/* up Facebook

Dec 12, 2011

கம்யூனிஸ்டு கட்சி அறிக்கை - பாட்டாளிகளும் கம்யூனிஸ்ட்டுகளும் - சந்தனமுல்லை


கம்யூனிஸ்டு கட்சி அறிக்கையின் முதல் பாகத்தை வாசிக்க -
 முதலாளிகளும் பாட்டாளிகளும்
'முதலாளித்துவ தனியுடைமையை ஒழித்தல்' செயல்திட்டத்தின் முக்கிய அம்சம். உடைமை என்பது, தனியான இயல்பை அல்ல, சமூக இயல்பையே கொண்டிருக்கிறது. ஆகவே, அது தனிநபர்களுக்கு அல்ல, சமூகத்தின் பரந்த மக்கள் தொகுதியின் உடைமையாக இருக்க வேண்டும். முதலாளி வர்க்க சித்தாந்தவாதிகளால், தனியுடைமை இல்லாத சமூகத்தை கற்பனை கூட் செய்ய முடியாது. ஆகவே, அவர்கள் தனியுடைமை ஒழிப்பை, தனிநபரை ஒடுக்குவதாக தனிநபர் சுதந்திரம், தனித்தன்மை போன்றதாக திரித்து பேசித்திரிகின்றனர். அதோடு, சோம்பேறித்தனத்தை ஏற்படுத்துவதாக, குடும்பத்தை, நாட்டை, ஒழிப்பதாகவும், மனைவியர் கூட பொதுப் படுத்தப்படுவதாகவும் கருதுகிறார்கள். ஆனால், இந்த அறிக்கை அவர்களது திரிபுவாதத்தை/அவதூறை தோலுரித்து காட்டுகிறது. மேலும், தொழிலாளி வர்க்கம் ஆட்சிக்கு வரமுடியும், அரசியல் அதிகாரத்தை பெற முடியும் என்பதை அறிக்கை தெளிவாக விளக்குகிறது.

இந்த இரண்டாவது அத்தியாயத்தில், பாட்டாளிகளுக்கும், கம்யூனிஸ்டுகளுக்கும் இடையிலான உறவு பற்றி ஆராயப்படுகிறது. சமுதாயத்தில், எதிர்காலத்தில் கம்யூனிச ரீதியான மாற்றம் பற்றி இதில் பேசப்படுகிறது. முதல் அத்தியாயத்தில், புரட்சிக்கு முந்தைய தொழிலாளி வர்க்கத்தின் அரசியல் மற்றும் வரலாற்று வளர்ச்சி ஆராயப்படுகிறது. இரண்டாவது அத்தியாயத்தில், புரட்சிக்கு அடுத்த காலகட்டம் பேசப்படுகிறது. வர்க்கத்துக்கும், கம்யூனிஸ்டு கட்சிக்கும் இடையிலான உறவு மற்றும் அதன் இயக்கவியலை தெளிவுப்படுத்துகின்றனர், மார்க்சும்,எங்கெல்சும்.

கம்யூனிஸ்டுகள், “பாட்டாளி வர்க்கம் அனைத்துக்குமுள்ள நலர்ன்கள் அன்றி தனிப்பட்ட நலன்கள் எவையும் இல்லாதவர்கள்.” அதே சமயம், கம்யூனிஸ்டுகளுக்கென்று பல அம்சங்கள் உள்ளன. அவையே மற்ற கட்சிகளிடமிருந்து அவர்களை வேறுபடுத்திக் காட்டுகின்றன. “வெவ்வேறு நாடுகளில் தேச அளவில் பாட்டாளிகள் நடத்தும் போராட்டங்களில் அவர்கள் தேசிய இனம் கடந்து பாட்டாளி வர்க்கம் அனைத்துக்கும் உரித்தான பொதுநலன்களை சுட்டிக்காட்டி முன்னிலைக்கு கொண்டு வருகிறார்கள்”. முதலாளித்துவ வர்க்கத்துடனான எல்லா போராட்டங்களிலும் அவர்கள் இயக்கம் அனைத்துக்குமான நலன்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். பாட்டாளி வர்க்க இயக்கத்தின் வழிநடப்பை, நிலைமைகளை சரியாக புரிந்துக்கொள்ளுதல், பொதுவான இறுதி விளைவுகளை அறிந்து கொள்ளும் தன்மைதான் கம்யூனிஸ்டுகளின் முதன்மை பண்பு.

போட்டியில் திவாலாகும் நிறுவனங்களின் தொழிலாளர்கள் முதல் தனிநபர் வரை முதலாளித்துவத்தில் அனைவரும் தொழிலாளர் வர்க்கத்தில் வந்து சேருகின்றனர். வர்க்க போராட்டம் கூர்மையடைய கூர்மையடைய, புரட்சிகர நிலைக்கு வரும் வர்க்கங்களும் கூர்மையடைகிறது. எதிர்காலம் இந்த புரட்சிகர சக்திக்கு சொந்தமானது. இந்த சூழ்நிலைகலை தோற்றுவிப்பதிலும், மாற்றுவதிலும் பாட்டாளி வர்க்கம் தீவிரமாக பங்கேற்கிறது. இந்த வர்க்க போராட்டம் ஒவ்வொன்றும் ஒரு அரசியல் போராட்டம் என்கிறது அறிக்கை. இந்த போராட்டம் படிப்படியாக, பொருளாதார வரம்புகளை விட்டு வெளிவந்து அரசியல் போராட்டமாக மாறி, வர்க்கத்தின் அரசியல் ஆதிக்கத்தை நிலைநாட்டவும், அதற்கேற்றவாறு சமுதாய அமைப்பை மாற்றவும் இட்டு செல்ல வேண்டும்.

எனவே, கம்யூனிஸ்டுகளின் உடனடி நோக்கம், ஏனைய எல்லா பாட்டாளி வர்க்க கட்சிகளது உடனடி நோக்கம் என்னவோ அதுதான், பாட்டாளிகளை ஒரு வர்க்கமாய் உருப்பெறச் செய்வதும், முதலாளித்துவ மேலாதிக்கத்தை வீழ்த்துவதும்” , பாட்டாளி வர்க்கம் அரசியல் அதிகாரத்தை வென்று பெறுவதும்தான் அதன் முக்கிய நோக்கமாகும். அதாவது, வர்க்கப் போராட்டத்தில் கம்யூனிஸ்டுகளின் பாட்டாளி வர்க்கத்தின் பக்கம் நிற்பார்கள்.

பொதுவாக, கம்யூனிஸ்டுகள், மக்களின் ஜன்நாயகத்துக்கும், சுதந்திரத்த்க்கு எதிரியல்ல என்பதை தெளிவுபடுத்துகிறார்கள். பெண்களின், உரிமைகளைப் பற்றியும் பேசுகிறார்கள். இன்றைய ஜனநாயகம் என்பது போலி ஜனநாயகமாக பார்க்கப்போனால் முதலாளித்துவ சர்வாதிகாரமாக, ஒரு சிலருக்கு மட்டுமே ஜனநாயகமாக இருக்கிறது. ஆனால், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தில்,பொருளாதார உற்பத்தியை பாட்டாளி வர்க்கம் கைப்பற்றும். ஜனநாயகத்துக்கான, கம்யூனிச புரட்சிக்கான போராட்டமும் முடிவுக்கு வரும்.

கம்யூனிச புரட்சியைப் விஞ்ஞான ரீதியான பற்றிய கருத்துகள் இந்த முன்தேவைகள் இல்லாமல் முதிர்ச்சியடைய முடியாது என்றார் மார்க்ஸ்.

இன்றும் நம் கண்ணெதிரே நடைபெற்று வரும் சில சம்பவங்களிலிருந்தே இதனை புரிந்துக்கொள்ளலாம். விஞ்ஞான கம்யூனிச சித்தாந்தம் , புரட்சிகர வர்க்கத்தின் சித்தாந்தம் - புரட்சிகர போராட்டத்தின் வளர்ச்சியில் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில்தான் தோன்றும். ஆனால், இந்த சித்தாந்தத்தை தொழிலாளர் வர்க்க விடுதலைக்கான உணர்வு பூர்வமான போராட்டமாக நடத்த வேண்டும். ஆனால், இந்த ஆயுதம் தொழிலாளர் வர்க்கத்துக்கு கிட்டவில்லை. இந்த சித்தாந்தம்தான், பாட்டாளி வர்க்கம் கொடுத்த பலிகள், சிந்திய ரத்தம் மற்றும் தோல்விகளைத் தாண்டி வெற்று பெறும், உண்மையான ஜனநாயகத்தை கொண்ட சமுதாய அமைப்பை உருவாக்கும் என்ற நம்பிக்கையை ஊட்டியது.

”முதலாளித்துவ சொத்துடைமையை ஒழிப்பதே கம்யூனிசத்துக்குரிய சிறப்பியல்பு” - ஆனால், பொதுவாக, அவதூறு சொல்பவர்கள், கம்யூனிசம் சொத்துரிமையையே ஒழிக்கிறது என்கின்றனர். இரண்டாம் அத்தியாயம் இந்த வாதத்தை அடித்து உடைக்கிறது. அதாவது, குடும்பம், தேசிய இனம், கலாச்சாரம்/ஒழுக்கம் எல்லாவற்றையும் ஒழித்துக்கட்ட விரும்புவதாகவும் அவதூறு செய்கிறார்கள். சொத்துடைமை மற்றும் கம்யூனிஸ்டுகளின் உறவு பற்றி இந்த அத்தியாயம் பேசுகிறது. தனிநபர்,கல்வி, உழைப்பு பற்றிய பிரச்சினைகள், குழந்தை வளர்ப்பு பற்றிய பிரச்சினைகள், மதம் மற்றும் கலாச்சாரம் பற்றிய பிரச்சினைகள், சமுதாய உணர்வு பற்றிய பிரச்சினைகள் வரை ஆராயப்படுகிறது.

இந்த ஆராய்ச்சி எல்லாம் பொருள்முதல்வாத அடிப்படையில் விளங்குகின்றன என்பதுதான் நாம் புரிந்துக்கொள்ள வேண்டியது. சமுதாய கட்டமைப்பானது உற்பத்தி சக்திகள், உற்பத்தி உறவுகள் மற்றும் மேற்கட்டுமானங்களான அரசு, மதம் இவற்றால் ஆனது. இது அந்த குறிப்பிட்ட காலகட்டத்துக்கு மட்டுமன்றி இன்றைக்கும் நம் பிரச்சினைகளை பற்றி, எதிர்கால கம்யூனிச அம்சங்களைப் பற்றி பேசுகின்றது. “மனித உயிர் வாழ்வின் பராமரிப்புக்காகவும், புனருற்பத்திக்காகவும் வேண்டியதை மட்டும் அளித்து ஏனையோரது உழைப்பின் மீது ஆண்மை செலுத்த உபரியாய் எதையும் விட்டு வைக்காத இந்த சுவீகரிப்பை” - அதாவது உழைப்பின் உற்பத்தியை தனிநபர் சுவீகரிப்பது. பொதுவாக, தனித்தன்மை, விடுதலை இவற்றிற்கெல்லாம் கம்யூனிஸ்டுகள் எதிரியல்ல என்பதையும் சுட்டிக் காட்டுகின்றனர். ”முதலாளித்துவ தனித்தன்மையையும், முதலாளித்துவ சுவீகரிப்பையும் ஒழிக்க வேண்டுமென்பதே குறிக்கோள்”

முதலாளித்துவ சொத்துடைமை ஒழிக்கப்படவேண்டும். முதலாளித்துவ சமுதாயத்தில் கல்வி என்பது “மிகப்பெருவாரியான மக்களுக்கு இயந்திரமாக செயல்படுவதற்கு வேண்டிய பயிற்சியாகவே இருந்து வருகிறது”. புதிய சமுதாயத்தில், முதலாளித்துவ மற்றும் பூர்ஷ்வா குடும்பம் இயல்பாகவே அழிகிறது. ஏனெனில், இது “மூலதனத்தின், தனியார் லாபத்தின்” அடிப்படையிலானது. இதற்கெல்லாம் கம்யூனிசத்தில் இடம் கிடையாது. மேலும், மனைவிகள் எல்லாருக்கும் பொதுவாக்குவதாக முதலாளித்துவவாதிகள் கூக்குரலிடுவதற்கும் பதில் இருக்கிறது. “நெடுங்காலத்துக்கு முன்பிருந்தே இது செய்யப்பட்டு வருகிறது” என்று அறிக்கையில் கூறப்படுகிறது. எந்த சமுதாயத்தில் பெண்களை வாங்கி விற்கின்றார்களோ அங்கே திருமணத்தின் புனித தன்மை பற்றி பேச என்ன அருகதை இருக்கிறது?

”கம்யூனிச சமுதாயத்தின் சேமிக்கப்பட்ட உழைப்பானது முதலாளிகளின் தனிப்பட்ட செல்வதிற்கான சாதனமாக இருக்காது, தொழிலாளர்களின் வாழ்க்கையை செழுமைப் படுத்தி எளிதாக்கும் சாதனமாக இருக்கும்” என்கிறது அறிக்கை. முதலாளித்துவத்தில் இல்லாத சுதந்திரத்தையும், தனித்துவத்தையும் உழைப்பாளிகள் பெறுவார்கள். குழந்தை வளர்ப்பின் தன்மை மாறும். இன்றைய பொருளுற்பத்தி அமைப்பு ஒழிக்கப்படும்போது, இந்த அமைப்பிலிருந்து எழும் பொதுப்பெண்டிர் முறையும் – அதாவது பகிரங்க பொது விபசாரமும், ரகசிய தனி விபச்சாரமும் மறையும்” - பொருளாதார உறவுகளின் அடிப்படையில் எழும் திருமண உறவுகளுக்கு பதில் அன்பின் அடிப்படையிலான திருமணம் வரும்.

அடுத்ததாக, தேசிய இனப்பிரச்சினைகள் – தேசியத்துக்கும் சர்வ தேசியத்துக்கும் இடையிலான உறவு பற்றிய பிரச்சினைகளை முதன்முதலாக இந்நூலில் வைக்கப்படுகிறது. இதுதான் தொழிலாளி வர்க்கப் பிரச்சினை விஞ்ஞான ரீதியான முக்கியத்துவத்தை பெறுகிறது. ஏனெனில், அந்த காலகட்டத்தின் ஐரோப்பாவில், புரட்சியின்போது தேசிய இயக்கங்களின் வளர்ச்சி வெளிப்பட்டது) தொழிலாளர்கள் எல்லா நாட்டிலும் தொழிலாளர்களே! வர்க்க மற்றும் சமூகம் என்பது இயக்கவியல் ரீதியாகவே தொழிலாளர் வாழ்வில் இணைந்துள்ளன. “முதலாளி வர்க்கத்தை எதிர்த்து பாட்டாளி வர்க்கம் நடத்தும் போராட்டம் உள்ளடக்கத்தில் இல்லையேனும் எப்படியும் வடிவத்தில், ஆரம்பத்தில் தேசிய போராட்டமாகவே இருக்கிறது. ஒவ்வொரு நாட்டின் பாட்டாளி வர்க்கமும் தனது நாட்டின் முதலாளி வர்க்கத்துடன் முதலில் கணக்கு தீர்க்க வேண்டியிருக்கீறது” (இதற்கு, மாருதி சுசுகி போராட்டத்தையும், தேவியின் போராட்டத்தையும் எ,.காக கொள்ளலாம்) முதலாளித்துவத்தின் கீழ் பாட்டாளி சுரண்டப்படும் நபர். எல்லா நாடுகளிலும் நிலை இதுவே. அதனால்தான் “தொழிலாளர்களுக்கு தாய்நாடு இல்லை” என்று சொல்லப்படுகிறது.

உற்பத்தி சாதனங்களை பொதுமைப்படுத்துவதைத் தொடர்ந்து, நிலத்தின் மீதான சொத்துடைமையும் ஒழிக்கப்பட வேண்டும். உயர்வான வரிமுறை அமுல்படுத்தப்பட வேண்டும். வாரிசுரிமை அகற்றப்பட வேண்டும். குடிபெயர்ந்து போனவர்கள் மற்றும் கலகக்காரர்களின் சொத்துகள் பறிக்கப்டவேண்டும்.கடன் வழங்குவதும் போக்குவரத்தும் அரசின் கரங்களில் மையப்படுத்தப்பட வேண்டும். புதிய சமுதாயத்தில் உழைப்பு எல்லா மக்களுக்குமானதாக மாற வேண்டும். நகரத்துக்கும், கிராமத்துக்குமான மாறுபாடு படிப்படியாக மறைய வேண்டும்,குழந்தைகளுக்கு பொது பள்ளிக்கூடங்களில் இலவசமாக கல்வி கற்கும் முறை அமுல்படுத்தப்பட வேண்டும் என்பவை முக்கியமானவை. இந்த வேலைத்திட்டங்கள் ரஷ்யாவில் அக்டோபர் சோசலிச புரட்சிக்குப் பின்னர் அமுல்படுத்தப்பட்டது. “உழைப்பு சரிசமமாய் எல்லாருக்கும் உரிய கடமையாகும்” என்பது சோசலிச நாடுகளுக்கு முக்கியமானது. இறுதியாக, கம்யூனிச சமூகம் என்பதை வர்க்கங்களற்ற சமூகம் என்றுதான் புரிந்துக்கொள்ள முடியும். உற்பத்தி முழுதும் நாட்டு மக்களின், அனைவரின் கூட்டமைப்பின் கைகளுக்கு வந்து விடும் – அதாவது உற்பத்தியின் மீது சமூகத்தலைமை வரும்.

“வர்க்கங்களையும், வர்க்கப் பகைமைகளையும் கொண்டிருந்த பழைய முதலாளித்துவ சமுதாயத்துக்கு பதிலாய், ஒவ்வொருவரும் தங்கு தடையின்றி சுதந்திரமாய் வளர்வதையே எல்லோரும் தங்குதடையின்றி சுதந்திரமாய் வளர்வதற்கான நிபந்தனையாய் கொண்ட மக்கள் கூட்டு என்று எழுந்து விடும்” என்று இரண்டாம் பாகம் முடிவடைகிறது. இதுவே கம்யூனிஸ்டுகளின் இறுதி லட்சியம்!

நன்றி - சந்தனமுல்லை

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்