/* up Facebook

Dec 19, 2010

தொழிற்சங்கங்களில் பெண்கள் அதிகளவிலிருந்தும் அவர்களுக்குரிய முக்கியத்துவம் வழங்கப்படவில்லை திகாம்பரம் எம்.பி.


குடும்பம், சமூகம், அரசியல் தொழிற்சங்க துறைகளில் பக்கபலமாக செயற்படுகின்ற மலையகப்பகுதி மகளிரின் சக்தி உரிய வகையில் கட்டியெழுப்பப்பட வேண்டுமென்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பி.திகாம்பரம் தெரிவித்தார்.தொழிலாளர் தேசிய சங்கத்தின் அட்டன் பணிமனையில் இடம்பெற்ற பெருந்தோட்டப் பகுதி யுவதிகள் மற்றும் பெண் தொழிலாளர்களுக்கான விசேட கலந்துரையாடல் நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொழிலாளர் தேசிய சங்கத்தின் மகளிர் பிரிவு பொறுப்பாளர் திருமதி வயலட் மேரி தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ்.பிலிப் உப தலைவர் புண்ணியமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டு உரையாற்றினர்.பொகவந்தலாவை அட்டன், மஸ்கெலியா, நோர்வூட், கொட்டகலை, வட்டவளை, தலவாக்கலை போன்ற பகுதிகளிலிருந்து வருகை தந்த பெண்கள் தாம் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்து இந்த நிகழ்வில் கருத்துத் தெரிவித்தனர்.

திகாம்பரம் தொடர்ந்து பேசுகையில்;

தோட்டத் தொழிலாளர்களுக்கு உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்காத காரணத்தினால் தோட்டத் தொழிலாளர்கள் இன்று பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட நிலையில் வாழுகின்றனர். இவர்களில் பெருந்தோட்டத் துறைக்குப் பாரிய பங்களிப்புச்செய்கின்ற பெண் தொழிலாளர்கள் பெரிதும் பாதிப்படைந்த நிலையிலுள்ளனர். தொழிற்சங்கங்களில் பெண் தொழிலாளர்களின் அங்கத்துவமே அதிகமாகவுள்ள போதும் உயர் பதவிகளில் பெண்களின் பிரதிநிதித்துவம் மிகவும் குறைந்த நிலையிலேயே உள்ளது. அத்துடன் அரசியல் பிரதிநிதித்துவம் குறைவாகவுள்ளது.

எனவே பெண் தொழிலாளர்கள் எதிர்நோக்குகின்ற பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்க வேண்டுமானால் அரசியல் தொழிற்சங்க அமைப்புகளிலும் அரசியல் பிரதிநிதித்துவத்திலும் பெண்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும். தோட்டப்பகுதிகளில் மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து பெண் தொழிலாளர்கள் மற்றும் ஏனைய பெண்களின் அபிப்பிராயங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும்.

இதனைக் கருத்திற் கொண்டு தொழிலாளர் தேசிய சங்கத்தின் மகளிர் பிரிவைக் கட்டியெழுப்புவதற்கு ஒவ்வொரு பிரதேசத்திலும் மகளிர் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்தக் குழுக்களின் ஊடாக பெண்களின் அபிப்பிராயங்கள் பிரச்சினைகள் கேட்டறியப்பட்டு உரிய தீர்வினை எதிர்காலத்தில் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளோம். இன்று பெருந்தோட்டப் பகுதிகளில் தொழில் வாய்ப்பற்ற யுவதிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இந்த யுவதிகள் அனைவருக்கும் அரசாங்க தொழிலைப் பெற்றுக் கொடுக்க முடியாது. ஆனால் உரிய கல்வித் தகைமைகளைப் பெற்றிருந்தால் அவர்களுக்கு உரிய தொழில் வாய்ப்புகளை எதிர்காலத்தில் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன்.

எனவே பாடசாலை கல்வியைக் கற்று வெளியேறுகின்ற யுவதிகள் தொழில் உலகத்திற்கேற்றவாறு தம்மை தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும். அத்துடன் பெண் தொழிலாளர்கள் தமக்கான தொழில் உரிமைகளைப் பெற்றுக் கொள்வதில் விழிப்புடன் செயற்பட வேண்டும் என்றார்.

1 comments:

ANKITHA VARMA said...

அரசியல் வாதிகள் நல்லாத்தான் பேசுவாங்க !!! ஆனால் ஒன்றும் செய்ய மாட்டாங்க !!!

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்