேர்தலில் போட்டியிட்ட கொம்யூனிஸ்ட் கட்சிக்கு மொத்த ஆசனங்களில் மூன்று ஆசனங்களே கிடைத்திருந்தது. அந்தத் தேர்தலில் லங்கா சமசமாஜக் கட்சி 10 ஆசனங்களையே பெற்றிருந்தபோதும் தனி ஒரு கட்சி என்கிற வகையில்  அதிக ஆசனங்களைப் பெற்றிருந்ததால் எதிர்க்கட்சித் தலைமையாக ல.ச.ச.க. ஆனது. அதன் தலைவர் என்.எம்.பெரேரா முதலாவது எதிர்க்கட்சித் தலைவராக ஆனார்.

1952ஆம் ஆண்டு தேர்தலிலும் கொம்யூனிஸ்ட் கட்சி 3 ஆசனங்களை மட்டுமே பெற்றிருந்தது. இத் தேர்தலில் தான் அக்குரெஸ்ஸ தொகுதியில் டொரின் விக்கிரமசிங்க போட்டியிட்டார். எஸ்.ஏ.விக்கிரமசிங்காவின் சகோதரியின் கணவரான சரத் விஜயசிங்கவும் அதே தொகுதியில் ஐ.தே.க.வை பிரதிநிதித்துவப்படுத்தி டொரினோடு போட்டியிட்டார்.

சரத் விஜேசிங்க : இலங்கையின் பிரபல கெண்டோஸ் சொக்கலட் கம்பனியின் உரிமையாளரான இவரின் மறைவுக்குப் பின்னர் அந்த வர்த்தகத்தை கையேற்றவர் தான் அவரின் மருமகன் உபாலி விஜேவர்தன. இன்று இலங்கையின் பெரிய ஊடக நிறுவனமாகவும் பலதரப்பட்ட வர்த்தகங்களிலும் ஈடுபடும் நிறுவனமாக அந்த உபாலி நிறுவனம் வளர்ந்திருக்கிறது. ஒரு புறம் ஜே.ஆர் குடும்பமும் மறுபுறம் பண்டாரநாயக்க குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இவர்கள் என்பது இன்னொரு கிளைக்கதை.

1947 ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் தெரிவாகி செனட் சபை உறுப்பினராக இருந்த சரத் விஜேசிங்க கடும் கொம்யூனிஸ்ட் விரோதியாகவே இருந்தவர். 1952 தேர்தல் வேட்புமனுத் தாக்கலின் போது வழக்கறிஞர் கூட்டத்துடன் மாத்தறை கச்சேரிக்குச் சென்ற சரத் விஜேசிங்க தன் மைத்துனர் எஸ்.ஏ.விக்கிரமசிங்கவின் மனைவியான டொரின் விக்கிரமசிங்கவின் வேட்புமனுவுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். ஒரு வெளிநாட்டுப் பெண்ணான டொரின்னுக்கு இலங்கையில் ஆசனமொன்றுக்காக போட்டியிட உரிமை இல்லை என்றும் அதனை நிராகரிக்கும்படியும் வாதிட்டார். ஆனால் அந்த மனுவை நிராகரித்த அந்த தேர்தல் அதிகாரி டொரின் ஒரு பதிவு செய்யப்பட்ட வாக்காளர் என்றும் அதுவே வேட்பாளருக்கான தகுதியென்றும் கூறினார். அந்த தேர்தலில் டொரின் வெற்றி பெற்றார்.  எஸ்.ஏ.விக்கிரமசிங்க தோல்வியுற்றார்.

பலத்த போட்டியின் மத்தியில் இடம்பெற்ற இத்தேர்தலில் ”வெள்ளைக்காரப் பெண்”, ”அந்நிய நாட்டவள்” போன்ற கோஷங்களை எழுப்பி டொரினுக்கு எதிராக எதிர் வேட்பாளர்கள் செயற்பட்டனர். எவ்வாறாயினும் அவமானங்களையும் எதிர்கொண்டபடி டொரின் அத் தேர்தலில் வெற்றிபெற்றார். டொரினுக்கு 16,626 வாக்குகள் கிடைத்தன. 1001 வாக்கு வித்தியாசத்தில் அவர் வென்றிருந்தார். முதற்தடைவையாக ஆசிய நாடொன்றில் பொது மக்களால் தெரிவு செய்யப்பட்ட விதேச பெண்ணாக வரலாற்றில் பதியப்பட்டார் டொரின். 

1956 வரையான நான்கு ஆண்டுகளுக்குள் அவர் இலங்கை மக்களுக்காக ஆற்றிய பாத்திரம் அளப் பெரியது. குறிப்பாக சிறுவர்கள், பெண்கள் விடயத்தில் பல சட்ட திருத்தங்களுக்காக போராடினார். கணிசமான வெற்றியையும் பெற்றார். பெண்களுக்கும் சம ஊதியம் கிடைப்பதற்காகப் போராடிகொண்டே இருந்தார். சர்வதேச தொழிலாளர் சங்கமான ILO வின் விதிமுறைகளை இலங்கை கடைப்பிடிப்பதில்லை என்றும் ஊதியம் வழங்குவதில் காணப்படும் இன, பால், பாரபட்சத்தை நீக்கவேண்டும் என்றும் பாராளுமன்றத்தில் தொடர்ச்சியாக குரல் கொடுத்தார்.

“ஏன் ராமசாமிக்கும், ஜுவானிஸ்ஸ் அப்புவுக்கும் கிடைக்கும் ஊதியம் லெட்சுமிக்கும், மேரி நோனாவுக்கும் கிடைப்பதில்லை. அவர்கள் பெண்கள் என்பதால் தானே.” என்றார்.

சிறுவர்கள் கற்கும் பல பள்ளிகூடங்களுக்குச் சென்று அந்த மோசமான நிலைமைகளை பாராளுமன்றத்தில் எடுத்துச் சொன்னார். இலங்கையின் வெளியுறவுக் கொள்கை அமெரிக்க ஏகாதிபத்திய நலன்களுக்கு சாய்ந்து இருப்பதை பாராளுமன்றத்தில் காரசாரமாக வெளியிட்டார்.

1956ஆம் ஆண்டு தேர்தலில் அவர் போட்டியிடவில்லை என்ற போதும் தனது பிரதேசத்தில் தொடர்ந்தும் சீர்திருத்த நடவடிக்கைகளில் ஈடுபட்டார். ஆனால் எஸ்.ஏ.விக்கிரமசிங்க போட்டியிட்டு மீண்டும் பாராளுமன்றம் சென்றார். அவர் 70ஆம் ஆண்டு தேர்தல் வரை பாராளுமன்றத்தில் அங்கம் வகித்தார். 70ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் இடம்பெற்ற 1931 காலப்பகுதியில் அங்கம் வகித்த ஒரேயொரு மூத்த பாராளுமன்ற உறுப்பினராக எஸ்.ஏ.விக்கிரமசிங்க மட்டும்தான் இருந்தார். அவர் 1981இல் இறந்ததன் பின்னரும் டொரின் தனது அரசியல், சமூகப் பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.

முன்னுதாரண சர்வதேசியவாதி
இலங்கையின் பாராளுமன்ற அரசியலில் பங்குகொண்ட பெண்களில் டொரினின் பங்களிப்பு மிகவும் காத்திரமான வரலாற்றுப் பாத்திரம் என்றால் அது மிகையில்லை.  இலங்கை கொம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தெரிவான ஒரே ஒரு பெண்ணும் டொரீன் தான்.

மார்சிஸ்டுகளுக்கு தேசம் இல்லை அவர்கள் சர்வதேசியவாதிகளே என்பதற்கு முன்னுதாரணமாக திகழ்ந்தவர் டொரீன். நசுக்கப்பட்டு வந்த இன்னொரு நாட்டின் விடிவுக்காகவும், விடுதலைக்காகவும் போராடிய சர்வதேசியவாதிகள் வரிசையில் ஒரு முக்கிய பாத்திரம் டொரீன்.

தன் தாய்நாடு ஆக்கிரமித்து இருந்த ஒரு நாட்டின் விடுதலைக்காகவும், அந்த மக்களின் விடிவுக்காகவும் தனது சொந்த நாட்டுக்கு எதிராக போராடிய கொள்கைப்பிடிப்பு மிக்க போராளி அவர். ஐக்கிய பெண்கள் முன்னணி என்கிற முதலாவது இடதுசாரிப் பெண்கள் இயக்கத்தையும் தொடக்கியவர் அவர் தான். பல முற்போக்கு விடுதலை அமைப்புகளை உருவாக்கிய முன்னோடி.

இலங்கையின் அரசியலில் மக்கள் பிரதிநிதியாக தெரிவு செய்யப்பட்ட இலங்கையரல்லாத இரு பெண்களைக் குறப்பிட முடியும். ஒருவர் ஆயேஷா ரவுப் (முன்னாள் பிரதி மேயர்), அடுத்தவர் டொரீன் விக்கிரமசிங்க.

டொரின் 20.05.2000 அன்று தனது 93 வது வயதில் இறந்தார். அவரது உடல் அவரின் விருப்பப்படி மருத்துவ பீடத்துக்கு தானமாக அளிக்கப்பட்டது.  இன்றைய பெண்கள் இயக்கங்களும் பெண்கள் தினத்தின் போது டொரினை மறந்துவிட்டார்கள் என்றால், தொழிலாளர் தினத்தில் கூட இடதுசாரி இயக்கங்கள் பல டொரீனை மறந்துவிட்டன என்பதையே காண முடிகிறது.

டொரின் பற்றி பலரும் ஆய்வுகள் செய்திருக்கிற போதும் விரிவான ஆய்வை நூல் வடிவத்தில் கொடுத்தவர் கலாநிதி குமாரி ஜெயவர்த்தன. டொரின் பற்றி பல தடவைகள் அவர் கட்டுரைகள் எழுதியிருக்கிறார். முக்கிமாக இலங்கையில் சோசலிசப் பெண்கள் (Socialist women of Sri Lanka) என்கிற நூலிலும், “டொரின் விக்கிரமசிங்க: இலங்கையில் மேற்கத்தேய தீவிரவாதி” (Doreen Wickremasinghe. A Western Radical in Sri Lanka.) என்கிற சிறு கைநூலிலும் அவரைப் பற்றி பல மேதிக தகவல்களை அறிந்துகொள்ளலாம். சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் அவர் பற்றி வெளிவந்த அளவுக்கு தமிழில் வெளிவந்ததில்லை.


உசாத்துணை:
  • பாராளுமன்ற அரசியலில் பெண்களும் பெண்களின் அரசியலும் – என்.சரவணன்
  • History of the up-country Tamil people in Sri Lanka. by S.Nadesan, Sri Lanka : Nandalala : Ranco Printers and Publishers Ltd., 1993
  • Doreen wickramainghe A Western Radical in SriLanka
  • Women in Politics in Sri Lanka: the Left Movement - Pulsara Liyanage
  • ඇය සූරිය මලකි (ඩොරින් වික්‍රමසිංහගේ කතාව) (அவள் ஒரு “சூரிய மல்” தொடர் கட்டுரை) - සරත් රත්නායක
  • Socialist women of Sri Lanka – by Wesley S. Muthiah, Selvy Thiruchandran, Sydney Wanasinghe – A young socialist publication - 2006
  • A tribute to Doreen Wickramasinghe – by Malathi de Alwis -  Cat’s Eye, A Feminist Gaze on Current Events – 07.06.2000

...மேலும்

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்