/* up Facebook

Dec 6, 2010

பூசா முகாமில் கட்டித் தொங்கவிடப்பட்டு அடித்துத் துன்பறுத்தப்பட்ட தமிழ்ப் பெண்

மலையகம் பதுளையைச் சேர்ந்த தமிழ்ப் பெண் ஒருவர் கொழும்பிலுள்ள வீடொன்றில் வீட்டுப் பணிப்பெண்ணாக வேலைசெய்துவந்தார்.

இந்தப் பெண் விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடையவர் என வீட்டு உரிமையாளரும் அவரின் மனைவியும் கொடுத்த புகாரின் அடிப்படையில் இவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

தனது குடும்பத்தினை உழைத்துப் பார்க்கவேண்டிய கட்டாயத்தில் சாந்தசிவம் கிருஸ்ணவேணி கொழும்புக்கு வந்தாள். கொழும்பினது புறநகர் பகுதியிலுள்ள சீதுவையில் இவளுக்கு வீட்டுப் பணிப்பெண்ணாக வேலை கிடைத்தது.

குறிப்பிட்ட இந்த வீட்டில் கணவன் சிறிலங்கன் எயர்லைன்ஸ் விமானசேவையிலும் மனைவி சிறிலங்கா விமானப்படையிலும் பணியாற்றி வந்தார்கள்.

இந்த வீட்டில் அவள் தனது வேலையினை ஆரம்பித்து ஒரு வாரம் கடந்த நிலையில் சீதுவை காவல்துறையினர் வீட்டுக்கு வந்து அளவது தேசிய அடையாள அட்டையினைப்
பரிசோதித்தார்கள்.

வாக்குமூலம் வழங்குவதற்காக சீதுவைக் காவல்நிலையத்திற்கு வருமாறு கூறிவிட்டுச் சென்றனர். குறித்த வீட்டின் உரிமையாளரும் அவரது கணவனும் கிருஸ்ணவேணியை காவல்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றார்.

ஆனால் வாக்குமூலத்தினைப் பெறுவதற்கான என அழைக்கப்பட்ட கிருஸ்ணவேணி விசாரணைகள் எதுவுமின்றி இரண்டு மாதங்களாக அங்கு தடுத்துவைக்கப்பட்டாள்.

கிருஸ்ணவேணி விடுதலைப் புலிகள் அமைப்புக்காக வேலைசெய்யக்கூடும் எனத் தாங்கள் சந்தேகிப்பதாக வீட்டு உரிமையாளரும் அவரது மனைவியும் காவல்துறையில் முறைப்பாடு செய்திருப்பது தெரியவந்திருக்கிறது. தினமும் அவளது கைத்தொலைபேசிக்கு அதிக அழைப்புக்கள் வருவதன் அடிப்படையிலேயே இவர்கள் கிருஸ்ணவேணியைச் சந்தேகித்திருக்கிறார்கள்.

கையில் விலங்கிடப்பட்ட நிலையில் ஒரு நாள் பூராகவும் கிருஸ்ணவேணி காவல்நிலையத்தில் இருத்தி வைக்கப்பட்டிருக்கிறாள். ஒரு பாய் கூட அவளுக்கு வழங்கப்படவில்லை.

காவல்நிலையத்தில் தான் அனுபவித்த துன்பதுயரங்களைத் தாங்கமுடியாத கிருஸ்ணவேணி ஒருநாள் தற்கொலைசெய்ய முயன்றிருக்கிறாள்.

கைவிலங்கு கழற்றப்பட்ட சந்தர்ப்பத்தினைப் பயன்படுத்திய கிருஸ்ணவேணி அங்கிருந்து தப்பிச்சென்றிருக்கிறாள். ஆனால் உடனேயே மீண்டும் கைதுசெய்யப்பட்ட கிருஸ்ணவேணி மீண்டும் காவல் நிலையத்திற்குக் கொண்டுவரப்பட்டிருக்கிறாள். இதன் பின்னர் காவல்துறையினரால் இவள் அடித்துத் துன்புறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இது நடந்து இரண்டு நாட்களின் பின்னர் பூசா முகாமிற்கு அனுப்பப்பட்ட கிருஸ்ணவேணி அங்கு பல இன்னல்களுக்கு முகம்கொடுத்திருக்கிறாள். அங்கிருந்த படையினர் கிருஸ்ணவேணியைத் தலை கீழாகக் கட்டித் தொங்கவிட்டு அடித்துத் துன்புறுத்தியிருக்கிறார்கள்.

புலிகளின் உறுப்பினர் என ஒப்புக்கொள்ளாவிட்டால் ஆடைகளை உரிந்துவிட்டு பாலியல்பலாத்காரம் செய்வோம் எனப் படையினர் அச்சுறுத்தியிருக்கிறார்கள்.

இந்த நிலையில் தான் படையினரின் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்படுவதைத் தவிர்ப்பதற்காக பொய் சொல்லவேண்டிய நிலைக்கு அவள் தள்ளப்பட்டாள். ஈற்றில், இவர்களின் துன்புறுத்தல்களிலிருந்து தப்புவதற்காக தான் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்தான் என அவள் ஒப்புக்கொண்டாள்.

பதுளையிலுள்ள தேயிலைத் தோட்டமொன்றில் பணியாற்றும் இவளது பெற்றோருக்கும் புலி முத்திரை குத்தப்பட்டிருக்கிறது. கடந்த இரண்டு வருடங்களாக கிருஸ்ணவேணி பூசா முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறாள்.

தற்போது 2248 என்ற கைதி எண்ணைக் கொண்டிருக்கும் கிருஸ்ணவேணி வெலிக்கடைச் சிறைச்சாலையின் பெண்கள் பிரிவில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறாள்.

ஒக்ரோபர் 2 2010 அன்று இவள் வெலிக்கடைக்கு மாற்றப்பட்டாள். 4483 என்ற வழக்கு இலக்கத்தினைக் கொண்ட கிருஸ்ணவேணியின் வழக்கு இன்னமும் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது.

*Sri Lanka Guardian இணையத்தளத்தில் Harshi C. Perera என்னும் பத்தி எழுத்தாளரால் எழுதப்பட்ட இக்கட்டுரையின் மொழியாக்கம் இது.

நன்றி - தரவு

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்