/* up Facebook

Sep 1, 2010

வெடிகுண்டு பிசையும் பாண்டவர் - பானுபாரதி


இன்று
டிசம்பர் 11, 1988
காலை ஐந்து மணி

முற்றம் பெருக்கவென
துடைப்பத்தோடு போன பெரியக்கா
பூரான் பூச்சியால் கடியுண்டவள்போல்
பதறியடித்து
வீட்டுக்குள் வந்து விழுந்தாள்

வேலியோரங்களில்
பனங்காய் உருள்வதுபோல்
பாரதப் பச்சைகள்

எங்கள் வீட்டில்
நாங்கள் நான்கு குமர்
பக்கத்து வீடுகளிலிருந்தும்
பத்துக்கும் மேற்பட்ட குமர்கள்
பனிப்புகார் அடங்காத
இளங் காலையின் கீழ்
கிராமத்து கோயிலின்
முன்றல்வெளியில் இருத்தப்பட்டோம்

கைக்கண்டு தேடுவதாய்
முலைகளைத் தடவும்
மானங்கெட்ட பிழைப்பு

ச்சே...!
கைக்குண்டுக்கும் முலைகளுக்கும்
வேறுபாடு தெரியாதவர்களா
இந்தப் பாண்டவர்கள்?

இதுதானா...?

வங்கத்துப் பெண்களின்
உயிர்க் குழியிலிருந்து
அன்றொலித்த
ஈனக் கதறல்கள் இதுதானா?

அன்றறிகிலோம்.
இன்றோ..
எங்கள் சுவர்களிலும்
தெறித்துச் சிதறுகிறதெங்கள் குரல்

ஏ! பாரதமே!
எல்லைகள் தாண்டி
வெண்கொடி நாட்டுவதிருக்கட்டும்
முதலில்
உன் புத்திரரின் வேகம் தணியுமட்டும்
பிசைந்து உருட்டி விளையாட
திரண்ட உன் முலைகளை
அவர்களுக்குக் கொடு.

இலங்கை, 11.12.1988

( ”பிறத்தியாள்” கவிதைத் தொகுப்பு)

இந்திய அமைதிப்படை இலங்கையிலிருந்த காலத்தில் எழுதப்பட்ட கவிதை.

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்