/* up Facebook

Jul 19, 2010

அந்தி மந்தாரை - நந்தினி சுப்ரமணியம்


பட்டுப் பூச்சிகளும் டேபிள் ரோஜாக்களும்
சூழ்ந்திருந்த ஒரு மன வனத்தில்
சிறுமியாக அலைந்திருந்தேன்
அணில்,காக்கா பிள்ளைப் பேச்சும்
மணத் தக்காளி, நெய்த்தக்காளிப் பழ வாசனையும்
தண்டவாளத் தொலைவின் புதர்ச் செடிகள் ஒளித்திருந்த
பொன் வண்டும் மின்மினிப் பூச்சியும்
தீப்பெட்டியில் சேகரித்த மினுங்கு நாட்கள்...
ஓயாதழைக்கும் அம்மாவை உதாசீனப்படுத்தி
மழை அமைத்த சிறு குளங்களில்
பாதம் அளைந்து கொண்டிருந்த போதே
வந்துவிட்டிருந்தது கன்னிமை.
கூந்தலைப் பற்றி தூக்கி
கம்பிகளற்ற வாழ்வு சிறையில்
குழந்தைமையின் சுதந்திர சிறகுகள் உதிர
கூட்டுப் புழுவாக்கும் விசித்திர உருமாற்றம்
பெண் வாழ்வில்.
எப்போதாவது எதிர்ப்படும் மழையில் கூட
தோன்றி மறையும் குமிழ்களின்
நிலையாமை காணும் மனம்.
வயதேற ஏற வாழ்தலின் வழியில்
இரசிப்பின் விழி மெல்லக் கண்களை
மூடிக் கொள்கிறது.
தூரத்தில் சிறுமிகள்
போகன்வில்லாப் பூக்களின்
வெண்ணிற சிறு மலர்களை
மூக்குத்தியாக்கி மகிழும் காட்சி...
கண்களை அங்கே நட்டு
மீட்டெடுக்க முடியாப் பருவத்தின் உயிர்ப்பு
நெஞ்சை நிறைக்க மெல்ல முணுமுணுக்கிறேன்
அந்தி மந்தாரை ஐந்து மணிக்குப்
பூக்கும் அதிசயம் காண
குத்துகாலிட்டு அமர்ந்திருக்கும்
யோகியாக
நானும் ஒரு நாள் இருந்தேன் அங்கே.

நன்றி - சைக்கிள்

1 comments:

கீதா இளங்கோவன் said...

கவிதை அருமை தோழி.
//பட்டுப் பூச்சிகளும் டேபிள் ரோஜாக்களும்
சூழ்ந்திருந்த ஒரு மன வனத்தில்
சிறுமியாக அலைந்திருந்தேன்
அணில்,காக்கா பிள்ளைப் பேச்சும்
மணத் தக்காளி, நெய்த்தக்காளிப் பழ வாசனையும்
தண்டவாளத் தொலைவின் புதர்ச் செடிகள் ஒளித்திருந்த
பொன் வண்டும் மின்மினிப் பூசியும்
தீப்பெட்டியில் சேகரித்த மினுங்கு நாட்கள்...//
என் பால்யத்துக்கு சென்றுவிட்டேன்.... தொடர்ந்து எழுதுங்கள்.
பிரியமான வாழ்த்துக்கள்.

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்