/* up Facebook

Jul 5, 2014

ஆங்கிலேயர்களை தவிடுபொடியாக்கிய வீரப்பெண்மணி

இந்திய நாட்டில் மேலோங்கியிருந்த ஆங்கிலேயர் ஆதிக்கத்தை தவிடு பொடியாக்க பிறந்தவர் தான் ராணி லக்ஷ்மி பாய். ராணி லக்ஷ்மி பாய் அவர்கள், 1828ம் ஆண்டு நவம்பர் 19ம் திகதி காசியில் ஒரு மராத்தியர் குடும்பத்தில் பிறந்தவர். குழந்தை பருவத்தில், அவரை ‘மணிகர்ணிகா’ என்ற பெயரில் அழைத்தனர். அவரது குடும்ப உறுப்பினர்கள் அவரை ‘மனு’ என்று அழைத்தனர்.தனது நான்காவது வயதிலேயே அவரது தாயை இழந்ததால், குடும்பப் பொறுப்புகளனைத்தும் அவரின் தந்தை மீது விழுந்தது. பள்ளிப்பாடம் படித்து கொண்டிருந்த சமயத்தில், லக்ஷ்மி பாய் அவர்கள் குதிரை ஏற்றம், துப்பாக்கி சுடுதல் மற்றும் கத்தி சண்டை போன்ற தற்காப்புக்  கலைகளை முறையாக பயிற்சி மேற்கொண்டு கற்றார்.
 
குடும்ப வாழ்க்கை
1842ம் ஆண்டு, ஜான்சியின் மகாராஜாவாக இருந்த ‘ராஜா கங்காதர் ராவ் நிவால்கர்’ என்பவரை மணிகர்ணிகா மணம் முடித்தார். இவர்கள் திருமணத்திற்கு பின், அவருக்கு ‘லட்சுமி பாய்’ என்ற பெயர் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 1851ல், அவர்கள் இருவருக்கும் பிறந்த மகன், துரதிருஷ்டவசமாக நான்கு மாதங்களுக்கு மேல் உயிர்வாழவில்லை.பின்னர், 1853ல், மகாராஜா கங்காதர் ராவின் உடல்நிலை பலவீனமானதால், அவர்கள் ஒரு குழந்தையைத் தத்தெடுக்க முடிவு செய்தனர். இந்தத் தத்தெடுப்பின் மீது ஆங்கிலேயர்கள் பிரச்சனை எழுப்பக் கூடாது என்பதில் உறுதியாய் இருந்த லட்சுமிபாய் அவர்கள், உள்ளூர் ஆங்கிலேய பிரதிநிதிகளை சாட்சியாக வைத்து இந்த தத்தெடுப்பை நடத்தினார்.
 
பின்னர், நவம்பர் 21ம் திகதி, 1853ம் ஆண்டு மகாராஜா கங்காதர் ராவ் மரணமடைந்தார். அந்த காலகட்டத்தில், பிரிட்டிஷ் இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக ‘லார்ட் தல்ஹௌசீ’ என்பவர் ஆட்சியில் இருந்தார். ராணி லட்சுமிபாய் அவர்கள், தத்தெடுத்த குழந்தைக்கு ‘தாமோதர் ராவ்’ என்று பெயரிட்டார். இந்துமத மரபின் படி, அக்குழந்தையே லட்சுமிபாய் அவர்களின் சட்ட வாரிசாக இருந்தது. ஆனால் ஆங்கிலேய ஆட்சியாளர்கள் அந்த குழந்தையை சட்ட வாரிசாக ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டனர். மறுப்பு கோட்பாட்டின்(Doctrine of Lapse) படி, லார்ட் தல்ஹௌசீ அவர்கள் ஜான்சி அரசைப் பறிமுதல் செய்ய முடிவுசெய்தார்.
 
இதனையடுத்து, ராணி லட்சுமிபாய் அவர்கள், ஒரு ஆங்கிலேய வழக்கறிஞரிடம் சென்று ஆலோசனைக் கோரினார். அதன்பிறகு, அவர் லண்டனில் அவரது வழக்கிற்கான ஒரு முறையீட்டை மனு தாக்கல் செய்தார். ஆனால், அவரது மனு நிராகரிக்கப்பட்டது. ஆங்கிலேய அதிகாரிகள், லட்சுமிபாய் அவர்களின் அரசு நகைகளைப் பறிமுதல் செய்தனர். மேலும், ராணி லட்சுமிபாய் அவர்களை ஜான்சி கோட்டையை விட்டு செல்லுமாறு ஒரு ஆணை நிறைவேற்றப்பட்டதால், ராணி லக்ஷ்மி பாய் அவர்கள், ஜான்சியிலுள்ள ‘ராணி மஹாலுக்கு’ சென்றார். அந்நேரத்திலும், லட்சுமிபாய் அவர்கள், ஜான்சி அரசைப் பாதுகாப்பதில் மிகவும் உறுதியாக இருந்தார்.

முதல் இந்திய விடுதலைப்போர்
ஆயினும் 1857-ம் ஆண்டு மே 10 ம் திகதி இந்தியக்கிளர்ச்சி மீரட்டில் ஆரம்பமாகியது. போர் வீரர்களுக்குப் புதிதாக வழங்கப்பட்ட துப்பாக்கிக் குண்டுகளில் பசுவினதும் பன்றியினதும் கொழுப்புப் பூசப்பட்டதாகப் பரவிய வதந்தியையடுத்தே இக்கிளர்ச்சி ஏற்பட்டுப் பரவத் தொடங்கியது. இந்த சந்தர்ப்பத்தில் இராணி இலட்சுமிபாய் தனியாகவே ஜான்சியை ஆட்சி செய்தார். ராணி லக்ஷ்மி பாய் அவர்கள் அவரது அண்டை நாடுகளான ஓர்ச்சா மற்றும் டாடியாவை படையெடுத்து, அந்நாட்டுப் படைகளின் மூலமாக ஜான்சியைப் பாதுகாத்தார்.
 
இதுவே, ஜனவரி 1858ல், பிரிட்டிஷ் இராணுவம், ஜான்சியை நோக்கி படையெடுத்தற்கான காரணமாகும். ஜான்சிக்கும், பிரிட்டிஷ் ராணுவத்திற்குமான மோதல் ஒரு வாரத்திற்கு மேல் நீடித்தது. இறுதியாக, இரண்டே வாரங்களில் ஆங்கிலேய அரசு ஜான்சி நகரத்தைக் கைப்பற்றி வெற்றி வாகை சூடியது. எனினும், அவர் ஒரு ஆண்மகன் வேடம் பூண்டிருந்ததால், அவரை யாரும் அடையாளம் காணவில்லை. தனது வளர்ப்பு மகனை மடியில் ஏந்தியபடியே தப்பித்தார்.

இறப்பு
ஆங்கிலேயர் பிடியிலிருந்து தப்பித்த லக்ஷ்மி பாய் அவர்கள், கல்பியில் தஞ்சம் அடைந்தார். அங்கு அவர், 1857ல் நடந்த கிளர்ச்சியில் பங்கேற்ற ஒரு மாவீரரான ‘தந்தியா டோப்’ என்பவரை சந்தித்தார். ஆங்கிலேயர்களின் படை குவாலியரைக் கைப்பற்ற முகாமிட்டது. ஆங்கிலேயப் படையை எதிர்த்து, கோட்டாகி சேராய் என்ற இடத்தில் ஜான்சிராணி போரிட்டார். ஆனால், ஆங்கிலேயர்களின் நவீன போர்க்கருவிகளை எதிர்க்க முடியாமல், 18 யூன் 1858ம் ஆண்டு ஜான்சி ராணி அவர்கள் போர்க்களத்திலேயே இறந்தார்

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்