/* up Facebook

Oct 21, 2010

திருச்சி கல்லூரி முதல்வர் "மேலும் பல கன்னியாஸ்திரிகளுக்கு செக்ஸ் தொந்தரவு கொடுத்தார்'' இளம் கன்னியாஸ்திரி ஐகோர்ட்டில் மனு


திருச்சியில் உள்ள பிரபல கல்லூரி முதல்வர், மேலும் பல கன்னியாஸ்திரிகளுக்கு செக்ஸ் தொந்தரவு கொடுத்ததாக, இளம் கன்னியாஸ்திரி பிளாரன்ஸ்மேரி மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.

கற்பழிப்பு புகார்
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள தஞ்சாவூரான் சாவடியைச் சேர்ந்தவர் மலையப்பன். இவருடைய மகள் பிளாரன்ஸ்மேரி (வயது 31), கன்னியாஸ்திரி. திருச்சியில் உள்ள ஒரு பிரபல கல்லூரி முதல்வர் பாதிரியார் ராஜரத்தினம், தன்னை மிரட்டி கற்பழித்து விட்டதாக பிளாரன்ஸ்மேரி கோட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார், பாதியார் ராஜரத்தினம் மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

இந்த நிலையில் ராஜரத்தினம், முன்ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்த போது, கற்பழிப்பு புகார் கூறிய பிளாரன்ஸ்மேரியையும் இந்த வழக்கில் சேர்த்து விசாரிக்க வேண்டும் என்று அவரது தரப்பில் வக்கீல் சங்கர்கணேஷ் கேட்டுக்கொண்டார்.

புகைப்படம் எடுத்து மிரட்டினார்
இதற்கு ஒப்புதல் அளித்த நீதிபதி, புகார்தாரரான பிளாரன்ஸ்மேரி தனது தரப்பு விளக்கத்தை மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டார். இந்த நிலையில் நேற்று அந்த மனு நீதிபதி ஜி.ராஜசூர்யா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. பிளாரன்ஸ்மேரி தனது தரப்பு விளக்கத்தை மனுவாக தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-

கடந்த 2006-ம் ஆண்டில் இருந்து பாதிரியார் ராஜரத்தினம், குளிர்பானத்தில் மயக்கமருந்து கொடுத்து என்னை கற்பழித்தார். இதுகுறித்து கேட்ட என்னை, உல்லாசமாக இருந்ததை புகைப்படம் எடுத்து வைத்து இருப்பதாக கூறி மிரட்டினார். இதுகுறித்து வெளியே சொன்னால், கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் மிரட்டினார்.

கர்ப்பம் அடைந்தேன்
பலமுறை மிரட்டி ராஜரத்தினம் உடல் உறவு வைத்துக்கொண்டதில், 2008-ம் ஆண்டு நான் கர்ப்பம் அடைந்தேன். அதன்பின்பு திருச்சியில் உள்ள பிரபல ஆஸ்பத்திரியில் எனது கர்ப்பத்தை கலைத்தேன். நான் என்னை விட்டுவிடும்படி பல முறை ராஜரத்தினத்திடம் கேட்டேன். அதற்கு மறுத்த ராஜரத்தினம், மனிதாபிமானமற்ற முறையில் நடந்து கொண்டார்.

இந்த நிலையில் கன்னியாஸ்திரி சபையின் தலைவரான சேவியர் மரியதங்கம், எந்தவித விசாரணையும் நடத்தாமல் என்னை கன்னியாஸ்திரி பணியில் இருந்து சஸ்பெண்டு செய்தார். மிக கடுமையான குற்றமான, செக்ஸ் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள பாதிரியார் ராஜரத்தினம் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அவர் தொடர்ந்து சபையில் பணியாற்றி வருகிறார்.

மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும்
அவர் கன்னியாஸ்திரி சபையில் பணியாற்றி வரும் மேலும் சில கன்னியாஸ்திரிகளுக்கு செக்ஸ் தொந்தரவு கொடுத்துள்ளார். எனவே பாதிரியார் ராஜரத்தினம் மீதான புகாரை, மிக தீவிரமாக விசாரிக்க வேண்டியது அவசியமாகிறது. ராஜரத்தினத்தை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். அவர் தாக்கல் செய்துள்ள முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

4 பக்க கடிதம்
பிளாரன்ஸ்மேரி தரப்பில் ஆஜரான வக்கீல் சங்கர்கணேஷ், "புகார்தாரரை கட்டாயப்படுத்தி கடிதம் பெற்று அவரை சஸ்பெண்டு செய்துள்ளனர். அந்த கடிதத்தில் கூட புகார்தாரர், பாதிரியாரின் செயல் தனக்கு பிடிக்கவில்லை என்றும், ஆனால் பாதிரியார் தன்னிடம் தகாத முறையில் நடந்து கொள்ள விரும்பினார் என்றும் கூறி உள்ளார். கட்டாயப்படுத்தி வாங்கிய கடிதத்துக்கு முன்பு, பிளாரன்ஸ்மேரி தனக்கு நேர்ந்து வரும் கொடுமைகள் குறித்து 4 பக்க அளவில் கடிதம் எழுதி, அதை கன்னியாஸ்திரி சபையின் தலைவருக்கு கொடுத்துள்ளார். அந்த கடிதத்தை பார்த்தாலே, பிளாரன்ஸ்மேரி எந்த அளவுக்கு கொடுமைபடுத்தப்பட்டுள்ளார் என்பது தெளிவாக தெரியவரும்'' என்றார்.

இதைத்தொடர்ந்து, பிளாரன்ஸ்மேரி, கன்னியாஸ்திரி சபைக்கு எழுதியதாக கூறப்படும் 4 பக்க கடிதத்தை போலீசார் கன்னியாஸ்திரி சபையில் இருந்து பெற்று ஐகோர்ட்டில் தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார். இதன்பின்பு பாதிரியாரின் முன்ஜாமீன் மனு மீதான விசாரணையை நாளை(20-ந் தேதி) தள்ளி வைத்தார்.

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்