/* up Facebook

Apr 13, 2010

சிட்டுக்குருவியின் மூத்த காயங்கள் - பானுபாரதி



கூக்குரலிடுகிறது.
அடிப்பனையில்
வைத்த உங்கள் கோடரி
தறித்து வீழ்த்திய
சிட்டுக்குருவியின் உயிர்க்குலை
மனித
மனசாட்சித் திடலின் வெளிகளிலும்
யாழ் நூலக முன்றலிலும்
பறந்தலைந்து கூக்குரலிடுகிறது

முன்பிருந்தே.
தேசியக் கும்பமேளா
முகங்களை
கிழிப்பதற்கு முன்பிருந்தே
சிட்டுக்குருவியின் முகம்
கிழிக்கப்பட்ட காலங்கள்
மூப்புடைத்தும் நீளமானதும்

அடித்தோம் அறுத்தோம்
ஆயினும்
பலமில்லா அடியும்
ஆழமில்லா வெட்டும் ஆகையால்
வலி குறைவே என்கிறீர்

வெட்டுண்டதும் பட்டதும்
பட்டுக்கொண்டிருப்பதும்
சிட்டுக்குருவியின் சந்ததியும்
வாழ்வுமல்லவோ

காயங்களின், வலிகளின்
ஆழமும் அளவும்
கணக்கெடுத்துரைத்து
கவலை கொள்கிறீர்
என்ன நெஞ்சழுத்தமுமக்கு

போதாதென
பனி விறைத்த தெருக்களில்
கடவுளரின்
தலை தோள் வயிறு காலென
நாலு நிறஞ் சொல்லி
முத்திரை பிடித்து
நிர்வாணமாய் நின்றாடுகிறீர்

பின் கதவால்
மொட்டாக்கு போட்டு வந்து
ஆழமாய் உழவில்லையெனவே
நிறங்கள் வேர்பிடித்தது
போதாது என்கிறீர்

தீட்டுக்கட்டையாய்
சிட்டுக்குருவியின் முள்ளந்தண்டிலே
தீட்டியெடுத்த வாள் கொண்டு
வாழ்வின்
குரல்வளையை அறுத்தெறிந்துவிட்டு
கூர்மை கொஞ்சம் போதாது என்கிறீர்
வெட்கமா இல்லை...?

தேசியக் காயத்துக்கும் மூத்த வலி
சிட்டுக்குருவியின் வலி.


கடல் கடந்தும்
காயத்தின் மேல்
குத்திக்கொண்டேயிருப்பதை
விட்டபாடாயில்லை நீங்கள்
அதை முதலில் அறிந்து கொள்க

சிட்டுக்குருவி
பறப்பதா இறப்பதா
கிழிப்பதா தைப்பதாவென
விண்ணாணஞ் சொல்ல
யார்காணும் அதிகாரம் தந்தாருமக்கு...?

கழுதைப் புண்ணில்லைக் கண்டீரோ
இது
புழுதி போட்டாற்றுதற்கு

வருகிறார் அடுத்தவர்.
வாரும் வாரும் கங்காணியாரே
நீர்தானோ அந்த
இடை நிலைப்பிசாசு

வானத்துக்கும் போகமுடியாமல்
பூமிக்கும் வர முடியாமல்
திரிசங்கு சேற்றில் நின்றாடும்
அந்த
இடை நிலைப்பிசாசு நீர்தானோ

வாழ்வும் விளங்காமல்
வலியும் புரியாமல்
காலம் நீளத்துக்கும்
கனவு கண்டே செத்துப்போகும்
பரிதாபம்தானே நீர்

சிட்டுக்குருவியின்
கோடியில் நின்று
துள்ளிக் கூத்தாடுகிற
சங்கதியென்ன சொல்லப்பு

எப்போதும்போல்
எசமான் வீட்டு
பழஞ்சோற்றுப் பானைக்கும்
எள்ளுப்பொரிக்கும்
காவல் பூதமாகவே இருந்துகொள்ளும்
விசுவாசம் காட்ட
சுண்ணாம்பு தொட்டு
சிட்டுக்குருவியின் முதுகில்
கோடு கீறி
உமது
பிடரியை சேதமாக்கும்
வீண் வேலை வேண்டாம்

சரி இப்போ
என்னதான் சொல்ல வருகிறீர்
கூர் கொண்ட உங்கள்
எஜமானர்களின் கோடரி
சிட்டுக்குருவியின்
மரத்தடி வேரைக் குறித்து
ஓங்கப்பட்டிருகிறதென்றா?
சரி இருக்கட்டும்.
ஆண்டாண்டு காலமாய்
உங்கள்
எஜமானர்கள் தந்த
காயங்களின் வலிகளை
சாணையாய் பிடித்து
இங்கே
பாளைக்கத்திகளும்
இதம் பதமாய்
தீட்டப்பட்டேயுள்ளன
என்பதையும் அறிக
புனைவில்லை.

---

நன்றி - உயிர்மெய்

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்