/* up Facebook

Mar 16, 2011

திலினி குமாரி சவுதி அரேபியாவில் தற்கொலை செய்து கொண்டாரா?


கடந்த ஜனவரி மாதம் சவுதி அரேபியாவில் இலங்கை பெண்ணொருவர் உயிரிழந்தார். அப்பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக சவூதி அரேபியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை சவுதிக்கான இலங்கைத் தூதரகம் அந்த அறிக்கையினை உறுதிப்படுத்தியுள்ளது.

திலினி குமாரி (வயது 26) என்ற இலங்கைப் பணிப்பெண் கடந்த ஜனவரி மாதம் 12ம் திகதி உயிரிழந்திருந்தார். இவர் 2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8 சவூதிக்கு பணிக்காக சென்றிருந்தார். குறித்த பெண் நாத்தாண்டிய பிரதேசத்தைச் சேர்ந்தவர்.

கறை நீக்கி இரசாயனமான குலோறக்ஸ் திரவத்தை அருந்தியிருந்ததாக கடந்த 14ஆம் திகதி மார்ச் மாதம் வெளியான பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்நிலையில், விசாரணைகளின் போது குறித்த பெண் எதுவித குறைகளுமின்றி திருப்திகரமாக பணியாற்றியதாக வேலை வழங்குனர் தெரிவித்துள்ளார். என்ற போதும் உறவினர்கள் உறுதியாக சந்தேகிக்கின்றனர், இது தற்கொலையாக இருக்க முடியாது என்று நியாயம் கோரியிருக்கின்றனர்.

இதேவேளை அவருக்கு ஊதியமும் சரிவர வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பெண்ணின் சடலத்தை எதிர்வரும் வாரம் இலங்கைக்கு அனுப்பி வைக்க சவுதிக்கான இலங்கைத் தூதரகம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அறிவித்துள்ளது.


கடந்த நான்கு மாத காலப்பகுதியில் மூன்று இலங்கைப் பணிப்பெண்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவம் நிகழ்ந்த அல்-யூப் மாநிலத்தில் கடந்த 4 மாதங்களுக்குள் நிகழ்ந்த மூன்றாவது உயிரிழப்பு இதுவாகும். புஷ்பவல்லி செல்லத்துரை மற்றும் தேவி சின்னையா ஆகியோர் கொல்லப்பட்ட ஏனைய இருவர்களாவர். கடந்த இரு வருடங்களுக்குள் இதே மாநிலத்தில் நிகழ்ந்த 5வது சம்பவம் இதுவாகும்.

மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப்பெண் வேலைக்காக செல்லும் பெண்கள் மிகுந்த வதை புரியப்பட்டு நாடு திரும்புவதும், பிணங்களாக அனுப்பி வைக்கப்படுவதும் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இந்த குற்றச்சாட்டுகள் குறித்து உலகின் கண்டனங்கள் எழத்தொடங்கியிருக்கின்ற நிலயில் இப்போது இந்த மரணங்கள் தற்கொலைகளாக அந்தந்த நாட்டு நீதித்துறை அறிவிக்கவும் துணிந்துள்ளது.

இலங்கை அரசாங்கமோ இது குறித்து எந்த கடுமையான நடவடிக்கைக்கும் தயாராக இல்லை என்பதும் உறுதியாக தெரியவருகிறது.

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்