/* up Facebook

Oct 15, 2014

பெண்ணின் வாழ்கை யாருக்கானது ? அவளுக்கானதா ?



பெண்ணுக்கான வாழ்கையை எது பூர்த்தி செய்யும் என்பதை அவளின் தனிப்பட்ட உரிமையாக அங்கீகரிக்கும் மனநிலையே இல்லாத சமூகம் இது. இதில் குழந்தை பேறும் சரி, திருமணமும் சரி... இவை தான் ஒரு பெண்ணை முழுமைப் படுத்தும் என்று பெண்ணை இந்த சமூகத்தின் நியதிக்குள் இழுப்பது... அவளை ஒரு பொருளாக நிர்பந்திக்கும் நிலையன்றி வேறில்லை.

முழுமையான வாழ்வு என்பது அந்த பெண்ணோ அல்லது ஆணோ தீர்மானிக்கும் ஒன்று. இந்தியாவில் ஆணை விட... பெண்ணிற்கு, சமூக நிர்பந்தங்கள் என்பது அவளை மூச்சு முட்ட வைக்கும் அளவுக்கு உள்ளது. சமூகத்தின் பார்வையில் பெண்ணின் தனிப்பட்ட விருப்பங்கள் என்ற நிலையே உறுத்தலான ஒன்றாக இருப்பது ஏன் என்பது தான் இங்கே கேள்வி.

பெண் குழந்தை பேறை விரும்பவில்லை எனில், அதை அவள் சார்ந்த சமூகம், அவளை மாறுபட்ட பெண்ணாக ( deviant ) பார்க்க வேண்டிய அவசியமென்ன ? இங்கே... சில விஷயங்களில் பெண்கள் "தீர்மானிக்கும் தகுதி" பெறக் கூட திருமணமானவளாக இருக்கவேண்டிய சூழல் உள்ளது.  பல வருடங்களுக்கு முன் வார இதழில் படித்த கதை ஒன்று என்னை மிகவும் பாதித்தது....

அதில்...
இரு பெண்களைப் (கதை மாந்தர்கள்) பற்றி....
இருவரும் கல்லூரி தோழியர். ஒரு திருமணத்தில் சந்தித்து கொள்கின்றனர்... ஒருத்தி மணமான கர்ப்பம் தரித்த பெண்; இன்னொருவள் மாவட்ட ஆட்சியர் (திருமணமாகவில்லை). அந்த திருமண மண்டபத்தினுள் மாவட்ட ஆட்சியர் வந்தவுடன் ஒரே பரபரப்பாக இருந்ததாகவும்... மாவட்ட ஆட்சியரின் அறிமுகத்திற்காக எல்லோரும் போட்டி போட, அந்த மாவட்ட ஆட்சியாரான பெண்... செருக்கு மிடுக்கு புன்னகையுடன்  எல்லோரின் கவனத்தையும் ஈர்த்ததாகவும், அவளது தோழியான அந்த கர்ப்பம் தரித்த பெண்ணிற்கு அதைப் பார்த்து பொறாமை வந்தததாம். தானும் படித்து இப்படி பெரிய பதவிக்கு போயிருக்கலாமே என தோன்றியதாம்.
கதையின் முடிவில்...  கர்ப்பவதியான பெண்ணுக்கு திடீரென வலி ஏற்பட அங்கிருந்தவர்கள் எல்லோரும் அவளை ஓடிச் சென்று தாங்கிக் கொள்வார்களாம்...அப்போது மாவட்ட ஆட்சியர் காதுபட... யாரோ... சொல்வார்களாம்... என்ன தான்  மாவட்டத்துக்கே கலெக்டர்னாலும், தாய்மை தான் பொண்ணுக்கு முழுமை என்று. கவனமெல்லாம் தாய்மை அடைந்தவளை நோக்கி இருப்பதை கண்டு... மாவட்ட ஆட்சியர்... மனம் கலங்கி தன் குறையை உணர்ந்தவளாக அங்கிருந்து நகர்வாள்.
அந்த கர்ப்பவதியான பெண்... அதை பார்த்து, பெருமையுடன் நிறைவு கொள்வாள் என அக்கதை முடியும்.

இந்த கதையை நான் படித்து...20 வருடங்கள் ஆனாலும். அன்றே இந்த அபத்தமான ஒப்பீடை சகிக்க முடியவில்லை. ஒரு பெண்ணை முழுமையானவளாக காட்ட இந்த சமூகம் ஏன் அளவீடு வைக்க வேண்டும்? ஆணோ... பெண்ணோ... பலவித பாத்திரங்களை அவர்கள் வாழ்க்கையில் ஏற்கிறார்கள். அதில் பெண்ணுக்கு அதிக அழுத்தத்தை கொடுத்து... மனைவி, தாய் என்ற பாத்திரங்களை ஏற்கவில்லை எனில் அவளது வாழ்வு அர்த்தமற்றதான அளவீடு எவ்வகையில் சரி ?

அவள் வகிக்கும் பாத்திரங்களில் அவையும் உண்டு... அவை உண்டா இல்லையா என்ற தீர்மானத்தை அவள் தான் எடுக்க வேண்டும். இன்னும் எத்தனை காலத்திற்கு பெண்களை உங்கள் வம்ச விருத்திக்கான இயந்திரமாக வாழ நிர்பந்திப்பீர்கள் ?

இதை சொல்வதால் குழந்தை பேறை எதிர்ப்பதாக அர்த்தம் இல்லை. குழந்தையை சுமந்து பெற்றெடுக்கும் அவளுக்குத் தான் உரிமையிருக்கிறது குழந்தையை பெறுவதும் பெறாமல் இருப்பதற்குமான உரிமை. அதில்... சமூகம் மூக்கை நுழைக்குமானால்... அந்த சமூகத்தில் பெண்... அடிமையாகிறாள் என்பது தான் உண்மை.


0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்