/* up Facebook

Feb 7, 2012

-இர.மணிமேகலையின் இரு கவிதைகள்


மொழி

இருப்பு குறித்து
அசுறுத்தும் உத்தேசத்துடன்
எரிமலைக்குழம்பு
குளிர்ந்து போய்க்கிடக்கிறது
என்றோ உதிர்ந்த
வார்த்தைகளின் வீரியத்தில்
கட்டுண்டு கிடக்கிறார்கள்
வெட்கச்சிவப்பு சுட்டிய சொற்கள்
விதையுறை உறக்கத்திலிருக்கின்றன
தேர்வின் மொழி மறுதலிக்கப்படுகிறது
மீசை முளைத்த எழுதுகோலிடம்
பறிகொடுத்துவிட்டதாகப் பிலாக்கணமிடுகிறார்கள்
மெடுசாவின் நகைப்பொலி
அவர்கள் கேட்புத்திறனுக்கு
அப்பாற்பட்டதாயிருக்கிறது

இரவின் ஒலி

அறையின் நிசப்தத்தை ஊடறுத்து
துடித்து நகர்கின்றன
கடிகார முட்கள்
படுக்கையைச்சுற்றி
தனிமைச்சுவர் எழும்பிவிடுகிறது
உறக்கத்தில் உயிர்த்தெழுந்த சித்திரங்கள்
சுவர்தேடி அலைகின்றன
நானோ இரவின் ஒலியில்
கையற்றுச்சரிகிறேன்

-இர.மணிமேகலை

பூ.சா.கோ.அர.கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில்
உதவிப்பேராசிரியர்

1 comments:

நந்தினி மருதம் said...

தமிழ்க் கவிதை புதிய எல்லைகளில் பீறிட்டெழுகிறது என்பதற்கு இந்தக் கவிதைகள் சான்று கவிஞருக்கு வாழ்த்துக்கள்

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்