/* up Facebook

Jan 4, 2010

"பிறத்தியாள்" - பானுபாரதி



கொலை சுமந்த இருளின் சாட்சியங்களாய் கீறிக்கொண்டு நகரும் பானுவின் கவிதைகள் ஈழத்து, புலம்பெயர்ந்த பொதுவான இனவுணர்விலிருந்தும் நாம் கண்டறிந்த பாடு பொருள்களிலிருந்தும் விலகி ஒடுக்கப்பட்ட ஓர்மையிலான புலம்பலற்ற பெண்ணின் பயணத்தை பிரதியாக்கமாய்த் தருகிறது. காட்சிப் படிமங்களிலும் கதையாடல் தன்மையிலும் சுயத்தின் சாயலை இழக்காமலும் அதேவேளை தீவு- ஈழம்- புலம்பெயர்வு- உலகம் என அவரது அகதி வாழ்வைப் போன்றே கவிதைகளின் பயணமும் இருக்கின்றன.


பானுவின் கவிதைகளைப் போன்றே காலஅவசியத்தின் தேவை கருதி இத்தொகுப்பில் அவர் இணைத்துள்ள இலங்கையில் அமைதிப்படை இருந்த காலத்தையொட்டி அவர் எழுதிய கடிதங்களும் மிக முக்கியமானவை. புற விமர்சனங்களாய் மட்டும் அமையாதவை.
-நீலகண்டன்- கருப்புப் பிரதிகள்




-பானுபாரதி-

தொகுப்பிலிருந்து ஒரு கவிதை:

ஏய்! கள்ள ஞானிகளே!

மூன்றாஞ் சாமத்து
மேற்றிசை நட்சத்திரங்கள்
என்னோடு தோழிகளாயிருந்த காலம்

சந்திரனும் சூரியனும்
எனது ஊழியக்காரராயிருந்த
பதினெட்டாம் வயதின்
ஆடி மாதத்தினொரு நாலாஞ் சாமம்

என்சிறு ஊரருகில் தீர்ந்த முதல் வெடியில்
ஆடிப் பெருக்கெடுத்து
முட்டி வீங்கியது போரின் வயிறு

எந்த வகுத்தலுக்குள்ளும்
எண்ணப்படாதவொரு ஏழாஞ் சாமத்தில்
வெங்காயப்பொதிகளோடொரு பொதியாய்
ஏற்றி அனுப்பப்பட்டேன்
கூடவே எனக்கானதொரு சிலுவையுடன்

லூசிப்பிசாசுகளும் அல்லேலூயாப் பேய்களும்
அசுத்த ஆவிகளும் அண்டாது அணுகாது
நித்தியம் பெறுவோம் - என்று
என் வீட்டு உத்தரிய மாதாக்கள்
மந்திரித்து சுமந்த அதே சிலுவையை
நானும் சுமந்து பயணமானேன்
ஒரு பனித்தேசத்தின்
கல்வாரிக் குன்று நோக்கி

பாரச்சிலுவையை சுமக்கவும் வேண்டும்
கல்லிலும் முள்ளிலும்
இடறல் படவும் வேண்டும்
முகம் குப்புற விழவும் வேண்டும்
கசையடி படவும் வேண்டும்
மீண்டுமெழுந்து சுமக்கவும் வேண்டும்
பனிமலையுச்சிக்கு நடக்கவும் வேண்டும்
இவையனைத்தும் தாண்டுதல்
அறையப்படுவதற்காகவே

தனக்கான சவக்குழியை
தானே வெட்டிய
சக தோழன் போல்
நானறையப்படுவதற்கான சிலுவையை
நானே சுமந்து வந்தேன்

சமூக வல்லரசின்
சட்டதிட்டங்களுக்கமையவே
அறையப்பட்டேன் சிலுவையில்

சிலுவையில்
அறையப்பட்டபடியே புணரப்பட்டேன்
நித்தியத்தின் பெயரால்
எனது ஆச்சியை, அம்மாவைப் போல
அக்காவை, சின்னக்காவைப் போல

அறையப்பட்ட பதினெட்டாஞ் சாமத்தில்
பிடுங்கியெடுக்கப்பட்ட ஆணிகளோடு
காத்திருக்கிறேன் சிலுவையினடியில்
ஆச்சியை, அம்மாவைப் போலல்லாமல்
அக்காவை, சின்னக்காவைப் போலல்லாமல்
ஆவேசத்தோடு

அறையப்பட்ட பதினெட்டாஞ் சாமத்தில்
பிடுங்கியெடுக்கப்பட்ட ஆணிகளோடு
காத்திருக்கிறேன் சிலுவையினடியில்
எனக்குமென் உத்தரிய மாதாக்களுக்கும்
நித்தியம் போதித்த கள்ள ஞானிகளை
இதே சிலுவையில்
அறைந்து கொல்லும் ஆவேசத்தோடு.

நன்றி - உயிர்மெய்

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்