/* up Facebook

Aug 7, 2010

நினைவு படுத்துங்கள்...நான் தின்னாதிருக்க....!!! - மயு மனோ


உங்கள் பெயர்களை நினைவுபடுத்த
சொல்லித் தாருங்கள்

இருட்டிய பிறகு வருகிறேன்
அதோ அங்கே வாருங்கள்
எல்லையில்
இடுகாட்டில்
வருவேன்; காத்திருங்கள்

அந்தக் காட்டிடை மரமொன்றின்
பொந்திடை வசிப்பவள் நான்
உங்களை வரவேற்பேன்
தின்னப் பிணம் தருவேன்

ஆம்,
பிணத்திடை பிணங்களோடு
பிணமாய் வாழ்பவள் நான்
பெயரில்லாப் பிணங்கள்
பெயரறியாப் பிணங்கள்
பெயரற்ற பிணங்கள்
இது எனக்கு இலகுவாக இருக்கிறது
இவற்றுடன் உங்கள்
ஊர் எல்லை தாண்ட முடியவில்லை
காவல் சாமிகள்
அந்த சாமிக்கும் காவல்கள்
அதனால் நீங்கள் வாருங்கள்

என் சிசுவொன்றழிந்து
கழியும் குருதியை விட
மாடொன்றின் பிரசவ சீழின்
வெடுக்கு நாற்றத்தை விட
கேவலமாய் மணக்கிறீர்கள்
அதனால் உங்கள் எல்லைக்குள்ளிருந்தே
சொல்லித் தாருங்கள்

உண்மையான இரவின் இருட்டு
உங்களைக் கொல்வது போல்
உங்கள் போலிப் பகல் வெளிச்சம்
பயமுறுத்துகிறது என்னை
இரைச்சலைக் காதலித்து
கலவி செய்து
பெயரற்ற பிள்ளைகளோடு அலைகிறீர்கள்
அவர்கள் நன்றாகப் பிதற்றுகிறார்கள்
கேட்டதை இறுகப் பற்றி
கேட்காததை எதிர்வு கூறி
நீங்கள் கழிப்பதைத் தொடருங்கள்
மறக்காது நினைவுபடுத்துங்கள்
எனக்கு அவர்கள் பெயரும் வேண்டும்

அந்த நெடுநாள் பூட்டிய வீட்டின்
வெம்மைக்குள் குமைந்து
வெம்பி
ஊதி
வெடிக்காதும்
வெடிக்க முடியாதும்
எலும்புகளின் மச்சைகூட கரைந்து
பிதுங்கி வழிகிறது
உங்கள் ஊன்
அது விழுமிடமெல்லாம்
புதுபுதுப் பிணங்கள்
புதிது புதிதாய்
புழுக்களாய் நெளிந்து

அடச் சீ
அர்த்தம் செத்து
அடையாளத்துக்காய் ஒட்டியபடி
உங்கள் உயிர்
பயப்படாதீர்கள்
உங்களை என்னால்
தொடக் கூட முடியாது

அதனால் உங்கள்
பெயர்களை நினைவுபடுத்த சொல்லித் தாருங்கள்
உங்கள் மரண தினத்தன்று
அவை எனக்கு நினைவிருக்கட்டும்
எனக்குப் பசிக்காதிருக்கட்டும்
கூடவே கொலை செய்தல்
அலுக்காதிருக்கட்டும்....!!!!

நன்றி - நதியானவள்

1 comments:

மணிமேகலா said...

//அடச் சீ
அர்த்தம் செத்து
அடையாளத்துக்காய் ஒட்டியபடி//

நல்ல அழுத்தமான வரிகள்!

ஆனால்,இதற்கான பின்னணியும் கவனமாக ஆராயப் பட வேண்டி இருக்கிறது நதியானவளே! நம் சமூக அமைப்பு பெண்ணை 'சுயம்' காண விடுவதில்லை.

சுயம் கண்டு வெளிவருகிற பெண்ணை அல்லது பிரச்சினைக்குள்ளாகியிருக்கும் பெண்ணைக் குறிப்பாக மோப்பம் பிடித்து வரும் சொறி நாய்கள் 'உதவிக்கு' வருவதைப் பார்ப்பது இன்னும் நல்ல வேடிக்கை.

அதில் சமூகத்துக்கும் தம் சொந்தக் குடும்பத்துக்கும் பவ்விய வேஷம் போடுபவர்கள் தான் முழுப் பேருமாக இருப்பார்கள் என்பது தான் அவர்களின் மனைவிமாருக்குத் தெரியாத வலியான நிஜம்!

அப்போது தான் ஒரு பெண்ணுக்கு சமூகத்தின் நாற்றமும் நிஜ முகமும் நன்றாகத் தெரிய வரும்.பலர் அந்தப் 'பயம்'காரணமாகவே 'சுயம்'காண விரும்புவதில்லை.

இந்தக் கவிதை பலமும் கோபமும் பொருந்தியது.

நன்றி, பகிர்ந்து கொண்ட பெண்ணியத் தோழியருக்கும்!

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்