/* up Facebook

Nov 27, 2009

சுவிட்சர்லாந்தின் முதல் பெண் சபாநாயகர் தெரிவு- தில்லை


சுவிட்சர்லாந்தில் முதற் தடவையாக பெண் சபாநாயகர் ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். சுவிட்ஸர்லாந்து சமூக ஜனநாயக கட்சியின் தலைமை நிலையில் உள்ள பெஸ்காலே புறுதர் (Pascale Bruderer) எனும் 32 வயது இளம் பெண்ணே இப்பதவிக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளார். 182க்கு 174 வாக்குகள் இவருக்கு ஆதரவாக அளிக்கப்பட்டு தெரிவானமை குறிப்பிடத்தக்கது.


சுவிட்ஸர்லாந்தில் சபாநாயகர் பதவியானது சுழற்சி முறையில் வழங்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் இவர் இனி வரும் 12 மாதங்களுக்கு அப்பதவியினை வகிப்பார்.


சுவிட்ஸர்லாந்தின் மேற்சபை மற்றும் கீழ் சபைக்குமான சபாநாயகராக இவர் தெரிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


கடந்த வருடம் இவர் மத்திய இடதுசாரிகட்சியின் பிரதித்தலைவராக தெரிவு செய்யப்பட்டிருந்தார்.


மிகவும் இளம் வயதைக்கொண்டவராகவும், மிகவும் வேகமாக அரசியலில் முன்னேறி வருபவராகவும் பலராலும் குறிக்கப்படுபவர் இவர். தனது 24வது வயதில் பாராளுமன்றத்துக்குள் பிரவேசித்தார்.


சமூகங்களுக்கிடையிலான ஒன்றிணைவு (social intergration) சமத்துவமாக நடாத்துதல் என்பன குறித்து அதிக கரிசனை கொண்டவராக இவரைப் பற்றி குறிப்பிடுகின்றன சுவிஸ் நாளிதழ்கள். தனது அரசியல் பாதைக்காகவென அரசியல் விஞ்ஞானத்தை ஒரு பாடமாக கற்ற இவர் பின்னர் அரசியலமைப்பு சார் சட்டங்களைக் கற்றார். கூடவே பொருளாதார வரலாறு சமூகவியல் என்பனவற்றையும் கற்றுக்கொண்டார். தனது அரசியல் பணிகளின் மத்தியில் அரசியல் விஞ்ஞானத்துறையில் முதுமானிப்பட்டப்படிப்பையும் சூரிச் பல்கலைக்கழகத்தில் முடித்தார். ஆரம்பத்தில் மைக்ரோசொப் நிறுவனத்திலும், UBS வங்கியிலும் சிறிது காலம் பணியாற்றியுமிருக்கிறார்.



அவரது சொந்த மாநிலமான ஆர்காவ் இல் புற்றுநோய் ஒழிப்பு சங்கத்தின் நிறைவேற்றுத் தலைவராக ஒரு சில மாதங்களுக்கு முன்னர் தெரிவானார்.


"பாராளுமன்றமே மக்களின் நேரடியான அன்றாட வாழ்க்கையைத் தீர்மானிக்கின்ற தளமாக இருக்கின்ற நிலையில், மாற்றங்களை அங்கிருந்து தான் கொண்டுவரலாம்" என்கிறார் இந்த இளம் பெண் சபாநாயகர்.


சுவிஸ் பெண்கள் 1971 ஆம் ஆண்டு வரை வாக்களிக்கும் உரிமையைப் பெற்றிருக்கவில்லை. இன்றைய நிலையில் 24வீத அரசியல் பிரநிதித்துவத்தை சுவிஸ் பெண்கள் பெற்றிருக்கிறார்கள். இந்த 40வருடத்திற்கும் குறைந்த காலப்பகுதிக்குள் அமெரிக்காவை விட அதிகமான பிரநிதித்துவத்தை சுவிஸ் பெண்கள் பெற்றிருக்கிறார்கள்.


அது சரி... 1931இலிருந்தே வாக்குரிமையைப் பெற்றுக்கொண்ட நமது இலங்கையில், உலகின் முதற் பிரதமரை உருவாக்கிய நமது இலங்கையில் பெண்களின் அரசியல் பிரநிதித்துவம் எவ்வளவு தெரியுமா...? வெறும் 5 வீதம் தான்...

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்