/* up Facebook

Mar 11, 2010

பாலியல் தொழில் மற்றும் பக்க சார்பு சட்டங்கள் !


நடிகை புவனேஸ்வரி பாலியல் தொழில் செய்ததாக கைது செய்யப்பட்டிருந்தார். பாலியல் தொழில் என்பது அத்தொழிலில் ஈடுபடும் பெண் தன் உடலை வாடகைக்குத் தருகிறாள் என்பது போலவே அதை விரும்பும் ஒரு ஆண் வாடகைக்கு அவ்வுடலை வாங்குகிறான் என்கிற உடல்சார்ந்த வணிகமே பாலியல் தொழில் ஆகும். உடல் இச்சை என்கிற ஆண் விருப்பம் அதைக் கட்டுப்படுத்த முடியாதவர்களுக்கு, வடிகால் கிடைக்கும் வாய்பு தேடுபவர்களுக்கு, அல்லது பல உடல்களை விரும்பும் ஆண்களின் சபலங்களே பாலியல் தொழிலின் சந்தைத் தேவையாகும் (டிமாண்ட்) , அந்த சந்தையில் வைக்கப்படும் பெண் உடல் சதையே விற்பனைப் பொருளாகும். பாலியல் இச்சையைக் கட்டுப்படுத்த முடியாதவர்களையும், வடிகால் வாய்ப்பு தேடுபவர்களையும் கணக்கில் கொள்ளாவிடிலும் பாலியல் தொழில் சந்தையின் தேவையில் முதன்மையான இடத்தைப் பிடிப்பது பல்வேறு பெண் உடலை விரும்பும் ஆண்களின் நாட்டம் தான். இப்படி பல்வேறு உடலை விரும்பும் ஆண்களில் திருமணம் ஆனவர்கள், ஆகாதவர்கள் ஆகிய இருபிரிவினருமே உண்டு. ஆகையால் பாலியல் தொழிலை தடை செய்வதற்கு திருமணம் என்கிற சடங்கு ஆண்களைப் பொருத்த அளவில் வடிகால் அல்ல.

ஒரு சந்தையை உருவாக்குவதில் அதில் விற்பனையாளர்கள் இரண்டாம் இடத்தையே பிடிக்கிறார்கள், சந்தை உருவாக்குவதில் முதல் இடத்தில் இருப்பது அதன் தேவை தான், வாடிக்கையாளர்கள் தான். வாடிக்கையாளர்களும் தேவையும் இல்லை என்றால் தன்னிச்சையாக உருவாகும் எந்த ஒரு சந்தையும் எதையும் விற்றுவிட முடியாது, இது பாலியல் உடல் சார்ந்த வணிகத்திற்கும் பொருந்தும். பாலியல் சந்தையைப் பொருத்த அளவில் ஒவ்வொரு நாடுகளும் ஒவ்வொரு விதிகளை வைத்திருக்கின்றன. பாலியல் தொழில் என்பது சமூக முன்னேற்றத்திற்கு பின்னடைவு, குறிப்பாக குடும்ப அமைப்புகளுக்கு கேடுவிளைவிப்பது என்பதில் எனக்கு எந்த வித மாற்றுக் கருத்தும் இல்லை. சில நாடுகள் பாலியல் தொழிலை தனிமனித ஒழுக்கம் சார்ந்த ஒன்றாக பார்க்காமல் தனிமனித விருப்பம் சார்ந்த ஒன்றாகவே அங்கீகரிக்கிறது. அதனால் தான் அந்நாடுகள் பாலியல் விருப்பம் எத்தன்மையாயினும் (வயது வந்தவர்களிடையே விருப்பத்துடன் கூடிய பாலியல் புணர்ச்சி, தற்பால் புணர்ச்சி) அவற்றை ஒருசில வரையறைகளுடன் அனுமதிக்கிறது. அத்தகைய நாடுகளில் பாலியல் சார்ந்த குற்றங்கள் நடைபெறுவது மிகக் குறைவு. குறிப்பாக பாலியல் தொழில் அங்கீகரிக்கப்பட்ட தாய்லாந்து நாட்டில் பாலியல் வன்புணர்வு அன்றாடச் செய்தி கிடையாது. ஆனால் பாலியல் தொழில் ஒப்புமை கொடுக்காத நாடுகளில், கட்டுப்பாடு மிகுந்த நாடுகளில் பாலியல் வன்புணர்வு, குழந்தைகளையும் குறிவைக்கும் பாலியல் முறைகேடுகள் அன்றாடச் செய்திகள் தாம்.

பாலியல் தொழில் ஒப்புமை இல்லாத நாடுகள் பக்கசார்பாகவே சட்டங்களை வைத்திருக்கின்றன. பாலியல் தொழிலை நாடுபவர்களை கணக்கில் கொள்ளாது, பாலியல் தொழில் செய்பவர்களை மட்டுமே அரசுகள் தண்டிக்கின்றன. தேவையை (டிமாண்ட்) ஏற்படுத்துபவர்கள் தண்டிக்கப்படுவது இல்லை, விற்பனையாளர்கள் (சப்ளையர்) மட்டுமே தண்டிக்கப்படுகிறார்கள். தேவையை ஏற்படுத்துபவர்கள் தண்டிக்கபடாதவரை அவர்கள் விற்பனைத் தேவையை உருவாக்கிக் கொண்டே இருப்பார்கள். புவனேஸ்வரிக்கு 30 ஆயிரம் ரூபாய் என்றெல்லாம் செய்தித்தாள்கள் செய்தி வெளி இடுகின்றன, புவனேஸ்வரி தொழில் செய்ய முடியாத போது வேறு ஒருவரை அந்த 30 ஆயிரம் ரூபாய் தரத் ஆயத்தமாக இருப்பவர்கள் நாடுவார்கள், அல்லது வேறொரு புவனேஸ்வரியை உருவாக்குவார்கள்.

இதுபற்றி தலையங்கம் எழுதி அரசுகளைக் கேள்வி கேட்க வேண்டிய செய்தித்தாள்கள் அதை ஒரு கவர்ச்சி செய்தியாகவே வெளி இடுகின்றன. நடிகைகளின் அந்தரங்கம், கவர்ச்சி ஆகியவற்றை செய்தி விபச்சாரமாகவும், நடிகைகளின் அங்கங்களை காட்சிப் படுத்தும் சிலரின் திரைப்படத் தொழில் மூலம் அதில் மறைமுகமாக பாதிக்கப்படும் விடலைகளின் பாதிப்புகளை ஒப்பிடும் போது ஆண்களின் சபலத்தை மையமாக வைத்து நடைபெறும் விபச்சாரம் மோசமான குற்றமாகத் தெரியவில்லை.

நன்றி கோவி.கண்ணன்

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்